டெண்டுல்கர் vs கோலி! யார் கிரிக்கெட் கில்லி?


டெண்டுல்கர் VS கோலி! சச்சின் ரசிகர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளப் பயப்படுகிறார்களா?
ஆஸ்திரேலியாவை கோலி அடித்துத் துவம்சம் செய்த, 82 (51) ரன்களை அள்ளிய ஆட்டம் மீண்டும் டெண்டுல்கர், கோலி இருவரில் யார் மேலானவர்? என்கிற விவாதத்தை உயிர்ப்பித்து உள்ளது. சார்ஜாவில் 1998-ல் கங்காருக்களுக்கு மரணபயத்தைச் சச்சின் காட்டிய ஆட்டத்துக்குச் சற்றும் சளைத்தது இல்லை இந்த ருத்ர தாண்டவம். அதே சமயம், மேலும் விவாதத்தைத் தொடர்வதற்கு முன் ஒரு எச்சரிக்கை அவசியம் தேவை. சச்சின், கோலி இருவரையும் ஒப்பிடுவது பல்வேறு காரணங்களுக்காகச் சரியான ஒன்றல்ல. இருவரும் வெவ்வேறு சகாப்தங்களில் ஆடியவர்கள். அந்தக் காலங்கள் ஓரளவுக்கு ஒன்றிப்போயின என்றாலும் அவர்களின் காலங்கள் வேகமாக மாறும் கிரிக்கெட் விதிகள், ‘கிரிக்கெட் ஆட்டம்பற்றி மனநிலை’ ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் தனித்துவமானவை. T-20 யின் வருகை கிரிக்கெட்டின் எல்லைகளை, அடித்து அடையும் ஸ்கோர்களை, நொறுக்கித் தீர்க்கும் பாணியை, அடையக் கூடிய இலக்குகளை ஏற்றிக்கொண்டே போகிறது.
அதனால் என்ன? இந்த ஒப்பீடு நியாயமற்றது என்பதற்காக, அந்த ஒப்பீடு நிச்சயம் பிரபலமற்றது இல்லை. நாம் அனைவரும் ஒப்பீடுகளை விரும்புகிறோம். நமக்குப் பிடித்த கிரிக்கெட் நாயகனுக்குச் சாதகமாக இந்த ஒப்பீடு அமையும் என்றால் பெருத்த அலப்பறையைக் கொடுப்போம். நம்முடைய இதய நாயகருக்குச் சாதகமாக ஒப்பீடு இல்லையென்றால் மட்டுமே ஒப்பீட்டை நாம் தவிர்ப்போம். அப்பொழுது கூட, பல்வேறு சாதனைப்பட்டியல்களைத் தோண்டித் துழாவி நம்முடைய வாதத்துக்கு வலு சேர்க்கும் ஒரே ஒரு ஆதாரத்தையாவது தந்துவிடத் துடிப்போம். நாம் தேடிக் கண்டடையும் புள்ளிவிவரங்களில் நாம் விரும்புவதை அழுத்தமாய்ச் சொல்லும் மறைமுக நோக்கம் உள்ளது. கிரிக்கெட் எனும் மாறிக்கொண்டே இருக்கும் ஆட்டத்தில் புள்ளிவிவரங்கள் அவரவரின் தேர்வுக்கு ஏற்ப பயன்படுத்துவது இயல்பான ஒன்றுதானே?
Kohli’s consistency, especially in limited over matches, is enviable. Photo: AFP
இப்பொழுது குடைந்து கொண்டிருக்கும் கேள்விக்கு வருவோம்! டெண்டுல்கர் ரசிகர்கள் மாய உலகத்தில் மறுதலிப்பில் வாழ்கிறார்களா? தேர்வு செய்யும் சூழல்கள், புள்ளிவிவரங்கள் இரண்டுமே முக்கியம் என அறிந்திருக்கும் நமக்குக் கோலி சச்சினை விட முழுமையான, மேலான ஆட்டக்காரர் என்பது புரியவில்லையா? கோலி பெரிய ஸ்கோர்களைச் சேஸ் செய்யும் ஆட்டங்களில், ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் அழுத்தம் மிகுந்த ஆட்டங்களில் அற்புதமாக வெளிப்படுகிறார் என்பதும், அத்தகைய சூழல்களில் சச்சின் சொதப்புவது அடிக்கடி நிகழ்ந்த ஒன்று என்பதும் இவர்களுக்குத் தெரியவில்லையா? அணிக்காக ஆடுவதை விடத் தன்னுடைய சொந்த சாதனைகளுக்காக ஆடுகிறார் என்கிற கூர்மையான விமர்சனத்தைச் சச்சின் தன்னுடைய காலத்தில் எதிர்கொண்டார் அல்லவா? இது ஒற்றைத் தரப்பின் குரலாக இருந்தாலும் அப்படிப்பட்ட குறைபாடு கோலியிடம் இருப்பதாகக் கூட யாரும் எண்ணுவதில்லை.
டெண்டுல்கர் சொதப்பித் தள்ளுபவராக இருந்தார். டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்க்ஸ்களில், பெரிய தொடர்களின் இறுதிப் போட்டியில், மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்கையில், இக்கட்டான சூழலில் எல்லாம் சச்சின் ரசிகர்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் நடந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேசமயம், கிரிக்கெட்டின் மகத்தான திருவிழாவான உலகக்கோப்பையில் மற்ற அனைவரை விடவும் அதிகமான ரன்களை அடித்தவராக எட்டுவதற்கு அரிய இடத்தில் சச்சின் நிற்கிறார். சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 2008–ல் அவர் நான்காவது இன்னிங்க்ஸ் விளாசிய 103* கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது இன்னிங்க்ஸில் அடிக்கப்பட்ட அற்புதமான சதங்களில் ஒன்று. அதே வருடம் நடந்த காமன்வெல்த் பேங்க் தொடரின் போட்டிகளில் அடுத்தடுத்துச் சிட்னியில், பிரிஸ்பேனில் அவர் விளாசிய 117*, 91 ரன்கள் இந்தியாவை வெற்றி பெற வைத்தன. சச்சினின் மகத்தான சாதனைகள் கொண்ட நெடிய பட்டியல்கள் குறித்தும் அவர் தலையில் சுமந்த ஆட்டம் அவர் விக்கெட் விழுந்த பின்னர் என்ன ஆனது என்பதைக் குறித்தும் பேசிக்கொண்டே இருக்கலாம். டெண்டுல்கர் ஓபனிங் பேட்ஸ்மேன், அவர் ஆட்டத்தை முடித்து வைப்பவர் அல்ல என்பதையும் சொல்லவேண்டும். அதே சமயம், கோலியும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லை. அவர் மூன்றாவதாகக் களமிறங்கி தூள் கிளப்புகிறார். கோலி மனித பலவீனங்களை ஓரங்கட்டிவைத்தவர் போல லாவகமாக ஆடி தன்னைச் சுற்றியிருக்கும் சவால்களைச் சாய்த்து சிரிக்கிறார்.
சச்சின் பலவீனங்களால் ஆனவர் தான். ஆனால், அந்தப் பலவீனங்கள் தான் அவரை முழுமையானவர் ஆக்கியது. அவரின் பின்னங்கால் கவர் டிரைவ், லெக் ஃப்ளிக்கைப் போலவே அவரின் பலவீனங்கள், காயங்கள் ‘டெண்டுல்கர்’ என்கிற புலப்படாத புதிரை
முழுமையாக்கின. ஒரு மகத்தான வீரர் அவரின் வெற்றிகளை விடத் தோல்விகளாலேயே நினைவுகூரப்படுகிறார் என்பது சச்சினின் புகழ்பாடுபவர்களின் வாதமாக இருந்து வந்திருக்கிறது. பயங்கரமான வக்கார் யூனுஸின் பந்தை ரத்தம் கொட்டும் மூக்கோடு எல்லைக் கோட்டுக்கு விரட்டியது, 2003 உலகக்கோப்பையில் டர்பனின் கிங்க்ஸ்மீட் மைதானத்தில் ஐந்தடி ஐந்து அங்குலம் உயரம் கொண்ட சச்சின் நின்று கொண்டிருந்தார். அவரைவிட ஒரு அடி கூடுதல் உயரம் கொண்ட ஆண்ட்ரூ காடிக்கின் பவுன்சரை சிக்சருக்கு விரட்டினார் சச்சின். இப்படி எத்தனை மறக்க முடியாத நினைவுகள்.
டெண்டுல்கர் எனப்படும் பெருங்கதை நீடித்துக்கொண்டே இருந்தது. கிரிக்கெட்டின் கடவுள் என்கிற பட்டம் சச்சினுக்குப் புராண நாயகர்களைப் போல வழங்கப்பட்டது ஒன்றும் எதேச்சையான ஒன்றில்லை. மரியாதை புருஷோத்த ராமன் தன்னுடைய குறைபாடுகளோடு கொண்டாடப்படுவதைப் போலவே சச்சினும் குறைபாடுகளோடு திகழ்ந்தார். சச்சின் ஆடிய காலம் அவரின் ஆட்டத்தைப் புதிரான ஒன்றாகக் காட்டியது. பொருளாதாரத் தாராளமயமாக்கல், வருமான வளர்ச்சி, டிவி பெட்டிகளின் பெருக்கம் என்று பல அதற்குத் துணைபுரிந்தன. டிவி செட்களின் பெருக்கம் இரண்டு காவியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தன. அவை பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம், சச்சின் எனும் காவிய நாயகனின் மகத்தான ஆட்டம் ஆகிய இரண்டுமே ஆகும். மகாபாரதம் இந்தியாவின் புராண கலாசாரம், விழுமியங்களில் இருந்து பெறப்பட்டது என்றால், சச்சினின் எழுச்சி வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலகத்துக்கு ஏற்றபடி தன்னைத் துரிதமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் இந்தியாவின் தாகத்தைக் கண்முன்னால் நிறுத்துகிற ஒன்றாக இருந்தது. அந்தத் தொலைக்காட்சி தொடரைவிடச் சச்சின் நீடித்து நின்றார்.
ஒருமுறை என்னுடைய முகநூல் டைம்லைனில் இப்படி எழுதினேன்: ‘ டான் பிராட்மன் கூடுதலான சராசரியை கொண்டிருக்கிறார், லாரா நெடிய இன்னிங்க்ஸ் ஆடி அசத்துகிறார், ராகுல் திராவிட் கூடுதல் நம்பகத்தன்மையைத் தருகிறார், விவ் ரிச்சர்ட்ஸ் இன்னமும் வேகமாக அடித்து ஆடினார், கேரி சோபர்ஸ் இன்னமும் முழுமையான கிரிக்கெட் வீரராக இருந்தார். எனினும், இந்தியா என்கிற ஏழை தேசத்தின் மக்களை இவர்கள் யாரும் சச்சினை விட அதிகமாகப் பெருமிதம் மிகுந்தவர்களாக, பணக்காரர்களைப் போல மகிழ்ச்சியுடைவர்களாக உணரவைக்கவில்லை!’ இதைவிடச் சுருக்கமாக ஹர்ஷா போக்லே ‘சச்சின் நன்றாக ஆடினால், இந்தியா நிம்மதியாகத் தூங்கப் போகிறது.’ என்றார். மும்பையில் 26/11 தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பிறகு அவர் அடித்த சத்தம் காயப்பட்ட தேசத்துக்குச் சச்சின் எனும் கடவுள் தடவிய மருந்தை விட வேறென்ன மகத்தான ஆறுதல் இருக்க முடியும்?
சச்சினின் பெருங்கதை என்றுவிட்டு சச்சினின் பலவீனங்களை மட்டுமே நான் குறிப்பாகப் பேசுவதாகச் சிலர் நினைக்கலாம். சச்சினின் குறைபாடுகள், பலவீனங்கள் அவரின் காவிய கதையை ஆச்சரியப்படும் வகையில் முழுமையாக்கின என்பதையே சுட்டிக்காட்டுகிறேன். இதனால் அவரின் வெற்றிக்கு ஆர்ப்பரித்த தேசம், அவரின் தோல்விகளுக்குக் கண்ணீர் வடித்தது. ஒரு மகத்தான எழுச்சியால் இருக்கையில் முழுமையாகப் பிணைக்கப்பட்டு ஆட்டத்தை ரசித்த அதே ரசிகர்கள், தீரா வேட்கையோடு அவரின் வெற்றிக்காகப் பிரார்த்தனைகள் செய்வதும் நிகழ்ந்தது. அவர் கடல் போன்ற நம்பிக்கையாளர்களை உருவாக்கினார். அவரின் முழுமையின்மை இதற்கு ஒரு முக்கியக் காரணம். கச்சிதம் என்பது ஒற்றைப்படையாக மாறி, ரசிகனை சிரிக்கவும், அழவும் வைக்காமல் சலிப்புக்கு ஆளாக்குகிறது. இந்தக் குறைபாடுகளோடு கூடிய சச்சினின் பயணம் அவரையும், ரசிகரையும் இணைக்கிற மாயத்தை நிகழ்த்தியது.
இந்தக் கதை, நம்பிக்கைகள் எல்லாம் முழுக்கவும் கற்பனையான ஒன்றோ, மூட நம்பிக்கைகளால் மட்டுமே ஆன ஒன்றோ அல்ல. இவை எந்தப் பயனும் அற்ற வீணான கதைகளும் இல்லை. இவை சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகின்றன. சஞ்சீவ் சன்யால் சொல்வதைப் போல, ‘பழங்கதைகள் பண்பாட்டின் நினைவுகள்- எண்ணங்களின் நினைவுகள், தத்துவங்களின் விவாதங்கள், மக்களின் மிக ஆழமான அச்சங்கள், அளவில்லாத ஆனந்தங்கள் ஆகியவற்றின் தொகுப்பு அது. பழங்கதைகளை முழுமையாகத் துறக்கிற சமூகம் உதிர்ந்து, அழிந்து போகிறது.’ கோலியும் சச்சின் என்கிற பெருங்கதையை நம்புகிற ஒருவராக இருந்தார். மற்றவர்களைப் போல அவருக்கும் சச்சினே ஆதர்சமாக இருந்தார். அவரைப்பற்றிப் பேசுகிற பொழுது தான் உணர்ச்சிப் பிழம்பாக மாறிவிடுவதாகக் கோலி வாக்குமூலம் தந்தார். சச்சினை அவரின் இறுதி உலகக்கோப்பையின் பொழுது தன்னுடைய தோள்களில் கோலி தாங்கிக் கொண்டு கம்பீரமாக நடந்தார். இதற்கு முன்னால் ஈடன் கார்டனில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைச் சதம் விளாசிய பொழுது சச்சினை நோக்கி தலை வணங்கி மரியாதை செலுத்தினார்.
இத்தனை பலவீனங்களைத் தாண்டியும் கோலியை விடச் சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலமடங்கு மேலான இடத்தில் இருக்கிறார். நல்ல கிரிக்கெட் வீரருக்கு அடையாளமாக டெஸ்டில் ஐம்பது என்கிற சராசரியை நான் எல்லைக்கோடாகக் காண்கிறேன். கோலி அதனை எட்டத் தவறியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் ஒரு மகத்தான வீரரின் நெஞ்சுரத்தை முழுமையாகச் சோதிக்கிறது என்பதைப் பலரைப் போல நானும் நம்புகிறேன். டெண்டுல்கரை விட ஒருநாள் போட்டிகள், டிவென்ட் ட்வென்டிகளில் கோலியின் ஆட்டம் சிறப்பானதாக இருக்கிறது என்றாலும், அவர்கள் ஆடிய காலமும் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இன்றைய காலத்தில் மெக்ராத், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோரோடு ஒப்பிடக்கூடிய பந்து வீச்சாளர் யாரும் என் கண்ணுக்கு புலப்படவில்லை. இந்த வெவ்வேறு காலங்களில் ஆடியவர்கள் என்கிற வேறுபாடு இருந்தாலும் சச்சினின் ஒரு நாள் சாதனைகளைத் தகர்க்க கோலி பத்து வருடத்துக்கும் மேல் தொடர்ந்து 1,100 ரன்களை அடிக்க வேண்டும். வேறுவகையில் சொல்வதென்றால் நாற்பது வயதைக் கடந்தும் அவர் ஆடுவார் என்றால் கிட்டத்தட்ட 900 ரன்களை வருடாவருடம் விளாச வேண்டும். கோலி ஆடவந்ததில் இருந்து ஒவ்வொரு வருடமும் 950 ரன்களைச் சராசரியாக விளாசி இருப்பதோடு, எப்பொழுதும் எதிராளிகளைச் சுட்டெரிக்கும் சூரியனாக ஒளிர்கிறார்.
கோலி சச்சினை விட மரபை மீறாமல் ஆடும் ஆட்டக்காரராகத் தெரிகிறார். சச்சின் கிரிக்கெட்டின் பயிற்சி பக்கங்களில் உள்ள ஷாட்களை அற்புதமாக ஆடினாலும் பெடல் ஸ்வீப், அப்பர் கட் என்று தனக்கே உரிய ஷாட்களையும் அவர் உருவாக்கினார். அவர் தோனிக்கு முன்னரே ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடினார் என்றாலும் அதைத் தோனி தனதாக மாற்றிக்கொண்டார். மரபை மீறி பல்வேறு வகையான ஷாட்களை வில்லியர்ஸ் முதலியவர்கள் ஆடுகையில் கோலி அவற்றால் ஈர்க்கப்படவில்லை. வில்லியர்சை விட, ஏன் சச்சினை விடத் தன்னுடைய விக்கெட்டை கோலி அதிகம் மதிப்பதாகத் தெரிகிறது. அதனாலேயே அவரால் பல்வேறு ஆட்டங்களை மூன்றாவதாகக் களமிறங்கி முடித்து வைக்க முடிகிறது.
கோலியின் இந்த நிலையான ஆட்டம்-குறிப்பாக ஒருநாள், T-20 போட்டிகளில் அவரின் ஆட்டம் பொறாமைப்படும்படி இருக்கிறது. சச்சினை எட்ட அவருக்கு நெடுங்காலம் ஆகும் என்றாலும் இவரைப் போல நிலையான ஆட்டத்தைச் சச்சின் வெளிப்படுத்தவில்லை. சச்சின் களமிறங்கிய காலத்தில் சுமாரான அணியே அவருக்குக் கிடைத்தது. வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதே தலையால் தண்ணீர் குடிக்கும் காரியமாக இந்திய அணிக்கு இருந்தது. டெண்டுல்கர், ராகுல் திராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண், வீரேந்திர சேவாக் ஆகியோரால் அது மாறியது. டெண்டுல்கர் கொடுத்த நல்ல துவக்கத்தை யுவராஜ் சிங், தோனி ஆகியோர் ஜடேஜா, அசாரூதினை விடச் சிறப்பாக, மேலான வகையில் வெற்றியாக மாற்றினார்கள். கோலி ஆடவந்த மூன்றே வருடத்தில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்கிற அளவுக்கு அது வளர்ந்திருந்தது. சச்சினால் துவக்கப்பட்ட உருமாற்றத்தின் உச்சக்கட்டத்தில் அணிக்குள் கோலி வந்து சேர்ந்தார்.
இங்கே தான் டெண்டுல்கர், கோலி ஆகியோரை ஒப்பிடுவதன் அடிப்படை தவறு நிகழ்கிறது. சச்சின் கொண்டுவந்த மாற்றங்களின் விளைச்சலே கோலி. சச்சின் எனும் பெருங்கதையின் தொடர்ச்சியே கோலி. அந்தக் கதையைக் காப்பதும்,அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் கோலியின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதை அவர் அற்புதமாகச் செய்கிறார்.
திரு. குணால் சிங் ‘Livemint’ இதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
ஆங்கில மூலத்தின் சுட்டி: Kunal Singh
தமிழில் : பூ.கொ.சரவணன்

