நிஷாந் எனும் ஈழத்தமிழ் இளைஞன் பதினொரு ஆண்டுகளைக் கடந்தபின்பு தன்னை அகதியாக ஏற்கும் ஒரு மண்ணை இறுதியாகக் கண்டறிவதே களம். ஐந்து கோடி அகதிகளின் வலியை பல்வேறு கதைகளின் மூலம் கடத்தி விடுகிறார் ஆசிரியர். சொல்லியதை விட, சொல்லாமல் விட்டு இடைவெளிகளை நம்மை நிரப்ப வைத்து ஆசிரியர் ஒரு தவிப்பான நிலையை நோக்குத் தள்ளுகிறார்.
மாஸ்கோ நகரத்தை நோக்கி இயக்கத்தில் சேர விரும்பியதால் அனுப்பப்படும் நாயகன் விமானம் கிளம்புவதற்கு முன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளுடைய வசீகரம், கம்பீரம் ஆகியவை பற்றி வர்ணனைகள் ஒரு காதல் அத்தியாயமோ என்று எண்ண வைக்கிறது. அந்தப் பெண்ணை அதிகாரிகள் விசாரித்து விட்டு, தூக்கிக் கொண்டு போகையில் ‘நானில்லை, நானில்லை’ என அவள் கதறும் கணத்தில் எத்தனையோ நினைவுகள் நம்மை மோதி அதிரடிக்கின்றன. முத்துலிங்கம் அவளைப் பற்றி ஒரு வரி இப்படி எழுதுகிறார், ‘அவள் கண்களில் எத்தனை நம்பிக்கை தெரிந்தது?’
இயக்கத்தில் சேர்ந்த தன்னுடைய மாணவர்களைப் பற்றிப் பேசும் ஆசிரியர் ‘மரணத்துக்கு அஞ்சாமல் இருந்துவிட்டால் பரிணாம வளர்ச்சியே இருக்காது’ அறிவுரீதியாகச் சொல்லிவிட்டு, ‘நாங்கள் சாவுலகத்துக்குப் பயணப்படவில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணப்படுகிறோம். அவ்வளவுதான்’ என்கிறார் ஆழமாக.

சிங்கள பேரினவாத வன்முறையை இப்படிக் கடத்துகிறார் ஆசிரியர். ‘ரொஹான் என்கிற சிங்கள பொடியனைப் பற்றி விசாரித்ததில் அவன் பெயர் இன்னமும் பிரபலமாக இருந்தது. விசாகா பள்ளிக்கூடத்தில் படித்த பள்ளி மாணவியை இவன் பலாத்காரம் செய்த இடத்தில பிடிபட்டுவிட்டான்.’ கொள்ளையில் ஈடுபட்ட பத்மராசன் எனும் பாத்திரம், ராணுவ பாதுகாப்பு அமைச்சரைக் கொன்ற தமிழ்ப் பொடியன்கள் என்று அன்று நிலவிய சூழலின் சிக்கலை கண்முன் நிறுத்துகிறார். அந்த இளைஞர்கள் தப்பி விமானத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கழுத்தில் நச்சுக்குப்பி இரண்டு வருடங்களாக இருந்திருக்கிறது. ‘ஒருவன் சாவதற்கு இத்தனை வழிகள். அப்படியென்றால் வாழ்வதற்கு எத்தனை வழிகள் இருக்கும்?’ என வாழ்வின் நம்பிக்கை தொலைத்துவிட்ட எல்லாரிடமும் கேட்கிறது ஒரு குரல்.
கிரேக்க நாடகம், பாக் லண்டனின் நாவல், மைக்ரோக்ராப்டர் பறவை என்று ஆங்காங்கே கதைகளும், தகவல்களும் கதைப்போக்கை சுவைப்படுத்துகின்றன. க்யூபா போய்ச் சேர்ந்த மாஸ்டர் ஒருவர், நோபல் பரிசைப் பெற்ற, ‘கிழவனும், கடலும்’ நாவலை இங்கேயிருந்து தான் எழுதினார். அவர் உட்கார்ந்து எழுதிய வீடு கிட்டத்தில் தான் இருக்கிறது. அவர் வாழ்ந்த வீட்டை பார்க்கவேவில்லை.’ என ஏக்கம் ததும்ப எழுதுகிறார்.

