நேரு: அழித்த தலைவரா? காத்த கடவுளா?


contemplative-nehru.jpg
Photo Credit: The Wire Photo Division

நேரு தொடர்ந்து இணையவெளியில் கடுமையாகத் தாக்கப்படுகிறார். அவரைப் பற்றிப் பொய்யான பரப்புரைகள், வதந்திகள் தொடர்ந்து பரப்பபடுகின்றன. நேருவை வில்லனாக்குவது ஒரு தனித்தொழில் போலச் செயல்படுவதை டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் அமுல்யா கோபாலகிருஷ்ணன் அம்பலப்படுத்தினார். ராஜஸ்தானில் இந்தியாவின் முதல் பிரதமரின் பெயர் அரசுப்பள்ளி பாடங்களை விட்டு சத்தமே இல்லாமல் நீக்கப்பட்டது. நேருவுக்கு எதிரான விமர்சனங்களை ஆதாரப்பூர்வமான தரவுகள், ஆய்வுகள், அடிக்குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் வைக்காமல் பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் இருட்டடிப்புச் செய்வது எளிதாக இருக்கிறது.

நேரு இல்லாமல் போயிருந்தால் இந்தியா என்ன ஆகியிருக்கும்? இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் ஒருவரை மற்ற மகத்தான தலைவர்களில் இருந்து பிரித்துப் பேசுவது கடினமான ஒன்றாகும். ஆனால், குறிப்பிட்ட சில சிக்கல்களில் ஒரு தலைவரின் ஆளுமை தனிப்பட்ட பங்காற்றியிருக்கும். நேரு இல்லாமல் போயிருந்தால் என்னாகி இருக்கும் என யோசித்தால் எட்டுக் கருத்துக்கள் தோன்றுகின்றன.

ப்ருசல்ஸ் நகரில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் காங்கிரஸ் மாநாட்டில் நேரு 1927-ல் பங்குகொண்டார். அதன்மூலம் நம்முடைய விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு சர்வதேச பார்வையை வழங்கினார். அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பில் இருந்த பரந்துபட்ட நோக்கு இந்திய விடுதலைக்கு ஒரு நவீன முகத்தைத் தந்தது.

1928-ல் காந்தி இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வேண்டும் என்று கோரிய பொழுது, நேரு முழு விடுதலையே வேண்டும் என்று உறுதியாக நின்றார். இதையொட்டியே இந்திய அரசுச்சட்டம் 1935-ஐ கடுமையாக விமர்சித்தார். பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்புச் சட்டக் குழு இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்தக் கருத்துகள்தான் குறிக்கோள் தீர்மானங்களை டிசம்பர் 13, 1946 அன்று அரசமைப்புச் சட்டக் குழுவின் முன்னால் நேரு கொண்டுவந்த பொழுது இந்தியாவை ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட டொமினியன் நாடாக இல்லாமல், சுதந்திரம், சுயாட்சி கொண்ட குடியரசாக அறிவிக்க வைத்தது.

மூன்றாவது தான் நேருவின் மகத்தான சாதனை. மே 1946-ல் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் மாகாணங்களான பம்பாய், மெட்ராஸ், ஐக்கிய மாகாணங்கள் ஆகிய பல்வேறு மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் படிப்படியாக அளிக்கும் திட்டத்தை அனுப்பி வைத்தார். அதில் இந்த மாகணங்கள் கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்ட பின்பே அவற்றுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று சொல்லியிருந்தார். அதாவது ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவுக்குப் பிறகு பல்வேறு இந்தியாக்களை உருவாக்கும் திட்டம் அது. இந்தத் திட்டத்தை அதே வருடம் மே மாதத்தில் பிரிட்டிஷ் கேபினெட் ஏற்றுக்கொண்டது. இந்தியத் தலைவர்களை சந்தித்து இந்தத் திட்டத்தை சொல்வதற்கு முன்பு சிம்லாவில் நேருவை விருந்தினர் மாளிகையில் சந்தித்தார் மவுண்ட்பேட்டன். இதைக் கேட்டதும் நேரு அதிர்ச்சி அடைந்தார், எந்தக் கணத்திலும் இப்படிப்பட்ட இந்தியாவைத் துண்டாடும் திட்டத்துக்குக் காங்கிரஸ் நிச்சயம் ஒப்பாது என்று ஒரு நெடிய மறுப்புக் குறிப்பை அவர் வைஸ்ராய்க்கு எழுதினார். இந்தக் குறிப்பில் அவர் பலூசிஸ்தான் சுயநிர்ணயம் செய்து கொள்வது உட்பட்ட பல்வேறு பரிந்துரைகளைக் கடுமையாகத் தாக்கினார். மவுண்ட்பேட்டன் தன்னுடைய அறிவிப்பைத் தள்ளிவைத்தார். வி.பி. மேனன் இரண்டு தேசங்களாகப் பிரிட்டிஷ் இந்தியா பிரிவினை செய்யப்படும் என்கிற திட்டத்தைக் கொண்டுவந்தார். மவுண்ட்பேட்டனின் ஆபத்தான, இந்தியாவின் ஒற்றுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை நேரு எப்படித் தடுத்தார் என்பதை விரிவாக ‘Transfer of Power’ நூலில் வி.பி. மேனன் பதிவு செய்திருக்கிறார்.

