நேரு, நேதாஜி – அரசியல் எதிரிகளா? – 1


நேரு – நேதாஜி: ஒற்றுமையும் வேற்றுமையும்…

வஹர்லால் நேரு, நேதாஜியை உளவு பார்த்தார் என்கிற விஷயம் உளவுத்துறையின் கோப்புகள் மூலம் சமீபத்தில் வெளிப்பட்டது. ‘நேரு, நேதாஜியை கொன்றுவிட்டார்!’ என்கிற அளவுக்கு சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் இருவரின் உறவு எப்படிப்பட்டதாக இருந்தது? இந்திய அரசியலில் இவர்களின் பங்களிப்பு என்ன? இவர்கள் நண்பர்களா? எQதிரிகளா? வரலாறு என்ன சொல்கிறது? என்பதை இந்த மினி தொடரில் பார்க்கலாம்….

நேருவுக்கும், நேதாஜிக்கும் சில பல ஒற்றுமைகள் இளமைக்காலம் முதலே இருந்து வந்தது. இருவரும் ஆங்கிலேய ஆட்சியின் மிக முக்கிய நகரங்களில் பிறக்காமல் முறையே அலகாபாத், கட்டாக்கில் பிறந்து வளர்ந்தார்கள். இருவரின் அப்பாக்களும் வழக்கறிஞர்கள், இருவரும் மேற்படிப்பை கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் படித்து பட்டம் பெற்றார்கள்.

நேரு தியாசபிகல் இயக்கத்தால் ( Theosophical Society ) ஈர்க்கப்பட்ட சூழலில், நேதாஜி ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டார். குருக்களிடம் யோகா கற்றுக்கொண்டார். விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரின் மனிதகுலத்துக்கான சேவை,  தியாகம் மற்றும்  சிந்தனைகளால் கவரப்பட்டார்.

பள்ளி, கல்லூரி காலத்தில் படிப்பில் பெரிய அளவில் நேரு ஜொலிக்கவில்லை. நேதாஜியோ மெட்ரிகுலேசன் தேர்வில் பல்கலை அளவில் இரண்டாம் இடம் பெற்றார். சாந்திப்பூரில் ராமகிருஷ்ணரின் கருத்துக்களால் தாக்கம் பெற்ற இளைஞர்கள் இணைந்து கேம்ப் ஒன்று நடத்தியபொழுது, அதில் காவியுடை அணிந்து பல்வேறு விவாதங்களில் போஸ் பங்குகொண்டார். சங்கரரின் அத்வைதம் அவரில் தாக்கம் செலுத்தினாலும், அது ஏற்புடையதாக அவருக்கு இருக்கவில்லை. ‘முள் போல என்னை அக்கருத்துக்கள் உறுத்திக்கொண்டு இருந்தன. அந்தத் தத்துவத்தை விட்டு முழுவதும் விலக முடியவில்லை. அதற்கு மாற்றைத் தேடிக்கொண்டு இருந்தேன்.’ என்று புலம்பிய அவருக்கு ஆறுதலாக அரவிந்தரின் கருத்துக்கள் நிம்மதி தந்தன. அன்னை தேசத்துக்கு சேவையாற்ற எவ்வளவு வேண்டுமானாலும் துன்புறலாம் என்கிற எண்ணம் அவரின் மனதில் அரவிந்தரின் எழுத்துக்களால் ஆழப்பதிந்தது.

வங்கத்தின் மாநிலக்கல்லூரியில் போஸ் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஒட்டன் எனும் பேராசிரியர் மாணவர்களை அடித்ததாகக் கேள்விப்பட்டார். முதல்வரிடம் போய் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் போஸ். வகுப்புக்கு வெளியே சத்தம் போட்ட மாணவர்களைக் கைகளால் தள்ளினேன் என்று ஒட்டன் விளக்கம் தந்துவிட்டு, மன்னிப்பு கோர மறுத்தார். கல்லூரியில் போஸ் ஒரு ஸ்ட்ரைக்கை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். அடுத்து வந்த வகுப்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட பத்து மாணவர்களை வகுப்பை விட்டு ஒட்டன் வெளியேற்றினார். மீண்டும் ஒரு வேதியியல் மாணவனை ஒட்டன் அடித்துவிட்டார் என்கிற விஷயம் கேள்விப்பட்டு, ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் குழு அவரைத் தாக்கியது.

