இந்தியா ஏன் இந்துத்வா தேசம் ஆகாது?


இந்துவாக இருப்பது:

பாவி தன்னுடைய பாவங்களுக்கு வருந்துகிற போது அவனுக்குப் பரலோகத்தில் பேரானந்தம் கிடைப்பதாகக் கிறிஸ்துவப் பிரார்த்தனை செல்லும். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை ஒரு கிறிஸ்துவ மதத்தின் பாவியோடு அழைப்பது அத்தனை சரியாக இருக்குமா என்று தெரியவில்லை, அதே சமயம் அவர்கள் தங்கள் பாவங்களுக்கு வருந்துகிறார்கள் என்பது நல்ல செய்தி. சனாதன தர்மத்தை விட்டுத் தலித்துகள் பிரிந்து இந்து மதத்தை விடச் சமத்துவம் கூடுதலாகக் கொண்டிருக்கிற மற்ற மதங்களுக்கு மாறுவதற்குத் தீண்டாமையின் சாபம் காரணம் என்று அவர்கள் இப்பொழுதாவது கண்டிருக்கிறார்கள். தாய் வீட்டில் கழிவுப் பொருளை போல நடத்துவார்கள் என்கிற நிலையில் ‘தாய் மதத்துக்குத் திரும்புங்கள்’ என்று அழைப்பதை ஏற்றுத் திரும்ப யார் விரும்புவார்கள்.

எத்தனையோ தலித்துகள் இந்து மதத்தை விட்டு நீங்கியதில் ஆச்சரியம் இல்லை. புதிரான ஒன்று எப்படி இத்தனை பேர் இங்கேயே தங்கினார்கள் என்பது தான். இந்து தேசியத்தின் நாயகர்களிடம் அடிப்படைப் புரிதலிலேயே தவறு இருக்கிறது. தொடர்ந்து இந்து மதம் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என்றும், மதச்சார்பின்மை அதன் முக்கியமான அங்கம் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் மதச்சார்பற்ற இந்தியாவுக்கு முரணான இந்து இந்தியாவை முன்னிறுத்தக்கூடாது. சகிப்புத்தன்மை பல்வேறு ஒருவகையில் கற்பிதம் தான், அதே சமயம் அது உண்மைக்கு வெகுதூரத்தில் இல்லை.

இந்து மதம் சகிப்புத்தன்மையோடு இருக்கலாம், இந்து சமூகம் சகிப்புத்தன்மை, சமத்துவம் அற்றதாக இருக்கிறது. அத்வைதத்தின் ஆழமான உட்பொருளை ரசிக்கலாம், ஆனால், சூத்திரர்கள், அதி-சூத்திரர்களின் மீது தொடர்ந்து தொடுக்கப்படும் அவமானங்களை எல்லாம் பிரபஞ்சத்துக்குப் பொதுவான பிரம்மத்தை அழுத்திச்சொல்லி சமரசப்படுத்த முயல்வதை எப்படி ஒருவர் ஏற்க முடியும்? இந்து சமூகம் தன்னுடைய பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்துகிறது. பகவத் கீதை இதே மாதிரியான முன்முடிவை இரண்டு உயர் வர்ணங்களின் குணங்களை உயர்த்திச்சொல்ல வைசியர்கள், சூத்திரர்களின் குணங்களை இழிவுபடுத்துகிறது. (அத்தியாயம் 18, ஸ்லோகம் 41-48). வேதங்கள், உபநிடதங்களின் ஆன்மிகம், மேன்மை எல்லாவற்றையும் தாண்டி தலித் ஆண்களை மனிதத்தன்மையற்று நடத்துகிறது இந்து சமூகம் என்பதும், அதைவிடத் தலித் பெண்களைப் பாலியல் பொருட்களைப் போல நடத்தினார்கள். சூத்திரர்களும் ஒன்றும் பெரிதாக மதிக்கப்படவில்லை. பகுஜன் எனப்படும் பெரும்பான்மைமக்கள் இந்து மதத்தில் நஷ்டப்பட்டவர்கள்.

இந்துத்வாவின் பெரும்பான்மை தத்துவங்களைப் பிரச்சாரம் செய்வது ஆதிக்கச் சாதியினர் அதிலும் குறிப்பாகப் பிராமணர்கள் அதனைச் செய்கிறார்கள். எப்படிப் பிராமணியத்தின் புராணக்கதைகளை, தத்துவங்களைப் பற்றி ஒடுக்கப்பட்ட சாதியினர் உணர்ந்தார்ர்கள் என்பது பற்றிய விவாதங்கள் இல்லை. தீவிரமான பிராமணிய எதிர்ப்புக் கருத்தாக்கத்தை உருவாக்கியவர் ஜோதிபாய் புலே. முனைவர். பாலசாகேப் அம்பேத்கர் பிராமணிய ஆன்மீகத்தின் வெளிவேஷங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார். அவரின் பகத்கீதை பற்றிய விமர்சனத்தைப் படித்துப் பாருங்கள். ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எப்படிப் பகவத் கீதை காட்சியளிக்கிறது என்று புலப்படும். அவர் ஜாதி, பிராமணியம் இரண்டுக்கு எதிராகவும் அயராது போராடினார். தன்னுடைய வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் இந்துக்களைத் தங்களுடைய சமூகத்தின் இழிவுகளை உணரவைக்கும் தன்னுடைய முயற்சிகளை ஓய்ந்து போய்க் கைவிட்டு, தன்னுடைய மக்களைப் புத்த மதத்துக்குக் கொண்டு சேர்த்தார்.

மகாத்மா காந்தி இந்து சமூகத்தைத் தீண்டாமையின் தீமைகளைப் பற்றிப் புரிய வைக்கத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். அவர் விடுதலைப் போருக்கான இந்து பெருந்திரளின் ஆதரவை தீண்டாமையைச் சார்ந்து அம்பேத்கர் விரும்பியது போல இந்து மதத்தைப் பிரித்து இழக்க விரும்பவில்லை. ஆனால், அவரால் வர்ணாசிரம இந்துக்களைத் தீண்டாமையை விடவைக்க முடியவில்லை. அவரின் ஹரிஜன சேவா திட்டத்துக்கு வாய்ப்பந்தல் போட்டுவிட்டு, சுரண்டல், அவமானத்தைத் தொடர்ந்தார்கள். இந்து சமூகம் சீர்திருந்தாமல், தன்னுடைய தவறுகளுக்கு வருந்தாமல் இருப்பதால் அறுபத்தி ஏழு ஆண்டுகள் கழித்தும் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.

வட இந்தியாவை அறுநூறு ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஜாதி அமைப்பை அப்படியே இருக்க விட்டது இந்து சமூகத்தின் அதிர்ஷ்டம். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனக்கருதப்பட்ட மக்களை மதம் மாற்றினாலும் இந்து சமூகத்தின் ஜாதி அமைப்பை அவர்கள் ஆட்சிக்காலத்தில் அப்படியே விட்டுவிட்டார்கள். மதமாற்றத்தை விட மோசமான ஒன்றை ஆங்கிலேயர்கள் செய்தார்கள்.நவீனக் கல்வியை இலவசமாக ஜாதி வேற்றுமை இன்றித் தந்தார்கள். இரண்டு உயர் ஜாதிக்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்து சமூகத்தில் அது பெரும் புரட்சியானது. நவீன கல்வி, கருத்துக்களை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தவில்லையென்றால் ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா எப்பொழுதும் சம்ஸ்க்ருத அறிஞர் ஆகியிருக்க முடியாது, காந்தி பாரிஸ்டர் ஆகியிருக்க முடியாது. கிறிஸ்துவத்தை விட இந்து சமூகத்துக்கு அதிகச் சவாலை கல்வியே தந்தது.

தென்னிந்தியா இந்தப் புரட்சியால் பெரிய அளவில் பலன்பெற்றது. நீதிக்கட்சி துவங்க பிராமண எதிர்ப்பு இயக்கம், அதனைத்தொடர்ந்து அதனைத்தொடர்ந்து பெரியார் நடத்திய திராவிட இயக்கம் ஆகியவை தென்னகத்தை வட இந்தியாவை விடப் பெரியளவில் வேறுபடுத்தின. வடக்கு இன்னமும் பழமையில் முடங்கியிருக்கிறது. பீமாரு மாநிலங்கள் இன்னமும் இந்துத்வாவின் கோட்டைகளாக உள்ளன. மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளில் தென்னிந்தியா வட இந்தியாவை முந்திக்கொண்டு முத்திரை பதிக்கிறது.

ஜாதி அமைப்பு இந்து அமைப்பை பிளவுபடுத்தி இருக்கிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் இந்து தேசத்தைக் கனவு காண்கிறது. ஆனால், இந்துவாக இருப்பது என்பதே பிரிந்தும், பிளவுபட்டும் இருப்பதுதான். இதுதான் வி,ஹெச்.பி. யிடம் இருந்து இந்தியாவைக் காக்கும். – Meghnad Desai, Baron Desai smile emoticon

தமிழில்: பூ.கொ.சரவணன்

தயாநிதி கொண்டு வந்த 66A! ஆடித்தீர்த்த அரசியல்வாதிகள்… – 360° பார்வை


தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66A பிரிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சொல்லி அதை நீக்கியிருக்கிறது உச்சநீதி மன்றம். அப்படி என்னதான் இந்த சட்டத்தில் பிரச்சனை என்கிறீர்களா?

2008-ல் இந்த சட்டப்பிரிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த பொழுது அதை அப்படியே ஆதரித்த இன்னொரு நல்ல கட்சி எது தெரியுமா? பாஜக தான்..

இணையத்தில் நீங்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள பயன்படுத்தும் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக காயப்படுத்துவதாக இருந்தால் உங்களை சிறைக்கு அனுப்பலாம் என்பதே அச்சட்டம். இந்தச் சட்டத்தில் அச்சுறுத்துகிற, கடுப்பை உண்டாக்குகிற இணையப் பதிவுகளுக்கு எல்லாம் கம்பி எண்ண வைக்கலாம் என்றது தான் அரசியல்வாதிகள், காவல்துறை ஆகியோருக்கு கொண்டாட்டமாக போய்விட்டது.
ஒரு பத்து நிகழ்வுகளை எடுத்துக்காட்டினால் போதும்:

1. பால்தாக்கரே மரண ஊர்வலத்தில் பல லட்சம் பேர் கலந்து கொண்டதைப் பற்றி ஷாஹீன் தாதா, ரேணு ஸ்ரீனிவாசன் என்று இரு பெண்கள் “பலபேர் ஒவ்வொரு நாளும் இறக்கிறார்கள். உலகம் நகர்கிறது. ஒரு அரசியல்வாதி இறந்து போனதும் ஊரே ஸ்தம்பித்து விட்டது. நாம் இன்றைக்கு விடுதலையாக இருப்பதற்கு காரணமாக பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தியிருக்கிறோமா?. மரியாதை தானாக வரவேண்டும். அது கட்டாயத்தில் வரக்கூடாது. இன்றைக்கு மக்கள் திரளாக கூடியதற்கு காரணம் மரியாதை அல்ல! பயமே!.” என முகநூலில் பதிவிட்டார்கள். இதற்கு கைது!

2. ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகபத்ரா மம்தா பானர்ஜி பற்றிய கேலிச்சித்திரங்களை பார்வர்ட் செய்ததற்கு கைது செய்யப்பட்டார். “நீங்கள் இதனால் காயப்பட்டீர்களா?” என்று அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்து கலக்கியது காவல்துறை

3. அசீம் திரிவேதி வெவ்வேறு கார்ட்டூன்களின் மூலம் இந்திய அரசை காட்டமாக விமர்சித்ததற்கு கைது செய்யப்பட்டார். தேசிய சின்னங்களை தவறாக கார்ட்டூனில் பயன்படுத்தி பிரிவினைவாதத்தை தூண்டினார் (?!) என்றும் அவர் கைதுக்கு உள்ளானார்.

4. வங்கதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் ட்வீட்டரில் மத உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் எழுதினார் என்று இஸ்லாமிய மதகுரு ஒருவரின் புகாரின் பெயரில் முதல் தகவல் அறிக்கை அவர் மீது இதே பிரிவின் கீழ் பதியப்பட்டது.

5. கேரளாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜேஷ் பிரதமர் மோடி பற்றி காயப்படுத்தும் வகையில் கமென்ட் செய்ததற்காக ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவரின் புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்.

6. ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் ஊழல்வாதி என்று இந்தியா ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் அப்பொழுதைய ஆர்வலரும், தற்போது ஆம் ஆத்மியின் புதுவை பொதுச்செயலாளரும் ஆன  ரவி சீனிவாசன் ட்வீட் செய்ய கார்த்திக் சிதம்பரத்தின் மின்னஞ்சல் புகாரில்  அவரையும் இதே சட்டத்தில் ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.

7. ஆசம்கான் எனும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உத்திர பிரதேசத்தின் நகர்ப்புற வளர்ச்சியின் அமைச்சரைப் பற்றி காயப்படுத்தும் வகையில் பதிவு போட்டதற்காக ஒரு பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் கைது செய்யப்பட்டு பதினான்கு நாள் நீதிமன்றக்காவலில் வைத்தார்கள். ஆசம்கான் வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவதில் விற்பன்னர். தன்னுடைய எருமை மாடுகளைத் தேட காவல்துறையை பயன்படுத்தும் பெரும்புள்ளி என்று ஏனோ சொல்லாமல் இருக்க முடியவில்லை.

8. உபியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மதநம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் காட்சிப்படம் போட்டது, கமென்ட் செய்தது ஆகியவற்றுக்காக கைதுசெய்யப்பட்டு நாற்பது நாள் சிறைத்தண்டனைக்கு உள்ளானார்கள்.
9. கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பினராயி விஜயனின் ஆடம்பர மேன்ஷன் என்றொரு படத்தை மின்னஞ்சலில் பார்வர்ட் செய்ததற்காக இரண்டு கேரள இளைஞர்கள் கார்த்திக், மனோஜ் கைது செய்யப்பட்டார்கள்

10. தங்களுடைய க்ரூப்பில் அரசியல்வாதிகள் பற்றி காயப்படுத்தும் வகையில் பதிவு போட்ட மாயன்க் ஷர்மா, கே.வி.ராவ் எனும் ஏர் இந்தியா பணியாளர்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவர், உபி முதல்வர் ஆகியோர் பற்றி ஆட்சேபகரமான படத்தைப் போட்ட வாரனாசி சுற்றுலா அதிகாரி என்று பலரையும் சிறைக்கு அனுப்பினார்கள். குறுக்கெழுத்து போட்டியில் NaMo என்கிற மோடியின் பட்டப்பெயரை விடையாக வைத்ததற்காக எல்லாம் திரிசூரில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர் ஆகியோர் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்தார்கள்.
சண்டிகரில் மட்டும் இரண்டு ஆண்டுகளில் எழுபத்தி ஐந்து வழக்குகள் இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்ஆப்பில் சீக்கியத் தலைவரை கிண்டலடித்தற்கு கூட வழக்கு! மம்தாவின் மேற்கு வங்கத்தில் மட்டும் நூறு வழக்குகள். உத்திர பிரதேசத்தில் நாற்பத்தி ஆறு மாவட்டங்களில் இரண்டு வருடங்களில் நானூறு வழக்குகளை பதிந்திருக்கிறார்கள்.

உண்மையில் முதலில் இயற்றப்பட்ட ஐ.டி. சட்டத்தில் இந்த உட்பிரிவே இல்லை. இந்த சட்டம் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் தான். பின்னர் இது ஆ.ராசா தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஆய்வதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் ஒரு உறுப்பினர் தற்போது இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்திருப்பதை வரவேற்று இருக்கும் ரவிசங்கர் பிரசாத். ப.சிதம்பரமும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று இருக்கிறார். அவரின் மகன் இந்த சட்டத்தின் கீழ்தான் புகார் கொடுத்தார் என்பதை மறந்து விடுங்கள்.

அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 19(1) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக தருகிறது. அடுத்த உட்பிரிவான
19(2) கருத்துரிமையின் மீது தேவையான கட்டுப்பாடுகளை பொது ஒழுங்கு, நாகரீகம், அவதூறு கிளப்புதல் போன்ற தருணங்களில் விதிக்கலாம் என்கிறது.
அரசு இரண்டாவது உட்பிரிவை காட்டித்தான் இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படுத்த முயன்றது. இணையத்தின் கருத்துரிமையை கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது என்றால் எப்படி அந்த கட்டுப்பாடு பொது ஒழுங்கை காப்பாற்றும் என்று நிரூபிக்க வேண்டும் என்றது. சட்டப் பிரிவு 69A வின் கீழ் ஆன்லைன் தளங்களை ப்ளாக் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இதையும் நீக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அதற்கு ஒப்ப உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் ஒரு தளத்தை அரசு முடக்கினால் அதற்கு எழுத்துப் பூர்வமாக நியாயமான காரணங்களை பதிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.


79 வது உட்பிரிவில் இந்த பதிவுகள் இடப்படும் ஆன்லைன் தளங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ட்வீட்டரில் எதோ வன்முறையைத் தூண்டும் வகையில் ஒன்றை ஒருவர் எழுதிவிட்டால் அதற்காக ட்வீட்டரின் அதிகாரிகளை கைது செய்ய முடியாது. ஆனால், அதிலும் ஒரு செக் இருக்கிறது. 79(3) ன் படி ஒரு சட்டத்துக்கு புறம்பான கருத்தோ, படமோ ஆன்லைனில் இருக்கும் என்கிற தகவல் தளத்துக்கு கிடைத்ததும் அது செயல்பட வேண்டும். அதுவும் ஒன்றரை நாட்களுக்குள் செயல்படாவிட்டால் சட்டம் தன்னுடைய கடமையை செய்யும். இந்த தகவல் என்கிற வார்த்தையை உச்ச நீதிமன்றம் விரித்து பொருள் கொண்டிருக்கிறது. அரசோ, நீதிமன்ற ஆணையோ சம்பந்தப்பட்ட தளத்துக்கு வழங்கப்படுவதையே தகவல் என்பதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதனால் போகிற போக்கில் தளத்தின் மீது நடவடிக்கை எடுப்பது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொழுது காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்கள் என்று சகலரும் இதனை ஏற்றுக்கொண்டு ஓட்டு போட்டார்கள். மூன்றே மூன்று எம்.பி.க்கள் மட்டுமே இதற்கு எதிராக குரல் கொடுத்தார்கள். இப்பொழுது என்னமோ தாங்கள் எல்லாம் கருத்து சுதந்திரத்தை காக்கவே வந்தவர்கள் போல இரு கட்சியினரும் அறிக்கைகள் விட்டுக்கொள்கிறார்கள்.
ஸ்ரேயா சிங்கால் என்கிற இருபத்தி நான்கு வயது சட்டக்கல்லூரி மாணவி தான் இந்த சட்டப்பிரிவுக்கு எதிரான முதல் வழக்கைப் பதிந்தார். அவரோடு எண்ணற்ற குடிமக்கள் நீதிமன்றத்தை நாடியதற்கு பொருள் ஏற்பட்டு இருக்கிறது.


மக்களின் கருத்துரிமையை காக்க வேண்டிய நாடாளுமன்றத்தின் அங்கமான எம்.பி.க்கள் விமர்சனங்களை பொறுக்க முடியாமல் பொது மக்களை அச்சுறுத்த இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே கசப்பான உண்மை. ஆனால், ‘என்னைக்கூட விட்டு வைக்காதீர்கள் சங்கர்!” என்று கருத்துரிமையை மதித்து ஒரு மாதிரியை உருவாக்கிய நேருவிய தாராளவாதத்தை நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.

ராகுல் காந்திக்கு ஒரு ரகளையான கடிதம்!


கரையும்  ராஜ்யத்தின் கண்ணுக்குத் தெரியாத   இளவரசருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ராகுல்,

நானும் உங்களைப் போலவே விடுப்பில் இருந்தேன். என்ன உங்களைப் போலக் காலவரையில்லாத விடுப்பில்லை அது. வெறும் மூன்று வாரங்கள் மட்டுமே அது நீடித்தது. வந்ததும் எங்கே ராகுல்? அவர் எப்பொழுது திரும்புவார்? என்று என்னைக் கண்டுபிடிக்கச் சொன்னார்கள். அன்புள்ள ராகுல், எனக்கு உங்களைப் பற்றிச் சற்றும் கவலையில்லை. என்ன செய்வது. எனக்குச் செய்யவேண்டிய ஒரு வேலையிருக்கிறது. ஆகவே, காங்கிரசின் சில உறுப்பினர்களின் எண்களை அழைத்தேன். ஆஃப் தி ரெக்கார்டில் பேச வேண்டும் என்றால் இருக்கிற ஒட்டுமொத்த அரசியல்வாதிகளிலேயே மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக உங்கள் கட்சியினரே உள்ளார்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டால் உங்களின் சுயத்தைப் போட்டு சிதைக்கும் ஜோக்குகளை அவர்கள் அள்ளிவிடுகிறார்கள். அதிகாரப்பூர்வ பேட்டி என்று சொன்னதும், அவர்கள் பேசுவது அத்தனை சலிப்பாக இருக்கிறது. உங்களை நியாயப்படுத்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. உங்களைப் பற்றி ஆழமான பார்வையிருப்பதாக நீங்கள் அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டுப் போன நிலையிலும் அவர்கள் நடிக்க வேண்டி இருக்கிறது.

இதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்! நீங்கள் எங்கே தான் போய்த் தொலைந்தீர்கள், நீங்கள் மோசமான மனநிலையில் இருக்கிறீர்களா? நீங்கள் கட்சியின் பழம்பெருச்சாளிகளை மொத்தமாக ஒழித்துக்கட்டும் வேலையில் இருக்கிறீர்களா? நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? அல்லது உணர்வுப்பூர்வமாகக் காயப்பட்டு இருக்கிறீர்களா? நீங்கள் காங்கிரஸ் தலைவராக உள்ளீர்களா? இல்லை உங்களுக்கு விடுமுறைகளின் மீது எப்பொழுதும் இருக்கும் போதையா? என்று ஒட்டுமொத்த தேசத்துக்கும் எத்தனையோ கேள்விகள். ஆனால், நாங்கள் ஆழமாக, தீவிரமாக உங்களால் அலுப்புக்கு உள்ளாகி இருக்கிறோம். உங்களுடனான உறவில் இனிமேல் எதுவுமில்லை என்பது போன்ற நிலையை எட்டியிருக்கிறோம். அன்பு, வெறுப்பு இரண்டின் சுவடுகளும் இனிமேல் எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு இறுக்கமாகிற பொழுது எங்களின் மூளையில் உங்களை நம்பிக்கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நீங்கள் நேரு காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீங்கள் அர்ப்பணிப்பு கொண்டவராக இருப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீங்கள் எதோ வேலையிலோ அல்லது அரசியலிலோ ஈடுபடுகிற இயல்பான மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் மூட்டை கட்டப்பட்டு இருப்பீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இப்பொழுதும் உங்கள் கட்சியின் தலைமையை நீங்கள் ஏற்கும் சூழல் உள்ளது. நீங்கள் அதற்குத் தகுதியானவர் என்று உண்மையில் நினைக்கிறீர்களா? எப்பொழுதாவது நாடாளுமன்றத்தில் தோன்றுகிறீர்கள். விட்டால் எதோ பேசுகிறீர்கள். கடந்த ஆண்டு டிசம்பர் 29-ல் காங்கிரஸ் கட்சியின் துவக்க தின கொண்டாட்டத்தில் நீங்கள்  காணப்படவில்லை. நீங்கள் பெரும்பாலும் வழிநடத்த வேண்டும் என்று ‘விதித்திருக்கிற’ கட்சி உங்களின் கொள்ளுத் தாத்தாவும், இந்தத் தேசத்தின் ஜனநாயகத்துக்கு அடித்தளமும் இட்டவருமான நேருவின்  125-வது பிறந்தநாளை ஒரு சர்வதேச கூட்டத்தின் மூலம் கொண்டாடிய பொழுதும் உங்களைக் காணவில்லை.

ஒவ்வொரு வருடமும் உங்களின் பிறந்தநாளான ஜூன் 19 அன்று ஒரு நாடகத்தைக் காங்கிரஸ் கட்சி தலைமையகம் அமைந்துள்ள 24 அக்பர் ரோட்டில் காண்கிறோம். உங்கள் கட்சி தொண்டர்கள் கூடி உங்களைப் போற்றிக் கோஷங்கள் எழுப்புவார்கள். இனிப்புகள் கொடுப்பார்கள். பர்த்டே பாயான நீங்கள் அந்த நாளில் எங்கே இருப்பீர்கள் என்று தெரியாது. பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே நீங்கள் அன்றைய தினத்தைக் கழிப்பீர்கள்.

நீங்கள் உண்மையிலேயே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா, அல்லது அதில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறீர்களா என்று நாங்கள் ஆச்சரியப்படுவதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு வேறு எதையும் செய்யத் திறனில்லை என்பதால் இங்கே இருக்கிறீர்கள் என்றால் மக்கள் கட்சி, நாடு ஆகியவற்றின் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லா வகையான பொறுப்பை விட்டும் உங்களை விடுவிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள் என்று சந்தேகிக்கிறேன்.

நீங்கள் ஒரு ஆண்மகனாக வீரத்தோடு எழுந்து நின்று “நேர்மையாக இதற்கு நான் சரிப்பட மாட்டேன்!” என்று சொல்வதைச் சந்தோசமாகக் காண விரும்புகிறேன். இதனால் உங்களுக்குத் திறக்கக்கூடிய கிளர்ச்சி நிறைந்த புதிய உலகை எண்ணிப்பாருங்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பாதுகாப்புப் படை தேடாத வகையில் உலகம் முழுக்கச் சுற்றலாம். திருமணம் செய்து கொள்ளலாம். இல்லை தனிக்கட்டையாக இருக்கலாம். பார்ட்டிக்கு போவது, புத்தகங்கள் படிப்பது, ஸ்கூபா டைவிங் செய்வது, ரைஃபிள் சுடுதலில் ஈடுபடுவது என்று எதையாவது உருப்படியாகச் செய்யலாம். உங்களின் உள்ளார்ந்த தடுமாற்றங்களைப் பற்றி நீங்கள் பிரதிபலித்துக்கொள்ள அது உதவும். அது உண்மையில் உங்களையும், எங்களையும் உண்மையில் விடுவிக்கும்.

உங்களை மிகவும் நல்லவர் என்றும், கெட்டவராகவோ, ஊழல்வாதியாகவோ, பதவி வெறி பிடித்தவராகவோ இருக்க முடியாத எளிமையான மனம் கொண்டவராக நான் எண்ணுவதால் தான் இதையெல்லாம் சொல்கிறேன். உங்களிடம் உங்கள் கட்சிக்கும், குடும்பத்துக்கும் நீங்கள் தேவை என்றும், நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இல்லை என்றால் கட்சி கவிழ்ந்து விடும் என்றும் சொல்லியிருப்பார்கள். ஏற்கனவே உங்களின் அரசு கவிழ்ந்து விட்டது. ராகுல் நீங்கள் காணாமல் போய்க்கொண்டு இருக்கும் ஒரு அரசாங்கத்தின் இளவரசர். ‘நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் தெரியுமா?’ என்று உங்களை உசுப்பேற்றுபவர்கள் உங்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.

நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தத்துவம் பாதி, உணர்ச்சிகள் மீதி கலந்த ஒரு உரையை நிகழ்த்தினீர்கள். காலத்துக்கு ஏற்ற ஒரு வாரிசு வந்து விட்டதாக அந்தக் கூட்டத்தின் அங்கத்தினர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்கள். ஆனால், உங்கள் குடும்பத்திற்காக எப்பொழுதும் உணர்ச்சிவசப்படுவது காங்கிரஸ் கட்சியில் ஒரு சடங்கு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுது கண்ணீர் வடித்த பலரும் தற்பொழுது நீங்கள் நிரந்தரமாக ஓய்வு பெற்றால் போதும் என்று இப்பொழுது எண்ணுகிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்,


அந்தத் தினத்தில் நீங்கள் சொன்ன இரண்டு விஷயங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன. வாழ்க்கையில் சமநிலை, உண்மையைத் தேடுவதன் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அதிகாரம் பயங்கரமான விஷமாக இருப்பதாகச் சொன்ன ராகுல் காந்தியாகிய நீங்கள் அதைப்பற்றி அஞ்சவேண்டியதில்லை. அந்த விஷம் உங்களைக் கண்ணுக்கெட்டிய காலம் வரை தீண்டப்போவதில்லை. உண்மையை, சமநிலையை நீங்கள் இப்போதைக்குத் தேடலாம். வாரிசு அரசியல் அடிப்படையில் ஜனநாயகத்துக்கு எதிரானது என்பது அடிப்படை உண்மை ராகுல்.

உங்களின் பரம்பரையை விட்டு வெளியே சிந்தித்தால் தான் சில அடிப்படை உண்மைகள் துலங்கும். ஏன் உங்களுக்குப் பதிலாக உங்கள் குடும்பத்தைச் சாராத, உற்சாகம்மிகுந்த, அரசியலில் ஆர்வமுள்ள ஒருவரை அடுத்தத் தலைமுறை காங்கிரஸ் தலைவராக வளர்ப்பதை பற்றி யோசிக்கக் கூடாது? எந்தத் தேவலோகச் சட்டம் உங்கள் குடும்பம் தான் வழிநடத்த வேண்டும் என்கிறது? வாரிசு அரசியல் சரியென்று நூற்றுக்கணக்கான வாதங்கள், குரல்கள் உங்களை நோக்கி வீசப்படும். ஆனால், உண்மையை, வாழ்வின் அர்த்தத்தைத் தேடுவதாக அடிக்கடி பேசிய நீங்கள் அது அடிப்படையிலேயே தவறானது என்று உணர்ந்து கொள்வீர்கள்.


இழப்பதற்கு என்று பெரிதாக எதுவுமில்லை. வரலாற்றில் பெரிய புயல்களுக்குப் பிறகே பழைய அமைப்புகள் நொறுக்கப்பட்டுப் புதியவை எழுகின்றன. மாநிலங்களைக் கவனியுங்கள். புதிய தலைவர்களை உங்கள் குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் வளர விடுங்கள். காங்கிரசின் பாக்கியுள்ள அடிமட்டத்தலைவர்களில் பெரும்பாலானோர் டெல்லி மேலிடத்தின் குரலை மதிப்பதில்லை என்று தெரியும். அரசியல் வட்டத்தில் எல்லாம் மாறி உங்கள் கட்சி மாநிலங்களில், மத்தியில் வாய்ப்புகளைப் பெறக்கூடும். ஒரு புதிய காங்கிரஸ் எழ அனுமதியுங்கள் ராகுல். அது அரை மனதுள்ள, பகுதி நேர தலைவரால் சாத்தியமில்லை.

இவற்றை விடுங்கள். அமைதியை நோக்கிப் பயணியுங்கள்.

உங்கள் உண்மையுள்ள,
ஷபா நக்வி

ஷபா நக்வி ‘அவுட்லுக்’ இதழின் அரசியல் ஆசிரியர்.

மூலம்: www.outlookindia.com/article/To-The-Invisible-Prince-Of-A-Vanishing-Kingdom/293773

சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ


லீ குவான் யூ நவீன சிங்கப்பூரைச் செதுக்கியவர். சிங்கப்பூர் ராபல்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு தீவுகளைக்கொண்ட சில நூறு சதுரகிலோமீட்டர்கள் கொண்ட சிறிய தேசம் அது. ராபல்ஸ் கட்டுப்பாடுகள் அற்ற துறைமுகமாகச் சிங்கப்பூரை மாற்றினார். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்வரை இருந்தது. லீ குவான் யூ நான்கு தேசியகீதங்கள் பாடுகிற அளவுக்கு நாட்டில் இந்த ஐம்பது வருட காலத்துக்குள் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.

லீ, செல்வம் வளம் மிகுந்த பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட தொழிற்துறையில் இயங்குகிற குடும்பத்தில் வளர்ந்தவர். தங்கத்தட்டில் ஏந்திப் பிள்ளையைக் கொண்டாடினார்கள். அவரின் இளம்வயது முதலாளித்துவக் காதல், பொருளாதார வீழ்ச்சியின்பொழுது விழுந்தது. குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருந்தது. அம்மா எண்ணற்ற வேலைகள் செய்து குடும்பத்தைக் கரை சேர்த்தார்.கேம்ப்ரிட்ஜில் படிக்கப்போன லீக்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி அதிர்ச்சியை அதிகரித்தது. பட்டங்கள் பெற்று நாடு திரும்பிய சூழலில், உலகப்போரில் ஜப்பான், பிரிட்டனைப் பந்தாடியது அவருக்கு இங்கிலாந்து மீதிருந்த காதலை அடித்து நொறுக்கியது.

ஜப்பானுக்குப் போரில் வேலை பார்த்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். சோசியலிசம் மீதான காதல் அரும்பி மறைந்திருந்தது.இங்கிலாந்து உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. PAP கட்சியை, தோழர்களோடு இணைந்து ஆரம்பித்தார் அவர். டோய்ன்பீ-யின் நூல்களை வாசித்தது பெரிய மாற்றத்தை அவருக்குள் உண்டாக்கியது. படைப்பாற்றல் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை மாற்றியமைப்பார்கள் என்கிற சிந்தனை ஆழமாக அவருக்குள் வேர்விட்டிருந்தது. ஜெர்மனி உலகப்போருக்குப் பின்னர் வலிமையான அரசாங்கத்தால் படிப்படியாக அற்புதமாக எழுந்தது அவரின் எண்ணத்தை வலுப்படுத்தியது.

