‘பேசாத பேச்செல்லாம்’-பெண்களின் பேருலகம்!


ஒரு நல்ல கட்டுரைத்தொகுப்பை வாசிக்கிற பொழுது உருவாகும் வகைவகையான உணர்ச்சிகளை எப்படி விவரிப்பது? பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பாகவே அமையும் என்பது பொதுப்புத்தியில் பதிந்து விட்ட சூழலில் ‘பேசாத பேச்செல்லாம்’ இணைந்து ஒரு உரையாடலை நிகழ்த்தும் அசாத்தியமான சவாலை பெருமளவில் சாதித்திருக்கிறது.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சொல்வது போல இந்நூலில் சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை எனும் மூன்று கதவுகளின் ஊடாகவும் ப்ரியா தம்பி சலிப்பே தராமல் அழைத்துப் போகிறார். ஆறு நாட்களுக்குப் பின் விடுமுறை நாள் மற்றவர்களுக்குக் கொண்டாட்ட நாளாக இருக்கிறது…இல்லத்தரசி(?)களுக்கு… குடும்பத்தில் எல்லாரின் உடல்நலத்திலும் அக்கறை செலுத்தும் அவளின் ‘அந்த மூன்று நாட்களை’ தீண்டத்தகாததாகவே காண்கிறோம். மெனோபாஸ் காலத்தில் பெண்ணின் சிடுசிடுப்பின் காரணம் புரிகிறதா நமக்கு?

வீட்டில் கடந்த தலைமுறை பெண்களுக்கு அவர்களுக்கான உணவு முதல் சகலத்தையும் குடும்பமே தேர்வு செய்தது. மீன் சாப்பிடவும், முட்டை சாப்பிடவும் ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற கனவும், கனிவோடு யாரேனும் தலை கோதினாலோ, அனுசரணையாகப் பேசினாலோ காதல் என்று பெண்களின் உள்ளம் துடிப்பதற்குப் பின் வீட்டில் ‘இதைச் செய்யாதே,அதைச் செய்யாதே’ என எப்பொழுதும் கைபிடித்து எதையுமே செய்யக் கிடைக்காத வெளியின் கனவுகள் உள்ளன இல்லையா?

ஒரு சைக்கிள் ஓட்டுவதும், ஒரு ஸ்கூட்டியும் பெண்களுக்குத் தரும் விடுதலை ஆண்மனதின் கற்பனைகளில் எட்டாதது. குடும்பத்தின் சிக்கல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள வண்டியெடுத்துக் கொண்டு வெளியேறும் ஆண்களைப் போல அல்லாமல் ஒரு பெரிய உலகம் இருக்கிறது என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடாகப் பல பெண்களின் சொந்தப் பயணங்கள் அமைகின்றன. பெண்கள் வண்டி ஓட்டும்பொழுது விபத்துக்கள் குறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, பெண்களின் வண்டியின் பின்னரே உட்கார பெரும்பாலும் மறுத்து நாங்கள் ஓட்டுகிறோம் என்று சாவியைப் பறித்துக் கொள்ளும் பெருங்கருணை நம்மிடம் இருக்கிறது!

குறைந்த சம்பளத்தில் குடும்பத்தின் செலவுகளைக் கவனிக்க வேலைக்கு வரும் பெண்கள் அதை வீட்டுக்கே கொடுப்பதால் அவர்கள் வெளியே சாப்பிட அழைக்கும் பொழுது வருவதில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்? காலை எட்டு மணிக்குத் தொடர்வண்டியில் ஏறும் பெண்கள் வீட்டில் அதிகாலை வெகுசீக்கிரம் எழுந்து தங்களின் குடும்பத்தினரின் வேலைகளை முடித்துவிட்டு வந்து சேர்கையில் அவர்கள் முகத்தின் சோர்வை விட ஒப்பனை அல்லவா கண்களை உறுத்துகிறது? ஒரு பாவாடைக்காக இறுதி வரை காத்திருந்தே கரைந்துவிடும் இலட்சுமணப் பெருமாள் கதை நாயகி போலத்தான் பல பெண்களின் கனவுகளும்…

