இந்தியாவும், உலகமும் -3


தேசப்பாதுகாப்பு முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரை:

இந்தியாவின் தேசப்பாதுகாப்புக்குப் பாகிஸ்தான், சீனா மிகப்பெரிய சவாலாக உள்ளன. பாகிஸ்தானுடன் எண்ணற்ற போர்கள் நடைபெற்று இருந்தாலும் இரு நாடுகளும் அணு ஆயுதங்களைத் தற்போது கொண்டிருப்பதால் முழுப்போருக்கான வாய்ப்புகள் இல்லையென்று இரு தேசங்களும் உணர்ந்திருக்கின்றன. அதேசமயம், பாகிஸ்தான் மறைமுகப் போர்களில் ஈடுபட்டு இந்தியாவை வீழ்த்த எண்ணுகிறது. இருமுறை இந்தியாவைப் போரை நோக்கி பாகிஸ்தான் தூண்டியும் இந்தியா சாதுரியமாக அமைதியாக நடந்து கொண்டது. சீனா அக்சாய் சின்னை பிடித்துக் கொண்டதோடு, பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகள் செய்கிறது. திபெத் தலைவர் தலாய் லாமாவை இந்தியாவில் வைத்திருப்பது அதனை இன்னமும் உறுத்துகிறது. அதனோடு நில்லாமல், டப்சங் பள்ளத்தாக்கில் எல்லைகோட்டை தாண்டி 19 கிலோமீட்டர் அளவுக்கு அவர்களின் வீரர்கள் கேம்ப் அடித்துத் தங்கினார்கள். மூன்று வாரம் நடந்த தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே 2013-ல் அப்படைகள் விலகின. இந்தியா அதற்குப் பிறகு மலைப்பகுதியில் போரிட கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கொண்ட படையை உருவாக்க அனுமதி அளித்தது.

depsang

இந்திய முஜாகிதீன் முதலிய அமைப்புகள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு நிகழும் மோசமான நிகழ்வுகளைப் பயன்படுத்திக்கொண்டு வேரூன்ற பார்க்கிறார்கள். எனினும், இந்தியா ஒரு பக்கம் ஆயுதங்களாலும், இன்னொரு பக்கம் மக்களின் சிக்கல்களைக் கவனத்தில் கொண்டு செயல்படுவதன் மூலமும் எதிர்கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் சிக்கலில் கடுமையான தீவிரவாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் மூலமே இந்தியா அமைதியைக் கொண்டுவந்தது. காஷ்மீர் சிக்கல் இன்னமும் உறுத்தலான ஒன்றாக இருக்கிறது என்றாலும், காஷ்மீரில் கூட்டாட்சி முறை வருங்காலத்தில் பெருமளவில் அமைதியைக் கொண்டுவரும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார் சுமித் கங்குலி. அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆயுத இறக்குமதியில் பங்கு பெற்றாலும், ரஷ்யாவுடனும் இந்தியா தன்னுடைய பாதுகாப்புக்கான ஆயுத இறக்குமதியில் பெருமளவில் ஈடுபடுவதைத் தொடரவே செய்கிறது.

இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கையில் அதற்குப் பெட்ரோல், நிலக்கரி, இயற்கை எரிவாயு முதலிய எரிபொருள்கள் பெருமளவில் தேவைப்படுகிறது. இந்தியாவின் வளங்கள் பெரும்பாலும் காடுகளிலும், பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளிலும் இருப்பதால் அவற்றை முழுமையாக வெட்டியெடுக்க முடியாத நிலை உள்ளது. உலகம் முழுக்க அதனால் தனக்கான வாய்ப்புகளை இந்தியா கவனத்தில் கொள்கிறது. ஆப்ரிக்கா, ஆர்டிக், தெற்கு சீனக்கடல் என்று இந்த எல்லைகள் விரிகின்றன. விதேசி இந்திய எண்ணெய் கழகம் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. என்றாலும், சீனாவை முந்திக் கொண்டு செல்வது எனபது பெரும்பாலும் சவாலான ஒன்றாகவே இருக்கின்றது.

எண்ணெய் பெற ஒப்பந்தங்களை இராக், நைஜீரியா, சவூதி, வெனிசுலா உடனும், இயற்கை எரிவாயுவுக்குக் கத்தார், ஆஸ்திரேலியாவுடனும். மொசாம்பிக், டான்சானியா, துர்க்மேனிஸ்தான் ஆகியவற்றுடன் பைப் வழி எரிவாயுவுக்கும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆர்டிக் கவுன்சிலில் சீனாவுடன் இந்தியாவும் பார்வையாளர் இடத்தைப் பெற்றுள்ளது. அங்கே எண்ணற்ற வளங்கள் கடலுக்கு அடியில் உள்ளது என்பதே இவற்றின் கவனத்துக்கு முக்கியக் காரணம். இந்தியா வளங்களைப் பெற வேகமாக இயங்கினாலும்,வெவ்வேறு நாடுகளின் சிக்கல்களில் புதைந்து விடாமலும், நிலையான வளர்ச்சியை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இயங்கவேண்டியது அவசியமாகிறது.

