சேகர் குப்தா இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராக பதினெட்டு வருடங்கள் கோலோச்சியவர். தீர்க்கமான இதழியலுக்கு பெயர் போன அவர் ‘NATIONAL INTEREST’ என்கிற பெயரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்தி ஒன்றை தொடர்ந்து எழுதி வருகிறார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மட்டும் ‘ANTICIPATING INDIA’ என்கிற பெயரில் தொகுக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கட்டுரைகளின் சாரமாக இந்த நூல் அறிமுகம் அமையும். இரண்டு பகுதிகளாக அமையும் இந்த நூல் அறிமுகத்தின் முதல் பாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எழுச்சி, முதல் ஆட்சிக்காலம் ஆகியவைக் குறித்து மட்டும் காண்போம்.
சேகர் குப்தாவின் முன்னுரையே ஒரு சுவாரசியமான நாவலை நினைவுபடுத்துகிறது. தான் மெத்த தெரிந்த மேதாவி என்கிற தொனியில் எழுதுபவர்களுக்கு நடுவே அரசியல்வாதிகளிடம் தான் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டே தன்னுடைய முன்னுரையை அவர் துவங்குகிறார்.
இந்தியாவின் அரசியலின் போக்கை எப்படி ஒருவர் புரிந்துகொள்வது அல்லது விளக்குவது? ராஜீவின் ஊழல்மயமான காங்கிரசை ஆட்சியை விட்டு விலக்கி வைக்க இடதுசாரிகள், பாஜக இருவரும் வி.பி,சிங்குக்கு ஆதரவு தந்தார்கள். ஆனால், அதே இடதுசாரிகள் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து பாஜகவை ஆட்சியை விட்டு தள்ளி வைத்தார்கள். தேவகவுடா, குஜ்ரால் பிரதமர்கள் ஆவது இதனால் சாத்தியமானது. காங்கிரஸ் ஆட்சிக்கு வர இடதுசாரிகள் அடுத்து உதவினார்கள். அதே இடதுசாரிகள் அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறாமல் இருக்க பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தார்கள். தலைசுற்றும் இந்தியாவின் அரசியல் ஆடுகளத்தில் பார்வையாளனாக இருந்து ரசிப்பதே சிறந்தது. எதுவும், எப்பொழுதும் மாறும் என்கிற புரிதல் தேவை. பல்வேறு காரணிகள் தொடர்ந்து செயல்படுவதால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்கிற அதிர்ச்சி கொள்ளாத மனம் மட்டுமே தேவை.
குமாரசாமி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து முதல்வர் ஆனதை சந்தர்ப்பவாதம் இல்லையா? என ஆசிரியர் கேட்க, ‘என் தந்தை மத்தியில் பிரதமர் ஆகி மாநிலத்தில் ஆட்சியை, கட்சியை இழந்தார். மாநிலத்தில் பலமாக இருந்துகொண்டு தான் மத்தியை பற்றி கவலைகொள்ள வேண்டும்.’ என்று அவர் சொன்னபொழுது ஒரு புதிய பாடம் புலப்பட்டது.
யார் ஜாதி பார்க்கிறார் என்று சொல்கிறவர்களுக்கும். இந்து மதத்தில் மட்டுமே ஜாதி உண்டு என்பவர்களுக்கும் இந்தியாவின் ஜனாதிபதியான கியானி ஜெயில் சிங்கின் கதை ஒன்று போதும். சேகர் குப்தாவிடம் பஞ்சாபின் முதல்வர்களாக ஜாட் ஜாதியை சேர்ந்த சீக்கியர்கள் மட்டுமே ஆகமுடியும், ராம்கார்ஹியா எனும் தச்சர் பிரிவை சேர்ந்த ஜெயில் சிங் இந்திராவால் பஞ்சாப் முதல்வர் ஆனார். ‘எனக்கு பின் நான் யாரும் ஜாட் பிரிவைத் தாண்டி பஞ்சாபின் முதல்வராக முடியும் என்று எண்ணவில்லை.’ என அவர் சொல்லி நாற்பது வருடங்கள் ஆகப்போகிறது. ஏழு பஞ்சாப் முதல்வர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். எல்லாரும் ஜாட் சமூகத்தினர் மட்டுமே.