போஸ் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகப் பிரச்னை ஆனது. அவரைப் பல்கலைக்கழகக் குழு விசாரித்தது. ‘மாணவர்கள் செய்ததை நியாயப்படுத்த முடியாது. ஆனால், அவர்கள் அதை நோக்கி கடுமையாகத் தூண்டப்பட்டார்கள்!’ என்று சொன்ன போஸ், வேறு எந்த மாணவரையும் காட்டிக்கொடுக்க மறுத்துவிட்டார். போஸ் இந்தச் சம்பவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டாரா என்று இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை. எனினும், போஸ் தன் மீது பழியைப் போட்டுக்கொண்டு மற்றவர்களைக் காப்பாற்றினார் என்பதும், அவருடைய கல்வி அதனால் தடைப்பட்டது என்பதும் உண்மை.

ஏழு மாதகாலப் பயிற்சியில், மிகக்கடினமான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நான்காம் இடம் பெற்றார் போஸ். தன்னுடைய ஆன்மாவுக்கு விரோதமாக ஆங்கிலேயருக்கு கீழே வேலை பார்ப்பதை விரும்பவில்லை. சிவில் சர்வீஸ் பணிகளில் சேராமலே இருக்க அவர் முடிவு செய்தார். நேரு இதே காலத்தில் கல்லூரியில் படிப்பை படித்து முடித்தார், அவருக்கு இந்திய அரசியலின் மாற்றங்கள் தெரிந்திருந்தன. ஆனால், போஸின் இளமைக்காலத்தில் ஏற்பட்டது போன்ற துணிகர நிகழ்வுகள் நேருவின் வாழ்க்கையில் நடந்திருக்கவில்லை.

போஸ் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான பார்வை கொண்டவராக இருந்தாலும் இளமைக்காலத்தில் இருந்தே ராணுவத்தின் மீது தீராத காதல் அவருக்கு இருந்திருக்கிறது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிலைபெற செய்வதில் முக்கியப் பங்காற்றிய அவர்களின் ராணுவத்தின் வங்காளிகள் படைப்பிரிவு 49ல் சேர முயன்று, பார்வைக்குறைபாட்டால் நிராகரிக்கப்பட்டார். அடுத்து ஸ்காட்டிஷ் கிறிஸ்துவக் கல்லூரியில் பயிலும்பொழுது, இந்திய உள்நாட்டு ராணுவத்தில் இணைந்தார். கேம்ப்ரிட்ஜில் கல்வி பயில சென்றபொழுது, பல்கலை அலுவலர் பயிற்சிப் படையில் சேர விண்ணப்பித்தார். ராணுவத்தில் இருந்த கட்டுப்பாடு தன்னை மிகவும் கவர்ந்ததாக போஸ் குறிப்பிடுகிறார்.

