நான் உன்னை காதலிக்கவில்லை என்பதால் காதலிக்கின்றேன்!


நான் உன்னை காதலிக்கிறேன் என்பதனால் காதலிக்கவில்லை
நான் அன்பு செய்வதில் இருந்து அன்பின்மைக்குப் போகிறேன்
உனக்காகக் காத்திருத்தலில் இருந்து காத்தலை விடுத்தலுக்கு
என் இதயம் பனியில் இருந்து நெருப்புக்கு நகர்கிறது
உன்னை மட்டுமே காதலிக்கிறேன், ஏனெனில், நீ தான் நான் காதலிக்கும் ஒரே ஒருத்தி…
உன்னை நான் ஆழமாக வெறுக்கிறேன், வெறுத்துக்கொண்டே இருக்கிறேன்
உன்னை நோக்கி குனிகிறேன், என் மாறிக்கொண்டே இருக்கும் காதலின் அளவீடு தெரியுமா உனக்கு
உன்னைக் காணாமல் கண்மூடித்தனமாக நேசிப்பது தான் அது…

ஜனவரி மாத வெளிச்சம் என்னை உண்ணட்டும்
தன்னுடைய இரக்கமற்ற கதிரால் என் இதயம் தின்னட்டும்
முழு அமைதிக்கான என் சாவியைத் திருடிக்கொண்டு போகட்டும்

கதையின் இந்தப் பகுதியில் நான் மட்டுமே சாகிறேன்..
நான் ஒருவன் மட்டுமே உயிரை இழக்கிறேன்
நான் உன்னைக் காதலிப்பதால் இறந்து போவேன்
ஏனெனில் உன்னை நான் அன்பு செய்கிறேன், நெருப்பிலும், ரத்தத்திலும் காதல் புரிகிறேன்.- பாப்லோ நெரூதா

அது அவ்வளவுதான்!


அது சுலபம் தான்…

அப்படியே செய்து கொண்டிருந்தவற்றை
விட்டுவிட்டு வருவது…

அது வழக்கம் தான்…
அரை நொடியில் அழுதுவிட்டுக் கண்ணாடியில் முகந்துடைத்து
மற்றவர் முன் இயல்பாகச் சிரிப்பது

அது பெருமை தான்..
கனவுப் பறவையினை அறுத்து
தலைவாழை விருந்து படைத்துவிட்டு
ஓரமாக நிற்றல்

அது அவ்வளவு தான்…
ஊரெங்கும் பேய்கள் என
கைகளில் கட்டப்படும் காப்புகள்
எல்லாம் கைசங்கிலிகள் என்று அறிந்த கணம் முதல் சிறைகள்..

அது வாழ்க்கை

சத்தமிட்டு பேசினாலும்
எந்த யுத்தத்திலும்
களப்பலி தான் தான் என்று உணர்ந்தாலும்
முழுவதுமாக அனுதினமும் அலட்டாமல்
அறையப்பட்டு
இயேசுவை விட வேகமாக உயிர்த்து எழுவது…

மன்னியுங்கள் – பெருமாள் முருகன் அவர்களுக்காக ஒரு கவிதை!


மன்னியுங்கள்

என்னை மன்னியுங்கள்
நான் எழுதாதவற்றுக்காக
நான் எதையெல்லாம் எழுதக்கூடுமோ அதற்காக
நான் எதை எப்பொழுதும் எழுதப்போவதில்லையோ அதற்காகவும்

என்னை மரங்கள் பூப்பதற்காக மன்னியுங்கள்
மலர்கள் கனிவதற்காகவும்
இத்தனை தங்கம், தண்ணீர், வசந்தத்தை
பூமிக்கு அடியில் ஒழித்து வைத்ததற்காகவும்

தேயும் நிலவுக்காக என்னை மன்னியுங்கள்
மறையும் சூரியனுக்காக,
வாழ்பவர்களின் நகர்வுக்காக
உயிரற்றவையின் அசைவின்மைக்காக
உலகை இத்தனை நிறத்தால் நிறைத்தமைக்கு என்னை மன்னியுங்கள்
ரத்தத்தை அடர்சிவப்பால்
காட்டை இலையால்
வானை மழையால்
மணலை விண்மீன்களால்
கனவுகளை மையால்

என்னை மன்னியுங்கள்
இத்தனை அர்த்தத்தோடு வார்த்தைகளை நிரப்பியதற்காக
தேதிகளை இவ்வளவு வரலாற்றால்
நேற்றுக்குள் இன்றையும்,
இன்றைக்குள் நாளையையும் மறைத்ததற்காக,
நாட்டியத்தைப் பாவங்களோடும்
இயற்கையைக் குறியீடுகளோடும்
நிரப்பும் ஆண்டவனைப் படைத்தற்காக
என்னை மன்னியுங்கள் நிலநடுக்கத்துக்காக
புயலுக்காக
காட்டுத்தீ, பொங்கும் கடலுக்காகவும்

பூமி ஒரு சேதப்பட்ட இயந்திரம்
அதைப் பழுது பார்க்க நான் வரவில்லை
நான் நாடில்லா அரசன்
ஆயுதமில்லா கடவுள்
உயிரற்ற நாக்கு
உங்கள் தலையைக் கேட்காத கடவுளை
கண்டுபிடியுங்கள்
பயமற்ற மனிதனை கண்டுபிடியுங்கள்
கண்டுபிடியுங்கள்
மொழியை,
எழுத்தை! – K. Satchidanandan
(மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தன் சமூக விரோதிகளால் அமைதிப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனுக்காக எழுதி சமர்ப்பித்துள்ள கவிதை இது.)

