ஆணி, சிலுவை, அம்மா, திராவிடம், அரசியல் – குழப்ப கொத்து பரோட்டா!


ஜெயலலிதா மக்களின் முதல்வர் பட்டத்தில் இருந்து மீண்டும் முதல்வர் பதவிக்குத் திரும்பே வேண்டும் என்று சிலுவையில் கைகளில் ஆணி அடித்துக்கொண்டது பெருத்த நகைப்பு மற்றும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டிய அதே சூழலில் சில கேள்விகளையும் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில பொதுமைப்படுத்தல்களுக்கும் பதில் தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்பதிவு திராவிட இயக்கத்தை அதன் வெகுஜன அரசியலில் அதனால் பரவலாக்கப்பட்ட வாரிசு அரசியல், ஊழல், தனி மனித வழிபாடு ஆகியவற்றில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது இல்லை. அதே சமயம் போகிற போக்கில் வைக்கப்படும் வாதங்கள் முழுமையானவையா என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இப்பதிவு.

சினிமாவால் தமிழகம் சீரழிந்தது என்பது முழுக்கச் சரியான வாதமாக இருக்க முடியாது. தமிழகம் பல்வேறு துறைகளிலும், மனிதவளக் குறியீட்டிலும் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. காமராஜர் ஆட்சி என்று மட்டுமே சொல்லிப்பழகிவிட்ட நமக்கு (அந்தச் சொல்லாடல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ் கொண்டு வந்த கோஷம் என்கிற புரிதல் இல்லாமலே உச்சரிக்கிற நமக்கு) காமராஜரை தமிழக மக்கள் கைவிட்டது போலப் பேசுகிறோம். காமராஜர் தான் சீனப்போருக்கு பின்னர் விழுந்திருந்த நேருவின் இமேஜை சரிக்கட்டவும், நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் கட்சி பெற்ற தோல்வியால் துணுக்குற்றும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசியலுக்குள் புகுந்தார்.

தமிழகத்தில் உணவுப்பஞ்சம் பக்தவத்சலத்தின் ஆட்சிக்காலத்தில் பெருமளவில் ஏற்பட்டது. காமராஜர் கொண்டு வந்த சாஸ்திரி இந்தியை பந்த்தின் மூலம் திணித்த பொழுது இங்கே ஒத்துழைப்பையே சத்தியமூர்த்தி நல்கினார். பல நூறு பிள்ளைகளின் பிணங்கள் விழுந்தன, அரசு இயந்திரம் சுட்டுத்தள்ளியும், தீக்குளிப்புகளுக்குப் பிறகும் அரசு இறங்கி வராத சூழலில் மத்திய அமைச்சர்களின் பதவி விலகலே அதைத் தடுத்தது. நிர்வாகச் சீர்கேடுகள், உணவுப்பஞ்சம், மக்களைக் கொன்று தீர்த்த இந்தித்திணிப்பு இத்தனையும் காங்கிரசை மண்ணைக்கவ்வ செய்தன. “படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்.” என்று காமராஜர் சொன்னாரே அன்றி நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிற தொனியில் கட்சி பெரும்பாலும் செயல்படவே இல்லை.

அடுத்தது அரசியலுக்குள் சினிமாவைக் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தில் துவங்கிய ஒன்று அல்ல. தீரர் சத்தியமூர்த்தித் தான் அதைப் பெருமளவில் விடுதலைக்கு முந்தைய காலத்தில் முன்னெடுத்தவர். அதே சமயம் அவர் விடுதலைப் போருக்காக அப்படிச் செயல்பட்டார் என்று வாதிட எண்ணினாலும் மன்னிக்க. அவர் தேர்தல் அரசியலில் நீதிக்கட்சியைப் போல ஈடுபடவும் அந்த ஊடகத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அவர்கள் பாணியில் கிளம்பிய திராவிட இயக்கம் தன்னுடைய பிரச்சாரத்தை அதைக்கொண்டு கச்சிதமாகச் செய்தது.

வாரிசு அரசியல் என்பதன் சுவடுகள் இந்திராவால் எழுபதுகளில் மத்தியில் சஞ்சய் காந்தியை சூப்பர் பிரதமர் ஆக்கியதில் துவங்கியது. அண்ணா தனக்குப் பின்னர் இவர் தான் வாரிசு என்று யாரையும் குறிப்பிடவில்லை. வாரிசு அரசியலை எம்.ஜி.ஆர். எதிர்ப்பு என்பதை முன்னெடுத்த காலத்தில் மு.க.முத்துவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை தவிர்த்து பெரிய அளவில் கருணாநிதி அக்காலத்தில் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவரால் ஜனநாயகம் போனது என்று கண்ணீர் வடிக்கிற பலரும் உட்கட்சி ஜனநாயகத்தைப் பெருமளவில் தொண்ணூறுகள் வரை காப்பாற்றியவர் அவரே என்பதையும் இணைத்தே பேசவேண்டும். இந்திராவோ காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகத்தை இதே காலங்களில் துடைத்து எறிந்திருந்தார்.

நாயக வழிபாடு என்பதும், சினிமா நட்சத்திரங்களைக் கொண்டாடித் தீர்த்துத் தமிழகம் முட்டாளாகத் திகழ்கிறது என்று பலர் பேசக்கேட்டிருக்கலாம். எம்.ஜி.ஆரை ஓயாமல் தமிழகம் முதல்வராக அரியணை ஏற்றியது என்பதை மட்டும் வைத்துப் பார்த்து இந்த வாதம் நியாயம் எனத்தோன்றும். அவர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சி பெருமளவில் வீழ்ந்ததும், அதிகாரிகள் நடத்திய ஆட்சியாக அது திகழ்ந்ததும் உண்மை. ஊழல் தலையெடுக்க ஆரம்பித்து இருந்த கருணாநிதியின் ஆட்சியின் தொடர்ச்சி போலவே அவரின் ஆட்சியும் அமைந்தது. யாரெல்லாம் மு.க.வின் ஆட்சியில் தவறு செய்தார்கள் என்று அவர் சொன்னாரோ அவர்களையே தன்னுடைய அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார். . அதே சமயம் அடித்தட்டு மக்களைப் பற்றியும் கவலை கொள்கிற மனம் அவருக்கு இருந்தது. சமூக நலத்திட்டங்களை அவர் முன்னெடுக்கவே செய்தார். கொள்கை ரீதியான எதிர்ப்பு என்பது தனிமனித எதிர்ப்பாக இவர்கள் காலத்தில் ஆனது.

தமிழகம் சினிமா நாயகர்களை எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பின்னர்க் கொண்டாடுகிறதா என்கிற கேள்வியைத் தீவிரமாக எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பின்னர்க் கட்சி ஆரம்பித்த பல நடிகர்களை முகவரி இல்லாமல் மாற்றியிருக்கிறார்கள். ‘சூப்பர் ஸ்டார்’ என்று புகழப்படும் நபரின் குரலால் ஆட்சியைப் பிடித்தது திமுக என்கிற பிம்பமும் உண்டு. அப்பொழுது ஆட்சிக்கு எதிராக வீசிய எதிர்ப்பலையில் முதல்வரே தோற்றுப்போன பொழுது அதற்கு அவரின் வாய்ஸ் தான் முக்கியக் காரணம் என்றால் சிரிக்கவே வேண்டியிருக்கிறது. பின்னர் அவர் குரல் கொடுத்தும் நாற்பதிலும் வாக்காளர்கள் ஏன் அவர் ஆதரித்த கூட்டணியைத் தோற்கடித்தார்கள்? விஜயகாந்த்தை மாற்றாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கை உண்டு. அதே சமயம் அவருக்கு மகத்தான வெற்றியை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் தூக்கித்தரவில்லை.

ஆந்திராவில் என்.டி.ஆர். தொடர்ந்து திடீர் திடீரென்று ஆந்திர முதல்வர்கள் மாற்றப்பட்டது, ராஜீவ் காந்தியால் ஒரு ஆந்திர முதல்வர் அவமதிக்கப்பட்டது அனைத்தையும் கொண்டு முன்னெடுத்த ‘அடையாள அரசியல்’ அங்கே அவருக்கு வெற்றியைத் தரவே செய்தது. ஆந்திர மக்கள் சமீபத்தில் சிரஞ்சீவிக்கும் குறிப்பிடத் தகுந்த வெற்றியை தந்தார்கள். அவர்களுக்கும் அறிவே இல்லை என்று சொல்லிவிடலாம் இல்லையா? கர்நாடகாவில் ‘கோகக் போராட்டங்கள்’ என்று கன்னடத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்ட மொழிப் போராட்டங்கள் எண்பதுகளின் இறுதியில் நடந்த பொழுது அதற்கு ஒரு வெகுஜன ஈர்ப்பை ராஜ்குமாரின் வாய்ஸ் கொடுத்தது. அரசு அந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளைப் பெருமளவில் ஏற்கிற அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்தது. அங்கே சினிமா நடிகர்கள் தேர்தலில் நின்று வெல்வதும் நடைபெறுகிறது. சினிமாக்கவர்ச்சி தமிழகத்தில் உண்டு என்பதை மறுக்க முடியாது என்றாலும் பொதுப்படையாக அது என்னவோ தமிழகத்தின் பண்பு மட்டுமே என்று முத்திரைக் குத்துவது சரி கிடையாது. ஒழுங்கான மாற்றுகள் எதுவும் கண்ணில் தென்படாத பொழுது இருப்பவர்களில் குறைந்த தீமை எதுவென்றே தேர்வு செய்ய வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

ஊழலில் தெற்கு மட்டுமே திளைத்து நிற்பது போன்ற பிம்பமும் உண்டாக்கப்படுகிறது. இதில் வடக்கு ஒன்றும் சளைத்தது இல்லை என்பதும், பல முதல்வர்களை ஆட்சியை விட்டே 75 களில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அனுப்பும் கிளர்ச்சிகள் குஜராத், பீகாரில் நடந்தன என்பதையும் மறந்துவிடக்கூடாது. இந்திரா ஆட்சிக்காலத்தில் ஊழல்கள் பலம் பெற ஆரம்பித்தன என்றால் மொரார்ஜி தேசாயின் மகன் செய்த முறைகேடுகள் ஜனதா ஆட்சியில் சந்தி சிரித்தன. ராஜீவின் ஆட்சியைப் பற்றி உலகறியும். நரசிம்ம ராவின் ஆட்சியின் ஊழல்கள் சர்க்கரை ஊழல், அரசுக் குடியிருப்பு ஊழல், ஹவாலா ஊழல் என்று நீண்டன.

அந்தந்த பகுதியின் விருப்பங்கள், கலாசார, மொழிப் பின்புலங்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இங்கே ஆட்சியைப் பிடிக்க எண்ணிக்கொண்டு செயல்படும் தேசியக்கட்சிகள் பெருத்த தோல்வியையே சந்தித்து வருகிறார்கள். பிரிவினைவாதிகள் என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்படும் தமிழகம் பல்வேறு சமயங்களில் அநியாயங்கள் இழைக்கப்பட்டாலும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் மிசோரம்,நாகலாந்து, பஞ்சாப், காஷ்மீர் போல ஈடுபடவில்லை என்பதையும் இணைத்து கவனிக்க வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் போக்கு ஆரோக்கியமானதாக இல்லை. அது ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. வாரிசு அரசியலாக ஒரு கட்சியும், ஓரிரு குடும்பங்களில் பீடமாக இன்னொரு கட்சியும் மாறியிருக்கின்றன என்பதையோ, தனி மனித வழிபாட்டை நிகழ்த்தும் நபர்களைக் கண்டித்துக் கூடப் பேசாமல் ஊக்குவிக்கிற தொனியில் தான் இரண்டு முதல்வர்களும் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கட்டாயம் கவலையோடு அணுகவேண்டும். அதே சமயம், பொதுமைப்படுத்தல்கள் மூலம் விவாதத்தின் நடுவே அவரவரின் சார்பு, முன்முடிவுகள் ஆகியவற்றை முன்னிறுத்துவதைக் கவனத்தோடு அணுக வேண்டும். கடந்த காலத்தில் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதோடு, எதிரணியும் என்னென்ன தவறுகள் செய்தது என்கிற புரிதல் அவசியம். அவரவரின் கருத்துக்களை மட்டுமே நம்புவதைவிட வரலாற்றை நோக்கி நாமே தேடலை நிகழ்த்தல் அவசியம்

காதல் காற்றில் பறக்கும் காகம் !