மாவோயிஸ்ட்கள் ஆதிவாசிகளின் பாதுகாவலர்கள் இல்லை!


மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பின் முப்பத்தி ஆறாவது ஜெயபிரகாஷ் நாராயணன் நினைவு சொற்பொழிவில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா ‘சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அதன் எழுத்து வடிவம் இது:
 மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பு நடத்தும் இந்த ஜெயபிரகாஷ் நாராயணன் பேசுவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. இந்த அமைப்பின் நெடிய பயணத்தில் நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக இணைந்து பயணிக்கிறேன். சுப்பாராவ் அவர்கள் ‘நாம் குற்றவாளிகள்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை எண்பத்தி நான்கின் சீக்கிய படுகொலைகளின் பின்னால் இருந்த அநீதியை உலகுக்குப் புலப்படுத்தியது. பாகல்பூரில் இஸ்லாமிய நெசவாளர்கள் எத்தகு கொடிய வன்முறைக்குச் சக இந்துக்களால் ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இந்த அமைப்பாலேயே எனக்குக் கிடைத்தது. சுற்றுச்சூழல் குறித்துக் கவனம் பெரிதாக ஏற்படுவதற்கு முன்பே சுரங்கப் பணிகளால் காடுகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, காடுகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நேரிடும் சிக்கல்கள் என்பன குறித்து விரிவான அறிக்கைகள் வெகுகாலத்துக்கு முன்னரே அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
Displaying IMG_0455.JPGDisplaying IMG_0455.JPG
ஜெயபிரகாஷ் நாராயணனை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மகத்தான போராளியாகப் பலருக்குத் தெரியும். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் அவர் நடத்திய தீரமிகுந்த இரண்டாவது விடுதலைக்கான போரும் மறக்க முடியாத ஒன்று. அவர் அதே சமயம் காஷ்மீரிகள், நாகாக்கள் ஆகியோரோடு இந்திய அரசு பேசுவதற்கான, உரையாடல் நிகழ்த்தி சமரசம் செய்து கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தந்தவர். அவர் காஷ்மீர் சிக்கலில் சொன்னதை நேரு, சாஸ்திரி, இந்திரா என்று யாரேனும் கேட்டிருக்கலாம். படேல் ‘மோசமான தலைவலி’ என அழைத்த காஷ்மீர் சிக்கல் பெரும் இன்னலைத் தரும் தீராத மைக்ரேன் தலைவலியாக மாறியிருக்காது. மேலும், ஜெ.பி கிராம சுயாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று விடுதலைப் பெற்ற காலத்திலேயே நேருவுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினார். வெறுமனே, பிரிட்டனின் நாடாளுமன்ற, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான ஜனநாயகமே முழு ஜனநாயகம் என்பது குறைபாடுள்ள பார்வை எனச் சரியாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆதிவாசிகளின் நிலைமை சுதந்திர இந்தியாவில் மிகுந்த கவலைக்கிடமான ஒன்றாக இருக்கின்றது. இந்த வரலாறு விடுதலைக்கு ஒரு வருடத்துக்கு முன்னரே துவங்கி விடுகிறது. 13/12/46 அன்று நேரு வழிநடத்திய இடைக்கால அரசு அரசமைப்பு சட்டக்குழுவின் முன்னால் ‘குறிக்கோள் தீர்மானங்கள்’ விவாதத்துக்கு வந்தன. இன்றைக்கு அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நடைமுறைகள் எனக் கொண்டாப்படும் யாவும் அதில் அடங்கியிருந்தன. நேரு அவற்றை அறிமுகம் செய்து பேசுகிற பொழுது,
‘சமூக, பொருளாதார, அரசியல் நீதி உறுதி செய்யப்படும். வாழ்க்கை நிலை, வாய்ப்புகள் ஆகியவற்றில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைவரும் சட்டத்தின் முன்னர்ச் சமமாக நடத்தப்படுவர். கருத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, ஒரு இடத்தில் கூடும் உரிமை, விரும்பும் செயலை செய்யும் உரிமை ஆகியவை சட்டம், பொது நீதிக்கு உட்பட்டு வழங்கப்படும். அதே சமயம், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் பாதுகாப்பு விடுதலை இந்தியாவில் உறுதி செய்யப்படும்.’ என்று வாக்களித்தார்.
இந்தத் தீர்மானங்கள் குறித்துப் பழமைவாதியான புருஷோத்தமதாஸ் தாண்டன், இந்துத்வவாதியான ஜனசங்கத்தின் ஷ்யாமபிரசாத் முகர்ஜி, பட்டியல் ஜாதியினரின் தலைவரான அம்பேத்கர், எம்.ஆர்.ஜெயகர், பொதுவுடைமைவாதியான மினு மசானி, பெண்கள் இயக்கத் தலைவரான ஹன்சா மேத்தா, இடதுசாரியான சோம்நாத் லஹிரி என்று பலரும் இந்தத் தீர்மானங்களை விவாதித்தார்கள். ஒருவர் இந்தத் தீர்மானம் குறித்துப் பேச எழுந்தார்.
அவர் இந்திய ஹாக்கி அணியில் கலக்கியவரும், கிறிஸ்துவராக இருந்து பின்னர் அம்மதத்தை விட்டு வெளியேறியவரும் ஆன பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங். அவர் பின்வருமாறு பேசினார்:
ஒரு காட்டுவாசியாக, ஆதிவாசியாக நான் இந்தத் தீர்மானத்தின் நுணுக்கங்களை நான் உணர்ந்திருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். என் பகுத்தறிவு, என்னுடைய மக்களுடைய பகுத்தறிவு நாம் விடுதலைச் சாலையில் இணைந்து பயணித்துப் போரிடவேண்டும் என்று சொல்கிறது. நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப்பெற்றது என்றால் அது நாங்கள் தான். அவமானம் தரும் வகையில் நடத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் நாங்கள் 6,000 வருடங்கள் அடக்குமுறையில் வாழ்ந்து வருகிறோம். சிந்து சமவெளி நாகரிகத்தின் குழந்தையான நான் எங்களுக்குப் பின்னர்ச் சிந்து சமவெளிக்கு வந்து எங்களைக் காட்டுப் பகுதியை நோக்கி நீங்கள் துரத்தினீர்கள் எனச் சொல்லமுடியும்.
என் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல், தங்களின் இருப்பிடத்தை விட்டு ஆதிவாசிகள் அல்லாத இந்திய குடிகளால் வெளியேற்றப்படுவது ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு நெடுக போராட்டங்கள், குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. என்றாலும், பண்டித நேருவின் வார்த்தையை நான் நம்புகிறேன். நீங்கள் எல்லாரும் விடுதலை இந்தியாவின் சமமான வாய்ப்புகளை வழங்கி யாரையும் புறக்கணிக்காமல் செயல்படும் புதிய அத்தியாயத்தைப் படைக்கப்போவதாகச் சொல்லுவதை முழுமையாக நம்புகிறேன்.
இந்த உரை நிகழ்த்தப்பட்டு எழுபது வருடங்கள் ஆகிவிட்டது. ஆதிவாசிகளின் நிலைமை இந்தியாவில் எப்படியிருக்கிறது?அவர்கள் இன்னமும் சுரண்டப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள், தங்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். பத்து கோடி பழங்குடியின மக்களில் 85% பேர் மத்திய இந்தியாவிலும் 15% பேர் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள். இவற்றில் 1.2 ஆதிவாசி என்கிற சொல் நிலத்தின் ஆதிக்குடிகள் எனப் பொருள்படும். குஜராத்தில் துவங்கி ஒரிசா வரை மத்திய இந்தியாவில் பழங்குடியினர் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களை ஆதிவாசிகள் என்று இந்த உரையாடலில் அழுத்தமாக அழைப்பேன்/ சமவெளியில் வசிக்கும் மக்களுடன் அவர்களுக்கு இணக்கமான உறவு இருந்தது. தேன், மருத்துவப் பச்சிலைகள் தந்துவிட்டு உப்பு முதலிய பிற பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களின் உறவு இருந்தது.
 ஆங்கிலேயர் காலத்தில் ஆதிவாசிகள் மீதான சுரண்டல் வேகமெடுத்தது.
தொடர்வண்டிகள் ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் ஆதிவாசிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் குலைத்தார்கள். அவர்கள் உருவாக்கிய சாலைகள், தொடர்வண்டிகள் அதுவரை நுழைய முடியாமல் இருந்த ஆதிவாசிகள் பகுதிக்குள் வியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் நுழைந்தார்கள். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அம்மக்கள் சுரண்டப்பட்டார்கள். இதற்கு எதிரான தீவிரமான எழுச்சிகள், ஆயுதப்போராட்டங்கள் எழுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சந்தால் புரட்சியில் (1830-1850) துவங்கி பிரஸா முண்டா (1890) தலைமையிலான கலகம், ஆந்திராவில் ஆலடி சீதாராமா ராஜூ (1920) இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டங்கள் வெவ்வேறு வகையில் எழுந்தன.
விடுதலை கிடைத்த பொழுது ஆதிவாசிகளுக்கு ஒரு ‘புதிய அத்தியாயம்’ காத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. மக்களியல் ஆய்வாளர் அரூப் மகாராத்தா பல்வேறு தரவுகளை ஒப்பிட்டு அதிர்ச்சி தருகிறார். ஆதிவாசிகள், தலித்துகள் இருவரும் ஒப்பிடப்படுகிறார்கள். கல்வியறிவில் முறையே 23, 30 % என்கிற அளவிலும், பள்ளியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 62, 48 சதவிகிதத்திலும் 50, 40 என்கிற சதவிகிதத்தில் அவர்களின் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலையும் உள்ளது. இவை ஆதிவாசிகள் மிக மோசமான நிலையில் இருப்பதையும் அவர்கள் நிலை அவர்களைப் போலவே கடும் அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு ஆளாகும் தலித்துகளை விட மோசமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
ஆதிவாசிகள் மிக மோசமான சூழலில் வாழ்கிறார்கள். அடிப்படை சமூக வசதிகளான நல்ல குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி, சுத்தமான கழிப்பறைகள் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சமூகவியல் கூறுகள் நமக்குச் சொல்வது ஒன்றுதான். புதிய அத்தியாயம் எதுவும் இம்மக்களுக்கு எழுதப்படவில்லை. தலித்துகளுக்கு அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான அளவுக்கே கிடைக்கிறது. அதைவிட அவலமான சூழலில் ஆதிவாசிகளின் நிலைமை உள்ளது. அதே சமயத்தில் அரசின் கொள்கைகள் ஆதிவாசிகளை அடிக்கடி புலம்பெயர வைக்கிறது.
 ஆதிவாசிகள் வாழும் காடுகள் செம்மையானவை, அங்கே நெடிய நதிகள் விரிந்து ஓடுகின்றன, எண்ணற்ற தனிமங்கள் இந்தப் பகுதிகளில்
மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. இவை மூன்றையும் சேர்த்து ‘ஆதிவாசிகளின் முப்பெரும் சாபம்’ என்று சொல்வேன். விடுதலைக்குப் பிறகு தொழில்மயமாக்கல், வளர்ச்சி ஆகியவை வேகமெடுத்தது. அப்பொழுது தொழிற்சாலைகள், அரசு சுரங்குகள், அரசு நீர்மின் திட்டங்கள் ஆகியவை இப்பகுதிகளைக் கூறுபோட்டு எழுந்தன. சமவெளி மக்களின் நல்வாழ்வுக்கு இம்மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். எத்தனை லட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது குறித்துப் பல்வேறு கணிப்புகள் உள்ளன. அதே சமயம், 1.2 கோடி வரை மிதமான அளவீடுகளும் அதிகபட்சமாக 1.5 கோடி வரையும் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. எப்படியிருந்தாலும், மிக அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசிகள் தங்களின் இருப்பிடங்களை விட்டு அரசின் கொள்கைகளால் துரத்தப்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.
631b5950-0d94-411b-ab01-b363a816044a
இந்திய மக்கள் தொகையில் எட்டு சதவிகித எண்ணிக்கையில் உள்ள ஆதிவாசிகள் நாற்பது சதவிகித அளவுக்கு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதாகச் சமூகவியல் அறிஞர் வால்டர் பெர்னாண்டஸ் கண்டறிந்து உள்ளார். அதாவது இடப்பெயர்வுக்கு உள்ளாவதற்கு ஆதிவாசிகள் அல்லாத மக்களைவிட ஐந்து மடங்கு அதிகம். இப்படிச் செய்யப்படும் இடப்பெயர்வில் ஒழுங்கான இழப்பீடோ, வசதிகளோ தரப்படுவதில்லை. இம்மக்கள் தங்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, கிராமத்தை, நிலத்தை, மொழியை, நாட்டுப்புற பாடல்களை, இசையை முப்பெரும் சாபத்தால் இழந்து வெளியேற நேரிடுகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடர்வண்டிப்பாதைகள், சாலைகள் அமைப்பதற்கு ஆதிவாசிகளின் வனங்களுக்குள் அரசு நுழைய முயற்சித்த பொழுது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இத்தனைக்கும் விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசைப் போலப் பெரிய அணைகளையோ, கனிம வள சுரண்டலையோ ஆங்கிலேய அரசு ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் மேற்கொள்ளவில்லை. காடுகளின் வளங்களையே அது அள்ளிக்கொண்டு போனது.
விடுதலைக்குப் பிந்தைய முதல் பதினைந்து வருடங்களில் வளர்ச்சி திட்டங்கள்
