குட்டி இளவரசன்-Little Prince <3


அந்த்வான் து செந்த்- எக்சுபெரி எழுதிய குட்டி இளவரசன் எனும் குழந்தைமையை இழந்த பெரியவர்களுக்கான நாவலை வாசித்து முடித்தேன். விமானத்தில் இருந்து சகாரா பாலைவனத்தில் சிக்கிக்கொள்ளும் கதாசிரியர் அங்கே குட்டி இளவரசனை சந்திக்கிறார். வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவனாக அவன் இருக்கிறான்.

தன் கிரகத்தைப் பற்றியும், தான் சந்தித்த பல்வேறு நபர்களைப் பற்றியும் அவன் சொல்கிறான். அவனுடைய கிரகம் மிகச்சிறியது என்றும், அதில் ஒரு மலர் நான்கு முட்களோடு இருப்பதையும், அதனை விட்டு நீங்கியதையும் வருத்ததோடு சொல்கிறான். இளம்வயதில் ஓவியராக இருந்த கதாசிரியரை ஒரு ஆட்டை வரைந்து தர சொல்கிறான்.ஆசிரியர் இப்படி எழுதுகிறார்,’மனிதர்களான நமக்கு இவை எல்லாம் சுவாரசியம் தருவதில்லை. ஜெரேனியம் மலர்கள், புறாக்கள் ஆகியவற்றை நான் கண்டேன் என்றால் யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு லட்சம் மதிப்புள்ள வீட்டைக் கண்டேன் என்று ஆவலோடு கவனிப்பார்கள்..’ என்கிறார்.

பாலைவனத்தில் ஒரு வேற்று கிரக இளவரசன் தனியே அன்போடு பேசிக்கொண்டு இருக்கையில் பழுதடைந்த தன்னுடைய விமானத்திலேயே ஆசிரியரின் கவனம் இருக்கிறது. ‘முக்கியமான சிந்தனையில் இருக்கிறேன்!’ என்கிறார். ‘நீயும் பெரியவர்களைப் போலப் பேச ஆரம்பித்துவிட்டாய்! குழப்புகிறாய்…கலப்படம் செய்துவிட்டாய்’ என்று சலித்துக்கொள்கிறான் இளவரசன்.

இளவரசனின் கிரகத்தில் ஒரே ஒரு மலர் அழகாய் தன்னுடைய முடியை கலைத்துக்கொண்டு பூத்தது. வெளியில் ஏகத்துக்கும் ஆர்ப்பாட்டம் செய்வதாகவும், இளவரசனை உருட்டுவது போலவும் பேசிக்கொண்டு இருந்த அந்த மலர் இளவரசனை நேசித்தது. இளவரசன் அதன் உருட்டலில் கோபமுற்று அதனை நீங்கினான்.சகாரா பாலைவனத்தில் இருந்தபடி, ‘அவளுடைய சொற்களைக் கொண்டு எடைபோடாமல் அவளின் செயலால் எடைபோட்டிருக்க வேண்டும். அற்ப போலித்தனத்துக்குப் பின் இருந்த பரிவை நான் புரிந்துகொள்ளவில்லை.’ என்கிறான்.
அவனை இதைச் செய், அதைச் செய் என்ற மலர் அவன் போகிற பொழுது அழுகிறாள். அவனைப் பத்திரமாக இருக்கச் சொல்வதோடு, தனக்குக் குளிர், விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வேண்டாம் என்றும் சொல்கிறாள். அவளை ஆடு தின்றுவிடக்கூடும் என்று ஒரு வாய்ப்பூட்டை வரைந்து தரச்சொல்கிறான்.

ஒவ்வொரு கிரகமாக இளவரசனின் பயணம் ஆரம்பிக்கிறது. முதலில் ஆணைகள் போடும் ஒரு அரசனைக் காண்கிறான். அவன் தன்னுடைய ஆணைகளால் எதுவும் மாறுவதில்லை என்று உணர்ந்திருந்தும் மக்களின் செயல்களுக்கு ஏற்றவாறு ஆணைகளை மாற்றி வெற்று அதிகாரத்தில் மகிழ்கிறான். தான் சொன்னவுடன் நடக்கும் என்று கட்டுப்படுத்த முடியாதவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதாய் போலி கம்பீரம் காட்டுகிறான். எலிக்கு நீதியின் பெயரால் மரணத் தண்டனை மதித்து மன்னித்து விடவேண்டும் என்று அவன் சொல்வது உலகத்தின் நீதிமுறைகளின் மீதான சாடலாகவே தோன்றுகிறது.

அடுத்த உலகத்தில் தன்னைத் தவிர எல்லாரும் தனக்கு ரசிகர்கள் என்றும் எண்ணும் தற்பெருமைக் காரனை சந்திக்கிறான். அடுத்துக் குடிப்பதில் தன்னையும், வெட்கத்தையும் மறக்க முனையும் குடிகாரனை வேறொரு கிரகத்தில் காண்கிறான். விண்மீன்களை எண்ணி அதன் எண்ணிக்கையை எழுதி பெட்டியில் பூட்டி தான் செல்வம் சேர்த்திருப்பதாய் நாற்பது ஆண்டுகளாக விண்மீன்களை எண்ணிக்கொண்டு இருக்கும் பிஸினஸ்மேன் சொல்கிறான். அவனிடம் ‘அதைவிட நான் நிஜமாகக் காணும் மலர் மேலானது!’ என்று சொல்கிறான் இளவரசன்.

