நீங்களும் தவறுகள் செய்கிறவராக இருக்கிறீர்கள்.
அதனால் தான் நாம் சமமானவர்கள்.
யாரேனும் உடைகையில்
யாரோ சிலர் நொறுக்கி விலகுகையில்
கரங்குவித்து சிரித்துவிட்டு
வெளியேறும் நமக்குப் பின்னால் பொத்தான்கள் பிய்யும் சப்தம்…
அலமாரியில் மரணத்துக்கான மலர்கள்
சாளரம் திறக்கையில் முத்தங்கள் ஏந்தியபடி
எதிர்வீட்டுப் பூனை
அதன் கைநகம் தடவி கீறல் ஒன்றைப் பெறுகையில்
எவரெவரோ நிமிர்ந்துச் சிரித்தார்கள்.
கத்தரிக்கும் வேலைகளில் கூட தெரியும்
கொலைத்தொழில் புரிவதைவிட
கோபம்கொண்டு ரசித்தபடி
ஒரு கண்ணாடியை காயப்படாமல் பொறுக்குவதாக
எச்சில் படாமல் முத்தம் தருவதாய்
வாகன நெருக்கத்தில் ஒரு மழலையின் அழுகையை கண்டுபிடிப்பதாய்
பிரியம் காட்டுகிறீர்கள் நீங்கள்..
எதனால் நாம் சமமென்று தெரியவில்லை.
அதனால்,
அதையே அடிக்கடிச் சொல்லி
நீங்கள் அழுகையில் ஒரு பேருந்தில் ஏறிப்போகிறேன் நான்.
நாளை வரை சாகாமல் இருங்கள்!