பழங்குடியின மக்களின் வாழ்விடங்களின் வழியாக மேற்கொள்ளப்பட்ட பொழுது அம்மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. புதிதாக எழுந்திருக்கும் அரசு தங்களின் வாழ்க்கையை முன்னேற்றி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துப் போகும் என்று நம்பினார்கள். விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்குச் சென்று நாட்டுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் நாட்டை ஆள்வது அவர்களுக்கு நம்பிக்கை தந்தது. பிறருக்கு மக்களுக்குத் தங்கள் நிலங்களைக் கொடுத்தால் தங்களின் வாழ்க்கையும் முன்னேறும் என்று உளமார அவர்கள் நம்பினார்கள். கல்வி, முன்னேற்றம், அடிப்படை வசதிகள் தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். வேலைவாய்ப்புகள், கல்லூரிகளில் இடம் ஆகியவற்றைக் கூட அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஓரளவுக்குத் தன்மானம் மிகுந்த வாழ்வை அவர்கள் எதிர்நோக்கினார்கள். அந்த நம்பிக்கை பொய்க்க ஆரம்பித்த பொழுது தான் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
1966-ல் பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தலைமையில் விடுதலை இந்தியாவின் ஆதிவாசி கிளர்ச்சி முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது. அரசின் வனக்கொள்கைகளுக்கு எதிராக ஆதிவாசிகளை அந்த முன்னாள் பழங்குடியின மகாராஜா அணிதிரட்டினார். போலீஸ் இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்கியது/ பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தன்னுடைய ஊரான ஜந்தர்பூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். எழுபதுகளில் நிலவுரிமை சார்ந்து பூமி சேனா, முன்னாள் பாதிரியார்கள் ஆதிவாசிகளின் நில, வன உரிமைகளைக் காக்க நடத்திய கஷ்டகாரி சங்கத்தனா இயக்கங்கள் இயங்கின. ஜார்கண்ட் இயக்கம் பழங்குடியின தலைவரான ஜெய்பால் சிங்கின் கருத்தாக்கமான தனிப் பழங்குடியின மாநிலம் என்பதை அமைக்கும் நோக்கத்தோடு எழுந்தது. மத்திய இந்தியாவின் பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருக்கும் இருபது மாவட்டங்களை ஒன்றாக இணைத்து ஒரு மாநிலத்தை அமைக்க அவர் விரும்பினார். 56-ல் மாநில மறுசீரமைப்புக் குழுவிடம் அந்த வைத்த பொழுது அது ஏற்கப்படவில்லை. ஜெய்பால் சிங்கின் மாநிலமான பீகாரில் இருந்த பழங்குடியின மாவட்டங்கள் கனிமங்கள், வன வளங்களைக் கொடுத்தார்கள். ஆதிவாசிகள் அல்லாத பிராமணர்கள் அவர்களை ஆண்டார்கள். அவர்களின் சுரண்டலை எதிர்த்து இம்மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் நிகழ்ந்தது. அது வன்முறையைப் பயன்படுத்தியது.
எண்பதுகளில் பெரும்பாலும் ஆதிவாசிகளை உள்ளடக்கிய நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் மேதா பட்கரால் துவங்கி மேற்கொள்ளப்படுகிறது. நர்மதா அணையின் மீது கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக இந்த இயக்கம் இயங்குகிறது. இந்த அணைக்கு எதிரான இயக்கம் வித்தியாசமானது. நதியின் மீது கட்டப்படும் அணையின் பயன்கள் பெரும்பாலும் குஜராத்துக்குச் செல்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மக்கள் மத்திய பிரதேச மாநிலத்தைப் பெரும்பாலும் சேர்ந்தவர்கள். அதிலும் அறுபது சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் பழங்குடியினர். இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது/.
இந்த அநீதிகள், இடப்பெயர்வுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் விடப் பெருமளவில் நிகழும் இன்னொரு கிளர்ச்சி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது. 67-ல் மேற்குவங்கத்தின் நக்சல்பாரியில் பழங்குடியினரையும் உள்ளடக்கி எழுந்த இந்த இயக்கம் வன்முறையைத் தன்னுடைய முறையாகக் கையாண்டது. அந்த அமைப்பு தன்னுடைய போராளிகளாக ஆதிவாசிகளை மாற்றிக்கொண்டது. முதலில் மாவோயிச இயக்கங்கள் மேற்கு வங்கத்தில் கானு சன்யால், சாரு மஜூம்தார் ஆகியோரால் துவங்கப்பட்டது. ஆந்திராவில் நாகி ரெட்டியின் தலைமையில் ஸ்ரீகாகுளம், அதிலாபாத் மாவட்டங்களில் இந்தக் கிளர்ச்சி எழுந்தது. ஆரம்பத்தில் இருந்தே மாவோயிஸ்ட இயக்கம் பழங்குடியினரின் பகுதிகளில் இயங்கியது. அது அவ்வப்பொழுது எழுச்சி பெற்று மீண்டும் அடக்கப்படும். 6o களிலிருந்து தற்போது வரை பல்வேறு மத்திய இந்திய மாவட்டங்களில் இந்த இயக்கம் பழங்குடியினரை அங்கமாகக் கொண்டு இயங்குகிறது. மகாராஷ்டிராவின் கச்சிரோலி, சத்தீஸ்கரின் பஸ்தார், ஒரிசாவின் கலஹாண்டி, கோராபுட், ஜார்க்கண்டின் பெரும்பான்மை மாவட்டங்களில் இந்த இயக்கம் இயங்கி வருகிறது.
அறுபதுகளில் இருந்து சுரண்டல், இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு உள்ளானதற்கு எதிராகக் கிளரச்சிகளில் பல்வேறு பகுதிகளில் ஆதிவாசிகள் இயங்கி வருகிறார்கள். இவை மூன்று வகையில் நடைபெறுகின்றன. ஆதிவாசிகளின் பாரம்பரிய தலைவர்கள் பிரவீர் சந்திர பன்ஜ் தியோவைப் போன்றோர் வழிநடத்துவது நடக்கிறது. சமூகச் சேவை இயக்கங்களான கச்டகாரி சங்கத்தன், நர்மதா பச்சோ அந்தோலன் முதலிய இயக்கங்கள் அமைதிவழியில் இன்னொருபுறம் செயல்படுகின்றன. ஆயுதம் ஏந்தி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் போராடுகிறார்கள்.
இம்மக்களைப் போலவே கொடுமையான அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆதிவாசிகளின் போராட்டங்கள் ஆச்சரியம் தரும் வகையில் அமைதி வழியில் நடக்கிறது. அவர்களின் நலன்களைப் பேசும் அரசியல் தலைவர்களான கன்ஷி ராம், ராம் விலாஸ் பஸ்வான் மாயாவதி முதலியோர் எழுந்தார்கள். மாயவாதி மூன்று முறை உபியின் முதல்வராக இருந்துள்ளார். அடுத்துவர இருக்கும் தேர்தலிலும் அவர் முதல்வர் ஆவார் என்கிறார்கள். பல்வேறு கூட்டணி அரசுகள், மாநில அரசுகளைத் தலைமையேற்று நடத்துவதும் தலித் தலைவர்களால் செய்யப்பட்டது.
மாயாவதி 2006-ல் நடந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்றார். அம்மக்கள் சட்டரீதியான வழிமுறைகளையே தங்களின் எழுச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆதிவாசிகளைவிட ஏன் தலித்துகள் ஏன் சட்டரீதியான வழிமுறைகளைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள்? ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்கள், சமூகச் சேவை இயக்கங்களைக் கொண்டு தங்களின் எழுச்சியை மேற்கொள்ள முயல்கிறார்கள். தலித்துகள் சமயங்களில் மாவோயிஸ்ட்களுடன் இணைந்தாலும் பெரும்பாலும் அமைதி வழியில் போராடுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நான் இரண்டு காரணங்களை முன்வைக்கிறேன். ஒன்று வரலாற்று ரீதியானது, இன்னொன்று புவியியல் சார்ந்தது.
அப்பட்டமாக, நேராகச் சொல்வது என்றால் இதற்குக் காரணம் அண்ணல் அம்பேத்கர். ஆதிவாசி அம்பேத்கர் ஒருவர் அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆதிவாசிகளுக்கு ஒரு தேசிய தலைவர் இன்னமும் கிடைக்கவில்லை. அவரின் காலத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே தலைவராகப் பார்க்கப்பட்ட அம்பேத்கர் இந்தியாவின் தலைவராக நேசிக்கப்பட்டு, போற்றப்பட்டுக் கொண்டாடப்படுகிறார், மறுகண்டுபிடிப்புக்கு அவர் உள்ளாகி இருக்கிறார். பிற தலைவர்கள் மாநிலத்தலைவர்களாகவோ, கட்சியின் முகமாகவோ மாற்றப்பட்டுவிட்ட சூழலில் அவர் இந்தியா முழுக்க இருக்கும் தலித்துகளின் நம்பிக்கை ஒளியாக உள்ளார். சுரண்டலுக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான அவரின் வெற்றிகரமான போராட்டம் அவரை முன்மாதிரியாக ஆக்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தைப் பெருமளவில் உருவாக்கிய அம்பேத்கர் கல்வி, மக்களை ஒன்று சேர்த்தல், அமைதி வழியில் கிளர்ச்சி செய்வது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய மக்களுக்காகப் போராடினார். அம்பேத்கர் எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தின் வழியில் இயங்கினார். சத்தியாகிரகத்தில் கூட அவர் ஈடுபட்டார். கல்வி, அமைப்புகளைக் கொண்டு இயங்க அவர் காட்டிய வழியில் தலித்துகள் இயங்குகிறார்கள். அப்படியொரு வழிகாட்டும் தலைவர் ஆதிவாசிகளுக்கு இல்லை.
மேலும், ஆதிவாசிகள் பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக உள்ளார்கள். அவர்களின் மீதான வன்முறைகள், சுரண்டல்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அவர்கள் அனைவரும் தங்களின் சிக்கல்கள் ஒன்றே என்று இந்திய அளவில் அணிதிரளவில்லை. அதே சமயம் ஆதிக்க ஜாதி இந்துக்களின் கொடுமைகளுக்கு ஆளாகும் தலித்துகள் இந்திய அளவில் திரண்டு போராடுவது நிகழ்கிறது.
புவியியல் ரீதியாக ஆதிவாசிகள் பீடபூமியின் பகுதிகளில் பெரும்பாலும் வசிக்கிறார்கள். ஆந்திராவில், மகாராஷ்டிராவில் 9%, தமிழகத்தில் 1% என்று இருக்கும் அவர்கள் இந்தியாவின் பழங்குடியின மாநிலம் என அறியப்படும் சத்தீஸ்கரில் கூட 30% என்கிற அளவில் தான் இருக்கிறார்கள். தலித்துகளோ இந்தியா முழுக்கப் பரவியிருக்கும் சிறுபான்மையினராக உள்ளார்கள். அவர்கள் 350 – 400 மக்களவைத் தொகுதிகள் வரை வாக்குவங்கி கொண்டவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில், கர்நாடகாவில், ஆந்திராவில் என்று பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பத்துச் சதவிகிதம் அளவுக்கு ஓட்டுக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாபில் இது இருபது சதவிகிதத்தைக் கடந்து அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆதிவாசிகளோ அதிகபட்சம் எழுபது தொகுதிகளில் மட்டுமே காணப்படுகிறார்கள். இவ்வாறு ஒப்பிடுவதால் தலித்துகள் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தலித்துகள் கடும் அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு அனுதினமும் ஆளாக்கப்படுகிறார்கள். அதே சமயம், அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தேர்தல் அரசியல், சட்ட ரீதியிலான வழிமுறைகளின் மூலம் மேற்கொள்கிறார்கள்.
நியாயமான, கவலையளிக்கும், நேர்மையான தங்களின் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் போராடுவது., கருத்தை முன்னிறுத்துவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்களுடன் இணைந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டு தங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள்.
முஸ்லீம்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும் அவர்கள் பெரும்பாலும் ஆயுதம் ஏந்துவது கிடையாது. அவர்கள் மாநில, நாடாளுமன்ற தேர்தல்களில் முக்கியமான தேர்தல் சக்தியாக உள்ளார்கள். எனினும், ஆதிவாசிகள் இவர்கள் இருதரப்பினரையும் விடக் கடுமையான ஒடுக்குமுறை, அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். அதேசமயம், அவர்கள் இந்தியாவில் மிகக்குறைந்த கவனமே பெறுகிறார்கள். அவர்கள் குறித்துப் பேச வேண்டிய அரசு, அதிகாரிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். பல்கலை பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் பெருமளவில் அவர்களை இந்தியாவின் சமமான குடிமக்களாக ஆக்க செயல்படுவதில்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள் குறித்தும் பெரிதாகக் கவனம் தரப்படுவதில்லை என்பது கவலை தருவது. தலித்துகள், முஸ்லீம்கள் மத்திய அமைச்சரவையில் பாஜக அரசைத் தவிர்த்து இடம்பெறுவது நிகழ்கிறது. முக்கியமான அமைச்சரவைகள், ஜனாதிபதி பதவி முதலிய அரசமைப்புப் பதவிகள் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. அதேசமயம் எந்த ஆதிவாசியும் இப்படிப்பட்ட இடங்களைக் கூட அடையவில்லை. தலித், முஸ்லீம் சிக்கல்கள் தேசிய பிரச்சனையாகக் காணப்படுகிற பொழுது, ஆதிவாசிகள் சிக்கல் உள்ளூர் பிரச்சனையாகவே முடிக்கப்பட்டு விடுகிறது.