இன்றைக்கு மலர்கள் வாங்கி நீட்டுவார்கள்…
முத்தங்கள் பரிமாறிக்கொள்வார்கள்
சிலர் திருமணங்கள் செய்து வைப்பார்கள்…
கைபிடித்து நடப்பது…
மோதிரங்கள், மலர்கள் சூடி திகைப்பது..
ஓரமாக யாருமில்லாமல் சிலர் வெறுங்கை வீசி நடப்பார்கள்…
பூச்சுகள் இன்றிப் பெரும்புன்னகை தாங்கியபடி
இன்னொரு நாளே என்பது போலத் தெருமுனைகளில் உறங்கிக்கிடப்பார்கள் …
பர்ஸ் காலியாகாமல் தப்பியது என்றபடி
கம்பீரமாகக் காலசைத்து அமர்வார்கள் இன்னம் சிலர்
கைகளில் ரோஜாக்கள் ஏந்தி மண்டியிட்டு முகம் திறக்கையில்
கரங்களில் தீப்பந்தங்களோடு ஜாதித்தலைவர்கள்
கருணையோடு ஆடுவெட்டும் கல்யாணக்கத்தியோடு உறவினர்கள்…
தாலி, ராக்கி ஏந்தியபடி கலாசாரக்காவலர்கள்
கண்ணீர் முடிச்சுகளோடு,
தோல்வியின் தடிப்புகள் தாங்கியபடி
வற்றிவிட்ட மன ஆற்றின் கரையின்
மணல்கள் எண்ணி
ஆங்காங்கே நகரும் அத்தனை பேரிடமும்
ஒரு காதல் கதை உண்டென்று மூச்சை வருடியபடி
காற்றுக்கு முத்தம் தருகிறது காகம்!-

காதல் பதினான்கு !


பதினான்கு தினங்களில் நான் பார்த்த, கேட்ட, இணைத்த, அழுத, உடன் வாழ்ந்த காதல் கதைகள், நினைவுகளின் தொகுப்பு இது:

கிண்டி பொறியியல் கல்லூரியில் இருக்கிற ஆறாயிரம் பேரில் வித்தியாசப்படுத்திக் கொண்டே இருக்கும் பலபேர் கண்களில் படுவார்கள். அதில் அவனும் ஒருவன். டாப் கட் ஆஃப், டாப் துறை என்று கலக்கி எடுத்த அவன் கல்லூரியின் கல்வி முறையின் வன்முறையில் ஆறு, ஆறரை என்றே GPA வைத்திருப்பான். ஆனால், நடைமுறை அறிவியலில் (குறிப்பாக எந்தத் துறை சொன்னால் யாரெண்டு தெரிந்து விடும். வேண்டாம்) பின்னி எடுப்பான். அவனிடம் உங்கள் பிள்ளைகளைப் பள்ளி முடித்ததும் அனுப்பி வைத்தால் சத்தியமாக ஒரு விஞ்ஞானியாக ஆவதற்கான உத்வேகத்தையும், திறப்பையும் தந்து விடுவான். அதுவல்ல விஷயம்.

அவனின் மற்ற குணங்கள். எப்பொழுதும் தூக்க கலக்கம் கொண்ட முகமாகத்தான் அவனைப் பார்க்க நேரிடும். ஷேவ் பண்ண வேண்டுமா என்பது போல அவனின் முகம் சிரிக்கும். அலைபேசியை அரைக் கிலோமீட்டர் தூரத்தில் தள்ளி வைத்துவிட்டு தான் அவன் பாட்டுக்கும் இருப்பான். பெண்கள் முகம் பார்த்து ஒரு வார்த்தை அவன் பேசிவிட்டால் தலைப்புச் செய்தி போட்டுவிடலாம். சாட்டில் பிடித்தால் பத்து நாட்கள் கழித்து அரசு நடத்தும் ஊழல் வழக்கு போல அத்தனை வேகமாக நகரும் உரையாடல்.

ஒரு நாள் அவனைப் பார்த்து, “மச்சி! நீயெல்லாம் லவ்லாம் பண்ணுவியாடா? இப்படிலாம் இருந்தா எந்தப் பொண்ணுடா பார்க்கும். ஸ்மார்ட்டா தானே இருக்கே. ஏண்டா இப்படிப் பண்ணுறே?” என்று கேட்டேன். சிரித்துவிட்டு நகர்ந்தான்.

இன்னொரு நாளும் இப்படியே நான் புலம்ப, அவன் “டேய் கொஞ்சம் கூலா இரு. நான் இரண்டு வருசமா கமிடட்.” என்றான்.

அப்படியே பவர்ஸ்டார் தேசிய விருது வாங்கினால் என்னாகுமோ அப்படியொரு அதிர்ச்சிக்கு உள்ளானேன் நான்.

“என்னடா சொல்லுறே.”

“ஸ்கூல்மேட். ரொம்ப நாளா பிரெண்ட்ஸ். இப்ப இப்படி.”

“ஓ. ஒழுங்கா பேசுவியா?”

“அப்பப்ப பேசுவேன். இதெல்லாம் தெரிஞ்சுதானே அவ ஓகே சொன்னா.”

“மேலே சொல்லுடா”

“ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு அப்படினே உடனே சொல்லிடணும். காத்துகிட்டே இருந்தோம்னா நாம சொதப்புறதுக்கான வாய்ப்பு கூடிகிட்டே போகும். ரொம்ப நாள் நட்பு இப்படி மாறினா நல்லதுன்னு தோனுச்சு. சொன்னேன். அவங்க மூன்று மாசம் எடுத்துக்கிட்டாங்க.You know what.. அந்த மூன்று மாசத்தில் என்னை அவங்க வெறுக்க எல்லாக் காரணத்தையும் கொடுத்தேன். ஏனோ கிறுக்கு மாதிரி பண்ணினேன்னு வெச்சுக்கோயேன். அவங்க அதுக்கப்புறம் ஓகே பண்ணினாங்க!” என்று அத்தனை அழகாகச் சிரித்தான்

இப்போதும் இரவு வரை அவன் அலைபேசியை எடுத்துச் சகாக்கள் பார்ப்பது இல்லை. ஏழெட்டு மாதங்களுக்கு ஒருமுறை தான் சந்திக்கிறார்கள். ஆனாலும், காதல் ரம்மியமாக இருக்கிறது என்பதன் சுவடுகளைக் காட்டிக்கொண்டே இருக்கிறது அவனைக் கூர்ந்து கவனிக்கும் தருணங்கள். சமீபத்தில் வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு சொற்பொழிவுக்கு அவனையும் அழைத்திருந்தேன். அன்றைக்குத் தான் பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் சந்தித்தார்கள் போலும். அப்படியே அந்த நாளை சொற்பொழிவில் செலவிட்டு விட்டு, அப்பாவுக்கு, “உள்ளேன் டாடி!” போட பெண்ணைக் கூட நல்ல பிள்ளையாக விடுதியில் விட்டுவிட்டு வந்தான் அவன். இவ்வளவுதான் அவர்களின் பொன்மாலைப் பொழுது…

“வீட்டில் சொல்லிட்டியாடா?”

“அவங்க வீட்டில போய்கிட்டு இருக்கு..”

“உங்க வீட்டில்?”

“எங்க அம்மா எப்பவும் என் பக்கம். அப்பாவும் நானும் எதுலேயுமே ஒத்துப்போக மாட்டோம். அவர் என்ன சொன்னாலும் நேர்மாறாதான் நான் செய்வேன். ஸோ நோ ப்ராப்ஸ்.” என்று அவன் ஷேவ் செய்யாத தாடியை வருடியபடி என்னை டிராப் செய்தான்

—————————————————————–

“லவ் பண்ணினியே அறிவு இருக்கா? இப்படியெல்லாம் ஆகும்னு தெரியாதா?”

“ஒத்துக்க மாட்டங்கன்னு தெரியுமில்ல. அப்புறம் என்னத்துக்கு லவ் பண்ணினீங்க?”

“நீ வேற ஜாதி, அவன் வேற ஜாதி. ஸ்டேட்ஸ் ஒத்துப் போகாது. கலரும் சகிக்கல. ஏண்டி பண்ணினே?”

“முன்ன,பின்ன பார்த்துப் பண்ணியிருக்கக் கூடாதா?”

இப்படிக் காதலிப்பவர்களை, காதல் கைகூடுமா என்று தவிப்பவர்களை எப்படியெல்லாம் போட்டு வறுக்க முடியுமோ அப்படியெல்லாம் துளைக்க ஒரு பெரிய க்ரூப் இருக்கு smile emoticon மனசு ஒத்துப் போயோ, அல்லது எப்படியும் சேர்ந்துடலாம் என்கிற நம்பிக்கையோடு காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கு இத்தனை எதிர்ப்பா என்பது போகப் போகத் தான் புரியவே செய்கிறது. கணக்கு போட்டு, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தேடித் தேடி (சில பேர் ஜாதிக்குள் பெண் பார்த்து காதலிக்கிறார்கள், சிலர் ஜாதகம் கூடப் போட்டுப் பார்த்து விட்டு உள்ளே நுழைகிறார்கள், இன்னம் சிலர் வகையறா கூட ஜாதிக்குள்ளேயே பார்த்துவிட்டு லவ்வு(?) பண்ண களம் புகுகிறார்கள். போன தலைமுறையோட டச் அப்படியே தொடருது.

ஓரிரு பிரிவுகளை மட்டும் இங்கே சொல்கிறேன். ஒரு தம்பி ரொம்பப் பொறுப்பாகக் காதலித்து, கண்ணீர்விட்டு, கதைத்து இறுதியில் அடித்தான் பாருங்கள் பல்டி…ஜாதகம் பார்த்துவிட்டு ஒத்துப்போகலை என்று கோடி கும்பிடு போட்டான். பெண் உடைந்து, இன்னமும் அழுது, அலுத்து, மீண்டும் அழுது…ப்ச்..விடுங்கள்.

பல கதையில் நடக்கும் இன்னொரு விஷயம்..”நீ எங்க பேச்சை கேட்கலைனா சூசைட் பண்ணிப்போம்.” என்கிற பெற்றோரின் மிரட்டல்

என் நண்பன் இப்படிக் கேட்டான், “நான் உங்ககூடப் பொறுமையா, ‘லவ் பண்ணுறோம். ஒத்துக்குங்க’ அப்படின்னு தானே விளக்கி பேசறேன். நீங்க சேர்த்து வைக்கலைனா செத்துடுவேன்னு மிரட்டினேனா? நீங்க மட்டும் ஏன் இப்படிப் பண்றீங்க. நல்லா இருக்கா அப்பா..” என்று ஒரே போடாகப் போட்டான்.

அமைச்சர் வரை போய்த் தான் உருகி, மருகி மகள் போலப் பாசம் காட்டிய பெரிய இடத்துப் பெண்ணைக் கரம் பிடிக்க முயன்றான் அந்தப் பையன். இறுதிவரை தலையாட்டிக்கொண்டே வந்த பெண் நான்கு வருடக் காதலின் இறுதிப் புள்ளியில், எந்தச் சலனமும் இல்லாமல், “எங்க அப்பா, அம்மா தான் முக்கியம். வேற பையன் கிடைப்பான். வேற தாய், தந்தை கிடைப்பங்களா?” என்று ஒரே போடுபோட்டுவிட்டு பெற்றோர் மனங்குளிர அந்த அன்புத்தாரகை கிளம்பினார். அந்த வாலிபர் என்னிடம் இப்படிப் புலம்பினார்:

“எனக்கு முதுகுத் தண்டுவடத்தில் இன்பெக்ட் ஆகி ஆபரேட் பண்ணினாங்க. அப்பலாம் அவ இருக்கா அப்படிங்கறே நினைப்பே மிதக்க வெச்சது. இப்ப அவ மொத்தமா போயிட்டா. தூக்கமே ஒரு வருசமா இல்லை. இன்னமும் கட்டிக்கிட்டு இருக்கு தம்பி.. என் தங்கத்தைக் குறை சொல்ல வரலை. விடுங்க பாஸ்…”

————————————————–

தூரங்கள் காதலை உடைத்து நொறுக்குவது பல சமயங்களில் நடக்கிற ஒன்று. பலருக்கும் பிடித்த அண்ணன் ஒருவன் தன்னுடைய காதலை ஷங்கர் படத்தின் கதை போலப் பத்திரமாகக் காப்பாற்றினான். நான்கு சொச்சம் ஆண்டுகள் பிரிவென்பது மரணத்தில் தான் என்று போன காதல், அவனின் பிரியை அமெரிக்கா போய் எம்.எஸ். படிக்க ஆரம்பித்ததும் பிளவுற்று முறிந்து போனது.

