இயக்குனர் மகேந்திரனும், சினிமாவும்


சினிமாவும் நானும்’ என்கிற இயக்குனர் மகேந்திரன் அவர்களின் நூலை வாசித்து முடித்தேன். விகடனில் மாணவ நிருபராக இருந்த பொழுது அவரை நேர்முகம் செய்ய ஆசைப்பட்டேன். அலைபேசியில் அவரை அழைத்துப் பேசிய கணத்தில் அந்தக் குரலில் இருந்த தணிவும், நெருக்கமும் இந்த நூலிலும் பரவியிருக்கிறது. இத்தனை நேர்மையும், கரிசனமும் ததும்ப எழுத முடியுமா என வியக்கிற இடங்கள் நூலில் ஏராளம்.

ஏழு மாதத்தில் குறைப்பிரசவ குழந்தையாகப் பிறந்தார் மகேந்திரன். குறைப்பிரசவ குழந்தைகள் பிறந்தால் பிழைக்காது எனக்கருதி கொண்டுபோய்ப் புதைப்பதே வழக்கம். அதையே மகேந்திரனின் அப்பாயியும் செய்யச் சொல்லியிருக்கிறார். மகேந்திரனை தன்னுடைய அடிவயிற்றின் கதகதப்பில் மூன்று மாதம் தன்னுடைய பிள்ளையைப் போலக் காத்த மருத்துவர் சாரா அம்மாவால் தான் நமக்கு அவர் கிடைத்தார்.

இளம்வயதில் நோஞ்சானாக இருந்த மகேந்திரன், ‘வாத்துக்கால்’ என்று நையாண்டி செய்யப்பட்டார். கல்லூரியில் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என்று இருட்டிய பின்பு ஆடுகளத்தில் ஓடி தலைசிறந்த தடகள வீரராகப் பெயர் எடுத்தார். எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்திருந்தார். அவரை அப்படியே மகேந்திரனின் கல்லூரிக்கு அழைத்து வந்தார்கள்.

எம்.ஜி.ஆர் தான் பேசமாட்டேன் என்றும், மாணவர்களைப் பார்க்க வருகிறேன் என்று நிபந்தனையோடு வந்தார். மகேந்திரனுக்கு முன்னால் பேசிய மாணவர்கள் ரசிகர்களால் கூச்சலிட்டு இறக்கப்பட்டார்கள். அடுத்து மகேந்திரனின் முறை. அன்றைக்குச் சில நாட்களுக்கு முன்னர்த் தான் கல்லூரியில் வரம்புமீறி பழகியதற்காகக் காதல் ஜோடி மீது முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதைக் குறிப்பிட்டு, ‘சினிமாவில் டூயட் பாடிக்கொண்டு ஊரே பார்க்கிற மாதிரி காதல் செய்கிற எம்ஜிஆரை மட்டும்தான் யாரும் கண்டுகொள்வதில்லை…’ என்கிற ரீதியில் பேச ஆரம்பிக்கக் கைதட்டல் பறந்தது. ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட மகேந்திரன் தமிழ் திரைப்பட உலகின் நாடகப்போக்கை கிழித்துத் தொங்கவிட்டார். நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் எம்ஜிஆரையும் ரசிகர் ஆக்கி பேசி முடித்தார் அவர். அது பிற்காலத்தில் அவரைப் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை எம்ஜிஆர் வழங்கும் அளவுக்குத் தாக்கம் செலுத்திய பேச்சாக இருந்தது.

 

Image may contain: 1 person

சினிமா மோகத்தில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களை நோக்கி மகேந்திரன் தோழமை நிறைந்த குரலில் மீட்க பலவற்றைப் பேசுகிறார். தன்னுடைய வீட்டுக்கதவை யாரேனும் தட்டும் பொழுது மகேந்திரனே திறப்பார். அதைக்கண்டு பலரும் அதிர்ச்சி அடைவார்கள். “என் வீட்டு கதவை நான் திறக்காமல் யார் திறக்க வேண்டும்?” எனக்கேட்கிற மகேந்திரன், ‘சினிமா ஜோடனைகளின் மீது எழுப்பப்பட்டு இருக்கிறது. சினிமா உலகம் தேவலோகமும் இல்லை, இங்கே நடிப்பவர்கள் தேவதூதர்களும் இல்லை…நம் நாட்டில் விவசாயி, அன்றாடங்காய்ச்சி எனப்பலரும் பட்டினி கிடக்கிறார்கள். அது அவர்களின் வாழ்க்கை. ஆனால், நடிகன் பட்டினி கிடந்த கதையைச் சொல்லி பின்னர் முன்னேறியதை பேசுகையில் தேவையில்லாத கவர்ச்சி ஏற்படுகிறது. பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்று சினிமாவில் ஜெயிக்க வருகிறீர்கள். விலைமதிப்பற்ற இளமை, ஆரோக்கியம் ஆகியவற்றை அடமானம் வைத்து ஜெயிக்க முடியாது. பட்டினியில் கவர்ச்சி கொள்ளாமல், அவர்களின் வெற்றிக்கான அடிப்படைகள், காரணங்கள் நாடி பயணியுங்கள்’ என்கிறார்.

திறமை, தன்னம்பிக்கை ததும்ப இதில் தான் இயங்குவேன் என்று இலக்கு வைத்துக்கொண்டு செயல்பட இளைஞர்களை அறிவுறுத்துகிறார். அதேசமயம், வாழ்க்கையில் பாதுகாப்பான வேலையில் ஈடுபட்டுக்கொண்டே தன்னுடைய கதைகளை வாழ்க்கையில் கண்டெடுத்து செதுக்க இயலும் என்று நம்பிக்கை தருகிறார். உலகத் திரைப்படங்களைப் பார்த்து பிரதி எடுக்காமல், அவற்றின் மூலம் கற்றலின் பரப்பை விரிவுபடுத்த வழிகாட்டுகிறார்.

‘சினிமாவில் பிரபலமாவதும், பெரிய ஆளாவதும் பெரிய விஷயமே. அப்படி ஆகமுடியாது போனால் ஒன்றும் குறைபாடு இல்லை. சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது, பெருமையுடையது. பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை. வீணாகாத வாழ்க்கை வாழ்ந்தால் போதும்.’ என்று அறிவுறுத்துகிறார்.

Image may contain: 3 people

தமிழ் சினிமாவில் பெண்களை டூயட் பாட மட்டுமே பயன்படுத்துவதைக் கவர்ச்சி என்பதைவிட அவர்களைச் சிறுமைப்படுத்தும் காரியம் என்கிறார். பெண்கள் மோசமாகத் திரையில் காட்டுவதைக் கண்டு மோசமான படம் என்று பொருமும் பெண்கள் கூட, ‘திரையில் நடிக்கும் பெண்கள் நம்மைப் போன்றவர்கள் தானே. அவர்களை இப்படிப் படத்தில் அலங்கோலமாகக் காட்டுகின்றார்களே!’ என்று யோசிப்பதில்லை எனப் பதிகிறார். பாடல் காட்சிகள் வருந்தும்படி உள்ளன. ‘இருப்பதைத் தானே காட்டுகிறோம்.’ என்பவர்களை நோக்கி காரமாக, ‘நமது வீடுகளில் படுக்கை அறைகளுக்கும், குளியல் அறைகளுக்கும் கதவுகள் எதற்கு? திறந்தே கிடக்கட்டுமே…உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும்?’ எனச் சொல்ல முடியுமா?’ என வினவுகிறார்.

உமா சந்திரனின் ‘முள்ளும்,மலரும்’ எனும் ஜனரஞ்சக நாவலை முழுமையாகப் படிக்காமல் தன்னுடைய மனப்போக்குக்கு ஏற்றவாறு அதை முள்ளும் மலரும் எனப் படமாக்கினார் மகேந்திரன். முள்ளும் மலரும் எதிரெதிர் பதமாகப் பயன்படுத்தப்படவில்லை. காளி எனும் முள் போன்ற கதாபாத்திரமும் மலரும் என்கிற பொருளிலேயே ‘முள்ளும், மலரும்’ எனும் தலைப்புத் தரப்பட்டது.

படத்தின் இறுதிக்காட்சியிலும், ‘உங்களை எனக்குப் பிடிக்கலை’ என்று சரத்பாபுவிடம் ரஜினி சொல்வதாக வரும் காட்சியில் ‘எப்படி இறுதிக்காட்சியில் மாறாமல் இருப்பார்?’ என்று சரத்பாபு கோபித்துக் கொண்டு நடிக்க மறுத்தார். காட்சிகளின் மூலம் படம் சொன்ன விதத்தைப் பார்த்துவிட்டு, ‘பாவி மண்ணள்ளி என் தலையில போட்டுட்டியே’ என்று தயாரிப்பாளர் வேணு செட்டியார் கதறியிருக்கிறார். ‘செந்தாழம் பூவில்’ பாட்டின் ஆரம்பகாட்சியை எடுக்கப் பணம் தர மறுத்தார் அவர். கமலின் பேருதவியால் படம் திரைக்கு வந்தது. மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தில் பின்னணி இசையில் பெரிய அளவில் முதல்முறையாக இளையராஜா மிரட்டினார் என்கிறார் மகேந்திரன்.

‘சிற்றன்னை’ எனும் புதுமைப்பித்தனின் கதையை உள்வாங்கி உதிரிப் பூக்கள் திரைப்படமாக எடுக்க முனைந்தார் மகேந்திரன். இறந்த பொழுது போடும் உதிரிப் பூக்கள் தலைப்பா என்று விமர்சித்தனர். தலைவிரி கோலமாக, பொட்டு அழிந்த நிலையில் நாயகி காட்சியளிக்கும் போஸ்டரை ஓட்டியதையும் கிண்டல் செய்தார்கள். புதுமைப்பித்தனை காசாக்கி விட்டார் என்கிற சர்ச்சையும் எழுந்தது. அனைத்தையும் தாண்டி ஓடியது. ரஷ்ய அரசு படத்தின் தரத்தை கேள்விப்பட்டுத் தானே வாங்கி ரஷ்யாவில் மொழிபெயர்த்து மக்களுக்குப் போட்டுக்காட்டியது.

கன்னடத்தில் ராசியில்லாத நடிகை எனச் சொல்லப்பட்ட அஸ்வினியை தன்னுடைய படத்தில் தைரியமாகப் போட்ட மகேந்திரன் சொல்கிறார், ‘படத்தின் கதையும், திரைக்கதைக்கான ட்ரீட்மென்ட்டும் தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். இவை அல்ல.’ பூட்டாத பூட்டுக்கள் படத்தில் தேவையான நடிகர்கள் கிடைக்காமல் போனது, கைகொடுக்கும் கை படத்தில் விருப்பத்துக்கு மாறாக வைக்கப்பட்ட உச்சபட்சக் காட்சி படத்தின் தோல்விக்கு வழிவகுத்தது என்று எழுதினாலும் இந்தப் படங்களின் தோல்விக்குத் தானே காரணம் என்கிறார் மகேந்திரன்.

மகேந்திரன் சட்டம் படிக்கச் சென்னை வந்தார். ஏழு மாதத்துக்கு மேல் அத்தை அனுப்ப பணமில்லை என்று சொன்னதும் திமுகச் சார்பு இன முழக்கம் இதழில் திரை விமர்சனம் எழுத அமர்ந்தார். அப்பொழுது எம்ஜிஆர் அழகப்பா கல்லூரியில் மகேந்திரன் பேசிய பேச்சை நினைவுபடுத்தி அவரைத் திரையுலகுக்குள் அழைத்து வந்தார். என்றாலும், சீக்கிரமே இதழியல் பக்கம் சென்றார் மகேந்திரன். துக்ளக் இதழில் புலனாய்வு இதழியலில் பின்னினார். கிளைவ் விடுதியில் காவல்துறை நடத்திய அத்துமீறல் கோவையில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு, சிதம்பரத்தில் உதயகுமார் என்கிற மாணவனின் மரணத்துக்கு அடிகோலிய காவல்துறை செயல்கள் என்று திமுக ஆட்சியின் பல்வேறு தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார் மகேந்திரன்.

அலுவலகத்துக்குச் சீக்கிரம்பொ வந்துவிடும்து சோ அரைமணிநேரம் தாமதமாக வந்தார். அவரைக் காண வந்த செந்தாமரை, எஸ்.ஏ.கண்ணன் மகேந்திரனை ஏற்கனவே அறிந்ததால் அவரிடம் நாடகம் கேட்டார்கள். அப்பொழுது படித்த டிட்பிட்ஸ் இதழின் தாக்கத்தில் சொன்ன கதை, விரிந்து விருட்சமாகி சிவாஜி நடிக்கும் தங்கப் பதக்கம் படமானது. சௌத்ரி என்கிற வடநாட்டு பெயரை என் சிவாஜிக்கு வைத்தார் என்று யாருமே கேட்கவில்லை.