அரசு, ஆதிவாசிகள் அல்லாத பிற குடிமகன்கள் ஆதிவாசிகளின் நலனில், போராட்டங்களில் கவனம் செலுத்தாமல் போனதால் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை தங்களுடையதாக மாவோயிஸ்ட்கள் மாற்றிக்கொண்டார்கள். ஆதிவாசிகளின் பகுதியில் மாவோயிசம் செழிப்பதற்கு வரலாறு, புவியியல் ஆகியவற்றோடு வேறொரு முக்கியக் காரணமும் உள்ளது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில், தேச கட்டமைப்பில், ஜனநாயக அமைப்பில் ஆதிவாசிகள் மிகக்குறைவாகப் பெற்று, மிகப்பெரிய அளவில் இழந்திருக்கிறார்கள். ஆகவே, அந்தக் கடும் அதிருப்தியை மாவோயிஸ்ட்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்வதில் வெற்றிக் கண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகளின் நலன்களைக் குறித்துக் குரல் கொடுப்பதை மாவோயிஸ்ட்கள் செய்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
மாவோயிஸ்ட்கள் புவியியல் ரீதியாக வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆதிவாசிகள் வசிக்கும் மலைகள், வனங்கள் உதவுகின்றன. அவர்களின் கொரில்லா போர்முறைகளுக்கு அதுவே உகந்த நிலம். திடீரென்று தோன்றி தாக்கிவிட்டு மறைந்துவிட முடியும். காவல்துறையைச் சுட்டுக் கொல்வதோ, எதிர்பாராத தருணத்தில் அரசியல் தலைவர்களை அழிப்பதோ இந்த நிலப்பரப்பில் சுலபமான ஒன்றாக இருக்கிறது. மேலும் காவல்துறை ஒரு மாநில எல்லையைக் கடந்து நகர முடியாது என்பதால் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா என்று மாநிலம் விட்டு மாநிலம் தாவி தப்பிக்கும் போக்கும் ஆதிவாசிகளிடம் உள்ளது.
மிகக்குறைவாகப் பெற்று, அதீதமாக இழந்த பழங்குடியினர் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். அரசு எப்படி இவர்களை எதிர்கொள்வது. அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவனான நான் மாவோயிஸ்ட்களின் வன்முறையை ஏற்க மறுக்கிறேன். ஒரு கட்சி ஆட்சி ரஷ்யா, சீனாவில் எப்படிப்பட்ட படுகொலைகள், ரத்த வெள்ளம், கொடுமை, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தன என்பதை உலக வரலாற்றின் மாணவனாக அறிவேன். அதனால் நான் மாவோயிஸ்ட்களை நிராகரிக்கிறேன். எப்படி ஒரு ஜனநாயக அரசு மாவோயிசத்தை எதிர்கொள்வது.
இருவழிகள் உள்ளன. காவல்துறையைக் கொண்டு இவர்களைக் கட்டுப்படுத்துவது ஒரு புறம் நிகழவேண்டும். மாவோயிஸ்ட்களைத் தனிமைப்படுத்தி, ஓரங்கட்டி, சரணடைய சொல்லவேண்டும், அவர்கள் அப்பொழுதும் வன்முறையைப் பின்பற்றுவார்கள் என்றால் அவர்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும். இன்னொரு புறம் வளர்ச்சியின் கனிகள் பழங்குடியின மக்களைச் சென்றடைய வேண்டும். நல்ல பள்ளிகள், மருத்துவ மையங்கள், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். PESA எனப்படும் கிராம சுயாட்சியை இப்பகுதிகளுக்குப் பரவலாக்க வேண்டும். ஐந்தாவது பட்டியலில் கனிம வளங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பாதியை பகிர்ந்து கொள்ள இடமிருப்பதாக ஏ.எஸ்.சர்மா எனும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னதைப் பின்பற்ற வேண்டும்.
இவை இரண்டிலும் மத்திய அரசு தவறியிருக்கிறது. காவல்துறை செயல்பாட்டை அது அவுட் சோர்ஸிங் செய்கிறது. உங்கள் ஊரைச் சேர்ந்த மிக மோசமான உள்துறை அமைச்சர் என நான் உறுதியாகக் கருதும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சல்வா ஜூடும் எனும் அநீதி சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டது. மாநில ஆளும் பாஜக, மத்திய காங்கிரஸ் ஆகியவை கூட்டு சேர்ந்து இதனை அரங்கேற்றின. பதினான்கு முதல் இருபத்தி ஒரு வயது பழங்குடியின இளைஞர்கள் கையில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு மாவோயிஸ்ட்கள், பழங்குடியினர் எதிர்கொள்ளப்பட்டார்கள். இடதுசாரிகள் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் வங்க, இந்து, பத்ரோலக் கட்சி போலவே நடந்து கொள்வதால் இதற்கு எதிராகப் பெரிதாக எதுவும் முயலவில்லை. இது அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி ராவ் தலைமையிலான பெஞ்ச் அது சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்துச் சல்வா ஜூடுமை கலைக்கும்படி சொன்னது. சத்தீஸ்கர் அரசு மத்திய அரசின் ஆசியோடு வேறு பெயர்களில் அடக்குமுறை சாம்ராஜ்யத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு காவல்துறையின் கையில் இல்லாமல் அது இப்படித் தவறாக அவுட் சோர்சிங் செய்யப்படுவது கவலைக்குரியது.
ஆதிவாசிகள் நம்முடைய பொருளாதார அமைப்பில் பெரும் கொடுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், துரத்தியடிக்கப்படுவதற்கும் உள்ளாகிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இருந்த பொழுது கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள் என்றால், தாரளமயமாக்கல் காலத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பரவியிருக்கிறார்கள் என்றாலும், ஓடிஸா எடுத்துக்காட்டுத் தாராளமயக்காமல் என்ன செய்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கும். பதினைந்து வருடங்களுக்கு முன்வரை அங்கே மாவோயிஸ்ட்கள் தாக்கம் இல்லை. ஆனால், ஒரிசா அரசு சுரங்க நிறுவனங்களோடு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது. பாக்சைட் முதலிய பல்வேறு தனிமங்கள் வெட்டியெடுக்கப்பட ஆதிவாசிகள் தங்களின் வாழ்விடங்களை விட்டு அதிகாரத்தைக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இப்பொழுது ஆறு மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் ஓடிசாவில் உள்ளன.
மாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள அரசு பாதுகாப்பை உறுதி செய்து, வளர்ச்சியில் ஆதிவாசிகளுக்குப் பங்கைத் தரவேண்டும். இதற்கு மாறாகக் கண்காணிக்கும், அச்சுறுத்தல் தரும் அடக்குமுறை அரசாக ஒருபுறமும், இன்னொரு புறம் உலகமயமாக்கல் காலத்தில் வளர்ச்சியின் கனிகளைச் சற்றும் ஆதிவாசிகளுக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாத புறக்கணிப்பை அரசு செய்கிறது. அரசும், குடிமக்களும் நிரப்பத் தவறிய இடத்தை மாவோயிஸ்ட்கள் பிடித்துக் கொண்டார்கள்.
அதேசமயம், ஏழைகளை விடுவிப்பவர்கள் என்றோ, பழங்குடியினரின் பாதுகாவலர்கள் என்று மாவோயிஸ்ட்கள் என எண்ணிக்கொள்ள வேண்டாம்.
ஆதிவாசிகள் தண்டகாரண்யம் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக்க கனவு காண்கிறார்கள். சுக்மா, பஸ்தார் முதலிய மாவட்டங்களில் பரவியுள்ள அவர்கள் மத்தியில் உள்ள அரசை நீக்கிவிட்டுத் தாங்கள் ஆள பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் போராட்டம் காடுகளில் வெற்றிகரமாக இயங்கலாம். சமவெளிக்கு வந்தால் அவர்கள் ராணுவத்தால் நசுக்கப்படுவார்கள். அதேபோலப் பழங்குடியினரிடம் கிடைக்கும் ஆதரவு விவசாயிகள், மத்தியவர்க்க மக்கள் ஆகியோரிடம் அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் சாகசம் மிகுந்த கனவு ஓரளவுக்குக் கிளர்ச்சியையும் பெருமளவில் அச்சத்தையும் ஒருங்கே எனக்குத் தருகிறது. எங்கெல்லாம் மாவோயிஸ்ட்கள் வருகிறார்களோ அங்கெல்லாம் கடும் வன்முறை நிகழ்கிறது. அரசும், அவர்களுக்கும் இடையே அப்பாவி ஆதிவாசி மக்கள் சிக்கி சீரழிகிறார்கள்.
அரசைப் போலவே சிறுவர்களை அவர்கள் தங்களின் படையில் சேர்க்கிறார்கள். மக்கள் கல்வி கற்க விரும்பாததால் பள்ளிகளைக் குண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஜெயபிரகாஷ் நாராயண் கனவு கண்ட கிராம சுயராஜ்யம் அவர்களின் எழுச்சிக்குத் தடை என்பதால் ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் கிராமத்தலைவர்கள் கடத்தி கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அமைதிவழி அரசமைப்பு வழிமுறை, அரசு அதிகாரத்தின் அடையாளமாக, வளர்ச்சியைக் கொண்டு வருபவர்களாக இருப்பதால் கிராமத் தலைவர்களைக் கொல்கிறார்கள். தகவல் சொல்லுபவர்கள், இருபக்கமும் நிற்காமல் அமைதியாக இருக்கும் அப்பாவிகள் ஆகியோர் மாவோயிஸ்ட்களால் கொல்லப்படுவது பலபேரால் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வினை ஆற்றும், ஜனநாயகம், அரசமைப்புக்கு எதிரான, வன்முறை, ரத்த வெறி மிகுந்த கருத்தாக்கம் ஒன்றே மாவோயிஸ்ட்களால் முன்னெடுக்கப்படுகிறது. எனவே. இவர்களைக் கனவு நாயகர்களாக, தன்னிகரில்லா தலைவர்களாகக் கொண்டாடுவது அபத்தமானது.
ஏன் மாவோயிசம் ஆதிவாசிப்பகுதியில் வளர்ந்துள்ளது என்பதையும், ஆதிவாசிகள் நம்முடைய ஜனநாயகத்தில் மற்ற எல்லாச் சிறுபான்மையினரை விடவும் கடும் அடக்குமுறை, அநீதிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதேசமயம், மாவோயிஸ்ட்களை அதற்கான தீர்வு என்று எண்ணிக்கொள்ளக் கூடாது. சமூகச் சேவை இயக்கங்கள், மருத்துவர்கள். பல்வேறு அதிகாரிகள் மருத்துவ வசதிகள், கல்வி ஆகியவற்றை ஜனநாயக முறையில் பழங்குடியினருக்கு வழங்க முடியும் எனச் செய்துகாட்டியுள்ளார்கள். அதை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டம் தீரமிகுந்த பழங்குடிகள் அமைச்சரால் ஏற்பட்டது. அதை மற்ற அமைச்சர்கள் நிறைவேற்ற தயாராக இல்லை. அதே போல, இப்பொழுதைய அரசு வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகும் செயல்களை தொடர்ந்து செய்கிறது, அனுமதிக்கிறது.
என்னுடைய உரையின் இறுதிப்பகுதிக்கு வந்துள்ள நான் ஆதிவாசிகளின் அவலகரமான நிலையை எட்டுப் புள்ளிகளில் முக்கியமாக நிகழ்வதாகக் காண்கிறேன். அது இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்.
வளமிகுந்த வனங்கள், நெடிய நதிகள், கனிம வளங்கள் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் தாராளமயமாக்கல் காலத்தில் முப்பெரும் சாபத்துக்கு உள்ளாகி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
தேசிய இயக்கத் தலைவர்களான காந்தி முதலியோர் பெண்கள்., இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோருக்காகப் பேசினாலும் ஆதிவாசிகளைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரும் கூட ஆதிவாசிகளின் நலனில் அக்கறையில்லாதவராக, கடுமையான கருத்துக்களைக் கொண்டவராக இருந்தார். இதனால் அவர்கள் நலன் கவனம் பெறவே இல்லை.
மக்கள்தொகையில் குறிப்பிட்ட சில பகுதியில் அவர்கள் அடங்கிவிடுவதால் தேர்தல் அரசியலில் அவர்கள் கவனிக்கப்படுகிறவர்களாக இல்லை.
அவர்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டையும் அவர்களைவிட நன்றாக ஆங்கிலம் அறிந்த வடகிழக்கு பழங்குடியினர் கைப்பற்றிக்கொள்கிறார்கள். மேலும், கிறித்துவ, இந்து., மாவோயிச மிஷனரிக்களுள் சிக்கிக்கொண்டு அவர்கள் பரிதவிக்கிறார்கள். அம்மக்களின் எண்ணற்ற தாய்மொழிகளில் பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் இந்தி, ஓடியா முதலிய மொழிகளில் கல்வி கற்கும் அவலமும், தங்களின் மகத்தான கலாசார வளங்களை இழக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.
ஆதிவாசிகளுக்கு உத்வேகம் தரும், அகில இந்திய அளவில் ஒன்று திரட்டும் ஒரு தலைவர் அம்பேத்கரை போலக் கிடைக்கவில்லை.
திறன், அறிவு, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளம் ஆகியவற்றைக் கொண்டு வளர்ச்சியை அடையும் எடுத்துக்காட்டுகள் இன்னமும் அவர்களிடையே எழும் சூழலும், வாய்ப்பும் இல்லை. தலித்துகளில் தொழில்முனைவோர் எழுவதைத் தேவேஷ் கபூர் முதலியோர் படம்பிடித்துள்ளார்கள். ஆதிவாசிகள் வளர்ச்சியின் பாதையில் எப்பொழுது செல்லமுடியும் எனத் தெரியவில்லை.
அரசு அதிகாரிகள். காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் எல்லோரும் இம்மக்களின் நியாயமான சிக்கல்கள் குறித்துப் பாராமுகம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
தங்களின் போராட்ட நெருப்பு எரிய எரிபொருளாக ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் வன்முறையை அரசும் கடும் வன்முறையால் எதிர்கொள்கிறது. வளர்ச்சி என்பதை மறந்ததைப் போல அரசு நடந்து கொள்கிறது.
வரலாற்று ஆசிரியர்கள் ஜோசியர்கள் இல்லை. அதேசமயம், தற்போதைய ஆதிவாசிகளின் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளது. அது வருங்காலத்தில் செம்மையுறும் என்கிற நம்பிக்கையை மட்டும் வெளிப்படுத்தி உரையை முடிக்கிறேன். நன்றி!
தமிழில்: பூ.கொ.சரவணன்

