‘மதுவிலக்கு அரசியலும் வரலாறும்’


‘தரவுகள் தரப்படுகிற பொழுது நான் என்னுடைய கருத்துக்களை மாற்றிக்கொள்கிறேன். நீங்கள் எப்படி?’ – மெய்னார்ட் கெய்ன்ஸ்
மதுவிலக்குச் சமீபத்தில் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்ததைக் கண்டோம். அதிலும் காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்துக்குப் பிறகு இன்னமும் அந்தக் கோரிக்கை வலுப்பெற்றதையும் காண முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை மதுவிலக்கின் வரலாறு என்பது எப்படி இருந்தது என்பதை அண்ணன் ஆர்.முத்துக்குமார் தன்னுடைய ‘மதுவிலக்கு அரசியலும் வரலாறும்’ நூலின் மூலம் விறுவிறுவென்று விவரித்து இருக்கிறார்.
மதுவிலக்கு என்பது காங்கிரசின் முக்கிய அரசியல் முன்னெடுப்பாக விடுதலைக்கு முந்தைய காலத்தில் இருந்தது. தமிழகத்தில் கள்ளுக்கடை போராட்டத்தை நடத்துவது என்கிற முடிவு பெரியாரின் வீட்டில் காந்தியடிகளால் எடுக்கப்பட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பெரியார் வெட்டி வீழ்த்தினார்.
கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் தேர்தல் அரசியலில் பங்கேற்கலாமா வேண்டாமா என்கிற விஷயத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்தது. சுயராஜ்யக் கட்சி எனும் பெயரில் மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், சத்தியமூர்த்தி முதலியோர் தேர்தலில் பங்குபெறுவது என்று முடிவு செய்து களம் புகுந்தார்கள். நீதிக்கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவது சத்தியமூர்த்தியின் பிரதான இலக்காக இருந்தது. ராஜாஜிக்கு மதுவிலக்கு என்பது பிரதான பிரச்சனையாகத் தெரிந்தது. சத்தியமூர்த்தியோ ‘நான் குடிகாரர்கள் நிரம்பிய நாட்டின் பிரஜையாக இருப்பேனே ஒழிய, குடிகாரர்கள் இல்லாத அடிமை நாட்டின் பிரஜையாக இருக்கமாட்டேன்.’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
தேசிய அளவில் மதுவிலக்குப் பிரச்சாரத்தை ராஜாஜி காந்தியுடன் ஒத்துழைப்போடு முடுக்கினார்.

மதுவிலக்குக்கான ராஜாஜியின் செயல்திட்டத்தைக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டு அதனைச் செயல்படுத்த அன்சாரி, படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோரைக்கொண்ட குழு அமைக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் அப்பொழுது 11034 சாராயக்கடைகள் 6352 கள்ளுக்கடைகளில் 11 கோடி காலன் கள்ளும், 16,75,000 காலன் சாராயமும் அப்பொழுது விற்பனையாகின. தேர்தலில் வென்று சட்டசபைகளில் ஆங்கிலேய அரசுக்கு முட்டுக்கட்டை உண்டு செய்வோம் என்கிற கொள்கை கொண்டிருந்த சுயராஜ்யக்கட்சி மதுவிலக்கை தீவிரமாக முன்னெடுத்தால் தேர்தல் களத்தில் ஆதரவு தருவோம் என்று காங்கிரசின் ராஜாஜி உத்வேகப்படுத்தினார். சுயராஜ்ய கட்சியின் ஒத்துழைப்போடு சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சியை வீழ்த்துவதையும் சாதித்தார்கள்.
சென்னை மாகாண அரசு மதுவிலக்கு பிரச்சாரத்துக்கு என்று ஐந்து லட்சம் ஒதுக்கியது. ராஜாஜி திருச்செங்கோட்டுக்கு அருகில் காந்தி ஆசிரமத்தை நிறுவி மதுவிலக்குப் பிரச்சாரத்தைத் தன்னுடைய prohibition, விமோசனம் முதலிய இதழ்களின் மூலம் பிரபலப்படுத்தினார். 1929-ல் காட்டெரல் எனும் சென்னை மாகாண கலால் ஆணையர் இத்தகு செயல்பாடுகளால் பெரிதும் கவரப்பட்டார். திருச்செங்கோட்டை சுற்றியுள்ள 31 கடைகளில் மட்டும் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தி அதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற பகுதிகளுக்கு நீட்டிப்பதை பற்றி யோசிக்கலாம் என்று பரிந்துரைத்தார். அது அமலுக்கு வந்தது, அடுத்து ராசிபுரம் பகுதியின் 22 மதுக்கடைகள் மூடப்பட்டன.