முதல் முதலாகப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது நடந்த தேர்தலில் அவரின் கட்சி ஒப்புக்கு போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது. மலேசியாவின் பிரதமர் எங்களோடு நீங்கள் இணையுங்கள் என்று அழைத்தார். லீ அதை முன் வைத்து, தேர்தலில் பிரிட்டனுக்கு எதிராக விடுதலை மற்றும் மலேசிய இணைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் கட்சி அமோக வெற்றிப் பெற்றது. மலேசியாவுடன் இணைந்தபிறகு சிக்கல்கள் ஆரம்பித்தன.

இயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் எழுந்தன.ஒரு கட்டத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. சிங்கப்பூர் தனிதேசமாக உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது. “பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் !” என்று சொல்லிவிட்டு லீ சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பின்னர் எழுந்து வந்தார்.லீ தனக்கென்று பாதைகள் வகுத்துக்கொண்டார்.

ஜனநாயகம் என்றெல்லாம் பெரிதாக வாய்த் திறக்கக்கூடாது. தேசத்தின் தேவைகள் முக்கியம். மூன்றுவகையாக மக்களை வடிவமைத்தார். நல்ல தலைவர்கள் மேலே இருப்பார்கள்,சிறந்த அதிகார வட்டம் அடுத்து இருக்கும்,மீதமிருக்கும் மக்கள் சுய மற்றும் சமூகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளவேண்டும். தேசம் உருப்படும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. கூடவே எப்பொழுதும் தன்னைச் சீனா சாப்பிடலாம் என்கிற அச்சம்துளிர்க்கவே வலுவான ராணுவத்தை இஸ்ரேலின் உதவியோடு அமைத்துக்கொண்டார்கள். அரசு செய்கிற செலவில் கால்வாசி ராணுவம்
சார்ந்தே அமைந்திருந்தது,

சான் பிரான்சிஸ்கோ பங்குச்சந்தை மூடுவதற்கும், ஜெர்மனியின் ஜூரிச் பங்குச்சந்தை திறப்பதற்கும் இடையே அரைநாள் அளவுக்கு இடைவெளி இருப்பதை நெதர்லாந்தில் இருந்து பொருளாதார ஆலோசனை சொல்ல வந்த ஆல்பர்ட் வின்செமியஸ் கவனித்துச் சொன்னார். இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் பங்குச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய தொல்லைகள் தராமல் தொழில் தொடங்க கதவுகள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைவாக இருந்து, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது சிங்கப்பூர்

பல பில்லியன் டாலர்களை இருக்கிற பத்துக்கும் குறைவான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கினார். பள்ளிகளில் கல்வி அரசு கவனித்து வழங்குவதாக மாறியது. வெளிநாட்டில் இருப்பவர்கள் படிக்க வந்தால் கிட்டத்தட்ட இலவசம் என்று கூவிக்கூவி அழைத்தார்கள். படித்த பின்பு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் கட்டாய வேலை ஒப்பந்தம் காத்திருக்கும். இப்படி உலகம்முழுக்கவும் இருந்து சிறந்த திறமைகள் வந்து சேர்ந்தன. சேரிகள் புதிய கட்டடத்திட்டங்களின் மூலம் காலி செய்யப்பட்டன. வசதியான வீடுகள்கட்டித்தரப்பட்டன. இலவசம் இல்லையென்றாலும் படிப்படியாக மக்களிடம் இருந்து அவர்களின் வருமானத்தில் இருந்துபோட்ட பணம் மீட்டெடுக்கப்பட்டது.

சின்னத் தேசம் என்பதும், ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தியும் நகர்ந்ததால் ரோட்டில் கார்கள் ஓடத் தடைகள் சுற்றி வளைத்து விதிக்கப்பட்டன. பத்து சதவிகித நிலப்பரப்பு இயற்கைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்து நாட்டுக்குள் நடைபெற்றபெரும்பாலான தொழில்களை அரசாங்கம் கவனித்துக்கொண்டாலும், அவற்றின் மேலாண்மையைச் செயல்படுத்த எண்ணற்ற சுதந்திரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். கட்டாயப் PF திட்டத்தின் கீழ் எல்லாச் சம்பளக்காரர்களின் சேமிப்பில் ஐம்பது சதவிகிதம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி செலுத்தப்பட்டது.

கேள்விகள் கேட்கிற எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை என்று குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்காமல் சிறை வரவேற்கும். நீதி என்றெல்லாம் பேச முடியாது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சீனப்பாரம்பரியம் கொண்டவர்கள்தான் எண்பது சதவிகிதத்துக்கும் மேலே கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் பெரும்பாலான உதவித்தொகைகள் அவர்களுக்கே சென்று சேர்கிறது. பாதி ஜனநாயகம் கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில் ஆளுங்கட்சியான லீயின் கட்சியை எதிர்த்து பெரும்பாலும் வேட்பாளர்கள் நிற்க மாட்டார்கள்.

இப்பொழுது லீயின் மகன் கோலோச்சுகிறார். நாட்டின் பரப்பளவு லீ குவான் யூ போட்ட பாதையில் விரிந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.

“ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை !” எனப்பட்ட சிங்கப்பூர், ‘பொருளாதாரப்புலி’ என்கிற பெயரை அவரின் பணிகளால் பெற்றது. எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்த சிங்கப்பூரின் நிஜ நாயகன் அவர்

அச்சமில்லை அச்சமில்லை- பகத் சிங்!


குல்தீப் நய்யாரின் எழுத்தில் பகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை வாசித்து முடித்தேன். இருநூற்றி சொச்சம் பக்கங்களில் ஒரு மகத்தான வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் நய்யார் கத்தி மேலாக நடப்பதான தருணங்களை முடிந்தவரை சிறப்பாகக் கடந்திருக்கிறார். தன்னளவில் புதிய ஆவணங்களைத் தேடி எடுத்தும், பகத் சிங்கின் வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்புடையவர்களைச் சந்தித்தும், பேட்டி கண்டும் நூலை ஆக்கியுள்ளார்.

பகத் சிங்கின் தூக்குதண்டனையைத் திட்டமிடப்பட்டதற்கு முன்னரே ஆங்கிலேய அரசு நிறைவேற்ற இறங்கிச் செயலாற்றிய இறுதிக்கணங்களில் நாமும் நிற்கிறோம். பகத் சிங்கின் சீப்பு, எழுதுகோல் என்று எதையாவது கொண்டுவந்து தங்களிடம் தரும்படி இருக்கிற மற்ற கைதிகள் பரக்கத் சிங் என்கிற தோழரிடம் கேட்கிறார்கள். லாகூர் காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார், “ஏன் உங்களைக் காத்துக்கொள்ள நீங்கள் வாதாடவில்லை?” என்று கேட்கிறார். பகத் சிங் தீர்க்கமாக, “புரட்சியாளர்கள் இறக்கத்தான் வேண்டும். எங்களின் இலக்கின் வலிமை எங்களின் இறப்பில் தான் இன்னமும் வலிமை பெறுமே அன்றி, அரசுக்கு வைக்கும் முறையீடுகளில் அது சாத்தியமாகாது.” என்றுவிட்டு தூக்கு மேடையை அடைகிறார்.

வித்யாவதி கவுருக்கு பகத் சிங் எழுதிய கடிதம் அவர் தீவிரவாதி அல்ல, தெளிவான கனவுகள் கொண்ட புரட்சியாளர் என்பதைக் காட்டுகிறது:
“ஒருநாள் இந்தத் தேசம் விடுதலை பெறும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை அம்மா. ஆனால், வெள்ளைக்கார துரைகளின் காலி செய்யப்போகும் இடத்தில் இந்திய துரைகள் உட்காரப்போகிறார்கள்.”

இறுதிக்கணங்களை நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது அமைதியாக லெனினின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தவரை அழைக்கிறார்கள். நேரு, போஸ் ஆகியோருக்கு தன்னுடைய நன்றிகளைத் தெரியப்படுத்திவிட்டு தூக்கு மேடையை அடைகிறார்கள். தன்னுடைய உறவுக்காரர்கள் இருவர் விடுதலைப் போரில் ஈடுபட்டு மரணமடைந்து அவர்களின் துணைவிகளைத் தவிக்க விட்டதால் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று அவர் முடிவு செய்கிறார்.

ஆரிய சமாஜத்தில் இளம் வயதில் பங்கேற்ற பகத் சிங் மதச்சார்பற்ற பார்வையிலேயே வளர்ந்தார். லாலா லஜ்பத் ராய் இந்து தேசியத்தைத் தூக்கிப் பிடித்த பொழுது அதை முற்றாக நிராகரித்தார். பகத் சிங்கின் கம்யூனிச ஈர்ப்பை பார்த்துவிட்டு, ‘போல்ஷ்விக் கைக்கூலி’ என்று அவர் வசைபாடினார். இந்து இந்தியா, முஸ்லீம் இந்தியா என்று இரண்டு இந்தியாக்களை உருவாக்க வேண்டும் என்கிற அவரின் கருத்தை பகத் சிங் கடுமையாகக் கண்டித்தார். இப்படி முரண்பாடுகள் இருந்தாலும் சைமன் கமிஷனை எதிர்த்து காந்தி விடுத்த அழைப்பின் பேரில் நடந்த போராட்டத்தில் லஜ்பத் ராயின் பின்னால் பகத் சிங் அணிவகுத்தார். அங்கே ஸ்காட் எனும் ஆங்கிலேய காவல்துறை அதிகாரியால் கடுமையாகத் தாக்கப்பட்டு லஜ்பத் ராய் ரத்த வெள்ளத்தில் மூழ்கிய கணம் அந்த மரணத்துக்குப் பழிவாங்க வேண்டும் என்கிற கனல் இவருக்குள் மூள்கிறது.

சன்யால் உருவாக்கிய இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தின் கூட்டம் கட்சியின் முக்கியப் பிரதிநிதி பகவதி சரண் வோக்ராவின் மனைவி துர்கா தேவியின் தலைமையில் நடைபெற்றது. தானே ஸ்காட்டைக் கொல்வதாகத் துர்கா தேவி சொன்னதைத் தோழர்கள் ஏற்கவில்லை. பகத் சிங், ராஜகுரு, சந்திர சேகர் ஆசாத், ஜெய் கோபால் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள். ஸ்காட் கொல்லப்பட்டான் என்கிற தலைப்பில் தங்களின் செயலுக்கான விளக்கத்தை அளிக்கும் பிரசுரத்தை பகத் சிங் தன்னுடைய கைப்பட எழுதினார்.

அதற்குமுன் ஸ்காட்டைப் பார்த்திராத ஜெய் கோபால் அவரை அடையாளம் காட்டும் வேலையை எடுத்துக்கொண்டார். அன்றைக்கு ஸ்காட் வராமல் போய் அடையாளம் மாறி சிக்னல் தரப்பட்டுச் சாண்டர்ஸ் எனும் சம்பவத்தில் தொடர்பில்லாத அதிகாரியை சுட்டுக்கொன்றார்கள். துரத்திக்கொண்டு வந்த சனன் சிங் எனும் காவல் வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார். துர்கா தேவியின் கணவர் வேடம் பூண்டு கல்கத்தா போகும் தொடர்வண்டியில் பகத் சிங் ஏறிய பொழுது துர்காவுடன் உரையாட வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தீர்மிகுந்த பெண்ணாகப் பார்த்த துர்காவுடன் உடனிருந்த அந்தக் கணங்கள் அவரைத் துர்காவுடன் இன்னமும் நெருக்கமாக்கின.