எம்ஜிஆரின் பசியாற்றும் தன்மை, மகேந்திரனின் மகள் குணமாக மொட்டையடித்துக் கொண்ட சோவின் அன்பு, கமலின் உதவியால் இயக்குனர் ஆனது என்று பலவற்றை மகேந்திரன் பதிகிறார். சிவாஜி மிகைநடிப்பை விடுத்து வீரபாண்டியன் படத்து வசனத்தைப் பேசிக் காண்பித்து அது எடுபடாது எனப் புரிய வைத்ததைப் பதிவு செய்கிறார். தங்கப் பதக்கம் படத்தில் தான் சொன்னபடியே வசனம் குறைத்து, உணர்வால் நெகிழ வைத்த நடிகர் திலகத்தை நினைவுகூர்கிறார். குள்ளமான உருவம் கொண்ட சிவாஜி எப்படி உயரமாகத் தோன்றுகிறார் என்கிற ஐயத்தை அவரிடமே கேட்டார். ‘நான் ஹீல்ஸ் செருப்பு போடுறதில்லை. நான் பின்னங்காலை அழுத்தி உயரமாகக் காட்டிக்கலை. மனதார உணர்ந்து, வேடத்தில் கலந்து பேசுவது கதாபாத்திரத்தில் உங்களை லயிக்க வைக்கிறது. அதனால் உயரமாகத் தெரிகிறேன்.’ என்றாராம்.

சிவாஜி எத்தனையோ வேடங்களில் அர்ப்பணிப்பை செலுத்தி நடித்தார். பல்வேறு ஒப்பனைகளை அவர் மேற்கொண்டார். ஆனால், அதை அவர் பெரிதாகப் பேசியதில்லை. இன்றைய நடிகர்களோ மொட்டை போட்டேன், எடை குறைத்தேன் என்று அவற்றைப் பெரிதாகப் பேசுகிறார்கள். நடிப்புக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் மையகவலையாக இருக்க வேண்டும் என்கிறார் மகேந்திரன்.

சினிமா என்றால் டூயட், சண்டை என்பதைத் தாண்டி காட்சி, நடிப்பு என மாறவேண்டும் என்கிறார். பெயருக்குப் பின்னால் பட்டங்கள் போட்டுக் கொள்வதை, ‘ஆஸ்கார் வாங்கின சத்யஜித் ரே எந்தப் பட்டத்தையும் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளவில்லை. நீங்களே மாறி மாறி டார்ச் லைட் அடிச்சுக்காதிங்க.’ என்று கடிகிறார்.

Image may contain: 2 people

தமிழ் நாயகிகள் பரங்கிமலை ஜோதி பெண்களைப் போலத் திரையில் உடல் வனப்பை காட்டி போகப் பொருளாக மாற்றப்படுவதைக் கவலையோடு குறிப்பிடுகிறார். பணம் சம்பாதிக்கக் கன்னக்கோல் வைப்பது, திருடன் ஆவது, கள்ளப்பணம் அடிப்பது என்று ஆண்கள் இறங்குகிறார்கள். பெண்களுக்குச் சந்தையில் மதிப்பு குறைவான காலமே இருப்பதால் உடலை காட்டி பொருள் ஈட்ட வைக்கப்படும் நிலையைக் கவனப்படுத்துகிறார்,

சினிமாவுக்கு விருப்பமில்லாமல் வந்த மகேந்திரன் இப்படி எழுதுகிறார் : ‘ஒரே சமயத்தில் பலரைப்பார்த்துப் பேசிக்கொண்டே கைவிரல்களைக் கண்களாகப் பாவித்து அரிவாள்மனையில் காய்கறிகளைத் துண்டுபோட்டு, எதோ ஒரு அனுமானத்தில் சமையல் பண்ணும் தாய்மார்களைப் போலத்தான் என்னுடைய போக்கும்.’ என்றுவிட்டு மேலே சொன்ன எல்லாவற்றையும் அடுக்குகிறார். கட்டாயச் சமையல் என்றாலும் சுவைக்கவே செய்கிறது.
சினிமாவும், நானும்
இயக்குனர் மகேந்திரன்
மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் வெளியீடு

புகைப்படங்கள் நன்றி: இயக்குனர் மகேந்திரனின் முகநூல் பக்கம்

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்!


பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்… தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது: 

இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி தரும் அளவாக 3.2 வருடங்கள் என்கிற அளவிலேயே இருக்கும். இது, ஆப்ரிக்கத் தேசமான மொசாம்பிக்கின் மோசமான கல்விநிலையோடு போட்டியிடும் நாடாகக் காட்சியளிக்கும். தனிநபர் வருமானத்தை, விலைவாசி ஏற்றத்தை கணக்கில்கொண்டு கணக்கிட்டால்… இந்த இந்தியப் பெண்கள் நாட்டின் வருமானம், ஐவரி கோஸ்ட், பப்புவா நியூ கினியா முதலிய நாடுகளுக்கு இடையே தள்ளாடும். கடந்த 15வருடங்களில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு பெருகியும் பெண்களின் நிலை இவ்வளவு அவலத்துக்கு உரியதாக இருக்கிறது.

இந்தியப் பெண்களின் அளப்பரிய ஆற்றலை இந்த அளவுக்கு அடக்கி ஒடுக்காத நாடுகளின் எடுத்துக்காட்டுக்கு எங்கேயோ வெளிநாட்டைத் தேடவேண்டியதில்லை. வடக்கில் உள்ள மாநிலங்களைவிடத் தெற்கில் உள்ள மாநிலங்களில்… ஐ.நா சபையின் மனிதவளக் குறியீடு, பெண்களுக்கான அன்றாடச் சுதந்திரம் ஆகியவை மேம்பட்டே உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள சில மாநிலங்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதைப்போலவே பெண்களின் கல்வியறிவு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் வடக்கைவிடத் தெற்கு வெகுவாக மேம்பட்டிருப்பதைக் காணமுடியும். (வடக்கில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 36 சதவிகிதம், தெற்கில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம்.) இத்தகைய முக்கியமான பொருளாதார, சமூக வேறுபாடுகளுக்குக் காரணமாக, மையமாக அமைவது என ‘வடக்கு – தெற்கு வேறுபாடு’ என நாம் கருதலாம். இப்படிப்பட்ட வியப்பைத் தரும் வேறுபாட்டுக்குப் பின்னால்… ஆரம்பப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத பெரியார் ஈ.வெ.ரா-வின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கிறது.

பெரியார், இந்தியா முழுக்கப் பார்ப்பன எதிர்ப்புச் செயல்பாட்டாளராக, பகுத்தறிவாளராக, கேட்டார் பிணிக்கும் தகைமை கொண்ட சொற்பொழிவாளராக அறியப்பட்டார். காந்தியின் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்த பெரியார், பின்னர் வாழ்நாள் முழுக்கக் காந்தியை எதிர்ப்பவராக மாறினார். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத, பிம்பங்களை, மூடநம்பிக்கைகளை விடாமல் தகர்ப்பவராக அவர் இயங்கினார். 1920-களில் பெரியார் திராவிடச் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவரின் தொண்டர்கள் ஈ.வெ.ரா-வை, ‘பெரியார்’ என அழைத்தனர். மகத்தான மனிதர் எனப் பொருள் தரும் அந்தப் பட்டம், ‘மகத்தான ஆத்மா’ எனப் பொருள் தரும், ‘மகாத்மா’ எனும் காந்தியின் பட்டத்தைத் தாக்கும் நோக்கத்தோடு, ஈ.வெ.ரா-வுக்கு வழங்கி வந்தது. எப்போதும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றாலும், நவீன தமிழ் அரசியலில் தன்னுடைய ஆழமான முத்திரையைப் பெரியார் பதித்திருக்கிறார். அவரின் இயக்கத்தை அடியொற்றி வந்த கட்சிகளே தமிழகத்தை அரை நூற்றாண்டு காலமாக ஆள்கின்றன. தேசிய அளவில், தமிழ் மொழியைத் தூக்கிப் பிடித்து, இந்தி திணிப்பை எதிர்த்த அவரின் அரசியலின் நீட்சியாக விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் மொழிப்பன்மையைக் காக்கும் சட்டங்கள் அமைந்தன. சாதி குறித்த அவரின் பார்வை, இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் இடஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. தன்னுடைய சமகால அரசியல் தலைவர்களில் இருந்து வேறுபட்டு, பெண் விடுதலைக்கான குரலை ஆணாதிக்கத்தின் எந்தச் சுவடும் இல்லாமல்… அவர், கம்பீரமாக எழுப்பினார். பெண்களின் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் இந்தியக் குடும்பங்களின் ஆணாதிக்கப் போக்கைக் கடுமையாக அவர் சாடினார்.

பெரியார், ஆண்களின் கால்களுக்குக் கீழே கிடந்து தன்னையே தியாகம் செய்யும் பெண்களைக் கற்புக்கரசிகளாகக் கொண்டாடும் வடமொழிக் காப்பியங்களின் முட்டாள்தனத்தைச் சாடினார். பெண் கல்வி, காதல் திருமணங்கள், திருமண உறவு பொருந்தி வராவிட்டால் விவாகரத்து, பெண்களின் சொத்துரிமை எனப் பலவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண் தன்னுடைய அக வாழ்க்கை, குழந்தை பெறுதல் ஆகியவற்றில் சுயமாக இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘ஆண்மை அழியவேண்டும்’ என முழங்கிய கட்டுரையில், இப்படி எழுதினார்: ‘எங்காவது, பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா; எங்காவது, பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால்… இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால், ஏதாவது ஒரு சமயம்… மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்’.

பெரியார் இயங்கிய பகுதியின் கலாசாரப் பின்புலம், வடக்கைவிட மேம்பட்டதாகப் பெண்கள் சார்ந்து இருந்தது. எண்ணற்ற வீர மங்கைகள், சக்திமிகுந்த பெண் தெய்வங்கள், குறைந்த இனப்பெருக்க அளவு, சில சமூகங்களில் நிலவிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கலாசாரம் என வடக்கைவிடச் சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவியது. இவை வடக்கும், தெற்குமான வேறுபாட்டில் முக்கியப் பங்காற்றின எனலாம். என்றாலும், பெரியார் என்கிற முரட்டுத்தனம் மிக்கச் சிலை உடைப்பாளரை, குத்திக் கிழிக்கும் நாவன்மை கொண்டவரை, தகிக்கும் அறிவு கொண்டவரைப் பற்றி மென்மேலும் வாசிக்கையில், என் மனதில் ஒரு கேள்வி சூழ்கிறது. இந்தியாவின் பிற பகுதிகளில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் எழுந்திருந்தால்… அதே நாட்டில் பெண்களின் நிலைமை இன்னமும் மேம்பட்டதாக இருந்திருக்குமே என்கிற ஆதங்கமே அது.

‘கடவுள் இல்லை… கடவுள் இல்லை…
கடவுள் இல்லவே இல்லை!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்…
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்…
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!’

– என்கிற வரிகளோடு தன்னுடைய சுயமரியாதை கூட்டங்களைத் தொடங்குவதைப் பெரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரியார் கருஞ்சட்டையில், அடங்காத வெண்தாடியோடு, தூய வெண் மண்டை சுரப்போடு காட்சியளிக்கும் காணொளியைக் காண்கிறேன். அதில், அவருக்கு அருகில்… ஒரு சிறிய நாய் அமர்ந்திருக்கிறது. பிராமணர்கள், நாயை தூய்மையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். அவர்களை விரட்டுவதற்காக… பெரியார், நாய் ஒன்றை அருகில் வைத்திருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. பெரியார் எல்லையில்லாத ஆற்றலைப் பல தளங்களில் கொண்டவராகத் திகழ்ந்தார் என்றாலும், அவர் விளங்கிக்கொள்ள முடியாத, குழப்பும் மொழியில் மக்களிடம் உரையாடியவர் இல்லை. எவையெல்லாம் பகுத்தறிவுக்கு எதிரானது என அவர் நம்பிய அனைத்தையும் அவர் கடுமையாகச் சாடினார். சாதி, மதம் என எதுவும் அவரின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

பெரியார், காந்திக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்துப் பிறந்தார். அவர், ஆடை உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவை மாவட்டத்தின் ஈரோட்டில் வளர்ந்தார். அவரின் சாதி… விவசாயிகள், வியாபாரிகள் நிரம்பிய இடைநிலை சாதியாகும். செல்வவளம் மிகுந்த வியாபாரியான அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்த பெரியார்…. நல்ல வீடு, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலைக்காரர்கள் என்று செழிப்பான சூழலில் வளர்ந்ததால், இளம்வயதில் பெரிதாக அவமானங்களை எதிர்கொள்ளவில்லை. என்றாலும், அவர் சற்றே புரட்சிகர மனப்பான்மை கொண்டவராக அப்போதே திகழ்ந்தார்.