 

மூன்று ஆண்டுகள் அமலுக்கு இருந்த மதுவிலக்கை செயல்படுத்த அதிகச் செலவு ஆனதும்,. பக்கத்துத் தாலுக்காகளில் மதுவிலக்கு இல்லாததும் அத்தோடு மதுவிலக்கை கைவிட வைத்தது. சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கள்ளுக்கடை மறியலில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு மது வருமானம் குறைந்ததும் கடைகளைக் கூடுதல் நேரம் திறந்து இழப்பை ஈடுகட்டியது அரசு.
1935-ன் இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெருவெற்றியைப் பெற்று இருந்தது. சென்னை மாகாணத்தில் முதல்வர் ஆன ராஜாஜி மதுவிலக்கை எல்லா இடத்திலும் உடனே அமல்படுத்தவில்லை. பீகார்,மும்பை ஆகியவற்றோடு சென்னை மாகாணத்திலும் படிப்படியாக மதுவிலக்கை அறிமுகப்படுத்தி அதற்குக் கிடைக்கும் ஆதரவு, எதிர்ப்பு, பலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அதனை விரிவுபடுத்துவதைப் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

 

சென்னை மாகாணத்தின் இருபத்தி ஐந்து மாவட்டங்களில் சேலத்தில் முதலில் மதுவிலக்கை ராஜாஜி அமல்படுத்தினார். ‘சொந்த மாவட்டத்தில் மட்டும் ராஜாஜி மதுவிலக்கை அமல்படுத்த காரணம் என்ன?’ என்று கேட்கப்பட்ட பொழுது, ‘ராவணன் அசோக மரத்தின் கீழ் சீதையைச் சிறைவைத்தற்குக் காரணம் அவனுக்கு அசோக மர புஷ்பம் பிடிக்கும் என்பதா?’. மதுவிலக்கை அமல்படுத்த டிக்ஸன், தாம்சன் ஆகிய ஆங்கிலேய அதிகாரிகளை ராஜாஜி நியமித்தார். கேளிக்கை விடுதிகள், உணவு விடுதிகள் ஆகியவற்றோடு கிறிஸ்துவ மதச்சடங்குகளில் மதுப்பயன்பாடு தடை செய்யப்படவில்லை. அனுமதியை மீறிக்குடிப்பவர்களுக்கு அபராதம் ஐநூறில் இருந்து ஐந்து ரூபாயாகக் குறைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க ராஜாஜி விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்து சித்தூர், கடப்பா, வட ஆற்காடு மாவட்டங்கள் மதுவிலக்கு வட்டத்துக்கு வந்தன. என்றாலும், பூரண மதுவிலக்கை ராஜாஜி அமல்படுத்தவில்லை. வருவாய் இழப்பு, நிதி நெருக்கடியை சமாளிக்கப் பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாக எழுந்த விமர்சனங்கள், கள்ளச்சாராயச் சாவுகள் ஆகியவை இருப்பினும் மதுவிலக்கு தொடர்ந்து கொண்டிருந்தது.

உலகப்போரில் இந்தியர்களைக் காங்கிரஸ் விருப்பமின்றிப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸ் மாகாண அரசுகள் பதவி விலகின.மதுவிலக்கு ராஜாஜியின் ஆட்சி போனதோடு ஒழிந்து போனது. மீண்டும் மது விற்பனை களைகட்டியது. பூரண மதுவிலக்கு விடுதலைக்குப் பின் சாத்தியமாகும் தருணமும் வந்தது.
சென்னை மாகாணத்தின் முதல்வராக விடுதலைக்குப் பின்னர்ப் பதவியேற்ற பழுத்த காந்தியவாதி ஓமந்தூரார் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்,. அறநிலையத் துறை சீர்திருத்தம், கட்சி சிபாரிசு நிராகரிப்பு ஆகியவற்றில் தீவிரம் காட்டியதோடு பூரண மதுவிலக்கை அக்டோபர் 2,1948-ல் அமல்படுத்தினார். அவரைக் கட்சியினரே ஆட்சியைவிட்டு அனுப்பினார்கள்./அடுத்து வந்த குமாரசாமி ராஜாவும் சாராயம் காய்ச்சும் தொழிலை கைவிட்டவர்களுக்கு மாற்றுத்தொழிலுக்கு வழிகள் செய்தார்.