பசவர் எனும் புரட்சியாளர்!


பசவர் எனும் புரட்சியாளர்!
எளிமையான மொழியில், சிவனைப்பற்றிப் பாடும் குரலில் பசவர் கன்னட மொழியில் எழுதிய கவிதைகள் மாபெரும் சமூக எழுச்சியை உண்டு செய்தது. பல்வேறு கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் ஏ.கே.ராமானுஜனின் பசவரின் கவிதை மொழிபெயர்ப்பில் தங்களின் மனதை பறிகொடுத்திருக்கிறார்கள். டெட் ஹூக்ஸ் எனும் கவிஞர் காற்றில் கசியும் குரலாக அவரின் வரிகள் நெகிழ்விப்பதாகச் சிலிர்த்தார்.
நதி சங்கமங்களின் தலைவனான சிவனைப் போற்றிப் பாடும் பசவர் ஒரு சமூகப் போராளியாக, சுதந்திர சிந்தனையாளராக, மத ஆசிரியராக வெளிப்படுகிறார். கிரிஷ் கர்னாட் ‘எல்லா வகையான நிலையான அமைப்புகளையும் பசவரும், அவரின் தொண்டர்களும் நிராகரித்தார்கள். தொடர்ந்து நகர்பவர்களாக, மாறுபவர்களாக, வாழ்க்கையில் தொடர்ந்து செயலாற்றுகிறவர்களாக அவர்கள் இருக்க விரும்பினார்கள். எந்த அறிவுத் திறனையும் காட்ட முயலாமல் மக்களிடம் எளிமையாக உரையாடுவது என்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள்.’ என்கிறார்.


நதி சங்கமங்களின் இறைவனே
எதுவும் உன்னைக் காயப்படுத்தாது
நான் பாடிக்கொண்டே உன்னைக் காதலிப்பேன்
என்கிற பசவரின் வரியில் இந்த எளிமையே வெளிப்படுகிறது.
தன்னுடைய இறைவனைப் பசவர் கிருஷ்ணா மலப்ராபா எனும் சிறு நதியை சந்திக்கிறது. அங்குதான் பசவர் தன்னுடைய பாடல்களை எழுதினார். வச்சனாஸ் எனும் பாடல் வடிவத்தில் சந்தத்தோடு அவர் எழுதினார்.
மரத்தினில் மந்தியைப் போல
கிளைக்குக் கிளை தாவுகிறது
எப்படி நம்புவேன் எரியும் என் இதயத்தை?
அது என் தந்தையிடம் என்னைப் போகவிடாது
நதிசங்கமங்களின் இறைவனிடம்!

சாதியமைப்பை வச்சனாக்கள் கேள்வி கேட்டன. பல ஒடுக்கப்பட்ட ஜாதியினரும், பெண்களும் பசவரின் இயக்கத்தை முன்னெடுத்தார்கள்.

‘இரும்பை கொதிக்கவைத்தால் நீ கொல்லன்
துணித் துவைத்தால் சலவைக்காரன்
ஆடையை நெய்தால் நெசவாளர்
வேதம் படித்தால் பிராமணன்
பொய், பெரும்பொய் புனித பிறப்பு பற்றிய புரட்டுகள்
தன்னை உணர்ந்தவனே தன்னிகரில்லா மனிதன்’

மத அதிகார பீடங்களை அவரின் வழிவந்த வீரசைவர்கள் கேள்வி கேட்டார்கள். சமூகச் சாதியமைப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. பெண்கள் அவர்களின் பாடல்களிலாவது குறைந்த பட்சம் ஆணுக்குச் சமமாகப் போற்றப்பட்டார்கள். பிராமணியத்தை மட்டுமல்லாமல், பானை, சீப்பு, கோப்பைகள் ஆகியவற்றில் இறைவனைக் கண்ட நாட்டார் மக்களையும் அவர் கேலிசெய்தார். பசவர் வடமொழியில் எழுதாமல் மக்களின் மொழியான கன்னடத்தில் தன்னுடைய கருத்துக்களைத் தீவிரமாகப் பரப்பினார்.

இந்தப் பக்தியெனும் கொடும்பொருளை கொண்டு செல்லாதே
அறுக்கும் ரம்பம் அது
போகிற பொழுதும்
வருகிற பொழுதும்
அறுக்கும் அது அறுக்கும்!

