கைலாஷ் சத்யார்த்தி எட்டாவது நோபல் பரிசு பெறும் இந்தியர். அன்னை
தெரசாவுக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்கிற
பெருமைக்கும் உரியவர். பாகிஸ்தானின் அடிப்படைவாதிகளை எதிர்த்துக் கல்வி
உரிமைக்காகப் போராடிய மலாலாவுடன் நோபல் பரிசை அவர் பகிர்ந்து
கொண்டுள்ளார். “இந்தப்பரிசு மேலும் என் அமைப்பின் செயல்பாடுகளை
முன்னெடுத்து செல்ல உதவும் !” என்று நம்பிக்கை பொங்க பேசுகிறார்.
அறுபது வயதாகும் கைலாஷ் மத்திய பிரேதசத்தின் விதிஷா நகரில் பிறந்தார்.
அப்பா போலீஸ் அதிகாரி. அவர் காலத்தில் பள்ளிக்கல்வி இலவசம் கிடையாது.
வாய்ப்புகள் வாய்த்த கைலாஷ் பள்ளிக்குள் நுழையும் பொழுது செருப்பு
தைக்கும் தொழிலாளி ஒருவரும்,அவரின் மகனும் ஒன்றாக வேலை செய்வதைச் சில
நாட்கள் தொடர்ந்து பார்த்தான். உறுத்தியது ,”ஏன் அந்தப் பையன் மட்டும்
தெருவில் செருப்புக்குப் பாலிஷ் போடவேண்டும் ?” என்று ஆசிரியரிடம்
கேட்டான். “வாயை மூடு !” என்றார் அவர். தலைமையாசிரியரை கேட்டதும் தான்
குடும்பத்தின் வறுமையைப் போக்க இப்படிக் குழந்தைகள் தொழிலுக்குள் இளம்
வயதில் தள்ளப்படுகிறார்கள் என்று புரிந்தது. “ஒரு நாள் மாற்றவேண்டும் இதை
!” என்று மட்டும் எண்ணிக்கொண்டான் கைலாஷ்.
பள்ளிக்கட்டணம் கட்ட முடியாத பிள்ளைகளுக்குக் கால்பந்து போட்டிகள் நடத்தி
அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் கட்டணம் கட்டிய பொழுது வயது பதினொன்று.
பள்ளிகளில் படித்த பல ஏழைகளின் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் என்பதே கனவாக
இருந்தது. ஒரு வண்டியை வாடகைக்குத் தேர்வு முடிவு நாளான்று நண்பனோடு
சேர்ந்து கைலாஷ் எடுத்துக்கொண்டான். வீடு,வீடாக “தேர்வில் வென்ற
தோழர்களுக்கு வாழ்த்து ! உங்கள் புத்தகங்களை ஏழை நண்பர்களுக்குத்
தாருங்கள் !” என்று கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக்
குவித்துப் புத்தக வங்கி துவங்கி அசத்தினான்.
அடுத்து மின்னியல் துறையில் பொறியியல் பட்டம்.ஒரு டிப்ளமோ பெற்று
ஆசிரியர் பணி. கை நிறையச் சம்பளம் ? போதாது. வாழ்க்கை அலுத்திருந்தது
கைலாஷுக்கு. செருப்புத் தைக்கும் தொழிலாளி சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன
,”மூன்று தலைமுறையாகச் செருப்புத் தைப்பது தான் எங்க தொழில். வேறென்ன
செய்ய ?”. இருபத்தி ஆறு வயதில் வேலையை எறிந்து விட்டுக் களம் புகுந்தார்.
குழந்தைமையைக் காப்போம் என்றொரு அமைப்பை உருவாக்கி பதிந்து கொண்டார்.
அடிக்கடி குழந்தைத்தொழிலாளர்கள் நிறைந்து இருக்கும்
பகுதிகள்,கொத்தடிமைகள் இருக்கும் இடங்கள் என்று ரெய்டுகள் போய்ப் பலரை
மீட்டார்.
மீட்டால் மட்டும் போதுமா ? அவர்கள் வீட்டின் அடுப்பெரிய வேண்டாமா ?
அவர்களின் பெற்றோர் அல்லது உறவினருக்கு நல்ல கூலி கிடைக்கும் வகையில்
தொழிலுக்கும் வழி செய்தார். கறுப்புப் பணத்துக்கான மிக முக்கிய மூலமாகக்
குழந்தைத்தொழிலாளர் முறை இருப்பதைக் கோடிட்டுக்காட்டும் கைலாஷ்
தமிழகத்தின் சிவகாசியில் ஒரு முக்கிய நீர்ப்பாசன திட்டம் வரவிருந்ததைப்
பெரிய அரசியல் புள்ளியொருவர் தடுத்ததன் பின்னணி அரசியல் தீப்பெட்டி
மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் மலிவான சம்பளத்தில் குழந்தைகள்
வேலைக்குக் கிடைப்பது குறையும் என்பது தான் என்கிறார்.