வாஜ்பேயி உடன் தான் மேற்கொண்ட முதல் சந்திப்பை விவரிக்கிற பொழுது அவர் எத்தகைய ஜனநாயக பண்பு கொண்டவர் என்பது புலப்படுகிறது. வடகிழக்கு பற்றி அங்கே பத்திரிக்கையாளராக களத்தில் பணியாற்றிய ஆசிரியரை பேசவிட்டு வாஜ்பேயி கேட்டதை, ‘எல்லாம் எனக்குத் தெரியும்!’ என்று சர்வாதிகார போக்கில் பேசிய ஆர்.ஆர்.எஸ். தலைவர் சுதர்சனுடன் ஒப்பிடுகிறார்.
நரசிம்ம ராவ் என்றாலே பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர் என்கிற பிம்பம் நம்முடைய மனதில் பதிந்துவிட்ட சூழலில் அவரின் வெவ்வேறு முக்கியமான பக்கங்களை சேகர் குப்தா முன்வைக்கிறார். நரசிம்ம ராவ் காலத்தில் இந்தியா அணுகுண்டு வெடிப்பை மேற்கொள்ள முயன்று அமெரிக்காவிடம் மாட்டிக்கொண்டதாக பரவலாக சொல்லப்படுகையில் சேகர் குப்தா அது அமெரிக்காவிடம் வேண்டுமென்றே மாட்டிக்கொண்டு, ‘இனிமேல் இவர்கள் செய்ய மாட்டார்கள்!’ என்கிற போலி நம்பிக்கையை விதைக்க முயன்ற ராவின் ராஜதந்திரம் என்று அடித்துச் சொல்கிறார்.

நரசிம்ம ராவ் அறுபதாண்டு பொதுவாழ்க்கையில் இருந்த நிலையில் இந்தியாவின் பிரதமரான பொழுது பாபர் மசூதி இடிப்பை அவரே வழிவிட்டு செய்தார் என்று நமக்கு சொல்லப்படுகிறது. அத்வானி, வாஜ்பேயி முதலிய பாஜக தலைவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்த லிபரான் கமிஷன் ராவை விடுவித்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
‘தான் அதிகமாக அத்வானியை நம்பிவிட்டதாக’ ராவ் குப்தாவிடம் புலம்புகிறார். மேலும், ‘ஏன் ராணுவம் கரசேவகர்களை சுடச்சொல்லி உத்தரவிடவில்லை?’ என்று கேட்டதற்கு, ‘அவர்கள் ராம் ராம் என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். ராணுவத்தில் சிலரும் ராம், ராம் என்று முணுமுணுத்துக்கொண்டு அவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டு ராணுவத்தை தாக்கியிருந்தால் அதில் ஏற்பட்ட தீ நாட்டையே அழித்திருக்கும்!’ என்று ராவ் சொல்கிறார். மேலும், ராவ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டாலும் அவை அனைத்திலும் இருந்து அவர் விடுதலை பெற்றார். அதைக் குறித்து கேட்டதற்கு, தன்னுடன் இருந்தவர்கள் கொள்ளையடித்ததை தான் வேடிக்கை பார்த்ததை சூசகமாக, ‘நான் முட்டையைத் திருடினேன் என்றும், நான் கோழியைத் திருடினேன் என்றும் வெவ்வேறு சாரார் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நான் திருடன் என்பதில் மட்டும் அவர்களுக்கு சந்தேகமில்லை!’ என்று சொல்லியிருக்கிறார்.

சீனாவுக்குப் பயணம் போய்விட்டு வந்த காங்கிரசின் தலைவர் சீதாராம் கேசரியிடம் ‘எப்படி இருந்தது சீனா?’ எனக் கேட்டதற்கு, ‘அவர் நம்மூர் பஸ் டிரைவர்கள் போலத்தான். இண்டிக்கேட்டரை இடது பக்கம் போட்டுவிட்டு, வலதுபக்கம் பொருளாதாரத்தில் போய்க்கொண்டே இருக்கிறார்கள்!’ என்றார். மாதவராவ் சிந்தியா இந்தியாவின் பிரதமர் ஆகக்கூடுமா என்கிற கேள்விக்கு, ‘ஒரு விமான விபத்துக்காக அவர் பதவியைத் துறந்தார். அதுவே அவசரமான செயல். அதற்கடுத்து அதைப் பயன்படுத்திக் கொண்டு நாடகமாடி இருக்க வேண்டும், அவர் ஒருவாரம் குடும்பத்தோடு சுற்றுலா போய்விட்டார். இவரெல்லாம் தேறமாட்டார்!’ என்றிருக்கிறார் சீதாராம் கேசரி.