ஒரு பதினேழு வயது தமிழ் இளைஞன் ஒருவன், அடுத்துக் கனடா போவது எப்படி எனத்தவித்துக் கொண்டிருக்கும் மாஸ்டரிடம் தன்னுடைய போர்டிங் அட்டையைத் தந்து ‘அண்ணை நீங்கள் தயங்காமல் ஏறிப்போங்கள்.’ என்கிறான். அதற்குப் பின் அவன் எப்படி வருவான் எனச்சொல்லும் வழி சுவையானது.
சந்திரா மாமி கணவனை இழந்து பறவைகளின் குரலைக் கேட்டு அகதி வாழ்க்கை சீக்கிரம் ஒரு புள்ளியை எட்டும் என நம்புகிறவர். விலங்குப் பண்ணையில் எலி நல்லதா, கெட்டதா எனப் புரியாமல் இரு பக்கமும் வாக்களிக்கும் நாய், பூனை போலத் தன்னுடைய வாழ்க்கையில் தவிப்பவர். சிக்கட்டி பாடுகிறது எனும் அவர் எல்லை தாண்டி தப்பித்துப் போகையில் விபத்தில் சிக்கி மரணத்தை எதிர்கொள்ளும் சூழலில், ‘லூன் நீர்ப்பறவை வலசை முடிந்து திரும்பிவிட்டது. இதுதான் நாள்’ என்கையில் எல்லாரும் பறவைகள் தானோ என்று சோகம் கம்முகிறது.
லாரா என்கிற ரஷ்ய பெண்ணிடம் பூண்ட காதல் வெகுசீக்கிரமே கைநழுவி போய்த் தற்கொலை எண்ணத்தில் நிற்கிறான் நிஷாந். அப்பொழுது கொலை செய்துவிட்டு துப்பாக்கியோடு அமர்ந்திருக்கும் ஒரு முதியவன் இப்படிக் கேட்கிறான், ‘கியெவ் நகரத்தில் அழகான ஒரு தேவாலயம் உள்ளது., அங்கே தொங்கும் சரவிளக்குகள் நான்கு டன் எடை கொண்டவை. அதன் அழகை ரசித்தாயா?’ எனக்கேட்கிறார். ‘நான் அகதி ஐயா! நாடில்லாதவன்’ என்று நிஷாந் சொல்கையில் ‘நாடில்லாதவன் காதலிக்கலாம் ரசிக்கக்கூடாதா? ரசிப்பதற்கு நாடு தேவை இல்லை. வியப்படைய அறிவு தேவையில்லை..’ என்று சாகத்துடிக்கும் எல்லாருக்கும் சேர்த்து வைத்துப் பேசுகிறார்.

நாவலின் உச்சமான பகுதியும், உணர்வுப்பூர்வமான தருணமும் அகல்யா எனும் நாயகி வரும் கணங்கள் தான். ஓரிரு அத்தியாயங்கள் மட்டுமே வரும் அவளின் ஊடாகப் பெண்ணின் ஆழமான மனத்தைக் கடத்துகிறார் முத்துலிங்கம். தன்னுடைய கணவனை விட்டு வானம்பாடி பிடிக்கும் மனிதனிடம் சென்று திரும்பும் அகவ்யா எனும் பெண் கணவனை விட்டு நீங்க முடிவு செய்கிறாள். அவளின் கதை செகாவின் எழுத்தில் வருவதை ரஷ்யப்பெண்மணி ஒருவர் சொல்கிறார்.