பூனாவில் இருந்தபடியே தன்னுடைய புதுக்காதலை காக்கலாம் என்று நம்பிய அண்ணனுக்கும், அந்த அக்காவுக்கும் ஏற்பட்ட சின்னச் சின்னச் சிக்கல்கள் கூடப் பெரிதாய் கிளை பரப்பின. “ரிலேஷன்ஷிப்பில் தொடர்ந்து இருக்க அப்பப்ப நடக்குற மனஸ்தாபத்தை அப்படியே ஞாபகம் வெச்சுக்காம அன்னியோனியமா இருக்கணும். அந்தக் கம்ஃபர்ட் முகத்தைப் பார்த்துட்டா தான் வரும். மினிமம் மன்த்லி ஒன்ஸ் பார்க்கணும். அதுக்கு வாய்ப்பில்லாம போய் முடிஞ்சுடுச்சு தம்பி எல்லாமே.” என்று அவர் வெறுமையாய் எங்கோ பார்த்தார்.

சிலர் இதிலும் கலக்கி எடுக்கிறார்கள். பம்பாயில் இருந்து கெம்பகவுடா அஸ்திவாரம் போட்ட நகரில் இருக்கும் தன்னுடைய இணையைப் பார்க்க எப்பொழுதெல்லாம் விடுமுறை கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அந்தத் தம்பி போய்விடுவான். “பிரிவு கொடிது.” என்று சொல்லிக்கொண்டே அனுதினமும் அந்தப் பிரிவை பற்றி மட்டும் பேசாமலே நட்பாய் இருந்த காலம் போலவே கதைத்து கப்பலை கம்பீரமாகச் செலுத்துகிறான்.

இன்னொருத்தன் இருக்கிறான். “பொசசிவ் ஆகித்தொலையேன்டா!” என்று அவன் ஆள் பளார் பளார் என்று அறைந்தால் கூடத் தேமே என்று நிற்கிறான். smile emoticon குதித்து மிதிக்கும் அவனுடைய காதலி மூன்று கண்டங்களில் படித்துவிட்டு வந்துவிட்டார். இன்று வரை கோபம் என்றால் என்ன பாஸ் என்று கேட்டே காதலை கெட்டிப்படுத்தி வைத்திருக்கிறான் அவன்.

காதல் கைகூடிய அடுத்த வருடத்திலேயே அந்த அக்கா அமெரிக்கா போக வேண்டியதாகப் போயிற்று. ஏர்டெல் கட்டிக்கொண்ட புண்ணியத்தில் ஒரு ரூபாய் ஒரு நிமிஷத்துக்கு என்று அனுதினமும் நள்ளிரவு விழித்திருந்து அவர்கள் கதைப்பார்கள். நடுவில் அண்ணனின் முதுகிலே பெரிய நோய்த்தொற்று ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாகி போனான். “ஆசை முகம் மறந்து போச்சே!” என்று அக்கா விம்மி அழுததற்கு ஆறுதல் சொல்லும் நள்ளிரவுப் பணியில் சிக்கி தேர்தல் நேரத்து ட்ராபிக்கில் ஆபிஸ் போகும் நபர் போல விழி பிதுங்கினேன். அக்கா அழகாய் அவனுக்கு ஆங்கிலத்தைக் கடிதங்கள் எழுதினார். அச்சுப் பிசகாமல் மொழி பெயர்த்து அவனுக்கு அனுப்பி வைத்தேன்.

இந்தியாவுக்கு ஒரு மாதகால விடுமுறையில் அக்கா வருவது என்று ஆனதும் வீட்டை மீறி அவனைப் பார்க்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. அதனால் தேவதை கால் சென்னை மண்ணில் படுவதற்கு முன்னரே மும்பைக்கு ப்ளைட் பிடித்துப் போனான் அண்ணன். அங்கே நள்ளிரவு முழுக்க இணைந்து விமான நிலையத்திலேயே அமர்ந்தும், நடந்தும் நள்ளிரவைக் கழித்தார்கள் அவர்கள். அவர்களின் கையில் நான் எழுதிக்கொடுத்த கவிதை. smile emoticon அந்தக் கவிதையைக் கண்களில் கண்ணீரும், காதலும் பெருக்கெடுக்க அவர்கள் வாசித்தபடி கரம்பற்றி நேசித்த கணத்தில் புவியியல் உருவாக்கிய பிரிவை வேதியியல் வென்று இருந்தது

—————————————————

மொழிகளைக் கடந்து காதலிப்பவர்களின் காதல்களைக் கவனித்து இருக்கிறீர்களா? மொழி தான் சமயங்களில் மனிதர்களுக்குள் இத்தனை சிக்கல்களை உண்டாக்கி விட்டதோ என்கிற எண்ணத்தைத் தருகிற அளவுக்கு அவர்களின் காதல்கள் அத்தனை ரம்மியமாக இருக்கின்றன.

அந்தப் பெண் அப்படியொரு அன்புக்கு உரியவள். எத்தனையோ வலிகளை வாழ்க்கையும், பெற்றோரும் தந்திருந்தும் துளி கூடச் சக மனிதர்கள் மீது வெறுப்பை அவள் உமிழ்ந்து நீங்கள் பார்க்க முடியாது. அழுத்திப் பிடிக்கும் வாழ்க்கையின் அழுகைகளை எல்லாம் எப்பொழுதும் சிரித்துக் கடக்கப் பார்க்கும் பேரழகி அவள். பலரும் விண்ணப்பம் நீட்டிய போதெல்லாம் கண்ணெடுத்துப் பார்க்க கூட அவளின் கடந்த கால வலிகள் தடுத்தன.

“வீட்டில காட்டுறவனைக் கண்டிப்பா கட்டிக்க மாட்டேன்பா..எதாச்சும் வேற மொழி பேசுற பையனா தான் பார்க்கணும்..” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். இந்தி, கன்னடம், தெலுங்கு என்று வெவ்வேறு பசங்களைப் பார்த்துவிட்டு இறுதியில் அவள் சொன்னது போலவே சாதித்துக் காட்டினாள்.

“எப்படியா இருக்கே…எப்பவும் நல்லவனாவே நடிக்காதே…எப்பவும் சிங்கிளாவே இருக்க வேண்டியது தான்..”என்றபடி அன்றைக்கு அலைபேசியில் சொன்னாள்..

“உன் கதை என்னாச்சு?” என்று கேட்டேன் நான். நேரில் சொல்வதாகச் சொன்னாள். ஆஜரானேன்…

“சொல்லல இல்ல உனக்கு…கேண்டில் லைட் வெளிச்சத்தில் கமிட்டாகிட்டேன். சீக்கிரம் கல்யாணம் நடக்கும். சொல்லுறேன்..வந்துடு”

“பையன் யாரு?”

“நைஜீரியன்..அவர் தான் முதல்ல சொன்னார். இயல்பா இருந்தது. ஒத்துக்கிட்டேன். முத்தம் கூடக் கொடுத்துக்கிட்டோம்…வாழ்க்கை புதுசா ஆரம்பிக்கிற மாதிரி இருக்கு..”என்ற அவளுக்கு மௌனமான புன்னகையால் வாழ்த்து சொன்னேன். அவளுக்குப் புரிந்திருக்கும் smile emoticon

என் ஹாஸ்டல் வாசலுக்கு அண்ணனை அனுதினமும் அழைத்துச் செல்ல அந்த வடகிழக்குப் பெண் வருவார். அண்ணனோ வங்காளி. ஆங்கிலத்தில் பேசியே இரண்டு வருடங்களாகக் காதலை வளர்த்து நகர்கிறார்கள்.

“அக்காவே பைக்கை ஓட்டுறாங்க…ஏன் நீங்க வெச்சுக்கிட்டுப் பறக்கிறது”

“பெமினிசம் பேசினா மட்டும் போதுமா… அவளே ஓட்டட்டும்…”என்று பெரிய தத்துவம் பேசியவன் பின்னர்ச் சொன்னான், “எனக்கு ஓட்டத்தெரியாதே…என்ன பண்ண” tongue emoticon

இருவரின் மதமும் வேறு தான் grin emoticon

அவர் நிகழ்வுகளில் நடுவராக உட்கார்ந்தால் தோலை உப்புக்கண்டம் போட்டுவிடுகிற கடுமை இருக்கும். அவர் தெக்கத்தி நபர்.

“இவரையெல்லாம் கல்யாணம் பண்ணிட்டவங்க பாவம்” என்று என் நண்பன் கமென்ட் அடித்தான்

அந்த நிகழ்வில் அவரின் பெர்சனல் பக்கம் சொல்லப்பட்டது,

“நான் வடநாட்டுப் பக்கம் போனேன். அவங்க இந்தி வாத்தியார். நான் இந்தி கத்துக்கப் போய், இனிதே காதலில் முடிந்தது. இன்னமும் இந்தி கத்துக்கல..” என்ற பொழுது அவர் என்னமோ பக்கத்து வீட்டில் நோட்டை வைத்து முகத்தை மறைத்தபடி நடந்து போகிற அக்காவை சைட் அடிக்கும் அண்ணன் போலத் தெரிந்தார்.

“எப்படிச் சார் பேசிக்கிடுவீங்க?”

“சைகையாலே பேசிறது செம ரொமாண்டிக்கா இருக்கும்யா…இல்லைனா இங்கிலீஷ்..அவங்களை நான் தமிழ் கத்துக்கோனு கட்டாயப்படுத்தல…நானும் இந்தி கத்துக்கல” என்று அவர் சொன்ன பொழுது பிரமிப்பாக இருந்தது. ஊருக்குக் குச்சி எடுத்த வாத்தியார் எல்லாம் வீட்டில், உத்தமக் காதலர்கள் சாமியோவ்

——————————————————————

சரசரவென்று நகரும் காதல் கல்யாணத்தில் முடிந்த பிறகு எத்தனை கரடுமுரடான அனுபவங்களைத் தந்து விடுகிறது? சிலர் மட்டும் அதிலும் அத்தனை அழகாய் அன்பு காட்டுவதைக் கண்டு வியப்படையும் தருணம் பெற்றவன் நான்.

ஓவியர் மனோகர் தேவதாஸை மாணவ நிருபராக இருந்த பொழுது சந்திக்கச் சென்றிருந்தேன். அவரின் ஓவியங்களின் துல்லியம், கோடுகளின் வழியாகவே அத்தனை கம்பீரம், எழிலைக் கடத்தும் அவரின் நகர் உலா உங்களை அடித்துப் போடுகிற கலைத்தன்மை கொண்டது.

அவருக்குத் திருமணமாகி ஆறாண்டுகள் ஆகியிருந்த சூழலில் மனைவி மஹிமா காரோட்டிக்கொண்டு வெளியே போனார். அப்பொழுது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் அவருடைய முதுகுத் தண்டுவடம் துண்டிக்கப்பட்டது. பத்து மாத போராட்டத்துக்குப் பிறகு அவரின் கழுத்துக்குக் கீழே எந்தப் பாகமும் செயல்படாது என்கிற நிலை ஏற்பட்டது.

கண்ணில் பார்வை மங்கத்தொடங்கியது. சோதித்துப் பார்த்தால் Retinitis pigmentosa என்கிற கண் வியாதி ஏற்பட்டிருந்தது தெரிந்தது. படிப்படியாக ரெடினா திரை பாதிக்கப்பட்டுப் பார்வை பறிபோவது உறுதி என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

அவரின் மனைவி அவருக்கு ஆறுதல் சொல்லவில்லை ,”மனோ நீங்க நல்லா படம் வரைவீங்க இல்லையா?போங்க மதுரையோட அழகை பதிவு பண்ணுங்க ! பார்வை முழுசா போனதுக்கு அப்புறமாவா பதிவு பண்ணுவீங்க ?”என்றார்.

