கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலை வாசிக்க நேர்ந்தது. மக்களின் மொழியில் கரிசல் மண்ணின் கதையைப் போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போகிற அந்த நடை அத்தனை சொகமானது. பேசிக்கொண்டே இருக்கையில் சொல்லிக்கொண்டிருக்கும் கதையை மறந்து விட்டு இன்னொரு விஷயத்தின் சுவாரசியமான விவரிப்புக்குள் தன்னைச் செலுத்தி விடுவதைக் கண்டிருப்பீர்கள். அதையே கி.ராவும் செய்கிறார். ஒவ்வொரு ஆளுக்கும் எப்படிப் பெயர் வந்தது என்று அவர் போகிற போக்கில் அவர் சொல்கிற கதைகளில் கூடக் கண்களில் மின்னி மறையும் பரவசம் தெரிகிறது.
வளம் மிகுந்த பகுதியைவிட்டு வெளியேறி வரும் நாயக்கர்களின் கதையை மங்கத்தாயார் அம்மாள் என்கிற நூற்றி முப்பது சொச்சம் வயது கொண்ட பாட்டி விவரணையில் கேட்டபடி நாமும் கோபல்ல கிராமத்தில் போய் அமர்ந்து கொள்ளும் உணர்வை அனுபவிக்க வேண்டும்.
ஏணிப் படி போட்டு முடி சீவப்பட வேண்டிய பெண்ணின் கதை, செத்த பிறகும் அழகாக இருக்கும் சென்னம்மா தேவியின் வாழ்க்கையில் அவளின் அழகுக்கு எல்லாரும் தலைவணங்குவதைச் சரளமாகக் கி.ரா. சொல்லிக்கொண்டு போகையில் அப்படியொரு அழகை நாம் எங்கே மதிக்கக் கண்டோம் என்று யோசித்துப் பெருமூச்சு விடத்தான் முடிகிறது.
காடு எரிக்கும் தருணத்தில் நெருப்புக்குள் பாயும் பன்றி, இரண்டு மனைவிகளிடம் கழுத்தும், கையும் கொடுத்து தவிக்கும் இளவரசன், தீவட்டித் திருடர்களைக் கவண்கற்களால் எதிர்கொள்ளும் மக்கள் என்று சொல்லித்தீராத கதைகள் நூலை அலங்கரிக்கின்றன.
விக்டோரியா மகாராணியின் ஆட்சி வருகிறது என்று சொல்லப்படும் பொழுது அவளை ராணி மங்கம்மாவோடு மக்கள் ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். அவளுக்கும் இடது கையால் பாக்கு போட்ட கதையைக் கி.ரா. நம் வாயில் மெள்ள எடுத்துத் தருகிறார்.
எல்லாவற்றுக்கும் உச்சம் கழுவனின் கதை. கால் விரலை கொன்றவளின் பற்கள் பற்றிக்கொண்டு மாட்டிக்கொள்ளும் அவன் வாயையே திறப்பதில்லை. கழுமரத்தில் ஆசனவாயில் ஏற்றப்பட்டு உயிர் போய்க்கொண்டிருக்கும் சூழலில் சிறுமிகள் அவனைச் சுற்றி கும்மியடித்துப் பாடுவதில் மரணத்தைக் கொண்டாடும் மனம் கண்களைக் கலங்க வைக்கிறது. அதைப் பார்த்தபடியே அவன் தானும் பாட எத்தனிக்கையில் இறந்து போகிறான். அவனும், அவன் கொன்ற பெண் இருவரும் தெய்வங்களாக மாறினார்கள் என்கிற முடிவை மக்களோடு இயங்கி அவர்களின் கதைகளை எழுத்தாக்கிய கி.ராவால் தான் தரமுடியும். அவசியம் வாசிக்கப்பட வேண்டிய கரிசல் வாழ்க்கையின் ஆவணப்படுத்தல் இந்தப் பெருங்கதை.
ஆசிரியர்: கி.ராஜநாராயணன்
அன்னம் வெளியீடு
பக்கங்கள்: 176
விலை : 140