இந்தியாவுக்குத் திரும்பிய நேரு, லக்னோவில் காந்தியை 1916-ல் காண்கிறார். முதலில் அவர் மீது பெரிய அபிமானம் நேருவுக்கு ஏற்படவில்லை. ஹோம் ரூல் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயலாற்றிய நேரு, ஜாலியன் வாலாபாக் படுகொலையால் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். காந்தியின் வழியில் போராடி சிறை புகவும் தான் தயாராக இருப்பதாக மோதிலாலிடம், ஜவகர்லால் நேரு சொல்ல… அவரோ காந்தியிடம் சொல்லி, பையனின் வேகத்தைக் குறைக்குமாறு செய்தார். பிரதாப்கர் மாவட்டத்தில் பாபா ராமச்சந்திர எனும் சாதுவின் தலைமையில் நடந்து கொண்டிருந்த விவசாயிகளின் போராட்டத்தின் மீது வன்முறையை ஆங்கிலேய அரசு கையாண்டு இருந்தது. அங்கே வருமாறு நேருவுக்கு அழைப்பு வந்தது. அங்கே கிராமங்களின் வழியாகப் போனபொழுதுதான் நிஜ இந்தியா அவரின் முகத்தில் அறைந்தது. துப்பாக்கிச் சூட்டை காவல் அதிகாரிகள் நடத்திய பிறகு, விவசாயிகள் முன்னால் உரையாற்றியபொழுது, அந்த எளியவர்கள் உறுதியாக அமர்ந்திருந்தது அவருக்கு ஆச்சரியம் தந்தது. ‘வன்முறைக்கு ஆதரவாக நான் பேசிவிடுவேனோ என்று அஞ்சிக்கொண்டிருக்கையில் அவர்கள் காட்டிய உறுதி ஆச்சரியப்படுத்தியது. அவர்களின் மனதில் அகிம்சை ஆழப் பதிந்திருப்பதை நேரடியாக உணர்ந்தேன் ’ என்று ஜனவரி 22, 1921-ல் ‘தி இண்டிபெண்டன்ட்’ இதழில் குறிப்பிடுகிற நேருவுக்கு, அகிம்சை மீதான பிடிப்பு ஏற்படக் காரணமானது இதுவே.

போஸ் தன்னுடைய இருபத்தி மூன்றாவது வயதில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபொழுது, காந்தியைப் பார்க்க லண்டனில் இருந்து பம்பாய் வந்த நாளிலேயே சென்றார். ‘எப்படி ஒத்துழையாமை இயக்கம் நடைபெறும், வரிக் கொடாமை எப்படி விடுதலை பெற்றுத்தரும், எப்படி இதனால் ஒரே வருடத்தில் விடுதலை கிடைக்கும்’ என்று கேள்விகளை வீசினார். முதல் கேள்வியைத் தவிர மற்ற கேள்விகளுக்குக் காந்தியின் பதில்கள் அவருக்குத் திருப்தி தரவில்லை. காந்தியின் அறிவுரையின் பேரில் அவர் கொல்கத்தாவில் சந்தித்த சித்தரஞ்சன் தாஸ் தான் அவருக்கு மேலும் ஈர்ப்பைத் தருகிறவராக இருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அங்கமாக வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணித்தபொழுது, கொல்கத்தாவில் நடந்த புறக்கணிப்புப் போராட்டத்தை, போஸ் தலைமையேற்று நடத்தினார். அப்போராட்டம் வெற்றி பெற்றது.

அலகாபாத்திலும், ஐக்கிய மாகாணத்திலும் போராட்டத்தைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் நேரு ஈடுபட்டார். அந்நியக் கடை எதிர்ப்பை கான்பூர், அலகாபாத், லக்னோ என்று பல நகர்களில் முன்னெடுத்தார். போஸ், நேரு என்று பலரும் கைது செய்யப்பட்ட சூழலில், வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிப்பதை காங்கிரஸ் கைவிட்டால் அனைத்து கைதிகளையும் விடுவிப்பதாகவும், வட்ட மேசை மாநாட்டை நடத்தி இந்தியாவின் வருங்கால அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கலாம் என்றும் ஆங்கிலேய அரசு பேரம் பேசியது. சித்தரஞ்சன் தாஸ் இதை ஏற்க வேண்டும் என்று கருதினார். காந்தியோ இப்படிச் சமரசம் தேவையில்லை என நிராகரித்தார். போஸ்,  காந்தி மிகப்பெரும் தவறு செய்துவிட்டதாகக் கருதினார்.