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு – நூல் அறிமுகம்!


அம்பையின் அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு சிறுகதைத் தொகுப்பை இன்று வாசித்து முடித்தேன். சுதா குப்தா என்கிற துப்பறியும் நிபுணரின் அனுபவங்களின் கோர்ப்பாக இந்த மூன்று நெடுங்கதைகள் அமைந்துள்ளன. ஒரு துப்பறியும் நிபுணரின் அனுபவங்கள் என்றாலும் இவை நிச்சயமாகத் துப்பறியும் கதைகள் மட்டுமே அல்ல. பெண் மனதையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், வன்முறைகள் நிறைந்த உலகில் மீண்டும் மீண்டும் அதிலேயே போய் வீழ்வதற்கான போக்கை விட்டு வெளியேற மறுக்கும் பெண்கள் என்று பலதரப்பட்ட அம்சங்கள் கடத்தப்பட்டிருக்கின்றன.

சுதா குப்தா பாத்திரப் படைப்பைப் பற்றி மூன்று கதைகளிலும் நமக்குச் சுவாரசியமான குறிப்புகள் காத்திருக்கின்றன. அதிலும் காதலை ஏற்றுக்கொள்ளும் காட்சியில் அவரிடம் தெரியும் கம்பீரமான கவனிப்பு உங்களை அசரவைக்கும். சுதா இறுதி வரை அதட்டிப் பேசாமல், அதிரடிக்கும் சாகசங்கள் புரியாமலேயே துப்பறிதலை மனித மனங்கள், சம்பவங்களின் வழியாகச் செய்ய வைத்ததில் அத்தனை இயல்புத்தன்மை.

மெல்லிய நகைச்சுவை ஒன்று ஊடாடிக்கொண்டு இருப்பது கதைகளின் வாசிப்பு வேகத்தை மட்டுப்படுத்தாமல் நகரச் செய்கிறது. கொடிய பசி கொண்ட மிருகமாக இருக்கும் ஒரு நபருக்குக் கூட அவனின் செயல்களுக்கு ஆயுள் ‘தண்டனை வழங்கப்பட்டது’ என்று அம்பையால் தான் எழுத முடியும்.

காதல் என்றால் என்னவென்றே உணராமல் இருக்கும் சிங்காரவேலு ஆறுமுகம் கதாபாத்திரமும், ஸ்டெல்லாவும் அத்தனை வேகமாக மனதில் அவர்களின் வாழ்க்கையால், பார்வையால் ஒட்டிக்கொள்கிறார்கள். பிரசங்கம் செய்யும் எழுத்து பாணியில் எந்தக் கதையும் எழுதப்படவில்லை. பாலச்சந்தர் துவங்கி சாய் பாபா வரை பலரின் மீதும் விமர்சனங்கள் அப்படியே இயல்பாக வைக்கப்பட்டு நகர்ந்தாலும் மையச்சரடான மனிதர்களின் மனங்களை வெளிப்படுத்தல் தொய்வில்லாமல் சுதா குப்தா, கோவிந்த் ஆகியோரைக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. ஆனாலும், மழையில் நனைந்து படகு விட்டு, குழந்தைகளின் மேலே விழுந்து ரசிக்கும் வாழ்க்கை அப்படியே இருக்க உலகம் விட்டுவிடுவதில்லை என்கிற உண்மையை இந்த அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்புத் தொகுப்பு தரும்.

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
அம்பை
காலச்சுவடு வெளியீடு
பக்கங்கள்: 118
விலை:100

டெர்லின் ஷர்ட்டும், எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர் – நூல் அறிமுகம்


ஜி.நாகராஜனின் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறுகதைகளோடு வசித்துவிட்டு வந்தேன். எல்லா வகையான புனித பிம்பங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு மகத்தான சல்லிப்பயலான மனிதனின் அக இருட்டுக்குள் வெகு இயல்பான பயணம் கூட்டிப் போகிற அவரின் கதைகளைப் பாலியல் கதைகள் என்று சிலர் கடந்திருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். நிச்சயமாக இல்லை என்பதைப் படிக்கிற பொழுது உணர்வீர்கள்.