அதற்குப் பின் நடந்தது ஓவியரின் வார்த்தைகளிலேயே,

“நான் பயிற்சி பெற்ற ஓவியன் கிடையாது

…ஆனால் எனக்கு ஆழ்ந்த பொறியயல் அறிவு உண்டு.அதனால் நான் வரகிற ஓவியங்கள் அளவீடுகளைக் கொண்டதாக அமைந்து இருக்கும் .துல்லியமாகவும் இருக்கும் ,சென்னையில் இருந்து மதுரைக்கு அடிக்கடி பயணம் போனேன்.அனைத்தையும் பதிவு செய்தேன் .கண்பார்வை மங்கிக்கொண்டே வந்தது .என்

செல்லம் என்ன செய்வாள் தெரியுமா ?நான் சோர்வடையக் கூடாது என்பதற்காகப் புத்தகத்தை வாசித்துக்கொண்டே இருப்பாள்.அங்கே புத்தகத்தை என் மகள்

பிடித்து உதவி செய்வாள் .என் கண்கள் ஏகத்துக்கும் நகர்ந்து கொண்டே இருக்கும் ..நேரான கொடு வளைந்து நிற்பது போலத் தெரியும் ….இதனால் வரைவதற்கு ரொம்பவே சிரமம் .கண்களில் கண்ணீர் ஏகத்துக்கும் கொட்டும் …

என் பார்வை மங்க ஆரம்பித்ததும் நான் பல விஷயங்களை ஓவியம் வரைவதற்காக மாற்றிக் கொண்டேன் .உலகிலே அதிகபட்ச பவரான +இருபத்தி ஏழு அணிந்து ஓவியம் வரைகிறேன் …இப்படி சொல்லலாம் …ஒரு பொட்டை கால் பந்து அளவிற்குப் பெருக்கினால் தான் மங்கலாகத் தெரியும் …எஸ் டி முதலிய வார்த்தைகளுக்கு

வித்தியாசம் தெரியாது …ஸ்கேலால் தடவி தடவி தான் எழுத்தை வித்தியாசப்படுத்திக் கொள்வேன் ,நிறமே தெரியாது ..ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் வைத்து கொள்வேன் .பச்சை பென்சில் நீளமாக இருக்கும் .மஞ்சள் குட்டையாக,சிவப்பில் பொட்டு ஒட்டி இருப்பேன் .இப்படி …

மஹிமா நான் மதுரையைப் பற்றி வரைந்த ஓவியங்களையும் ,உடம்பின் எந்தப் பாகமும் நகர முடியாத நிலையில் தன் தோள்பட்டை எலும்பை கடினப்பட்டு நகர்த்தி வரைந்த

ஓவியங்களையும் HERITAGE கார்ட்ஸ் என்கிற பெயரில் தயாரித்துப் பெரிய நிறுவனங்களுக்கு அனுப்புவாள்.அதிலிருந்து லட்சகணக்கில் திரளும் பணத்தை ஆதரவற்றவர்களுக்கும் ,அனாதைகளுக்கும் கொடுத்து உதவி செய்வாள் .நாற்பத்தி

இரண்டு வருடங்கள் இந்தச் சேவையைச் செய்தோம் .

பின் எனக்கு மீதம் இருந்த ஒரு கண்ணிலும் பார்வை மொத்தமாகப் போகிற நிலை . ஒரு கட்டத்தில் வெறும்

வெளிச்சமும் ஒளிப்புளிகளும் மட்டும் தான் தெரிந்தது ,என் புன்னகை மாறாத மனைவி மரணம் அடைந்த பொழுது அவள் முகம் கூட எனக்குத் தெரியவில்லை …அவள் ரொம்பவே அழகாகத் தனக்குப் பிடித்த மல்லிகை பூவை அணிந்து

கொண்டு கண் மூடி இருந்தாள் எனப் பலரும் சொன்னார்கள் .அவளை என்னால் தான் பார்க்க முடியாமல் போனது .கிட்டத்தட்ட பத்து வருடம்,”மனோ “என்கிற அந்த

குரல் மட்டும் தானே எனக்குக் கேட்டது .

…ஏற்கனவே கிரீன்வெல் டேஸ் என்கிற மதுரையைப் பற்றிய புத்தகம் ஐந்து பதிப்பு வந்து விட்டது …இனிமேல் எங்கே எழுதுவது ? எனக்கு உங்கள் முகம் தெரியவில்லை …ஒரு உதவி பண்ணுறீங்களா தம்பி ?என் மனைவி படத்துக்கு

கேண்டில் ஏற்றுங்க …அந்த வெளிச்சம் மட்டும் புள்ளியா தெரியும்…பண்ணுங்களேன்!”என அவர் கேட்க நாங்கள் ஏற்றிய அந்த எழுகிற தீபத்தில் ஒளிர்கிறது இறவாத காதல்..

————————————————————

ஓயாமல் அடித்துக்கொள்வதாக நமக்குத் தோன்றுகிற, மிகவும் அமைதியாக இருக்கிறவர்களாகக் காட்சியளிக்கிற காதல்கள் இரண்டிலுமே நம்மை ஏமாற்றிப் பிரியத்தை வாரிச்சூடி கொள்வதில் இணைகள் சிறப்புற்று சிரிக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தால் அறிய முடியும்.

அந்தத் தம்பி என்னிடம் பேசுகிற ஒவ்வொரு கணத்திலும் அவனுடைய காதலை இறைவன் தந்த வரம் என்பதில் துவங்கி, உருகி, மருகி பேசியவாறே இருப்பான். ஊரிலே பல்வேறு விண்ணப்பங்கள் வந்தாலும் ஏறெடுத்தும் பார்க்காதவன் அவன். புத்தாண்டு நெருங்கிய நள்ளிரவில் அவனின் காதலியோடு காரில் போகையில் நானும் அவனும் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தோம்.

இவன் சொன்னவற்றை அப்படியே சொல்லிக்கொண்டே வந்தேன் நான். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணோ, கண்கள் விரிய, முகமெல்லாம் சிரிப்பு நுரைத்து ததும்ப, “அப்படியெல்லாமமா சொன்னான் இவன்…என்கூட எப்பவுமே சண்டை போட்டுகிட்டே தான் இருப்பான்!” என்று சொன்னார். இதையே அவர்கள் எப்படி அலுக்காமல் ஐந்து வருடங்களாகச் செய்கிறார்கள் என்பது புரியாத ஒன்று.

இன்னொரு தம்பி கல்லூரி கலை நிகழ்வுகளில் முக்கிய இடம் வகிப்பவன். “என்கூட அவனுக்கு ஸ்பென்ட் பண்ண டைமே இல்லைணா. எப்பவாவது பார்த்தா பேசிக்கிட்டா உண்டு.” என்று தங்கை பொருமுவாள். நான் அவனைக் கூப்பிட்டுக் கண்டித்தேன். “எல்லாம் சரிதான் ப்ரோ. சாயந்திரம் எனக்கு என்ன டூட்டி அப்படின்னு அவளைக் கேளுங்க” என்றான் அவன். இவன் அவளின் வகுப்பில் இருந்து பேருந்து வரும் வரை உடனிருந்து பேசிவிட்டு வரவேண்டிய கட்டாயப் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருப்பது அப்பொழுது தான் தெரிந்தது.

சில ஜோடிகள் இன்னமும் வில்லங்கமானவர்கள். நம்முடனே இருப்பார்கள். “இப்பலாம் பெருசா எதையும் ஷேர் பண்ணிக்க டைமே இல்லை.” என்று அரற்றுவார்கள். அப்படி ஒரு தம்பி புலம்பிக்கொண்டு இருந்தான். “சரி அவங்களை நட்பு வேண்டுகோள் அப்புறமா ப்ரீ ஆனா கொடுக்கச் சொல்லு.” என்றேன். அவனை அப்படியே கொண்டு போய் ஹாஸ்டல் வாசலில் விட்டு விட்டு முகநூலை ஆன் பண்ணிய அடுத்தக் கணம் அந்தப் பெண்ணின் நட்பு வேண்டுகோள் இருந்தது. அதிகபட்சம் இரண்டு நிமிடம் இடைவெளி இருந்திருக்கும்

நம்மிடமெல்லாம் எகிறிப் பேசும் பல முரடர்கள் அவரவரின் இணையை வாடி, போடி என்று கூட அழைக்க மாட்டார்கள். அவன் சண்டை என்று வந்தால் ரத்தம் பார்க்காமல் ஓயமாட்டான். அன்றைக்கு ஏதோ அழைப்பு வந்தது, “சொல்லும்மா..இல்லைமா தங்கம்…சரிம்மா” என்று பலவாறு பம்மினான். “யாருடா?” என்று கேட்டதும் தலையைச் சொறிந்து துப்பாக்கி தூக்குபவன் பூப்பறிக்க அஞ்சுவது போலச் சிரித்தான்

——————————————————————————————– 

காதலை புனிதமான ஒன்றாகப் பார்க்கும் பல பேரால் பீச்சிலும், பார்க்குகளிலும் பிணைந்து கிடக்கும் ஜோடிகளைக் கொண்டு இது காமதினம் என்று சொல்லி குமுறுகிறார்கள். மலரினும் மெல்லிது காமம் என்பதும், காதலில் அது பிரிக்க முடியாத அங்கம் என்பதையும் மனம் ஏற்க மறுக்கிறது. இப்படியெல்லாமா காதல் புரிவார்கள் என்று அதை நெறிப்படுத்த நாம் துடிக்கிறோம். காதலைப் பற்றிப் பெரிய கனவுகளும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் யோசிக்காமல் நீங்கள் காதலியுங்கள்.

காதல் என்பதன் மீதான புரிதல்கள் வயதுக்கு வயது மாறுபடுகிறது. உணர்வுகள் தரும் கிளர்ச்சி, அன்புக்கான ஏக்கம், வயதுக்கேற்ற தேடல்கள் எல்லாமும் செலுத்துகின்றன. ஒவ்வொருவரும் சொதப்பியே காதலில் மூழ்கி முங்கியோ, முனகியோ, கரை சேர்ந்தோ விடுகிறார்கள். வேக வேகமாகக் காதல் இன்றைக்கும் பயணித்து ஓய்ந்து போகிறது என்பதும் உண்மை.

மிகவும் இயல்பான ஒரு விஷயம் அது. குழந்தைகளிடம் காமம் பற்றியோ, காதல் பற்றியோ மனந்திறந்து பேசுவதைத் தவிர்த்துச் சினிமாக்கள் மூலமும், ஊடகங்கள் மூலமே அவர்கள் அறிகிறார்கள். பல்வேறு தடைகளை உருவாக்கி இயற்கையில் ஆயிரமாயிரம் வருடங்களாக நடக்கும் ஒன்றை சில நூறு வருடங்களில், சமயத்தில் தற்போது தான் உருவாக்கிய விலங்குகளால் பிடிக்கப் பார்க்கும் உங்களுக்கு எதோ மன வியாதி இருக்கிறது என்று அர்த்தம்.

என் தங்கையோ, என் தம்பியோ, மகனோ இப்படிப் போனால் மனம் பதை பதைக்கிறதே என்று மனதார மருகும் அன்பு நெஞ்சங்கள் உங்களின் உறவுகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அன்போடு அவர்களின் உணர்வுகளை உள்வாங்குங்கள். கௌதம் வாசுதேவ் மேனன் நேர்முகத்தில் சொன்னது போலக் ‘காதலுக்கான தேடல், தீவிரம், ஏக்கம், நம்பிக்கை, ஆயுசுக்குமான ப்ரியம்… இதெல்லாம் மிஸ் ஆகுது. அது ரொம்பக் கவலையா இருக்கு.’ என்பதைப் புரிய வைக்கப் பாருங்கள். அந்த உணர்வே தவறு, காதல் என்பது கைபடாத உறவு, அது ஒருவருடன் மட்டுமே ஒருவருக்கு நிகழ வேண்டும் என்று மனதெங்கும் இறுக்கமாக முடிவுகளோடு இருப்பீர்கள் என்றால் நல்ல டாக்டரை பார்ப்பதோ, அல்லது குப்புற படுத்தோ உறங்குவது நல்லது.

——————————————————————————————-

ஆறு நிமிடங்களில் இந்த இறுதிக்கட்டுரையை அடித்து முடித்து விடுவேன்..

அழுதபடி எத்தனை காதலை தொலைத்திருக்கிறோம். இனிமேல் பார்க்கவே முடியாது என்றறிந்தும் சிரித்த படி கையசைத்து அனுப்பியிருக்கிறோம். மனத்தால், உடலால் பிணைந்திருந்தும் பிரிவின் வெம்மை தாங்காமல் உடைத்துக்கொண்டு உள்ளமெங்கும் வலிதாங்கி மௌனமாக அழுத காலங்கள் நினைவின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

ஒரு காலத்தில் சாப்பிடக் கிடைத்த அம்மாவின் அற்புத சமையல் போல அவரவரின் மெல்லிய, வல்லிய காதல்கள், ஆங்காங்கே ஏனென்று தெரியாமல் பூத்து, கனிந்து உதிர்ந்து போன பிரியங்கள் எத்தனை எத்தனை அற்புதங்கள் இந்தச் சிறிய வாழ்வில். எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே இருப்பது சிலருக்கும், கண் மூடி சடசடவென்று பயணிக்கும் சினிமா ப்ளாஷ் காட்சிகளாக நினைப்பதும் நிறைவைத் தருகிறது.