முதல் சட்டசபைத் தேர்தலில் அரிசிப் பஞ்சம் முதலிய பல்வேறு காரணங்களால் அறுதிப் பெரும்பான்மைக்கு நாற்பது இடங்கள் குறைவாக இருந்தும் ராஜாஜியின் கீழ் ஆட்சியைக் காங்கிரஸ் பிடித்தது. ராஜாஜி மதுவிலக்கை சென்னை மாகாணம், மும்பை ஆகியவற்றோடு நிறுத்தாமல் இந்தியா முழுக்கச் செயல்படுத்த வேண்டுகோள் விடுத்தார். நேருவின் அரசு ஸ்ரீமன் நாராயணன் கமிட்டியை இதற்காக அமைத்தது. பூரண மதுவிலக்கை இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் இணைக்க வேண்டும், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்பது முதலிய பல்வேறு பரிந்துரைகள் அக்குழுவால் வைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்களவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மதுக்கடைகள் குறைப்பு, ஆரோக்கியமான குளிர்பானங்கள் தயாரிப்பு முதலிய எட்டு கூடுதல் புள்ளிகளை இணைத்துக்கொண்டது. மதுவிலக்கை அமல்படுத்தும் விதத்தைக் கண்காணிக்க மத்திய மதுவிலக்கு கமிட்டி அமைக்கப்பட்டது. அதற்கு ஆலோசனைகளைத் தயாரித்துத் தர டேக் சந்த் கமிட்டி அமைக்கப்பட்டது.
இதே காலத்தில் தியாகி சங்கரலிங்கனார் இந்தியா முழுவதுக்கும் மதுவிலக்கு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் முதலிய கோரிக்கைகளை வைத்து உண்ணாநோன்பு இருந்து உயிர் துறந்தார். இந்தியாவின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு பகுதியில் ஓரளவுக்கு மதுவிலக்கு அமலில் இருந்தது. இந்த நிலையை மாற்ற மிகக்கடுமையான பரிந்துரைகளை முன்வைத்தது டேக் சந்த் கமிட்டி. மதுவிலக்கை மீறுபவர்களைப் பிணையில் வெளிவரமுடியாத வகையில் கைதுசெய்வது, சொத்துப் பறிமுதல், அரசுப் பணிகளை விட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் ஆகிய பரிந்துரைகளோடு காந்தி நூற்றாண்டு வருடத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும் அது அரசுக்கு அறிவுறுத்தியது. வருமான இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு முன்வர வேண்டும் என்பதை மத்திய அரசுகள் சட்டை செய்யவேயில்லை.
பூரண மதுவிலக்கு என்று சொல்லப்பட்டாலும் மருத்துவர்கள் மதுவைக் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்குப் பெர்மிட் தரப்பட்டு இருந்தது. அதைப் பலரும் தவறாகப் பயன்படுத்துவது தொடர்ந்தது, மதுவிலக்கு ஒழுங்காக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேறு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றார். மதுவிலக்கை பற்றித் திமுகத் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லாத நிலையில் மதுவிலக்கு தொடரும் என்று அறிவித்தது எதிர்க்கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காமராஜர் முதல் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டுப் பத்திரங்கள் வாசித்தார்கள். பெரியாரோ வேறுவகையாக இதைப் பார்த்தார். ராஜாஜி 2600 பள்ளிகளைக் கிராமப்புறத்தில் மதுவிலக்கால் ஏற்பட்ட இழப்பைச் சரிகட்ட மூடினார் என்றும், மது உற்பத்தித் தொழில் நாட்டில் அயோக்கியர்கள், நாணயம் இல்லாதவர்களைப் பெருக்கி வருகிறது எனவும், தேவைப்பட்டவர்களுக்கு மது கிடைக்கும்படியும், அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கவும் வழி செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அண்ணாவோ மதுவிலக்கில் உறுதியாக இருந்தார். மதுவிலக்கை நீக்கினால் பதினொரு கோடி வருமானம் வருமென்று சற்றே சபலம் தட்டினாலும், அழுகின்ற தாய்மார்கள், கவனிப்பாரற்று இருக்கும் குழந்தைகள், நலிந்துபோன குடும்பம் நினைவுக்குவர அதை அமல்படுத்தவில்லை என்றும், மத்திய அரசு அதனை ஈடுகட்ட வேண்டும் என்றும் கோரினார்.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி பதவியேற்றதும் மதுவிலக்குச் சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று பரவலாகக் கருதப்பட்டது. காமராஜர் அமைச்சர்கள் இருவர் விழாவில் மது அருந்தியதாகப் பிரச்சனையை எழுப்பினார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நடத்திய விழா அது என்று சொல்லப்பட்ட சூழலில், பெர்மிட் வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கண்ணதாசன், ஜெயகாந்தன் குறித்துக் காமராஜர் ஏன் குரல் கொடுக்கவில்லை, தன்னுடைய சுயகவுரவம் இதனால் பாதிக்கப்பட்டது என்று எதிர்க்குரல் எழுப்பினார். காமராஜர் அப்படிப் பேசவில்லை என்று வக்கீல் சொன்னதோடு சிக்கல் முடிவுக்கு வந்தது. இதே ‘காந்தியவாதி’யான மகாலிங்கத்தின் வாரிசுகள் மது தயாரிக்கும் தொழிலில் அமோகமாக ஈடுபட்டு வருவது ஏனோ இதை வாசித்ததும் நினைவுக்கு வந்தது.