கருணாநிதியை ‘தங்களை பிரிவினைவாதி என்று சித்தரிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’என்று கேட்ட பொழுது, ‘நான் பிரிவினைவாதியாக சித்தரிக்கப்படவில்லை, நான் பிரிவினைவாதியாக இருந்தவன் தான்; இந்தியா மேற்கொண்ட 62, 65, 71 போர்கள் இந்தியக்குடியரசுக்கு வெளியே சிறிய தேசமாக இறையாண்மையோடு இருக்க முடியாது என்று உணர்ந்துகொண்டதன் விளைவே இது!’ என்று பதில் தந்திருக்கிறார்.
12 ஆகஸ்ட் 1990 அன்று ருச்சிகா கிர்ஹோத்ரா என்கிற பதினான்கு வயது சிறுமி டென்னிஸ் விளையாட போன பொழுது ஹரியானா டென்னிஸ் சங்கத் தலைவரும், ஐ.பி.எஸ். அதிகாரியுமான ரத்தோர் அப்பெண்ணை மானபங்கபடுத்தி இருக்கிறான். அதை வெளிப்படையாக அப்பெண் சொன்னதும் முதல் தகவல் அறிக்கை கூட பதியப்படாமல் அவளின் சகோதரன் மீது ஆறு வாகனத் திருட்டு வழக்குகள் பதியப்பட்டது. (அனைத்திலும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.) அப்பெண்ணின் குடும்பமும், அவளும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி பதினேழு வயதில் அவள் தற்கொலை செய்துகொண்டாள். அந்த அதிகாரியின் மீது சுண்டு விரலைக் கூட பதிக்காத அரசின் செயல்பாட்டை கடுமையாக சேகர் குப்தா விமர்சிக்கிறார்.
ஐ.பி.எஸ் அதிகாரி கே.பி.எஸ்.கில் மீது மானபங்க வழக்கை ரூபன் தியோல் பஜாஜ் தொடர்ந்த பொழுது பொங்கிய போராளிகள் ஒரு நகர்ப்புறத்தை சேர்ந்த பெண்ணுக்கு குரல் கொடுக்காமல் போய் அவள் இறந்தாள் என்று மனசாட்சியை உலுக்குகிறார். பத்து வருடங்கள் கழித்து ரத்தோர் மீது சிபிஐ மானபங்கப்படுத்தியதற்காக மட்டும் வழக்கு பதிவு செய்து, இன்னுமொரு பத்து வருடங்கள் கழித்து சிறைத்தண்டனை பெற்றுக்கொடுத்தது. தற்கொலைக்கு தூண்டியது என்று எந்த வழக்கும் பதியப்படவில்லை.
அசோம் கண பரிஷத் கல்லூரி மாணவர்களின் இயக்கமாக, அசாமிகளின் சுயாட்சிக்கான இயக்கமாக வங்காளிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக உருவானது. அரசின் அடக்குமுறைகளை வெற்றிகரமாக அவர்கள் எதிர்கொண்டார்கள். தேர்தல்களை புறக்கணித்தார்கள். ஊரடங்கு உத்தரவு என்பதை கேலிக்கு உள்ளாக்கினார்கள். ஆனால், அவர்கள் ஆட்சி செய்த ஐந்து வருடத்தில் ஊழல் மட்டுமே மூச்சானது. நிர்வாகம் என்கிற ஒன்றையே மறந்தார்கள். மாநிலக்கட்சிகளே சிறந்த உள்ளூர் நிர்வாகத்தை பெரும்பாலும் தந்துகொண்டிருக்கும் சூழலில் இப்படிப்பட்ட கட்சிகள் மரிப்பதும் நன்மைக்கே என்கிறார்.