அவரைப் பின்பற்றியவர்கள் அவர் எந்தச் சாதியமைப்பை தீவிரமாகச் சாடினாரோ அதையே தங்களின் அடையாளமாக மாற்றிக்கொண்டார்கள். அவரின் வழிவந்தவர்களே தனிச் சாதியாக மாறினார்கள். லிங்காயத்துகள் எனப்படும் அம்மக்கள் எண்பது லட்சம் பேர் கர்நாடகத்தில் தனி ஆதிக்க ஜாதியாக உள்ளார்கள். அதைப் பசவர் இன்றிருந்தால் கடுமையாகச் சாடியிருப்பார். பசவர் அன்றிருந்த சமூக, சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நோக்கில் ஒரு அதீத முடிவை எடுத்தார். செருப்பு தைக்கும் வகுப்பை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், பிராமணப் பெண்ணுக்கும் கலப்புத் திருமணம் செய்ய முயன்றார். மன்னன் கோபங்கொண்டு இரு குடும்பத்து ஆட்களின் கண்களைப் பிடுங்கினான். அவர்களின் உடல்கள் யானைகளால் நசுக்கப்பட்டன. கொதித்து எழுந்து வீரசைவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். பசவர் எவ்வளவோ தடுத்தும் வன்முறையை விடவில்லை. அதற்குள் அவரின் சமூகம் சிதறி, பசவர் இறந்து போயிருந்தார். மன்னன் அதற்குப் பின்னர்க் கொலை செய்யப்பட்டான்.
ஏழ்மையாக வாழ்ந்த பசவர் செல்வமில்லாமல் இறைவனுக்கு ஆலயம் எழுப்ப முடியாத தன்னுடைய நிலையை இப்படிப் பாடுகிறார்:

செல்வர்கள் சிவனுக்கு ஆலயங்கள் அமைப்பார்கள்
ஏழை அடியவன் யான் என்ன செய்வேன்?
என் கால்களே தூண்கள்
என் உடலே ஆலயம்
என் தலையே தங்கக் கோபுரம்
நதிசங்கமங்களின் இறைவனே காதுகொடுத்து கேள்
நிலையானவை நிலைகுலைந்து போகும்
நகர்பவை என்றும் நிலைத்திருக்கும்!

இராஜராஜனும், ஜெயலலிதாவும்!


அண்டம், ஆலயம், ஆட்சி – அவன் இராஜராஜன்
இராஜராஜ சோழன் பதினோராம் நூற்றாண்டில் கட்டிய 66 அடி அற்புதம் தான் பெரிய கோவில். அந்த நூற்றாண்டில் இந்தியாவில் கட்டப்பட்ட மகத்தான கலைப்படைப்பு இது என்கிற கட்டிடவியல் பேராசிரியர் ஜார்ஜ் மிச்சேல். இந்தக் கோயிலுக்குத் தன்னுடைய பெயரை வழங்கிய ராஜராஜசோழன், அதனைத் தன்னுடைய அதிகாரத்துக்கான திறவுகோலாக மாற்றிக்கொண்டான்.


சோழர்கள் அரசியல் சூழலைப் பற்றிய வல்லுனரான பேராசிரியர் செண்பகலட்சுமி விரிவாக இதனை ‘ஆண்டவன், ஆலயம், ஆட்சி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு’ என்கிறார்.ராஜராஜன் ஆட்சிக்கு வந்திருந்த பொழுது சோழ தேசம் சிக்கலில் சிக்கியிருந்தது. கன்னட மன்னனிடம் கண்ட தோல்வியின் காயங்கள் ஆறியிருக்கவில்லை. உள்ளூர் அரசர்கள், கிராமத்துப் பெருந்தலைகள், வியாபாரக் குழுக்கள், பிராமணர்கள், நெற்பயிர் விளைவித்த வேளாளர்கள் என்று எண்ணற்ற அதிகார மையங்கள் இருந்தன. இவை அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவருக்குப் படையோ, சிறந்த அதிகாரக் குழுவோ இல்லை. அதனால் பெரியகோயிலை அதற்கான கருவியாக மாற்றிக்கொண்டார். இந்தக் கோயில் அவரைப் பல நாடுகளைப் பிடித்தவராக, அதே சமயம் கருணை கொண்ட பக்திமானாகப் பறைசாற்றியது.


இந்தக் கோயிலில் சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்க்கிற முயற்சியை ராஜராஜன் மேற்கொள்கிறார். அதே போல, இங்கே இருந்தே வரி வசூல் செய்கிற வழக்கமும் இருந்தது. கோயிலுக்கு என்று பல ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கோயிலுக்குள்ளேயே அரசு நிர்வாகம் நடப்பதும் நிகழ்ந்தது. பல்வேறு இனக்குழுக்களைச் சேர்க்கும் வகையில் வேத வழிபாடு, தமிழ் வழிபாடான பூவைக் கொண்டு செய்யும் பூஜை, உணவு, ஆடைகள், ஆபரணங்கள் காணிக்கையாக வழங்குவது ஆகியவை உடன் சேர்க்கப்பட்டன. இவை உயிர்ப்பலி தந்த வேதகாலப் பழக்கத்தில் இருந்து மாறுபட்டது. பல்வேறு மக்களின் தெய்வங்களை ஆலயத்தில் பல்வேறு பகுதிகளில் செதுக்குவதும் திட்டமிட்டு நிகழ்ந்தேறியது. அதுவரை நான்கு வர்ணங்களுக்குள் வராதவர்களைச் சூத்திரர்கள் என்று அழைத்து அவர்களிடம் இருந்து உடல் உழைப்பை பெறுவதையும் அவர் சாதித்தார். செப்புத் திருமேனிகளின் பொற்காலமாக அவரின் காலம் இருந்தது.

 

இருநூறு கிலோ தங்கம் முதல் எண்ணற்ற செல்வங்களைக் கோயிலுக்கு வழங்கிற ராஜராஜன் அதற்கான செல்வதை வரி, போர்கள், வெளிநாட்டுப் படையெடுப்புகள் வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெற்றார். அதற்கு முன் எந்த இந்திய அரசனும் செய்யாத முயற்சியான மரத்தால் ஆன படகுகளை வியாபாரத்துக்காக உருவாக்கினார். அதன் மூலம் வங்கக்கடல் சோழர்களின் ஏரியாக அவரின் காலத்தில் திகழ்ந்தது. இலங்கையை வெஞ்சினத்தோடு கொள்ளையிட்டார். சுமத்ராவின் ஸ்ரீவிஜய அரசோடு போட்டியிட்டு சீனாவுடன் வியாபாரம் செய்தார்கள். முத்து, ஆடைகள், நறுமணப் பொருள்கள் விற்றுக் கற்பூரம், உலோகங்கள், சீனப் பீங்கான் பாத்திரங்கள் பெற்றுச் சோழர்கள் திரும்பினார்கள்.
தமிழகம் இந்தியாவில் இருந்து மாறுபட்டு தனிமனித வழிபாட்டின் உச்சத்தில் உள்ளது. இங்கே அவர்களின் முதல்வர் ஜெயலலிதா சிறைத்தண்டனையை ஊழல் வழக்கில் பெற்ற பொழுது பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். ‘தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா?’ என்று கேள்வி நிரம்பிய போஸ்டர்கள் எழுந்தன. ராஜராஜ சோழன் தான் இறைவனை வழிபட்டதோடு நில்லாமல், தன்னையும் வழிபாட்டு பொருளாக மாற்றினான். அதன் எச்சமும், தொடர்ச்சியும் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றதோ என்னவோ!
மூலம்: சுனில் கில்னானி
சுருக்கமான தமிழில்: பூ.கொ.சரவணன்

குணங்களற்ற சர்வேஸ்வரன்- ஆதிசங்கரர்!


கண்கள் சொருக நடந்து போகையில் எதோ ஒன்று நெளிந்து கிடப்பதாகக் கண்ணில் படுகிறது. பாம்பென்று அலறுகிற நான் அதன் அருகில் சென்று காண்கிற பொழுது அது வெறும் கயிறு என்று புலப்படுகிறது. ஆத்மா என்பது மாயை, பிரம்மம் எனப்படும் இறைவன் மட்டுமே உண்மை. பிரம்மம், மற்றவை எல்லாம் மாயை என்று இறைவனும், நாமும் வேறல்ல என்பதன் மூலம் ஒற்றையான இறைவனை முன்மொழிந்தவர் சங்கரர். அவரின் தத்துவத்துக்கு அத்வைதம் எனப் பெயர்.
சங்கரர் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்கி வருகின்றன, எட்டு வயதுக்குள் வேதங்களைக் கற்றுத் தேர்ந்த அவர் அப்பொழுதே துறவறம் நோக்கி நகர்ந்தார். பல்வேறு வேத நூல்கள், வேதாந்தம் ஆகியவற்றைப் பற்றி அவர் பல்வேறு உரைகளை எழுதினார். தாயின் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்கு செய்ய அவர் வந்த பொழுது, சந்நியாசம் வாங்கிக் கொண்டு போனவர் தாய்க்கு சடங்கு செய்யக் கூடாது என்று ஊர் தடுத்தது. ஜெபங்கள், சடங்குகள் ஆகியவற்றுக்கு எதிரான அவரின் குரல் அந்தக் கணத்தில் இருந்து தான் எழும்ப ஆரம்பித்தது.
வேதங்களை விரித்துப் பேச வந்த வேதாந்தங்கள் தான் உண்மையான இறைவனைப் பேசுகின்றன என்றவர் முன்மொழிந்தவர். வேதாந்தங்கள் பற்றிய தன்னுடைய ஆழமான, வசீகரிக்கும் உரைகளின் மூலம் சங்கரர் புதிய கோட்பாட்டை, எழுச்சியை இந்து மதம் என்கிற பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நம்பிக்கைக்கு உருவம் தந்தார். கடவுளின் இருப்பை நிராகரித்த பவுத்தர்களோடு உரையாடிக்கொண்டே அவர் பவுத்தத்தின் சங்கம் முதலிய கூறுகளை இந்து மதத்தில் வெற்றிகரமாக இணைத்துத் துவாரகை, பூரி, பத்ரிநாத், சிருங்கேரி ஆகிய இடங்களில் தன்னுடைய மடங்களை நிறுவினார்.

அவரின் காலத்தில் ஐரோப்பாவில் சார்லி மாக்னே சாக்சன், மூர், ஸ்லாவ் முதலிய பல்வேறு மக்களைக் கொன்று ரத்தக்கட்டிலின் மீது சிம்மாசனம் ஏறினான். இங்கோ சங்கரர் விவாதங்களின் மூலம் ஒரு மதத்தை நிர்மாணித்தார். சடங்குகளை நம்பாமல் தனக்குள் பிரதிபலித்துக் கொண்டு ஒரு மனிதன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றார் அவர். துறவறம், சந்நியாசம், அறிவுத் தேடல் ஆகியவை தேவை என்றும், தனக்குள் பிரதிபலிப்பதன் மூலம் ஒருவர் மாயையைக் கடந்து மோட்சத்தை அடையமுடியும் என்றும் அவர் சொன்னார்.

எனினும், சங்கரர் மோட்சம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று கருதினார். அவரின் எல்லையற்ற பரம்பொருள் என்கிற கருத்தாக்கத்தில் பிற ஜாதியினருக்கு இடமில்லாத அநீதி இருந்தது. வெண்டி டோனிங்கர், உலகம் என்பதே மாயை என்று எண்ணம் விதைத்தன் மூலம் சமூக அநீதிகள், வறுமை, அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிரான குரலை அழிப்பதை சங்கரரின் தத்துவம் செய்தது என்கிறார்.
ஆத்மாவும், பிரம்மனும் வேறு வேறில்லை என்கிறார் சங்கரர். ஆனால், நாம் வேறுபடாத, எல்லையற்ற பிரபஞ்சத்தின் அங்கம் என்றால் நாம் பிரபஞ்சத்தைப் பற்றி எப்படிப் பிரதிபலித்து மோட்சத்தை அடைய முடியும்? வேதம், வேதாந்தம், சங்கரரின் தத்துவம் ஆகியவையும் மாயை என்றால் இவற்றைக் கொண்டு எப்படி உண்மையைக் கண்டடைய முடியும்? எனினும், இந்தத் தேடல் ஒருவரை உண்மையை நோக்கி செலுத்தக்கூடும்.

சங்கரரின் கடவுள் வேறுபட்டவர். சுயநலம் கொண்ட, ஆணாதிக்கம் மிக்க ஆப்ரகாமிய கடவுள்களைப் போலவோ, அதிகச் சக்திகளைக் கொண்ட தனிப்பட்ட பண்புகளைக் கொண்ட வேதகாலக் கடவுள்களைப் போலவோ அல்லாமல் சங்கரரின் கடவுள் ‘நிர்குண பிரம்மன்’ என அவரால் அழைக்கப்பட்டார். அவர் குணங்கள் அற்ற இறைவன். இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்களின் ஒரு இறைவன் கோட்பாடோடு சங்கரரின் கருத்துக்கள் ஒத்துப்போவதாக எண்ணினார்கள். அவரின் எண்ணத்தையே முழுமையான இந்து மதமாக அவர்கள் முன்னிறுத்தினார்கள். எனினும், சங்கரரின் இந்து மதம் பல்வேறு இந்து மதங்களில் ஒன்று அவ்வளவே!

அவரின் எழுத்தும், நடையும் அழகாக, கிளர்ச்சி தருவதாகப் பல்வேறு இடங்களில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒன்று:

நான் நிலமில்லை, நீருமில்லை, நெருப்புமில்லை, காற்றுமில்லை. நான் உணர்வு கொண்ட உறுப்பும் அல்ல. நான் இவற்றின் தொகுப்பும் இல்லை. இவை அனைத்தும் மாறுபவை, இயற்கையில் நிலையற்றவை. .. நான் மேலேயும் இல்லை, கீழேயும் இல்லை, நான் உள்ளேயும் இல்லை, வெளியேயும் இல்லை. நான் நடுவிலும் இல்லை, அப்பாலும் இல்லை. நான் கிழக்கும் இல்லை, மேற்கும் இல்லை. நான் பிரிக்கமுடியாதவன், நான் ஒன்றானவன், வானைப் போல முழுமையாக எங்கும் நிறைந்தவன்!

