பாதி வென்ற போர்கள்- இந்தியாவின் நிகழ்தற்கரிய ஜனநாயகம்’


அஷுடோஷ் வர்ஷேனே எனும் அரசியல் அறிவியலாளர் எழுதிய ‘பாதி வென்ற போர்கள்- இந்தியாவின் நிகழ்தற்கரிய ஜனநாயகம்’ எனும் நூலை வாசித்து முடித்தேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடாக எப்படி உயிர்த்திருக்கிறது? இந்த நாட்டின் வெற்றிகள், தோல்விகள் என்ன என்பதை அரசியல் அறிவியல் அறிஞர்களின் கோட்பாடுகள், இந்திய சூழல், தரவுகள் ஆகியன கொண்டு ஆய்வு செய்யும் வர்ஷேனே பத்து அத்தியாயங்களில் ஒரு பிரமிப்பான பயணத்துக்குள் அழைத்துப் போகிறார். அரசியல் அறிவியல் கோட்பாடுகள் சமயங்களில் ஓவர் டோஸ் போலத் தோன்றினாலும் நூலை ஒரே மூச்சில் வாசித்து விடலாம்.


நேரு இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததும், ‘Tryst With Destiny’ என நிகழ்த்திய உரையில் கடைக்கோடி மனிதனுக்கும் விடுதலை, வாய்ப்புகள்; வறுமை, அறியாமை, நோய்களை எதிர்த்து போராடுதல், அவற்றை முடிவுக்குக் கொண்டுவருதல்; வளமிகுந்த ஜனநாயக, முன்னேறிய தேசத்தை உருவாக்கல், சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளை உருவாக்கி நீதி, முழுமையான வாழ்க்கை ஆகியவற்றை எல்லா ஆண்கள், பெண்களுக்கும் தருதல் ஆகியவற்றைத் தன்னுடைய கனவாகக் குறிப்பிட்டார்.

காரல் மார்க்ஸ் துவங்கி தேர்தல், தேர்தல் அமைப்புகள், பிரதிநிதியை தேர்ந்தெடுக்கச் சுதந்திரம் ஆகியவை கடுமையான விமர்சனங்களுக்கும், விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அறுபதுக்கும் மேற்பட்ட வருடங்கள் கழித்துப் பார்க்கையில், இந்தியா ஒரு ஜனநாயக நாடே இல்லை-இங்கே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகுந்திருக்கின்றன. தேர்தல்கள் நடப்பது மட்டுமே ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது என்பதன் அடையாளம் இல்லை என்று பாகிஸ்தானிய வரலாற்று ஆசிரியர் ஆயிஷா ஜலால் குறிக்கிறார்.

இந்தக் கருத்தை வர்ஷேனே இரண்டு எதிர்க்கருத்துக்களால் மறுக்கிறார். அதிகச் சமத்துவம் ஜனநாயகத்தை ஆழப்படுத்துகிறது, சமத்துவமின்மை ஜனநாயகம் என்பதைச் சாத்தியமே இல்லாத ஒன்றாகச் செய்துவிடுவதில்லை. ராஜஸ்தானிலும் ஜனநாயகம் இருக்கிறது, கேரளாவிலும் ஜனநாயகம் இருக்கிறது. சமத்துவமின்மை குறைவாக இருக்கிற கேரளாவில் ஜனநாயகம் இன்னமும் ஆழமாக இருக்கிறது.
தேர்தல் கோட்பாடு என்பதை விடுத்து, முக்கிய இலக்குகளை மட்டும் நிர்ணயித்துக்கொண்டு ஒரு அரசு முன்னேறினால் போதும் என்பது ஆபத்தானது. எது மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து கொள்ள ஒரு தேர்தல் அவசியமாகிறது. விடுதலை, சமத்துவம், சுய மரியாதை என்று ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தேர்வுகள் இருக்கலாம். அவற்றை வெளிப்படுத்த ஒரு வழியாகத் தேர்தல்கள் திகழ்கின்றன. சிங்கப்பூர் மகத்தான பொருளாதார வெற்றியை பெற்றிருக்கிறது, ஆனால், லீ க்வான் க்யூவின் இலக்குகள் விவாதிக்கப்படவில்லை, தீவிரமான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஜனநாயகம் என்பதைத் தால் என்கிற அரசியல் அறிஞர் போட்டி, பங்கேற்பு இரண்டும் கலந்த ஒன்று என்கிறார். இவை பெரும்பாலும் மேற்கு சமூகங்களில் தான் சாத்தியப்பட்டன என்கிற தால், இந்தியா எனும் கல்லாமை மிக்க, விவசாயத்தைப் பெரிதும் சார்ந்துள்ள, பழமைவாதம் மிக்க, நம்பிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றில் மரபார்ந்த விதிகளைப் பின்பற்றும் ஒரு நாடும் ஜனநாயகத்தைக் கொண்டிருப்பது முன்னணியான சமகால விதிவிலக்கு என்கிறார்.