உத்திர பிரதேசத்தை விடுதலைக்குப் பின்னால் பிரிக்க முயன்ற பொழுத, ஜி.பி.பந்த் அதை மறுத்து சொன்ன காரணம் வேடிக்கையானது, ‘கிழக்கில் ராமனின் பிறப்பிடமான அயோத்தியும், மேற்கில் கிருஷ்ணரின் மதுராவும் இருக்கிறது. எப்படி இதைப் பிரிப்பது?’. காங்கிரசின் அதிகார மையங்கள் அங்கிருந்தே பெரும்பாலும் வந்தார்கள், நேரு, இந்திரா ஆகியோரை முன்னிறுத்தி ஒட்டுமொத்த இடங்களையும் அள்ளிவிடவே காங்கிரஸ் இப்படி செயல்பட்டது. அங்கே ஓரளவுக்கு நொய்டா மட்டுமே வளர்ந்திருக்கிறது. காரணம், அங்கே தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வசிக்கிறார்கள். கூடவே, டெல்லிக்கு அருகில் இருக்கின்றது அது. பூர்வாஞ்சல், ரோஹில்கன்ட்., பந்தல்கன்ட், அவாத் என்று பிரித்து தொலைத்தால் ஆவது அங்கே வளர்ச்சி ஓரளவுக்கு எட்டிப்பார்க்கும்.
மோடியை கோத்ரா கலவரங்கள் சார்ந்து குத்திக் கிழிக்கிறார், ‘ஐம்பது வயதில் இருக்கும் உங்களுக்கு ஒரு பேரன் இருக்கவேண்டும்.. அவன் குஜராத் கலவரங்களின் பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் தாத்தா?’ என்று கேட்பதில் இருந்து உங்களின் பிரம்மச்சரியம் காத்திருக்கிறது. ‘கலவரங்களின் பொழுது காவல்துறை, அரசு செயல்பட்டது எனக்கு முழுத்திருப்தி, வன்முறை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி.’ என்று நீங்கள் சொன்னதற்கும், ‘பழுத்த மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்.’ என சீக்கிய படுகொலைகளின் பொழுது ராஜீவ் சொன்னதற்கும் என்ன வித்தியாசம்?’ எனக் கேள்வி எழுப்புகிறார்.
எண்பத்தி மூன்றாம் வருடம் அசாமின் நெல்லியில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் உட்பட 3,300 அப்பாவி மக்கள் அவர்கள் வங்காளிகள் என்கிற ஒரே காரணத்துக்காக அசாம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். உட்பகுதியில் நடந்த அந்த படுகொலையை CRPF-ன் பாதி பிரிவை மட்டும் கொண்டு பெருமளவில் தடுத்த H.B,N.அப்பா என்கிற தலைமைக் காவலர் ‘ஐயோ நான் இன்னமும் முன்னரே வந்திருந்தால் இன்னம் சில ஆயிரம் பேரைக் காப்பாற்றியிருக்கலாமே!’ எனக்கண்ணீர் வடித்தார். வெறும் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று வாழ்க்கை முடிந்த போன அவருக்கு இருந்த உறுத்தல் ஏன் மோடிக்கு இல்லை என்று கேட்கிறார் குப்தா.
‘ராஜதர்மத்தை இழந்துவிட்டார் மோடி’ என்று முழங்கிய வாஜ்பேயி மோடியை பதவியைவிட்டு நீக்கியிருக்க வேண்டும். அத்வானியின் அழுத்தத்துக்கு அடங்கி அவர் அதைச் செய்யவில்லை. அது சிறுபான்மையினரை அவருக்கு எதிராக திருப்பிவிட்டது என்கிறார் ஆசிரியர்.

சிலைகளைக் கொண்டு நடக்கும் அரசியலைக் கடுமையாக சாடுகிறார். சவார்க்கருக்கு படம் கூடாது என்று பொங்கிய காங்கிரஸ் ஏன் இந்திரா காலத்தில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது? பாஜகவின் பசு எதிர்ப்பு அரசியலுக்கு அச்சாரம் போட்டதே காங்கிரஸ் தான். காங்கிரஸ் இன்னமும் நேரு, காந்தியின் பெயரைச் சொல்லி ஓட்டு வாங்க பார்க்கிறது. எப்பொழுதோ இருந்ததாக நம்பப்படும் ராமர், கிருஷ்ணர் பெயரால் பாஜக ஒட்டுக் கேட்கிறது. மாயாவதி அம்பேத்கரின் பெயராலும், முலாயம் சிங் லோஹியாவின் பெயராலும்,. ஜெயலலிதா எம்ஜிஆரின் பெயராலும் ஆட்சியைப் பிடிக்க முனைகிறார்கள். எதிர்காலத்தை எப்படி கட்டமைப்போம் என்று சொல்லியோ, தொலைநோக்கை கொண்டோ, தங்களின் செயல்பாட்டை கொண்டோ ஓட்டுக் கேட்கும் தைரியம் ஏன் வரவில்லை என்று வினவுகிறார்.