அறிவெனும் ஓடத்தின் தலைவன்- ஆரியபட்டர்


ஆரியபட்டர் என்கிற ஆளுமையைப் பற்றித் தனிப்பட்ட முறையில் நமக்குத் தெரிவது வெகு சொற்பமே. அவரின் ஆரியபட்டியம் என்கிற ஒரே ஒரு நூல் மட்டுமே நம்மிடம் உள்ளது. அவர் ‘அறிவெனும் ஆபரணத்தை மூழ்கி மீட்டவன் நான். நல்லறிவும், தீயறிவும் மிகுந்த பெருங்கடலில் அறிவெனும் ஓடம் ஒட்டி பிரம்மனின் அருளோடு இவற்றைக் கண்டேன்.’ என்று எழுதுகிறார். பையின் மதிப்பை கண்டறிந்தார், திரிகோணவியலை செம்மைப்படுத்திச் சூரிய, சந்திர கிரகணங்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கம் தந்தார். கலிலியோ, கோபர்நிக்கஸ் ஆகியோருக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பூமி தன்னுடைய அச்சில் சுழல்கிறது என்றார்.
தன்னுடைய பிறப்பை கூடப் புதிராகவே அவர் எழுதியுள்ளார். ‘அறுபது முறை அறுபது வருடங்களும், முக்கால் பங்கு யுகமும் கழிந்த காலத்தில் எனக்கு இருபத்தி மூன்று வயதாகிறது’ என்பதாக அது செல்கிறது. சூரியனே உலகின் மையம் என்று ஆரியபட்டர் சொல்லவில்லை. எனினும், வானமே சுற்றுகிறது என்று நம்பப்பட்ட பொதுவான அறிவுக்கு மாற்றான கருத்தாகப் பூமி சுழல்கிறது என்பதை அவர் முன்வைத்தார். அவரின் இந்த அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துத் தொழில், திருமணம் என்று பல்வேறு செயல்களைச் செய்யும் மூடநம்பிக்கைக்குப் பயன்பட்டிருக்கும் என்று அவர் எண்ணியிருக்கமாட்டார்.


அப்பொழுதெல்லாம் தூசு நிறைந்த பலகைகளிலேயே கணக்குகள் போடப்பட்டதால் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளச் சுருக்கமாக, துலக்கமாக எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆரியபட்டர் தள்ளப்பட்டார். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சம்ஸ்கிருத பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் மின்கோவஸ்கி ‘முப்பத்தி இரண்டு அடிகளில் பதின்மான எண் முறை, மும்மடங்கு வர்க்கமூலம், வர்க்க மூலங்கள், முக்கோணங்கள் என்று பலவற்றைப் பற்றி விறுவிறுவென்று சொல்லிச்செல்கிறார்.’ ஆரியபட்டர் தீர்க்கமான பார்வையும், அறிவும் கொண்டவர் என்றாலும் மேற்கின் கட்டமைப்பில் அவரின் சிந்தனைகள் பொருந்தவில்லை என்பதால் அவர் [பெரிதாக முற்காலத்தில் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆரியபட்டர் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தார், அவர் புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்தார் என்று பல்வேறு கதைகளும் வழங்கி வருகின்றன.. இவை எதுவும் உண்மையில்லை. அறிவெனும் ஓடத்தில் இப்பொழுதுதான் இந்தியாவின் அறிவியல் பயணம் நகர ஆரம்பித்துள்ளது. அல்பெருனி சொன்னதைப் போல முத்தும், சாணமும் கலந்தே கிடைக்கும். கவனம்!

போர்களில் சிக்கிச்சாவும் மனிதநேயம்!


eye in the sky திரைப்படத்தைப் பார்த்துக் கண்கள் மல்க இந்தப் பதிவை எழுதுகிறேன். தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பதில் எண்ணற்ற சவால்கள், சிக்கல்கள் உள்ளன. அரசுகள், ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிக்கொள்ளும் அப்பாவிகளைப் பற்றி இவர்கள் ஏதேனும் கவலைப்படுகிறார்களா? ஆம் என்றால் பின்னர் ஏன் இத்தனை மக்கள், குழந்தைகள், பெண்கள் இறந்து போகிறார்கள்? இப்படிப்பட்ட எண்ணற்ற கேள்விகளை இந்தப் படம் இயல்பாக எழுப்புகிறது

கென்யாவில் இருக்கும் தீவிரவாதிகள் ஆறு பேரை வெகுகாலத் தேடலுக்குப் பிறகு பிரிட்டன் கலோனல் கண்டறிகிறார். அவர்களை உயிரோடு பிடிக்க முதலில் முயற்சிகள் எடுத்தாலும், அதில் இருவர் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட இருப்பது தெரியவே தன்னுடைய திட்டத்தை அவர்களைக் கொல்வதை நோக்கி அவர் திருப்புகிறார். இதில் ஆலியா எனும் கென்ய சிறுமி நடுவில் சிக்கிக்கொள்கிறாள்.

ஆலியா எனும் அடையாளங்கள் அறியாத சிறுமி. பிரிட்டன் ராணுவம்,. அமெரிக்க விமானி, கென்ய அரசு, வானில் பறக்கும் விமானம் என்று விரியும் இந்தப் பரப்பில் ஊசலாடுவது மனித நேயமும், மகத்தான ஒரு குழந்தையின் உயிரும் தான். அந்த வீட்டின் மீது தாக்குதல் செய்யலாம் என்று முடிவு செய்கிற பொழுது ஆலியா அங்கே அமர்ந்தபடி ரொட்டிகள் விற்கிறாள். அவள் அந்தத் தாக்குதலில் உயிரழக்க வாய்ப்புகள் அதிகம் என்கிற சூழலில், தற்கொலைப் படை தீவிரவாதிகளைத் தடுப்பது எப்படி என்கிற சவால் கண்முன் நிற்கிறது.

எண்பது உயிர்களைக் காப்பதா, அல்லது ஒரு சிறுமியின் உயிரா என்று கேள்வி எழுகிறது. அமெரிக்க விமானி அந்தப் பெண் இருக்கும் பகுதியில் குண்டு வீசமாட்டேன் என்கிறார். அந்தப் பெண் தன்னுடைய விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் கண்கள் நிறையப் பார்ப்பவர்களே குண்டு வீசும் பணி நோக்கி அனுப்பப்படுகிறார்கள். பிரிட்டனின் பெண் மந்திரி ஒருவர் குண்டு வீசப்பட்ட பின்பு அந்தப் பெண்ணின் உயிர் துடித்து அடங்கும் பொழுது கண்ணீர் சிந்துகிறார். லெப்டினென்ட் தன்னுடைய பேத்திக்கு பொம்மையோடு கிளம்புகிறார். ஆலியா மருத்துவ உதவிகள் கூட இல்லாமல் பரிதாபமாக இறந்து போகிறாள்.

‘ஒரு ராணுவ வீரனிடம் போர் என்பது எப்படியிருக்கும் என பாடம் எடுக்காதீர்கள்!’ என்கிற இடத்தில் ஆலன் ரிக்மெனின் குரலும், பார்வையும் பலவற்றைச் சொல்கிறது. போரில்லா உலகம் வேண்டும் என்பதைப் பிரச்சார நெடி இல்லாமல், எக்கச்சக்க ரத்தக்களரி காட்சிகளால் சொல்லாமல், ஆலியா என்கிற மொழி புரியாத பெண்ணின் வழியாகக் கடத்திய வகையில் மனிதநேயத்தின் மீது நம் கண்களைப் பதித்திருக்கிறது இந்தப் படம். அவசியம் பாருங்கள்!

நோயாளியை மனிதராகக் காண்பது – சரகர்!


ஆயுர்வேதம் என்பது நீண்ட ஆயுளைத் தரும் அறிவு என்கிற பொருள் கொண்டது.. இதனை இந்தியாவுக்கு அளித்தவர் என்று சரகரை சொல்கிறார்கள். அவரே இந்திய மருத்துவத்தின் தந்தை என்றும் அறியப்படுகிறார். சரகச் சம்ஹிதை மூன்று முதல் ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் தொகுக்கப்பட்டது. அதில் இமாலய தாவரங்கள், உணவு வகைகள் குறித்துச் சொல்வதால் அவர் வட இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது புலனாகிறது. சரகர் என்பவர் ஒருவரா இல்லை பலரா என்பது உறுதியாகச் சொல்லமுடியாத அளவுக்குப் பல்வேறு குரல்கள் இந்த நூலில் காணப்படுகின்றன.
டொமினிக் வுஜாஸ்ஸ்டிக் எனும் பண்டைய இந்தியா பற்றிய ஆய்வுகள் குறித்த வல்லுநர் சரகச் சம்ஹிதை வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் தொடுகிறது என்கிறார்/ சிறுநீர் வந்தால் உடனே கழிக்க வேண்டும், எப்படி ஒரு மருத்துவமனையை நடத்த வேண்டும், எப்பொழுது எழ வேண்டும், என்ன உண்ண வேண்டும் என்று பலவற்றைத் தொட்டுச் செல்கிறது. வாதம், பித்தம், கபம் என்கிற மூன்றும் இணைந்து உடல் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பொருத்தமான இடங்களை விட்டு அவை இடமாற்றம் அடைகிற பொழுது உடலில் நோய்கள் உண்டாகின்றன என்பது சரகரின் முடிவு.மற்ற பண்டைய மருத்துவ முறைகளைப் போலவே ஆயுர்வேதமும் மனிதனை பரந்த அண்டவெளியின் அங்கமாகக் காண்கிறது.

அதேசமயம், தனிமனிதர்களே தங்களின் உடல்நலனை செம்மைப்படுத்துபவர்கள் என்று அது கருதுகிறது. நல்ல பழக்கவழக்கங்களின் மூலம் உடலை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் சொல்கிறார். விவாதம் என்பதும் ஆயுர்வேதத்தின் மையத்தில் உள்ளது. கேள்வி, பதில் பாணியில் அவரின் நூல் அமைந்துள்ளது. கேள்விகளை எழுப்பி நோயாளியை புரிந்துகொண்ட தீர்வுகளைத் தரவேண்டும்.ஆயுர்வேத சோதனைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கலவையான முடிவுகளைத் தந்துள்ளன.

ஆயுர்வேதத்தில் பிராகிருதி என்கிற கருத்தாக்கம் மனிதர்களின் உடல் கூறுகள், உளவியல் கூறுகள், பழக்க வழக்கங்களின் தனிப்பண்புகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சிகிச்சை அளிக்கின்றது. அதே சமயம் இவை ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தன்மை கொண்டு அமைக்கப்பட்டவை என்று எண்ணக்கூடாது என்கிறார் பேராசிரியர் டொமினிக். காந்தி சரகரின் ஆயுர்வேதம் முதலிய பல்வேறு இந்திய மருத்துவ முறைகளால் தாக்கம் பெற்றார். அவர் நேச்சுரோபதி என்கிற முறையில் தன்னுடைய உடலின் மீது பல்வேறு சோதனைகள் புரிந்து பார்த்தார். அவரின் நூல்களிலேயே ‘உடல்நலத்துக்கான வழிகாட்டி’ எனும் நூலே அதிகமாக விற்கிறது.
இந்தியாவில் பொதுமக்களின் சுகாதாரத்துக்கு மிகக் குறைவான பணமே செலவிடப்படுகிறது. நோய்களால் வருடத்துக்கு ஆறு கோடி பேர் இந்தியாவில் வறுமையில் தள்ளப்படுகிறார்கள். தேர்ந்த மருத்துவர்களின் எண்ணிக்கை சொற்பமாக உள்ளது.அதிக செல்வம், நகரமயமாக்கல் ஆயுர்வேதம் மீண்டும் எழுச்சி பெற வழிவகுத்து விட்டன. அது கொடிய நோய்களுக்குத் தீரவில்லை என்றாலும் அன்னையைப் போலக் கவனிப்பதும், என்ன சாப்பிட வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்றும் கவனிப்பதாலும் தனி அந்தஸ்து பெற்றுள்ளது.
தொழிற்சாலையில் பல்வேறு பாகங்களை வரிசையாக ஒன்று சேர்ப்பது போல மனிதர்களை அணுகும் நவீன மருத்துவ முறையின் மூச்சடைக்கும் செயல்பாடுகளில் இருந்து ஆயுர்வேதம் வேறுபட்டு இருக்கிறது. அதே சமயம், அது பெரிய அதிசயங்களைச் சாதிக்கவில்லை. உயர்தட்டை கடுப்பேற்றும், மத்திய வர்க்கத்தை ஏழைகளாக ஆக்கும், ஏழைகளை அழிக்கும் நவீன மருத்துவக் கட்டமைப்பில் இருந்து வேறுபட்டு ஒரு வகையான நிம்மதியை மேலும் கொஞ்சம் உரையாடல், கேள்விகளோடு மனிதர்களை மனிதர்களாக ஆயுர்வேதம் அணுகுவதால் அதற்கு மவுசு கூடியுள்ளது.

மூலம்: சுனில் கில்னானி

சுருக்கமான தமிழில்: பூ.கொ.சரவணன்

இணங்கவைக்கும் அதிகாரத்தின் அரசியல்- அசோகர்!