தனக்கு வடமொழி சொல்லித்தர அப்பாவால் நியமிக்கப்பட்ட சாதுக்கள், பிராமணக் குருக்கள் ஆகியோரை அவர் கேள்விகளால் துளைத்து எடுப்பார். பெரியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வீட்டுக்கு வருவதையே அவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். அவர்களின் போதனைகள் பெரியாரை ஈர்க்கவில்லை. எனினும், ஓர் இந்துவாகப் புண்ணியத்தலமாகக் கருதப்பட்ட காசிக்கு அவர் யாத்திரை போனார். 30 வயதை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்த பெரியாருக்கு தெளிவையும், திறப்பையும் தரும் காசியின் நிகழ்வுகள் அமைந்தன. அங்கு நடந்தவை குறித்து அவர் அடிக்கடி எழுதவும், பேசவும் செய்தார். தன்னுடைய தந்தை, பிராமணர்களுக்கு என்று நடத்திய பிரமாண்ட விருந்தை எதிர்த்ததால் ஏற்பட்ட பிணக்கில்… அவர் காசிக்குப் போனார். பணம் பிடுங்கும் காசியின் புரோகிதர்களின் போக்கும், பிராமணர் அல்லாதவர் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பும் அவரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கின. பெரியாரின் சாதியின் காரணமாகக் காசியின் எந்த மடத்திலும் அவருக்கு ஒரு வாய்ச் சோறுகூடக் கிடைக்கவில்லை. பிதிர்க்கடனுக்கு இடப்பட்ட உணவு இலைகளை வழித்துத் தின்னும் கொடிய நிலைக்கு அவர் காசியில் ஆளானார்.

அந்த அனுபவம், பரவலாக நம்பப்படுவதற்கு மாறாக… உடனே பெரியாரை மாற்றிவிடவில்லை. பிராமணர்கள் மீது தீப்பொறிபோல ஒரு தனிப்பட்ட கோபத்தை, அது பெரியாரின் மனதில் விதைத்தது. தென்னிந்தியா குறித்துச் சிறப்பான ஆய்வுகளை மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் பேராசிரியரான டேவிட் வாஷ்ப்ரூக் ஒன்றை கவனப்படுத்துகிறார். 1880-களில் இருந்தே சென்னையின் ஆளுமைகள்… இந்து மத நம்பிக்கைகளை நவீனம், அறிவியல் பார்வையோடு இணைக்க முடியுமா என்று தொடர்ந்து விவாதித்தனர். அன்னிபெசன்ட்டின் தியாசபிகல் இயக்கம், அதற்கான வாய்ப்பை வழங்கியது; கிறிஸ்தவ மிஷனரிக்களின் மதமாற்ற முயற்சிகளைத் தர்க்கரீதியாக அது எதிர்கொண்டது; பிராமணிய இந்து மதத்துக்கு அறிவியல் விளக்கத்தை அந்த இயக்கம் தந்தது; இது, தெற்கின் ஆதிக்க சாதி ஆட்களுக்குக் கடவுள் காட்டிய வழியாகத் தோன்றியது; தங்களுடைய சாதி, மத நம்பிக்கைகளை நவீனப்போர்வையில் மறைத்துக்கொள்ள வசதியான வாய்ப்பாக அன்னிபெசன்டின் இயக்கம் அமைந்தது. ஆதிக்கச் சாதியைச் சேராத பெரியாருக்குக் காப்பாற்றிக்கொள்ள எந்தச் சாதிப் பெருமையும் இல்லை. ஆகவே, முன்முடிவுகள் இல்லாமல் பகுத்தறிவோடு இயங்கினார். ‘எனக்குக் கடவுளோடு எந்தத் தகராறும் இல்லை. அவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை எனப் பெரியார், எள்ளல் ததும்பப் பேசுவார்’ என்கிறார் தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்று ஆசிரியரான ஆ.இரா.வேங்கடாசலபதி. பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை தற்போது சலபதி எழுதிக்கொண்டிருக்கிறார்.

பெரியார் தொடர்ந்து பகுத்தறிவோடு இயங்குவதற்கு அவரின் பொருளாதாரச் சூழலும் உதவியது. மகாவீரர், புத்தர் போலப் பெரியாரும் பிராமணியத்தைக் கடுமையாக எதிர்த்தார். அவர்களைப்போலப் பெரியாரும் செல்வவளம் மிகுந்த குடும்பத்தில் இருந்தே எழுந்தார். பெரியாரும் புத்தர், மகாவீரரைப்போல மேல் சாதி அடுக்கில் இருந்து எழுந்து மக்களைப் பிளவுபடுத்தும் இந்தியாவின் பழைமையான சாதி அமைப்பைச் சாடினார். பெரியாரைப்போலப் பிராமணர்களை, அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் சாடியிருந்தால் ஆதிக்கச் சாதியினர் கொன்றிருப்பார்கள்.

1920 – 1930-களில் பெரியார் தெருக்களில் இறங்கி, எதிர்க்குரல் எழுப்பும் தலைவராக இருக்கவில்லை; காசியில் இருந்து திரும்பியதும் விடுதலைப் போராட்ட அலையில் அவர் ஈர்க்கப்படவும் இல்லை. மாறாக, திருமணம் செய்து குடும்பஸ்தரான பெரியார், கோவைப் பகுதியில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக, தன்னுடைய குடும்பத் தொழிலை… தன்னுடைய தொழில் திறமையால் மாற்றிக் காட்டினார். நிர்வாகத் திறமைக்குப் பெயர் பெற்றிருந்த பெரியார், 1918-ல் ஈரோடு மாநகராட்சியின் தலைவராகச் சிறப்பாகச் செயலாற்றினார். இந்தியாவில் சமூகரீதியாக மிகவும் முன்னேறிய பகுதிகளில் கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முதன்மையானதாகும். கல்வியறிவு 90 சதவிகிதத்தைத் தாண்டிய மாவட்டமாக அது உள்ளது; புகையிலை அற்ற மாவட்டமாகத் தன்னைச் சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்துக் கொண்டது. இந்த மாவட்டத்தின் வைக்கம் எனும் நகரில், சாலைகள் சந்திக்கும் பகுதியின் மத்தியில்… மரத்தூண்களால் ஆன ஒரு சிவன் கோயில் உள்ளது. இதை நம்பூதிரி பிராமணர்கள் கட்டுப்படுத்தி வந்தார்கள். இந்தச் சாலைகளே, 40 நெருங்கிக் கொண்டிருந்த பெரியாரை அரசியலை நோக்கி செலுத்தியது.

பல நூறு ஆண்டுகளாகத் தீண்டத்தகாதோர் எனக் கருதிய மக்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர் ஆகியோரை மகாதேவா ஆலயத்துக்குள்ளும், அதைச் சுற்றியிருக்கும் சாலைகளிலும் நுழையவிடாமல் நம்பூதிரிகள் தடுத்தார்கள். 1920-களில், ‘எல்லாக் கோயில்களையும் அனைத்து இந்துக்களுக்கும் திறந்துவிட வேண்டும்’ என்று திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரிடம் ஒடுக்கப்பட்ட சாதியினர் போராடினார்கள். தங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் கிறிஸ்தவ – இஸ்லாம் மதங்களுக்கு மாறிவிடுவதாக அவர்கள் அச்சுறுத்தினர். இந்தப் போராட்டங்களின் குவிமையமாக வைக்கம் ஆலயம் மாறியது. 1924-ல் இந்தப் போராட்டத்தை நோக்கி காந்தி ஈர்க்கப்பட்டார். முதன்முறையாகத் தீண்டாமைக்கு எதிரான முழுமையான பொதுக் கிளர்ச்சியைக் காந்தி வைக்கத்திலேயே தொடங்கினார்.

இதே காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பிராமணர் அல்லாத தலைவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. காங்கிரஸ், பிராமணர்கள் கட்சி என்கிற வாதத்தை எதிர்கொள்ள…. பிராமணர் அல்லாத தலைவர்களை அந்தக் கட்சி தேடிக்கொண்டு இருந்தது. செல்வவளம் மிகுந்த, நம்பிக்கை, சாமர்த்தியம் கைவரப்பெற்ற பெரியாரை வைக்கம் போராட்டத்துக்கு முன்னால்… காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்கள் அந்தக் கட்சியின் தலைவர்கள். வைக்கம் போராட்டத்தை வழிநடத்த பிராமணர் அல்லாத ஒரு தலைவர் தேவைப்பட்டார். பெரியார், ‘வைக்கம் வீரர்’ ஆனார்.

பெரியார், தேசிய அரசியலில் நம்பிக்கையோடு களம் புகுந்தார். தன்னைப்போலவே இடைநிலை சாதியான காந்தி காங்கிரஸ் கட்சியினைக் கட்டுப்படுத்தும் பிராமணர்களை எதிர்க்கும் தன்னுடைய திட்டத்தில் கைகோப்பார் என பெரியார் நம்பினார். விடுதலையுணர்வும், சமத்துவமும் இணைந்த போராட்டமாகக் காங்கிரஸின் போராட்டம் மாறும் என்று அவர் கனவு கண்டார். பழைமை மிகுந்திருந்த கேரளா முழுக்கப் பயணம் செய்த பெரியார், ‘கோயில் தெருக்களை மட்டும் இப்போதைக்குத் திறந்தால் போதும்’ எனும் காந்தியின் கருத்தை ஏற்க மறுத்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கையான கோயில் கதவுகளை அனைவருக்கும் திறந்துவிட வேண்டும் என்பதை அவர் தீவிரமாக ஆதரித்தார். கோயில்களில் வழிபடுபவர்கள் மூடர்கள் என்று சொன்னாலும் அவர்களின் சமத்துவ உரிமைக்காகப் பெரியார் குரல் கொடுத்தார்.

பெரியார் சிறைப்பட்டு இருந்தபோது, நம்பூதிரிகளோடு காந்தி மென்மையாகச் சமரசம் பேசினார். ஒடுக்கப்பட்ட சாதியினர், ‘தங்களின் கர்ம வினைப் பயனை அனுபவிக்கிறார்கள். ஆகவே, அவர்களைக் கோயிலுக்குள் விட வேண்டாம்’ என்று ஒரு நம்பூதிரி சொன்னபோது, ‘கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்குத் தண்டனை தர நாம் யார்’ என காந்தி வினவினார். 1925-ல் ஒரு சமரசத்துக்குத் திருவிதாங்கூர் மகாராணி ஒப்பினார். கோயிலைச் சுற்றியிருக்கும் சில சாலைகள் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குத் திறக்கப்படும். அதே சமயம், கோயில் வளாகம், உட்பிரகாரம் ஆகியவற்றுக்குள் அவர்களுக்கு அனுமதி இல்லை என்பதே அது. கோயில் நுழையும் கனவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 1936-ல்தான் கிட்டியது.

காங்கிரஸ் கட்சிக்கு வைக்கம், சத்தியாக்கிரகம் மாதிரி போராட்டம் ஆனது. பழைமையின் கதவுகளைக் கட்டுடைத்த போராட்டம் அது எனக் காங்கிரஸ் மகிழ்ந்தது. மேல்மட்டத்தில் மக்களை மோசம் செய்யும் பணி அது என்பது பெரியாரின் கருத்து. காந்தி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை விட்டுகொடுத்துவிட்டார் என பெரியார் கருதினார். அடுத்த இரண்டு வருடங்களில்… தன்னுடைய வாழ்நாள் எதிரியாக மாறப்போகும் காந்தி, காங்கிரஸ் ஆகியவற்றை விட்டு விலகினார். குடும்பப் பணத்தைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தைத் திராவிட மொழிகள் பேசப்படும் தெற்குப் பகுதியில் தொடங்கினார். அவரின் கொள்கைகள், செயல்கள் பெரும்பாலும் காந்திக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

காந்தியும், அவரின் தொண்டர்களும் வெள்ளை உடையை அணிந்தார்கள் என்றால்… பெரியார், தன்னுடைய தொண்டர்களைக் கருஞ்சட்டை அணியச் செய்தார்; காந்தி, தன்னுடைய தொண்டர்களின் மத நம்பிக்கைகளைக் கருத்தில்கொண்டே பேசினார்; பெரியார், தன்னுடைய பேச்சை கேட்பவர்களை முட்டாள் என்று அழைத்தார்; அவர்களின் நம்பிக்கைகள், சாதிச் சடங்குகள் ஆகியவற்றை அவமானப்படுத்தினார்; அந்த மக்களின் கடவுள், சிலைகள் ஆகியவற்றைச் செருப்பால் அடிப்பதாக மிரட்டினார். காந்தி, ஒரு தேசிய இயக்கத்துக்குக் கனவு கண்டார் என்றால்… பெரியார், தனித் திராவிட நாட்டைத் தனது இலக்காகக் கொண்டார்.

