ஒருவர் இருக்கையில் அன்பைக் காட்டுவதினும் இறந்து விட்டான் என்று செய்தி கேட்டு பதைத்து வந்து கண்ணீர் விடுபவர்கள் முகத்தின் முன்னால் செத்துப் போனதாக எண்ணியவர் உயிரோடு நின்றால் எப்படியிருக்கும்? சிரித்துக்கொண்டே அவர்கள் கன்னத்தோடு கன்னம் தேய்த்து அந்த உறவின் வெப்பத்தை இருவரும் பரிமாறிக்கொள்ளும் ஆனந்தம் எத்தகையது?
பிரிவின் துயரத்தில் மீளமுடியா பெருந்துன்பத்தை அப்பாவிக்குத் தந்தபின்பு மன்னிப்பே ஒரு உயிருக்கு சாத்தியமில்லையா? வெறுப்பின் சுவடுகளும், வடியும் வலிகளையும் விட்டு ஒரு சில்லென்று வீசும் காற்றோடு சிரித்துப் பைக் பயணம் போக அவர்களால் முடியவே முடியாதா? தவறுகள் குற்றங்கள் அல்ல என்று புரிந்து ஆசீர்வதிக்கும் ஆன்மாக்கள் பூமியில் ஏதேனும் மூலையில் அந்த ஜீவனுக்காகக் காத்திருப்பார்களா?
நோயுற்று இருக்கும் குழந்தைகளின் கனவுலகக் கடல்கன்னிகளை நாம் காட்டுகிறோம் என்று கூட வாக்குறுதிகள் தருகிறோமா? திருடப் போனவனின் கரம் பற்றிக்கொண்டு ஒரு மிதிவண்டிப் பயணம் போக யாருக்கு பிடிக்கும்?
சொல்லாமலே போய்விட்ட காதலையும், தன்னுடைய காதலுக்குரியவர் வருவார் என்கிற நம்பிக்கையையும் தேக்கியபடி மரணத்தின் விளிம்பினில் நின்ற கணத்திலும் காத்திருப்பவர் முன்னால் காதலி தோன்றிப் பேசினால் அவருக்கு என்ன சொற்கள் கேட்கும்? என்ன செய்வார்? எப்படி உணர்வார்? அவள் பிரிகையில் அறைக்குள் மறைந்து என்ன எண்ணுவார்?
தனக்கான காதலனை தேடித்தேடி அந்தக் கொண்டாட்ட தேவன் கண்முன் நிலத்தை உடைத்துத் தோன்றுகையில் அவன் கரத்தை மறுப்பவளின் மன ஓட்டம் என்னவாக இருக்கும்? இத்தனை கேள்விகளுக்கும் சார்லி பதில் தருவான். அங்கங்கே கண்ணீரும், எல்லையற்ற பிரியமும், நெகிழ்ச்சியும் தோன்றும். அவசியம் பாருங்கள்!
— with CHARLIE 2015and Dulquer Salmaan.