காதல் கற்பனைகளாலும், பைத்தியக்காரத் தனங்களாலும் நிறைந்த ஒன்று. காதல் மலரும் நொடியைப் புரிந்து கொள்வது போல விலகும் கணத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளப் பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. போன காதலை நினைத்துக்கொண்டே உண்மையாகவே நேசத்தை நீட்டும் கணவனின் அன்பைத் தவறவிடும் பெண்கள் எத்தனை பேர்? நேசிப்பவனிடம் நான் உன்னை நேசிக்கிறேன் என்று எத்தனை பெண்களால் மனம் விட்டு சொல்ல முடிகிறது? பெண்கள் வெகு விரைவாகக் காதலின் தோல்வியைக் கடக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டும் ஆண்கள் பலரும் அவர்களுக்குத் தங்களின் வலியை வெளிப்படுத்தக்கூட உரிமை இல்லாத வெறுமை தந்த பெருங்கொடுமை அது எனப் புரிவதில்லை. பெண்கள் ஆண்களைப் பொறுத்தவரை பல சமயங்களில் உடைமை, அப்படியொரு உணர்வைப் பெறாத பெண்கள் அப்படியொரு பதற்றத்துக்கு உள்ளாவதில்லை!

பெண்களையும், ஆண்களையும் வேற்றுலக வாசிகள் போலப் பேச அனுமதிக்காமல் கொடும் காவல் புரியும் நம் கல்விமுறை, சமூகம் ஆகியவற்றால் கள்ளத்தனமும், சாகசமும் கலந்து எதிர் பாலினத்தவரோடு பேசிக்கொள்கிறார்கள். அதுவே காதல் என்று தப்பர்த்தமும் கொள்கிறார்கள். பலர் ஓடிப்போகிறார்கள். அவர்களுக்கிடையே இயல்பான உரையாடலை பெற்றோரும், ஆசிரியரும் அனுமதிக்கிற பொழுது இத்தகு அபத்தங்கள் பெருமளவில் குறையும்.

குழந்தைகளின் மீதான வன்முறை தரும் மனவலி, உடல்வலியை எப்படிக் கடந்து அவர்கள் நீதி பெறுவார்கள்? வன்புணர்வில் பெரும் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் முடங்கிப்போகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களே இவள் இறந்து போயிருந்தாலே பரவாயில்லை என்று எண்ணுகிற அளவுக்குச் சூழல் நிலவுகிறது. அந்தப் பாதகத்தைச் செய்தவன் இறுமாந்து திரிய, ‘வன்புணர்வுக்கு உள்ளானவள்’ என்று பட்டம் சுமந்து போராடும் வெகுசிலரைப் போலப் பலர் எழ வேண்டும். அடரிருட்டில் சிறு ஒளி தரும் சுடர் மேலானது இல்லையா?

‘முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடியும் தாம்பத்தியம் எத்தனை பேருக்கு வாய்க்கிறது/’ எனும் வெண்ணிலாவின் கவிதை பெண்களின் இல்லற வாழ்க்கையின் வெம்மையைச் சொல்லும். அறுபது சதவிகித பாலியல் வன்முறைகள் திருமண உறவில் நிகழும் வன்புணர்வுகள் என்பது அதிர்ச்சி தரவேண்டியதில்லை. படுக்கையில் கொடும்பசி கொண்ட மிருகம் போலக் குதறி, புணர்ந்த பின்னர் அப்படியே குறட்டை விட்டு தூங்கிப் போகும் ஆண்களிடம் கனிவான பேச்சையும், மென்மையான முத்தமும், பிணைதலுக்குப் பிந்தைய அணைப்பையும் பெண்கள் விரும்புகிறார்கள். அது இன்னுமொரு வன்முறை களமாக ஆவதாலேயே ஒதுங்குகிறார்கள், இது பெரும்பாலும் புரியாமல், ‘அவளுக்கு ஆர்வமே இல்லை!’ என ஆண்கள் கடுகடுக்கிறார்கள். எத்தனை நிமிடங்கள் தாங்குகிறான் என்பதில் இல்லை ஆண்மை, எவ்வளவு இதத்தைத் தருகிறான் என்பதில் இருக்கிறது முழு ஆண்மை.

திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தங்கள் நட்பு, உறவுகள் சார்ந்தோ அல்லது விரும்பியதற்கு ஓடவோ குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. அனுமதிக்கிற குடும்பத்திலும் அதைக் குற்ற உணர்ச்சியோடு பெண்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறுகிறார்கள். பெண்களின் சொந்த வாழ்க்கைப் பற்றியும், அவர்களின் கம்பீரமான ஆளுமையைத் திமிர் என்றும் சமூகம் பேசினாலும் அதைக்கண்டு கொள்ளாமல் தன்னுடைய துறையில் தனி முத்திரை படைப்பது சாத்தியம் என்பதை நயன்தாரா, ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிச் சொல்லிக்கொண்டே
இருக்கிறது.

ஆடைகள் அணிவதில் தங்களுக்குச் சவுகரியமானதை பெண்கள் தேர்வு செய்வதை ஆண்கள் பாதுகாப்பு என்கிற பெயரில் தொடர்ந்து நிராகரிக்கிரார்கள். முழுக்கப் போர்த்தி ஆடை அணியும் பள்ளி மாணவிகள், பால் மணம் மாறாத குழந்தைகள் மீது பாயும் காமுகர்கள் ஆடையால் தான் கிளர்ந்து எழுந்தார்களா? சுதந்திரம் என்று பேசும் பல பெண்கள், தங்களின் எல்லாத் தேவைகளுக்கும் ஆண்களையே சார்ந்திருக்கும் பொழுது எப்படி விடுதலை சாத்தியம். அடிமைத்தனம் வெளியே இருந்து மட்டுமல்ல உள்ளிருந்தும் ஏற்படும்.

தனி அம்மாவாகப் பிள்ளையை வளர்க்கும் அம்மாக்களை ,’எனக்கு அப்பா இல்லை. நீதானே எல்லாமே!’ என்று உணர்ச்சி மிரட்டலால் தகாத பலவற்றையும் பிள்ளைகள் சாதிக்கிறார்கள். ‘பத்து மாசம் சுமந்து பெத்தது சும்மாவா?’ என்று கேட்டு மிரட்டுவது தவறு என்றால் ‘எனக்காக இதைக்கூடச் செய்யலைனா என்ன அம்மா நீ!’ என்பதும் தான். பெண்கள் தனித்துப் பயணம் செய்கிற பொழுதும், குடும்பத்துடன் சுற்றுலா போகும் பொழுதும் அனுபவிக்கிற அவஸ்தைகள் ஏராளம். பேருந்தில் ஒரு கழிப்பறை என்று யோசிக்கிறோமா? அங்கங்கே பெண்கள் மீது நிகழும் வன்முறைகளால் ‘இதனால் தான் பொண்ணுங்க தனியாப் போகக்கூடாது’ என்கிற குரல்கள் எழுகின்றன. கணவன் கண் முன்னரே பெண்களை இழுத்துக்கொண்டு போன கதைகளும் உண்டு. ‘இதுக்குத் தான் புருஷனோட வெளியே போகாதேன்னு சொல்றோம்.’ என்று எதிர் குதர்க்கம் பேசலாம் இல்லையா?

ஆறு மாதக் குழந்தையோடு உணவருந்த பேருந்தில் இருந்து இறங்கி மழையில் சிக்கிக்கொண்ட பொழுது பேருந்தை அருகே கொண்டுவந்து அப்படியே ஏற்றிக்கொண்ட ஓட்டுனர், பல மைல்தூரம் தீவட்டி ஏந்தி கைபிடித்து நகர்கொண்டுவந்து சேர்த்த ஆதிவாசி ஆண் என்று பல நம்பிக்கைத் தீப்பந்தங்களும் பெண்களுக்கு இருக்கவே செய்கின்றன.

