UPSC நேர்முகத்தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று எளிய ஆங்கிலத்தில் புரிய வைக்கும் முயற்சி இந்த உரை.
UPSC நேர்முகத்தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று எளிய ஆங்கிலத்தில் புரிய வைக்கும் முயற்சி இந்த உரை.
இந்த பேச்சு கடவுள், மதம், ஜாதி, தாய்மை, ஆண்மை, நதிகள், விவசாயம், காதல், கற்பு, நடிகர்கள் என்று பலவற்றுக்குத் தரப்படும் புனிதங்களை கேள்விக்கு ஆட்படுத்துகிறது. MEME-களை பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த உரை எளிய மொழியில் அமைந்திருக்கிறது. செவிமடுங்கள்!
என்னுடைய இதழியல் கனவுகளின் நாயகனாக இருந்த பாலகும்மி சாய்நாத் இன்றோடு பத்திரிக்கை துறையில் நுழைந்து முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வகையான பத்திரிக்கையாளர்கள் இங்கே இருக்கிறார்கள்: ஒரு வகை உண்மையை உரக்கச் சொல்பவர்கள், இன்னொரு வகை ஸ்டெனோகிராபர்கள் என்பார் சாய்நாத்.
“நீரோ தன்னுடைய ரோம் நகரம் பற்றி எரிந்த பின்பு பலரை விருந்துக்கு அழைத்தான். பலரும் அந்தக் கொண்டாட்டங்களில் குற்ற உணர்ச்சியில்லாமல் கலந்து கொண்டார்கள். அங்கே இருளைப் போக்க எரிபொருள் போதாமல் அடிமைகளை எரிய விட்டு கொண்டாடினார்கள். என்னுடைய சீற்றம் நீரோவின் மீதல்ல, அந்த விருந்தினர்கள் மீது தான். இந்தியாவில் யார் நீரோவின் விருந்தினர்கள் என்று தெரிகிறதா?” என்று அந்தக் குரல் ஒலிக்கையில் மனசாட்சி உலுக்கப்படும்.
இந்தியாவில் மிக வேகமாக வளர்வது எந்தத் துறை தெரியுமா? சமத்துவமின்மை என அவர் அதிர வைக்கையில் சமூகத்தின் அவலம் முகத்தில் அறையும். “ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் ஒரிசாவில் முப்பது மொழிகளைக் கடந்தேன். எப்படிப்பட்ட நாடு இந்தியா?” என அவர் கேட்கையில் மால்கள், ஆரணங்குகள், கேளிக்கைகள் , கொண்டாட்டம் என்பதைத் தாண்டியும் இதழியல் உண்டு என்பது புலப்படும்.
வருடத்தில் முக்கால்வாசி நாட்களைக் கிராமங்களில் மக்களோடு மக்களாக, முகவரி, அலைபேசி தொலைத்து அலையும் அவரின் கால்கள் லட்சக்கணக்கான மைல்களைக் கடந்து கொண்டே இருக்கின்றன. மானுடம் ததும்பும் அந்த எழுத்தில் தொனிக்கும் கோபம் மிகையானது என்று தோன்றினால் மன்னிக்க. அடித்தட்டு மக்களின் அவலங்களைக் கண்டுகொள்ளத் தவறிய சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப முயலும் ஒரு சில முயற்சிகளில் அது ஒன்று.
அவரின் ‘Everybody loves a Good Drought’ இந்தியாவின் கிராமங்களின் உண்மையான ஆவணம். அதில் முழுக்க, முழுக்க உண்மையின் நிழல் மட்டுமே நம்மைத் தொடரும். நம்பிக்கைகளையும் இணைத்தே தரும் அந்தப் புத்தகத்தில் கிராமங்களை மாடமாளிகைகளில் உட்கார்ந்து கொண்டு புரிந்து கொள்ள முயல்வது எத்தனை தவறானது என்று எளிமையாகப் புலப்படும்.
