ராகுல் காந்திக்கு ஒரு ரகளையான கடிதம்!


கரையும்  ராஜ்யத்தின் கண்ணுக்குத் தெரியாத   இளவரசருக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ராகுல்,

நானும் உங்களைப் போலவே விடுப்பில் இருந்தேன். என்ன உங்களைப் போலக் காலவரையில்லாத விடுப்பில்லை அது. வெறும் மூன்று வாரங்கள் மட்டுமே அது நீடித்தது. வந்ததும் எங்கே ராகுல்? அவர் எப்பொழுது திரும்புவார்? என்று என்னைக் கண்டுபிடிக்கச் சொன்னார்கள். அன்புள்ள ராகுல், எனக்கு உங்களைப் பற்றிச் சற்றும் கவலையில்லை. என்ன செய்வது. எனக்குச் செய்யவேண்டிய ஒரு வேலையிருக்கிறது. ஆகவே, காங்கிரசின் சில உறுப்பினர்களின் எண்களை அழைத்தேன். ஆஃப் தி ரெக்கார்டில் பேச வேண்டும் என்றால் இருக்கிற ஒட்டுமொத்த அரசியல்வாதிகளிலேயே மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக உங்கள் கட்சியினரே உள்ளார்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டால் உங்களின் சுயத்தைப் போட்டு சிதைக்கும் ஜோக்குகளை அவர்கள் அள்ளிவிடுகிறார்கள். அதிகாரப்பூர்வ பேட்டி என்று சொன்னதும், அவர்கள் பேசுவது அத்தனை சலிப்பாக இருக்கிறது. உங்களை நியாயப்படுத்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. உங்களைப் பற்றி ஆழமான பார்வையிருப்பதாக நீங்கள் அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டுப் போன நிலையிலும் அவர்கள் நடிக்க வேண்டி இருக்கிறது.

இதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்! நீங்கள் எங்கே தான் போய்த் தொலைந்தீர்கள், நீங்கள் மோசமான மனநிலையில் இருக்கிறீர்களா? நீங்கள் கட்சியின் பழம்பெருச்சாளிகளை மொத்தமாக ஒழித்துக்கட்டும் வேலையில் இருக்கிறீர்களா? நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? அல்லது உணர்வுப்பூர்வமாகக் காயப்பட்டு இருக்கிறீர்களா? நீங்கள் காங்கிரஸ் தலைவராக உள்ளீர்களா? இல்லை உங்களுக்கு விடுமுறைகளின் மீது எப்பொழுதும் இருக்கும் போதையா? என்று ஒட்டுமொத்த தேசத்துக்கும் எத்தனையோ கேள்விகள். ஆனால், நாங்கள் ஆழமாக, தீவிரமாக உங்களால் அலுப்புக்கு உள்ளாகி இருக்கிறோம். உங்களுடனான உறவில் இனிமேல் எதுவுமில்லை என்பது போன்ற நிலையை எட்டியிருக்கிறோம். அன்பு, வெறுப்பு இரண்டின் சுவடுகளும் இனிமேல் எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு இறுக்கமாகிற பொழுது எங்களின் மூளையில் உங்களை நம்பிக்கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நீங்கள் நேரு காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீங்கள் அர்ப்பணிப்பு கொண்டவராக இருப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீங்கள் எதோ வேலையிலோ அல்லது அரசியலிலோ ஈடுபடுகிற இயல்பான மனிதராக இருந்திருந்தால் இந்நேரம் மூட்டை கட்டப்பட்டு இருப்பீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இப்பொழுதும் உங்கள் கட்சியின் தலைமையை நீங்கள் ஏற்கும் சூழல் உள்ளது. நீங்கள் அதற்குத் தகுதியானவர் என்று உண்மையில் நினைக்கிறீர்களா? எப்பொழுதாவது நாடாளுமன்றத்தில் தோன்றுகிறீர்கள். விட்டால் எதோ பேசுகிறீர்கள். கடந்த ஆண்டு டிசம்பர் 29-ல் காங்கிரஸ் கட்சியின் துவக்க தின கொண்டாட்டத்தில் நீங்கள்  காணப்படவில்லை. நீங்கள் பெரும்பாலும் வழிநடத்த வேண்டும் என்று ‘விதித்திருக்கிற’ கட்சி உங்களின் கொள்ளுத் தாத்தாவும், இந்தத் தேசத்தின் ஜனநாயகத்துக்கு அடித்தளமும் இட்டவருமான நேருவின்  125-வது பிறந்தநாளை ஒரு சர்வதேச கூட்டத்தின் மூலம் கொண்டாடிய பொழுதும் உங்களைக் காணவில்லை.