13/9/69 அன்று திமுகப் பொருளாளர் எம்ஜிஆர் வெளியிட்ட அறிக்கை திமுகவின் போக்கு மாறுகிறது என்பது கோடிட்டுக்காட்டியது. மதுவிலக்கினால் ஏற்கனவே இருக்கும் மதுத்தீமை குறையாமல் அதிகரித்தே உள்ளது; சுற்றியுள்ள மாநிலங்கள் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டிய பொழுதிலும் லட்சியப்பூர்வமாகத் தமிழகம் இருந்தும் அது பூரணமாக நிறைவேறவில்லை என்கிற போக்கில் சென்றது அந்த அறிக்கை. இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துச் சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற திமுகத் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இப்படி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்: நான்கு பக்கமும் வேடர்களால் சூழப்பட்ட மான் போலத் தமிழகம் இருக்கிறது. இதனால் ஏற்படும் நட்டத்தில் இருந்து காக்க மத்திய அரசு உதவ வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த பொழுது அதன்கீழ் உதவிக் கேட்ட பொழுது, ‘ஏற்கனவே மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலங்களுக்கு இச்சலுகை இல்லை!’ என்று கறாராகக் கைவிரித்து விட்டது மத்திய அரசு.
மதுரையில் நடந்த திமுகவின் பொதுக்குழுத் தீர்மானம் மதுவிலக்கு நீக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ராஜாஜி, காயிதே மில்லத் ஆகிய இருவரும் இப்படிப்பட்ட முடிவை அரசு எடுக்கக்கூடாது என்று தீவிரமாகக் குரல் கொடுத்தனர். கோவையில் மதுவிலக்கு நீக்கம் என்று திமுகத் தீர்மானம் கொண்டுவந்த பொழுது தன்னளவில் ஆரம்பத்தில் மதுவிலக்கு நீக்கத்தில் விருப்பமில்லாமல் இருந்தாலும் ஆதரவு தெரிவித்தார் எம்ஜிஆர். நிதிநிலைச்சிக்கல், தற்காலிக ஏற்பாடுதான் ஆகிய காரணங்கள் அவர் அதனை ஆதரிக்கக் காரணம் என்று சொல்லப்பட்டது. கோவை சிதம்பரம் பூங்காவில் பேசிய எம்ஜிஆர் மத்திய அரசு துப்பாக்கி, கத்தி தங்களை நோக்கிப் பாயக் காத்திருக்கும் பொழுது உதவாமல் இருக்கலாமா என்றும், மதுவிலக்கு தொடரலாமா என்று தாய்மார்கள் வாக்களித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் பேசினார்

.
ராஜாஜி கொட்டும் மழையில் தள்ளாடும் வயதில் சென்று கோரிக்கை வைத்தும், காயிதே மில்லத் வேண்டிக்கேட்டுக் கொண்ட பின்னும் ஆகஸ்ட் 3௦,1971 அன்று மதுவிலக்குச் சட்டம் செயல்படாது என்று அறிவிப்பு வெளியானது. அதே வருடம் ஜூன் மாதத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் தொடங்கி மது சார்ந்த குற்றங்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக்கொண்டு போவதை எம்ஜிஆர் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டார். தமிழகத்தில் மது அருந்தும் ஆசை அதிகரிக்கப்பட்டுவிட்டது என்று இது காட்டுகிறது என்று அவர் ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் பதிந்தார்.