சுயமாக எழும் எண்ணற்ற தலைவர்களைப்போலப் பெரியாரின் கருத்தாக்கங்களுக்கான வேர்களைத் தேடுவது வீணானது. பெரியாரின் கடிதங்கள், குறிப்புகள் ஆகியவற்றோடு பல ஆண்டுகளைச் செலவிட்ட பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, பெரியார் தன்னுடைய சொந்த கருத்துக்கள் அல்லாதவற்றைக் குறிப்புகளோடு வெளியிட்டதைக் கவனப்படுத்துகிறார். ‘பெரும்பாலான கருத்துக்கள் பெரியாரின் அசலான சிந்தனைகள்’ என்கிறார், அவர். பெண்ணுரிமையில் தீவிரத்தன்மை கொண்டவராக இருக்க… ஒரு புத்தகமே பெரியாருக்கு தூண்டுகோலாக அமைந்தது. 1927–ல் வெளிவந்த, புத்தகம் ஒன்றால் பெரியாரின் சிந்தனை செதுக்கப்பட்டது. காந்தியும், காங்கிரஸ் கட்சியும் வெறுத்த கேத்தரின் மேயோவின், ‘மாதர் இந்தியா’ நூல் அது.

அந்த நூல் எப்படி இந்திய வாழ்க்கை முறை, குறிப்பாக இந்து பாரம்பர்யம் பெண்களைச் சுரண்டுகிறது என மேயோ விளக்கினார். மேயோ, தன்னுடைய மறுப்பு எழுப்ப முடியாத வாதத்துக்கு ஆதரவாகக் குழந்தைத் திருமண எண்ணிக்கை, பாலியல் வியாதிகள், விதவைகள் நடத்தப்படும் விதம், 14 வயதுக்கு முன்னால் திருமணம் செய்வதை நியாயப்படுத்தும் பெண்ணின் பெற்றோர் எனப் பலவற்றைக் குறித்து அவர் பதிவுசெய்தார். சமூகச் சீர்திருத்தத்தைச் சில காங்கிரஸ் தலைவர்கள் வேகமாக முன்னெடுத்தபோது மெதுவாகப் பயணிக்கலாம் எனச் சில தலைவர்கள் கருதினார்கள். மேயோ, பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு வேலை பார்த்தார் என்று இப்போதுதான் தெரியும். பெண்களைக் கண்ணியமாகக் காக்கும் மதம் இந்து மதம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மேயோவின் புத்தகத்தைத் துச்சமாகக் கருதினார்கள்.

பெரியார், ‘மதர் இந்தியா’ நூலின் கருத்துகளை வேறு விதமாக அணுகினார்; பெரியார், இந்து மதத்தின் மீதான இத்தகைய தாக்குதலில் ஆனந்தமடைந்தார்; அதே சமயம், ஐரோப்பாவில் எழுந்த பெண்ணிய இயக்கங்களைக் குறித்துக் கவனமாக பெரியார் தெரிந்துகொண்டார். அதன் விளைவாக, பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்த அவரின் புரிதல் விரிவடைந்தது. 1920-களில் இருந்தே சுய மரியாதை இயக்கத்தின் பரப்புரையில் இந்தியப் பெண்களின் உரிமைகள் முக்கியமான இடத்தைப் பெற்றன. ஒளிவு மறைவில்லாத, வெற்று அலங்காரங்கள் அற்ற, கொந்தளிப்பை பெருக்கெடுக்கச் செய்யும் தன்னுடைய உரைகளாலும், ‘விடுதலை’ இதழ் எழுத்துகளாலும் பெண்ணுரிமையைப் பெரியார் உயர்த்திப் பிடித்தார்.

 

நூற்றாண்டுகளாக வழங்கிவந்த தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில், சமயங்களில் பெண்கள் ஆண்களின் ஏவலுக்கு இயங்கும் அடிமைகளாக, அவர்களின் குழந்தைகளை வளர்க்கும் ஆயாக்களாக மட்டும் தாங்கள் பார்க்கப்படுவதை எதிர்த்துப் பாடினார்கள். மணமான பெண்கள், கைம்பெண்கள் ஆகியோருக்குச் சொத்தில் உரிமையில்லாத கொடுமையைப் பல்வேறு பாடல்கள் பதிகின்றன. (காளைபோல மகன் ஒருத்தன் கருப்பையில பூத்திருக்கலாம்… கண்மணியே, கட்டிவெச்ச சொத்தெல்லாம் கலையாம வந்திருக்கும், மதுரை மன்றத்தில நியாயம்தானே கிடைச்சிருக்கும் கண்மணியே). இத்தகைய மோசமான அடக்குமுறைகளின் பின்னணியில் ஓரளவுக்குத் திருமணத்துக்குப் பங்கிருப்பதைப் பெரியார் கண்டார்; திருமணங்கள் பெண்களை அடிமைப்படுத்தும் அயோக்கியமான வேலையைச் செய்வதை அவர் சாடினார்; ஒரே சாதியின் மூத்தோர்களிடையே நிகழும் அன்புக்கு இடமில்லாத பண்டமாற்று என இவற்றைப் பார்த்தார். இந்தத் திருமணங்களில் பெண்களின் (பெரும்பாலும் பெண் குழந்தைகள்) கருத்து, கனவுகளுக்கு இடமில்லை.

பெரியாரின் அசரவைக்கும், போலிப் பூச்சுகள் இல்லாத மேடைப்பேச்சு அவரின் இயக்கத்தை நடுத்தர வர்க்கத்தைத் தாண்டி அடித்தட்டு மக்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தது. நடுத்தர வர்க்கம் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகளை எளிதில் உள்வாங்கியிருக்கும். எனினும், பெரியார் அடித்தட்டு மக்களை நோக்கி தன்னுடைய அரசியலை கவனப்படுத்தினார். தமிழகத்தில் 1928 அல்லது 1929-ல் தொடங்கி… பெரியாரின் ஆசியோடு ஊரகப் பெண்கள், ஆண்கள் செய்த கலப்புத் திருமணங்கள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகின. இந்தத் திருமணங்கள் ஐயர் இல்லாமல், வடமொழி மந்திரங்கள் இல்லாமல் நடந்தேறின. பல நாட்கள் நடக்கும், அயர்ச்சியைத் தரும் பாரம்பர்ய திருமணங்களைப்போல அல்லாமல் விரைவாக, எளிமையாகப் பெரியாரின் வழிகாட்டுதலில் இந்தத் திருமணங்கள் நடைபெற்றன. தேவையில்லாமல் திருமணம் என்கிற சடங்குக்கு வாரியிறைக்கும் பணத்தைத் தம்பதிகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்யலாம் என பெரியார் வலியுறுத்தினார். அதே சமயம், இந்தச் சுயமரியாதை திருமணங்கள், கணவன் – மனைவி இடையேயான கலவி என்பது வெறும் பிள்ளைப்பேறுக்காக மட்டுமே எனப் போலியாகப் பேசவில்லை.

அதிகாரப்பூர்வமாகச் சுயமரியாதை இயக்கத்துக்கு ஐந்து குறிக்கோள்கள் இருந்தன: கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழியவேண்டும்; காந்தி ஒழியவேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழியவேண்டும். ஆணாதிக்கத்தை ஒழிப்பது இரண்டாம்பட்சமாக ஆரம்பகாலத்தில் இருந்தது. காலப்போக்கில், மணப்பெண் – மணமகன் இருவரின் சமத்துவமும் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட சுயமரியாதை திருமணங்கள் அந்த இயக்கத்தின் அடையாளங்கள் ஆகின. பிராமணர்கள் நடத்திய குடும்பச் சடங்குகளின் மீது கட்டமைக்கப்பட்டு இருந்த இந்து மதச் சமூகத்தின் அடித்தளத்தை இவை அசைத்துப் பார்த்தன. இந்தத் திருமணங்கள் பெரியாரின் கொள்கைகளைக் கிராமங்கள்தோறும் பரப்பின; விளக்கின. இவருடைய பகுத்தறிவு விவாதங்கள், ஆண் – பெண் இடையே ஒளிவுமறைவற்ற உரையாடல்கள் ஆகியவற்றுக்கும் உதவின.

பெரியாரின் பார்வையில் சாதியை நிலைநிறுத்தும், ஏற்பாட்டுத் திருமணங்கள் பெண்களிடையே நிலவும் பரவலான கல்வியறிவு இன்மையைப் பலப்படுத்தி, நீடிக்கச் செய்தன. அறியாத அயலாரிடம் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த பெரியவர்கள்… தங்களுடைய பெண் முட்டாளாக, உதவாக்கரைகளாக இருப்பதில் கவனமாக இருந்தார்கள் என்பதை பெரியார் சுட்டிக்காட்டினார். இதற்கு மாறாகப் பெண்கள் கல்வியிலும், விளையாட்டிலும் தேர்ச்சிப் பெறவேண்டும் என அவர் முழங்கினார். ‘மணப்பந்தல்களில் பெண்களை அடைக்காமல்… மைதானங்களில் அவர்களை இயங்கவிட வேண்டும்’ என்றார். பெண்கள் வளர்ந்த பின்பு, தங்களுக்குப் பிடித்தமான ஆணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்; அதேபோல, தாங்கள் எப்போது குழந்தை பெறவேண்டும் என்பதைத் தாங்களே முடிவு செய்ய வேண்டும் என்று பெரியார் அறைகூவல் விடுத்தார். பெரியார் விடுத்த அறைகூவல்… இன்றைக்கு இருக்கும் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு பிரசாரங்கள் போன்றது அல்ல. அவர்… பெண்கள், ஆண்களின் விடுதலை சார்ந்து பேசினார். பாலியல் வாழ்க்கை, வாழ்வின் பிற அங்கங்களில் ஆணும், பெண்ணும் தங்களுக்கான விடுதலைவெளியை கொண்டிருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அவர் இயங்கினார்.

தமிழ்ப் பத்திரிகைகள், ஒழுக்கக்கேட்டை வளர்ப்பதற்காகப் பெரியாரைச் சாடின. பெரியார், ஒரு திருமணத்தில் பேசியபோது, அசராமல் இப்படிப் பதில் தந்தார்: ‘மனைவி, கணவனை மதிக்க வேண்டும் என்றால்… ஏன் கணவன், மனைவியை மதிக்கக் கூடாது? மனைவிதான் புகுந்த வீட்டின் உறவுகளை மதிக்க வேண்டுமென்றால்… ஏன் மனைவி வீட்டு உறவுகளை, கணவன் மதிக்கக் கூடாது? மனைவி, கணவனுக்குச் செய்வதை… கணவன், மனைவிக்குத் திருப்பிச் செய்ய முடியாது என்றால்… பெண் என்பவள் வீட்டு வேலைக்கும், உடல் சுகத்துக்கும் மட்டுமே ஆனவள் என்று ஆகவில்லையா? இப்படிப்பட்ட திருமணங்கள் நாட்டில் அரை நொடிகூட நீடித்திருக்க அனுமதிக்கக் கூடாது’.

1920-களில் சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்த சமூகச் சோதனைகளில் பெரியார் ஆர்வம்கொண்டார். 1931-ல் ஐரோப்பாவுக்கு பெரியார் பயணம் செய்தார். அங்கே, ஒரு வருடகாலம் செலவழித்த பெரியார்… மைய அரசியலைவிட்டு அப்போது விலகியிருந்தார். பெரியார், பெர்லினில் உள்ள நிர்வாண கிளப்களில் ஆனந்தமாக நேரத்தைச் செலவழித்தார். தன்னுடைய அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றில் அந்தப் படங்கள் இடம்பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அது ஏற்கப்படவில்லை. ஐரோப்பிய பயணத்துக்குப் பின்னர், பெரியார்… அறிவியல், தொழில்நுட்பம், கருத்தடை ஆகியவை இந்தியர்களின் முன்னேற்றத்துக்குத் தேவை என்கிற தன்னுடைய நிலைப்பாட்டில் மேலும் உறுதிபூண்டார்.

