‘பாரதி: கவிஞனும், காப்புரிமையும்’ !


பாரதி இயலுக்குப் பெரும் தொண்டாற்றி வரும் வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் எழுதிய ‘பாரதி: கவிஞனும், காப்புரிமையும்’ நூலை வாசித்து முடித்தேன். பாரதியாரின் பாடல்கள் நாட்டுடமையானதைப் பற்றி இருக்கும் பல்வேறு வாய்மொழிக் கதைகளைத் தகர்க்கும் வகையில் வரலாற்றின் வெளிச்சத்தில் துல்லியமான தரவுகளைக் கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.
பாரதியின் காலத்தில் வெகுகுறைவான அவரின் படைப்புகளே பிரசுரம் ஆகின. பாரத ஜன சபை எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பை தவிர்த்து ஏனைய நூல்கள் ஓரணா, இரண்டணா என்கிற அளவில் விற்கப்பட்டன. அவரின் மறைவுக்குப் பின்னர்ச் செல்லம்மா தன் அண்ணன் அப்பாத்துரை ஐயருடன் இணைந்து பாரதி ஆச்ரமம் என்கிற பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் சுதேச கீதங்கள் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. கடும் பொருள் விரயத்தை இந்த நூல் வெளியீடு உண்டு செய்தது. ஹரிஹர சர்மா எனும் இந்தி பிரச்சாரச் சபை பிரமுகர் புத்தக விற்பனைக்கு உதவ முன்வந்தார்.

இருபத்தி நான்கில் மகளின் திருமணத்துக்காகப் பணம் தேவைப்பட்ட பொழுது, பாரதியின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனான விஸ்வநாத ஐயர் பாரதியின் எழுத்துக்களைக் கொண்டு பணம் பெற்று இரண்டாயிரம் ரூபாயில் திருமணம் நடப்பதை உறுதி செய்தார். ஹரிஹர சர்மா, பாரதியின் இளைய மருமகன் ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்டு பாரதி பிரசுராலயம் எனும் பதிப்பகத்தைத் துவங்கி பாரதி நூல்களைப் பதிப்பித்தார். அரசாங்கம் நூல் விற்பனைக்குத் தடை விதித்தது அதற்கான ஆதரவைக் கூட்டியது. ‘அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது’ என்று முத்திரையிட்டுப் பிரதிகள் விற்கப்பட்டன.
பாரதி பிரசுராலயம் பாரதியின் முழுப் பதிப்புரிமையை நான்காயிரம் ரூபாயை தவணையில் செலுத்தி செல்லம்மாளிடம் இருந்து பெற்றுக்கொண்டது. போலீஸ், அரசாங்க கெடுபிடிகளை மீறி பாரதியின் பல்வேறு நூல்களைத் தேடி விஸ்வநாத ஐயர் பதிப்பித்தார். மற்ற இரு பங்குதாரர்களும் பதிப்பகத்தை விட்டு விலகி விட முழுக் காப்புரிமையும் விஸ்வநாதரிடமே வந்து சேர்ந்தது. இந்த நிறுவனம் ஸுரஜ்மால் லல்லுபாய் கம்பெனிக்கு ‘இசைத்தட்டுகள், பேசியும் படங்கள், பிற ஒலிப்பதிவுக் கருவிவழிப் பதிவுகளைச் செய்யும் உரிமையை நானூற்றி ஐம்பது ரூபாய்க்கு கைமாற்றியது. ‘நாம் இருவர்’ திரைப்படத்தில் பாரதியின் பாடல்களைப் பயன்படுத்த ஒட்டுமொத்த ஒலிபரப்பு உரிமையையும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 9,5௦௦ ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டார்.
பாரதி நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்கிற கோரிக்கை அவ்வப்பொழுது எழுந்தது. பாரதியின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பேசிய ஜீவா அவர்கள்,’பாரதி இலக்கியம் மக்களின் பொது உடைமை…பாரதி நூல்களை விஸ்வநாத ஐயர் பொதுவுடைமை ஆக்கவேண்டும். அவ்வாறு அவர் முன்வந்தால் தமிழ்மக்களின் நன்றி அவருக்கு என்றும் உரியதாகும்.’ என்று சொன்னார். இதே கருத்தை பாரதியின் தம்பி போலத் திகழ்ந்த பரலி சு.நெல்லையப்பரும் அதே விழாவில் பிரதிபலித்தார்.
