காந்தியின் இந்தியா


இந்திய விடுதலையில் துவங்கி சமூகச் சீர்திருத்தம்,இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்று பல்வேறு தளங்களில் காந்தியின் பங்களிப்பு வியக்க வைப்பது.

பொதுமக்களுக்கான இயக்கமாக விடுதலை இயக்கத்தை மாற்றியது அவரின் முதன்மையான சாதனை. கட்சியின் உறுப்பினர் கட்டணத்தை நாலணாவாகக் குறைத்தார். மொழிவாரியாக மாகாண அளவில் காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்டது. கட்சியின் நிர்வாகத்தைக் கவனிக்க மத்திய செயற்குழு அமைக்கப்பட்டது. கடைக்கோடி மனிதனையும் அரசியல் போராட்டத்துக்குள் கொண்டுவருவதைக் காந்தி சாதித்தார்.

தென் ஆப்ரிக்காவில் இந்தியா என்கிற அரசியல் கருத்தாக்கம் முழுமை பெறுவதற்கு முன்பே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காந்தி கண்டு உணர்ந்தார். அதனால், இந்தியா என்கிற நாட்டை ஒரு மொழி, ஒரு கலாசாரம், ஒரு மதம் என்று மாற்ற கனவு காணாமல் அனைவருக்குமான தேசமாக இதனைக் கனவு கண்டார்.

தொழிலாளிகள், விவசாயிகள், முதலாளிகள், இடதுசாரிகள், வலதுசாரிகள்,பெண்கள், சிறுபான்மையினர் என்று சகலரையும் உள்ளடக்கியதாகக் காந்தியின் தேசியம் இருந்தது. இதனையே, வரலாற்று ஆசிரியர் முகுல் கேசவன், ‘Noah’s Ark of Nationalism’ என எழுதினார்.

காந்தி நவீன பெண்ணியப் பார்வையில் அணுகினால் சமயங்களில் ஏமாற்றம் தரக்கூடியவர். அவர் பெண்கள் கருத்தடை முறைகளைக் கைக்கொள்வதை விரும்பாதவர். அதே சமயம், இந்தியாவில் பெண்களை அதிகளவில் அரசியல் மயப்படுத்திய மகத்தான பெருமை காந்திக்கு உண்டு. உப்புச் சத்தியாகிரகத்தில் அந்த முயற்சி விஸ்வரூபம் எடுத்தது. ‘இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக ஒரு பட்டியலின பெண்ணே வரவேண்டும்.’ எனக் காந்தி விரும்பினார்.

ஜாதி என்கிற பிற்போக்கான விஷயத்தைப் பிடித்துக் கொண்டு இந்தியர்கள் சக மனிதரை கொடுமைப்படுத்துவதைக் காந்தி பல்வேறு வகைகளில் எதிர்கொண்டார். தீண்டாமைக்கு எதிரான உலகின் மிகப்பெரிய இயக்கத்தைக் காந்தி நடத்தியதாக வரலாற்று ஆசிரியர் டேவிட் ஹார்டிமான் போற்றுகிறார். கோயில் நுழைவுப் போராட்டங்கள் எல்லாத் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு சாதிக்கப்பட்டன. தன்னுடைய இறுதிக் காலத்தில், ‘ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் அவர்களின் திருமணத்துக்கு என்னை அழைக்காதீர்கள். என் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடையாது.’என்று எழுதினார்.

காந்தி எதையும் திணிக்க வேண்டும் என்பதில் உடன்பாடில்லாதவர். பசுவதைக்கான எதிரான தன்னுடைய போராட்டங்களில் கூட முஸ்லீம்களின் நம்பிக்கையைப் பெற்றே செய்ய வேண்டும்,அரசு அதனைத் திணிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

உரையாடல் என்பது எப்பொழுதும் அவசியம் என்பதில் காந்திக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன்னுடன் முரண்பட்ட சுயராஜ்ய கட்சியினரை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே இயங்க அனுமதித்தார். அம்பேத்கருடன் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்தினார், அவருடன் பல சமயங்களில் வேறுபட்டாலும் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அம்பேத்கர் ஆவதை உறுதி செய்தார் என்கிறார் ராஜ்மோகன் காந்தி. ஜின்னாவை இந்தியாவின் பிரதமராக ஆக்கியாவது பிரிவினையை நிறுத்தலாம் என்று அவர் முயன்றார். இறுதிக் கணம் வரை முயற்சித்து விடுவது என்பது அவரின் பங்களிப்பு.

காந்தி தொழில்மயத்துக்கு எதிரானவர் இல்லை. இயந்திரமயமாக்கலின் வன்முறைக்கு எதிரானவர். கிராமங்களை நோக்கி நம்முடைய கவனம் திரும்ப வேண்டும், அங்கே சுயாட்சி பாய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே உப்பு,ராட்டை, கதர் என்று பல்வேறு அடையாளங்களின் மூலம் மக்களைச் சென்றடைந்தார்.

காந்தியின் பங்களிப்பு எத்தகையது?அரசியல் அறிவியல் அறிஞர் சுனில் கில்னானியின் வரிகள் சரியான பதிலாக இருக்கலாம்:

காந்தி இல்லாமல் போயிருந்தாலும் இந்தியாவுக்கு விடுதலை கிட்டியிருக்கும். எனினும், வன்முறையான, நாட்டைப் பிளவுபடுத்துகிற பாதையில் அது நிகழ்ந்திருக்கும். காந்தி உரையாடல்,சமரசம் ஆகியவற்றை அரசியலின் அடிப்படையாக மாற்றியதன் மூலம் இந்தியர்களை இணைக்கும் ஒரு கருத்தாக்கத்தைத் தந்தார்.

அவர் உருவாக்கிய இந்தியா குறைகள் அற்றது இல்லை. அவர் தீண்டாமையை முழுமையாக ஒழிக்கவில்லை. ஆனால்,அதைச் சட்டரீதியாகத் தடை செய்வதைச் சாதித்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை அவர் சாதிக்கத் தவறினார். எனினும், மத வன்முறை, படுகொலைகள் நடந்த பொழுது அதற்கு எண்ணற்ற இந்தியர்கள் அவமானம் கொள்வதை அவரின் அரசியல் சாதித்தது. மாவோ, ஸ்டாலின் முதலியோர் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களின் வாழ்க்கையை, சிந்தனையை மாற்ற முயன்றார்கள். காந்தி அதற்கு மாறாக அரசு,அதிகாரம் ஆகியவற்றை மக்களுக்காகச் சிந்திக்கும் வகையில் மாற்ற முயன்றார்.

– பூ.கொ.சரவணன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s