கோர்ட் படியேறி இந்தச் சட்டத்தைத் தவிர்க்க முயற்சிகள் ஹண்டே முதலியோரால் எடுக்கப்பட்ட பொழுதும், அவசரச்சட்டத்தின் மூலம் மதுவிலக்கை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 12 அன்று எம்ஜிஆர் அவர்களே மதுவின் தீமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்யும் குழுவின் தலைவர் ஆக்கப்பட்டார். மாணவர்கள் மதுவிலக்குப் போராட்டத்தில் பங்குபெற வேண்டும் என்று ஊக்குவித்தார் எம்ஜிஆர். ஆகஸ்ட் இறுதியில் மதுவிலக்கு ஒத்திவைப்பு அமலுக்கு வந்ததும் 7395 கள்ளுக்கடைகளும் 3512 சாராயக்கடைகளும் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன. மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் மதுவை வாங்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ராஜாஜி கொதித்துப்போய்க் கல்கியில் ‘சாராயச் சகாப்தம்’ என்கிற பெயரில் கவிதை எழுதி அரசைச் சாடினார். எண்ணற்ற மக்களின் கண்ணீரை சிந்திக்காமல் செயல்படலாமா என்கிற தொனியில் அக்கவிதை முடிந்திருந்தது. இதற்குப் பதில் சொல்லும் வகையில், ‘கிழ பிராமணா, உன் வாக்குப் பலித்தது’ எனக் கவிதை தீட்டிய கருணாநிதி ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரிசாவில் ஏன் மதுவிலக்கு அமலுக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்தியா முழுமைக்கும் மதுவிலக்கு வருமென்றால் தான் சிரந்தாழ்த்தி அதை ஏற்பதாகவும் சொன்னார். கொழுந்து விட்டு எரியும் தீக்கு நடுவில் கற்பூரமாகத் தமிழகம் இருக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
திமுகவின் இப்படிப்பட்ட இருமுனைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா முழுக்க மதுவிலக்கு கொண்டுவரும் திட்டம் இருப்பதாக இந்திரா காந்தி அறிவித்திருக்கிறார் என்று எம்ஜிஆர் சொன்னார். இது அரசுக்கும், தான் முன்னின்று நடத்திய பிரச்சாரத்துக்கும் கிடைத்த தார்மீக வெற்றி என்று அவர் சொன்னார். அண்ணாவின் பிறந்தநாள் முதல் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் தீவிரமாக ஈடுபட இருப்பதாக அறிவித்தார். இவை அரசுக்கு எதிரான கருத்தை மக்களிடம் கொண்டு போகின்றன என்று கட்சியிலேயே முணுமுணுப்பு எழுந்த சூழலில் பல்வேறு காரணங்களுக்காக எம்ஜிஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இரண்டே வருடத்துக்குள் மீண்டும் மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவந்தது. கள்ளுக்கடைகள், சாராயக்கடைகளை அடுத்ததடுத்த ஆண்டுகளில் மூட இருப்பதால் முப்பது கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும், அதை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவின் தலைவர் பிரம்மானந்த ரெட்டிக்குக் கடிதம் எழுதினார் கருணாநிதி. எப்பொழுதும் போல் மத்திய அரசிடம் கனத்த மவுனம்.
பூரண மதுவிலக்கின் மூலம் அரசுக்கு 56 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்ற சூழலிலும் அதைச் செயல்படுத்துவதாகக் கருணாநிதி அறிவித்தார். எமெர்ஜென்சி ஏற்பட்டு திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனந்த விகடனிலும், தாய் இதழில் பத்து அத்தியாயங்களுக்கு மேல் மதுவிலக்கை ஒத்தி வைக்க வேண்டியதன் அவசியத்தை அழுத்திப் பேசிய எம்ஜிஆர் எமெர்ஜென்சி காலத்தில் மதுவிலக்கு ஆளுனரால் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பொழுது ‘என் இறுதிமூச்சு வரை மதுவிலக்கை நிறைவேற்றுவேன் என்று என்னைப்பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக்கொள்கிறேன்.’ என்று பேசினார்.
ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டங்களை மேலும் கடுமையாக்கினார். முதல் முறை பிடிபட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அடுத்தடுத்த முறைகள் ஏழு ஆண்டுகள் தண்டனை, நாடு கடத்தல் என்று சட்டங்கள் நீண்டன. அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் – ஒரு வருடம் தண்டனை என்று அறிவித்த அவர் அமைச்சர்களும் அதில் சேர்க்கப்படுவர் என்று சொன்னாலும் சட்டமாக வந்த பொழுது நேரடியாக அமைச்சர்கள் அதில் சேர்க்கப்படவில்லை. அரசு ஊழியர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டதைத் திமுக விமர்சிக்க, மதுவிலக்கை காப்பவர்கள் அனைவரையுமே அது குறிக்கும் என்றது அதிமுக அரசு.
இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வர இருந்த பொழுது நீதிபதி ராம பிரசாத் ராவ் ‘இது லஞ்சம், ஊழலை அதிகப்படுத்தும்!’ என்று கவலை தெரிவித்தார். முன்னர் மதுவிலக்கை திமுகத் திரும்பப்பெற்ற பொழுது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கல்யாணசுந்தரம் அதை வரவேற்றார். அதைப்போலவே இப்பொழுது இந்தச் சட்டத்திருத்தத்தை ‘கொடுங்கோன்மையானது’ என்று ஆரம்பகட்டத்திலேயே என்.சங்கரய்யா எதிர்த்தார். தாய்மார்களின் கண்ணீர் துடைக்க இப்படிச் சட்டம் இயற்றுவதாக எம்ஜிஆர் சொன்னார்.
தீவிரமான சட்டத்தை நிறைவேற்றினாலும், இருதய நோயாளிகள் இருபத்தைந்து ரூபாய் செலுத்தி பெர்மிட் பெறலாம் என்று விதியை தளர்த்தியது. 2௦/9/79 அன்று எம்ஜிஆர் மது அருந்திய குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும்,. மது அருந்துபவர்கள் இனிமேல் கைது செய்யப்படமாட்டார்கள் எனவும் அறிவித்தார். சட்டத்தை ஒரே அறிக்கையின் மூலம் மாற்றிக்கொள்ள முடியுமா என்று எதிர்க்கட்சிகள் வியந்தன. மக்களவைத் தேர்தலில் இரண்டே தொகுதிகளில் 1980-ல் அதிமுக வென்றது. பெர்மிட் வயது நாற்பதில் இருந்து முப்பதாகக் குறைக்கப்பட்டது. மருத்துவச் சான்றிதழ் தேவை என்கிற விதியும் நீக்கப்பட்டது. இது ஏன் என வினவப்பட்ட பொழுது, ‘தாய்மார்களின் கண்ணீர்த் துடைக்கவே இதைச் செய்கிறேன்!’ என்று எம்ஜிஆர் குறிப்பிட்டார். விஷச்சாராயம், கள்ளச்சாராயம் குடித்துவிட்டு மக்கள் இறந்தும், உடல்நலம் கெட்டும் போகிறார்கள். அதனாலே இப்படியொரு முடிவு என்று விளக்கம் கொடுத்தார்.
எண்பத்தி ஒன்றில் மதுவிலக்கை பெருமளவில் தமிழக அரசு ‘தண்ணீருக்குள் விளக்குக் கொண்டு தேடுவதைப் போல மதுவிலக்கு’ என்று வள்ளுவரை மேற்கோள் காட்டி திரும்பப்பெற்றுக்கொண்டது. தளர்த்திக்கொண்டதாக அரசு சொன்னது. திமுக அரசு ஒத்திவைப்பதாகச் சொன்னது. தாய்மீது செய்த ஆணையை எப்படி எம்ஜிஆர் கைகழுவினார் என்று எதிர்க்கட்சிகள் சாடித்தீர்த்தன. இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளும் விற்பனைக்கு வந்தன. பல்வேறு அவசரச்சட்டங்களின் மூலம் மதுவிலக்குத் தமிழகத்தை விட்டு எம்ஜிஆர் அரசால் காணடிக்கப்பட்டது.