 

அசோகர் புதிதாகக் கிளைபரப்பி இருந்த புத்த மதத்தை உலக மதமாக அதிகாரத்தை விடுத்து இணக்கத்தால், அகிம்சையால் மாற்றினார். அசோகர் ஆட்சிக்கு வந்த காலத்தில் பூனிக் போரில் ரோமானியர்கள் மோதிக்கொண்டார்கள், பாராசீகம் உள்நாட்டுப் போரில் எரிந்து கொண்டிருந்தது, சீனாவில் சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட ஆரம்பித்து இருந்தது. வன்முறையும், போர்களுமே அதிகாரத்துக்கான வழிகள் என்று கருதப்பட்ட காலத்தில் அசோகர் அன்பால் அதைச் சாதித்தார். அமைதி, திறந்த மனது, சகிப்புத் தன்மை ஆகியவற்றை அவர் பரவலாக்கினார்.
மவுரியர்களின் அரசு அசோகரின் காலத்தில் தெற்குப்பகுதியை தவிர இந்தியாவின் பெரும்பான்மைப்பகுதியில் பரவியிருந்தது. அசோகரின் காலத்தில் ஆப்கனின் தட்சசீலத்தில் துவங்கிய சாலை பீகாரின் பாடலிபுத்திரத்தில் முடிகிற 2௦௦௦ கிலோமீட்டர் சாலையாக இருந்தது. நமக்குத் தெரிந்து அசோகர் 33 கல்வெட்டுகள் மூலம் இந்தியா முழுக்க இருந்த தன்னுடைய பிரஜைகளிடம் உரையாடினார். ஹாரல்ட் இன்னிஸ் எனும் வரலாற்று ஆசிரியர் மையப்படுத்தப்பட்ட அரசுகள் பேப்பர், பனை ஓலைகள் ஆகியவற்றில் மக்களைத் தொடர்பு கொள்கின்றன. அதிகாரப் பரவலாக்கம் கொண்ட அரசுகள் திடமான கல், களிமண் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்கின்றன. அசோகரின் அரசு அதிகார பரவலாக்கம் கொண்ட அரசு ஆகும்.

அசோகரின் கல்வெட்டுகள் மக்களின் மொழியான பிராகிருதத்தில் இருந்தன. ‘நான் உறங்கிக் கொண்டிருந்தாலும், உண்டு கொண்டிருந்தாலும், நான் அந்தப்புரத்தில் இருந்தாலும், நான் படைக்களத்தில் இருந்தாலும், நான் அணிவகுப்பில் இருந்தாலும் மக்கள் சேவகர்கள் என்னை எப்பொழுது வேண்டுமானாலும் வந்து காணலாம்.’ என்கிறார் அசோகர். அசோகரின் அண்ணன் சுசிமா பட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அசோகர் ரத்த வெள்ளத்தில் அதிகாரம் ஏறினார் எனத் தெரிகிறது. சில கதைகள் அவர் 98 சகோதரர்களைக் கொன்றதாகச் சொல்கின்றன. காமத்தில் திளைத்தவராக அசோகர் இருந்தார். தனக்கு இணங்காத பெண்களை எரிக்கிற அளவுக்கு அவர் கொடூரனாக ஆரம்பகாலத்தில் இருந்தார்.

முதல் கலிங்கப்போரில் அவரின் குரூரம் உச்சத்தை அடைந்தது. அங்கே பார்த்த ரத்தம், பிணங்கள், இழப்பு அவரைப் புரட்டிப் போட்டன. அமைதியின் பாதையான பவுத்தம் அவரை அடைந்தது. அசோகரைப் பற்றிய இந்தக் கதைகளை விடுத்துவிட்டு பார்த்தால் அவரின் காலத்தில் மவுரிய அரசில் கிரேக்கர்கள், அராமிக் மக்கள் உட்படப் பலதரப்பட்ட இன, மதக்குழுக்கள் இருந்தார்கள். நகரமயமாக்கலும் மிகுந்திருந்தது. இந்தச் சூழலில் அசோகர் ஆட்சி நிலையானதாக அமைய ஒரு வழியைப் பவுத்தத்தின் வழியாகக் கண்டடைந்தார். அவரின் தம்மம் பொறாமை, வன்முறை ஆகியவற்றை நிராகரித்தது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் நலன்களைக் காப்பது தம்மம் என்று அசோகர் கருதினார்.

சாணக்கியர் பேசிய வழிகளில் இருந்து மாறுபட்டு அசோகர் பேசினார், இயங்கினார். அசோகரின் பன்னிரெண்டாவது கல் தூண் அற்புதமான கருத்தை முன்வைக்கின்றது:
ஒரு மதத்தைப் புகழ்வதோ, தூற்றுவதோ நல்ல நோக்கமில்லாமல் மேற்கொள்ளப்படக்கூடாது. ..தன்னுடைய மதத்தை அளவற்ற பற்றினால் போற்றிப் புகழ்வதும், இன்னொருவரின் மதத்தைத் தன்னுடைய மதத்தை உயர்த்திப் பிடிப்பதற்காகத் தாழ்த்துவதும் அவரின் மதத்துக்குத் தான் தீங்காகும். மதங்களுக்கு இடையே தொடர்பு நல்லது. அதே சமயம், பிற மதத்தவரின் கருத்துக்களை, நம்பிக்கைகளைக் கவனிக்கவும், மதிக்கவும் வேண்டும். தேவர்களுக்கு உகந்த மன்னர் பியதசி எல்லாக் குடிமக்களும் மற்ற மதங்களின் கோட்பாடுகளை நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.’

ஒற்றர்கள், குழப்பம் விளைவிப்பவர்கள் ஆகியோரை ஒரு அரசு கொண்டிருக்க வேண்டும் என்று சாணக்கியர் சொன்னால் அசோகரோ தர்ம மகாமதர்களைக் கொண்டு தர்ம யாத்திரைகள் மேற்கொண்டு அறத்தை பரப்பினார். நெறிப்படுத்தல், இணக்கமான வழிமுறைகளால் தான் தம்மம் பரவும் என்று அவர் கருதினார்.

அசோகர் தன்னுடைய இறுதிக் காலத்தில் கடுமையான வழிகளைப் பின்பற்றவும் செய்தார். போரின் இருப்பை ஒப்புக்கொண்டார். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைப் புத்த மடங்களை விட்டு வெளியேற்றினார். காட்டுவாசிகளைப் புத்த மதத்துக்குக் கட்டாயமாக மாற்றினார். அசோகரின் பெயர் பல்லாயிரம் வருடங்களுக்கு உலகுக்குத் தெரியாமல் இருந்தது. ஜேம்ஸ் பிரின்செப் எனும் ஓரியண்டல் அறிஞர் பிராமி வரிவடிவத்தைப் படித்து அசோகரை மீண்டும் மீட்டெடுத்தார், ஆங்கிலேயர்கள் மறுகண்டுபிடிப்பு செய்த அசோகரை இந்தியாவின் கலாசார, மதப் பன்முகத்தன்மைக்கு நேரு, காந்தி பயன்படுத்திக்கொண்டார்கள்.

இந்தியாவின் தேசியக்கொடியில் அசோகரின் சக்கரம் சேர்க்கப்பட்டது. நேரு அப்பொழுது, ‘இந்திய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே மகத்தான பெயரான அசோகரின் சின்னத்தை, பெயரை நம்முடைய தேசிய கொடியோடு பொருத்தியிருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. போர்கள், பூசல்கள், சகிப்பின்மை ஆகிய நிரம்பிய இந்தக் காலத்தில் பழங்காலத்தில் இந்தியா எதற்காக நின்றது என்பதை நோக்கி நம் மனம் செல்லவேண்டும்.’ என்றார். இன்றைக்கும் அசோகரின் அகிம்சையும், அன்பும், இணக்கமும் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

மூலம்: சுனில் கில்னானி
சுருக்கமான தமிழில்: பூ.கொ.சரவணன்

அதிகார வட்டம், அர்த்தசாஸ்திரம், சாணக்கியர்


 

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னாள் மைசூரில் உள்ள அரசாங்க ஓரியண்டல் நூலகத்துக்கு ஒரு பெயர் தெரியாத தஞ்சை பிராமணர் ஒருவர் ஓலைச்சுவடி கட்டு ஒன்றைத் தந்தார். அந்த ஏட்டை இயல்பாகப் படிக்க ஆரம்பித்த நூலகர் ருத்ரபட்டினம் சாமாசாஸ்திரி தான் ஒரு பொக்கிஷத்தை கண்டிருப்பதை உணர்ந்து கொண்டார். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் இந்தியர்களுக்கு மீண்டும் கிடைத்தது இப்படித்தான்!

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் கண்டெடுக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் முதலிய ஆசிய சக்திகள் எழுச்சி கண்டன. அப்பொழுது இந்தியர்களிடம் ஆட்சித்திறம் பற்றிய ஆழமான அறிவிருந்தது என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லும் வழியாகச் சாணக்கியரின் நூல் மாறியது. மாக்ஸ் வெப்பர் எனும் புகழ்பெற்ற சமூகவியல் அறிஞர் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் தன்னுடைய குரூரமான வழிமுறைகளில் நிக்கோலா மாக்கியவல்லியின் ‘தி பிரின்ஸ்’ நூலை பலமடங்கு மிஞ்சிவிட்டது என்று கருதுகிறார்.

பாட்ரிக் ஒலியேவெல்லி எனும் பேராசிரியர், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் தொடர்ந்து நாடு பிடிக்கும், தன்னுடைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்த எண்ணும் அரசனுக்கு வழிகாட்டுகிறது என்கிறார். பல்வேறு வலிமை மிகுந்த நாடுகள் நிறைந்த உலகத்தில் எப்படி ஒரு மன்னன் தீர்க்கமாக இயங்குவது என்பதற்கான வழிகாட்டுதலை சாணக்கியர் வெஸ்ட்பாலியா உடன்படிக்கை எனும் நவீன தேச அரசுகளை உருவாக்கிய நிகழ்வுக்கு முன்னரே கனவு கண்டார் என்று அயலுறவுத் துறை அதிகாரி சிவசங்கர் மேனன் குறிப்பிடுகிறார்.

இந்திய மனதில் துறவு என்கிற எண்ணம் எழும்பிக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் மன்னன் அதிகார வெறி கொண்டவனாகவும் இருக்கிறான். இவை இரண்டுக்கும் இடையேயான மோதல் ‘பாரம்பரியத்தின் உள்மோதல்’ என்று வர்ணிக்கப்படுகிறது. ஒரு மன்னன் அதிகாரத்தை விரும்பாதவன் போலத் தன்னைக் காட்டிக் கொண்டு., தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டே போகவேண்டும் என்று சாணக்கியர் இரண்டு ஒத்துவராத குணங்களை ஒன்று சேர்க்கும் கலையைச் சொல்லித்தருகிறார்.

சுதந்திரம், பாதுகாப்பு, வளம் ஆகியவற்றுக்கு இடையேயான கொடுக்கல், வாங்கலில் இறுதி இரண்டுக்கு சாணக்கியர் முக்கியத்துவம் தருகிறார். ஊழல் நடைபெறும் நாற்பது வழிகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். உளவு பார்க்கும் மன்னன் பறவைகள் வானில் சென்று மறைவதைப் போலச் சென்று மறையும் உளவாளிகளைச் சோதிக்க இன்னுமொரு உளவு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மன்னன் மாய மந்திர சக்திகள் கொண்டவன் என்று மக்களை நம்பவைக்க வேண்டும், மக்களை ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாத பொழுது திசைதிருப்ப வேண்டும் என்று வழிகாட்டுகிறார்.

கடுமையான தண்டனைகளைப் பரிந்துரைக்கவும் அவர் அஞ்சவில்லை. சந்திரகுப்தரின் காலத்தைச் சேர்ந்தவர் சாணக்கியர் என்று கர்ண பரம்பரைக் கதைகள் சொன்னாலும், சமீபத்திய ஆய்வுகள் இருவரின் காலமும் ஒத்துப்போகவில்லை என்று உறுதிப்படுத்துகின்றன. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் மட்டுமே வடமொழியில் இருந்து மதச்சார்பின்மை கொண்ட இலக்கியமாகப் பண்டைய இந்தியாவில் இருந்து  நம்மை வந்தடைந்து இருக்கிறது.

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் பிராமணத் தர்மத்தை தாண்டி பலமடங்கு கொடும் வழிகளைக் காட்டியதால் அதனை மாற்றி எழுதுவது பிற்காலத்தில் நடந்தது. பிராமணத் தர்மம், மத அறம், கடமைகள் ஆகியவற்றோடு ஒத்துப்போகும் வகையில் அந்நூல் மாற்றியமைக்கப்பட்டது என்று பாட்ரிக் ஒலியேவெல்லி முதலிய பல்வேறு  அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பாகிஸ்தானில் இந்திய மனதைப் புரிந்து கொள்ள ராணுவ அதிகாரிகளுக்கு அர்த்த சாஸ்திரம் பயிற்றுவிக்கப்படுகிறது. சாணக்கியர் என்கிற பெயரில் 37-ல் கல்கத்தாவின் மாடர்ன் ரீவியு இதழில் ஒருவர் நேருவின் அதிகார மமதை, ஜனநாயக பண்பற்ற செயல்களை, அவரின் ஆதிக்க மனோபாவத்தைத் தாக்கி எழுதினார். அந்தக் கட்டுரையின் ஆசிரியர் நேருவே தான்! ஒவ்வொரு அரசியல்வாதியின் மனதிலும் ஜனநாயகவாதி, அதிகார மமதை கொண்ட சர்வாதிகாரி ஆகியோரிடையே இன்றைக்கும் பரமபத ஆட்டம் நடக்கிறது.

மூலம்: சுனில் கில்னானி

சுருக்கமான தமிழில்: பூ.கொ.சரவணன்