சோவியத் அரசின் விவாகரத்துச் சார்ந்த சட்டங்கள், குழந்தைகளுக்கு அரசு தரும் நிதியுதவி ஆகியவை எப்படிக் குடும்பத்தின் பண்பை மாற்றுகின்றன; அவை, எப்படிக் குடும்பத்தின் மீதான சார்பைக் குறைக்கின்றன என்பனவற்றைப் பற்றிக் குறிப்பாக ஆர்வம் கொண்டார். தொழிலாளர்களுக்கு நிறுவனத்தில் பங்கு தரும் திட்டங்கள், கூட்டு நிறுவனங்கள் முதலிய சோவியத் பொருளாதாரக் கருத்தாக்கங்களால் பெரியார் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய குடும்பத் தொழில்களில் அவற்றை அமல்படுத்தினார். தொழிலாளிகளுக்குச் சம்பளம் தருவதற்குப் பதிலாக லாபத்தில் பெரியார் பங்கு தந்தார்.

அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படாமல் சமூகத்தின் மனப்போக்கை மாற்றி, பொதுப் புத்தியை செழுமைப்படுத்தும் முயற்சிகளில் பெரியார் தன்னுடைய வாழ்நாள் எதிரியான காந்தியை பின்பற்றினார். 1948-ல் பெரியார், தன்னைவிட மிகவும் இளையவரான மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டபோது… அவரின் தொண்டர்கள் படை பெருமளவில் குறைந்தது. சில சுயமரியாதை இயக்கத்தினர், பெரியாரின் திருமணத்தைச் சுற்றி ஒரு சூழ்ச்சியைக் கட்டமைத்து, திராவிடர் கழகத்துக்கு மாற்றாக… தி.மு.க-வை ஏற்படுத்தினார்கள். பின்… அதிலிருந்து பிரிந்து, அ.தி.மு.க உருவானது. இந்த இரண்டு கட்சிகளும் அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் கோலோச்சுகிறது.

எனினும், பெரியார் விடுதலைக்குப் பிந்தைய இந்தியத் தேர்தல் அரசியலில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கைச் செலுத்தினார். பல ஆண்டுகளுக்கு வேட்பாளர்களுக்கு நட்சத்திர பரப்புரையாளராக அவரே திகழ்ந்தார். அவரின் வெகுமக்கள் ஈர்ப்பு… அவரை, ‘கிங்மேக்கராக’ வைத்திருந்தது. ஆகவே, அரசின் மீதும், சட்ட உருவாக்கத்திலும் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கை அவர் எந்தப் பொறுப்புமின்றிச் செலுத்த முடிந்தது அவருக்கு ஏற்றதாக இருந்தது.
டாக்டர் அம்பேத்கரைப்போலப் பிராமணியம் மீதான தன்னுடைய விமர்சனத்தை இந்தியா முழுமைக்கும் உரியதாகப் பெரியார் முன்வைக்கவில்லை. மாறாக, அவரின் அரசியல் திராவிடப் பண்பாட்டில் ஊறியதாக இருந்தது. தமிழ்ப் பண்பாட்டில் அவரின் கருத்துக்கள் பரவ ஆரம்பித்த பின்பு… புனிதங்களைப் பொசுக்கிய பெரியாரே, புனிதப் பசுவாக மாற்றப்பட்டுவிட்டார். பெரியாரை, 20 வருடங்களுக்கு முன் ஓரங்கட்டப் பார்த்த அரசியல்வாதிகளே, அதற்குப் பின்னால்… வேறு வகையில் நடந்துகொண்டார்கள். பெரியார் 1973-ல் மரணமடைந்தார். பேராசிரியர் டேவிட் வாஷ்ப்ரூக், ‘பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் அவர் வெறுக்கக்கூடிய செயல்களையே மேற்கொள்கிறார்கள்’ என்கிறார்.

தெற்கில், பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட பெரியாருக்கு, அவரின் பங்களிப்பை மிஞ்சிய புகழ்மாலை சூட்டப்படுவதாக விமர்சிக்கிறார்கள், மக்களியல் அறிஞர்கள் மற்றும் அறிவியல் – மருத்துவ வரலாற்று ஆசிரியர்கள். அவர்களின் கவலை நியாயமான ஒன்றே ஆகும். தென்னிந்தியப் பெண்களின் உடல்நலம், மேம்பட்ட வாழ்க்கை ஆகியவை பெரியார் பிறப்பதற்கு முன்பே நிலவிய காரணிகளின் பங்களிப்பாலும் எழுந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில்… தமிழகத்தில், பெண்கள் ஈன்றெடுத்த குழந்தைகளின் விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்திருந்ததை தரவுகள் காட்டுகின்றன. இதற்குப் பெரியாரின் களப்பணியும், குடும்பக் கட்டுப்பாடு சார்ந்த பரப்புரையும் முக்கியப் பங்காற்றின என உறுதியாகச் சொல்லலாம். வேறு எந்தப் பங்களிப்பையும் அவர் தரவில்லை என்று விமர்சகர்கள் சொன்னாலும், பெரியார் மக்களைப் புரட்சிகரமான கருத்துகளால் எதிர்கொண்டு, அவர்களின் மனப்போக்கை மாற்றினார். 50 வருடங்களாகப் பெருமளவு மக்கள் செல்வாக்கை நகர் மற்றும் கிராமப் புறங்களில் பெற்ற பெரியாரின் செயல்பாட்டுக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் தொடர்பே இல்லை என்று வாதிடுவோருக்கு பெரியாரின் வார்த்தையிலேயே பதில் சொல்லலாம். ‘வெங்காயம்!’

தமிழகத்தில் பெண்களின் சமூக வளர்ச்சி தேக்கமடைந்துவிட்டதாகத் தெரிகிறது. அதன் மகத்தான கடந்தகாலச் சாதனைகளைத் தாண்டி தற்போது தொய்வைச் சந்தித்திருக்கிறது. காலங்காலமாக ஏழ்மையில் உழன்ற வட கிழக்கு மாநிலமான சிக்கிம், கடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பெண்கள் கல்வியறிவில் தமிழகத்தைக் முந்தியிருக்கிறது. 2007 முதல் ஆண்களைவிடப் பெண்கள் அதிகளவில் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஆண் – பெண் வேறுபாடு குறைவது, பள்ளிக்குச் செல்லும் ஆண் – பெண் விகிதாச்சாரம் மேம்படுவது ஆகியவற்றுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. எனினும், அவற்றில் முக்கியமானது நீடித்த, ஓய்வில்லாத, தீரா வேட்கை கொண்ட பரப்புரைகளும் ஆகும். பெண்ணுரிமைகளுக்காக இயங்குபவர்கள் தேர்தல்கள் வருகிறபோது மட்டும் உரிமை முரசம் கொட்டாமல் தொடர்ந்து பெரியார்போல மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். நீடித்த உரையாடல், பரப்புரை உடனே வெற்றியைத் தராது என்றாலும்… அது. காலப்போக்கில் இந்தியப் பெண்கள் குடியரசில் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.’’

தமிழில்: பூ.கொ.சரவணன்

(நன்றி: விகடன்)

 

தமிழகத்தில் மேடைப்பேச்சு!


அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள பேசித் தீர்த்த பொழுதுகள் எனும் மேடைபேச்சு பற்றிய நூலை வாசித்து முடித்தேன். தமிழகத்தின் அரசியல்,சமூக, பண்பாட்டு வரலாற்றில் நீக்கமற கலந்துவிட்டு மேடைப்பேச்சின் நெடிய வரலாற்றை நூற்றி சொச்சம் பக்கங்களில் நூல் அடக்க முயற்சித்து இருக்கிறது.

மேடைப்பேச்சின் வரலாறு என்பது மக்களை நோக்கிப் பேசுகிற பேச்சின் வரலாறு ஆகும். ‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’ என வரும் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியனின் சொற்பொழிவு தமிழகத்தின் முதல் சொற்பொழிவு எனலாம். வள்ளுவரின் அவை அறிதல் கற்றறிந்த அவையில் பேசும் பேச்சைப் பற்றியே பேசுகிறது. வெகுமக்களிடம் பேசும் பேச்சானது பல காலம் தமிழ்ச்சூழலில் இல்லை. யாழ்ப்பாணம் வண்ணார்பிள்ளை கோயிலில் நூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறுமுக நாவலர் நிகழ்த்தியதே தமிழின் முதல் பொதுச்சொற்பொழிவு என்கிறார் அறிஞர் பெர்னார்ட் பேட். சைவ சித்தாந்த மகாசமாஜம் (பெருமன்றம்) தமிழ் பொதுச் சொற்பொழிவுக்கான அடுத்தக் கட்ட நகர்வை எடுத்து வைத்தது.


சைவ பெருமன்றங்கள் ஆரம்பித்து வைத்த தமிழ் மேடைப்பேச்சு வளர்ச்சியைச் சுதேசி இயக்கம் பரவலாக்கியது. தமிழில் மேடைப்பேச்சுக்கு ஒரு மாதிரியாகப் பிபன் சந்திர பால் சென்னை கடற்கரையில் நிகழ்த்திய உரை திகழ்ந்தது. பாலின் விவகார நுட்பமும், வாக்குத் திறமையும் பாரதியை கவர்ந்தன. வ.உ.சி, சுப்ரமணிய சிவா மேடைப்பேச்சால் விடுதலை உணர்வைப் பெருக்கினார்கள்.
மேடைப்பேச்சில் திரு.வி.க செந்தமிழிலும், மக்களின் தமிழிலும் உரையாடி மேடைத் தமிழை நோக்கி பலரை ஈர்த்தார். தமிழகம் முழுவதும் அறியப்பட்ட முதல் வெகுமக்கள் பேச்சாளராகப் பெரியாரின் நண்பரான வரதராஜுலு நாயுடு மாறினார். மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு அவரின் பேச்சு அடித்தளமாக அமைந்தது (1918).

கல்கி பெரியாரின் சொற்பொழிவை இப்படி வியக்கிறார், “அவர் உலகானுபவம் எனும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்..எங்கிருந்து தான் அவருக்கு இந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ. நான் அறியேன்.”

Image result for பெரியார் மேடை

சீர்காழியில் பெரியார் பேச வந்தார். கற்கள், மூட்டைகள் அவரை நோக்கி வீசப்பட்டன. “கல்லடிக்கு அஞ்சுபவர்கள் எழுந்து போங்கள். மற்றவர்கள் தலையில் துண்டை கட்டிக் கொள்ளுங்கள்.” என்றார். அவர் பேச பேச மக்கள் கூட்டம் பெருகியது. கூட்டம் முடிந்ததும் அந்நகரின் துணை நீதிபதி “உங்களை ஊர்மக்கள் ஊர்வலமாக அனுப்பி வைக்கிறோம்” எனக்கேட்ட பொழுது பெரியார் அதற்கு மறுத்தார் என்கிற செய்தியை தமிழேந்தியின் கட்டுரை சொல்கிறது.

அடுக்குமொழியில், எழுவாய், பயனிலைகளைப் புரட்டிப் போட்டு, அலங்காரங்கள் மிகுந்த அணி இலக்கணத்தோடு மேடையில் பேசும் புதிய பாணியை அண்ணா துவங்கி வைத்தார். அதேபோல அண்ணாவின் காலத்தில் ஒலிப்பெருக்கி வந்திருந்தது. உரக்கப் பேசியே தன் உயிர் நொந்ததாகத் திரு.வி.க நொந்து கொண்டார். ஜீவாவின் செவித்திறன் போனதில் கத்தி கத்தி பேசவேண்டிய சூழலுக்குப் பெரும் பங்குண்டு. இப்படிப்பட்ட நிலையில் ஒலிப்பெருக்கியை அண்ணா கச்சிதமாகப் பயன்படுத்தி மக்களை ஈர்த்தார். மேற்சொன்ன கட்டுரைகள் வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரையில் காணக்கிடைக்கின்றன.

Image result for அண்ணா பேச்சு

 

மேடைப்பேச்சில் தனக்கென ஒரு தனித்த பாணியைக் கலைஞர் கருணாநிதி அமைத்துக் கொண்டார். “இதயத்தைத் தந்திடு அண்ணா..” என அவர் தீட்டிய கவிதை மொழிப் பேச்சு பலரின் நாவில் நடமாடியது. பேராசிரியர் பெர்னார்ட் பேட் “நான் தமிழகத்தின் மேடைப்பேச்சுக்களில் பராசக்தி திரைப்படத்தின் மேடைப்பேச்சின் தாக்கத்தை அதிகமாகக் காண்கிறேன்.” என்கிற அளவுக்கு அவரின் தாக்கம் காலங்களைக் கடந்து பரவியது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு நீதிபதியோடு கலைஞர் மேடையேற வேண்டிய சூழல் வந்தது. நீதிபதி பேசி முடித்த பின்பு கலைஞரின் முறை, “நீதிபதிக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சுகிறேன்.” என்றார். அவர் எதுவும் தவறாகப் பேசவில்லையே எனக் கூட்டம் யோசித்தது. “நீதிபதி ஜப்பானை பாருங்கள், ஜப்பானை பாருங்கள் என்று அடிக்கடி சொன்னார். ஜப்பான் என்றால் உதயச் சூரியன் என்று அர்த்தம்.” என்றார் கலைஞர்.