செளரி சௌரா சம்பவத்தில் 21 காவலர்கள், மக்களால் அடக்குமுறை தாங்காமல் கொல்லப்பட்டபொழுது, யாரையும் கேட்காமல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ரத்து செய்தது… போஸ், நேரு இருவரையும் கொதிக்கச் செய்தது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் இணைந்து ஆரம்பித்து இருந்த சுயராஜ்யக்கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதனைப் போஸ் ஆதரிக்க, நேருவோ அதிலிருந்து ஒதுங்கி நின்றார். கொல்கத்தா நகர மேயர் ஆனதும் சித்தரஞ்சன் தாஸ் தலைமை செயல் அதிகாரியாக நேதாஜியை நியமித்தார். எண்ணற்ற முஸ்லீம்கள் நகரசபையில் வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள், அதைக் காந்தியும் வரவேற்றார்.

ஆனாலும், இரண்டு உறுத்தல்கள் இந்த ஆட்சிக்காலத்தில் இருந்தன. ரஜத் ரே அவர்களின் ‘Urban roots of Indian nationalism: pressure groups and conflict of interests in calcutta city politics, 1875-1939’ என்ற நூல் இவற்றை விரிவாகப் பேசுகிறது. சுயராஜ்ய ஆட்சியில் 12,75,000 ரூபாய் அளவுக்கான ஒப்பந்தம் மெஸ்ஸர்ஸ் கர் நிறுவனத்துக்குத் தரப்பட்டது. பதிலுக்கு 75,000 ரூபாய் கட்சி நிதியாக சுயராஜ்யக் கட்சிக்குத் தரப்பட்டது. கூடவே, அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்துக்குப் போய்விட்டு வரும் வழிச்செலவுக்கான சுயராஜ்யக் கட்சி உறுப்பினர்கள் 63 பேருக்கான செலவுத்தொகை 3,600 ரூபாயை அதே நிறுவனம் கவனித்துக்கொண்டது. இவை எதற்கும் போஸ் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. அவருக்கு இவை முழுமையாகத் தெரியாது என்று சந்தேகத்தின் பலனை தரலாம். அடுத்தது இன்னமும் சிக்கலானது. போஸின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு B.N.சஸ்மல் எனும் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் போட்டியிட்டார். அவரைத் தேர்தலில் தோற்கடிக்கச் சுயராஜ்ய கட்சியினர், அவரின் ஜாதியைச் சொல்லி வசை பரப்பி பிரசாரம் செய்தார்கள். போஸ் இதைக்குறித்து மூச்சு விடவில்லை. வெற்றிக்கான பாதையில் இவையெல்லாம் சகஜம் என்று இருந்திருக்கலாம்.

போஸ் போல்ஷ்விக் பிரசாரக்காரர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, ஆங்கிலேய அரசு கைதுசெய்து பர்மா சிறையில் அடைத்தது. சித்தரஞ்சன் தாஸ் இந்தக் காலத்தில் உடல்நலக்குறைவால் இறந்து போயிருந்தார். பர்மாவில் துர்கா பூஜை கொண்டாட அரசு வசதிகள் செய்துதரவில்லை  என்று பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் போஸ். பதினெட்டு மாதங்கள் சிறைத்தண்டனை முடிந்த பிறகு, அலகாபாத் நகரசபையின் தலைவரானார் நேரு. அங்கே ஒரு அதிகாரியை தவறாக வாய்மொழி உத்தரவில் ராஜினாமா செய்யச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்டுத் தன்னைச் சபை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

1927-ல் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய நேரு, அடுத்தாண்டு நடந்த மெட்ராஸ் காங்கிரஸ் கூட்டத்தில் ‘இந்திய மக்களின் இலக்குப் பூரணச் சுதந்திரம்.’ என்று தீர்மானம் போடவைத்தார். காந்தி முதலிய பிற தலைவர்கள் டொமினியன் அந்தஸ்தை தற்போதைக்கு போராடி பெற்றால் போதும் என்று நம்பினர். ஆனால், நேரு இப்படித் தீர்மானம் கொண்டு வந்தபொழுது செயற்குழுவின் உறுப்பினரான காந்தி, அதன் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ‘இத்தீர்மானம் ஒரு சோககரமான நிகழ்வு’ எனச் சொல்ல, நேரு, ‘நிறையப் பேரின் ஆதரவு என்னுடைய தீர்மானத்துக்கு உள்ளது. காந்தியின் தலைமை தயக்கமும், செயல்திறன் அற்றதாகவும் உள்ளது.’ என்று குறிப்பிட்டார். ‘இந்த மோதலை பொதுவெளியில் வெளிப்படுத்துங்கள்!’ என்று நேருவிடம் காந்தி சொல்ல, கலங்கிப்போனார் நேரு. ‘நான் தவறுகள் செய்கிற குழந்தையாக இருந்தாலும் உங்களின் அரசியல் குழந்தைதானே?’ என்று கேட்டு இணக்கமானார்.