நான்காவது, இந்தியாவின் பிரதமராகச் செயலாற்றிக்கொண்டு இருந்ததால் அவரால் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் பெரிய அளவில் பங்கெடுக்க முடியவில்லை. அதேசமயம், மத்திய அரசமைப்புச் சட்டக் குழு, மத்திய அதிகாரங்கள் குழு ஆகியவற்றின் தலைவராக மாநில, மத்திய அரசுகளிடையே உள்ளே அதிகாரப் பங்கீட்டை அவர் கவனமாகத் திட்டமிட்டது இன்றுவரை பன்மைத்துவம் மிக்க தேசத்தை வெற்றிகரமாக, ஒன்றாகக் கட்டிக் காப்பாற்றியிருக்கிறது. அவருடைய அரசியல் பார்வை, தத்துவம் ஆகியவை ஜனநாயகத்தின் மீது உச்சபட்ச நம்பிக்கையைக் கொண்டிருந்தது. மதச்சார்பின்மை என்கிற வார்த்தை சட்டத்தில் இடம்பெறத் தேவையே படாத அளவிற்கு அரசமைப்புச் சட்டத்தில் குடிமகனைப் பிரதானமாக நிறுத்தி ஜாதி, இனம், மதம் முதலியவை உண்டாக்கிய தடைகள், சிக்கல்களைக் கடக்க அவர் உதவினார்.

நேரு ஜம்மு, காஷ்மீர் விஷயத்தை அணுகிய விதத்தைப் பலரும் தீவிரமாக விமர்சிக்கிறார்கள். எனினும், நேருவுக்கும், ஷேக் அப்துல்லாவுக்கும் இருந்த உறவு குறைந்தபட்சம் 1952 வரை இந்திய யூனியனில் காஷ்மீர் இருப்பதை உறுதி செய்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆறாவதாக, நேரு வலியுறுத்திய பொருளாதார முறை தனியார், அரசுத்துறை இரண்டையும் இணைத்துக் கொண்டதாக இருந்தது. இந்த மாதிரியை இந்தியாவின் தொழிலதிபர்கள் பம்பாய் திட்டத்தில் வலியுறுத்தினார்கள். அவரின் சோசியலிச சாய்வை பலரும் இன்று சாடுகிறார்கள். அவரின் காலத்தில் ஐம்பதுகளில் தீவிரவாத கம்யூனிசம் பலமான எதிர்சக்தியாக இருந்தது. அவர் சோசியலிச பாதையைத் தேர்வு செய்து, கம்யூனிச இயக்கம் உடைந்து, அதன் கவர்ச்சி குறைவதற்கு வழிகோலினார்.