எம்ஜிஆரின் பதினொரு ஆண்டுகால ஆட்சியில் தன்னுடைய கட்சியைத் தன்னுடைய நாவன்மையாலே கலைஞர் காப்பாற்றினார். எண்பத்தி ஆறில் உள்ளாட்சி தேர்தல்கள் வந்த பொழுது, “கம்சன் ஏழு குழந்தைகளைக் கொன்ற பின்பு எட்டாவது குழந்தையாகக் கண்ணன் எழுந்ததைப் போலத் திமுகத் தேர்தலில் வெல்லும்.” என உத்வேகப்படுத்தலை செய்து தேர்தலில் வெல்வதை உறுதி செய்தார். இவற்றையெல்லாம் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்டுரை பதிகிறது.

Image result for அண்ணா பேச்சு

எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவர் எளிய தமிழில் இப்படி மக்களை நோக்கி பேசினார். “நான் என்ன குற்றம் செய்தேன். இன்னும் இரண்டரை ஆண்டு ஆட்சி காலம் பாக்கியிருக்கும் போது ஏன் என்னைப் பதவியில் இருந்து இறக்கினார்கள். நான் லஞ்சம் வாங்கினேனா? இல்லை. ஊழல் செய்தேனோ? இல்லை. அவர்கள் உங்கள் மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் தான் நாடாளுமன்றத்தில் அவர்களைத் தேர்ந்தெடுத்தீர்களாம். …நான் நிரபராதியா இல்லையா என்பது நீங்கள் வாக்களிப்பதில் இருந்து தெரிய வேண்டும்.: என்றது அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.

வைகோவின் ஆளுமை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அவரைப் பெரும் பேச்சாளராக அடையாளப்படுத்தியது. உலக வரலாற்றை, புரட்சியாளர்களை மக்கள் கண்முன் நிறுத்தி மக்களை உணர்ச்சிக்கும், எழுச்சிக்கும் உள்ளாக்குவது அவரின் பாணியாக இருந்தது.

Image result for வைகோ

தமிழகத்து மேடைப்பேச்சு குறித்து விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் பெர்னார்ட் பேட் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனப்படுத்துகிறார். தமிழகத்தின் மேடைபேச்சுச் செந்தமிழில் பெரும்பாலும் திராவிட இயக்கத்தால் வார்க்கப்பட்டது. எப்படி அமெரிக்காவின் கட்டிடங்கள் ரோம, கிரேக்க கட்டிடங்களின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஆங்கிலேயரில் இருந்து மாறுபட்ட செவ்வியல் தன்மை கொண்டவர்கள் எனக் காட்டும் பாணியாக, அரசியலாக அது இருந்தது. அதுபோலச் செவ்வியல் தமிழைப் பயன்படுத்தித் தங்களுக்கான தனி நாட்டைத் திராவிட இயக்கத்தினர் கனவு கண்டார்கள். அதைப் பெர்னார்ட் பேட் திராவிட் செவ்வியல்வாதம் என்கிறார்.

தவம் போல மேடைப்பேச்சை அணுகி, ஒரு மேடையில் பேசியதை இன்னொரு மேடையில் பேசாத தமிழருவி மணியன்; அம்பேத்கரின் சிந்தனைகளை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கச்சிதமாகக் கொண்டு சேர்க்கும் தொல்.திருமாவளவன்; நையாண்டி மிகுந்த சோவின் பேச்சு; சங்கீதம் போல இழையும் குமரி அனந்தனின் பேச்சு என்று பலரைப்பற்றிய குறிப்புகள் நூலில் உண்டு.

திராவிட இயக்கம் மேடைப்பேச்சில் செவ்வியல்வாதத்தை முன்வைத்த காலத்தில் அதை எதிர்கொள்ளக் கிருபானந்த வாரியார், கீரன் முதலிய ஆன்மீக சொற்பொழிவாளர்கள் தமிழில் இருந்து புராண இலக்கியங்களைப் பிரபலப்படுத்தினார்கள். குன்னக்குடி அடிகளார் இதுவா, அதுவா என்கிற ரீதியிலான பட்டிமண்டபங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

பக்கங்கள்: 11௦
விலை: ரூபாய்.9௦

“சாதனைக்காக சாபங்களைக் கடக்கத்தான் வேண்டும்!” – ஊடகவியலாளரின் நம்பிக்கை உர


சாதனை

டகத் துறையில் சாதனை படைக்க சில சாபங்களை விதைத்திருக்கிறார், சுஹாசினி ஹைதர். இவர், புகழ்பெற்ற ஊடகவியலாளர். தற்போது, ‘தி இந்து’ ஆங்கில இதழின் அயலுறவு பிரிவின் ஆசிரியர். WORLD MEDIA ASSOCIATION-ஐச் சேர்ந்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது:

‘‘ஊடகத் துறை மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட உரை என்றாலும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.
ஊடகத் துறையில் பட்டம் பெறப்போகும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தற்போது அந்தத் துறையில் நிலைமை சரியில்லை என்பதும், அங்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பான காரியம் என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அவை, உண்மையே என நான் அழுத்திச் சொல்வேன்.

நான், 15 வருடங்களுக்கு முன்னால் ஊடகத் துறையில் நுழைவதற்காக… பல கனவுகளோடு அதில், காலடி எடுத்து வைத்தேன். அப்போதும் நிலைமை மோசமாகத்தான் இருந்தது. தொலைக்காட்சியில், வேலை கிடைப்பது கஷ்டம் என்பதைவிட… வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்கிற சூழல் நிலவியது. என்னை ஏழு நிராகரிப்பு கடிதங்கள் வரவேற்றன. ஒரு நிறுவனம், ‘அடுத்த வருஷம் பாத்துக்கலாம் மேடம்’ என்றார்கள். இன்னொரு நிறுவனமோ, ‘இனிமேல் தயவுசெய்து அழைக்காதீர்கள்’ என்று கறார் காட்டினார்கள். எல்லாம் முடிந்துபோனது எனத் தோன்றிய நேரத்தில்… இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என ஒரு நேர்முகத் தேர்வுக்குச்  சென்றேன். அது, செய்தி நிறுவனமில்லை. ஓர் ஆவணப்பட நிறுவனத்தில், விற்பனைத் துறையில் வேலைக்கான நேர்முகம் அது. என்னுடைய சான்றிதழ்களுக்கு இந்த வேலையாவது கிடைத்துவிடாதா என ஆவலோடு நான் அங்குச் சென்றேன்.

என்னுடைய இதழியல் பட்டத்தை… நான், பாஸ்டன் பல்கலையில் பெற்றிருந்தேன். ஐ.நா-வில், நியூயார்க் நகரில் உள்ள சி.என்.என். நிறுவனத்தில் நான் பணியாற்றி இருந்தேன். சில காலம் சி.என்.என். நிறுவனத்தின் டெல்லி தயாரிப்பாளராகப் பணியாற்றிவிட்டு, பின்பு… அந்த வேலையிலிருந்து விலகினேன். இவற்றை எல்லாம் என்னை நேர்முகம் செய்த நபரிடம் பொறுமையாகச் சொன்னேன். அவற்றை, காதுகொடுத்து கேட்டுவிட்டு அவர் சன்னமான குரலில் என்னை நோக்கிச் சொன்னார், ‘நீங்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்று நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் தன்னம்பிக்கையால் மிளிர்கிறீர்கள். இந்தப் பணியிலும் நீங்கள் மின்னுவீர்கள். இந்த வேலையை நேசிக்கவும் நீங்கள் பழகிக்கொள்ளலாம். நீங்கள் நெகிழ்வான தன்மை கொண்டவராக தெரிகிறீர்கள். எனினும், உங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் இந்த வேலையை உங்களுக்குக் கொடுத்ததற்காக என்னை வெறுப்பீர்கள். உங்களின் மனமெல்லாம் செய்தி ஊடகத்தின் மீதே உள்ளது. என்னை நீங்கள் வெறுப்பதை நான் விரும்பவில்லை. இந்த வேலையை உங்களுக்கு நான் தரப்போவதில்லை.’

என்னைப்போலவே நீங்களும் இப்படிப்பட்ட நிராகரிப்பைச் சந்திக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எந்த வேலையின் மீது நம்முடைய மனம் காதல் கொண்டிருக்கிறது என உணர இப்படிப்பட்ட நிராகரிப்புகள் உதவுகின்றன. நீங்கள் விருப்பப்பட்டுச் சேரும் பணியில் அதைவிட்டு விலக 1,000 காரணங்கள் கொட்டிக் கிடக்கும். ஆனால், அதுதான் உங்களின் மனம் விரும்புகிற வேலை என்கிற ஒரே காரணம்தான், உங்களை அந்தப் பணியில் இயங்கவைக்கும்.

நான் பைத்தியக்காரி என்று நீங்கள் உள்ளுக்குள் சபிக்கக்கூடும். பட்டம் பெறுகிற நாளில் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் என்று நான் விரும்புவதாகச் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். நான் அதற்கு மட்டும் ஆசைப்படவில்லை. ‘கேட்டேன், கேட்டேன்’ என உங்களுக்காக நான் கேட்கும் வரங்கள் சில உண்டு.

1. உங்களுக்கு மோசமான பாஸ் (Boss) கிடைக்க வேண்டும். உங்களை அழவைக்கும் ஒருவராக அவர், இருக்க வேண்டும். இது மிகக் கடுமையான பணி என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அடித்துப்பிடித்து, முந்திக்கொண்டு செய்தி சேகரிக்க வேண்டிய துறை இது. கலங்காத நெஞ்சம் கொண்டவராக நீங்கள் இருந்தாலே சாதிக்க முடியும். என்னுடைய முதல் இதழியல் பணிக்கால நினைவு என்ன தெரியுமா? நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடக வெள்ளத்தில் ஓர் ஏணியைவிட்டு தலைகுப்புற தள்ளப்பட்டதுதான். என்னுடைய மைக் என் கையிலிருந்து கீழே விழுந்து, நான் எழ கஷ்டப்பட்டுக்கொண்டு நின்ற கணத்தில் என் கேமராமேன் துளிகூட கருணை காட்டவில்லை. ‘சீக்கிரம் எழுந்துவந்து வேலையை முடிம்மா…’ என்று அவர் கத்தினார். அப்போதுதான் நான் ஓர் அடிப்படை பாடத்தை கற்றுக்கொண்டேன். வேலைக்களத்திலும், அலுவலகத்திலும் உங்களை வெளியே தள்ள முயல்கையில் முண்டியடித்து உங்களுக்கான இடத்துக்காக நீங்கள் போராட வேண்டும். அன்றைய பரபரப்பான நேர்முகத்தைத் தவறவிட்டதற்காக உங்களுடைய பாஸ், கண்டமேனிக்கு வசைபாடுவது நிகழ்ந்துவிடுமோ என அஞ்சாதீர்கள். அவர் திட்டுவதை செவிமடுங்கள், கழிப்பறைக்குச் சென்று சற்று அழுதுவிட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டு அடுத்த போராட்டத்துக்குத் தயார் ஆகுங்கள். ‘பரவாயில்லை, அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம்…’ என்கிற பாஸ் உங்களுக்குக் கிடைத்தால்… நீங்கள் முன்னேறவே மாட்டீர்கள்.  

2. உச்சி வெயிலில் அலைந்து திரியும் அவஸ்தையான நாட்கள் நிறைய உங்களுக்கு வாய்க்கட்டும். இந்தவேளையில்… யாரோ ஒருவரின் நடைபாதையிலோ, யாரோ ஒருவரின் வீட்டு முன்னாலோ… அவர் வீட்டுக்குள் போவதற்கோ, வெளியே வருவதற்கோ காத்திருக்கும் கணங்கள் பல ஏற்படும். அப்போது வேகாத வெயிலில் நிற்க வேண்டிவரும். அப்படி நிற்கிறபோது, பல நண்பர்கள் கிடைப்பார்கள். கொளுத்தும் வெயிலில் செய்ய வேறு வேலையில்லாமல் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பிறருடன் பேசுவதுதானே ஒரே ஆறுதல்? சமயங்களில் அந்த நாளின் பரபரப்பான ஃப்ளாஷ் நியூஸ் வெகுநேரம் காத்துக்கொண்டு இருக்கும் நபருக்கே கிட்டும். கடந்த மாதம்  ஆங் சான் சூசியின் வீட்டுக்கு அதிகாலையிலேயே சென்று வெளியில் காத்திருந்தேன். எனக்கு ஃப்ளாஷ் நியூஸ் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, வெளியே உலாவ வந்த சூசியின் நாயுடன் நட்பானேன். 