மிருகசிருஷம் நட்சத்திரக் கூட்டம் சாட்சியாகக் காதலை உறுதிப்படுத்தும் அகல்யா, ரோமன் எழுத்துக்கள் பதித்த கடிகாரத்தை நாயகனுடன் இணைத்து வாங்கிக் காலத்தைக் காதலோடு கடக்கிறாள்.
\ வில்லைப் பற்றுவது போல என வரும் ‘வில்லக விரலின் பொருந்தி’ என்பதைப் போலத் தன்னைப் பற்றச்சொல்கிறாள்.
அவர்களுக்கிடையே நடக்கும் கலப்பை முத்துலிங்கம் வித்தியாசமான மொழிநடையில் இயந்திரத்தனமாகத் தருவதாகத் தோன்றியது. அந்த அகல்யா அகவ்யா போல ஆகும் கணத்தில் எண்ணற்ற கதைகள் இப்படித்தானே என்று மருகத்தான் முடிகிறது. அவள் அனுப்பிவைக்கும் முன்னூறு டாலரில் ‘நான் நினைவில் வெச்சா மறக்கமாட்டேன்’ என்கிற அவளின் வரி நகைமுரணாக எதிரொலிக்கிறது.
வண்ணநிலவனின் கடல்புரத்தில் கொலை செய்தவர்கள் மீது கூட வெறுப்பு வராத வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைப்போலப் புஷ்பநாதன் கொலை செய்த பொழுது அவரை வெறுக்க முடியவில்லை. அனுதாபமே ஏற்படும் வகையில் காட்சி அமைகிறது. ரஷ்ய பெண்ணுடன் சண்டையிட்டு, பயந்து ஓடிவரும் அவரை நிஷாந் காத்த பின்னர் ‘நான் வீர சைவ வேளாளர்’ என அவர் இரைவதில் தெறிக்கும் வீரம் எல்லா ஜாதிப்பெருமையையும் எள்ளி நகையாடி மிளிர்கிறது. அதே புஷ்பநாதன் ஏழாண்டு சிறைத்தண்டனை பெற்று சிறையை நோக்கிப் போகையில் நிஷாந்திடம் கிட் காட் வாங்கித் தன்னுடைய மகளுக்கு அனுப்பச்சொல்கிறார். மூன்று வயதில் பார்த்த மகளை இருபது வருடங்கள் பார்க்காமல் வலியைத் தேக்கிக்கொண்டு அவளுக்குச் சாக்லேட் வாங்கித்தரும் துடிக்கும் அந்தத் தவிப்பு பல லட்சம் அப்பாக்களுக்கும் உரியதுதானே?
மாஜிஸ்திரேட் ஒருவரின் வாயிலாக டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்டு, சுரண்டிய கதை கண்முன்னால் விரிகிறது. அவரின் மூதாதையர் மயில்வாகனம் என்கிற நல்ல புரவலரை மக்களின் பசியைப் போக்கிய பொழுது சிறையில் அடைத்ததற்குப் பழிவாங்கும் வண்ணமாகத் தற்போது இரு நாடுகளில் அகதியாகப் பணித்து டச்சு அரசிடம் கில்டர் காசுகளை வசூலிக்கும் மாஜிஸ்திரேட் நிலை என்னானது என்பது நம்முடைய அனுமானத்துக்கே விடப்படுகிறது.
நிஷாந் உட்பட அகதிகள் ஒரு உணவகத்தில் உட்கார்ந்து இருக்கிற கொஞ்ச காசில் ஏதோ அருந்துகிறார்கள். கடையைத் துடைக்கும் மூதாட்டி அவர்களைச் சந்தேகத்தோடு பார்க்கிறாள். காட்டிக்கொடுத்து விடுவாரோ என்று வேகமாக விரையும் அவர்களைத் பின்தொடர்ந்து வரும் அவரின் பையில் பழங்களும், நீரும் இவர்களுக்காக இருக்கிறது. அன்னைமாரின் அடிவயிற்றில் பிள்ளைகளின் பசியைப் போக்க எரியும் தீ கண்டங்களைக் கடந்தும் ஒரே மாதிரிதான் என்பது பெல்ஜியத்தில் நிகழும் இக்காட்சியால் புலப்படுகிறது.