ஏழாவதாக, நேரு நான்கு இந்து சிவில் சட்டங்களை நிறைவேற்றினார். அவை மிகவும் முற்போக்கானதாக, இந்து மதத்தில் மேற்கொள்ளப்பட்ட உச்சபட்ச சீர்திருத்தமாக இருந்தன. அது அரசமைப்புச் சட்டக்குழுவிலேயே கொண்டு வரப்பட்டது. பழமைவாதிகள், இந்து தேசியவாதிகளால் அது கடுமையாக எதிர்க்கப்பட்டது. இந்து மதத்தை நிராகரித்த டாக்டர்.அம்பேத்கரே இந்தச் சட்டங்களின் பிதாமகர். இந்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதை நேரு உறுதி செய்தார். இந்தச் சட்டம் இந்து மதத்தின் மிக மோசமான ஒடுக்குமுறை அம்சங்களை நீக்கியது. இதனை ஆர்.எஸ்.எஸ்., அதன் இணை அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இந்தச் சட்டம் பலதார திருமணத்தைத் தடை செய்தது, கலப்புத் திருமணத்துக்கு வழிவகுத்தது. விவாகரத்து வழிமுறைகளை எளிமைப்படுத்தியது, பெண் குழந்தைகளுக்கு ஆண் வாரிசுக்கு இணையாகக் குடும்பச் சொத்தில் உரிமை வழங்கியது.

எட்டாவதாக, நேருவின் தனிப்பட்ட முத்திரை இந்தியாவின் அணுசக்தி, விண்வெளித் திட்டங்களில் வெளிப்படுகிறது. 1939-ல் இந்திய அணுசக்தி அறிவியலின் தந்தை ஹோமி பாபா, நேரு இருவரும் பிரிட்டனுக்குச் செல்லும் கப்பல் பயணத்தில் சந்தித்தார்கள். அது நெடிய நீடித்த உறவாக மாறியது. அரசமைப்புச் சட்டசபையில் அணு சக்தி சட்டத்தின் மூலம் பிரதமர் தலைவராகப் பொறுப்பேற்கும் அணு சக்தி கமிஷனுக்கு அவர் உருவம் கொடுத்தார்.

நேருவிடம் எண்ணற்ற குறைகளும் உண்டு. காஷ்மீர் சிக்கலை ஐ.நா.வுக்குக் கொண்டு சென்றது, சீனாவுடனான எல்லைச் சிக்கலை ஒழுங்காகக் கையாளாமல் போனது ஆகியவை அதில் அடங்கும். நேரு இல்லாமல் வேறொரு முடிவு ஏற்பட்டிருக்கும். ஆனால், அது என்ன என்று உறுதியாக சொல்வது கடினம். சீனாவுடனான சிக்கலில் ராணுவப் போர் நிச்சயம் தேர்வாக இருக்கவில்லை. நேரு தளபதி கரியப்பாவிடம் திபெத்தில் இந்தியா தலையிட வாய்ப்பு உண்டா என்று கேட்டார். அதற்கு எழுத்துப்பூர்வமாகக் கரியப்பா இந்திய ராணுவத்தின் பலவீனம், சாதகமில்லாத நிலப்பகுதி ஆகியவற்றால் அது சாத்தியமில்லை என்று பதில் அளித்தார். இவை அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பதிவாகி இருக்கிறது.

நேரு ராணுவத்தை அணுகிய விதமும் மோசமான ஒன்று. அவரின் அமைதி சார்ந்த மனச்சாய்வு, அவரின் கனவுலக சிந்தனைகள் ஆகியவை ராணுவத்தலைவராக அவரைத் தோல்வியடைய வைத்தன. இவ்வாறு அரசின் மிக முக்கியமான அமைப்பு  செயல்திறம் இழக்க அவர் காரணமானார். அதற்குத் தேவையான கவனிப்பை அவர் தரவில்லை. மோசமான ஆளுமையைக் கொண்ட கிருஷ்ண மேனனிடம் ராணுவத்தைக் கொடுக்கிற இறுதித்தவறை செய்தார்.

இவையெல்லாம் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியா என்கிற உயர்ந்து நிற்கும் தேசத்தின் மீதான நேருவின் முத்திரையை அழிக்க முயல்வது முடியாத ஒன்று. ஏனெனில், அவர் இந்திய ஆன்மாவின் பிரிக்க முடியாத அங்கம். நேருவை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போனால், நீங்கள் இந்தியாவின் பெருமையைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம்.

மனோஜ் ஜோஷி observer research foundation அமைப்பில் மூத்த பேராசிரியர்

கட்டுரை மூலம்: http://thewire.in/2016/05/24/the-bjp-wants-to-erase-nehru-lets-see-what-india-would-have-been-without-him-37866/
தமிழில்: பூ.கொ.சரவணன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s