3. மோசமான பல சகாக்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். இது சாபம்போலத் தோன்றும், ஆனால், அப்படித்தான் மிகச்சிறந்த பல செய்திகள் எனக்குக் கிடைத்தன. அவர்களுக்குத் தரப்படும் பணியைச் சரியாகச் செய்யாமல் போய்… அது, நம் கைக்கு வரும்போது கச்சிதமாகச் செயலாற்ற வேண்டும். தட்டிக் கழிப்பதல்ல வெற்றி, தகிப்பான சூழலில் தங்கமாக ஒளிரவேண்டும். வாய்ப்புக் கிடைக்கும் கணத்தில் அடித்து விளையாடுங்கள். 

4. கணினியும், அலைபேசிகளும் வேலை செய்யாத இடங்களில் நீங்கள் பணியாற்ற நேரிட வேண்டும் என விரும்புகிறேன். ஆளரவமற்ற ஒரு கிராமத்துக்கு நீங்கள் செய்தி சேகரிக்கச் செல்லவேண்டும். டெட்லைன் கவலைகள் இல்லாமல், மணிக்கொரு முறை நிலவரத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலையில்லாமல், ஒரு செய்திக்காக மூன்று நாட்கள் அலைய வேண்டிய ஆனந்தத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நான் மீனவர்களுக்கு உதவும் கணினி நிரல் ஒன்றைப்பற்றிச் செய்தி சேகரிக்க அதிகாலை மூன்று மணிக்கு கடலுக்குச் சென்றேன். மூன்று மணிநேரம் மீனவர்களுடன் உலாவி, அலைகளின் பேரொலியில் மனம் லயித்து, வலை முழுக்க மீன்களுடன் வருவதைக் காண நேரிட்ட அந்தக் கணத்தின் ஆனந்தம் சொல்லில் அடங்காதது. கோரமண்டல கடற்கரையில் தன்னந்தனியாக இயற்கையின் பிரமாண்டத்தைக் கண்ணுற்ற அந்தக் கணம் உன்மத்தம்! 

5. விசித்திரமான, அதிர்ச்சி தரும் நபர்களோடு நிறைய நேர்முகங்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். அரசியல் சரித்தன்மை மிக்க, கண்ணியமான, மென்மையான ஆளுமைகள் உங்களுக்கு எப்போதும் வெற்றி பெறுவதற்கான திண்மையைத் தரமாட்டார்கள். 

6. இன்னமும் அபாயகரமான என்னுடைய ஆசைகளை நீட்டிக்கொண்டே போக முடியும். எனினும், நான் அவ்வளவு மோசமானவள் இல்லை. உங்களைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும். என்னுடைய முதல் சம்பளம் போக்குவரத்துச் செலவுக்கே சரியாக இருந்தது. என்னுடைய இரண்டாவது சம்பளம் என்னுடைய அரை வயிற்று சாப்பாட்டுக்கே போதவில்லை. இங்கே கைநிறைய சம்பளத்தை உடனே வாரித்தர மாட்டார்கள். இங்கே வேலை செய்ய ஒரே காரணம், அதன்மீதான காதல்தான். உங்களின் பெற்றோர்கள் உங்களைப் பல வகைகளில் புரிந்துகொள்ள வேண்டும். 1996 ஜம்மு – காஷ்மீர் தேர்தல்கள் என் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் நடைபெற்றன. ‘நீ வீட்டுக்கு கல்யாணப் புடவை எடுக்க வராவிட்டால்… கல்யாணத்தை நிறுத்திவிடுவேன்’ என்று அம்மா என்னை அச்சுறுத்தினார். என்னுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்… என்னுடைய பாஸ், ஆப்கானில் அதிபர் நஜிபுல்லா தூக்கிலிடப்பட்ட நிலையில் அங்குச் சென்று
பணியாற்றச் சொன்னார். நான் அதை ஏற்கவில்லை. உங்களுக்கு வயதாக, வயதாக புரிந்துகொள்ளும் கணவன், மனைவி, குழந்தைகள் கிடைக்கட்டும். சுனாமி தினத்தன்று மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவதாக குழந்தைகளிடம் சொல்லிவிட்டுச் சென்றேன். மதிய சாப்பாட்டுக்கு 14 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தேன். 

7. ஒருவேளை நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போனாலும், உங்களுக்குக் கிடைத்த பணியை பேரன்போடு புரிவீர்கள் என விரும்புகிறேன். ஏனெனில், உங்களின் வாழ்க்கையின் மகத்தான பாடங்கள் எதிர்பாராத தருணத்தில், எண்ணமுடியாத மனிதர்களிடம் இருந்து கிட்டும். பர்வேஸ் முஷரப் ராணுவத்தில் தன்னுடைய அன்னையின் ஆசைக்காகச் சேர்ந்தார் என்று அறிந்துகொண்டேன். ‘ஏன் அப்படி’ என அவரிடம் கேட்டேன். ‘என் அம்மாவுக்கு ராணுவச் சீருடை பிடிக்கும்’ என்றார். நரேந்திர மோடியின் அம்மா, ‘தன் மகன் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அவருடன் வாழமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தார். தன்னை மகன் பார்த்துக் கொள்ளாமல்… தான் மகனைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை வேண்டாம் என அவர் கவலைப்பட்டார். ‘மன்மோகன் சிங், இறுதியாக குடும்பத்தோடு சுற்றுலா சென்று 40 வருடங்கள் ஆகிவிட்டன’ என அவரின் மனைவி தெரிவிக்கிறார். சி.என்.என் நிறுவனத்தை உருவாக்கிய டெட் டர்னர் இன்றுவரை மின்னஞ்சலைப் பயன்படுவதுவது இல்லை. அதை கச்சிதமாகக் கையாளும் காதலியை அவர் பெற்றுள்ளார். 

இதுதான் இறுதி இலக்கு என்று எதுவுமில்லை. இங்கே நிறைய பணி உயர்வுகள் கிடைக்காது. தெளிவான பாதை என்று எதுவுமில்லை; முன்மாதிரிகள் இல்லை; ஓய்வு வயது என்று ஒன்றில்லை. இவற்றை மனதில்கொண்டு ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். இந்தப் பயணம் மட்டுமே உங்களுக்கானது. வாழ்த்துகள்!’’ 

ஆணாதிக்கமும், இதய தெய்வம் அம்மாவும்!


தமிழகத்தின் அரசியல் உலகில் கால் நூற்றாண்டு காலம் கோலோச்சிய செல்வி. ஜெயலலிதா அவர்கள் உடல்நலமின்றி மரணமடைந்துள்ளார். முப்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறை  தொடர்ந்து பிடித்துச் சாதனை படித்த அவரின் இந்த மரணம் ஈடு செய்ய முடியாதது.
அம்மு என்று அறியப்பட்ட அவரின் வாழ்க்கையில் அவர் விரும்பிய எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை என்று அவர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். பத்தாம் வகுப்பில் மாநில அளவில் இடம் பிடித்த அவரை, “இனிமேல் படிக்கப் போக வேண்டாம். எனக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. குடும்பத்துக்கு நீ தான் சோறு போடவேண்டும்.” என்று அம்மா சந்தியா சொன்ன பொழுது, “நான் மேலும் படிக்கவேண்டும்.” என்று அழுது அரற்றிய அவரின் குரல் காலத்தின் காதுகளில் மட்டுமே விழுந்தது.

Image result for ஜெயலலிதா ஆல்பம்

காலையில் நான்கு மணிக்கு எழுந்து பரதநாட்டியம் கற்றுக்கொண்டே ஆகவேண்டிய அவரின் குழந்தைமை காணடிக்கப்பட்டது. வாழ்க்கையில் அடுத்து என்ன என்று யோசிப்பதற்குள் திரையுலகமும், அரசியலும் அவரை வாரிச் சுருட்டிக் கொண்டது. ஒரு தனித்த, கம்பீரமான ஆளுமையாகத் தன்னை உணர்ந்த அவரைத் திரையில் கவர்ச்சிப் பதுமையாகக் காட்டியதை அவர் வெறுத்தார் என்பதை இருபத்தி மூன்று வாரங்கள் குமுதத்தில் மனந்திறந்து அவர் எழுதிய வாழ்க்கை வரலாறு சொன்னது.

Image result for ஜெயலலிதா ஆல்பம்

எம்.ஜி.ஆரால் கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கப்பட்ட அவர் சொகுசாக இருக்க எண்ணவில்லை. தெருவுக்குத் தெரு இறங்கி பிரச்சாரம் செய்தார். கடைக்கோடி கிராமம்வரை சென்று வந்தார். மேடைகளில் அவர் பேசுகிற பொழுது,”இந்த கோமளவல்லி” என்று ஏகவசனத்தில் அவரை அழைத்துப் பேசுவது திமுகவினருக்கு வழக்கம். சட்டசபையில் நுழைந்த பொழுது அவர் தலைவிரி கோலத்தோடு வெளியே வரவேண்டி இருந்தது. அதை நாடகம் என்று சொன்னாலும், “விட்டால் நாட்டுக்கு

ஜெயலலிதா கூட முதல்வர் ஆகிவிடுவார் போல இருக்கிறது.” என்று முரசொலி மாறன் விளையாட்டாகச் சொன்னது அவரின் வாழ்க்கையில் உண்மையாகும் காலம் விரைவில் வந்தது.

Image result for ஜெயலலிதா ஆல்பம்

இரட்டை இலை சின்னத்தை மீட்டு ராஜீவ் படுகொலையின் அலையில் அவர் வென்றார். அப்பொழுது அவர் நடத்திய ஆட்சி ஆடம்பரம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், சர்வாதிகாரம் ஆகியவற்றின் கலவை எனலாம். இதைவிட மோசமாக ஒருவர் ஆண்டுவிட முடியுமா என்று எண்ணுகிற அளவுக்கு அந்த ஆட்சி இருந்தது. மத்திய அமைச்சரின் உயிருக்கே கூட உத்திரவாதம் இல்லாத அளவுக்கு நிலைமை இருந்தது. அள்ளிக் குவித்த சொத்துக்கள், நொறுங்கிப் போன நிர்வாகம் என்று தரைதட்டிய கப்பலாக ஆட்சி மாறியது. சட்டசபையில் திமுகவுக்கு ஒற்றை இலக்கத்தில் எண்கள் இருக்கவே ஜெயலலிதாவுக்குச் சட்டசபையின் மாண்பு விளங்காமல் போனதோ என்னவோ? அடுத்த வந்த தேர்தலில் ஜெயலலிதாவே வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

கோவை குண்டுவெடிப்புக்கு பின்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி பாஜகவின் ஆட்சி அதிகாரத்துக்குத் தேவைப்பட்டது. நல்லம ரெட்டி எனும் நேர்மையான அதிகாரியால் அவரின் கழுத்துக்கு மேலே சொத்துக்குவிப்பு வழக்கு கத்தி தொங்கிக்கொண்டு இருந்தது. அதற்கென்ன தம்பி துரையைச் சட்டத் துறை அமைச்சராக ஆக்கினால் போதும் என்று கண்ணசைத்தார். வாஜ்பேயி, “உத்தரவு!” என்று அதை நிறைவேற்றினார்.

தம்பிதுரை அமைச்சராக ஆனதன் விளைவு என்ன தெரியுமா? பாஜக அரசாங்கத்தில் இருந்த ராம் ஜெத்மலானியின் வரிகள் இவை: 5 பிப்ரவரி 1999 அன்று அப்போதைய சட்ட அமைச்சரான தம்பிதுரையைக் கொண்டு ஏப்ரல் 6, 1997-இல் தமிழக அரசு ஜெ’வுக்கு எதிரான 46 ஊழல் வழக்குகளை விசாரிக்க நியமித்த மூன்று சிறப்பு நீதிபதிகளின் நியமனம் செல்லாது என ஒரே கையெழுத்தின் மூலம் மாற்றினார். அதன் மூலம் வழக்குகள் மீண்டும் பழைய செஷன்ஸ் நீதிமன்றங்களுகே சென்றன. நீதிமன்றத்தை தனக்கேற்றபடி வளைக்க முயலும் புரட்சித் தலைவியாக அவர் அப்பொழுதே முழுமையடைந்து இருந்தார். திமுகவின் ஆட்சிக்கலைப்பு என்று அடுத்தப் பணியை அவர் இட அதிர்ந்து போன பாஜக அரசை கவிழ்த்தார்.