குஜராத்திலும், காஷ்மீரிலும் முதுகெலும்போடு தேர்தல் நடத்திய ஜே.எம்.லிங்டோவை ‘ஜேம்ஸ் மைக்கேல்’ லிங்டோ என்று மதச்சாயம் பூசி அவதூறு செய்யப்பார்த்தார் மோடி. ஐந்தே தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி அதில் தன்னுடைய கட்சி தோற்றதால், ஓட்டு அளிப்பதை வாக்குச் சீட்டில் தான் செய்யவேண்டும் என்கிற பழைய வரியைக் கொண்டு தேர்தல் ஆணையத்தை மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தாமல் சிலகாலம் தடுத்தார் ராஜீவ். பி.ஜே.ராவ் எனும் தேர்தல் ஆணையர் லாலூவுக்கு அஞ்சாமல் தேர்தலை நேர்மையாக நடத்திக் காட்டினார். அவர் வாங்கிய சம்பளம் 12,000 ரூபாய்! சேசன் தேர்தல் ஆணையம் எவ்வளவு சிறப்பாக செயல்படமுடியும் என்று காட்டினாலும், அவரே பின்னர் ஜனாதிபதி பதவி, ராஜ்ய சபா சீட் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு வழிமாறிப் போனார்.
2004 தேர்தலில் பாஜக தோற்றதற்கு காரணமாக விவசாயத்தை கண்டுகொள்ளாதது, அடித்தட்டு மக்களுக்கு எட்டு சதவிகித வளர்ச்சியே திருப்தி தந்துவிடும் என்று நம்பியது, குறைந்த வட்டி வீட்டுக்கடன்கள், மலிவான தொலைபேசி இணைப்புகள் நாட்டை நம் பக்கம் ஈர்க்கும் என்று தப்புக்கணக்கு போட்டார்கள் என்கிறார் குப்தா.
அதேசமயம் வேறு சில வாதங்களை முன்வைக்கிறார்: ஏழைகள்
காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டார்கள் என்றால் ஏன் ஒரிசாவில் மீண்டும் பாஜக கூட்டணி பெருவெற்றி பெற்றது? கிராமப்புற மக்கள் ஐடி புரட்சிக்கு எதிராக கிளர்ந்தார்கள் என்றால் ஏன் ஆந்திராவில் மட்டும் அப்படி ஆனது? கர்நாடகாவில் பாஜக நல்ல வெற்றியை ஈட்டியுள்ளதே? சீரற்ற ஆட்சி நிர்வாகம், சொரணையில்லாத அரசியல், கேவலமான வாழ்க்கை நிலை ஆகியவற்றால் மாற்றி ஓட்டுப் போட்டார்கள் என்றால் ஏன் லாலுவும், முலாயமும் தொகுதிகளை அள்ளினார்கள்? கிராமப்புறங்களில் தான் பாஜக தோற்றதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. உண்மையில் நகரங்களில் தான் அது துடைத்து எறியப்பட்டது. கிராமங்களில் முன்னர் இருந்த நிலையையே அது பெரும்பாலும் பெற்றது. நகர்ப்புற இடங்கள் அந்த கூட்டணிக்கு 51-ல் இருந்து 21 ஆக குறைந்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 16-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது.
தரகர், விவசாயி யாரேனும் ஒருவரை திருப்திப்படுத்தினால் போதும் என்கிற பார்வையே பாஜகவுக்கு இருந்தது. தரகர்,விவசாயி இருவரையும் திருப்திபடுத்துவதே சமச்சீரான வளர்ச்சி. அமர்த்தியா சென் ‘அடிப்படைக் கல்வியை பரவலாக்கி, பொது மருத்துவ நலச்சேவையை மக்களுக்கு சிறப்பாக வழங்கி, நிலச்சீர்திருத்தங்கள் நடந்து, குறுங்கடன்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எளிமையாக, நியாயமாக கிடைத்திருந்தால் இப்படிப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.’ என்கிறார்.
