NEET உருவாக்கி இருக்கும் நெடிய கவலைகளும்,கேள்விகளும்


NEET தேர்வு அனைவருக்கும் கட்டாயம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு சமூக நீதிக்கே எதிரானது எனும் வாதங்கள் எழுவதையும் காணமுடிகிறது. இது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் விஷயம் மேலும் சிக்கலானது.

இந்தியாவில் உயர்கல்வியை நிர்வகிக்கும் அமைப்புகள் பெரும் சீர்கேடுகள், ஊழல் ஆகியவை மலிந்து காணப்படுகின்றன. எக்கச்சக்கமாக பணம் வாங்கிக்கொண்டு மருத்துவ இடங்கள் தனியார் கல்லூரிகளில் மிக குறைவான மதிப்பெண் எடுத்த பணக்கார வீட்டுப்பிள்ளைகளுக்கு தரப்படுவது நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. இதை முறைப்படுத்த வேண்டிய MCI லட்சணம் மோசமானது. தனியார் கல்லூரிகள் ஒழுங்கான கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் கல்லா கட்டுகின்றன.

இதை சீர்செய்யும் நோக்கத்தோடு NEET தேர்வு கொண்டுவர இரண்டாண்டுகளுக்கு முன்னர் முயற்சி எடுக்கப்பட்டது. அப்பொழுது நூற்றைம்பது கோடி வரை லஞ்சம் தரப்பட்டு தீர்ப்பு இந்த தேர்வுக்கு எதிராக தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஓய்வு பெறுவதால் வேகவேகமாக அல்டாமஸ் கபீர் தீர்ப்பெழுதினார் என இப்பொழுது வழக்கு மறு ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு NEET இரண்டு கட்டங்களில் இந்தியா முழுவதும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் தனியார் கல்லூரிகள் விரும்பியபடி பணம் வாங்கிக்கொண்டு சேர்க்க முடியாது. மாநில அரசுகளும் நுழைவுத்தேர்வு, +2மதிப்பெண்களை கொண்டு மருத்துவ இடங்களை நிரப்ப முடியாது. NEET தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெறும் மாணவரே தகுதியுடையவர் ஆவார்.

இது அநீதி, அடக்குமுறை என முழங்கினாலும் முழுக்க சமூக நீதிக்கு எதிரானது இல்லை இது. 85% இடங்களை அந்தந்த மாநில மாணவர்களைக்கொண்டே மாநில அரசுகள் நிரப்பிக்கொள்ளும். அதேபோல இட ஒதுக்கீடும் தொடரும். ஆனால் NEET தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறவேண்டும். அவர்களின் மதிப்பெண் வரிசையில் இடம் தரப்படும்.

இப்போது தான் சில சிக்கலான கேள்விகள். ஒரு வாரத்துக்குள் AIPMT தேர்வு என்கிற சூழலில் வெவ்வேறு மாநிலங்கள் நுழைவுத்தேர்வு என அறிவித்திருந்த சூழலில் இந்த வருடமே இதை அமல்படுத்தும் காரணம் என்ன? கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் பொழுது மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதைப் போல இது ஆகிறது. CBSE வினாத்தாளை தயார் செய்கிறது என்றால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் உள்ளே நுழையும் வாய்ப்பு அடைபட்டு போகிறது.
AIIMS தேர்வின் வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். மாநில அரசுகளின் வினாத்தாள்கள் மாநில மொழி, ஆங்கிலம் இரண்டிலும் இருக்கும். தமிழ்நாடு அரசு கட்டி நடத்தும் ஒரு கல்லூரியில் சேர விரும்பும் மாணவனுக்கு தமிழில் வினாத்தாள் தரப்படாது. மத்திய அரசு தேர்வுகளுக்கு இரண்டு அதிகாரப்பூர்வ மொழியில் வினாத்தாள்கள் தருவார்கள் என்றால் அந்தந்த மாநில அரசின் ஆளுகைக்குட்பட்ட கல்லூரியில் இணைய மாநில மொழியிலும் வினாத்தாள் வேண்டுமல்லவா?

கார்ப்பரேட் தனியார்களின் பல்லைப்பிடுங்குவதாக சொல்கிறார்கள். ஏன் ஆந்திர மாணவர்கள் சென்னை ஐஐடியை நிறைக்கிறார்கள்? அரை லட்சம் கோடி அளவுக்கு வருமானம் தரும் நுழைவுத்தேர்வு பயிற்சி மாபியாக்கள் முக்கிய காரணம் என்கிறார் பொருளாதார மேதை ஹரீஷ் தாமோதரன். நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்கள் கல்லா கட்டப்போகின்றன. ஆக பணக்கார மாணவர்களுக்கும், CBSE முறையில் படித்த மாணவர்களுக்கும் மறைமுகமாக இம்முறை உதவும்.

தமிழகத்தின் கடைக்கோடி ஏழைமாணவன் கிராமத்தில் இருந்து மருத்துவப்படிப்பை எட்டுவது பெருங்கனவு. இப்போது அது மேலும் சாத்தியம் இல்லாமல் போகும்.தமிழ்நாட்டில் CBSE முறையில் படித்த மாணவர்கள் சுலபமாக இந்த தேர்வுகளை கடக்க முடியும். மாநில அரசுக்கு கல்விக்கு நிதியை ஒழுங்காக ஒதுக்காத மத்திய அரசு மாநில அரசுகளின் பாடத்திட்டங்கள் இப்படிப்பட்ட தேர்வால் செம்மையடையும் என நம்பலாம். இன்னொருவழி  இருக்கிறது. அறிவியல், கணிதம்  ஆகிய  பாடங்களில்  இரண்டு  தரப்பும்  ஒரே  பாடத்தை  பின்பற்றலாம்.  நடக்குமா என்பது மருத்துவ கனவுகளோடு இருப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைப்போலவே மில்லியன் டாலர் கேள்வி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s