ப்ரழேவோர்ஸ்கி (Przeworski) எனும் அறிஞரின் ஆய்வுகள் எந்தெந்த நாடுகளில் ஜனநாயகம் இயங்கும் என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டது. மதம், காலனிய ஆட்சி, இனப்பன்மை, உலக அரசியல் சூழல், கல்வி என்று பல்வேறு அம்சங்களைக் கொண்டு ஒரு நாடு ஜனநாயகத்தைக் கொண்டிருக்குமா இல்லையா என்று ஆய்வு செய்து பார்க்கையில், ஒரு நாட்டின் வருமானமே 77.5% சமயங்களில் சரியாக ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவக்கூடிய சாத்தியத்தைச் சரியாகக் கணிக்கிறது. அதிக வருமானம் இருக்கிற நாடுகளில் ஜனநாயகம் இருக்க வாய்ப்பு அதிகம். 141 நாடுகளைக்கொண்டு நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வில் அதிக வருமானம் இருந்தும் ஜனநாயகம் இல்லாத அதிர்ச்சி விதிவிலக்காகச் சிங்கப்பூரும், குறைந்த வருமானம் இருந்தும் ஜனநாயகம் நீடித்திருக்கும் இன்னொரு விதிவிலக்காக இந்தியாவும் திகழ்கின்றன என்கிற ப்ரழேவோர்ஸ்கி. வர்ஷேனே அதனால் இந்தியாவை ‘சாத்தியமில்லாத ஜனநாயகம்’ என்பதற்கு மாறாக ‘நிகழ்தற்கரிய ஜனநாயகம்’ என்கிறார்.

வருமானம் எப்படி ஒரு நாடு ஜனநாயகத்தைக் கொண்டிருக்குமா என்பதைக் காட்டும் என்கிற கேள்வி எழலாம், ஒரு நாட்டில் வெவ்வேறு முறைகளில் ஜனநாயகம் எழுந்து இருந்தாலும் ஜனநாயகம் நீடித்து நிற்க மக்களின் வருமானம் உயர்வது அவசியமாகிறது என்பது நாற்பது ஆண்டுகால வருமானத் தரவுகள் சொல்லும் செய்தி ஆகும்.

ஏன் இந்தியாவில் ஜனநாயகம் உயிர்த்திருக்கிறது என்கிற கேள்விக்கு அதன் குறுக்கு வெட்டாகக் காணப்படும் பலதரப்பட்ட வேறுபாடுகள் முக்கியக் காரணம் எனலாம். வெவ்வேறு மொழிகள், ஜாதிகள், மதங்கள் என்று பலதரப்பட்ட வேறுபாடுகள் மக்களைப் பிரித்து வைத்திருப்பதால் இந்தியா என்கிற கருத்தாக்கத்துக்கு ஒரே சமயத்தில் ஒருங்கிணைந்த எதிர்ப்பு என்பது ஏற்பட்டது இல்லை.