குட்வீவ் என்கிற ஒரு முத்திரையை உலகம் முழுக்க இருக்கும் வெவ்வேறு
நாடுகளைச் சேர்ந்த ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கினார்.
குழந்தைத்தொழிலாளர்களை நாங்கள் பயன்படுத்திப் பொருட்களைத் தயாரிக்கவில்லை
என்று அறிவிக்கும் முத்திரை அது. இது போதாதென்று ஒரு மிகப்பெரிய பயணத்தை
உலகம் முழுக்க 140 நாடுகளில் மேற்கொண்டு சர்வேதச தொழிலாளர் அமைப்பை
சென்று சேர்ந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான ஒப்பந்தத்தை ஏற்க
வைத்தார். மிக வேகமாக நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அதை
ஏற்றுக்கொள்ள அவரின் முயற்சிகள் காரணமாகின. இந்த முத்திரை கொண்ட
பொருட்களை ஏற்றுமதி செய்கிற நிறுவனங்கள் மற்றும் இறக்குமதி செய்கிறவர்கள்
முறையே 0.75,1.25 சதவிகித வருமானத்தைக் குழந்தைத்தொழிலாளர் மீட்பு
மற்றும் நலமேம்பாட்டுக்குத் தருகிறார்கள்.
அசாம்.குஜாரத்,ஒரிசா,மேற்குவங்கம் என்று இந்தியா முழுக்கக்
குழந்தைத்தொழிலாளர் மீட்பில் தொடர்ந்து ஈடுபடும் அவர் அவர்களின் திறன்
மேம்பாட்டுக்கு பல்வேறு கூடங்களையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.
மீட்கப்படும் குழந்தைகளைக் கொண்டே குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான
பிரச்சாரங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தார். இதைவிட முக்கிய அம்சம்
கிராமங்களே முன்வந்து தங்கள் ஊரில் குழந்தைத்தொழிலாளர் முறையை ஒழிக்கச்
செயலாற்றும் திட்டம் தான். எண்ணிக்கை என்கிற வகையில் பார்த்தால்
இந்தியாவில் மட்டும் எண்பதாயிரம் குழந்தைத்தொழிலாளர்கள் மற்றும்
கொத்தடிமைகளைப் பல்வேறு இடங்களில் இருந்து அவரின் அமைப்புகள்
மீட்டிருக்கின்றன. தெற்காசிய முழுக்கவும் அவரின் அமைப்பின் கிளைகள்
செயலாற்றி வருகின்றன
கிரேட் ரோமன் சர்க்கஸ் என்கிற புகழ்பெற்ற சர்க்கஸில் இருந்து
குழந்தைத்தொழிலாளரை மீட்க போன பொழுது,அசாமின் தேயிலைத் தோட்டங்களில்
குழந்தைகளை மீட்ட பொழுது என்று பல இடங்களில் கடுமையாகத்
தாக்கப்பட்டிருக்கிறார் கைலாஷ். “முதுகு,தோள்பட்டை,கைகள்,மண்டை என்று
முறிந்து போகாத இடமேயில்லை. என் தோழர்கள் இரண்டு பேரை இந்தக் கொலைவெறித்
தாக்குதல்களில் இழந்திருக்கிறேன் ! ஆனாலும்,போராட்டங்கள் ஓய்வதில்லை ”
என்று சிரிக்கிறார். இந்தியாவில் கல்வியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற
முக்கியக் காரணமும் இவர்தான்.
பிறப்பால் பிராமணரான அவர் ஒடுக்கப்பட்ட மக்களோடு விருந்துண்ண தன் சாதியை
சேர்ந்தவர்களை இளம்வயதில் அழைத்த பொழுது அவர்கள் மறுக்கத் தானே அந்த
நிகழ்வை நடத்தினார். அவரை ஜாதியை விட்டு விலக்கம் செய்துவைத்தார்கள்.
அன்று முதல் தன் பேருக்குப் பின்னிருந்த ஜாதி அடையாளத்தைத் துறந்து
சத்யார்த்தி என்கிற குடும்பப்பெயர் மட்டுமே தாங்கிவரும் அவருக்கு
ரோல்மாடல் காந்தி தான். “காந்திக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர்
நான் பெற்றிருந்தால் இன்னமும் நிறைவாக இருந்திருக்கும். காந்தியிடம்
இருந்தே எனக்கான உத்வேகத்தைப் பெற்றேன்,பெறுகிறேன். இந்தத் தேசத்தில்
நூற்றுக்கணக்கான சிக்கல்களும்,லட்சக்கணக்கான தீர்வுகளும்
இருக்கின்றன.”என்று கரம் உயர்த்துகிறார் இந்தச் சேவை நாயகன் !