காது கொடுத்து கேளுங்கள்!


மனிதர்கள் பேசப் பேச கவனிப்பது எத்தனை சுகமானது என்று உங்களுக்குத் தெரியுமா? மேடைகளில் வளவளவென்று பேசுகிற பொழுது கூடக் கீழே தாங்கள் பாட்டுக்கும் ஒரு உலகத்தில் பேசிக்கொண்டு இருக்கும் தோழர்களைக் கவனித்து என்ன பேசுவார்கள் என்று யோசித்திருக்கிறேன். சமயங்களில் தலைப்பையே மறந்துவிட்டு அவர்களின் பேச்சுச் சுவாரசியத்தில் பங்கு கொண்டது உண்டு.

இணைப்பு வேலைகளில் ஈடுபடுகிற பொழுது பல மணிநேரம் ஒரே விஷயத்தை இரு பக்கத்தில் இருந்தும் விவரிப்பது பல ஹாலிவுட் திரைக்கதை பாணியை மிஞ்சி மண்டையைச் சுழற்றும். ஆனாலும், அப்பொழுது காட்டுகிற அதீத பொறுமை எங்கிருந்து எனக்கு வரும் என்று இப்பொழுதும் புரிவதில்லை. அவர்கள் அவ்வளவு நேரம் பேசிக்கொண்டே செல்வது கூடச் சிக்கல் இல்லை, “நான் ரொம்ப மொக்கை போட்டு கொல்றேனா? ” என்று கேட்கிற கணத்தில் தான் அவ்வளவு வலிக்கும். cry emoticon

குடித்துவிட்டு நள்ளிரவு இரண்டு மணிக்கு அழைத்துப் பேசும் பொழுதுதான் மற்ற நேரங்களில் கரடுமுரடாக இருக்கும் நண்பனிடம் அத்தனை அன்பு மண்டிக்கிடப்பது தெரியும். எப்பொழுதுமே அன்பைக்காட்டி பார்க்காத எத்தனையோ நண்பர்களின் அப்பாமார்கள் அவனைத் தூங்கச்செய்துவிட்டு, “கிளம்புறானில்லையா? ரொம்ப வலிக்குது…” என்கிற வரியை வெவ்வேறு பாணியில் சொல்கிற பொழுது என் அப்பாவும் அப்படி எத்தனை நாள் எண்ணியிருப்பாரோ என்று மனம் யோசித்திருக்கிறது.

ஏழு வருடக்காதலை முடித்துவிட்டு ஒரு மாத இடைவெளியில் காதலனோடு பேசிய புன்னகை நிறைந்த அழுகை புதைத்த கதையைச் சொன்ன தோழியிடம், “அவனைக்கொன்னுடவா?” என்று நான் கேட்கையில், “நானே நிறையவாட்டி கொன்னுட்டேனே” என்கையில் அத்தனை நேரம் கேட்ட கதையோடு முடிந்திருக்கக்கூடாதா அந்த உரையாடல் என அரற்றி அச்சடிக்கத் தான் இயல்கிறது.

“அவனுக்குப் பெரிய தொல்லையே நீ தான்!” என்று எக்குத்தப்பாகச் சித்துவிடம் நிகழ்வின் முடிவில் முக்கியமான கேள்வியைக் கேட்கும் காம்பியர் போலக் கேட்டுவிட்டு இரண்டு மணிநேரம் அழுதுகொண்டே என் பேலன்ஸ் முழுக்கத் தீர்த்த தங்கை இன்னமும் ஒன்றரை வருடம் கடந்தும் பேசிக்கொண்டே செல்கிறாள். கேட்டுக்கொண்டே இருக்கிறேன் நான் smile emoticon

அன்று கல்லூரி பிரிவுநாள். எல்லாரிடமும் மாறாத புன்னகை ததும்பப் பழகும் அந்த நண்பனிடம் நான் சிரித்துக் கூடப் பெரும்பாலும் பேசியதில்லை. பாடங்கள் சொல்லித்தருகிற பொழுது அவன் வெளியேறி அலைபேசி அழைப்பை பேசிவிட்டு வருகையில் கடிந்து கொள்வதை அடிக்கடி செய்திருக்கிறேன் நான். அவன் என்னைப்பற்றி மனம்விட்டு வருத்தத்தோடு பேசிய அந்தப் பிரிவு உபசார நாளில் அப்பொழுது வருத்தமாக இருந்தாலும் அவனை எப்பொழுதும் வெறுத்தது இல்லை என்று சொன்னதே இல்லை. அவனின் அழகான உலகத்தின் கதைகளைக் கேட்டதே இல்லை. இப்பொழுது மொத்தமாக அவன் இருபத்தி மூன்று வயதில் உறங்கி விட்ட நிலையில் நள்ளிரவு இரண்டு மணிக்கு எடுக்காமல் போன அத்தனை மனிதர்களின் அழைப்புகளும், ம்ம் கொட்டிக்கொண்டு எங்கேயோ மனதை அலைபாயவிட்ட சக அன்பர்களின் கவலைகளும் குதறும் வேளையில் இனிமேலாவது காது கொடுத்து கேட்க வேண்டும் என்று மனம் விம்முகிறது

பின்னூட்டமொன்றை இடுக