கனகலிங்கம் என்கிற பாத்திரப்படைப்பு சுவாரசியமானது. தங்கைக்குக் கல்வீடு கட்டித்தரவேண்டும் என்று அவர் கனடாவில் நாதஸ்வரம் ஊதப்போவதாகச் சொல்கிறார். வோட்கா அருந்தி அவர் மிகக்கடுமையான ஆம்ஸ்டர்டாமை விமானத்தில் கடக்கும் கணம் பதைபதைப்பைத் தருவது. சகுந்தலா எனும் பெண்மணி சோக உருவாகப் பிள்ளைகளைக் காணக்காத்து கிடக்கிறார். அவரைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்கும் நிஷாந்துடன் போகும் அவர் ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்ளும் பொழுது அவனைக்காட்டிக் கொடுக்காமல் சிறைபுகும் காட்சி பெண்களின் உலகம் எவ்வளவு உணர்ச்சிகளால் ஆனது என்பதை மேலும் துலக்கமாக உணரவைக்கிறது.
சபா என்கிற சபாநாயகம் ஒரு மதிப்பெண்ணில் முதலிடத்தைத் தவறவிடவே அவரைக் கனடாவுக்கு மருத்துவராக அனுப்பி வைக்கும் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாமல் போதை மருந்து கடத்த உதவி இலங்கையில் முதல் பக்கச்செய்தியாக மாறிப்போகிறார் சபா. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என நம்பிய தந்தைக்காக இங்கே வந்து இரண்டு மில்லியன் தட்டுக்களைக் கழுவி தன்னுடைய கடன்களை அடைத்ததைச் சலனமில்லாமல் சபா சொல்கிறார்.
‘அதைப் பார்த்த என் அப்பாவின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? ஒரு மார்க் தவறியதால் கனடா புறப்பட்ட மகனா இவன் என எப்படியெல்லாம் தவித்திருப்பார். செய்தியை நம்பமுடியாமல் பத்திரிக்கையைக் கையில் பிடித்தபடி, குழந்தையில் என்னைக் கூப்பிடும் ‘சபுக்குட்டி, சபுக்குட்டி என்கிற பெயரை உச்சரித்துக்கொண்டு ரோட்டு ரோட்டாக அலைந்தார் என்று பின்னர்க் கேள்விப்பட்டேன். அவரைச் சமாதானம் செய்யவோ, அவரிடம் மன்னிப்பு கேட்கவோ எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இரண்டு மாதத்தில் அவர் இறந்துபோனார்.’ எனச் சபா அரற்றுகிற கணம் மதிப்பெண்ணில், உலகியல் வெற்றி அளவுகோல்களில் பிள்ளைகளை அளக்கும் பெற்றோர்களின் மனக்கனவுகளின் மீது தீவிரமான கேள்விகளை முன்வைக்கிறது.
கடவுள் தொடங்கிய இடம் நாவல் பல்வேறு கதைகளை வீசிக்கொண்டு நகரும் ஒரு பெரும்பயணம். மூன்று கண்டங்களின் ஊடாகப் பயணிக்கும் இந்தக்கதையில் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்கள், மனிதர்கள் மட்டுமே புலப்படுகிறார்கள். ஐந்து கோடி அகதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலின் மூலம் அ.முத்துலிங்கம் ஒரு மகத்தான மனிதம் ததும்பும், வெறுப்பைத் தாண்டிய நம்பிக்கையை விதைக்கும் உலகத்தைக் கண்முன் சமைக்கிறார்.
பக்கங்கள்: 270
விகடன் பிரசுரம்
விலை: 155
— with Appadurai Muttulingam.