ஒரு வக்கீல் நோட்டீஸ் பாரதியின் நூல்களை நாட்டுடைமை ஆக்கும் பணியை முடுக்கிவிட்டது. டி.கே.சண்முகம் அவர்கள் நாடகத்துறையில் முன்னோடி. அவ்வை சண்முகம் என்று அறியப்பட்ட அவரின் நிறுவனமே தமிழகத்தின் முதல் சமூகப் படமான மேனகையைத் தயாரித்தது. அவர்கள் உருவாக்கிய ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப்படமாக்க முனைந்த பொழுது, கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப் போல-வெளியே சுடர் விளக்கினைப் போல…’ எனும் பாடலை திரைப்படத்தில் இணைத்து இருந்தார். ஒலிபரப்பு உரிமையைத் தன்வசம் வைத்திருந்த ஏ/.வி.எம். தன்னுடைய வசமிருக்கும் பாடல் உரிமையைப் பயன்படுத்தினால் இழப்பீடாக ஐம்பாதாயிரம் தரவேண்டும் என்று அந்த நோட்டீஸ் சொல்லியது.
ஒரே நாளில் பாரதியின் பாடல்கள் தனிநபரின் சொத்தாக இருக்கலாமா என்று அவ்வை சண்முகம் அவர்கள் முதல்வர் ஓமந்தூரார், உணவு-சுகாதார அமைச்சர் ராஜன் ஆகியோருக்குக் கடிதம் வரைந்தார். தமிழ்நாட்டின் அமரகவியைப் பெட்டியில் பூட்டிவைத்து வியாபாரம் நடத்த முயலும் வேடிக்கையை அனுமதிக்கக் கூடாது என்று குமுறினார். மேலும் பாரதி விடுதலைக் கழகத்தின் முதல் கூட்டத்தை நாரண. துரைக்கண்ணனை தலைவராகக் கொண்டு நடத்தினார்கள். நெல்லையில் இவர்களோடு, பரலி. சு.நெல்லையப்பர், பேராசிரியர் அ.சீனிவாசராகவன் ஆகியோர் பாரதியின் மனைவி,மகள் ஆகியோரை சந்தித்துப் பாரதியின் எழுத்துக்கள் பொதுச்சொத்தாவதில் தங்களுக்குத் தடையில்லை என்று எழுத்துப் பூர்வமாக அனுமதி பெற்றார்கள். தாங்கள் வறுமையில் வாடிவருவதால், அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள். சட்டப்பூர்வமான உரிமை அவர்களிடம் இல்லையென்றாலும் அவர்களின் ஒப்புதலும், நிலைமையும் தார்மீக பலமாகப் பாரதி நாட்டுடைமைக்குப் பயன்பட்டன.
நாரண.துரைக்கண்ணன் பாரதி யாத்திரைக்காகப் புறப்பட்ட வேளையில் நலிவுற்று இருந்த அவரின் நான்கு வயது மகன் அவர் திரும்பி வருவதற்குள் மரணமுற்று அவனின் இறுதிச்சடங்குகள் நிகழ்ந்திருந்தன. இது மேலும் ஒரு உணர்வுப்பூர்வமான உத்வேகத்தை இயக்கத்துக்குத் தந்தது. பில்ஹணன் தயாரிப்பில் தொடர்புடைய பிறரையும் எதிர்வாதிகளாக இணைத்துக் கொண்டு ஏ.வி.எம். கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கிடை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். தனக்கு உரிமை இருப்பதைக் காட்டும் ஆவணங்களையும் அவர் இணைத்து இருந்தார்.
சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில், ஓமந்தூரார் சட்டத்துறை செயலாளர், கல்வி மந்திரி ஆகியோரை செயல்படுமாறு அறிவுறுத்தினார். கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் பாரதி நாட்டுடைமையாக்கதில் தனி ஈடுபாடு காட்டினார். ‘பாரதியின் எழுத்துக்களின் சட்ட உரிமைகளைப் பொதுவுடைமை ஆக்க கிளர்ச்சி நடக்கிறது. இதைக் கையகப்படுத்த இயலுமா என்று பரிசீலிக்க வேண்டும்.’ என்று குறிப்பு எழுதினார். அரசுத்துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவே இயங்கினார்கள். கோவை ஆட்சியரிடம் ஏ.வி.எம். தொடுத்த வழக்கின் நிலவரங்கள் கோரப்பட்டன. அவ்வை சண்முகம் அரசுக்கு பல்வேறு ஆவணங்களை அனுப்பி வைத்தார்.