சினிமாக்கள் பெண்களைச் சித்தரிக்கும் விதமும், அதில் காணப்படும் பெண் வெறுப்பும் ‘வெறும் சினிமாதானே’ என்று கடந்து விடுவதற்கில்லை. தமிழ்ச்சமூகத்தின் அன்றாட ஒப்பீடுகள் முதல் ரசனைவரை சினிமாவின் தாக்கம் விசலாமானது. நூலாசிரியரின் ஆசிரியர் சேதுலட்சுமி சொல்வதைப் போல ‘தமிழ் சினிமாக்கள் பெண்களின் கற்பின் மீது காட்டிய அக்கறையை அவர்களின் கணவன் கூடக் காட்டியிப்பானா என்று சந்தேகமே!’ காதல் என்கிற பெயர்கள் நாயகர்கள் திரையில் செய்யும் ஈவ் டீசிங், பெண் காதலை ஏற்கவில்லை என்றால் ஆசிட் அடிப்பது, மிரட்டி வதைப்பது துவங்கி வன்புணர்வுக்கு உள்ளான நாயகி தானே சாவது முதல் நாயகனே கொல்லவேண்டும் என்று வேண்டுவது வரை எத்தனை அசிங்கங்கள்?

பல லட்சம் சம்பாதித்தாலும், எந்தத் தொந்தரவும் தராவிட்டாலும் தனியாகப் பெண்களுக்கு வீடு தருவது என்பது பெருநகரத்தில் இன்னமும் கொடுங்கனவுதான். இருபது-முப்பது வருடம் வரை கடன் கட்டி சொந்த வீடு கனவை அடையும் பலருக்குப் பின்னால் இப்படிச் சந்தித்த அவமானங்கள் அநேகம் இருக்கும். திரையில் ப்ளேக் டிக்கெட் விற்கும் இளைஞன் மெட்ராஸ் தம்பியாக மாறுவது, பீஸ் கட்ட வழியில்லாமல் பேருந்தில் ஏறத் தயங்கி அழும் பெண்ணுக்குப் பீஸ் கட்டும் அன்னியர் என்று அங்கங்கே நேசத்தால் நம் துயரை மறக்கடிக்கும் உறவுகள் உண்டு. பீஸ் கட்டிய உடனே அவரோடு அவள் அப்பெண் காதல் பூண்டாள் எனும் நம்முடைய கற்பனைச் சிறகுகளுக்குக் கத்தரிபோடும் தருணம் அசத்தல்.

அப்பாக்கள் தங்கள் மகள்களுக்கு வயதாக வயதாக விலக ஆரம்பிக்கிறார்கள். எப்பொழுதும் தங்கள் தோளிலேயே இருக்கட்டும், தான் சுமக்கிறேன் என்று பால்யத்திலும், இனி கட்டி வைத்தால் போதும் எனப் பருவ வயதிலும் இரு முனைகளை எடுக்காமல் கவனமான சுதந்திரத்தை தருவதும், உரையாடலை கனிவோடு சாத்தியப்படுத்துவதும் காலத்தின் தேவை.
பருவ வயது எய்தும் எண்ணற்ற பெண்களுக்குத் தேவை பூப்புனித நீராட்டு விழாக்கள் இல்லை. சுகாதாரமான டாய்லெட்; நாப்கின்.’வயசுக்கு வந்துட்ட…வெட்கப்படு’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘இது இயல்பானது…எந்தக் குற்றவுணர்வும் தேவையில்லை.’ என்பதே தேவை. விஸ்பர் விளம்பரங்களைப் பற்றிக் கேள்வி கேட்கும் மகனை தட்டாமல் விளக்குவதும் தேவை.

இரண்டாவதாக மணம் செய்கிற ஆணுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் திருமண உறவை மேற்கொள்ள முடிகிறது. ஆனால், அப்படிப்பட்ட சவுகரியமும், பேரன்பும் பெண்ணுக்கு கிடைக்கிறதா? அப்படிக் கிடைத்த மூக்கன் என்பவரின் மனைவி அவரின் மரணத்தின் பொழுது தன் கணவரின் உடலைத் தரையில் வைக்கவும் விடவில்லை. முத்தங்களால் இறுதி யாத்திரை வரை நிறைத்துக் கொண்டே இருந்தாள். இன்னொரு புறம், ‘இறந்து போனானே உயிரெடுத்த புருஷன்’ என்று பெண்கள் உள்ளுக்குள் ஆனந்தப்படுகிற அளவுக்கும் பல மண உறவுகள் அமைந்து விடுகின்றன!