ஒவ்வொரு வருடமும் உங்களின் பிறந்தநாளான ஜூன் 19 அன்று ஒரு நாடகத்தைக் காங்கிரஸ் கட்சி தலைமையகம் அமைந்துள்ள 24 அக்பர் ரோட்டில் காண்கிறோம். உங்கள் கட்சி தொண்டர்கள் கூடி உங்களைப் போற்றிக் கோஷங்கள் எழுப்புவார்கள். இனிப்புகள் கொடுப்பார்கள். பர்த்டே பாயான நீங்கள் அந்த நாளில் எங்கே இருப்பீர்கள் என்று தெரியாது. பெரும்பாலும் இந்தியாவிற்கு வெளியே நீங்கள் அன்றைய தினத்தைக் கழிப்பீர்கள்.

நீங்கள் உண்மையிலேயே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா, அல்லது அதில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறீர்களா என்று நாங்கள் ஆச்சரியப்படுவதற்கு மன்னிக்கவும். உங்களுக்கு வேறு எதையும் செய்யத் திறனில்லை என்பதால் இங்கே இருக்கிறீர்கள் என்றால் மக்கள் கட்சி, நாடு ஆகியவற்றின் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லா வகையான பொறுப்பை விட்டும் உங்களை விடுவிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள் என்று சந்தேகிக்கிறேன்.

நீங்கள் ஒரு ஆண்மகனாக வீரத்தோடு எழுந்து நின்று “நேர்மையாக இதற்கு நான் சரிப்பட மாட்டேன்!” என்று சொல்வதைச் சந்தோசமாகக் காண விரும்புகிறேன். இதனால் உங்களுக்குத் திறக்கக்கூடிய கிளர்ச்சி நிறைந்த புதிய உலகை எண்ணிப்பாருங்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பாதுகாப்புப் படை தேடாத வகையில் உலகம் முழுக்கச் சுற்றலாம். திருமணம் செய்து கொள்ளலாம். இல்லை தனிக்கட்டையாக இருக்கலாம். பார்ட்டிக்கு போவது, புத்தகங்கள் படிப்பது, ஸ்கூபா டைவிங் செய்வது, ரைஃபிள் சுடுதலில் ஈடுபடுவது என்று எதையாவது உருப்படியாகச் செய்யலாம். உங்களின் உள்ளார்ந்த தடுமாற்றங்களைப் பற்றி நீங்கள் பிரதிபலித்துக்கொள்ள அது உதவும். அது உண்மையில் உங்களையும், எங்களையும் உண்மையில் விடுவிக்கும்.

உங்களை மிகவும் நல்லவர் என்றும், கெட்டவராகவோ, ஊழல்வாதியாகவோ, பதவி வெறி பிடித்தவராகவோ இருக்க முடியாத எளிமையான மனம் கொண்டவராக நான் எண்ணுவதால் தான் இதையெல்லாம் சொல்கிறேன். உங்களிடம் உங்கள் கட்சிக்கும், குடும்பத்துக்கும் நீங்கள் தேவை என்றும், நேரு-காந்தி குடும்பத்தின் வாரிசு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இல்லை என்றால் கட்சி கவிழ்ந்து விடும் என்றும் சொல்லியிருப்பார்கள். ஏற்கனவே உங்களின் அரசு கவிழ்ந்து விட்டது. ராகுல் நீங்கள் காணாமல் போய்க்கொண்டு இருக்கும் ஒரு அரசாங்கத்தின் இளவரசர். ‘நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் தெரியுமா?’ என்று உங்களை உசுப்பேற்றுபவர்கள் உங்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.

நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தத்துவம் பாதி, உணர்ச்சிகள் மீதி கலந்த ஒரு உரையை நிகழ்த்தினீர்கள். காலத்துக்கு ஏற்ற ஒரு வாரிசு வந்து விட்டதாக அந்தக் கூட்டத்தின் அங்கத்தினர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்கள். ஆனால், உங்கள் குடும்பத்திற்காக எப்பொழுதும் உணர்ச்சிவசப்படுவது காங்கிரஸ் கட்சியில் ஒரு சடங்கு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுது கண்ணீர் வடித்த பலரும் தற்பொழுது நீங்கள் நிரந்தரமாக ஓய்வு பெற்றால் போதும் என்று இப்பொழுது எண்ணுகிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்,


அந்தத் தினத்தில் நீங்கள் சொன்ன இரண்டு விஷயங்கள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன. வாழ்க்கையில் சமநிலை, உண்மையைத் தேடுவதன் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அதிகாரம் பயங்கரமான விஷமாக இருப்பதாகச் சொன்ன ராகுல் காந்தியாகிய நீங்கள் அதைப்பற்றி அஞ்சவேண்டியதில்லை. அந்த விஷம் உங்களைக் கண்ணுக்கெட்டிய காலம் வரை தீண்டப்போவதில்லை. உண்மையை, சமநிலையை நீங்கள் இப்போதைக்குத் தேடலாம். வாரிசு அரசியல் அடிப்படையில் ஜனநாயகத்துக்கு எதிரானது என்பது அடிப்படை உண்மை ராகுல்.

உங்களின் பரம்பரையை விட்டு வெளியே சிந்தித்தால் தான் சில அடிப்படை உண்மைகள் துலங்கும். ஏன் உங்களுக்குப் பதிலாக உங்கள் குடும்பத்தைச் சாராத, உற்சாகம்மிகுந்த, அரசியலில் ஆர்வமுள்ள ஒருவரை அடுத்தத் தலைமுறை காங்கிரஸ் தலைவராக வளர்ப்பதை பற்றி யோசிக்கக் கூடாது? எந்தத் தேவலோகச் சட்டம் உங்கள் குடும்பம் தான் வழிநடத்த வேண்டும் என்கிறது? வாரிசு அரசியல் சரியென்று நூற்றுக்கணக்கான வாதங்கள், குரல்கள் உங்களை நோக்கி வீசப்படும். ஆனால், உண்மையை, வாழ்வின் அர்த்தத்தைத் தேடுவதாக அடிக்கடி பேசிய நீங்கள் அது அடிப்படையிலேயே தவறானது என்று உணர்ந்து கொள்வீர்கள்.


இழப்பதற்கு என்று பெரிதாக எதுவுமில்லை. வரலாற்றில் பெரிய புயல்களுக்குப் பிறகே பழைய அமைப்புகள் நொறுக்கப்பட்டுப் புதியவை எழுகின்றன. மாநிலங்களைக் கவனியுங்கள். புதிய தலைவர்களை உங்கள் குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் வளர விடுங்கள். காங்கிரசின் பாக்கியுள்ள அடிமட்டத்தலைவர்களில் பெரும்பாலானோர் டெல்லி மேலிடத்தின் குரலை மதிப்பதில்லை என்று தெரியும். அரசியல் வட்டத்தில் எல்லாம் மாறி உங்கள் கட்சி மாநிலங்களில், மத்தியில் வாய்ப்புகளைப் பெறக்கூடும். ஒரு புதிய காங்கிரஸ் எழ அனுமதியுங்கள் ராகுல். அது அரை மனதுள்ள, பகுதி நேர தலைவரால் சாத்தியமில்லை.

இவற்றை விடுங்கள். அமைதியை நோக்கிப் பயணியுங்கள்.

உங்கள் உண்மையுள்ள,
ஷபா நக்வி

ஷபா நக்வி ‘அவுட்லுக்’ இதழின் அரசியல் ஆசிரியர்.

மூலம்: www.outlookindia.com/article/To-The-Invisible-Prince-Of-A-Vanishing-Kingdom/293773

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s