காலங்களைக் கடந்து வாழும் கலீல் ஜிப்ரான் !


அன்பான சிந்தனைகள்,தெளிவான எண்ணப்போக்கு ஆகியவற்றோடு கவித்துமான நடையை இணைத்து மென்மையான புரட்சி செய்தவர் ஜிப்ரான். லெபானானில் பிறந்த அவரின் தந்தை கடனால் சிறைக்குப் போனார். இனிமேல் அவரோடு வாழ முடியாது என்று முடிவு செய்துகொண்ட அவரின் மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்தார்.

அங்கே ஷீ லேஸ் மற்றும் லினன் முதலியவற்றை விற்றுப் பிள்ளைகளின் பசியை ஆற்றினார் அவர். அராபிய மொழியில் சிறந்த புலமை கொண்டிருந்த ஜிப்ரான் அதுவரை இருந்த எழுத்து நடையை மாற்றியமைத்தார். பிறப்பால் கத்தோலிக்கரான அவர் தன்னுடைய மதத்தின் பெயரால் நடந்து தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தன்னுடைய அன்னை மண்ணில் இஸ்லாமை பின்பற்றிய ஓட்டோமான் அரசர்கள் விவசாயிகள் முதலியோரை வாட்டி எடுத்ததை பார்த்தார். பழமையான மதத்தை தூக்கிப்பிடிக்காமல் அன்பை போதிக்கிற பெரிய முன்முடிவுகள் இல்லாத எளிமையான கருத்துக்களால் மக்களை நிறைத்தார்.

எண்ணற்ற போர்கள் நிகழ்ந்தபடியால் எல்லா மதங்களும் சமரசமாக இணைந்து இயங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். ஆகவே அன்பை அவரின் எழுத்துக்களில் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் ஆங்கிலப் பேராசிரியர்கள் அவரின் எழுத்தை நீர்க்குமிழி போல வெறுமையானது என்று ஒதுக்கி வைத்தார்கள். ஆனால்,ஹஸ்கல் என்கிற பாஸ்டன் பள்ளித்தலைமை ஆசிரியை அவருக்கு ஆதரவு மற்றும் அடைக்கலம் தந்தார். அவரிடம் தன்னுடைய காதலை இருமுறை சொன்ன பொழுது அவரின் வீட்டார் ஏற்றுக்கொள்ளாததால் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.

பன்னிரெண்டு ஆண்டுகள் சொந்த மண்ணை விட்டு வேறொரு தீவில் தங்கியிருந்த அல் முஸ்தபா எனும் நபர் அந்தத் தீவின் மக்களுக்கு இருபத்தி ஆறு கவிதைகளின் மூலமாக சொல்வதாக அமைந்த ‘THE PROPHET’ புத்தகம் பெரிய வெற்றியை பெற்றது. அதை அறிவு ஜீவிகள் நிராகரித்தாலும் பீட்டில்ஸ் துவங்கி இந்திரா காந்தி வரை எண்ணற்ற ரசிகர்கள் அந்த நூலுக்கு கிடைத்தார்கள். ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அந்நூல் ஜிப்ரானை ஷேக்ஸ்பியர் வரிசையில் ஆங்கிலத்தில் அதிகம் விற்பனையாகும் ஆளுமையாக்கி உள்ளது.

போரால்,சிக்கல்களால் சிதறுண்டு கிடந்த தன்னுடைய நாட்டில் அமைதி நிலவாதா என்று அவர் ஏங்கினார். பல ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தன்னடைய நாட்டின் குடியுரிமையை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. இறந்த பின்னர் தன்னைத் தன்னுடைய நாட்டிலேயே புதைக்க வேண்டும் என்கிற அவரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரிகள் தன்னுடைய கல்லறையில் இடம்பெற அவர் விரும்பினார் :
“நான் உன்னைப்போலவே உயிர்ப்புடன் இருக்கிறேன். உனக்கு பக்கத்தில் நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு உன்னைச்சுற்றிப்பார். உனக்கு முன்னால் என்னைக்காண்பாய் !”
அவரின் ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பு :
உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் அன்பைத்தரலாம்; உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏன் என்றால் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் சரீரத்தை நீங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கலாம் ஆன்மாவை அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது; அந்த வீட்டை நீங்கள் கனவில் கூட சென்றடைய முடியாது
நீங்கள் அவர்களை போல ஆவதற்கு உழையுங்கள்; ஆனால், அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள்
வாழ்க்கை பின்னோக்கியோ நேற்றைக்கோ செல்வதில்லை
நீங்கள் உங்கள் பிள்ளைகள் எனும் வாழும் அம்புகள் அனுப்படும் வில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

— with Khalil Gibran.

பின்னூட்டமொன்றை இடுக