ஜெயலலிதா பதினாறு வருடங்களாக மத்தியில் ஆட்சியில் பங்கு பெறமுடியாத சூழல் நிலவியது என்றாலும் மாநில உரிமைகளுக்காக அவரின் குரல் பலமாக ஒலித்தது என்பதே உண்மை. அதற்கான ஆரம்ப அடையாளங்களை அவரின் மாநிலங்களவை உரைகளிலேயே காணலாம். அவர் இப்பொழுது மருத்துவமனையில் இருந்த காலத்தில் சரக்கு சேவை வரி மீதான தன்னுடைய நியாயமான எதிர்ப்பை தமிழகம் முடித்துக் கொண்டது. NEET க்கு எதிரான குரல், இந்தியாவின் இலவச அரிசி திட்டத்தில் கைவைக்கும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் எல்லாவற்றுக்குமான எதிர்ப்பு அவர் அப்போல்லோவில் இருந்த காலத்தில் முடித்து வைக்கப்பட்டது.

‘குடும்ப அரசியல் என்பது காட்டு ராஜாங்கம்.’ என்று சொன்ன அண்ணாவின் வழியில் வந்தவர்களாகக் காட்டிக் கொண்டவர்களான திமுக, அதிமுக ஊழலை நிறுவனமயப்படுத்தினார்கள். கருணாநிதிக்கு அவரின் பரந்து, விரிந்த பெருங்குடும்பம் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறியது என்றால் ஜெயலலிதாவுக்கு மன்னார்குடி குடும்பம் இருந்தது. பிராமணராக ஜெயலலிதா இருந்தது தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் அரசியலில் எந்தக் குறிப்பிட்ட சமூகத்தையும் சேராதவர் என்கிற ஈர்ப்பை அவருக்குத் தந்தது. முக்குலத்தோர், கொங்கு வெள்ளாளர் கூட்டணியைக் கொண்டு தன் ஆட்சியை அவர் நடத்தினார்.

 

பெண்களின் மீதான வன்முறையில் பெரும்பங்கு வகித்த சாதி அமைப்பின் காவலர்களோடு கூட்டு என்பதால் ஆணவப் படுகொலைகள் நடந்த பொழுது கள்ள மவுனம் சாதிப்பதே அவரின் வழக்கமாக இருந்தது. திமுகவை போலவே தலித் படுகொலைகள் மீதான அவரின் விசாரணை கமிஷன்கள் கண் துடைப்பாக இருந்தன.
பெண்களின் காவலராகத் தன்னைக் காட்டிகொண்ட ஜெயலலிதா இந்தியாவுக்கு முன்மாதிரியான சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தினார். திமுகச் செய்கிற எல்லாவற்றையும் இழுத்து மூடுவது என்பதற்கு மாறாகப் பெண்கள், குழந்தைகள் சார்ந்த திட்டங்களுக்கு அவர் கூடுதல் நிதி ஒதுக்கினார். ஆனால், அவரின் கட்சியில் பெண்கள் ஓரங்கட்டப்பட்டே இருந்தார்கள். ‘அம்மா வாழ்க’ என்றும், ‘இதய தெய்வம், புரட்சித் தலைவி தங்கத்தாரகை’ அம்மா என்று துதிபாடி, முதுகு வளைத்து தான் பதவியில் நீடிக்க முடியும் என்பதே பாடமாக இருந்தது. உட்கட்சி ஜனநாயகம் இல்லாத கட்சியில் அடுத்தக் கட்டத் தலைவர்களே இல்லாத பொழுது பெண்களின் குரலுக்கு மட்டுமா நியாயமான இடம் கிடைத்துவிடும்?
டாஸ்மாக் என்பதை ஒரு வருமானம் தரும் கற்பகமாக ஜெயலலிதா பார்த்தார். பெண்களின் மீதான வன்முறைக்கும், அடுத்தத் தலைமுறையின் வீழ்ச்சிக்கும் பெருமளவில் வழிவகுக்கும் அதைக்கொண்டே நலத்திட்டங்களுக்கான அரசியலை கட்டமைத்தார். டாஸ்மாக் படிப்படியாக மூடப்படும் என்று சொல்லியிருந்தாலும், டாஸ்மாக் என்பதைத் திமுகவுடன் போட்டி போட்டு அவர் வளர்த்தெடுத்தார் என்பதே உண்மை.

தேர்தலில் வெல்வதற்குத் திமுகப் பயன்படுத்திய அதே சாதிக்கூட்டணி, பணம், படைபலம் ஆகியவற்றையே அவரும் நம்பியிருந்தார். மன்னார்குடி குடும்பம் மாபியா என்கிற அளவுக்குச் செயல்பாடுகள் நிகழ்ந்தன.

பெண்களின் மீதான குற்றங்கள் இந்தியாவிலேயே கம்மியாக இருக்கும் மாநிலம் தமிழகம் தான் என்கிற சாதனையை இரு ஆட்சிகளும் மாறி, மாறிச் செய்ததாக indiaspend அமைப்புச் சொல்கிறது. எனினும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை வழக்கில் தண்டனை பெருமளவு தமிழகத்தில் மிகக்குறைவு. கலப்புத் திருமணங்கள் தமிழகத்தில் மிகவும் குறைவான அளவிலேயே நிகழ்வதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. “அடிப்பவன் நமக்கு ஓட்டு வாங்கித்தரும் ஜாதிக்காரன்.” என்று ஜெயலலிதா கண்டும், காணாமல் இருந்தார். பிற்படுத்தப்பட்டோர் அரசியல் பிராமண எதிர்ப்பில் இருந்து எழுந்து வரும் தலித்துகளை அடக்கும் ஒன்றாக மாறியது அண்ணாவுக்குப் பிந்தைய திராவிட ஆட்சியின் வேதனையான சாதனை. கலப்புத் திருமணம் புரிந்தால் பாதுகாப்பில்லை என்று மேற்கு, வடக்கு வட்டாரங்களில் அஞ்சுமளவுக்குச் சாதியமைப்பின் வன்முறை ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சிகளில் நிறுவனமயமானது.

‘இரும்புப் பெண்மணி’ ஜெயலலிதா என்று புகழ் மாலைகள் பாடுகிறார்கள். சுனில் எனும் பத்திரிக்கையாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தைச் சட்டசபை கொண்டு வந்தது. இந்து ஆசிரியரை கைது செய்யச் சட்டசபை காவல்துறையை அனுப்பி வைத்தது. இந்தியாவிலேயே மிக அதிகமான அவதூறு வழக்குகளைப் போடும் அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது. விளம்பரங்களால் புகழ்பாடும் பத்திரிக்கைகள் வளர்க்கப்பட்டன. ஜனநாயக ரீதியாகக் கேள்வி கேட்கும் கருத்துரிமையை, எதிர்க்குரலை நசுக்கிவிட்டு பொற்கால ஆட்சி எனப் பொய்ப்பரணி பாடிக் கொள்ளலாமா? இந்தக் கருத்துரிமை காலி செய்யும் அரசியல் எம்.ஜி.ஆரின் நீட்சியே ஆகும்.

தமிழகம் இந்தியாவின் முன்மாதிரி மாநிலம் என்று அமர்த்தியா சென், ழான் தெரேஸ் முதலிய பொருளாதார மேதைகள் மெச்சுகிறார்கள். எனினும், நம்முன் எழுந்து நிற்கும் சவால்கள் பெரிதானவை. மணல் மாபியாவான வைகுண்ட ராஜன் முதலியோர் இயற்கையைச் சூறையாடிய பொழுது அதிமுக அதற்குப் பரிபூரண ஆசீர்வாதம் தந்தது.
கல்வித் தந்தைகள் கொள்ளையடித்து, தரம் மலிவான கல்வியைத் தமிழகத்துப் பிள்ளைகளுக்குத் தாரைவார்க்கையில் அதை வேடிக்கையே இரு ஆட்சிகளும் பார்க்கின்றன.

‘ஒரு கோடி, இரண்டு கோடி’ என்று ஏலம் போட்டே துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டு உயர்கல்வியின் தரம் அதலபாதாளத்துக்குப் போய்க்கொண்டு உள்ளது. ஊழலை கச்சிதமாக நிறுவனமயமாக்கி தமிழகத்தின் நீண்ட கால நீடித்த வளர்ச்சி கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை என்பது தமிழகத்தில் இருக்கிறதா என்கிற அளவுக்கு அதன் செயல்பாடுகள் உள்ளன. தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலம் என்பது, ரகுராம் ராஜன் சொன்னது போல, “கண் இல்லாதவர்கள் நாட்டில் ஒற்றைக் கண் உள்ளவன் ராஜா!” என்பதைப்போலத் தான்

ஜெயலலிதா பெண் என்பதால் பல்வேறு அவமானங்கள், அடக்குமுறைகளைச் சந்தித்தார். தமிழகத்தில் அவரின் தனிப்பட்ட வாழ்வைக் கொண்டு அவர் மீது சகதியை தரம் தாழ்ந்த அளவில் வாரி இறைத்தார்கள். தன்னுடைய இருப்பைப் பற்றிய கவலை அவருக்கு அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற காலத்தில் இருந்தது நியாயமானது. ஆனால், இருபது ஆண்டுகாலமாக உட்கட்சி ஜனநாயகமே இல்லை என்பதை நியாயப்படுத்தி விட முடியாது. ஆணாதிக்க அரசியல் என்பது சரி., அந்த ஆணாதிக்கத்தின் கூறாகவே ஜெயலலிதாவும் இருந்தார்.

பெண்கள் ஜனநாயகத்தில் எழுந்துவர முடியாது என்கிற பிம்பத்தை அது தருகிறது. மம்தா கட்சியில் ஓரளவுக்கு ஜனநாயகம் இருக்கவே செய்கிறது. ஷீலா தீட்சித் பதினைந்து வருடங்கள் டெல்லியை ஜனநாயகத் தன்மையோடு ஆள முடிந்திருக்கிறது. சட்டசபையில் எதிர்க்கட்சியின் குரலை 11௦ விதியின் கீழ் எதிர்கொள்வது கூடவா ஆணாதிக்கத்தை அடக்கும் அரசியல்? ஜெயலலிதாவின் எழுச்சி மெச்சத்தக்கது. அதே சமயம், ஜெயலலிதா அதைத்தாண்டிய அவலகரமான ஆட்சியமைப்பையே கட்டி காத்தார். ஒரு பெண்மணி மட்டும் உயர்வது சாதனை, பல்வேறு பெண்கள் மைய அரசியலில் கலக்க வெளியை வழங்குவது தான் நிஜப்பெண்ணியம்.

ஜெயலலிதா ஒரு நேர்முகத்தில் தன்னுடைய வாழ்க்கையை இப்படி விவரித்து இருந்தார்: நான் நாட்டியத்தை வெறுத்தேன். எனினும், இந்தியாவின் தலைசிறந்த நாட்டிய தாரகைகளில் ஒருவராக ஆனேன். நான் வேண்டாம் என்று கதறிய திரையுலகுக்குள் தள்ளப்பட்டேன். அங்கேயும் நான் வெற்றிகரமான நாயகியாக மிளிர்ந்தேன். எனக்கு அரசியலும் விருப்பமானதில்லை. நான் சட்டமும், இலக்கியமும் படிக்க விரும்பினேன். குடும்பச் சூழலால் பத்தாவதோடு என் படிப்பு நின்றுவிட்டது. அதற்கு நான் சுயமாகவே கற்றுக்கொண்டேன். நான் தலைசிறந்த வழக்கறிஞராகப் பாலி நாரிமான், பல்கிவாலா போல மாறியிருப்பேன். விதி என்னை அரசியலுக்கு அழைத்து வந்தது. அதிகாரம் ஒரு தனிமையான இடம். அது முட்படுக்கை, முள்கிரீடம், ஆணிப்படுக்கை. நான் அதை விரும்பவில்லை.
விரும்பாமல் எல்லாவற்றையும் செய்த அவர் தன்னுடைய அகால மரணத்தால் பலரின் விருப்பத்துக்கும் உரியவராக மாறியிருக்கிறார். பெண்கள் நசுக்கும் ஆணாதிக்கச் சூழலில் அவரை முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். தவறில்லை. ஆனால், உரையாடலும், ஜனநாயகமும் அற்ற முன்மாதிரியாக இதயதெய்வம் மாறினால் தமிழகத்தின் இதயத்துக்குத் தான் கேடு!