கள்ளுக்கடைகளுக்கு ஏலம், சாராயக்கடைகளுக்கு டெண்டர், ஏலம் என்று ஆரம்பித்த அரசு அடுத்து டாஸ்மாக்கை துவக்கியது. ஓரிரு சாராய வியாபாரிகளுக்குப் பெருத்த வருமானம் செல்கிறது என்கிற திமுகவின் குற்றசாட்டை எதிர்கொள்ளவே இப்படியொரு ஏற்பாடு உருவானது. தனியாரிடம் இருந்து சாராயத்தை மொத்தமாக வாங்கிச் சில்லறை விற்பனை செய்யும் வேலையை டாஸ்மாக் மேற்கொண்டது. நாமினேசன் முறை அமலுக்கு வந்து, முகவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அரசுக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதிகள் தரப்படுவதாக உச்சநீதிமன்றம் வரை வழக்குப் போகவே, பழையபடி ஏலம் மற்றும் டெண்டர் முறையை அரசு கொண்டுவந்தது. எம்ஜிஆர் மதுவிலக்கு விரைவில் அமல் என்று ஒரு போடுபோட்டார். தலைமைச்செயலாளர் மாலை ஆறு மணிக்கு மேல் மதுக்கடைகள் திறந்திருக்காது என்று காலையில் சொல்லிவிட்டு, மாலையே அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
கோயில்கள், பள்ளிகள் ஆகியவற்றுக்கு அருகில் பல்வேறு மதுக்கடைகள் திறக்கப்பட்டதாக எதிர்ப்புக்குரல்கள் மக்களிடம் இருந்து எழுந்த பொழுதுகோயில்கள் என்பது அறநிலையத்துறை கோயில்களையும், பள்ளிகள் என்பது அரசு நடத்தும் பள்ளிகளையுமே குறிக்கும். மற்ற பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றுக்கு இவ்விதி செல்லாது என்றது அரசு. விஷச்சாராயச் சாவுகளும் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. சாராயக்கடைகளில் ஆபாசப்படங்கள் காட்டப்பட்டும் கூட்டம் சேர்க்கப்பட்டது.
மதுவிலக்கை அமல்படுத்துகிறேன் என்று சொன்னாலும் அரசு ஏல முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் நாமினேஷன் முறையை அமலுக்குக் கொண்டு வந்தது. உள்ளாட்சி தேர்தல்கள் பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட பொழுது, தேர்தலுக்கான விளம்பரத்தில்,‘எண்பத்தி ஏழில் மதுக்கடைகளை மூடுவதாக இருந்தால், கருணாநிதி அரசியலைவிட்டு விலகத் தயாரா?’ என்று அதிமுகக் கேட்டது. உடனே மதுவிலக்கை அமல்படுத்தினால் (பிப்ரவரி, 1986) ஓராண்டுக்கு அரசியல் பேசுவதில்லை என்றார் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தலில் தோற்ற பின்பு எம்ஜிஆர் அரசு டெண்டர் மற்றும் முகவர் முறையை மீண்டும் சட்டரீதியாகக் கொண்டுவந்தது. கள் மற்றும் சாராயக்கடைகள் அடுத்தாண்டு ஜனவரி முதல் மூடப்பட்டன. ஆனால், பீர், விஸ்கி, ரம் விற்கும் கடைகள் தொடர்ந்து திறக்கப்பட்டன. அதே வருடத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மதுவகைகளை விற்கும் கடைகள் திறக்கப்பட்டன. எம்ஜிஆர் மரணமடைந்து அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது.
மதுவிலக்கை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்ததும் அது சார்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளுநர் உரை மதுவின் மூலம் பெறும் வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்தது. சாராயச் சாம்ராஜ்ஜியத்தைத் தகர்த்து எறிவதாகச் சொல்லி திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.. எரிசாராயத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட ஆயத்தீர்வை விலக்கு நீக்கப்பட்டது, பீர்,ரம் ஆகியவற்றை விற்க புதிய உரிமங்கள் இல்லை என்று கையை விரித்தது, மேலும், இந்த ரக மதுவகைகளைத் தயாரிக்கும் பொறுப்பு டாஸ்மாக் வசம் போனது. மதுவின் விலையைத் தயாரிக்கும் நிறுவனங்களே முடிவு செய்துகொண்டிருந்த முறையும் முடிவுக்கு வந்தது. மதுவிலக்கு ஆணையரைக் கொண்டு மதுக்கடை விற்பனையை முறைப்படுத்தவும் திமுக அரசு முயன்றது. பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டாலும் சாராயச்சாவுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. விஷச்சாராயச் சாவுகளை எதிர்கொள்ளத் திமுக அரசு மலிவு விலை மதுவைக் கொண்டு வந்தது.
டாஸ்கோ என்கிற நிறுவனத்தை உருவாக்கி கள்ளச்சாராயத்தை நாடிப்போகும் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் மது தயாரித்து அதை டாஸ்மாக் மூலம் சில்லறை விற்பனை செய்வது என்று அரசு முடிவெடுத்தது. சாராயச் சாம்ராஜ்யத்தை ஒழித்தாகச் சொன்ன அரசு சிற்றரசர்களை ஒழிக்க முடியவில்லை என்று சமாளித்தது. மலிவு விலை மதுவை முடிவுக்குக் கொண்டுவருவதாகச் சொல்லி அமோக ஆதரவுடன் அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. அனைத்துச் சாராயக் கடைகளும் மூடப்படும் என்று துணிச்சலாக முதல் கூட்டத்திலேயே முதல்வராக முடிவெடுத்தார். கள்ளச்சாராயம் பெருகிய பொழுது, அதைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிரமாக இயங்காவிட்டால் அப்பகுதி அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார். சாராயக்கடைகளை மூடினாலும் பீர்,ரம் கடைகள் தொடர்ந்தன. அதேபோலப் பார்கள் வேறு திறக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டது. பல லட்சங்களில் மதுவிலக்குப் பிரச்சாரப் படங்கள் தயாரிக்கப்பட்டன.
அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி மதுவிலக்குப் படிப்படியாக அமலுக்கு வரும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்திருந்தாலும் அதைச் செயல்படுத்தவில்லை. சிறிய புட்டிகளில் மதுவை அடைத்து விற்பது என்று முடிவு செய்தது. மீண்டும் பிரச்சாரம் ஒருபக்கம், மது வருமானப் பெருக்கம் இன்னொருபுறம் என்று நகர்ந்தது. 2௦௦1-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தனியாரை மது விற்பனையில் இருந்து நீக்கி, அதற்கான முழுப் பொறுப்பையும் டாஸ்மாக் வசம் ஒப்படைத்தார். டாஸ்மாக்கை உருவாக்கி அரசே மதுவை விற்பனை செய்யலாம் என்கிற கொள்கையைத் துவங்கி வைத்தவர் எம்ஜிஆர் என்றாலும் பழியைத் திமுக மீது போட்டார் ஜெயலலிதா. மிடாஸ் என்றொரு புதிய நிறுவனம் மது உற்பத்தியில் பங்குபெற்றது. மது மூலமான வருமானம் வருடாவருடம் பல நூறு கோடிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
மீண்டும் தேர்தல் வந்த பொழுது, மதுவிலக்கு வாக்குறுதியை கருணாநிதி மீண்டும் ஒரு முறை தந்தார். ஆட்சிக்கு வந்ததும் எஸ்.என்.ஜே., கால்ஸ், ஏலைட் டிஸ்டில்லரிஸ் முதலிய பல்வேறு நிறுவனங்கள் அனுமதி பெற்றன. ஏழாயிரம் கோடி வருமானத்தை மது விற்பனை தொட்ட பொழுது ராமதாஸ் தலைமையில் நாற்பத்தி நான்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மதுவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக மதுவிலக்கை பாமக பேசிக்கொண்டே இருக்கிறது. கட்சி ஆரம்பித்த காலத்தில் மகளிர் அணியைக்கொண்டு போராட்டம், மலிவு விலை மதுவந்த பொழுது ஒப்பாரி வைத்துப் போராட்டம், அடுத்தத் தேர்தலில் அன்புமணி முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து மது ஒழிப்புக்கே என்று அறிவிப்பு என்று நீள்கிறது அதன் சாகசம்.

மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோவும் மதுவிலக்குக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி களம் கண்டுள்ளார். மேட்டுக்காடு எனும் ஊரைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் மதுவுக்கு எதிராக ஜந்தர் மந்தர் துவங்கி தமிழகம் வரை பல்வேறு இடங்களில் தீவிர உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்தார். டெலிபோன் டவரில் ஏறி அவர் அடைந்த மரணம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. எண்ணற்ற மக்கள் மதுவிலக்குக்காகக் களம் கண்டார்கள். திமுக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று மூன்றாவது முறையாகச் சொல்கிறது. ஜெயலலிதா எப்பொழுது வேண்டுமானாலும் மதுவிலக்கை கொண்டுவரலாம் என்று கிசுகிசுக்கிறார்கள். மதுவிலக்கு தமிழகத்தின் மாயவிளக்கு!
ஒரு துப்பறியும் நாவலைப் புரட்டுவது போல இந்த நூலினை நீங்கள் முடித்துவிடலாம். காய்த்தல், உவத்தல் இன்றி எழுதப்பட்ட இந்த நூல் மதுவிலக்கை இந்தியாவிலேயே அமல்படுத்த முயன்ற சில மாநிலங்களில் ஒன்றான தமிழகம் எப்படி அதில் வெற்றியும், தோல்வியும் கலந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறது என்பதை அசாத்தியமான உழைப்பில் பதிவு செய்கிறது. மதுவிலக்கு பற்றிய முழுமையான, முதன்மையான நூல் இது.
சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு
ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார்
பக்கங்கள்: 2௦௦
விலை: 15௦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s