ஜோசப் நை ‘யார் அதிகப் பலமிகுந்தவர் என்பது வெற்றியை தீர்மானிப்பதில்லை, யார் நம்பக்கூடிய கதையைச் சொல்லும் திறனைப் பெற்றிருக்கிறாரோ அவரே வெல்கிறார்.’ என்கிறார். இந்தியா பணம், ஆயுதங்கள் மூலம் பிற நாடுகளைத் தன் பேச்சை கேட்க வைப்பது ஒரு புறமென்றால், மென் ஆற்றல் எனப்படும் வகையில் செயல்படுவதும் முக்கியமாகிறது. புத்த மதத்தின் வேர்களை உலகுக்குக் கொண்டு செல்வதன் மூலம் வர்த்தகத்தை அதிகப்படுத்துவது, யோகாவை முன்னிறுத்துவதும் உதவுகிறது. PUBLIC DIPLOMACY DIVISION என்கிற தனிப்பிரிவு துவங்கப்பட்டு அது இந்தியாவின் கலாசாரம், பண்பாடு பற்றி 162 நாடுகளில் 17 மொழிகளில் தகவல்களைக் கொண்டு சேர்க்கிறது. பல்வேறு ஊடகங்களின் மூலமும் தன்னுடைய செயல்பாட்டை விரிவுபடுத்துகிறது. மேலும், டெலிமெடிசின் முதலிய முன்னெடுப்புகளும் உதவுகின்றன. பிரவசிய பாரதிய திவாஸ் நிகழ்வுகளும் அயல்நாட்டு வாழ் இந்தியர்களை இந்தியாவுடன் நெருக்கமாக ஆக்குகிறது. இன்னமும் இந்தியா போகவேண்டிய தூரம் நிச்சயம் நெடிது.

அரசியல் எந்தளவுக்கு இந்திய அயலுறவுக் கொள்கையைப் பாதிக்கிறது என்பது ஆச்சரியமான ஒரு தலைப்பாகும். பெருமளவில் இந்திய அரசியல் அதனைப் பாதிக்கவில்லை என்பதே உண்மை. வங்கதேச உருவாக்கத்துக்கு முன்னர் நிகழ்ந்த போர், கார்கில் போர் முதலியவற்றைத் தவிர்த்து தேசிய அரசியலில் தாக்கம் செலுத்தியவை என்று சுட்ட பெரிதாக எதுவுமில்லை. திமுக, அதிமுகவின் அழுத்தங்கள் ஈழத் தமிழர் சிக்கலை மத்திய அரசு வெவ்வேறு வகைகளில் கையாள செய்திருக்கிறது. அதே சமயம், பாகிஸ்தான், சீனா ஆகியன இந்தியாவின் காலடியில் தடம் பதிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதால் இலங்கையைப் பெருமளவில் மிரட்டுகிற சூழல் இந்தியாவிற்குச் சாத்தியமில்லை. திரிணமுல் காங்கிரஸ் நில மறுவரையறை ஒப்பந்தத்தை இந்தியா வந்கதேசத்தோடு மேற்கொள்ளாமல் வெகுகாலம் தடுத்தது. தற்போது தீஸ்தா நீர் உடன்படிக்கையை எதிர்க்கிறது. அசாமில் வங்கதேசத்து மக்கள் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியது ஒரு  தேர்தலில் எதிரொலித்தது. இவை போன்ற ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்து அயலுறவுக் கொள்கை 900 அதிகாரிகளைக் கொண்ட அயலுறவு பிரிவால் முடிவு செய்யப்படுகின்றது.

இந்திய நாடாளுமன்றம் நேரடியாக இந்தியாவின் வெளியுறவுத் துறை கொள்கையில் கட்டுபாட்டைச் செலுத்த முடியாது என்றாலும் அது அவ்வப்பொழுது தன்னுடைய பலத்தைக் காட்டியே வந்துள்ளது. காஷ்மீர் சிக்கலில்,. சீனச் சிக்கலில் எந்த வகையான சமரசத்துக்கோ இடம் கொடுக்கவே முடியாத அளவுக்கு அவையின் அழுத்தம் இருந்து வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா இருபுறமும் சாயாமல் இந்தியா நேரு காலத்தில் நிற்க ஜனசங்கம், கம்யூனிஸ்ட்கட்சிகளின் விமர்சனங்கள் தடுத்தன. பாகிஸ்தானுடன் பெருபாரி பகுதியை தருவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதோடு நில்லாமல் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறவேண்டும் என்று அறிவுறுத்தியது. அது நிறைவேற ஐம்பது ஆண்டுகாலம் ஆகிற்று.    இன்னமும் பல்வேறு தலைப்புகளில் நூல் விரிகிறது. ஆர்வமுள்ளவர்கள் வாங்கி வாசிக்கவும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s