ராம் மனோகர் லோகியா


ராம் மனோகர் லோகியா இந்திய அரசியல் வரலாற்றின் மகத்தான ஆளுமைகளில் முக்கியமானவர். உத்திர பிரதேசத்தில் ஹார்ட்வேர் தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்த அவர் மராத்தி,வங்காளி மொழிகளில் புலமை பெற்றார். விடுதலைப்போரில் காந்திய வழிகளால் ஈர்க்கப்பட்டுச் சைமன் கமிஷன் எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்து கொண்டார். ஜெர்மனிக்கு உயர்படிப்புப் படிக்கப் போன பொழுது புகழ்பெற்ற சோசியலிச அறிஞர் வெர்னெர் சோம்பர்ட் வழிகாட்டுதலில் ‘உப்பின் பொருளாதாரம் !’ என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தார். லீக் ஆப் நேஷன்ஸ் அமைப்பின் கூட்டத்துக்குள் நுழைய முயன்று ஆங்கிலேய ஆளுகைக்கு உட்பட்ட தேசம் என்பதால் அனுமதி மறுக்கப்படவே அதற்கு எதிராகக் குர்ல கொடுத்தார். நாடு திரும்பியதும் காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே காங்கிரஸ் சோசியலிச கட்சியை ஆரம்பித்தார்.

காங்கிரஸ் கட்சியின் அயலுறவுக்கொள்கையின் தலைவராக அவரின் இருபத்தி ஆறு வயதில் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் அயலுறவுக்கொள்கைக்கான ஆரம்பகால வடிவம் வழங்குவதில் அவரும் முக்கியப் பங்காற்றினார். அதற்குப் பின்னர் உலகப்போரில் ஆங்கிலேயரை அவர் எதிர்த்துக் குரலம் கொடுக்கக் கைது செய்யப்பட்டார். காந்தியின் கடும் எதிர்ப்பால் அவர் விடுதலை செய்யப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தில் இருபத்தி ஒரு மாதம் தலைமறைவு வாழ்க்கை நடத்தி ஆசாத் தஸ்த் என்கிற இதழையும்,ரகசிய ரேடியோ நடத்துவதையும் உறுதி செய்தார். நேபாளம் வரை விடுதலைப்போரை கொண்டு சென்று அப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க முயன்றார். பின்னர்க் கைது செய்யப்பட்டுக் கடும் இன்னல்களுக்கு உள்ளானார். விடுதலை அடைந்த பின்பு கோவாவுக்குள் இரண்டு முறை நுழைந்து கிளர்ச்சி உண்டாக்கி அப்பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். மூன்றாம் முறை காந்தி மற்றும் நேருவின் வேண்டுகோளால் நுழையாமல் அமைதி காத்தார்.