தாய்மை குறித்த பெருமிதங்களைச் சடசடவென்று உடைத்து நொறுக்கும் கட்டுரையின் இறுதியில் ஷாஜகான் பதிமூன்று கர்ப்பங்களைத் தந்ததால் அவனை மனைவி மும்தாஜ் சபித்ததாக வழங்கும் நாடோடிக்கதை நிஜமோ என மனம் பதைக்கிறது.
‘பிரச்சினைன்னு குடிக்கிறானாம்…டெய்லி குடிச்சுட்டு வர இந்த ஆளைவிடப் பெரிய பிரச்சனை இருக்க முடியுமா? இதையே நான் சமாளிக்கலையா? நாமலாம் குடிக்க ஆரம்பிச்சா என்னாகும்?’ எனக்கேட்கும் பெண்ணின் குரல் தான் ‘குடி உயர் தமிழ்நாட்டின் அவலம். அம்மாக்கள் வீட்டோடு வேலை செய்தபடி இருப்பது பலருக்கும் கவுரவக் குறைவாக இருக்கிறது. தங்களுக்காக அம்மா எப்பொழுதும் உடனிருக்க வேண்டும் என்று இளமைப் பருவம் முழுக்க அவர்களைத் தங்களுக்காய் தேய்த்துவிட்டு இப்படியும் யோசித்தால் எப்படி? அம்மாக்கள் பெண்களின், மகன்களின் பரந்த கனவுகளுக்கு, காதலுக்குத் தடை சொல்கிற பொழுது ‘வெளியுலகமே தெரியவில்லை’ என்று சலிக்கிற நாம் அவர்களுக்கு வெளியுலகத்தைக் காட்ட முயலவே இல்லை என்கிற குற்ற உணர்ச்சியைச் சற்றேனும் அடைகிறோமா? எதிர்ப்பார்ப்பின்றி நேசிக்கும் அம்மாக்களை’ நாம்தான் புரிந்துகொள்ள மறுக்கிறோம். அவர்கள் நம்மை மன்னித்தவண்ணம் உள்ளார்கள்.

குழந்தை வகுப்புச் செல்ல மறுத்தால் என்ன சிக்கலென்று கேட்காமல் வன்முறையையே கையாள்கிறோம். மனப்பாடத்தால் நிறைத்து அதனைக் குழந்தைமையை விட்டுத் துரத்துகிறோம். ‘என்ன சிக்கல் உனக்கு?’ என்று கனிவாகக் கேட்கவே மறுதலிக்கிறோம். குழந்தைகளின் கண்களில் தெரியும் ஏக்கத்தைப் புரிந்து கொள்ளவே மாட்டோமா? பேசுவதற்காகவும், துருதுருவேன்றும் இருப்பதற்காகவும் குழந்தைகளைத் தண்டித்துவிட்டு அவர்கள் குழந்தைகளாக இல்லையென்றால் எப்படி?

பெண்கள் ஜாதிமாறி திருமணம் செய்துகொண்டாலும் கணவனின் ஜாதி ஒட்டிக்கொள்கிறது. கடவுள் நம்பிக்கையின்மையைத் தன்னுடைய மனைவியின் மீது திணிப்பது எப்படிப் பகுத்தறிவாகும்? உரையாடலுக்கும், அழுத்தத்துக்கும் வேறுபாடுகள் உண்டு இல்லையா? பெண்கள் பேசாத பேச்செல்லாம் எழுத்தாக ஆகியிருக்கிறது. பெண் மனத்தின் ஆழ அகலங்கள் புரிய அவசியம் படிக்க வேண்டிய நூல்.
ஆசிரியர்: ப்ரியா தம்பி
பக்கங்கள்: 288
விலை: 170
விகடன் பிரசுரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s