பகத் சிங்கின் அமைப்பின் செயல்பாடுகளுக்குக் காங்கிரஸ் தலைவர்களும் நிதி தந்தார்கள். பெரிய ஆச்சரியம் வங்கத்தின் அட்வகேட் ஜெனரலே ஒரு குறிப்பிடத்தகுந்த பணத்தை அனுப்பியது. பகத் சிங்குக்கு முன்னால் புரட்சிகரக் காரியங்களில் ஈடுபட்ட எந்த அமைப்புக்கும் தத்துவ ரீதியாகப் பெரிய பார்வை இருக்கவில்லை. ஆங்கிலேய அரசை ஆயுதப் புரட்சியின் மூலம் தூக்கி எறிவோம் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது. கதர் கட்சி மட்டும் ஓரளவுக்குத் தெளிவான இலக்கை கொண்டிருந்தார்கள். பொதுவுடமையின் பாதையில் நகர்வதே சரியான வழியாக இருக்கும். காங்கிரஸ் மேட்டுக்குடியினரை கொண்ட கட்சியாக இருக்கிறது. தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோரை சென்று சேரவேண்டும் புரட்சி என்று பகத் சிங் உட்பட்ட தோழர்கள் நினைத்தார்கள். சொந்தமாக ஆடையைக் கொண்டு வைத்துக்கொள்ளாமல் தங்களுக்குள் அதைப் பகிர்ந்து கொண்டார்கள்.

கடுமையான அதிகாரங்களைக் காவல்துறையிடம் தரும் ஆயுதச்சட்டத்தை ஆங்கிலேய அரசு நிறைவேற்ற திட்டமிட்ட பொழுது நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசிவிட்டு சரணடைவது என்று முடிவு செய்யப்பட்ட பொழுது கட்சியின் தூணான பகத் சிங்கை ஈடுபடுத்தும் எண்ணம் முதலில் சகாக்களுக்கு இல்லை. சுக்தேவ் பகத் சிங்கை நக்கல் செய்தார். “நீ புரட்சிக்கு தயாராக இல்லை பகத் சிங். ஒரு பெண்ணின் பிடியில் கட்டுண்டு இருக்கிறாய்.” என்று அவர் ஜாடைமாடையாகத் துர்கா தேவியின் மீதான பகத் சிங்கின் அன்பை குறிப்பிட்டார்.

தான் காதலில் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பகத் சிங் சுக்தேவுக்குப் பதிலளித்த கடிதத்தில் சொல்லவில்லை. ஆனால், எதை எப்பொழுது துறக்க வேண்டுமோ அதைப் புரட்சிக்காகத் துறப்பேன் என்று உறுதி தந்தார். அதே சமயம் மாஜினியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிடுகிறார். ஆட்சியைக் கைப்பற்ற நடத்திய முயற்சியில் எண்ணற்ற தோழர்களை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்த மாஜினியை அவர் மிகவும் காதலித்த பெண்ணின் கடிதம் காப்பாற்றியதை சொல்லிவிட்டு இப்படி எழுதுகிறார் பகத் சிங், “காதல் ஒரு மிருக வேட்கை அல்ல. அது மனித வேட்கை தான். அது இனிமையானது. அது என்றும் மிருக வேட்கை ஆகாது. காதல் எப்பொழுதும் ஒரு மனிதனின் குணத்தை உயர்த்தவே செய்கிறது. அது அவனைத் தாழ்த்துவது இல்லை. ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் காதலிக்கலாம். அவர்கள் தங்களின் வேட்கைகளைக் கடந்து தங்களின் புனிதத்தைக் காக்க வேண்டும்!” என்று முடிக்கிறார். அதோடு நில்லாமல் மத்திய சபையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் குண்டு வீசும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

காந்தியின் அகிம்சை ஆன்மாவின் பலத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது. தங்களின் போராட்டம் உடல் வலிமையையும் இணைத்துக்கொண்டு போராடுகிறது. காந்தி எண்ணற்ற மக்களை எழுச்சியுற செய்தாலும் அவர் ஒரு சாத்தியமில்லாத கனவு காண்பவர் என்பது பகத் சிங்கின் பார்வையாக இருந்தது. பகத் சிங் மற்றும் தோழர்கள் குண்டுகளை வீசிய பிறகு கம்பீரமாகச் சரணடைந்தார்கள். புரட்சி ஒங்குங்க என்று குரல் கொடுத்தபடி அவர்கள் அதைச்செய்தார்கள்.

வழக்கு நடைபெற்ற பொழுது தங்களைக் காத்துக்கொள்ள என்று எப்பொழுதும் அவர்கள் வாதடவில்லை. புரட்சி ஓங்குக என்று குரல் கொடுத்ததோடு, எப்படிக் குண்டுகள் தயாரிப்பது என்பது துவங்கி புரட்சி வகுப்புகள் போல நீதிமன்றத்தை மாற்றினார்கள் பகத் சிங் மற்றும் தோழர்கள். அரசு விழித்துக்கொண்டு அவர்களைக் கடுமையாகத் தாக்கச் செய்தது. கையில் விலங்கை விட விளக்க மறுத்த நீதிமன்றம் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டதால் பல நாட்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இல்லாமலே வழக்கு நடைபெற்றது.

பகத் சிங்கின் கையெழுத்தை வைத்தும், அப்ரூவராக மாறிய ஜெய் கோபால் முதலியோரின் வாக்குமூலங்களும் சேர்ந்து பகத் சிங்கை தூக்கு மேடைக்கு அருகில் சேர்த்தன. பாதுகாப்பு கமிட்டி ஒன்றை அமைத்துத் தன்னை விடுவிக்க முயன்ற தந்தை, ஆயுதம் ஏந்தி சிறையைத் தகர்க்க திட்டமிட்ட தோழர்கள் என்று சகலரையும் அப்படிச் செய்யக்கூடாது என்று பகத் சிங் தடுத்தார். தன்னுடைய மரணம் புரட்சியை உருவாக்கும், ஒரே வாரத்தில் இந்தியா விடுதலையடையும் என்பது அவரின் நம்பிக்கையாக இருந்தது.

சிறையில் அரசியல் கைதிகளுக்கு ஒழுங்கான வசதிகள் இல்லாமல் போனதற்கு எதிராக அமைதி வழியில் உண்ணா நோன்பு இருந்து போராடினார்கள் கைதிகள். பகத் சிங் அதை முன்னணியில் நின்று நடத்தினார். 116 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கடுமையாக அவர் மேற்கொண்டார். அன்றைக்கு விடுதலை என்கிற சூழலில் பதினைந்து வருடங்கள் சிறையில் இருந்த பாபா சோகன் சிங் என்பவர் உண்ணாநோன்பில் பங்குகொள்ள மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

ஜவகர்லால் நேரு உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லி காங்கிரஸ் சார்பாகக் கோரிக்கை வைத்தார். ஜின்னா மத்திய சட்ட சபையில் ஐரோப்பிய கைதிகள், இந்திய கைதிகள் என்று பாகுபடுத்துவதைக் கண்டித்தார். வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின்பு அந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது அதை உலகளவில் கொண்டு சேர்க்கும் என்பதால் மட்டுமே மேல்முறையீட்டுக்கு ஒத்துக்கொண்டார் பகத் சிங்.

ஜெய் கோபால், ஹன்ஸ்ராஜ் வோஹ்ரா முதலிய துரோகிகளாக மாறிய தோழர்களால் தூக்கு உறுதிப்படுத்தப்பட்டது. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருந்தது. பகத் சிங்கை காக்க வேண்டும் காந்தி என்பது பரவலான எண்ணமாக, எதிர்ப்பார்ப்பாக இருந்தது. பகத் சிங் காந்தி இர்வினோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அரசிடம் சலுகைகள் பெற்றால் அது மக்களிடம் தங்களின் மரணத்தோடு இணைந்து வெறுப்பை ஏற்படுத்தும் என்று கணக்கிட்டார்.

காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் பகத் சிங் பற்றிக் குறிப்பிடப்படாமல் போனதால் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. காந்தி பகத் சிங்கை காக்க எதுவுமே முயலவில்லை என்பது பரவலான எண்ணமாக இருந்தது. இர்வின் இப்படி எழுதியுள்ளார் “பகத் சிங் பற்றி என்னிடம் காந்தி பேசினார். அவர் விடுதலை அளிக்க வேண்டும் என்று கேட்காவிட்டாலும், தண்டனையைத் தள்ளிப்போடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.” என்று குறிக்கிறார். மீண்டும் நான்கு நாட்களுக்கு முன்னால் காந்தி-இர்வின் பிரபு சந்திப்பின் பொழுதும் இதே விஷயத்தைக் காந்தி எழுப்பியதை தன்னுடைய ‘fullness of days’ எனும் சுயசரிதையில் இப்படி எழுதுகிறார், “பகத் சிங் தூக்கிலிடப்பட்டால் அவர் ஒரு தேசிய வீரனாக மாறி விடுவார். மக்களின் எண்ணம் தவறாக முன்முடிவு கொண்டதாக மாறிவிடும். காந்தி இந்த விஷயத்தில் நான் ஏதேனும் பண்ணாமல் விட்டால் காந்தி-இர்வின் ஒப்பந்தமே அழிந்துவிடும் என்றார். நான் தண்டனையில் இருந்து பகத் சிங்கிற்கு விடுதலை அளிப்பது சாத்தியமில்லை.” என்றேன்.

இறுதி முயற்சியாகக் காந்தி பகத் சிங்கை தூக்கிலிட்ட நாளின் ஆரம்பக் கட்டத்தில் தூக்கை முன்னரே அரசு நிறைவேற்ற இருப்பது தெரியாமல் வைஸ்ராய்க்கு ஒரு நெடிய கடிதம் எழுதினார்: “நீங்கள் முடியாது என்று மறுத்தாலும் அமைதி வேண்டும் மீண்டுமொரு முறை நான் கேட்கிறேன். சரியோ, தவறோ பொது மக்களின் பெரும்பான்மை கருத்து தூக்கு தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்பதாக உள்ளது. எந்த அடிப்படையும் ஆபத்தில் இல்லாத பொழுது மக்களின் கருத்தை மதிப்பது நம்முடைய கடமை.
தண்டனையை ரத்து செய்தால் உள்நாட்டு அமைதி காக்கப்படும். அதை நிறைவேற்றினால் அமைதிக்கு ஆபத்து காத்துள்ளது.

இந்த உயிர்களைக் காப்பது எண்ணற்ற அப்பாவி உயிர்களைக் காக்கும்.
என்னுடைய தாக்கத்தை அது அமைதிக்குச் சாதகமாக உள்ளது என்பதால் நீங்கள் மதிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னுடைய நிலையை வருங்காலத்தில் பணியாற்றுவதற்குச் சிக்கல் நிறைந்ததாக மாற்றி விட வேண்டாம்.

தூக்கு தண்டனையை நிறைவேற்றினால் அதை மீண்டும் சரி செய்ய முடியாது. மிக மிகச் சிறிய அளவில் நீதி தவறாக வழங்கப்பட்டிருக்கும் என்று நீங்கள் கருதினால் கூடப் போதுமானது. இந்தத் தண்டனையை நீங்கள் ரத்துச் செய்ய வேண்டும் என்று நான் வாதிடுகிறேன்.