இடதுசாரிகள் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் பொழுது காங்கிரசுக்கு தங்களின் ஆதரவை விளக்கிக் கொண்டதை கடுமையாக சாடுகிறார் சேகர் குப்தா. இடதுசாரிகள் மத்திய அரசில் பங்கேற்ற பொழுது நிர்வகிக்கப்பட்ட விலை முறைமையை (APM) நீக்கியதையும், பொதுத் துறையில் அரசு பங்குகளை விற்கும் கமிட்டியை முதன்முதலில் அவர்கள் காலத்திலேயே துவங்கியதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும், தேவ கவுடா ஆட்சியில் சிதம்பரம் சீர்திருத்தங்கள் நிறைந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த பொழுது அமைதி காத்தவர்கள், லாலு தனியார் துறையை ரயில்வே கண்டெயினர் துறையில் கொண்டு வந்த பொழுது எதிர்க்காதவர்கள், அதையே காங்கிரஸ் செய்தால் கத்தியிருப்பார்கள். BHEL பங்குகளில் பத்து சதவிகிதத்தை விற்க அரசு முனைந்த பொழுது எதிர்த்த இடதுசாரிகள் அதுவே NTPC எனும் இன்னொரு நவரத்னா நிறுவனத்தில் பங்குகளை விற்ற பொழுது அமைதி காத்தது ஏன் என்று துளைத்து எடுக்கிறார். அறுபது எம்பிக்களை வைத்து கொண்டு ஆட்சியை நிர்மாணிக்கும் போக்கு சர்வாதிகாரமானது என்று பாய்கிறார்.
நம்முடைய நகரங்கள் பெரும்பாலும் வளர்ச்சியிலும், திட்டமிடுதலிலும் பின்தங்கியிருப்பதை சுட்டிக்\காட்டி அமெரிக்காவில் பல்வேறு முக்கியமான நகரங்கள் அந்தந்த மாநிலத்தின் தலைநகராக இல்லாததைப் போல இந்தியாவிலும் செய்யலாம் என்று ஆலோசனை தருகிறார். நடுத்தர வர்க்கம் மின்சாரம், சமையல் எரிவாயு, தண்ணீர் என்று அனைத்திலும் மானியத்தையும், தரத்தையும் இணைத்தே எதிர்பார்ப்பது மேலும், மேலும் நிதிப் பற்றாக்குறையை அதிகமாக்கவே செய்யும் என்று எச்சரிக்கையும் உண்டு.
டெல்லியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மெத்தனம் காட்டிய அரசின் போக்குக்கு பின்னால் இருக்கும் அரசியலை தோலுரிக்கிறார். ஒளிவுமறைவற்ற நில ஆவணங்கள், தெளிவான சொத்து வரிகள், சொத்து சார் சட்டங்களை சீர்திருத்தல் ஆகியவற்றை செய்யாமல் அரசுகள் காலம் கடத்துகின்றன. காரணம் இப்படிப்பட்ட சூழலில் அரசியல்வாதிகளையே மக்கள் நாடவேண்டி இருக்கும், தேவையானதை பெற்றுக்கொண்டு செய்வதை அவர்கள் செய்வார்கள். அதேபோல் ஓட்டுக்கள் பறிபோகும் என்கிற வாதத்தை பதினெட்டாயிரம் குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகள் என்று வைத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் ஐந்து ஓட்டு என்றாலும் ஒரு லட்சம் ஓட்டைத் தொடாத பொழுது அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. பலர் அரசின் நேர்மையான போக்குக்கு வாக்களிப்பார்கள் என்று உத்வேகம் தருகிறார்.
கல்வி அமைச்சரின் வீட்டின் முன்னால் கேந்திரிய வித்யாலயாவில் இடம் வேண்டி பலர் நிற்கும் காட்சியை கண்முன் ஓடவிட்டு, நாம் வருடத்துக்கு மிக மிக குறைவான மேற்படிப்பு முடித்த மருத்துவர்களையே உருவாக்குகிறோம். போதாது என்று கலைசார்ந்த கல்லூரியில் ஒரு தத்துவத்தை மட்டுமே சார்ந்து, புதிய சிந்தனைகளை வரவேற்காத போக்கு நிலவுவதையும் காணமுடிகிறது. தேவை மிக அதிகமாக இருக்க சத்தற்ற கல்வி நிறுவனங்களை, சீரழியும் நிலையில் கல்வியின் போக்கை வைத்திருப்பது இந்தியாவின் பெருங்கனவுகளுக்கு உகந்தது அல்ல என்பது அவரின் அச்சம்,.
