எங் கதெ- இன்னுமொரு கதையல்ல!


எங் கதெ எனும் இமையம் அவர்களின் நெடுங்கதையை வாசித்து முடித்தேன். நூற்றி பத்துப் பக்கத்தில் விநாயகம் என்கிற ஆணுக்கும், கமலா என்கிற பெண்ணுக்கும் இடையேயான சமூகம் ஏற்றுக்கொள்ளாத உறவை விநாயகத்தின் பார்வையில் விவரிக்கிறார். தீராத மோகமும், காதலும் நாயகனின் சொற்களில் இருந்து வெளிப்படுத்துவதில் ஆசிரியர் காட்டியிருக்கும் பாணி அசாத்தியமானது. எத்தனையோ இயல்பான எடுத்துக்காட்டுகளின் மூலம் தங்களுக்கு இடையேயான உறவை நாயகன் சொல்கிற இடங்களில் மொழியின் உச்சத்தை ஆசிரியர் தொட்டுக் காண்பிக்கிறார்.

முழுக்க ஆண் பார்வையிலேயே நெடுங்கதை அமைந்திருந்தாலும் நாயகி வாய்விட்டுப் பேசுகிற தருணத்தில் அவள்மீது நமக்கு இரக்கமே ஏற்படுகிறது. நாயகி அவனைவிட்டு விலக நேரிடும் பொழுது, அதற்குக் காரணமான இன்னொரு உறவால் இவன் பிதற்றி, வெறுப்பு பொங்க நிற்கையில் அவள் சற்றும் அசையாமல் இருப்பதைத் துல்லியமாக வாசிக்கக் காணலாம். ஒருநாள் அதுவே பெரும் சிக்கலாக உருவெடுத்து நிற்கையில்,’அவனை லூஸாக்கணும்னு போய் நான் லூசாகிட்டேன்’ என்று அவள் சொல்வதில் கதையின் சாரம் இருக்கிறது. நாயகன் இவள் மீது பைத்தியம் பிடித்துத் திரிகிறான். அவனின் அப்பாவும், அம்மாவும் இவனால் பித்த நிலையை ஒத்த மனநிலைக்கு ஆளாகிறார்கள்.

கொஞ்சம் பிசகியிருந்தாலும் பெண் வெறுப்பாக நாவலின் கதை மாறியிருக்கும் என்கிற சூழலில் நாயகியின் செயல்பாடுகள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.அவள் பக்க நியாயத்தை சொல்லாமலே சொல்லிவிடும் வகையில் கதைப்போக்கை இமையம் கட்டமைத்து சாதித்து இருக்கிறார். விநாயகம் எவ்வாறு அவளுக்காக மற்ற அனைத்தையும் இழந்தான் என்று சொல்லிச் செல்கையில் ஆண்-பெண் வசீகரத்தின் ஆழ்ந்த அடுக்குகள் அழுத்தமாக கடத்தப்படுகின்றது.

இறுதிக்கட்டத்தில் கொடும் முடிவு ஒன்றை செய்துவிடுவது என்று விநாயகம் கிளம்புகிறான். என்னாகுமோ என்று மனம் பதைக்கையில் இறுதி இருபக்கங்களில் அற்புதமாகக் கதையின் முடிவை ஆசிரியர் எட்டுகிறார். அந்தத் தருணத்தில் அவனின் உள்ளத்தில் தோன்றும் வார்த்தைகளை வாசித்தால் நம்மில் பலருக்கும் வன்முறையைக் கையில் எடுக்கும் எண்ணம் தணியக்கூடும். கம்பிமேல் நடப்பது போன்ற கதையை இலக்கியப்பூர்வமாக ஆக்கியிருக்கும் அவரின் இந்நாவலின் பகுதிகள், மொழி எல்லாம் என் வட்டாரத்தைச் சார்ந்தது என்பதால் இன்னமும் நெருக்கமாக வாசிக்க முடிந்தது. அவசியம் வாசியுங்கள்.

எங் கதெ
பக்கங்கள்:110
விலை:125
க்ரியா வெளியீடு

— with Imayam Annamalai.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s