அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமா தேசபக்தி?


தேசபக்தி அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம். ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் எழுப்பப்பட்ட தேச விரோத கோஷங்களுக்கு எதிரான கூச்சல்கள் இந்திய அரசியல்வாதிகள், தொலைக்காட்சி செய்தித்தொகுப்பாளர்களில் எண்ணற்ற அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்பதைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது. ஒரு தேசம் என்பது என்ன என்பதைக் குறித்து ஒற்றைப்படையான கருத்தாக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மற்ற கருத்துக்கள் எல்லாம் தேசவிரோதமானவை என்று எண்ணுவது சற்றும் அறிவற்ற, மோசமான சர்வாதிகார மனப்பான்மை ஆகும். JNU-வில் போராடும் மாணவர்கள் மக்பூல் பட், அப்சல் குரு முதலிய தூக்கிலிடப்பட்ட காஷ்மீரிகளைத் தியாகிகள் என்று சொன்னதோடு, இந்தியாவின் நீதிமுறை நிகழ்த்தும் நீதி பரிபாலனத்தை விமர்சித்தார்கள். சிலர் காஷ்மீருக்குச் சுயாட்சி வழங்க வேண்டும் என்றும் கோரினார்கள். சிலர் இந்தியாவைத் துண்டாக்க வேண்டும் என்றும் கோஷமிட்டார்கள்.

இதனால் என்ன? இந்த மாணவர்களின் கோஷங்களோடு நாம் முழுமையாக முரண்படலாம். தேசபக்தி கீதங்களை உச்சரிக்கும் அரசியல் சரித்தன்மை கொண்டவர்களாக என்றைக்கு மாணவர்கள் இருந்திருக்கிறார்கள்? எல்லாத் தாராளவாத சமூகங்களிலும் மாணவர்கள் எல்லா வகையான தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்துள்ளார்கள். அப்படி அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை எடுக்க அனுமதி தரவேண்டும். அதனால் தான் அவை தாராளவாத சமூகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சர்வாதிகார சமூகங்கள் வேறுவகையானவை. கம்யூனிச சீனா தியான்மென் சதுக்கத்தில் மாணவர்களைக் கொன்று குவித்தது, ஹோஸ்னி முபாரக் அரசு எகிப்தில் வன்முறையைத் தாஹிர் சதுக்கத்தில் கட்டவிழ்த்து விட்டது/ ஆனால், அமெரிக்க மாணவர்கள் வியாட்நாம் போரை எதிர்ப்பதில் முன்னணியில் நின்றார்கள். அரசாங்கம் அதைத் தேசபக்தி என்றோ முன்னிறுத்தியதோ அதை அவர்கள் முற்றாக நிராகரித்தார்கள். அவர்களின் கருத்துக்களை முற்றாகக் கண்டித்தவர்கள் கூடப் பொதுக்கருத்தோடு முரண்படும் அவர்களின் உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கவில்லை.


ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அரசாங்கத்துக்கு எப்பொழுதும் ஆதரவான போக்கை கொண்டது. ஆனால், 1933-இல் ஆக்ஸ்போர்ட் கூட்டமைப்பு ‘எந்தச் சூழலிலும் இந்தச் சபை மன்னருக்காகவோ, நாட்டுக்காகவோ போரிடாது’ என்கிற புகழ்பெற்ற தீர்மானத்தைக் காரசாரமாக விவாதித்தார்கள். அந்தத் தீர்மானம் 275-153 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த ‘ஆக்ஸ்போர்ட் உறுதிமொழியை’ மான்செஸ்டர், கிளாஸ்கோவ் மாணவர்களும் தங்களுடைய பல்கலையிலும் நிறைவேற்றி தங்களின் மகத்தான ஆதரவை வெளிப்படுத்தினார்கள். இந்தத் தீர்மானம் இங்கிலாந்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மாணவர்கள் அருவருப்பானவர்கள், கோழைகள், தேசவிரோதிகள், கம்யூனிச அனுதாபிகள் என்று கடுமையாகச் சாடப்பட்டார்கள். ஆனால், யாரும் தேசத்துரோக குற்றத்துக்காக மாணவர்களைக் கைது செய்யக் கனவிலும் எண்ணவில்லை. தேசத்துரோகம் என்பதைச் சர்வாதிகார மனப்பான்மையோடு நோக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். இதைவிட மோசமானது மீடியா நட்சத்திரங்கள் எப்படி இந்த மாணவர்கள் தேசத்தைப் பிளவுபடுத்த வேண்டும் என்று பேச இந்த மாணவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் என்று காட்டுக்கூச்சல் போடுகிறார்கள். சுதந்திரமான நாடு எப்படியிருக்கும் என உணராதவர்களாக இவர்கள் காட்டிக்கொள்கிறார்கள்.