ஏ.வி.எம். தான் ‘தூண்டில் புழுவைப் போல’ பாடலை பாதாள உலகம் படத்தில் பயன்படுத்துவதால் அதைப் பயன்படுத்த முயலும் சண்முகம் சகோதரர்கள் தனக்குப் பதினோராயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டார். இதற்கு முன் வெவ்வேறு படங்களில் பாரதி பாடல்கள் பயன்படுத்தப்பட்ட பொழுது ஏ.வி.எம். எதிர்ப்பு தெரிவிக்காததைச் சண்முகம் தரப்பு எடுத்துக்காட்டியது.
ஓராண்டுக்கு மேல் ஒலிபரப்பு உரிமையைத் தக்க வைக்கப் போராட்டம் நடத்தியும் முதல்வரை சந்தித்த பிறகு அரசு நாட்டுடைமை ஆக்குவதில் தீவிரமாக இருப்பதைக் கண்டுகொண்டார் ஏ.வி.எம். பாரதியின் நூல்கள், பாடல்கள் ஆகியவற்றின் நாட்டுடமையாக்கத்துக்குப் பெரும் போராட்டம் ஏற்பட்ட நிலையில் 2-6-1948-ல் தானே முன்வந்து ஒலிபரப்பு உரிமையை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தார். பாரதியின் பாடல்கள் சிலவற்றைத் தமிழகம் முழுக்க ஒலிக்கச்செய்யவே ஒலிபரப்பு உரிமையை வாங்கியதாகச் சொன்ன ஏ.வி.எம். பாரதியின் பாடல்களை உயர்தரக் கலைஞர்களைக் கொண்டே பாடுவிக்க வேண்டும் என்றார். வெகுமக்களால் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயம், பாடப்படும் முறை குறை கூற முடியாததாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எந்தப் பணமும் பெறாமல் பாரதியின் ஒலிபரப்பு உரிமையைப் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்தச் செயலின் மூலம் அவர் ஏற்படுத்தினார்.

பாரதியின் எழுத்துக்களின் உரிமையை விஸ்வநாத ஐயரிடம் இருந்து பெறும் முயற்சிகள் துவங்கின. அவர் பாரதியின் எழுத்துக்களைப் பிழைகளோடு அச்சிட்டதோடு, கொள்ளை லாபம் பார்ப்பதாகத் தூற்றினார்கள். தன்னுடைய ஆரம்பகட்ட பதிப்புகள் பிழைகள் இருந்தாலும் அவை போகப்போகச் சரி செய்யப்பட்டதையும், இரண்டு ரூபாய் சொச்சத்துக்குப் பல நூறு பக்க பாரதி நூல்களை விற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். பதினைந்தாயிரம் ரூபாய்க்கு பாரதியின் எழுத்துக்களைப் பள்ளிக்கூட ஆசிரியரான அவர் விட்டுக்கொடுத்ததோடு, பாரதியின் கையெழுத்துப் பிரதிகளை இலவசமாக அரசுக்கு ஒப்புவித்தார்..

1949-ம் வருடம் மார்ச் மாதத்தில் பாரதியின் எழுத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டதாக அவினாசிலிங்கம் சட்டசபையில் அறிவித்தார். பாரதியின் மனைவி, மகள்களுக்குப் பதினைந்தாயிரம் தரப்பட்டதும் மே 1 அன்று எழுத்துப்பூர்வமாகத் தங்களின் உரிமையை விட்டுக்கொடுத்தார்கள். விஸ்வநாத ஐயர் ஏற்கனவே விற்காமல் இருக்கும் பாரதியின் பிரதிகளை விற்க ஓராண்டு அனுமதி பெற்றார், பின்னர் மேலும் சிலகாலம் நீட்டிப்பிற்குப் பிறகு விற்க முடியாத நூல்களை முப்பது சதவிகித கழிவில் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு அரசிடமே விற்றார்.