வறுமை மிகுந்த சமூகங்களில் அரசுகள் பொருளாதரத்தில் மக்கள் நலன் சார்ந்து தாங்களே ஈடுபட வேண்டியிருக்கும். இதனால் குறிப்பிட்ட சிலர் ஒரு காலத்தில் பயன்பெறுவதும், ஆட்சி மாறியதும் பயன்பெற்றவர்கள் சிறை செல்வதும் நடைபெறும். இப்படிப்பட்ட ஏழை அரசுகளில் கூட்டாக மக்கள் கொல்லப்படுவதும் அடிக்கடி நிகழும். ஆதிக்க சக்திகள் தாங்கள் எதை ஜனனயாகம் என்று கருதுகிறதோ அவற்றைக் கொண்டு தாராளவாத போக்கை மழுங்கடித்து, சிறுபான்மையினர், எதிர்க்கும் பிரிவினர், ஆளுமைகள் ஆகியோரை தாக்குவார்கள், கொல்வார்கள். வளம்மிகுந்த ஜனநாயகங்களில் இவை சாத்தியமே இல்லை என்று அர்த்தமில்லை என்றாலும், அங்கே மீடியாக்கள், நீதிமன்றங்கள் பெரும்பான்மை ஆதிக்கத்துக்குத் தடையாகத் திகழ வாய்ப்புகள் அதிகம்.

கியோஹானே எனும் அரசியல் அறிஞர் இந்தியா ஏன் உயிர்த்திருக்கிறது என்பதை அறிய சமூக-பொருளாதாரக் காரணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் எப்படிச் சமூகத்தில் அதிகாரப்பரவல் மீண்டும் மீண்டும் சமரசம் செய்துகொள்ளப்பட்டது என்பதைக் காண வேண்டும் என்கிறார். தலைவர்களின் செயல்பாடுகள், அரசியல் அமைப்புகளின் வடிவம், வெவ்வேறு சமூகக் குழுக்களின் அரசியல் பங்களிப்பு ஆகியவை கணக்கில் கொள்ளப்படவேண்டும் என்பது அவரின் பார்வை.

இந்தியாவில் மண்ணின் மைந்தர் போராட்டங்கள் அசாம், மும்பை, தெலங்கானா பகுதிகளிலும், சீக்கிய-இந்து சிக்கல் பஞ்சாபிலும் ஏற்பட்டன என்றாலும் அவை முழு இந்தியாவையும் பாதிக்கவில்லை. எல்லாவற்றையும் விடக் காஷ்மீர சிக்கலுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்திய முஸ்லீம்களும் இந்திய அரசுக்கு எதிராக எழுந்துவிடவில்லை. ஏற்கனவே குறிப்பிட்ட பல்வேறு வகையான வேறுபாடுகள் இதற்கு முக்கியக் காரணமாகும்.
ஜான் ஸ்டூவர்ட் மில் எனும் தாராளவாதத்தின் தந்தை தேசம் என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களும், அவர்கள் இருக்கும் எல்லைகளும் ஒத்துப்போனால் மட்டுமே ஜனநாயகம் சாத்தியம் என்கிறார். அதாவது நாம் ஒரே நாட்டினர் என்கிற எண்ணத்தோடு மக்கள் தேர்தலில் பங்குகொண்டால் தான் அங்கே ஜனநாயகம் சாத்தியம் ஆகும். யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்வதாக இல்லாமல், யார் நாட்டைவிட்டு ஓடவேண்டும் என்பதை முடிவு செய்வதாகத் தேர்தல்கள் பார்க்கப்பட்டால் அது ஆபத்தானது. இந்த வகையில் பல்வேறு மொழிகள் ஒரே நாட்டில் இருப்பது அந்நாட்டுக்கு ஆபத்து என்று மில் கருதினார்.