அந்த ஊடல்கள், நினைவுகள், முத்தங்கள், தகவல் பரிமாற்றங்கள், மௌனமான நேசங்கள், காலங்கள் கடந்து குரல் கேட்கையில் கசிந்த கண்ணீர்த் துளிகள், பரிசுகள் தாங்கி வருகையிலும் முகம் பார்த்ததும் ஒளிரும் சிறு மின்னல்கள், திட்டுதல் மூலம் செல்லம் கொஞ்சுதல், இளைப்பாறும் மரமாக, காதுக்குள் ரகசியம் சொல்லும் உறவாக, அத்தனையும் எத்தனையோ காதல்களில் குவித்து வைத்திருக்கும் அனைவரின் காதலின் நினைவுகளும், புதுப்பிக்கும் நேசத்தின் தூரல்களும் அன்பை ஜீவிக்கட்டும். smile emoticon ஆதலால், காதலில் சொதப்புங்கள், காதலிலேயே கிடந்திடுங்கள். காதல் எனும் பெருநாகம் தீண்டிய நாம் எல்லாம் பேறுபெற்றவர்கள்

டாப் 100 அறிவியல் மேதைகள் – நூல் முன்னுரை


மகத்தான பல்வேறு ஆளுமைகள் செதுக்கிய உலகில் நாம் வாழ்கிறோம். அவர்களின் சிந்தனைகள்,செயல்கள்,உழைப்பு விட்டுச்சென்ற நிழல்களில் நம்முடைய இளைப்பாறுதல் நடைபெற்று வருகிறது. பலர் உயிரை பணயம் வைத்தும், அவமானங்களைப் பொருட்படுத்தாமலும் இயங்கியதே இன்றைய நம்முடைய இயக்கத்தைச் சுலபமான ஒன்றாக மாற்றியிருக்கிறது.

அப்படிச் செதுக்கப்பட்ட பல்வேறு துறைகளில் அறிவியல் சார்ந்த மறக்க முடியாத மகத்தானவர்கள் பற்றி வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அறிவியல் நூல்களை அதிலும் குறிப்பாக ஐசக் அசிமோவின் எழுத்துக்களையும், பொறியியல் பாடநூல்களையும் மொழி பெயர்த்த அனுபவங்கள் தந்த ஆனந்தமே இத்தனை கட்டுரைகளுக்குக் காரணம் என்று பதிய வேண்டும்.

வெறுமனே தகவல் தொகுப்பாக மட்டும் இல்லாமல் அறிவியல் தத்துவங்களைத் தேவையான இடங்களில் விளக்கியிருக்கிறேன். கூடவே,அறிஞர்களின் சொந்த வாழ்க்கைப் பக்கங்களையும் இணைத்து வாசிப்பு அனுபவத்தைச் சுவாரசியமாக்க முயன்றிருக்கிறேன். அறிவியல் அறிஞர்கள் பற்றிய தகவல்களுக்கு,தத்துவ விளக்கங்களுக்குப் பல்வேறு பல்கலையில் பயில்கிற நண்பர்கள், வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களின் உதவிகள் மற்றும் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்த தோழமைகள் உதவி புரிந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்க அன்பு மட்டுமே எப்பொழுதும் உண்டு.

தொடர்ந்து ஊக்கம் தரும் ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், என் எழுத்துலக ஆசான் ப.திருமாவேலன் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள். – பூ.கொ.சரவணன்

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க :
http://books.vikatan.com/index.php?bid=2277

நாகரத்தினம்மாள் – தியாகராஜர் புகழ் காத்த தேவதாசி !


நாகரத்தினம்மாள் வாழ்ந்த வாழ்க்கை இசை, சேவை, கிளர்ச்சி ஆகியவற்றால் பின்னிப்பிணைந்தது. மைசூரில் தேவதாசி குலத்தைச் சேர்ந்த புத்துலக்ஷ்மி, புகழ் பெற்ற வக்கீல் சுப்பாராவ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். சுப்பாராவுடன் வேறுபாடு ஏற்பட்டு மைசூர் உடையார் அரசவையில் புகழ்பெற்றிருந்த திம்மயாவிடம் சேர்ந்தார் புத்துலக்ஷ்மி. அங்கே பத்து வயதுக்குள் இசை, தெலுங்கு, வடமொழி ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார் நாகரத்தினம். பின்னர் வெங்கடசாமியிடம், முனுசாமி அப்பா, கிருஷ்ணசுவாமி பாகவதர் ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றதோடு நில்லாமல் பெங்களூர் கிட்டண்ணாவிடம் நாட்டியம் பயின்றார்.

பின்னர்ப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் சேஷண்ணா முன்னிலையில் அவரின் அரங்கேற்றம் நடைபெற்றது. அது பலத்த வரவேற்பையும், பெயரையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. மீண்டும் மைசூர் அரசரின் ஆதரவு கிட்டியது. மைசூர் மன்னரின் மரணத்துக்குப் பின்னர்ச் சென்னையில் கலை வாழ்க்கையை அவர் தொடரவந்தார்.

அவர் கச்சேரி செய்ய ஆரம்பித்த பொழுது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஒரு பெண், அதுவும் தேவதாசி குலத்தில் பிறந்தவர் கச்சேரி செய்வதா என்கிற பார்வை நிலவியது. தடைகளை மீறி சிவசுப்பிரமணிய அய்யர், ராமாமிருதம் அய்யர் ஆகியோர் அவருக்குப் பக்கவாத்தியமாக இருக்க ஒப்புக்கொண்டது கடும் ஏளனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.

எண்ணற்ற கச்சேரிகளில் மரபை மறக்காத, கச்சிதமான, மனதை உருக்கும் அவரின் பாடல்களுக்கு என்று தனிப் பெயர் உண்டானது. வருமான வரி கட்டுகிற முதல் பெண் இசைக் கலைஞராக அவர் 1900-ன் ஆரம்பக் காலங்களில் மாறியிருந்தார். ஹரிகதை பாடுவதில் ஆண்கள் மட்டுமே ஈடுபட முடியும் என்கிற எழுதப்படாத விதி பின்பற்றப்பட்ட காலத்தில் அதிலும் நுழைந்தார் நாகரத்தினம்மாள். சில காலம் உபன்யாசங்கள் செய்தார்.

பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த முத்துப்பழனி தஞ்சை அரசவையின் பிராதப சிம்மனின் ஆசை நாயகியாகத் திகழ்ந்தார். திருப்பாவையைத் தெலுங்கு மொழிக்கு மாற்றிய அவர், ‘ராதிகா சாந்தவனம்’ என்கிற கவித்துவம், காம ரசம் ததும்பும் நூலை படைத்தார். அதில் ராதை கண்ணன் மீது மோகம் கொண்டு படும் பாடும், எலா எனும் இளைய பெண்ணுக்கு அவனை மணமுடித்துவிட்டு விரகத் தாபத்தில் துடித்தலும், அவள் கண்ணனோடு கூடி சாந்தமுறுவதும் அற்புதமாக வர்ணிக்கப்பட்டன. அந்நூலை இயற்றிய முத்துப்பழனி தேவதாசி என்கிற உண்மை மறைக்கப்பட்டு அவர் ஆண் என்கிற தோற்றம் சில பதிப்புகளில் உண்டாகவே அந்நூலை மீண்டும் பதிப்பித்தார் நாகரத்தினம் அம்மாள். வாவில்லா சன்ஸ் நிறுவனத்தால் அந்நூல் வெளியிடப்பட்டது.

சமூகச் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த கந்துகேரி வீரேசலிங்கம் அவர்கள் இப்படிப்பட்ட விரசத்தை உட்பொருளாகக் கொண்ட நூல்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று எழுதினார். மேலும் முத்துப்பழனியை நடத்தை கேட்டவள் என்றும் அவர் குறித்தார். இதைவிட விரசமான நூல்களை ஆண்கள் எழுதியிருப்பதையும், அதை வீரேசலிங்கமே பரிந்துரைத்ததையும் நாகரத்தினம்மாள் எடுத்துக்காட்டினார். இறைவனின் அடியாரான தேவதாசிகளைக் குடும்பப்பெண்களை அணுகும் ஒழுக்க அளவுகோல்களைக் கொண்டு அணுகுவது சரியில்லை என்றும் அவர் வாதிட்டார். ஒரு தேவடியாள் எழுதிய நூலை இன்னொரு தேவடியாள் பதிப்பித்துள்ளார் என்றெல்லாம் வசைகள் எழுப்பப்பட்டன. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் அந்நூல் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது. பிரகாசம் சென்னை மாகாணத்தின் முதல்வர் ஆனபொழுது அத்தடை திரும்பப் பெறப்பட்ட்டது.

தேவதாசி ஒழிப்பு இருபதுகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கோயில்களும் அவர்கள் தானம் தரப்படுவது, ஆரத்தி எடுப்பது, பொட்டு கட்டுவது முதலிய முறைகள் தடைசெய்யப்படவேண்டும் என்று படிப்படியாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட காலத்தில் அவற்றை எதிர்க்கும் பணிகளில் முனைப்பாக இயங்கினார் நாகரத்தினம்மாள்.

தியாகராஜரின் சமாதியை ஒழுங்காகப் பராமரிக்காமல் பலகாலம் மக்கள் சிதிலடமைய வைத்திருந்த சூழலில் அதை உமையாள்புரம் சகோதரர்கள் செப்பனிட்டார்கள். அங்கே நரசிம்ம பாகவதர், பஞ்சு பாகவதர் சகோதரர்கள் ஆராதனை விழாவை நடத்த ஆரம்பித்தார்கள். வெகு சீக்கிரமே பிணக்கு ஏற்பட்டு சிறிய கட்சி, பெரிய கட்சி என்று இரு பிரிவாகப் பிரிந்து அவர்கள் திருவையாறில் இசை ஆராதனையை 1912-முதல் நிகழ்த்தி வந்தார்கள். பெரிய கட்சியைக் கோவிந்தசாமிப் பிள்ளையும், சிறிய கட்சியைச் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரும் முன்னின்று செலுத்தினார்கள்.

விழாவை சிறப்பாக இரு பிரிவினரும் நடத்தினாலும் தியாகராஜரின் சமாதியைச் சுற்றி ஒரு கட்டிடத்தை எழுப்ப நிதி திரட்ட இயலாமல் இருந்தார்கள். கிருஷ்ணப்பா என்பவர் நாகரத்தினம் அம்மாளுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கனவிலும் தியாகராஜர் தோன்றி இருந்தார்.

1920-ம் வருடம் திருவையாறு வந்து சேர்ந்தார். மன்னா சாகேப் சூர்வேவிடம் இருந்து நிலத்தைப் பெற்றார். அது பொதுப்பயன்பாட்டு நிலம் என்பதால் அதற்கு இணையான நிலத்தை அவர்களுக்குத் தந்தார். 27-10-1921 அன்று திருப்பணிகளைத் துவங்கினார். அடிக்கடி ஊருக்கு வந்தும், தன்னுடைய சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றை விற்றும் கோயில் கட்டும் பணிகளை வேகப்படுத்தினார். சமாதியை சுற்றி தியாகராஜரின் பாடல்கள் பொறிக்கப்பட்டன. கனவில் கண்ட தியாகராஜர் உருவத்தைச் சிலையாக நிறுவினார். நூற்றி எட்டு நாமாவளியை தியாகராஜரின் மீது ‘தியாகராஜர் தாசி’ என்று தன்னைச் சொல்லிக்கொண்ட அவரே இயற்றினார். இறுதியாகத் தியாகராஜருக்கான சந்நிதிக்கு
ஜனவரி 7, 1925 அன்று குடமுழுக்குச் செய்யப்பட்டது.

இருவருடங்கள் கழித்து ஆராதனை நிகழ்வில் கலந்து கொள்ள அம்மையார் ஊருக்கு வந்தார். யார் வேண்டுமானாலும் விழாவில் கலந்து கொள்ளலாம், ஆனால், பெண்களுக்கும், நாதஸ்வர கலைஞர்களுக்கும் சமாதிப் பகுதிக்குள் அனுமதி இல்லை என்று சூலமங்களம் வைத்தியநாத அய்யர் சொன்னார். நாகரத்தினம் அம்மாள் சளைக்காமல் நாற்பது தேவதாசிகளைத் திரட்டினார். ஊரார் அனைவரையும் பெண்கள் நடத்தும் இசை நிகழ்விற்குத் துண்டறிக்கைகள் மூலம் அழைத்தார். ஆண்களும் பங்குகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சமாதியின் புழக்கடையில் பந்தல் போட்டுப் பெண்களே நிகழ்த்திய இசைக்கச்சேரி நடைபெற்றது. அதற்கு அமோக வரவேற்பும் கிட்டியது.

