இறைவி என்றொரு மனுஷி!


இறைவி திரைப்படம் கலவையான உணர்வுகளை உண்டு செய்தது. முழுக்கக் கொண்டாடி விடவும் முடியாமல்,. முழுக்க வெறுக்கவும் முடியாமல் ஒரு இடைப்பட்ட உணர்வையே இப்படம் தருகிறது. இப்படத்தைப் பெண்ணியப் பார்வையில் எல்லாம் சிலர் அணுகி இருந்தார்கள். இந்தப் படம் அந்த வகையில் எல்லாம் சேர்க்கப்படவேண்டிய அவசியமில்லை. வன்முறைகளால் ஆன ஆண்களின் பொறுமையும், சகிப்பும் அற்ற உலகின் இறைவிகள் பற்றிய கதை இது.

பெண்களின் உலகை படம் கடத்தி கொண்டுவரவில்லை. ஆணின் பார்வையில், ஆண்களின் வன்முறையில். வெம்மையில், அதிகாரத்தில் மவுனித்த பெண்களே படத்தில் தொடர்ந்து கடக்கிறார்கள். அதை இறுதி அரை மணிநேரத்தில் ஈடுகட்ட இயக்குனர் முயல்கிறார். இந்தப் படத்தின் ஆகச்சிறந்த புள்ளியாக அஞ்சலி, விஜய் சேதுபதியோடு உரையாற்றித் தன்னுடைய அகவாழ்வை வெளிப்படுத்தும் கணங்களைச் சொல்வேன். படத்தின் உச்சக்காட்சி என்னளவில் நாடகத்தன்மை மிகுந்ததாகப் பட்டது.

இப்படத்தின் மிகப்பெரிய உறுத்தல் இழுவையான, இலக்கற்று பயணிக்கும் முதல் பாதியின் பல்வேறு காட்சிகள். பாடல்கள் தேவையற்றும், பொருந்தாமலும்  கடுப்பேற்றுகின்றன. எனினும் இப்படம் ஆண்களின் மனசாட்சியை உலுக்கிப் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை. மழை என்கிற குறியீடு படமெங்கும் வருகிறது. பெண்களுக்கான விடுதலை ஆண்களின் அடைக்கப்பட்ட உலகத்தினில் இல்லை. மழை நாடி, நனைந்து விடுவோம் என்று அஞ்சாமல் சுதந்திரம் நோக்கி கைகள் விரித்து நனைய பெண்களை அழைக்கிறது இப்படம். அதே சமயம், சிற்சில புனித பிம்பங்களை ஆண்களின் ஈகோவை காயப்படுத்தாமல் உடைக்க முயன்று உள்ளார் இயக்குனர்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் உரையாடலுக்கான சாத்தியங்கள் இல்லாத ஒரு உலகமே இங்கே விரிகிறது. இதில் வரும் ஆண்கள் வன்முறையை, பொய்மையை. உணர்வுக் கொந்தளிப்பை தங்களின் செயல்களின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இது பொதுமைப்படுத்தல் என்று கருதி விமர்சிக்காமல் இது பெண்களின் குரலை, மனவெளியை முற்றும் துறக்கிற, மறக்கிற ஆண்களைக் காட்சிப்படுத்துகிறது என்றே எண்ணுகிறேன்.

இந்தப் படம் முடிந்த பொழுது உங்களால் காயப்படுத்தப்பட்ட, ஆண் என்கிற உங்கள் திமிரின் கொடு வினைகளில் வாழ்க்கையின் மகிழ்வை  தொலைத்த  எதோ ஒரு பெண்ணின் முகமாவது வந்து போகும். அதில் ஒருவரிடமாவது மன்னிப்பு கேட்கிற குறைந்தபட்ச உறுத்தலையாவது இந்தப் படம் தந்திருக்கும் என்பது உறுதி. நான் ஒரு காயப்படுத்திய உறவிடம் மன்னிப்புக் கேட்டேன் 🙂 இறைவி மனுஷி என உணர வைக்கக் குழம்பி முயல்கிறது இப்படம்!