வடகிழக்கு பகுதி வேறுபட்ட பகுதி என்பதை உணர்ந்த நேரு அங்கே பரந்த அறிவைக் கொண்டிருந்த மானுடவியல் அறிஞர் வெர்ரியர் எல்வினை நம்பினார். அவரின் வழிகாட்டுதலில் இந்தியாவின் மைய நீரோட்டத்தோடு வேகமாக வடகிழக்கு மக்களை இணைக்காமல் பொறுமையாகவே அரசு இயங்கியது. இதை ‘மெதுவாக வேகப்படுத்தல்’ என்று நேரு அழைத்தார். இவை நல்ல நோக்கத்தோடு துவங்கப்பட்டாலும் ILPS முதலிய கட்டுப்பாடுகளின் மூலம் வளர்ச்சியை மழுங்கடித்து விட்டன. இந்திய பழங்குடியின ஆட்சிப் பணி தந்த தேர்ந்த அதிகாரிகள் போன்ற சிற்சில நன்மைகள் உண்டு,ஆனால். கிறிஸ்துவ மிஷனரிக்கள் பலமாக வேரூன்றிய பகுதிகளில் நவீன கல்வி, சிந்தனைகள் புகுந்தன. அப்படியிருந்தா மிசோரம், நாகலாந்து சிறப்பாக வளர்ச்சியடைந்தது. மற்ற பகுதிகள் குறிப்பாக அருணாசல பிரதேசம் பின்தங்கியது. சாலைகள், கட்டுமானம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை நலம் உயர்த்துதல் என்று நாம் போகவேண்டிய தூரம் பெரிது.
இந்தியா முழுமையான ஜனநாயகம் இல்லை என்பதைப் போல பாகிஸ்தான் முழுமையான சர்வாதிகார நாடில்லை என்கிற சுவராசியமான வாதத்தை முன்வைக்கிறார். எப்படி இந்தியாவில் எல்லா அமைப்புகளும் முழுமையாக சிறப்பாக செயல்படுகிறது என்று சொல்லமுடியாதோ அது போல பாகிஸ்தானில் பத்திரிக்கைகளின் செயல்பாட்டை நிறுத்தவோ, நீதிமன்றங்கள் அவ்வப்பொழுது தங்களின் சுயாட்சி போக்கை காட்டவோ, மக்களுக்கு எல்லா உரிமைகளையும் மறுக்கும் சர்வாதிகாரமோ பாகிஸ்தானில் எப்பொழுதும் சாத்தியப்படவில்லை. இந்தியாவில் நிர்வாகம் சரியில்லை என்பதற்காக ராணுவத்திடம் ஆட்சியை கொடுக்கலாம் என்பவர்கள் பாகிஸ்தானையே பாடமாக எடுத்துக்கொள்ளலாம். ஆயுதங்களை மக்கள் கையில் கொடுத்தால் தீர்வு வந்துவிடும் என்பதை விட பயங்கரமான யோசனையும் இருக்க முடியாது. தென் ஆப்ரிக்காவில் அப்படி செய்ய முயன்று மக்கள் தனித்த தீவுகளாக வீட்டுக்குள்ளேயே பயத்தில் முடங்கிக் கிடப்பதே நடந்தது. உள்ளே இருந்தே மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே சரி.
பெருத்த சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர், சமூக சேவகர்கள் தேர்தல் அரசியலில் குதிக்கிறார்கள். ஆனால். மக்கள் அவர்களுக்கு ஓட்டளிப்பதில்லை. அவர்களை உணர்ந்து கொள்ள மக்களுக்கு திறனில்லை என்கிற வாதத்தை எதிர்கொள்கிறார் சேகர் குப்தா. மக்களை நோக்கி வருவதாக சொல்லிக்கொள்ளும் இந்த போராளிகள் பல்வேறு குறைகள் இருந்தாலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி முறையை முற்றாக நிராகரிக்கிறார்கள். அதோடு நில்லாமல், அந்த கட்சிகள் பரவலாக இருக்கும் தேர்தல் முறையில் பங்கேற்று அந்த முறையையே மாற்றப் போவதாக வெற்றுக்கூச்சல்கள் போடுகிறார்கள். பலரையும் அனுசரித்து, தேர்தல் அரசியலை மதித்து,. கட்சி என்கிற கோட்பாட்டை முற்றும் ஒழித்து விடலாம் என்று கனவுகாணாமல் கள யதார்த்தம் உணரும் வரை விடிவில்லை.