இந்தியா என்கிற கலாசார அமைப்பு பல நூற்றாண்டுகளாக இருந்தது என்றே ஏற்றுக்கொண்டாலும், ஒரு நாடாக இந்தியா உருப்பெற்றது காந்தியின் வருகைக்குப் பிறகுதான் என்பது அரசியல் அறிஞர்களின் கருத்து. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வட இந்தியா, மத்திய இந்தியா கிளர்ந்து எழுந்த பொழுது மற்ற பகுதிகள் அதில் பங்குகொள்ளவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். காந்தி பழமையானவர் என்பது பொதுப்பார்வையாக இருந்தாலும் அவர் உருவாக்கிய கட்சியமைப்பு நவீன அரசியல் நோக்கர்கள் கண்டு வியக்கும் ஒன்றாகும். அதுவரை மேல்தட்டினர் கூடும் கூட்டமாக இருந்த காங்கிரஸ் அமைப்பை பொதுமக்களின் இயக்கமாக அவர் மாற்றி எடுத்தார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தேசம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகத் தன்னுடைய அரசியல் முறைகளால் காந்தி சாதித்தார். இந்தியா என்பது எல்லா மதத்தவருக்குமான நாடு என்றும், அதில், இந்துக்களுக்கு மட்டுமே இடம் என்று எண்ணுபவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள் என்று இந்திய அரசியல் களத்துக்குள் நுழைவதற்கு முன்பே காந்தி தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தையும் கூட இந்திய மொழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். ‘இந்தியாவைத் தாயகமாக ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயரும் இந்தியர்களே’ என்று காந்தியால் ஆங்கிலேயரையும் வெறுக்க வைக்காத அரசியலை முன்னிறுத்த முடிந்தது. இவை எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ளும் கொதிக்கும் பானையாக இந்தியாவை மாற்றாமல், தங்களுடைய தனித்துவத்தை இழக்காத சாலட் கோப்பையாகப் பல்வேறு இன, மொழி, மதக்குழுக்களை மாற்றியது.

பெரும்பாலான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற காங்கிரஸ் கட்சியால் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெற முடியாமல் போனதும், எண்ணற்ற மற்ற காரணங்களும் பிரிவினைக்கு வழிவகுத்தது. எனினும், அதற்குப் பிறகு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நேரு காந்தியின் வழியில் இந்தியாவை எல்லாருக்குமான தேசமாகக் கட்டமைத்தார்.
நீதிமன்றங்கள் பல்வேறு அரசின் சமூக நலத்திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்குத் தடை போட்ட பொழுது தனக்குச் சாதகமான நீதிபதிகளைக் கொண்டு நீதிமன்றங்களை நிரப்பாமல் நேரு சிறப்புப் பெரும்பான்மையோடு பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் ஒப்புதலோடு அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை நிறைவேற்றினார். தேர்தல்களை விடாமல் தொடர்ந்து நடத்தினார்.

பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்பட்டு அதனை அரசியலாக்கி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்து இந்து தேசமாக மாற்றலாம் என்று ஆசைப்பட்ட இந்துத்வவாதிகளின் கனவுக்குப் பெருந்தடையாக நேரு நின்றார். பாகிஸ்தான் எப்படித் தன்னுடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரை நடத்துகிறது என்பதைப் பொறுத்து இந்தியா தன்னுடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரை எப்பொழுதும் நடத்தாது என்று உறுதிபடச்சொன்ன நேரு, இந்து, முஸ்லீம்கள் இடையே வெறுப்பை வளர்ப்பது என்பது சீழ் வடியும் காயமாகி, ஒட்டுமொத்த அரசியலையும் நஞ்சாக்கி நாட்டை அழித்துவிடும் என்று அழுத்தமாக எச்சரித்தார். காந்தியின் படுகொலை மக்களிடையே இந்துத்வ அமைப்புகள் ஆதரவை இழப்பதை வேகப்படுத்துகிற தருணமாகிப் போனது.

இந்தியா என்கிற தேசம் செயற்கையாக எழுப்பப்பட்டது என்கிற வாதத்தை முன்வைப்பவர்கள் அது உலகின் நாடுகள் பலவற்றுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சமூகவியல் மேதை வெப்பர் எப்படிக் கான்ஸ்க்ரிப்ஷன் படைகள், பொதுப்பள்ளி திட்டம் ஆகியவை பிரான்ஸ் என்கிற நாட்டை உருவாக்கின என்பதைக் காட்டுகிறார். கோலே கத்தோலிக்கப் பிரான்ஸ் எனும் எதிரி, ப்ரோட்டஸ்டன்ட் மதம், வர்த்தக வாய்ப்புகளுக்கான தேடல், மன்னரால் ஆன அரசு ஆகியன பிரிட்டன் என்கிற தேச உருவாக்கத்துக்கு வழிவகுத்தது என்பதை வலுவான ஆதாரங்களோடு நிறுவியுள்ளார்.

