இந்தியாவும், உலகமும் -1


இந்தியாவின் வெளியுறவுத் துறை கொள்கை குறித்து ஆக்ஸ்போர்ட் ஒரு தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான அறிவுஜீவியான ராஜாமோகன், தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவில் அங்கம் வகித்தவரான ஸ்ரீநாத் ராகவன், ஐ.நா. பல்கலையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் டேவிட் மலோன் ஆகியோர் இந்த நூலை தொகுத்திருக்கிறார்கள். 700 பக்கங்களில் 50 வெவ்வேறு கட்டுரைகளில் விரியும் இந்த நூல் இந்தியாவின் வெளியுறவுத் துறை கொள்கையைப் பல்வேறு தளங்களில் விரிவாகப் பேசுகிறது. இந்தத் தொகுப்பை மூன்று  பாகங்களில் காணலாம்.

இந்தியாவின் வெளியுறவுத் துறை கொள்கை வரலாறு, புவியியல், செயல்திறன் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா தன்னளவில் ஜனநாயகத்தை உறுதியாகப் பின்பற்றினாலும் அண்டை நாடுகளில் ஜனநாயகம் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாவதால் ஜனநாயகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெளியுறவுக் கொள்கைகளை அமைப்பதில்லை. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா அரசியல்ரீதியாக ஒன்று சேர்ந்ததோடு மலாகா முதல் ஏடன் வரை அதன் செல்வாக்குப் பரவியிருந்தது. எண்பதுகள் வரை இந்தியா பொருளாதரத்தில் பின் தங்கியிருந்ததோடு, சோவியத் ரஷ்யோவோடு நெருக்கமான உறவை பின்பற்றவும் செய்தது. பொருளாதாரத் தாராளமயமாக்கலுக்குப் பின்னர் இந்தியா அயலுறவுக் கொள்கையில் மிகுந்த நம்பிக்கையோடு செயல்பட ஆரம்பித்தது..
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஐந்து வகைகளில் வாசிக்கலாம். காலனிய ஆட்சிக்கு பிந்தைய இந்தியா தன்னுடைய இறையாண்மையை முன்னிறுத்தியது என்பது முதல் வகை.. காஷ்மீர் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு அடையாளம் என்பதாலும், இந்தியா காஷ்மீரோடு முழுமையடைகிறது என்கிற ஆழமான எண்ணத்தாலும் பாகிஸ்தான், இந்தியா இரண்டுக்கும் நடுவில் காஷ்மீர் பங்குபோடப்பட்டிருக்கிறது. சீனா காஷ்மீரின் அக்சாய் சின்னை 62 போரில் கைப்பற்றிக் கொண்டது. திபெத்தை சேர்ந்தவரை இந்தியாவில் போராட அனுமதிப்பது, தலாய்லாமாவுக்கு அடைக்கலம் ஆகியவற்றைச் சீனா தன்னுடைய உள்நாட்டுச் செயல்பாடுகளில் தலையிடுகிற ஒன்றாகவே காண்கிறது. அமெரிக்காவுடன் நேரடி மோதல் இல்லையென்றாலும் காஷ்மீர் சிக்கலில் பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமெரிக்கா செயல்பட்டதாக இந்தியா உணர்ந்தது.
இந்தியா அதிகாரப் போட்டியில் சிக்கிக்கொள்ளாமல் இரண்டு பசுக்களிடமும் பால் கொடுக்கும் கன்றாக நடந்து கொள்ளவே அணிசாராக் கொள்கையை உருவாக்கிக் கொண்டது. ஆனால், சீனா இந்தியா ஏதேனும் ஒரு பக்கம் சாய வேண்டும் என்கிற நிர்பந்தத்தைச் சீனப்போரின் மூலம் உண்டு செய்தது. இந்தியாவின் மக்கள்தொகை, பரப்பளவு, உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் பாகிஸ்தானை விட எட்டு மடங்கு பெரிதாக இருந்தாலும் பாகிஸ்தான் அணு ஆயுதம், மறைமுகப் போர், அமெரிக்காவுடன் கூட்டணி என்று பல்வேறு வகைகளில் நமக்கு ஈடுகொடுக்கிறது. அதனால் பாகிஸ்தான் நாம் சொல்வதைக் கேட்கும் நல்ல பிள்ளையாக இருப்பதில்லை.


இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயகம், சீனாவின் ஒற்றைக் கட்சி ஆட்சி, பாகிஸ்தானின் ராணுவம் ஆதிக்கம் செலுத்தும் ஆட்சி ஆகியவற்றுக்கு இடையே மோதல் நடப்பதாகவும், அது வெளியுறவுத் துறைக் கொள்கையைப் பாதிப்பதாகக் கருத்துபவர்கள் இருக்கிறார்கள். உள்நாட்டு அழுத்தத்தால் சீனாவுடனான எல்லைச் சிக்கலில் நேரு தீர்வை நோக்கி நகர முடியாமல் போனது. அயூப் கான், பூட்டோ ஆகியோரும் பாகிஸ்தானில் இதே மாதிரியான அழுத்தத்துக்கு உள்ளானார்கள். இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா தலையிடுகிறது என்கிற எண்ணம், அதன் பாகிஸ்தான், சீன ஆதரவு என்கிற கடந்த காலக் கொள்கை, இந்திய இடதுசாரிகள் முதலாளித்துவத்தின் மீது காட்டிய கடும் எதிர்ப்பு ஆகியன அமெரிக்காவோடு நெருங்காமல் தடுக்கும் உள்நாட்டு அரசியலை கட்டமைத்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s