என்றென்றும் ஜெயகாந்தன்!


ஜெயகாந்தன்-தமிழில் விளிம்புநிலை மக்களைப் பற்றிப் பேசிய, குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கையை, மனவெளியை படம் பிடித்துக்காட்டிய எழுத்துச்சிங்கம் இனிமேல் இல்லை.

‘எழுத்தாளன் ஒரு சட்டத்தின் துணைகொண்டு, ‘இது சரி… இது தப்பு…’ என்று தீர்ப்பும் தண்டனையும் அளிக்கும் சாதாரண ஒரு நீதிபதி அல்ல. வஞ்சிக்கப்பட்டவர்களிடமும், தண்டிக்கப்பட்டவர்களிடமும், சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவையே நாடிச்செல்ல வேண்டும்’ என்று அவர் சொன்ன வார்த்தைகளிலேயே அவரின் எழுத்துக்கள் விவரிக்கப்பட்டு விட்டது. விவேகானந்தரையும், காந்தியையும், மார்க்ஸையும் இணைத்து ஏற்றுக்கொண்ட அபூர்வமான மனப்போக்கு அவருடையது.

அவரின் நூல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட பொழுது கூடிய பெண்களின் கூட்டமே அவர் எழுத்தால் அவர்களின் உலகை எப்படிப் படம் பிடித்திருந்தார் என்பதன் வாழ்நாள் சாட்சி. அவர் தமிழர்களைக் கடுமையாக விமர்சித்தார். தமிழ் வெறி கூடவே கூடாது என்றார். இவர்களிடம் நல்ல குணம் எதுவென்று தேடுகிறேன் என்றார். படிக்கிற மாதிரி தமிழில் எதுவுமில்லை என்று சொன்னார். ஆனாலும், தமிழர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தார்கள். அது அவர் எழுத்தும், ஆளுமையும் நிகழ்த்திய மாயம்.

தொழுப்பேடு நிலையத்தில் நாகேஷ் உடன் இணைந்து பிச்சைஎடுக்க முனைந்த அந்தப் பரிசோதனை மனம் எழுத்திலும் தொடர்ந்தது. அக்கினிப் பிரவேசத்துக்கு எதிர்ப்பு எழுந்த பொழுது சில நேரங்களில் சில மனிதர்கள் எழுதிய அந்த ‘நான் இப்படித்தான்!’ என்கிற அந்தக் கம்பீரம் அலாதியானது. உங்கள் மகளின் காதல் திருமணத்தை எதிர்த்தீர்கள் என்று கேள்விப்பட்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு அப்பாவின் பதைபதைப்பு அது என்று என் தந்தை சொன்னார். இருக்கலாம்.

உங்கள் மரணச்செய்தியை என் தோழர்கள் சிலருக்கு அழைத்துச்சொன்னேன். அழுதார்கள். “நீங்கள் தமிழர்கள் உணர்ச்சிகரமானவர்கள்.” என்றிருப்பீர்கள். எழுத்துக்களில், மீனாட்சி நிலையத்தின் உங்கள் நூல்களில் மூழ்கிக்கொண்டே இந்தத் துயரக்கணத்தைக் கடக்க வேண்டும்.

பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் கடுமையாகப் பெரியார் முன்னிலையில் விமர்சித்துப் பேசிய கூட்டத்தின் நினைவை இப்படிப் பகிர்ந்திருப்பார் ஜெயகாந்தன். ‘பின்னர் அவர் என்னை அழைத்தார். மிக மரியாதையாக, ஓர் ஆஸ்திக சமாஜத்தைச் சேர்ந்த மடாதிபதி போல, மிகவும் பண்போடு, இருபத்து நான்கு வயதே ஆன என்னை, “வாங்க, ஐயா!” என்று கரங்கூப்பி அழைத்தார். அக்காலத்திலெல்லாம் நான் யாரையும் காலில் விழுந்து வணங்கியதில்லை. ஆனால், அப்படி ஓர் உணர்வு எனக்கு அப்போது தோன்றியது உண்மை! அவர் என்னை விசாரித்தார். “நீங்க பிராமணப் பிள்ளையா?” “இல்லை” என்றேன். “ரொம்பச் சந்தோஷம்!” என்றார். நான் விடை பெற்றுக் கொண்டேன்.”

எண்பதுகளில் எழுதிய நீங்கள் அதோடு விட்டிருக்கலாம். மீண்டும் ஏன் எழுதினீர்களோ என்று வருத்தம் அவ்வப்பொழுது ஏற்படுவது உண்டு. தமிழர்களின் எண்ணப்போக்கில் பெருத்த சலனங்கள், புனித பிம்பங்களின் மீதான அசராத தாக்குதல்கள், எழுத்தால் அப்படியே வாசகனை கைகட்டி உட்கார வைக்கும் கம்பீரம் எல்லாவற்றையும் நினைத்தபடியே நீர் வழிய உங்கள் புத்தகத்தை தடவத்தான் முடிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s