ஸ்காட்டிஷ் தேசிய கட்சி பிரிட்டனில் இருந்து பிரிந்து சென்று தனி ஸ்காட்லாந்தை உருவாக்க விரும்புகிறது. அதற்காக அக்கட்சியின் தலைவர்கள் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்களா? இல்லை. அவர்களுக்குச் சமூகத்தில் மதிக்கத்தக்க இடம் தரப்பட்டிருக்கிறது. தங்களின் கோரிக்கையைப் பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. இன்னுமொரு வாய்ப்பு விரைவில் தரப்படலாம்.
வெல்ஷ் தேசியவாதிகளும் தனித்தேசம் கோருகிறார்கள். யாரும் அவர்களைச் சிறையில் அடைக்கவில்லை.

கனடாவில் பார்டி க்யூபெகொயிஸ் கட்சி க்யூபெக் மாகாணத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். ஸ்பெயினின் கட்டலோனியா மாகாணத்தில் வெகுகாலமாக வலிமைமிக்கப் பிரிவினைவாத சக்திகள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தலில் 47.8% வாக்குகளை வென்றார்கள். ஸ்பானிய அரசாங்கம் அவர்களின் விடுதலை கோரிக்கையைக் கடுமையாக நிராகரிக்கிறது என்றாலும் அவர்களைச் சிறையில் அடைக்கவில்லை. கார்சிகா பிரிவினைவாதிகளைப் பிரான்ஸ் கைது செய்யவில்லை. சுதந்திர சமூகங்கள் அமைதி வழியில் போராடும் பிரிவினைவாதிகளைச் சிறைப்படுத்துவதில்லை. இந்தியாவோ சிறையில் அடைக்கிறது. இது இந்தியா சுதந்திர சமூகமாக இருக்க விரும்புகிறதா என்கிற கேள்வியை எழுப்புகிறது. ஏன் இந்தியா சுதந்திர சமூகமாக இருக்கக்கூடாது?

ஸ்பெயின் அமைதி வழியில் போராடும் கட்டலானியர்களைப் பொறுத்துக்கொள்கிறது. அதேசமயம் வன்முறையால் தனிப் பாஸ்க் நாட்டை உருவாக்க முயலும் பிரிவினைவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறது, ஸ்காட்லாந்து தேசிய கட்சியை ஆதரிக்கும் பிரிட்டன் வன்முறையை நாடிய அயர்லாந்து குடியரசு படையைக் கடுமையாக அடக்கியது. வன்முறையைப் பயன்படுத்துகிறவர்கள், தூண்டி விடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளைச் சுதந்திர சமூகங்கள் எடுக்கின்றன. அதே சமயம், அமைதிவழியில் புரட்சிகரமான மாற்றத்தை, ஏன் பிரிவினையைக் கோருபவர்களுக்குச் சட்டரீதியான பாதுகாப்பைத் தருகின்றன.