இந்தியாவின் வெற்றி, தோல்விகளை தேசிய ஒற்றுமை, மக்களுக்குச் சுயமரியாதை, சமூக நீதி, வறுமை நீக்கம், தேர்தல்கள்-மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்புகள் கொண்டவர்களாக அரசியல் கட்சியினர் திகழ்கிறார்களா முதலிய கேள்விகளை எடுத்துக்கொள்கிறார்.
தேசிய ஒற்றுமை என்பதைப் பொறுத்தவரை ஐம்பது, அறுபதுகளில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய சவால் பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதே ஆகும். அதை மொழிவாரி மாநிலங்களைக் கொண்டு வெற்றிகரமாகச் சமாளித்த இந்தியா தற்போது எழும் பிரிவினை கோஷங்களை மூன்று வகைகளிலோ அல்லது மூன்றையும் கலந்தோ எதிர்கொள்கிறது. போராட்டக்குழுவோடு அமைதி பேச்சுவார்த்தை நிகழ்த்தி அவர்கள் ஒப்புக்கொண்டால் தேர்தல் அரசியலில் பங்குபெறச் செய்து தேர்தலில் அவர்கள் வென்றால் மாநிலத்தை ஆள அனுமதிப்பது. வளர்ச்சி திட்டங்களுக்கு எண்ணற்ற நிதி தருவது, ராணுவத்தைக் கொண்டு எதிர்ப்பை நசுக்குவது என்று மூன்றையும் கலந்துகட்டி இந்திய அரசு செயல்படுகிறது.

Ashutosh Varshney அவர்கள் Pratap Bhanu Mehta துவங்கி எண்ணற்ற அரசியல் அறிஞர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வைக்கும் கருத்துக்களைத் தரவுகள் மூலமும், அரசியல் அறிவியலின் தர்க்கத்தின் மூலமும் தகர்க்கிறார். இந்தியாவின் மக்கள் தொகையில் இருபது சதவிகிதம் பேர் மட்டும் வாழும் தெற்கில் சாதி முறை இறுக்கம் குறைந்ததாக உள்ளது என்பதையும், இங்கே தொழில் நிறுவனங்களுக்குப் பலதரப்பட்ட ஜாதியினர் சொந்தக்காரர்களாக இருப்பது வடக்கை விட 2.77, 2.07 மடங்கு அதிகமாகக் கடந்த நாற்பது வருட காலங்களில் இருந்திருப்பதைப் பல்வேறு தரவுகளின் மூலம் சுட்டிக்காட்டுகிறார். கேரளாவில் எழுந்த ஈழவர்கள் முதலிய ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் எழுச்சி, தமிழகத்தில் நிகழ்ந்த திராவிட இயக்கத்தின் இட ஒதுக்கீட்டு முன்னெடுப்புகள், கர்நாடகா, ஆந்திராவிலும் நடைபெற்ற இடைநிலை ஜாதிகளின் எழுச்சி ஆகியவை சாதியமைப்பை வடக்கை விடப் பல மடங்கு வலிமை குறைந்ததாக மாற்றியிருக்கிறது என்று நிறுவுகிறார்.

அதே சமயம், Affirmative action என்பது நிர்வாகத்திறனை குறைத்துவிடும் என்கிற வாதத்தைத் தென்னகத்தில் பெரும்பாலான நிர்வாகப் பதவிகளில் இடைநிலை சாதியினரே பொறுப்பில் இருந்தும் இந்தியாவிலேயே சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களாக இவையே திகழ்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழகத்தின் மிக மோசமான நிர்வாகக் காலம் என்று சொல்லக்கூடிய எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலச் சமயத்தில் ஐம்பது ஆதிக்க ஜாதியை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழகம் நோக்கி மீண்டும் வந்ததை Wikileaksகேபிள் சுட்டுவதை இதோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம். இன்னமும் தலித் மக்கள் தெற்கில் பெரிய விடுதலையைப் பெற்றுவிடவில்லை என்கிற கசப்பான அனுபவம் கண் முன் விரிந்திருக்கிறது அதனைச் சரி செய்ய அவர்கள் சந்தைப் பொருளாதாரத்தில் முதலாளிகள் ஆவதும், அவர்களுக்கான நலத்திட்டங்கள் சரியாகக் கொண்டு சேர்க்கப்படுவதும் இணைந்தே நடக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.


ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்குப் பலம், அதிகாரம் எல்லாம் கிடைக்கிற பொழுது அவர்கள் ஆதிக்க ஜாதியினரை பழிவாங்குவார்கள் என்கிற பிரதாப் பானு மேத்தாவின் வாதத்தை இரு தளங்களில் வர்ஷேனே மறுதலிக்கிறார்.

அற ரீதியாக இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனினும், சமத்துவம் என்பது தரப்படும் பொழுது தான் ஒடுக்கப்பட்ட மானுடகுல சிந்தனைகள், படைப்புத்திறன் வெளிப்பட்டுச் சமூகத்தை மேம்படுத்துவதைச் செய்யும் என்பதை எல்லாவகையிலும் ஒன்றுபட்டும் அடிமை முறையால் ஓஹியோ மாகாணத்தை விட வளர்ச்சியில் பின்தங்கியிருந்த கென்டுகியை Alexis de Tocqueville அவர்களின் எடுத்துக்காட்டைக் கொண்டு சுட்டுகிறார். தென்னகத்தில் ஆதிக்க ஜாதி அல்லாதோர் அதிகாரம் பெற்றதும் அவர்களின் பழிவாங்கும் உணர்வு குறைந்ததோடு ஜனநாயக ஓட்டத்தில் இணைவது அதிகரிக்கச் செய்தது என்பதையும் சுட்டி உளவியல் ரீதியாகப் பழிவாங்கல் நடைபெறாமல் தடுக்க இந்த முறைகள் உதவியிருக்கின்றன என்கிறார். மேலும், அரசு வேலைகளில் ஆதிக்கம் செலுத்திய பிராமணர் முதலியோர் தொழில்முனைவோராக மாறியதும், ஐ.டி. வேலைகளில் எண்ணற்ற இடங்களைப் பெற்றதும் ஜனநாயக நகர்வாக மாறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

மதக்கலவரங்கள் ஏன் சிலபகுதிகளில் தொடர்ந்தும், சில பகுதிகளில் குறைவாகவும் நடக்கிறது என்பதை ஒரே அளவு இந்து, முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட உத்திரப்ரதேச, கேரளா நகரங்களை எடுத்துக்\கொண்டு அவர் விளக்குகிறார். தொழிலாளர் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள், நகரக் குடிமகன்கள் அமைப்பு என்று பல்வேறு அமைப்புகள் வீரியமுடன் செயல்படும் கேரளாவில் இப்படிப்பட்ட மதக்கலவரங்கள் ஏற்படும் சூழல் உண்டாகிற பொழுது இருதரப்பினரும் வேகமாகச் செயல்பட்டுப் பதற்றத்தை தணிக்கிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட போக்கு உத்திர பிரதேசத்தில் நிலவவில்லை, மேலும். உள்ளூர் செய்தித்தாள்கள் உறுதி செய்துகொள்ளாமல் வதந்திகளைப் பரப்புகின்றன என்பதாலும் கலவரங்கள் அதிகரிக்கின்றன என்று ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்.

அரசியல் அறிவியல் சேர்ந்த ஆசிரியர் எழுதிய நூல் என்றாலும் எளிய வாசகனுக்கும் புரிய வேண்டும் என்கிற உழைப்பை நூலில் நீங்கள் கண்டுகொண்டே இருக்கலாம்.
எக்கச்சக்க உழைப்பில், இந்தியா என்கிற பரந்துபட்ட தேசத்தின் பல்வேறு வெற்றி, தோல்விகளை ஒற்றைப் புத்தகத்தில் அடைக்க முயலும் பெரும் முயற்சி இந்நூல்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s