ஜெயகாந்தன் எழுதிய அக்கினி பிரவேசம் கதையை இவரும் மாற்றி எழுதியிருக்கிறார். மகளின் கருவை கலைக்கச் சொல்லி பேசிக்கொண்டு இருக்கும் அன்னையிடம், “நான் எதுவும் தப்பு பண்ணலைன்னு சொன்னே அம்மா. ஆனா, என் மனசு திடமா இருந்தா இப்படி நடந்திருக்காது இல்லையா?” என்று மகள் கேட்டதும் அந்தத் தலைப்பை விட்டு அப்படியே எதுவும் நடக்காதது போலப் பேச்சை மாற்றுகிறாள் அவள். ஊரில் நடக்காதா ஒன்று, கடந்து கூட்டிப் போக வேண்டும் மகளை என்கிற பரிதவிப்பை எந்த விவரணையும் இல்லாமல் கடத்தியிருக்கிறார்.

போலியும், அசலும் கதையில் உள்ளாடையை ரகசியமாக அணிந்து பார்க்கும் பாட்டி, சம்பாத்தியம் கதையில் சொந்த மகளைத் தன்னுடைய இச்சைக்கு ஆட்படுத்தும தந்தை, மகளையும் சவுகரிய வாழ்க்கைக்குப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திப் பின்னர்த் திருமணம் செய்து கொடுக்கும் தாய் என்று உண்மைக்கு வெகு அருகில் கதைகள் அமைகின்றன.

துக்க விசாரணை கதையில் ஐந்து கொன்னோரியே நோயால் பாதிக்கப்பட்ட அக்கா விபத்து ஒன்றில் இறந்துபோன சூழலில் தங்கைக்கு ஆறுதல் சொல்லப் போகிறான் நாயகன். அவள் அக்காவின் மரணத்தைப் பற்றிப் புலம்பி அழுகிறாள். அவளின் ஆடை விலகி இருக்கிறது. பத்து ரூபாயை அவள் கையில் திணிக்கிறேன். “மாடிக்குப் போகலாம் வாங்க!” என்று அவள் அழைப்பதோடு கதை முடிகிறது.

டெர்லின் ஷர்ட்டும், எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர் கதை சிறந்த பேய்க்கதைகளில் ஒன்றாகும் தகுதி கொண்டது. நிமிஷக் கதைகளில் பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணைப் பேட்டி எடுக்கிறார் ஒரு எழுத்தாளர். அதை இப்படி விவரிக்கிறார், “கொடுமையிலும் கொடுமை, கொடுமையைக் கொடுமை என்று புரிந்து கொள்ளாதது தான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர் கண்ணீரைப் பிதுக்கி எடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.”

ஜி.நாகராஜன் மணக்கும், இனிமையான அனுபவங்கள் தரும் கதைகளோடு உங்களை வரவேற்பதில்லை. ஆனால், இந்த உலகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்கிற உண்மையை எதிர்கொள்ள அவசியம் வாசியுங்கள்.

டெர்லின் ஷர்ட்டும், எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர் உள்ளிட்ட சிறுகதைகள்

காலச்சுவடு வெளியீடு
பக்கங்கள்:152
விலை:135
தொகுப்பாசிரியர் : சுரேஷ்குமார இந்திரஜித்

7.83 ஹெர்ட்ஸ் – தவறவிடக் கூடாத நாவல்!


7.83 ஹெர்ட்ஸ் நாவலை வாசித்து முடித்தேன். ஆசிரியரின் முந்தைய நாவலை இன்னமும் வாசிக்காததால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாக வாசிக்கப் புகுந்தேன். கடுமையான உழைப்பில் விறுவிறுப்பான ஒரு நாவலை ஆக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர்.

ஓநாய்கள் மீதான நம்முடைய பார்வை இந்த நாவலைப் படித்து முடிக்கையில் கண்டிப்பாக மாறும். உலகம் முழுக்க வளர்ந்த நாடுகள் எப்படி வன்முறையை வெவ்வேறு நாடுகளில அறிவியல் தொழில்நுட்பங்களின் மூலம் வன்முறையைத் தூண்டி விடுகின்றன என்பதை நாவலை வாசிக்கிற பொழுது அறிந்து அதிர்ந்து போவீர்கள்.

அறிவியல் புனைகதை என்றாலும் அதிலும் மனதைவிட்டு அகலாத பாத்திரமாக வேதநாயகத்தை ஆசிரியர் மண்ணின் மணத்தோடு படைத்து கைகட்டி அவர் சொல்லும் கதைகளைக் கேட்க வைக்கிறார். கதையின் எந்தச் சரடையும் இங்கே சொல்லி கதை வாசிப்பதன் சுவாரசியத்தை மட்டுப்படுத்த விரும்பவில்லை.

இந்த நூலில் எக்கச்சக்க அறிவியல் சங்கதிகள் பேசப்பட்டு இருந்தாலும் அவை துளிகூட அலுப்புத் தராமல் கடத்தப்பட்டதில் இருக்கிறது ஆசிரியரின் வெற்றி. அதே சமயம் உணர்வுப்பூர்வமான தருணங்கள் வருகிற பொழுது நாவலின் வேகத்தை மட்டுப்படுத்தும் என்று எண்ணியோ என்னவோ வேகவேகமாகக் கடந்துவிடுகிறார்.

அவசியம் வாசியுங்கள்!

7.83 ஹெர்ட்ஸ்
க.சுதாகர்
வம்சி புக்ஸ்
228 பக்கங்கள்
விலை: 200