பசுவின் பாலை விற்காத பழங்குடியினருக்கு அதிகப் பால் தரும் பசு வகையைத் தருவது. பீடி, பனைத் தொழிலாளர்களின் அவல நிலை, மறக்கப்பட்ட விடுதலை போராளிகளின் வாழ்க்கை, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களைக் கடந்துவிடும் கிராம அடக்குமுறை, ஒரு மிதிவண்டி பெண்களுக்குத் தரும் மகத்தான விடுதலை, ஏன் பஞ்சத்தை அதிகார மையங்கள் விரும்புகின்றன எனப் பலவற்றை அடுக்கிச் செல்லும் நூல் அது. எப்படிக் கிராமங்களிலிருந்து ரிப்போர்டிங் செய்ய வேண்டும் என்பதற்கான பாலபாடம் அந்தப் புத்தகம்.
கல்லூரிக்காலத்தில் ஜே.என்.யூவில் போராட்டங்களில் கழித்த அவர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை இதழியல் பணிக்காக விட்டு விட்டு வந்தார். அவருக்கும் ஒரு காதல் அத்தியாயம் உண்டு என்றாலும் இருவருமே களப்பணியில், மக்களுக்காக இயங்குவதில் இன்றளவும் பெருமிதம் கொள்பவர்கள் என்பதே நெகிழ்வானது.
அவர் போகிற இடங்களில் இளைஞர் குழாம் கூடி கேட்டு அற ரீதியான கோபத்தைத் தனக்குள் வார்த்துக் கொள்கிறது. கடுமையான குரலில் மட்டுமே அவர் பேசுவார் என்று எதிர்பார்த்தால் சட்டென்று நகைச்சுவை இயல்பாக எட்டிப்பார்த்து நிலைமையின் தீவிரத்தை இன்னமும் துரிதமாகக் கடத்தும். தரவுகள் மூலமும், பெரு ஊடகங்கள் சமைக்கும் விவசாயத்தைப் பற்றிய பளபளப்பான தோற்றத்தை நேரடி களப்பணியின் மூலம் அம்பலப்படுத்துவதிலும் தன்னுடைய வாழ்வை கழிக்கும் சாய்நாத் அவர்களின் இப்பொழுதைய முன்னெடுப்பு PARI.
இந்தியாவை 95 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு ஊரகப்பகுதியின் குரலையும் கேட்க வைக்கும், ஆவணப்படுத்தும் மகத்தான முயற்சி இது. முழுக்க முழுக்க மக்களின் பங்களிப்பில் பெரு முதலாளிகள், அரசு ஆகியோரின் உதவியை நாடாமல் நடக்கும் இந்தத் தளத்திற்கு யார் வேண்டுமானாலும் தங்களின் பங்களிப்பை தர முடியும். அது முகங்களைப் படம்பிடிப்பதாக இருக்கலாம், உங்களின் கிராமத்தை ஆவணப்படுத்துவதாக இருக்கலாம், பொருள் ரீதியான உதவியாக இருக்கலாம்.
முன்னாள் ஜனாதிபதியின் பேரன் அவர் என்பதோ, முன்னணி தேசிய இதழின் ஊரக ஆசிரியராக இருந்தார் என்பதோ, மகசேசே விருது பெற்றவர் என்பதோ அவருக்குப் பெருமை தந்திருக்குமா என்றால் தெரியாது. கிராமங்களின் ஆன்மாவை, அம்மக்களின் குரலை ரத்தமும், சதையுமாகக் கொண்டு வருகிற பொழுது அவருக்கு உண்டாகும் கிளர்ச்சி தான் அவரைச் செலுத்துகிறது என உறுதியாகச் சொல்ல முடியும். அவர் நெடுங்காலம் தொடர்ந்து இயங்க வேண்டும்.. எழுத்துலக அறம் என்பதைத் தன்னுடைய வாழ்வின் மூலம் கற்பித்துக் கொண்டே இருக்கும் சாய்நாத் அவர்களுக்கு வாழ்த்துகள்.
(என்னுடைய தனிப்பட்ட தொடர்பு, அவர் எனக்கு எழுதிய கடிதங்கள், எப்பொழுதும் காட்டும் நெருக்கம் ஆகியவை கட்டுரையின் மையத்தைக் குலைக்கக்கூடும் என அஞ்சி அவற்றைத் தவிர்த்து இருக்கிறேன். )