அடுத்துத் தனக்கிடப்பட்ட பணியான விளக்கை ஏற்றுவதையும், அணைப்பதையும் ஓயாமல் செய்யும் விளக்கு எற்றுபவனை வேறொரு கிரகத்தில் கண்டு நெகிழ்கிறான் இளவரசன். அடுத்து உலகைச் சுற்றிப் பார்க்காமல், பிறர் தரும் தகவலின் உண்மைத் தன்மைக்கு ஆதாரம் கேட்டு அலையும் ஒரு வயதான புவியியல் ஆய்வாளரைக் காண்கிறான். அவர் கவனம் இளவரசனின் கிரக எரிமலைகளிலேயே இருக்கிறது. அவரை விட்டு நீங்கி பூமியை அடைகிறான். பூமியை இப்படி வர்ணிக்கிறான் இளவரசன்:
நூற்றி பதினோரு அரசர்கள், ஏழாயிரம் புவியியலாளர்கள், ஒன்பது லட்சம் வியாபாரிகள், எழுபதைந்து லட்சம் குடிகாரர்கள், முப்பத்தொரு கோடியே பத்து லட்சம் தற்பெருமைக்காரர்கள் இருக்கிறார்கள் என்கிறான். அங்கே பல ரோஜாக்களைக் காண்கிறான். தான் ஒரு சாதாரண மலரையே நட்பு பூண்டு இருந்ததாக வருந்துகிறான். அடுத்து அவன் ஒரு நரியைக் காண்கிறான்.

அந்த நரி அவன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள் (உறவு ஏற்படுத்திக்கொள்) என்று வேண்டுகிறது. தான் ஒரு மலரை பழக்கப்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறான். ‘லட்சம் பேர் இருந்தாலும் நீ பழக்கப்படுத்திக் கொண்டே உறவு தனியானது. உனக்கே அது. அதற்கே நீ!’ என்கிறது நரி.
தான் சீக்கிரம் செல்லவேண்டும், மேலும் பல நண்பர்களைக் காண வேண்டும், உலகைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறான் இளவரசன். ‘பழக்கப்படுத்தப்பட்ட பொருட்களைத் தான் தெரிந்து கொள்ள முடியும். மனிதர்களுக்கு இப்பொழுது எதையும் புரிந்து
கொள்ள நேரமில்லை.,,மனிதர்களுக்கு நண்பர்களே இல்லை!’என்கிறது நரி

அவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். அவனுடைய ரோஜாவை அவன் தனியாகக் கவனித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது. அதற்காகச் செலவிட்ட நேரம் மனதை நிறைக்கிறது. நரி சொல்கிறது, ‘உலகின் முக்கியமான விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாது. இதயத்துக்குத் தான் அவை புலப்படும்..’ என்று அவனுக்கு விடை கொடுக்கிறது.

தொடர்வண்டிகளைச் சரி செய்யும் பாய்ண்ட்ஸ்மேன் சொல்கிறார், ‘மனிதர்கள் எதைத் தேடுகிறோம் என்று அறிவதில்லை. யாரும் இருக்கிற இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பதேயில்லை!’ என்கிறார். இளவரசனிடம் குழந்தைகள் மட்டுமே எதைத் தேடுகிறோம் என்று அறிந்தவர்கள் என்கிற ரகசியத்தை அவர் சொல்கிறார். அதைப் பிடுங்கிக்கொள்கிற பொழுது அழும் அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் என்றும் அவனுக்குச் சொல்லப்படுகிறது.

அவன் இறுதியாக ஒரு வியாபாரியிடம் வந்து சேர்ந்தான். அவன் தாகம் போக்கும் மாத்திரை பற்றிச் சொல்கிறார். அதைச் சாப்பிட்டால் ஒரு நாளைக்குத் தண்ணீர் குடிக்கும் ஐம்பத்தி மூன்று நிமிடங்களைச் சேமிக்கலாம் என்கிறார். ‘அதைச் சேமித்து என்ன செய்வீர்கள்?’ என அவனிடம் கேட்க, ‘எதை வேண்டுமானாலும் செய்யலாம்!’ என்கிறான். ‘நான் ஒரு ஊற்றை நோக்கி நடந்து வருவேன்.’என்கிறான் இளவரசன்.

இறுதியில் பாலைவனத்தில் ஆசிரியரோடு இருக்கிறான். ஆசிரியரின் தாகம் போக்க அவர்கள் கிணறைத் தேடி அலைகிறார்கள். இளவரசன் சொல்கிறான்”’இந்த பாலைவனத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பது தான் கிணற்றின் அழகு!’. ஆசிரியரை விட்டு நீங்குகிற பொழுது,’நான் எதோ ஒரு கண்டறிய முடியாத விண்மீனில் சிரித்தபடி வசித்துக்கொண்டிருப்பேன். நான் எந்த விண்மீனில் இருக்கிறேன் என்று தெரியாமல் எல்லா விண்மீன்களும் சிரிக்கின்ற விண்மீன்களாகத் தெரியும். இதுவே நான் உங்களுக்குத் தரும் பரிசு!’ என்று சொல்லி அவரை விட்டு நீங்குகிறான்.

இந்தப் பெரியவர்களுக்கான நாவலை நேரடி பிரெஞ்சு மொழியில் இருந்து வெ.ஸ்ரீராம்,ச.மதனகல்யாணி அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். நூலில் ஆங்காங்கே வரும் வரைபடங்கள் பால்யத்துக்கே கூட்டிச்செல்லும்
பக்கங்கள்:118
விலை: 110
க்ரியா வெளியீடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s