நான் நேரில் வரவேண்டும் என்றால் நிச்சயம் வருகிறேன். நான் திங்களன்று பேசவில்லை என்றாலும் நான் சொல்ல வேண்டியதை எழுதிக்காட்டுகிறேன்.
இப்படிக்கு,
உங்கள் நண்பர்
(காந்தி)

இதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்த் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் ‘எங்களைக் கைதிகள் போலத் தூக்கில் போடாதீர்கள். சுட்டுக்கொல்லுங்கள்.” என்று அரசுக்குக் கடிதம் எழுதியது காந்திக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆறு நாட்கள் முன்னரே இரவோடு இரவாகத் தூக்கிலிடப்பட்ட பகத் சிங் மற்றும் தோழர்களின் மரணம் ஒரு தேசிய எழுச்சியை உண்டு செய்தது. காந்திக்குக் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. போஸ் காந்தியுடன் கடுமையாக முரண்பட்டார். படேல், நேரு பகத் சிங்கின் தியாகத்தைப் போற்றிய அதே சமயம் வன்முறை பாதையை நிராகரித்தார்கள்.

‘ஒரு இறைநம்பிக்கையுள்ள இந்து மறுபிறப்பில் மன்னனாகப் பிறப்பேன் என்கிற நம்பிக்கையிலும், கிறிஸ்துவரோ, இஸ்லாமியரோ சொர்க்கத்தில் அற்புதமான வாழ்வு காத்திருக்கிறது என்றோ துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தியாகங்கள் செய்யலாம். என்னை மாதிரி ஒரு நாத்திகனுக்கு இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் இல்லை. மதத்தின் வார்த்தைகளில் சொல்வது என்றால் முழுமையான அழிவு அதனோடு ஏற்பட்டு விடுகிறது. என்னுடைய ஆன்மா ஏதுமற்றதாக ஆகிவிடுகிறது. பரிசு என்று எதையேனும் வாழ்க்கையில் நான் கருத துணிகிறேன் என்றால், இந்தச் சிறிய வாழ்க்கையில் நான் மேற்கொண்ட போராட்டமே எனக்கான வெகுமதி. சுயநலமான இலக்கோ, மரணத்துக்குப் பிறகு கவுரவிக்கப்படுவேன் என்கிற எதிர்பார்ப்போ இல்லாமல் என்னுடைய வாழ்க்கையை விடுதலைக்கு அர்ப்பணிக்கிறேன். இது போதும்!”- என்கிற பகத் சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன்’ நூலின் வரிகள் தான் எத்தனை பெருங்கனவு கொண்ட நாயகன் பகத் சிங் என்பதைப் புலப்படுத்தும்.

WITHOUT FEAR
KULDIP NAYAR
HARPER COLLINS
299
246 பக்கங்கள்

இந்து மத வரலாற்றை இந்துத்வவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி?


Wendy Doniger ‘ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து மதத்தைப் பற்றி எழுத வேண்டும்’ என்கிற தலைப்பில் எழுதிய The Times of India கட்டுரை:

வில்லியம் டால்ரிம்பிள் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திக்கொண்டிருந்த என்னுடைய லண்டன் உரையின் பொழுது என் மீது யாரோ ஒரு முட்டையை வீசினார்கள். ஆனால், சில முறை முயற்சித்தும் என் மீது சரியாக அவர்களால் முட்டையை எறிய முடியவில்லை. இந்தச் சம்பவத்தைத் தன்னுடைய இந்திய வரலாறு பற்றிய கட்டுரையில் விவரித்த டால்ரிம்பிள், “இந்தியாவுக்குள் இந்து வலதுசாரிகளால் கூட்டப்பட்ட கூட்டங்கள் அவ்வப்பொழுது கலைக்கண்காட்சிகள், நூலகங்கள், வெளியீட்டாளர்கள், திரைப்பட நிறுவனங்கள் ஆகியவற்றை அவர்களின் தேசபக்தியற்ற, இந்து எதிர்ப்பு செயல்பாடுகளுக்காகத் தாக்குவதாகச் சொல்லிக்கொண்டு செயல்படுவார்கள். தற்பொழுது இந்த மாதிரியான செயல்பாடுகள் உலகம் முழுக்க இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது. உலகின் பெரிய அறிவுச்சமூகத்தில் அமெரிக்க அறிஞர்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உள்ளார்கள். ஆனாலும், எங்களுக்கும் சிக்கல்கள் உள்ளன. அமெரிக்க அறிஞர்களான ஜெப்ரி க்ரிபால், பால் கோர்ட்ரைட், ஜிம் லேயின் ஆகியோரின் புத்தகங்கள் இந்தியாவில் தாக்கப்பட்ட பொழுது அவற்றின் இந்தியப் பிரதிகள் ஒடுக்கப்பட்டன. அமெரிக்காவிலும் இவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன/

நான் முன்பெல்லாம் இந்து மதத்தைப் பற்றி உரையாற்றினால் அந்த உரையின் முடிவில் ஒரு மூத்த இந்து ஆண் (எப்பொழுதும் ஆண் தான்) எழுந்து, என்னைப் பெரிய அளவில் புகழ்ந்த பின்னர், ஒரு மினி-லெக்சரை நிகழ்த்துவார். பல சமயங்களில் கற்றறிந்த ஒன்றாகவும், சில சமயம் தலைப்புக்கு பொருந்துவதாகவும் அது அமைந்திருக்கும். அவை இந்த அமெரிக்கப் பெண்ணுக்கு தெரியாத விஷயங்கள் எனக்குத் தெரிந்திருக்கின்றன என்று காட்டும் பாணியில் இருக்கும். அதில் எந்தத் தவறும் இல்லை. தன்னுடைய இந்து மதத்தின் மீது தன்னுடைய அறிவும், ஆளுமையும் அதிகப்படியானது என்று அவர்கள் நிறுவ முயல்கிறார்கள். தங்களுடைய இந்து மதத்தை, இந்துக்களைத் தற்காத்துக்கொள்ள அவர்கள் முனைகிறார்கள். அவர் மதிக்கத்தக்க, ஆர்வம் தரும் ஒன்றை சேர்க்கிற பொழுது, உரைக்குப் பின்னரும் ரிசப்சனில் இருவரும் உரையாடிக்கொண்டு இருப்போம். சமயங்களில் அது வெறும் சடங்காகவே, தொடர்பில்லாத ஒரு உரையாடலாக இடத்தை அடைத்துக்கொள்ளும் ஒன்றாக அமைந்திருக்கும். சமீபத்திய குறிக்கீடுகள் இவற்றில் இருந்து மாறுபட்டு தீய நோக்கம் கொண்டவையாக உள்ளன. இணையத்தில் உள்ள நபர்கள் அந்த மூத்த ஆண்களைப் போலக் கற்றவர்கலகவோ, நாகரீகம் கொண்டவர்களாகவோ இருப்பதில்லை. அந்த மூத்தோரை இப்படி மிஸ் செய்வேன் என்று அப்பொழுது எண்ணியதில்லை. அவர்களில் சிலர் என்னுடைய உரைகளில் தென்படுகிற பொழுது சற்றே நிம்மதியாக இருக்கிறது.

இந்து மதத்தைப் பற்றிய இந்துக்கள் அல்லாதவர்கள் எழுதும் புத்தகங்களை எதிர்க்கும் இந்துக்கள் மூன்று அடிப்படையான சிக்கல்களில் கவலை கொண்டு இருக்கிறார்கள்:

1. இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள் அல்லாதவர்களே பெரும்பாலும் எழுதுகிறார்கள் ;

2. இந்துக்கள் அல்லாதவர்கள், சமயங்களில் இந்துக்களும் கூடத் தவறான இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள்;
3. முக்கியமான அறிஞர்கள் (இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள்) ஆய்வுப் பார்வையிலேயே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்களே அன்றி நம்பிக்கையின் பார்வையில் எழுதுவதில்லை.

இந்த மூன்று சிக்கல்களும் பல சமயங்களில் தவறாகப் பூதாகரம் ஆக்கப்பட்டும், உண்மையான சிக்கலை மழுங்கடித்து, ஏற்கனவே குழம்பிய குட்டையை இன்னமும் குழப்புகிறது. ஒவ்வொரு சிக்கலாக இங்கே பேசுவோம்.

Non-Hindus rather than Hindus are writing about Hinduism.
என் மீது முட்டை எறியப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு
டார்லம்பில் இப்படிச் சொன்னார், “அந்த உரைக்குப் பிந்தையைக் கேள்வி நேரத்தில் முட்டை எறிபவனோடு வந்திருந்த குழு வென்டி டோனிங்கரை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள். தொடர்ந்து இந்து அல்லாத ஒருவர் தங்களுடைய மதத்தைப் பற்றிக் கருத்து சொல்ல தகுதியவற்றவர் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது.” இந்துக்கள் மட்டுமே இந்து மதத்தைப் பேச வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்துவர்களும், யூதர்களும் கிறிஸ்துவம், யூத மதம் ஆகியவற்றின் எழுத்துக்களைப் பெரும்பாலும் கட்டுப்படுத்துவதாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாகத் தங்கள் மதத்தைப் பற்றிய கருத்துக்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். (கிறிஸ்துவர்கள் மட்டுமே தங்கள் மதத்தைப் பற்றிய கருத்துக்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது உண்மையில்லை. பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு இந்துக்கள் குறிப்பாக ராம் மோகன் ராய், சுவாமி தயானந்தர் முதலியோர் கிறிஸ்துவத்தின் மீது தீவிரமான விமர்சனங்களை வைத்துள்ளார்கள். (அவற்றில் பெரும்பாலானவை உண்மையானவை.) இவர்களின் இந்தக் கவலையை நாம் கரிசனத்தோடு அது ஒரு அரசியல் கவலை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

முதல் எதிர்ப்புக்கு பதில்:

இந்துக்கள் அல்லாதவரே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள் என்பது உண்மையல்ல. இரு குழுக்களும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளன. இந்துக்கள் இந்து மதத்தைப் பற்றி Iபுத்தகங்கள் எழுதுவதில் பல்வேறு அனுகூலங்கள் உள்ளன. இந்துக்களுக்கு மட்டுமே தெரிந்த இந்து மதம் பற்றிய விஷயங்கள் இந்த நூல்களில் இடம்பெறும். என்னைப் போல இந்து மதத்தைப் பற்றிக் கற்பவர்களும், அதைக் கற்பிக்கும் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து மதத்தின் பண்டைய மூலங்கள், இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் எழுதிய அற்புதமான நூல்களைப் படித்து எழுதவும், பாடம் நடத்தவும் செய்கிறோம். சில இந்துக்கள் இதற்கு எதிராக இந்துக்கள் அல்லாத அறிஞர்கள் எழுதிய நூல்கள் மட்டுமே மூடிய குழுவாக இயங்கும் பதிப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆதரிக்கிறார்கள். இவற்றை இந்து அறிஞர்கள் உடைக்க முடியாது என்று அவர்கள் சொல்லக்கூடும். அதில் ஒரளவுக்கு உண்மை கடந்த காலத்தில் இருந்தது என்றாலும், தற்பொழுது அது பெருமளவில் குறைந்துவிட்டது. மேலும், மேலும் அற்புதமான பல நூல்களை இந்து அறிஞர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றை நாடு முழுக்க வகுப்புகளில் பயன்படுத்தவும் செய்கிறோம். .