காங்கிரஸ் விடுதலைக்குப் பின்னர் எளிய மக்களை விட்டு விலகி விட்டது என்று குற்றம் சாட்டி கட்சியை விட்டு விலகி சோசியலிச கட்சியை ஆரம்பித்தார். பல்வேறு பிரிவு மற்றும் இணைப்புக்கு பிறகு சம்யுக்தா சோசியலிச கட்சியாக அவரின் கட்சி பெயர் பெற்றது. கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் இரண்டிடம் இருந்தும் சம தூரத்தில் நிற்க வேண்டும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. இரண்டு முறைகளிலும் உற்பத்தி முறைகளில் பெரிய வித்தியாசமில்லை. முதலாளித்துவத்தில் முதலாளிகள் முடிவுகள் எடுத்தால் கம்யூனிசத்தில் அரசாங்கம் எல்லா அதிகாரத்தின் புள்ளியாக இருக்கிறது. எளிய மக்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஒன்றும் இரண்டு முறைகளாலும் ஏற்படுவதில்லை. பெரிய இயந்திரங்கள் என்கிற மாதிரியை மேற்கு நம்மின் மீது திணிக்கப் பார்க்கிறது. ஆகவே,தொழில்நுட்பத்தைக் கூட்டுறவு மற்றும் குழுக்கள் மூலம் கிராமங்களுக்குச் சிறிய இயந்திரங்களின் மூலம் கொண்டு சேர்த்து சாதிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். ஓட்டளிப்பு,கிளர்ச்சி செய்தல் மற்றும் கடும் உழைப்பு ஆகியவற்றைக் குறிக்கும் வாக்குப்பெட்டி,சிறை,மண்வெட்டி ஆகியவற்றை அவர் அடையாளமாகப் பயன்படுத்தினார். நிதி மூலங்கள் கிராமங்கள்,மாவட்டங்கள் ஆகியவற்றுக்குப் பிரித்து வழங்கப்பட வேண்டும் என முழங்கிய அவர் அரசியல் மற்றும் பொருளாதார இடங்களில் அறுபது சதவிகிதம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அவர் ஆங்கிலத்தைத் துறந்து இந்தியை மக்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டார். ராமாயண மேளாவை நடத்தி இந்திய மொழிகளுகுள்ளான உரையாடலை அதிகப்படுத்த விரும்பினார். பெண்ணுரிமைக்காகவும் அவர் குரல் ஓங்கி ஒலித்தது. காஷ்மீரில் இந்தியாவின் உரிமையை ஆதரித்த அவர் அங்கே நடந்த ஜனநாயக மீறல்களைச் சாடினார். பாகிஸ்தானோடு இந்திய முஸ்லீம்களை இணைத்து பேசுவது பெருந்தவறு என்பது அவரின் பார்வையாக இருந்தது. கம்யூனிசதின் போராட்ட முறைகளைக் கைக்கொள்கிற அதே சமயம் அதன் வன்முறையைத் துறப்பதை அவர் வலியுறுத்தினார். ஜாதி அமைப்பை புரிந்து கொண்டு இந்தியாவுக்கான சோசியலிச மாதிரியை அவர் முன்மொழிந்தார். ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு உழைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

சீனப்போரில் நேரு தோற்ற போன  அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். “நேருவுக்கு மட்டும் ஒரு நாளைக்கு அரசு இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறது. அவரின் நாய்களுக்குக் கூட அரசுதான் செலவு செய்ய வேண்டும் போல !” என்று அவர் அதிரடித்தார். மூன்று பஅனாவில் மக்கள் வாழும் அவலச்சூழல் உள்ளது என்று அவர் சொல்ல நேரு அதை மறுத்து பதினைந்து அனாவில் மக்கள் வாழ்கிறார்கள் என்று பதில் தந்தார். அதை இவர் ஆதாரங்களோடு மறுக்கத் திட்ட கமிஷன் இன்னமும் கவனமாகச் செய்ய அது வழிவகுத்தது. அவரின் வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பி இருந்தது. ஜாதி ஒழிப்புக்கு அவர் இயங்கினார், அங்கே கம்யூனிஸ்ட்கள் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பது அவரின் வருத்தம்.

வடகிழக்கு மக்களை அருங்காட்சியக பொருட்கள் போல நேரு பார்ப்பதாகச் சொல்லி அப்பகுதிகளுக்குள் அவர் நுழைய முயன்று கைதுக்கு உள்ளானர். கர்நாடகாவில் நடந்த தொழிலாளர் போராட்டம்,உத்திர பிரேதசத்தில் நடந்த நீர் வரி ஏற்றத்துக்கு எதிரான போராட்டம்,மணிப்பூருக்குத் தனிச் சட்டசபை கோரி போராட்டம் என்று அவரின் போராட்டங்கள் நீண்டுகொண்டே இருந்தன. சிறை போய் வருவது அவருக்கு நெருக்கமான நிகழ்வாக ஆகிவிட்டு இருந்தது. நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவின் மிசிசிபியில் வெள்ளையர்கள் மட்டுமே நுழையக்கூடிய உணவகத்தில் நுழைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அப்பொழுது அவரின் மன்னிப்புக் கேட்கப்பட்ட பொழுது “இந்த மன்னிப்பை சுதந்திர தேவி சிலையிடம் கேளுங்கள் !” என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டு நடந்தார். 1956 இல் அண்ணல் அம்பேத்கர் மற்றும் லோஹியா இருவரும் அடுத்தத் தேர்தலில் இணைந்து பணியாற்ற கலந்தாலோசிதார்கள். துயரகரமாக அம்பேத்கர் இறந்துவிட ஒரு அற்புத சங்கமம் நிகழாமலே போனது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s