அப்படியும் முழுமையான விருப்பத்தோடு பிற கட்சியினர் இவர்களின் இசை நிகழ்வை வரவேற்கவில்லை. மன்னப்ப சாகேபின் மகன் ராஜராமண்ணாவிடம் பல்லாயிரம் ரூபாய் பொருட்செலவில் நிதி திரட்டி மேலும் சமாதியைச் சுற்றி நிலங்களை நாகரத்தினம்மாள் வாங்கினார். அதற்குப் பிறகு மற்ற கட்சியினர் இறங்கி வந்தார்கள்.

பெண்களுக்கு ஆராதனையில் பங்கேற்க உரிமை ஏற்கப்பட்டது. முதலில் நாதஸ்வர கலைஞர்களுக்குச் சமாதிக்குள் வந்து இசைக்கும் உரிமை மறுக்கப்பட்டாலும் பின்னர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை செய்த கிளர்ச்சியால் அதுவும் அமலுக்கு வந்தது.

தியாகராஜருக்கு அற்புதமான இருப்பிடத்தை ஏற்படுத்திய நாகரத்தினம்மாள் தன்னுடைய சென்னை வீட்டையும் விற்றுவிட்டு வாடகை வீட்டில் திருவையாறில் வசிக்க வந்து சேர்ந்தார். அவரைச் சமாதிப்பகுதிக்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு காட்டிய வைத்தியநாதரின் ஹரிகதையில் அவருக்கு அருகில் அமர்ந்து கதை கேட்டு தன்னுடைய வெற்றியை அமைதியாக, ஆழமாக அவர் பதிந்தார்.

தன்னுடைய இறப்புக்கு முன்னர் வித்யாசுந்தரி பெங்களூரு நாகரத்தினம் அறக்கட்டளையை உருவாக்கி சமாதி இருக்கும் நிலத்தை விழாவுக்குத் தரும் பொறுப்பை அதனிடம் ஒப்படைத்தார். தேவதாசிகள் உட்பட்ட பெண் கலைஞர்களுக்கு விழாவில் அனுமதி மறுக்கப்பட்டால் நிலத்தைக் கட்டாயம் தரக்கூடாது என்றும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

19-5-1952 அன்று திருவையாறில் அவரின் உயிர் பிரிந்தது. அவர் மரணத்துக்குப் பின்னர்த் தியாகராஜரின் சமாதியைப் பார்த்தபடி தன்னுடைய சமாதி அமையவேண்டும் என்கிற அவரின் கோரிக்கையை நிறைவேற்ற முனைந்த பொழுது, ‘ஒரு தேவதாசியின் சடலத்தை மகான்களின் நினைவிடங்கள் நிறைந்த மண்ணில் புதைப்பதா?’ என்று எதிர்ப்பு எழுந்தது. காவல்துறை பாதுகாப்போடு தியாகராஜரின் நினைவிடத்துக்கு எதிரில் நாகரத்தினம்மாள் மண்ணுக்குள் விதைக்கப்பட்டார். இசை வானமாக, எதிர்ப்பின் அழுத்தமான கீதமாகப் பரவியிருக்கும் அற்புதம் அவரின் வாழ்க்கை.

ஆதாரங்கள்:
THE DEVADASI AND THE SAINT: The Life and Times of Bangalore Nagarathnamma
In the Footsteps of Thiagaraja
The Appeasement of Radhika: Radhika Santawanam
http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/bangalore.htm

http://www.dinamani.com/margazhi-isai-thiruvizha-2014/2015/01/02/துக்கடா…/article2599980.ece

http://www.indian-heritage.org/music/bnr.htm

பெத்தவன் – பெருகி வழியும் குரூரம்


இமையம் அவர்களின் பெத்தவன் சிறுகதைப் பற்றி முதன்முதலில் தமிழ்ப்பெண் விலாசினி அக்காவுடன் உரையாடும் பொழுது தான் அறிய நேர்ந்தது. அவரின் ஓரிரு சிறுகதைகளை அதற்கு முன் வாசித்து இருக்கிறேன் என்றாலும் இந்தக் கதையை வாசிப்பது தள்ளிக்கொண்டே போனது.

ஒரு ரயில் பயணத்தின் பொழுது அந்தச் சிறுகதையைக் கையில் எடுத்தேன். நான் இமையம் அவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவன். அவர் கதையில் சொல்லிச்செல்லும் எந்தச் சம்பவமும் எனக்குப் புதியது இல்லை. அந்த வன்மம், அடையாள வெறி ஆகியவற்றைக் கண்முன்னால் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். தர்மபுரி கொடூரத்தின் பொழுது பல ஊர்க்காரர்களை ப்ளாக் செய்கிற அளவுக்கு நிலைமை போனது.

இமையமின் பேனாவில் நாயக்கன்கொட்டாய் பகுதி எரிக்கப்படுவதும்,
ஜாதி அரக்கன் பல்வேறு குடும்பங்களைச் சிதைப்பதும், காதல் இந்த அனலில் பொசுங்கிப் போவதும் அந்நிகழ்வு நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே எழுத்தாக மாறிவிட்டது.
ஜாதி மீறி காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியை ஊரே சேர்ந்து காதில் விஷம் ஊற்றிக்கொள்வது , வேற்று ஜாதி ஆணோடு ஊரைவிட்டு ஓடிப்போய்த் திருமணம் செய்து கொண்ட பெண்ணை வன்புணர்வுக்கு உள்ளாக்கி அவளின் ஜாதி ஆண்கள் என்னும் பிணங்கள் கொல்வது என்று அத்தனை அக்கிரமங்களும் அதன் படபடப்புக் குன்றாமல் கதையில் வந்து சேர்ந்திருக்கிறது.

அப்பா-மகள் பாசம் என்கிற நெஞ்சை கனக்க வைக்கும் இழை கதையை இன்னமும் நெருக்கமானதாக மாற்றுகிறது. இரண்டு வருடங்களாக அப்பாவோடு ஒரு வார்த்தை பேசாத, ஒரு சொட்டுக்கண்ணீரை அத்தனை அடிகள் அடித்தும், முடியை வெட்டியும் சிந்தாத மகள் தன்னுடைய வீட்டில் மகளுக்குத் தட்டில் வைத்து இறுதி உணவை பிசைந்து சாப்பிட வைக்கையில் மண் போலச் சரம்சரமாக அவள் கண்ணில் கசியும் கண்ணீர் ஆதிக்கத்தின் வெம்மையைக் கடத்தும் செயலை செய்கிறது. “உன்கூடவே இருந்துடுறேன் அப்பா!” என்கிற பொழுது மகளிடம் தந்தை பேசும் கனங்கள் சில நொடிகளேனும் புத்தகத்தை மூடி வைக்காமல் இருக்க முடியவில்லை.

“இவன் பிள்ளையா இது அப்படின்னு பேரு வாங்கினதே இல்லை நானு. நீ இப்படிப் பண்ணிட்டே…” என்கிற பொழுது கூட மகள் செய்தது தவறென்று சொல்லாத அந்தப் பெத்தவன் ஊரின் வன்மம், கொலைவெறி, ஜாதித்திமிர் எல்லாவற்றையும் தாண்டி எப்படித் தன்னுடைய மகளைக் கரைசேர்க்கப் போகிறோம் என்கிற பதைபதைப்பில் இருக்கிற நகை, பணம் எல்லாவற்றையும் திரட்டிக்கொடுத்து, “எங்கேயாச்சும் வாத்தியாரா ஆகிடு புள்ள. இந்தப் பக்கம் வராதே!” என்கிற தொனியில் சொல்லி ஊரைவிட்டு கொண்டுபோய் விட்டுவிட்டு மனிதர்கள் என்கிற போர்வையில் திரியும் கொடூரர்கள் அருகே வருவதற்கு முன்பே நாயின் அருகாமையில் உயிர் விடுகையில் உங்கள் மனசாட்சியும் ஜாதியை விடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தைப் பெறும். பெற்றோர்களிடம் இந்தக் கதையை வாசிக்கக் கொடுக்க வேண்டும். இதைக் குறும்படமாக ஆக்கி தமிழகம் முழுக்கக் கொண்டு போக வேண்டும். இணையத்தில் வாசிக்க.. http://imayamannamalai.blogspot.in/2012_09_01_archive.html

பாரதி புத்தகாலயம்
விலை: 30.ரூபாய்

— with Imayam Annamalai.

கருக்கு – அறுக்கும் ஜாதியம் !


பாமாவின் கருக்கு நாவலை வாசித்து முடித்தேன். சுயசரிதை பாணியில் எழுதப்பட்ட அவரின் வாழ்க்கை அனுபவங்கள் இலக்கியத்தரத்தோடு அமைந்து மனதை பனங்கருக்கு போல அறுக்கின்றன. மனிதத்தின் கரங்களைச் சாதியத்தின் கொடூரப்பற்கள் கொண்டு அறுக்கும் அநியாயங்கள் அடுக்கடுக்காகப் பதியப்பட்டு இருக்கிறது.

‘எங்க ஊரு ரொம்ப அழகான ஊரு. ரொம்பப் பெரிய முன்னேத்தமோ எதுவுமோ இல்லன்னாகூட அதோட அழக வெச்சுத்தான் அத ரொம்பப் பிடிக்கும் என்று ஆரம்பிக்கும் நாவலில் நாயக்கர்களிடம் எப்படி நிலங்கள் மிகுந்திருக்கின்றன, பறையர்களான தங்களின் அன்றாடப் பிழைப்பே எத்தனை வலியும், முதுகொடியும் சுரண்டலும் எப்படித் தொடர்ந்து வருத்துகின்றன என்பதை இயல்பாகச் சொல்லிச்செல்கிறது சம்பவங்கள்.

பள்ளியில் தேங்காய் ஏறிப் பறிக்கும் விளையாட்டில் ஒரு முற்றாத தேங்காயை தெரியாமல் கீழே தள்ளிவிடப் பாமாவின் ஜாதிப்பெயர் சொல்லப்பட்டு நீங்கள் எல்லாம் திருடத்தான் செய்வீர்கள் என்று சொல்லப்படும் இடத்தில் இருந்து மடத்தில் கன்னியாஸ்திரி ஆகப்பணியாற்றிய காலம் வரை ஜாதி விடாது அறுத்துக்கொண்டே வந்திருக்கிறது. பேருந்தில் கூட ஆதிக்க ஜாதியினர் உடன் அமர மறுப்பது, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாட்டிகளைக் கூட ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த குழந்தைகள் கூடப் பேர் சொல்லிக்கூப்பிடுவது, பஜ்ஜி பார்சலை தீட்டு ஆகிவிடக்கூடாது என்று நூல் பிடித்துக் கொண்டு வரச்சொல்வது, கல்லறையில் கூட இடம் தர மறுப்பது என்று அடுக்கடுக்காகத் துரத்தும் அநீதிகள் கண்முன்னால் எழுத்தாக நகர்கின்றன.

முன் கோவம், மத்தியான மசாலா, சொனப்பன்னி என்று பெயர் சொல்லி அழைப்பதன் ஊடாகவும் தாழ்துதலை நிகழ்த்தலையும், சாமி என்றிருக்கும் பெயரைச் சொல்லி அழைக்காமல் பட்டப்பெயரிட்டு இழிவுபடுத்தலையும்
பாமா வெகு இயல்பாகப் பதிகிறார். பணம் கொடுத்து விடுதியில் தின்றாலும், “இதுங்க வீட்டில தின்ன கொடுப்பினை இல்லாம இங்க எப்படித் தின்னு கொழுக்குது பாரு!” என்று ஜாதியைச் சுட்டி திட்டுதல் நிகழும் கணங்கள் சோற்றில் கூடவா இப்படி என்று அலற வைக்கிறது.