பாரதியின் எழுத்துக்களை அச்சிட அரசு மு.வ., ரா.பி.சேதுப்பிள்ளை பரலி.சு.நெல்லையப்பர், கி.வா.ஜ முதலியோரைக் கொண்ட குழுவை அரசு அமைத்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து ஏழரை ரூபாய் என்கிற அதிக விலையில் முதல் தொகுப்பு வெளிவந்தது. இதற்குக் கடும் கண்டனம் வெளிப்பட்டது. இதனைத் தொடர்ந்து காமராஜர் காலத்தில் அரசுடமையாக இருந்த பாரதியின் பாடல்கள் நாட்டுடைமை ஆகின. பாரதியின் உரைநடை முழுவதும் வெளிவந்து நாட்டுடைமை ஆக மேலும் எட்டு ஆண்டுகள் பிடித்தன.
இந்த நாட்டுடைமை முயற்சியால் பாரதியின் எழுத்துக்கள் பொதுமக்களை அவர் ஆசைப்பட்டது போல ஜப்பானிய தீப்பெட்டி போலப் பரவலாகச் சென்று சேர்ந்தன. அவரைப்பற்றிய வெவ்வேறு புதிய ஆக்கங்கள் வெளிவந்தன. பாரதி நூல்கள் மலிவு விலையில் மக்களைச் சென்றடைந்தன. திமுக அரசு பாரதிதாசன் எழுத்துக்களை நாட்டுடமையாக்கியது.

பாரதிக்குப் பிறகு அதிமுக அரசு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , அண்ணா ஆகியோரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்குவதில் குளறுபடிகளும் உண்டு. ஆனந்த விகடனில் கல்கி எழுதிய எழுத்துக்களின் காப்புரிமை வாசன் வசமே இருந்தது. கல்கியின் மறைவுக்குப் பின்னரே அதை வாசன் விட்டுக்கொடுத்தார். அகிலனும் பெரும் உரிமைப் போராட்டம் நடத்தியே தன்னுடைய காப்புரிமையை ஆனந்த விகடனிடம் இருந்து மீட்டார். அதற்குப் பின்னரே எழுத்தாளர்களுக்கே எழுத்துரிமை என்று தன்னுடைய நிலையை விகடன் மாற்றிக்கொண்டது. சைவ சித்தாந்த கழகம் பல லட்சம் பிரதிகள் திருக்குறள் உரையை விற்ற பொழுதும் மு.வ.வுக்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. அதனால் தானே பதிப்பகம் துவங்கி நூல்களை விற்றார். அவரின் வாரிசுகளின் அனுமதி இல்லாமல் நூல்களை அரசு நாட்டுடைமை ஆக்கி பின்னர் அதனைத் திரும்பப்பெற்றது. புதுமைப்பித்தன், கண்ணதாசன் நூல்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டது. புதுமைப்பித்தனுக்கு ஐந்து லட்சம், சக்தி கோவிந்தனுக்கு ஐந்து லட்சம் என்று அரசு ஒரே தராசைக் கையாள்வதும் கேள்விக்குரியது.
நேருவின் மறைவுக்கு அறுபது வருடங்களுக்குப் பிறகும் சோனியா காந்தி வசமே நூல்களின் காப்புரிமை இருக்கிறது. காந்தியின் நூல்களின் காப்புரிமை நவஜீவன் அமைப்பிடம் இருந்து சமீபத்தில் தான் பொதுவெளிக்கு வந்தது. தாகூரின் நூல்களுக்கான காப்புரிமையைச் சிறப்பு விதிவிலக்காக விஸ்வபாரதிக்கு உதவும் வண்ணம் காங்கிரஸ் அரசு பத்து ஆண்டுகள் நீட்டித்தது. நம்பூதிரிபாட்டின் எழுத்துக்களை இன்னமும் தங்கள் வசமே வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்கள் அதை ஆதரித்தார்கள் என்று பதிகிற ஆசிரியர் தாகூரின் எழுத்துக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதையும் இணைத்துப் பதிந்திருக்கலாம். அதோடு விஸ்வநாத ஐயரின்,’தொண்டா, லாப வணிகமா’ அறிக்கையை மொழிபெயர்க்கையில் ‘மிளகாய் பானையில்’- ‘ஊறுகாய் பானையாக’ மாறிப்போயிருக்கிறது. பக்கம் 61-ன் முதல் பத்தியில் இறுதி வாக்கியம் முடிவுறாமல் போயிருக்கிறது. மற்றபடி பாரதி இயலுக்கு மகத்தான பங்களிப்பு இந்நூல்.

ஆசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி
பக்கங்கள் : 152
விலை: 12௦
காலச்சுவடு பதிப்பகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s