சில இந்துக்கள் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளில் தங்களுடைய கல்வியை முடித்து இந்திய ஆய்வுமுறைகள், மற்றநாட்டு ஆய்வுமுறைகள் இரண்டிலும் தேர்ச்சி பெறுகிறார்கள். இவர்கள் இரட்டை நோக்கு கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். ஏ.கே.ராமானுஜன் வார்த்தைகளில் இந்த இந்தோ-அமெரிக்கர்கள் இந்திய, இந்தியர் அல்லாத அறிவுஜீவி உலகினில் வாழ்கிறார்கள். இரண்டு உலகங்களைச் சேர்ந்த அறிவு ஜீவிக்களாலும் நிச்சயம் எழுத முடியாத புத்தகங்களை இவர்கள் எழுதுகிறார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை ராமாயணம் பற்றி ஏ.கே.ராமனுஜன் எழுதிய முக்கியமான கட்டுரையைப் பாடப்புத்தகங்கள், ஆக்ஸ்போர்ட் தொகுப்பு ஆகியவற்றில் இருந்து நீக்க நடந்த முயற்சிகளும், அந்த எதிர்ப்புகள் ஆற்றல், வெற்றி ஆகியவற்றை மீறியும் அந்தக் கட்டுரை காப்பற்றப்பட்டது இந்திய ஜனநாயகம் உயிர்த்திருப்பதன் மீதான நம்பிக்கையின் அடையாளம்.

நாம் இந்த வகையான அறிஞர்களைப் புகழ்வதால் வெறுமனே இரு கலாசாரக் கல்வி கொண்ட இந்துக்கள் மட்டுமே நூல்களை எழுத வேண்டும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. உள்ளிருந்து ஒரு விஷயத்தை அனுகுபவரின் எழுத்தில் உள்ள நியாயத்தை நான் நிச்சயம் மறுக்க மாட்டேன். ஆனால், அதனுடன் கூடுதலாக வேறு ஆக்கங்களும் எழவேண்டும் என்பேன். இந்துக்கள் தங்களின் மதத்தைப் பற்றி வெளிப்படுத்துவது கட்டாயமான அடிப்படை; அதே சமயம் அவர்களின் கருத்தை மட்டுமே ஏற்க வேண்டும் என்பது மதத்தைப் பற்றிய ஆய்வுப்பூர்வமான வாசிப்பின் அடிப்படைக்கூறுகளைச் சேதப்படுத்தும்.

இந்து மதத்தைப் பற்றி இந்து அல்லாதவர் எழுதும் நூலிலும் சாதகங்கள் உள்ளன. அவர்கள் இந்து மதத்தைப் பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி மார்க்ஸ், ப்ராய்ட், டெர்ரிடா, எட்வர்ட் செட் முதலியோர் பார்வையில் பார்க்க முனைகிறார்கள். இது பயன்மிக்க ஒரு இடைவெளியை சாதிக்கிறது. எந்த இந்துவும் முழுமையாக எல்லா வகையான இந்து மதங்களையும் தெரிந்திருக்கவோ, அவை அனைத்துக்கும் தானே பிரதிநிதியாகவோ திகழ முடியாது. இந்துக்களின் மதம் பற்றிய மாறுபட்ட அறிவு சார்ந்த ஆய்வு, புரிதல் ஆகியவற்றை இந்துக்கள் அல்லாத அறிஞர்கள் திறக்க முடியும். இவை இரண்டிலும் சாய்வான நிலைப்பாடுகள் நிச்சயம் உள்ளன. இரண்டு சாய்வான ஆய்வுகளும் ஒன்றுகொன்று ஏற்படுத்தும் தாக்கத்தைச் சரிசெய்து கொள்ளும். ஆனால், அடுத்தக் குற்றச்சாட்டு உள்ளது

சில இந்துக்கள் அல்லாதவர்கள் (சமயங்களில் இந்துக்களும்) தவறான இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள்.

இந்துத்வவாதிகள் பேச மட்டும் விரும்பவில்லை. அவர்கள் தாங்கள் சொல்வதைக் கேட்க வைக்கவும் விரும்புகிறார்கள். இந்து மதத்தைப் பற்றிக் கேட்க விருப்பமில்லை என்பவர்களை அமைதிப்படுத்தவும் அவர்கள் இயங்குகிறார்கள். அமெரிக்கர்கள் (சில அமெரிக்க இந்துக்கள் உட்பட) தங்களின் மதத்தைப் பற்றிச் சொல்லும் குறிப்புகளைத் தங்கள் பார்வையில் இந்து மதத்தைத் தொடர்ந்து அவமதிக்க வெளியிடுவதாகக் கருதுகிறார்கள். ஆகவே, அவற்றை அவர்கள் தவிர்க்க செயல்படுகிறார்கள். அவர்கள் சொல்வதில் ஓரளவுக்கு நியாயம் இருக்கவே செய்கிறது. பல்வேறு அமெரிக்கக் கல்ட்கள் தங்களை இந்து மதத்தின் அடிப்படையில் ஆனவை என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை மலிவான ஒன்றாக, தவறான ஒன்றாகக் காட்டியுள்ளன. தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொள்ளும் இவை பெரும்பாலும் தாந்த்ரீக ரீதியிலானவை மட்டுமே.

டேவிட் கார்டன் வைட்டின் வரிகளில். ” இந்த அமெரிக்கர்கள் புது யுக தாந்த்ரீக செக்சை மிக மோசமான முறையில் இந்திய பாலியல் கூறுகள், பாலியல் கலைகள், மசாஜ் முறைகள், ஆயுர்வேதம், யோகா ஆகியவற்றை இணைத்து ஒரே பாரம்பரியமாகக் கட்டமைக்கிறார்கள்” . “ஆகவே, இடைக்காலத் தாந்த்ரீகம் புது யுக தாந்த்ரீகத்துக்கு அடிப்படை என்பது கைரேகைப் பதிவு எப்படி நவீன ஓவியத்துக்கு அடிப்படை என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு உண்மை”

“கேளிக்கைக் கூடாரமாகத் திகழும் நவீன காலத் தாந்த்ரீகத்தை இந்தியாவைச் சேர்ந்த குருக்கள், பயிற்றுநர்கள் மேற்கின் அறிஞர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டு மேற்கைச் சேர்ந்த தாகம் மிகுந்த சீடர்களுக்குக் கிழக்கின் மாயங்களைக் காட்டுவதாகச் சொல்லி விற்கிறார்கள்.” என்று வைட் பொரிந்து தள்ளுகிறார். இந்த மாதிரியான சிதைக்கப்பட்ட பார்வையை ஏன் இந்துக்கள் எதிர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

பெரிய முரண் என்னவெனில் இந்தியாவே இந்தியாவைப் பற்றிய மேற்கின் தவறான பார்வைக்கான மூலமாக இருப்பது தான். இந்துத்வவாதிகள் சிருங்கார ரசம் இல்லாத இந்துமதத்தை வரலாற்றில் தேடி எடுக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக உபநிஷதங்களில் இருக்கும் சன்யாசம் பற்றிய குறிப்புகள், பதினோராம் நூற்றாண்டில் அபிநவகுப்தர் தாந்த்ரீகம் பற்றி அளித்த விளக்கம், விக்டோரியா ராணி காலத்தில் பதினோராம் நூற்றாண்டு இந்து மதம் மீது ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் இந்து மதத்தில் பாலியல் வேட்கைக்கு இடமில்லை என்று நிறுவ முயல்கிறார்கள். இந்துத்வவாதிகள் காமத்தை, பிராய்டை (அவரைக் காமம் பற்றி மட்டுமே பேசியவர் என்று தவறாக எண்ணிக்கொண்டு) எதிர்க்கிறார்கள். கூடவே காமசூத்திரம், இந்து மதத்தின் பாலியல் பக்கங்களை, அதனுடைய உணர்ச்சிகரமான பகுதிகளை எழுதும் என்னைப் போன்ற எண்ணற்ற அறிஞர்களை நிராகரிக்கிறார்கள். தங்களுடைய மதத்தில் இருக்கும் சிருங்கார ரசம் சார்ந்த கூறுகளை இந்துக்களே மறுதலிக்கிற அளவுக்குச் சிக்கலான உளவியல், வரலாற்றுக்காரணிகள் வளர்ந்துள்ளன. இது அவர்களின் நகைச்சுவை உணர்வை அற்றுப்போகச் செய்துள்ளது. சமஸ்க்ருத இலக்கியத்தில் இருக்கும் நகைச்சுவை, அங்கதம் ஆகியவற்றை ரசிக்காமல் அவற்றை இந்து மதத்தை அவமதிப்பதாகப் புறக்கணிக்கிறார்கள். இந்து மதத்தின் மகத்தான பண்பே தன்னுடைய கடவுள்களையே கேலி செய்யும் அதன் திறன் தான். அதனையே இவர்களின் செயல்களால் இழப்பது அவமானமான ஒன்றாகும்.

இரண்டாவது எதிர்ப்புக்குப் பதில்:
இந்து மதத்தை ஒற்றையான, குறுகலான ( அதன் சிருங்கார ரசத்தை நீக்கிய ) மதமாக வாசிப்பது என்பது கிறிஸ்துவத்தைப் பற்றி ஒரு நூலை எழுதி அதில் எல்லாக் கிறிஸ்துவர்களும் டார்வின் சொன்னது தவறு என்று முழுமையாக நம்புகிறார்கள். இறைவன் ஏழே நாளில் உலகத்தைப் படைத்ததே உண்மை என்று அவர்கள் அனைவரும் நம்புகிறார்கள் என்பது போலத்தான்.

இந்த மாதிரியான தவறான இந்துமதத்தின் மீதான கருத்தியல் சாய்வு இந்துக்கள் அல்லாதவர்கள் மீதான இனவெறியை விட மோசமானது. இந்தக் கருத்தியல் சாய்வு சம்பந்தப்பட்ட அறிஞர் தங்கள் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதோடு தங்களின் கருத்தையே மீண்டும் ஓத வேண்டும் என்று விரும்புகிறது. இதனால் தான் பக்தி மிகுந்த இந்துவாகத் திகழ்ந்தாலும் ஆய்வுப் பார்வையை மாற்றிக்கொள்ளாமல் இயங்கும் இந்து மதத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் இந்துத்வவாதிகள் இனவெறியோடு செயல்படுவதாக நிராகரிக்கிறார்கள்.

மூன்றாவது எதிர்ப்பு:
முக்கியமான அமெரிக்க அறிஞர்கள், இந்துக்கள் (அ) இந்துக்கள் அல்லாதவர்கள் அறிவுப்புலத்தில் இருந்தே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்களே அன்றி நம்பிக்கை சார்ந்து இந்து மதம் பற்றி எழுதுவதில்லை:

இது உண்மையே. அது நல்ல விஷயமும் கூட. ஒரு மதத்தைப் பற்றி எழுதக் கிளம்பி உள்ள ஒரு ஆசிரியர் அதனைப் பற்றி நேரிடையாகத் தெரிந்து கொள்வது தெளிவு பெறும் திட்டத்தின் அடிப்படையான, அவசியமான கூறை மீறுவதாகும். ஒரு மதத்தைப் பற்றி வேறொரு மதத்தில் நேரடி அனுபவமுள்ள ஒருவராகவும் எழுதக்கூடாது. ப்ரோட்டஸ்டன்ட் பார்வையில் இந்து மதத்தை எழுதுவதைச் செய்யக்கூடாது. இது வெகுகாலமாக நடந்து வந்துள்ளது. அதுவே இணையத்தில் இந்துக்களிடையே கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது. இந்துவின் பார்வையில் இந்து மதத்தை எழுதக்கூடாது. இந்து மதத்தை ஆய்வுப்பார்வையில், அறிவுத்தளத்தில் நோக்கி எழுத வேண்டும். இந்து மதத்தின் பல்வேறு வகையான உருவங்கள் உயிர்த்து உள்ளன. உலகம் முழுக்க அவை பரவியுள்ளன. அவற்றில் வெகு சிலவே அறிஞர்களுக்குத் தெரிந்துள்ளன. சில பக்தர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக உள்ளது. இவை இரண்டும் அவ்வப்பொழுது சந்திக்கவும் செய்கின்றன. ஆனால், ஒரு அறிஞர் பக்தரும் கூட, ஆனால், எழுதுகிற பொழுது அறிஞர் என்கிற ஆடையை அணிந்துகொள்பவர் அவர்.

இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு எனும் ஆசிரியரின் நூல் வலதுசாரிகள் எதிர்ப்பால் பென்குயின் நிறுவனத்தால் இந்தியாவில் இருந்து திரும்பப் பெறப்பட்டது.
மூலம்: http://timesofindia.indiatimes.com/…/articlesh…/46571491.cms

WENDY DONIGER Mircea Eliade Distinguished Service Professor of the History of Religions; also in the Department of South Asian Languages and Civilizations, the Committee on Social Thought, and the College

மொழிபெயர்ப்பு: பூ.கொ. சரவணன்

டாப் 100 அறிவியல் மேதைகள், டாப் 200 வரலாற்று மனிதர்கள் – நூல் அறிமுகம்


காந்தி, நேரு, பெரியார், அம்பேத்கர்… என இந்தியத் தலைவர்களில் தொடங்கி, உலகத் தலைவர்கள், விஞ்ஞானிகள் வரை இந்த உலகத்துக்கு கொடுத்துச் சென்றிருக்கும் புதையல்கள் ஏராளம். அந்தப் புதையல்கள் பற்றியும் அதைக் கொடுத்தவர்கள் பற்றியும் தெரிந்துகொள்ள, தேடல் உள்ளவர்களுக்குச் சரியான தீனியாக, இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

சுட்டி விகடனில், ‘ஒரு தேதி ஒரு சேதி’ மூலம், பூ.கொ.சரவணன் தினந்தோறும் ஒரு தகவல் கூறினார் அல்லவா? அவை, புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.


டாப் 200 வரலாற்று மனிதர்கள்!

மனிதர்களின் போராட்டங்களினாலும் சாதனைகளாலும்தான் வரலாறு எழுதப்படுகிறது. அப்படி வரலாற்றில் இடம்பிடித்த 200 மனிதர்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர், ஏ.ஆர்.ரகுமான், பாப் மார்லி, மகேந்திர சிங் தோனி, புதுமைப்பித்தன், கலீல் ஜிப்ரான் எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பற்றிய சுவையான தகவல்களையும் அள்ளித் தருகிறது. தேச விடுதலைக்காக இன்னுயிர் அளித்த பகத் சிங், தூக்கு மேடையை எதிர்நோக்கி இருந்த நாட்களில், தன் அம்மாவுக்கு கடிதம் எழுதினார். அதில், “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. என் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில், என் மரணத்தின் விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும்” என்று எழுதியிருக்கிறார்.

இப்படி ஒவ்வொருவருடைய தகவல்களும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.

டாப் 100 அறிவியல் மேதைகள்!

மனிதர்களின் வளர்ச்சியில், அறிவியல் கண்டுபிடிப்புகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. நம் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கும் பொருட்களைக் கண்டுபிடித்த 100 அறிவியல் மேதைகளைப் பற்றி பேசுகிறது இந்தப் புத்தகம்.

1948-ம் ஆண்டு. மனிதனின் மூதாதையராகக் கருதப்படும், சுமார் 17 மில்லியன் ஆண்டுகள் பழைமையான குரங்கின் மண்டை ஓட்டைக் கண்டறிந்த தொல்பொருள் ஆய்வாளர் மேரி லீகே, மண்டை ஓட்டின் சிதறிய பல்வேறு பாகங்களைப் போராடி ஒன்று சேர்த்தார் என்ற செய்தி, இந்த நூலின் சிறப்புக்கு ஒரு பதம்.

இந்த இரண்டு புத்தகங்களுக்கும் நீங்கள் செலவிடும் நேரம், உங்கள் வாழ்க்கைக்கான மூலதனம்.

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

விலை: ரூ.240

டாப் 100 அறிவியல் மேதைகள்

விலை: ரூ.140

விகடன் பிரசுரம்,

757, அண்ணா சாலை,

சென்னை-600 002.

ஆன்லைனில் வாங்க:
http://books.vikatan.com/index.php?bid=2278
http://books.vikatan.com/index.php?bid=2277

நன்றி: சுட்டி விகடன்

கற்பைக் காக்கும் கையேடு!


இன்றைக்கு நம் எதிர்வீட்டுக்காரனை காப்பாற்ற வேண்டும்
அவன் செய்த பேருந்து சீண்டல்களை
அந்த இருக்கையிலேயே விட்டுவிடுங்கள்.
தெருமுனையில், கல்லூரியில், பேருந்து நிறுத்தத்தில்
பெண்களை நோக்கி வீசிய சொல்லம்புகளின்
ரத்தக்கறைகளை ‘நாட்டு மான’ குழிகளில் புதைத்து
‘கற்பு தேச’க்கொடிகள் பறக்கவிட்டு
கபடக்கண்ணீர் வடித்தபின்
நீலப்படம் பார்த்து
மனைவியினை அறைந்துவிட்டு
மகளினைக் கடிந்து
எதிர் இருக்கை பெண்ணின்
அந்தரங்கங்கள் அலுவலக க்ரூப்பில்
அலசிவிட்டு
படுத்து உறங்கையில்
பல நூறு பெண்களின் பிணங்கள்
சரிந்த பூமியில்
எப்பொழுதும் போல்
கண்மூடி நிற்கிறார் கடவுள்
காலை விடிகையில் வன்புணர்வுச் செய்திகளில்
‘பாவம் அவன் என்ன பண்ணுவான்!’
என்று உச் கொட்டுகையில் காய்ந்து எரிக்கத்தான்
மறந்துவிடுகிறது சூரியன்
ஆணாக இருப்பதால் இருக்கலாம்

தமிழன் இருக்கானே மச்சி! – ஒலிப்பதிவு


‘தமிழன் இருக்கானே மச்சி!’ என்கிற உரை பல்வேறு காரணங்களுக்காக மறக்க முடியாத ஒன்று. SSN College Of Engineering கல்லூரியில் இதோடு மூன்றாவது முறையாக நான் தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் பங்குகொள்கிறேன். முதலில் நடுவராக, அடுத்து கடந்த ஆண்டு சாரல் தமிழ் மன்றம் துவக்க விழா smile emoticon இன்றைக்கு Instincts கலைத்திருவிழாவின் தமிழ் நிகழ்வுகளை துவங்கி வைத்தேன்.

ஐம்பது நிமிடங்கள் நீண்ட அந்த உரையில் தமிழர்கள் இந்தி பேசாததால் இந்தியர்கள் இல்லை, தமிழர்கள் வியாபாரத்தில் திறன் குறைந்தவர்கள், சினிமா நடிகர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள், பிரிவினைவாதிகள், விடுதலைப் போரில் பெரிய பங்களிப்பு தராதவர்கள், உணர்ச்சிகரமானவர்கள்,விளம்பரப் பிரியர்கள், தன்மானம் இழந்து காலில் விழுபவர்கள், தமிழ்க்கலாசாரத்தில் காதலுக்கு இடமில்லை, சங்ககாலத்தில் மது அருந்தும் பழக்கம் இல்லை, தமிழ்நாடு ஊழலின் உச்சம், தமிழர்கள் இந்திய தேசியத்துக்கு எதிரானவர்கள் முதலிய கருத்துக்களுக்கு மாற்றுப்பார்வைகளை தந்தேன். திராவிடக் கட்சிகளால் வீழ்ந்தோம், மதவாதம் ஏன் தமிழ் நாட்டில் வேரூன்ற முடியவில்லை என்பதை சொல்ல நினைத்து தவறவிட்டு விட்டேன். மற்றபடி பெரும்பாலும் நிறைவைத் தந்த உரை. அதிலும் கிட்டத்தட்ட முப்பது முறை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்திய அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நெகிழ வைத்தார்கள் என்றால், விழா முடிந்த பிறகு நாற்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனித்தனியாகவும் , இளைஞிகள் குழுவாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

கனத்த விஷயங்கள், நாற்பது ஆண்டுகால அரசியல், சங்ககால அம்சங்கள், வரலாறு, புவியியல் சார்ந்த பார்வைகளை நகைச்சுவை கலந்து ஐம்பது நிமிடங்களில் பதினெட்டு-இருபத்தி ஒரு வயது நண்பர்களுக்கு தந்தது தைரியமான முயற்சி. சில போதாமைகள் இருந்தாலும், என்னுடைய மிகச்சிறந்த பேச்சுக்களில் ஒன்று smile emoticon

Vishnu Varatharajan, Vignesh Kr, Thamil Thedal ஆகியோருக்கும் ஏனைய SSN – Institutions அன்பர்களுக்கும் நெகிழ்வான நன்றிகள். ஈரோட்டில் இருந்து என் பேச்சைக் கேட்க வந்து முடிந்த பின்பு பாராட்டிய அந்த தோழருக்கும் நன்றி.

Here it is :This speech tries to debunk myths on Tamil, Tamilians, Tamilnadu. A fifty minute delight in a college boy language coupled with history, language, sociology, political science perspectives…

ஐம்பது நிமிடங்களில் கல்லூரி மாணவர்களின் மொழியில் நிகழ்த்தப்பட்ட ‘தமிழன் இருக்கானே மச்சி!’ உரையின் ஒலிப்பதிவு…

அவர்கள் இருக்கிறார்கள்!


அணிகிற உடையின் உயரத்தை
அரைநிர்வாண சாமியார்கள் நிர்மாணிக்கிறார்கள்
எதைப் பெருக்க வேண்டும்
எனச்சொல்லாமல் துடைப்பத்தைத் தந்துவிட்டுப் படம் எடுக்கிறார்கள்
பெற வேண்டிய பிள்ளைகளின்
எண்ணிக்கையை எல்லாம் அறிந்த ஆன்மிகவாதிகள்
தெரிவிக்கிறார்கள்
உண்ண வேண்டியதை ஊசிப்போன
சட்டங்களைத் தூசுதட்டி முடிவு செய்கிறார்கள்
பார்க்க வேண்டிய படங்களின்
பட்டியலை, கேட்க வேண்டிய வசனங்களை
பார்த்து பார்த்துச் செய்து பரிதவிக்கிறார்கள்
படிக்க வேண்டியதை பெருங்கதைகள்
சொல்லி நிறைக்கிறார்கள்
யாருடன் சேர்ந்து சுற்ற வேண்டும் என்று
சுற்றறிக்கைகள் விடுகிறார்கள்
தின்பது
கண்ணயர்வது
காண்பது
களிப்பது
கலப்பது
குளிப்பது
கழிப்பது
என்று அனைத்தையும் நமக்காகக் கவனித்துக்கொள்ள யாரோ
இருக்கையில் கவலையற்று குப்புறப்படுத்து
தூங்குங்கள்