அரிசிச்சோறு என்பது அரிதாகக் கிடைக்கிற ஒன்றாகி குருநாக்கஞ்சி, கருவாட்டுத்தண்ணி என்று பசிபோக்க முடியாமல் கழியும் காலங்களைக் கூடச் சட்டென்று சொல்லிவிட்டு அடுத்தச் சங்கதிக்குள் அவரால் நுழைந்துவிட முடிகிறது. நம்மால் தான் தாங்கமுடியவில்லை. பள்ளிக்கூட வாசனைக்குப் பதிலா தீப்பெட்டி மருந்து வாசனை தா பிள்ளைகளுக்குக் கிடைச்ச கெதி. வவுத்து பாட்டுக்கே பெரும்பாடா இருக்கையில எங்குட்டு கூடிப் படிக்க முடியும்?’ என்று கேட்கையில் தான் எத்தனை கனம்?

ஜாதி வேற்றுமைகள் எப்படிப் பிள்ளைகளின் விளையாட்டைக் கூடப் பாதிக்கின்றது என்பதைப் பொண்ட நுண்மையான பதிவுகள் நாவலில் கடந்து செல்கின்றன. கிறிஸ்துவக் கன்னியாஸ்திரியாகி சேவை செய்யலாம், வறுமையான வாழ்க்கை வாழலாம் என்று போகையில் அங்கே பெருத்த அதிர்ச்சிகள் அவருக்குக் காத்திருக்கின்றன. ஆடம்பரமும், போலித்தனமும் மிகுந்திருப்பதையும், ஜாதியம் அங்கேயும் தலைவிரித்து ஆடுவதும், பணக்கார பிள்ளைகளுக்காக மட்டுமே திறக்கிற கதவுகள் கொண்ட கல்விக்கூடங்கள் என்று அவை அமைந்திருப்பது அவரை வாட்டி எடுக்கின்றன.

“கடவுள் அன்பு, இரக்கம், சாந்தம் கொண்டவர். பாவங்களை மன்னிப்பவர், பொறுமையானவர், மென்மையானவர், தாழ்ச்சி, கீழ்படிதல் உள்ளவர் என்று சொல்லித்தரும் கிறிஸ்துவ மடங்கள் அவர் நீதி, நேர்மை மிகுந்தவர், அநீதி கண்டு பொங்குபவர், போலித்தனத்தை எதிர்ப்பவர், ஏற்றத்தாழ்வு காட்டாதவர் என்பதை எப்பொழுதும் சொல்லித்தருவதே இல்லை.” என்று அரற்றித்தீர்க்கும் பாமா அதைவிட்டு விலகிய பின்பு வாழ்க்கை ஜீவனத்துக்கே கஷ்டம் என்ற சூழலிலும் தான் சமமானவள் என்கிற எண்ணத்தின் உண்மையும், தேடலும் செலுத்துவது நாவலின் மூலம் கடத்தப்பட்டு இருக்கிறது.

கருக்கு
பக்கங்கள்:116
காலச்சுவடு கிளாசிக் வெளியீடு
விலை: 100

டாப் 200 வரலாற்று மனிதர்கள் – முன்னுரை


டாப் 200 வரலாற்று மனிதர்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை:

மேடைகளில் பேச ஆரம்பித்த பால்ய காலத்தில் இருந்து
வரலாறும், இலக்கியமும், விளையாட்டும், அறிவியலும் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டே இருக்கின்றன. மேடைப்பேச்சுக்கான குறிப்புகளைக் காற்றில் பறக்க விடுவதே பழக்கம். வாசிப்பதில் தனித்த சுகம் கண்டுகொண்டே இருந்தாலும் எழுத வேண்டும் என்று தோன்றியது இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்புவரை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதியது கிடையாது.

சிக்கலான விஷயங்களைச் சுவைபடச் சொல்வதற்குப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதைத் தமிழில் பொறியியல் புத்தகங்களை மொழிபெயர்த்த பொழுது கிடைத்த ஆதரவின் மூலம் உணர முடிந்தது. வாசித்ததை, ரசித்ததைத் தொடர்ந்து பதிவோம் என்று அப்பொழுது அறிமுகமான முகநூலில் இரண்டு, மூன்று பத்திகளில் அன்றைய சிறப்பைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்.

ஆறு மாதகாலம் வரை மனதில் இருந்து வாசித்தவற்றை எழுதிக்கொண்டிருந்த சூழலில், நியூட்டன் பற்றிய கட்டுரையைச் சுட்டி விகடனின் முகநூல் பக்கத்தில் சரா (Saraa Subramaniam) அண்ணன் கேட்டு வெளியிட்டார். அதற்குக் கிடைத்த உடனடி ஆதரவு பொறுப்பை அதிகப்படுத்தியது. ஒரு தினத்துக்கு ஒரு கட்டுரை என்று வாரம் முழுக்க எழுத ஆரம்பித்தேன். எண்ணற்ற புத்தகங்களை வாசிப்பது, அவை தொடர்பான பேட்டிகளைக் காண்பது, ஆவணப்படங்களைப் பார்ப்பது என்று கட்டுரையின் சரித்தன்மைக்கு நிறையப் பாடுபடப் பழகினேன்.

சுட்டி விகடனில் எழுதிய ‘என் 10’ தொடர் ஆளுமைகளைப் பற்றிச் சுவைபடச் சொல்வதைச் சாத்தியப்படுத்தியது. பொதுவாக ஆளுமைகள் பற்றி எழுதப்படுவதில் இருந்து சற்று விலகி அவர்களின் கவிதைகள், பேச்சுக்கள் ஆகியவற்றையும் இணைத்துக் கட்டுரைகளில் எழுதினேன். அரசியல் ஆளுமைகள் பற்றி எழுதிய பொழுது மிகத்தீவிரமாகப் பல்வேறு கோணங்களை உள்வாங்கி இன்றைக்கு இருக்கும் விவாதங்களுக்கு ஒரு வரலாற்று வெளிச்சத்தைத் தரும் பொறுப்பை உணர்ந்தே செயல்பட்டேன்.

தகவல்களின் தொகுப்பாகப் பல கட்டுரைகளை எழுதியவாறே, இந்தியாவை, உலகை உலுக்கிய சம்பவங்கள் பற்றிக் குறுக்குவெட்டுத் தோற்றம் தர தூக்கம் மறந்து தேடி எழுதிய காலங்கள் பரவசமானவை. என்னுடைய அர்ப்பணிப்பை மிஞ்சும் வகையில் பிரிட்டோ அண்ணன் ( Britto Brits ) வடிவமைப்புச் செய்து தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அரவிந்தன் அண்ணன் ( Ara Vindan )சினிமா ஆளுமைகள், அறிவியல் ஆளுமைகள் பற்றிக் கட்டுரைகள் எழுத வைத்து அழகு பார்த்தார்.

இந்தக் கட்டுரைகளை ஒலிப்பதிவாக ஆக்கி அனுதினமும் ‘ஒரு தேதி, ஒரு சேதி’ என்கிற தலைப்பில் வருடம் முழுக்கப் பேசலாம் என்று முடிவு செய்யப்பட்ட பொழுது எப்பொழுதும் வழிகாட்டும் கணேசன் சார் Ganesan Kothandaraman) தந்த உத்வேகம் இன்னமும் பல புதிய கட்டுரைகளை எழுதத் தூண்டியது. எல்லாமும் சேர்ந்து நானூறு கட்டுரைகளைத் தாண்டின. அவற்றில் பலவற்றை நீக்கி, இந்தப் புத்தகம் வருவது என்றானதும் மேலும் ஒரு நாற்பது கட்டுரைகளை மூன்று மாதத்தில் எழுதிச் சேர்த்தேன்.

எந்தத்தொகுப்பும் முழுமையான ஒன்றாக முடியாது. அதே சமயம் தேடலின், அறிவு வானின் பரந்த பரப்பில் அகல் விளக்கு அளவு வெளிச்சமேனும் தர வேண்டும் என்கிற ஆவலில் எழுந்தவையே இக்கட்டுரைகள். ‘ஒரு தேதி ஒரு சேதி’யை ஒலிப்பதிவாக, ஒளிப்பதிவாக வருவதைச் சாத்தியப்படுத்திய நியூட்டன், ரகுவீர், ஹசன் ஹபீழ் ( Mgnewton Mgn, Raghuveer RaoHassan Hafeezh) அண்ணன்கள் பல்வேறு உதவிகள் புரிந்தார்கள். நெஞ்செல்லாம் நிறைத்து வைத்திருக்கும் உறவுகள், நேசர்கள் அளித்த ஊக்கம், உற்சாகம் மறக்க முடியாதவை.

ஆனந்த விகடன் ஆசிரியர் அண்ணன் ரா.கண்ணன், என் எழுத்துலக ஆசான் ப.திருமாவேலன் ஆகியோர் இல்லாவிட்டால் இப்படி ஒரு புத்தகம் சாத்தியம் ஆகியிருக்காது. இவர்கள் அனைவருக்கும் சொல்லித்தீராத நன்றிகள்… வாசகர்கள் நூலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தாருங்கள், தேடல்களைத் தொடருங்கள்.

அன்புடன்,
பூ.கொ.சரவணன்
pu.ko.saravanan@gmail.com
புத்தகத்தை இணையத்தில் வாங்க :
http://books.vikatan.com/index.php?bid=2278

பாப் மார்லி எனும் இசைப்போராளி!


மார்லியின் அப்பா ஆங்கிலேயர், அம்மா ஜமைக்கா பகுதியில் வாழ்ந்த ஆப்ரிக்கர். உலகம் முழுக்க அப்பா சுற்றிக்கொண்டே இருந்தவர் . அவரை அரிதிலும் அரிதாகத்தான் பார்த்தார்; பத்து வயதாகும் பொழுது தந்தை இறந்தே போனார் .

அம்மா எவ்வளவோ கடினப்பட்டுப் படிக்க வைத்தார். இவரின் நாட்டமோ இசைமீது போனது. ஜமைக்காவில் கறுப்பின மக்கள் சரியாக நடத்தப்படாத காலம் அது; ரப்பர்தோட்டங்களில் மிகவும் இன்னல்களுக்கு வெள்ளையர்களால் உள்ளாக்கப்பட்டார்கள். மார்லி தெருவோரம்,கடைநிலை மக்கள் வாழும் இடங்களில் ஒலித்த ரெகே இசையை விரும்பி கற்றார், தன் இசையால் பிரபலம் ஆனார். ஆனால் ராயல்டி தராமல் ஏமாற்றிய பொழுது ப்ளாக்வெல் எனும் வெள்ளையரோடு சேர்ந்து கொண்டார்; ஒழுங்காகப் பணம் வர ஆரம்பித்தது .

அவரின் இசை மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் குரலாக ஒலித்தது. ரப்பர் தொழிலாளிகளின் கண்ணீரை வடித்தார். எளிய மக்களின் இசையாகப் பார்க்கப்பட்ட ரெகே இசை இவரால் உலகம் முழுக்கப் பிரபலம் ஆனது. இவரின் இசைக்கோர்வைகள் மூன்றாம் உலக நாடுகளின் முதல் பாப் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை இவருக்கு வழங்கியது
நாடு முழுக்க வன்முறை சூழல் நிறைந்திருந்த பொழுது அன்பு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்வதாக இவரின் பாடல்கள் இருந்தன. ‘அன்பினால் ஒரே உலகம் செய்வோம் !’ என்கிற தொனிப்பொருளில் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டன .”கோபம் குறை ! போர்களில் வலிமை பெறு!” என்று அவரின் கீதங்கள் அறிவுறுத்தின.

இவர் அமெரிக்கா போன பொழுது இசை நிகழ்வை ஒரு நாடகத்தோடு நடத்த கூப்பிட்டவர்கள் இவரின் இசை நிகழ்வு நாடகத்தை விட ஹிட் ஆனதால் பாதியிலேயே வெளியேற்றினார்கள் . காசில்லாமல் நடுத்தெருவில் நின்றவர் தப்பித்து நாடுவந்து சேர்ந்தார் .
பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவர் ; பலநாள் தான் வளர்ந்த அழுக்கு நிறைந்த சாலையில் படுத்து இதுதான் ஏகாந்தம் எனப் பூரிப்பார் . இறப்பதற்கு முன்னர்த் தன் மகனிடம் ,”பணத்தால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது !” என்று சொன்னார். அவரின் மறைவுக்குப்பின் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதை அமெரிக்கா வழங்கியது ; அவரின் பாடல் மற்றும் ஆல்பங்கள் நூற்றாண்டின் மிகச்சிறந்த இசைக்கோர்வைகளாகக் கொண்டாடப்படுகின்றன .