போஸ், நேரு இருவரும் இந்த மெட்ராஸ் கூட்டத்தில்தான் கட்சியின் பொதுச்செயலாளர்கள் ஆக்கப்பட்டார்கள். டொமினியன் அந்தஸ்தை நோக்கி நகர்வதாகக் காங்கிரஸ் கட்சித் தீர்மானம் போட்டது நேருவுக்கு அதிர்ச்சி தந்தது. போஸோ, ‘கட்சியில் இடதுசாரிகளின் கை ஓங்கியிருப்பதே மகிழ்ச்சிகரமானது. நேரு தன்னைச் சோசியலிஸ்ட் என்று அழைத்துக்கொண்டது மகிழ்ச்சிகரமானது. இது இடதுசாரிகளின் கரத்தை கட்சிக்குள் வலுப்படுத்தி உள்ளது..’ என்றார். இருவருமே டொமினியன் அந்தஸ்து என்கிற அறிவிப்பு பிடிக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாகக் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து ஆங்கிலேயருக்கு மகிழ்ச்சி தருவதை விட, எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு இந்திய விடுதலை லீகை ஆரம்பிக்கலாம் எனக் கூடிப் பேசி முடிவு செய்தார்கள்.

ஒரே ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாமல் அமைக்கப்பட்ட சைமன் கமிஷனுக்கு எதிரான போரட்டத்தை, லக்னோவில் ஐம்பாதாயிரம் நபர்கள் கொண்ட குழுவை முன்னடத்தி நேரு சாதித்தார். காவல் துறை அவர் மீது தாக்குதலை நிகழ்த்தியது. வங்கத்தில் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தை போஸ் முன்னின்று நடத்தினார். அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தைப் போஸ் முன்னெடுத்தார். அது முற்றிலும் பலனைத் தராது என்பது காந்தியின் கருத்து.

அடுத்து போஸ் பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் பங்குகொண்டார். கம்யூனிஸ்ட்களின் சதி என்று அரசால் முத்திரை குத்தப்பட்டு, பல பேர் குற்றஞ்சாட்டப்பட்ட அவ்வழக்கில் நேருவும், போஸும் இணைந்து செயல்பட்டார்கள். குற்றவாளிகள் என்று அரசால் கூறப்பட்டவர்களுக்காக இருவரும் ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். ஆனாலும், இடதுசாரிகள் இவர்கள் இருவரையும் பெரிய இடத்தில் வைக்கவில்லை.

கொல்கத்தாவில் 1928-ல் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மோதிலால் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டொமினியன் அந்தஸ்து என்பதையே மூத்த தலைவர்கள் வலியுறுத்த, போஸ் அதை எதிர்த்து தீர்மானம் கொண்டுவந்தார். காந்தியை முப்பத்தி ஒரு வயது இளைஞர் ஒருவர் எதிர்க்கிற மாயம் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. நேருவும் போஸ் பக்கம் நியாயம் இருப்பதாக உணர்ந்து அவரை ஆதரித்தார். ‘தலைவர்கள் மீது அன்பு, மரியாதை, நேசம் ஆகியவை கொண்டிருப்பதும், கொண்ட கொள்கைக்கு மதிப்பு தருவதும் வெவ்வேறு!’ என்று சூடாகத் தன்னுடைய தீர்மான உரையை முடித்தார். தீர்மானம் 973-1350 என்கிற வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

One thought on “நேரு, நேதாஜி – அரசியல் எதிரிகளா? – 1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s