படுகொலைகள் செய்ததற்காக மக்பூல் பட்டை அவர்கள் தூக்கில் போடலாம். வெறும் கோஷங்கள் எழுப்பியதற்காக ஒரு JNU மாணவரை சிறையில் அடைக்கக்கூடாது. இந்தியாவின் தேசத்துரோக சட்டம் பெருமளவில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு நாட்டுப்புற பாடகரை கைது செய்ய, அரசு காய்ச்சி எடுக்கும் கார்டூனிஸ்ட்களைக் கைது செய்ய, கூடங்குளத்தில் போராடும் போராளிகளைச் சிறைப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது. பேஸ்புக்கில் ஒரு பதிவை லைக் செய்தவர்களைக் கூட இந்தச் சட்டத்தைக் கொண்டு கைது செய்துள்ளார்கள்.

என்னைப்பொறுத்தவரை மேற்கூறிய அரசின் நடவடிக்கைகள் எல்லாம் தேசவிரோதமானவை. இதற்கு ஆள்பவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். அரசு எதைத் தேசவிரோதம் என வரையறுக்கிறதோ அதை நான் நிராகரிக்கிறேன்.

1971-ல் பல லட்சம் வங்கதேச மக்கள் பாகிஸ்தானிய ராணுவ வன்முறையால் இந்தியா நோக்கி வந்தார்கள். PIB மேற்கு வங்கத்தில் உள்ள அகதிகள் முகாமுக்கு எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களைப் பயணம் கூட்டிப்போனது/ நான் தேசவிரோத கேள்விகளை அப்பொழுது கேட்டதாக அதன் இயக்குனர் என்னுடைய பத்திரிக்கை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார்.

என்னுடைய ஆசிரியரை எது தேசவிரோத கேள்வி எனக்கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை. PIB ஆட்கள் எங்களைப் ‘பாகிஸ்தானிய ராணுவம் மோசமானதா’ ‘இந்தியாவில் அடைக்கலம் கிடைத்ததில் மகிழ்ச்சியா’ முதலிய கேள்விகளைக் கேட்க சொல்லி பாடம் எடுத்தார்கள். நான் இவ்வளவு அகதிகள் இங்கே வந்து சேர்ந்திருப்பது உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை பாதித்ததா, இந்து-முஸ்லீம் வேற்றுமைகள் அதிகமாகி உள்ளதா? அகதி முகாம்களை விட்டு கல்கத்தா நகரில் போய் இவர்கள் குடியேறுவார்ளா முதலிய கேள்விகளைத் தொடுத்தேன்.

இந்தக் கேள்விகள் என்னைத் தேசவிரோதியாக அடையாளப்படுத்தின. நான் வேலைபார்த்த தி டைம்ஸ்
இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கவில்லை. இரண்டு மாதங்கள் கழித்து அரசு பாகிஸ்தானுடன் போர் வரும் சூழல் உறுதியாக நிலவியதில் ‘யுத்த கால நிருபர்களுக்கு’ ஒரு [பயிற்சி பட்டறை நடத்தியது. அதற்குத் தி டைம்ஸ் இதழ் என்னைத் தேர்வு செய்தது. நான் நம்பகத்தன்மையற்ற தேசத்துரோகி என்று முத்திரை குத்தி
அரசு என்னுடைய பெயரை நிராகரித்தது.

அதிலிருந்து, தேசபக்தியை தங்களுக்கு வசதியாக வரையறுத்துவிட்டு அதனை எதிர்க்கும் மற்றவர்கள் மீது தேசவிரோதிகள் எனப்பாயும் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள் ஆகியோரைக் கண்டால் கொதித்துப்போய்ச் சாடுகிறேன். எது சுதந்திரமான சமூகம் என்று நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். எது சுதந்திரமான சமூகம் இல்லை என்றும் எனக்கு முற்றாகத் தெரியும். அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் மட்டும் இல்லை. அதுவே பல அயோக்கியர்களின் முதல் புகலிடம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s