போரிட்டுக்கொண்டு இருந்த ஜமைக்காவின் குழுக்களுக்கு இடையே அமைதியை உண்டு செய்ய ஸ்மைல் ஜமைக்கா எனும் இசை நிகழ்வை நடத்தப்போக அது உயிருக்கே ஆபத்தானது .விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்த் துப்பாக்கி ஏந்திய குழு இவரையும் மனைவியையும் தாக்க இசை நிகழ்வு நடக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டோடு வந்தார் மனிதர் பாடினார். 80,000 பேர் திரண்டார்கள் …
ஸ்மைல் ஜமைக்கா இசைநிகழ்வின் பொழுது “நீங்கள் உயிருக்கு பயப்படவில்லையா ?” எனக்கட்டுகளோடு வந்த இவரைக் கேட்ட பொழுது “உலகத்துக்குத் தீமை செய்பவர்களே பயப்படாத பொழுது இந்த உலகை அன்பால் நிறைக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும் ?” எனக்கேட்டார். அதுதான் மார்லி
அவரின் Get up, stand up பாடலின் மொழிபெயர்ப்பு உங்களுக்காக :
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
போதிக்கும் ஆசாமியே ! சொர்க்கம் பூமிக்கடியில் என்று சொல்லாதே எங்களிடம் !
வாழ்க்கையின் அர்த்தம் உனக்குத் தெரியாது
என நான் அறிவேன்
தகதகப்பது எல்லாம் தங்கமில்லை அல்லவா ?
பாதிக்கதை எப்பொழுதும் பாடப்படுவதே இல்லை
இப்பொழுது தெரிகிறதில்லையா வெளிச்சம் ?உன் உரிமைக்காக எழுந்து நில் ! துணிந்து வா
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு,வாழ்க்கை உன் உரிமை
ஆகவே,போரிடுவதை நிறுத்திட முடியாது !
உன் உரிமைக்காக நிமிர்ந்து நின்றிடு
இறைவா இறைவா
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு போரை தொடர்ந்து நிகழ்த்து
போராடுவதை நிறுத்தாதே
உங்கள் இசங்களும்,போலி ஆட்டங்களும் எங்களுக்கு அலுத்துவிட்டன
இறந்திடு,சொர்க்கத்துக்குக் கர்த்தரின் பெயரால் சென்றிடு,இறைவா
எங்களுக்குப் புரியும் பொழுது எங்களுக்குத் தெரியும்
எல்லாம் வல்ல இறைவன் வாழும் மனிதன்
சிலரை சில நேரம் ஏமாற்றலாம்
எல்லாரும் எல்லாக் கணங்களிலும் ஏமாற மாட்டார்கள்
ஆகவே பேரொளியை பாருங்கள்

நாம் நம்மின் உரிமைக்காக உறுதியாக நிமிர்ந்து நின்றிடுவோம்
ஆகவே நீ எழுந்திடு,நின்றிடு,உன் உரிமைக்காக நிமிர்ந்து நின்றிடு
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே

சோசியலிசம், மதச்சார்பின்மையின் எதிரியா அண்ணல் அம்பேத்கர்?


அன்பு மிகுந்த நண்பரும், இந்துத்வ காவலருமான அரவிந்த நீலகண்டன் அவர்கள் தன்னுடைய அவதூறு பரப்பும் பணியை சிறப்பாக மேற்கொண்டு உள்ளார். அரசியலமைப்பு விவாதங்களின் பொழுது கே.டி.ஷா சோசியலிசம், மதச்சார்பின்மை முதலிய சொற்களை சேர்க்கச் சொன்னார் என்றும் அதனை அம்பேத்கர் ஏற்க மறுத்தார் என்கிற வகையில் அவர் எங்களோடு இருக்கிறார் என்கிற தொனியில் ஒரு கட்டுரையை இங்கே எழுதியிருக்கிறார். ( http://swarajyamag.com/commentary/the-2-s-words-ambedkar-did-not-want-in-the-constitution/ )

முதலில் மதச்சார்பின்மை சார்ந்த தலைப்புக்குள் போவோம். அம்பேத்கர் இந்து மதத்தின் பெயராலும், சாதியின் நடைபெறும் சுரண்டல்களை, அநீதிகளை, ஏற்றத்தாழ்வுகளைத் தொடர்ந்து சாடியவர்.

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் உருவான அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு ஒழுங்கான இடம் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். H.V.காமத் இறைவனின் பெயரால் என்கிற வரியை இணைக்க முனைந்த பொழுது அதைக் கடுமையாக எதிர்த்து நீக்கினர். அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கேயும் கடவுள் பற்றிய குறிப்பு இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 22 பற்றிய விவாதத்தின் பொழுது அரசு நிதியால் முழுக்க முழுக்க இயங்கும் கல்விக்கூடங்கள், அமைப்புகள் ஆகியவற்றில் மதப் பிரசாரம் கூடாது என்பதை அம்பேத்கர் ஏற்கச் செய்தார். எல்லா மதத்துக்கும் சமமான இடத்தை அரசியலமைப்புச் சட்டம் தராத பொழுது மதச்சார்பற்றது என்கிற சொல்லை எப்படி குறிக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். (‘Reforming The Constitution’ UBS Publishers Distributors Ltd, 1992, edited by Subhash C Kashyap. ) சிறுபான்மையினருக்கு உரிமைகள் வழங்கப்பட்டுப் பெரும்பான்மை அவர்களின் வழிபாடு, நம்பிக்கைகளைச் சிதைக்காமல் சட்டப்பிரிவு 29,30 மூலம் காத்ததை ஒட்டியே அவர் இப்படிப் பேசினார். மதம், மொழி, இனம் முதலியவற்றால் மக்களைப் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது என்கிற சட்டப்பிரிவு பதினான்கு அரசியலமைப்பில் இடம் பெறுவதிலும் அம்பேத்கர் முக்கியப் பங்காற்றியதை என்ன சொல்வார்கள்?

B.N.ராவ் பொது இந்து சிவில் சட்டத்துக்கான வரைவை நாற்பத்தி எழிலேயே உருவாக்கியிருந்தார். அதை அரசியலமைப்பு அவையில் அம்பேத்கர் அறிமுகப்படுத்தினார். பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து பெறும் உரிமை, பலதாரத் திருமணத்தைத் தடை செய்தல், வெவ்வேறு சாதியினர் திருமணம் செய்து கொள்வது, மற்ற சாதிகளில் தத்தெடுத்தல் ஆகியன அதில் இடம்பெற்று இருந்தன. அதை அப்பொழுது நிறைவேற்ற வலதுசாரிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

1951-ல் நாடாளுமன்றத்தில் அமலுக்குக் கொண்டுவர முயன்ற பொழுது ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேருவுக்குக் கடிதம் எழுதினார். கட்சியில் தன்னுடைய செல்வாக்கு வலுவாக இல்லாதது, தேர்தல் வருவது ஆகியவற்றால் நேரு அப்போதைக்கு அமைதியாக இருந்தார். இந்து மதத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்.முதலிய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அம்பேத்கர் கோபம் கொண்டு வெளியேறினார். பின்னர் நான்கு சட்டங்களாக அவற்றைப் பிரித்து நேரு நிறைவேற்றினார்,

“இந்து சமுதாயத்தின் அடக்குமுறை கூறுகளுக்கு எதிராக எழுந்த புரட்சிக்கு அடையாளமாக அம்பேத்கர் அறியப்படுவார். இந்துச் சீர்திருத்தச்சட்டத்தைக் கொண்டுவர எடுத்துக்கொண்ட கடினமான முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார்.” என்று நேரு அஞ்சலி செலுத்தினார்.

ஆனால், அவரால் தான் எண்ணற்ற இந்துப் பெண்கள் பாதுகாப்புப் பெற்றார்கள். கலப்புத் திருமணங்கள் சாத்தியமானது. இந்துச் சமுதாயத்தில் சீர்திருத்தம் நடந்தது.

உடனே, அம்பேத்கர் இந்து மதத்தை மட்டுமே சீர்திருத்தினார், அவர் ஒரு இந்து என்று கிளம்புவார் அநீ. இதற்கும் அண்ணலின் வாழ்க்கை முழுக்கப் பதில் இருக்கிறது. என்றாலும் இரண்டு மட்டும் இங்கே.

பொதுச் சிவில் சட்டத்தைக் கே.எம்.முன்ஷி, அம்பேத்கர் ஆகியோர் மார்ச் 1947-ல் கொண்டு வந்தார்கள். அதை அரசியலமைப்பில் இணைக்க அவர்கள் முயன்றார்கள். எனினும், அதை வழிகாட்டும் நெறிமுறையில் தான் அப்பொழுதைக்குச் சேர்த்தார்கள். காரணம் பிரிவினையால் தேசம் ரத்தக்காடாக ஆகியிருந்தது. உடனே சிறுபான்மையினரின் சொந்த விஷயங்களில் தலையிட்டால் சிக்கல்கள் எழும் என்று அப்போதைக்கு அதைச் செய்யாவிட்டாலும் வருங்காலத்தில் அரசுகள் சீர்திருத்தலாம் என்று சட்டத்தில் இடம் கொடுத்தார்கள்.

“நான் சாகும் பொழுது இந்துவாகச் சாகமாட்டேன்!” என்று அம்பேத்கர் சாதிய வேற்றுமைகள் அற்ற புத்த மதத்தில் தன்னையும், பல லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்துக்கொண்டார். இந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களைத்தான் மதச்சார்பின்மைக்கு எதிரானவர் என்று இவர்கள் நிறுவப்பார்க்கிறார்கள்.

அடுத்தது சோசியலிசம் என்கிற சொல்லை சேர்த்தலை எதிர்த்த அம்பேத்கர், “சோசியலிசம் தான் தேவை என்று அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டால் அதைவிட மேலான சமுதாய அமைப்பு மக்களுக்கு நாளை தென்படலாம், ஆகவே, ஒரு குறிப்பிட்ட சமுதாய அமைப்பை கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்கிற வரிவரை அநீ குறிப்பிடுகிறார். அடுத்தது தானே விவகாரமான ஒன்று. அதை அப்படியே விழுங்கி விட்டார்.

“சட்டப்பிரிவு 31 இது சார்ந்த விஷயங்களைத் தொடுகிறது. அது கீழ்கண்டவற்றைச் சொல்கிறது…

அரசு குறிப்பாகத் தன்னுடைய கொள்கைகளை

குடிமக்களாகிய ஆண்களும், பெண்களும் சரிநிகராகப் போதுமான வாழ்வுரிமையை நடத்துவதற்கான உரிமையைப் பெறுதல்;

சமூகத்தின் மூலப்பொருள்களின் உடைமை, கட்டுப்பாடு ஆகியவற்றைப் பொதுநலனுக்குப் பயன்தரும் வகையில் பகிர்ந்து கொடுக்க வேண்டும்,

சொத்து ஓரிடத்தில் அதிகமாகக் குவிவதும், உற்பத்தி முறை பொதுநலனுக்குக் கேடாகவும் பொருளாதார அமைப்பில் அமையாமல் பார்த்துக் கொள்வதும்

ஆண், பெண் இருபாலருக்கும் சமமான வேலைக்குச் சமமான கூலி கிடைப்பதை உறுதி செய்தல்
இதே மாதிரி தன்மையோடு வேறு சில சட்டப் பிரிவுகளும் உள்ளன. நான் பேராசிரியர் ஷாவைக் ஒரே கேள்வி கேட்கிறேன். நான் மேலே குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சோசியலிச திசையில் அமைந்திருக்கவில்லையா? இவற்றின் உள்ளடக்கம் சோசியலிசம் இல்லை என்றால் எது சோசியலிசம் என்று எனக்குப் புரியவில்லை. கொண்டிருக்கவில்லை
ஆக, ஏற்கனவே நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் சோசியலிச கூறுகள் ஏற்கனவே உள்ளன, இந்தச் சீர்திருத்தத்தை ஏற்க வேண்டியது இல்லை என்று தாழ்மையோடு கூறிக்கொள்கிறேன். ” என்கிறார். ( http://parliamentofindia.nic.in/ls/debates/vol7p6.htm )அம்பேத்கர். சோசியலிசம், சமமாக எல்லா மதங்களையும் அரசு நடத்தும் நாள் ஆகியவற்றைக் கனவு கண்ட, அரசியலமைப்பு உருவாக்கத்திலும் , தன்னுடைய வாழ்விலும் அது சார்ந்து செயல்பட்ட அம்பேத்கரையும், நேருவையும் திரிக்கும் அரவிந்த நீலகண்டன் முதலிய இந்துத்வவாதிகளின் அபத்தங்களைப் பகிரும், நம்பும் அறிவுஜீவிக் கூட்டம் வாழ்க.