கடல்புரத்தில் – ஆழியினும் ஆழமானது!


வண்ணநிலவனின் கம்பா நதி தான் அவரின் சிறுகதையைத் தாண்டி வாசித்த முதல் நாவல். அதில் பேசப்படும் காதலும், மனித வாழ்க்கையின் வீழ்ச்சியும் மறக்கவே முடியாதவை. அவரின் முதல் நாவலான கடல்புரத்தில் இரு நாட்களுக்கு முன்னர் வாசிக்க எடுத்தேன்.

கடல் பகுதிகளில் வாழும் கிறிஸ்துவர்களின் மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் அடிக்கடி வண்ணநிலவனின் நடை இயேசுவின் மலைச்சொற்பொழிவை நினைவூட்டும் அளவுக்குக் கவித்துவமும், அன்பும் மிகுந்ததாக ஊற்றெடுக்கிறது. மணப்பாட்டு மக்களின் வாழ்க்கையை, பிரியத்தைக் கதையாகச் சொல்ல வந்த வண்ணநிலவன் வலிந்து எதையும் கதையில் திணிப்பதாக நமக்குத் தோன்றுவதில்லை.

நூற்றுக்குச் சற்றே கூடுதலான பக்கங்களில் ஆழமும், சிக்கலும் மிகுந்த ரஞ்சி, பிலோமி, மரியம்மை என்று இத்தனை பெண்களை அவர் உருவாக்கி காட்டியிருக்கும் விதம் வியக்க வைப்பது. காதலித்தவனையே கைபிடிக்க வேண்டும் என்கிற மரபான பார்வையை மீறும் படைப்பாகக் கடல்புரத்தில் அவ்வப்பொழுது வெளிப்படுகிறது. மணமான பின்னரும் தன்னுடைய காதலரான வாத்தியை மரியம்மை பார்க்கிறாள். குரூஸ் எனும் மரியம்மையின் மகன் உருகி நேசித்த ரஞ்சியை விடுத்து கூடுதல் பணத்துக்காக வேறொரு பெண்ணை மணக்கிறான். அப்படியும் ரஞ்சி அவனை வெறுக்கவில்லை. “எல்லாப் பிரியத்தையும் அவரே கொண்டு போயிட்டாரே!’ என்கிறாள். குரூஸின் தங்கை பிலோமி தான் நாவலின் உச்சபட்ச படைப்பு.

சாமிதாஸ் மீது அன்பு கொண்டு தன்னை முழுமையாக ஒப்புவிக்கும் பிலோமி. அண்ணன், அப்பா, அம்மா மூவருக்கும் இடையிலும் சிக்கிக்கொண்டு அல்லற்படும் சூழலிலும், துரோகங்கள், நோய், மரணங்கள் அனைத்தையும் சூழ்கையிலும் வெறுப்பைச் சற்றும் காட்டாமல் நடமாடுகிறாள். ‘உண்மையாக உண்மையாகச் சொல்கிறேன். கோதுமை மணி தனித்துத் தான் இருக்க வேண்டும், அது இறந்தால் ஆனால் அதிக விளைச்சலை தரும்.’ என்கிற விவிலிய வசனத்தை நினைவுபடுத்துவது போல அவளை விட்டு நீங்கும் சாமிதாசிடம், ‘நான் எப்பவும் உன் பிலோமி தான். நின்னு கூப்பிட்டா வந்து பார்க்கப்போறேன்’ என்று அவளால் மட்டும்தான் சொல்ல முடியும்.

மைக்கேல் என்கிற மீனவனின் ஊடாக வல்லம் எனும் நாட்டுப்படகுகளை லாஞ்சிக்கள் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் அழித்து வெல்ல ஆரம்பித்த கதையை விவரிக்கிறார். அன்பு வடிவான மணப்பாட்டு மனிதர்கள். குடித்து ஆற்றாமைகள் ஆற்றும் ஆண்கள் அடித்துக்கொள்கிறார்கள். கொலையும், வஞ்சமும் இந்தப் போட்டியால் நிறைகிறது. பின் அது கதையில் ஒரு ஓரத்துக்கு அனுப்பப்படுகிறது.

மரியம்மையை எல்லாரும் நேசிக்கிறார்கள். ஆனால், யாரும் அவளிடம் அதைச் சொல்லவே இல்லை. இறந்த பிறகு அவளின் பிணத்தின் முன்னால் உள்ளுக்குள் மருகியபடி அவர்கள் நிற்கிறார்கள். இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நாமும் அன்பைச் சொல்லத் தவறிய, வெளிப்படுத்த வெம்பிய நினைவுகள் அலை போல மோதித்தள்ளும்.  கடல் அன்னை வண்ணநிலவனின் காலத்தில் அத்தனை பாவங்கள் செய்த மனிதர்களின் அழுக்குகளைக் கழுவி அன்பால் நிறைப்பதாக எழுதிச்செல்கையில் கடல்புரம் ‘ அன்பு வழியை’ ஒத்த படைப்பாகவே தோன்றுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s