எப்படி ஊடுருவல்கள், மாவோயிஸ்ட்கள் ஆகியோரை சமாளிப்பது என்று சேகர் குப்தா முந்தைய எடுத்துக்காட்டுகளை சொல்கிறார். மிசோரமில் ஜனவரி பதிமூன்று அன்று நாற்பது வருடங்களுக்கு முன்னால் மிசோ போராளிகள் நுழைந்து ஒட்டுமொத்த போலீஸ் தலைமையகத்தை அழித்தார்கள். இந்திரா இன்னமும் கடுமையான ஜி.எஸ்.ரன்தாவாவை அனுப்பி வைத்தார்.மிசோரம் காவற்படையை பழங்குடியினரை கொண்டு அவர் உருவாக்கினார். கடும் பதிலடி தரப்பட்டது. இ.எஸ்..பார்த்தசாரதி எனும் கமிஷனர் அசாமில் கொல்லப்பட்டார். குறுக்கு வழியில் ஹிதேஸ்வர் சைக்கியாவை அசாம் முதல்வர் ஆக்கினார் இந்திரா. இரும்புக்கரத்தோடு சிறப்பான நிர்வாகத்தை அவர் சாத்தியப்படுத்தினார். இந்த இரண்டு தருணங்களின் உச்சத்தை ராஜீவ் அமைதி உடன்படிக்கையாக மாற்றிக்கொண்டார்.
இந்த போராட்டங்கள் ஆரம்பத்தில் எண்ணற்ற இழப்பை இருதரப்புக்கும் தருகிறது. போகப்போக அரசை எதிர்த்து போரிட முடியாது, அரசு வலிமையானது என்று அவர்கள் உணர நேரிடுகிறது. அதே சமயம், அரசு மாவோயிஸ்ட்கள் போர் செய்வது வீண் என்கிற உணர்வை உண்டாக்க களத்திலும். நிர்வாகத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். அமைதியை தன் பக்கம் கையோங்கி இருக்கும் சூழலில் அரசு தரவேண்டும். இல்லையேல் அதை பலவீனத்தின் அடையாளமாக பல்வேறு சமயங்களில் காணக்கூடும்.
இந்தியா பொறுமையான அரசு என்று சப்பை கட்டு கட்டுகிறவர்கள், அறுபதில் நேரு நாகாக்களை வான்படையை கொண்டு தாக்கியதை மறக்கலாம். இந்திரா கருவூலத்தை மிசோக்கள் கைப்பற்ற முனைந்த பொழுது விமானத்தாக்குதல் நடத்த வைத்தார். படேல் ஹைதரபாத் மீது ராணுவத்தை ஏவிவிட்டு அதை ‘காவல்துறை செயல்பாடு’ என அழைத்தார். கோவா மீது முப்படைகளையும் அனுப்பினாலும் நேரு அதே பாணியில் ‘காவல்துறை நடவடிக்கை’ என்றே அழைத்தார். வலிய அரசுகள் தான் பிழைக்கும் என்கிறார் சேகர் குப்தா.

கர்நாடக நீதிபதி சைலேந்திர குமார் தன்னுடைய சொத்துக்களை வெளியிட்ட நிலையில் அப்படிப்பட்ட ஒளிவுமறைவற்ற தன்மை ஏன் மற்ற நீதிபதிகளிடம் இல்லை என்று வினவுகிறார். எல்லாரின் நேர்மையை சோதிக்கும் நீதித்துறையும் அந்த கட்டத்துக்குள் வரவேண்டும் அல்லவா? அகமதி எனும் நீதிபதி யூனியன் கார்பைட் வழக்கு ஆண்டர்சன் தப்பிக்கும் வகையில் வலுவற்றது ஆக்கினார் என்கிற குற்றச்சாட்டை பொதுவெளியில் சட்ட அமைச்சர் மொய்லி வைத்தார். மேலும் சபர்வால் எனும் உச்சநீதிமன்ற நீதிபதியை மனித உரிமைகள் தலைவராக அவரைப்பற்றி செய்தித்தாள்களில் தவறான செய்திகள் அடிபட்டன என்று சொல்லி மத்திய அரசு ஒன்றரை வருடம் தலைவர் பதவியை காலியாக வைத்திருந்ததை சுட்டிக்காட்டி நீதித்துறையும், அரசும் மோதிக்கொள்வது தவறான எண்ணங்களை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்.
ANTICIPATING INDIA
PAGES: 516
HARPER COLLINS
SHEKHAR GUPTA
PRICE: 799