பொசல் – பாய்ந்து வரும் சிறுகதைகள்


கவிதா சொர்ணவல்லி அக்காவின் எழுத்தில் பொசல் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இந்தச் சிறுகதைத் தொகுப்பை படித்த இடங்கள் எல்லாம் ஒன்றாகப் போனது திட்டமிட்ட ஒன்று தான். மனதுக்கு இதமான ஷேர் ஆட்டோ பயணத்தின் பொழுது எதிரில் தேவதைகளின் முகத்தைத் திருட்டுத்தனமாகப் பார்த்தபடியே இவற்றை வாசித்தேன்.

இது வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட சிறுகதைகளாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான மொழிநடை கதைகளில் தென்படவில்லை. நீர் தேங்குகையில், பாய்கையில், வீழ்கையில் வெவ்வேறு பெயர்களைத் தாங்குவது போலப் பரவசம், அளவில்லாத பிரியம், ஏமாற்றம், குதூகலிப்பு, பெண் மனதின் புரிபடா செயல்கள் என்று கலந்துகட்டி நம்மை மிரட்டுகிறது.

நான், அவன், அது கதை கம்பி மீது நடக்கிற ஒரு கதை. பிரியத்தைப் பெயரிட்டு அழைத்துக் கொல்கிற உலகில் பட்டதைப் பளிச்சென்று பேசும் அந்தப் பெண்ணின், “அண்ணா என்ன கல்யாணம் பண்ணிகிறியா? உன்னோடவே என்னை வெச்சுக்கிறியா?; என்கிற கேள்வி எந்த அதிர்ச்சியையும் தராமல் அழகாகவே மனதில் நிறைகிறது. பெயர் தெரியாத மலரை வருடி சிரிக்கையில் ஏற்படும் ஆனந்தம் அந்தக் கதையோடு ஷேர் ஆட்டோவில் கிடைத்தது.

வானவில்லை போல வண்ணமயமான, ஒரே சமயத்துக் காதல்கள் மனிதர்களுக்குள் இருக்கவே செய்கிறது. அது ஆணுக்கு மட்டுமே உரியது என்பவர்களின் கண்கள் மூடி, தலையில் பக்குவமாகக் கொட்டுகிற கதவின் வெளியே மற்றுமொரு காதலும் சரி, தவறு எல்லைகளுக்குள் வராத உணர்ச்சி வரைதல்.

எத்தனை காதல்கள் ஏதேதோ சொல்லி நம்ம மழையாய், வெயிலாய், வருடலாய், கடந்து நெஞ்சை கடித்துத் தின்று இருக்கும்? யாதுமாகி மற்ற எதையும் செய்யவிடாமல் கைபிடித்து உயிரின் உணர்வுகளைக் கேட்கும்? அதுவே எங்கிருந்தோ வந்தானில் வாய்க்கிறது. புயல் காலத்தில் மழையோடு பீச் பக்கம் போகும் சாகச நெஞ்சம் எத்தனை தேவதைகளுக்கு உள்ளே இருக்கிறதோ?

மகனை தனக்குள் மட்டும் பற்றிவைக்கும் அன்னையின் பெரும்போராட்ட சிக்கல்களை டிசம்பர் பூ சொல்லிச் செல்கையில் அந்த எழுத்தில் சன்னமான அவசரம் தென்படுகிறது.

அம்மா எத்தனை அழகு என்றோ, அம்மாவின் விருப்பங்கள் யாவை என்பதிலோ கவலை கொள்ளாமல் அவளை அழகாகச் சிரிக்க வைக்கிற காரணங்களைக் குடும்ப அமைப்பு பிடுங்கிக் கொள்வதைப் படம்பிடிக்கிறது ‘பொசல்’.

மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை பச்சை பாம்புக்காரி. திகட்ட திகட்ட காதலிலும், இருபால் பிரியத்திலும் மூழ்கிக் கிடக்கையில் பாட்டியின் மாயக் கரங்கள் சமையல்கட்டை தொட்டிடும் பொழுதுகள் ஒரு தனித்த, தவித்த வாசிப்பு.

ஓரிரு கதைகளில் கட்டுரைத்தன்மை எட்டிப்பார்த்தாலும் பெரும்பாலான கதைகள் பெண்ணின் வெளியில் பெரிய பிரசங்கங்கள் இல்லாமல் சிரித்தபடியே புரியாத அவர்கள் உலகில் வசித்துவிட்டு வரும் பாக்கியத்தை இந்தத் தொகுப்பு வழங்குகிறது.

சில இடங்களில் இருக்கும் ப்ரூப் சிக்கல்கள் நூலின் வாசிப்பு வேகத்தைக் குலைக்கிறது, மற்றபடி காதல்களை எண்ணியபடி, தேவதைகளை ரசித்தபடி வாசிக்க வேண்டிய வசந்தம் இந்நூல்.

கதைசொல்லி கவிதா சொர்ணவல்லி

நிலமிசை வெளியீடு
பக்கங்கள் : எண்பது
விலை : ரூ.80

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s