எம்.எஸ்.சுப்புலட்சுமி- பேசாத ரோஜா மொட்டா? இசை அரசியா? மௌனமான உணர்ச்சிக்கடலா?


‘வரலாறு என்பது புனிதப்படுத்தல்களால் நிறைந்திருக்கிறது. மகத்தான ஆளுமைகளையும் ரத்தமும், சதையுமாக மனிதர்களாக நடமாட விடவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.’-சுனில் கில்னானி

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என அறியப்படும் ‘பாரத ரத்னா’ எம்.எஸ். பற்றி T.J.S.ஜார்ஜ் எழுதிய வாழ்க்கை வரலாறை படித்து முடித்தேன். எம்.எஸ். அவர்களின் வாழ்க்கையை ரத்தமும், சதையுமாகச் சொல்ல முயன்று இருக்கிறார் ஆசிரியர். இந்த வாழ்க்கை வரலாற்று நூலை எழுதுவதில் சில சவால்கள் இருந்ததை உணர முடிகிறது. எம்.எஸ். பெரும்பாலும் நேர்முகங்கள் தந்தது இல்லை. சதாசிவம் அவர்கள் கடிதங்கள், நேரடி ஆவணங்கள் ஆகியவற்றை வெளியேற விட்டதில்லை. அதனால் நூற்றி ஐம்பது பக்கங்கள் மட்டுமே எம்.எஸ். அவர்களின் வாழ்க்கை விரிகிறது. கர்நாடக சங்கீதத்தின் ஆரம்பம், அதன் வளர்ச்சி, இருபதாம் நூற்றாண்டில் அதன் இரும்புக்கதவுகளை உடைத்துக்கொண்டு பெண்கள் சாதித்தார்கள் என்பவற்றை நூறு பக்கங்களில் நூல் அடுக்குகிறது.

எம்.எஸ். தேவதாசி குடும்பத்தில் பிறந்தார். அளவில்லாத திறமையும், இசைப்பெருக்கும் மிக்கவராக அவர் இளம் வயதிலேயே ஒளிர ஆரம்பித்து இருந்தார். எம்.எஸ். இசையுலகில் நுழைந்த காலத்தில் கிராமபோன், வானொலி ஆகியவை பரவலாக ஆரம்பித்து இருந்தன. இதுவும் அவரைப் பலரிடம் கொண்டு சேர்த்தன. பெண்கள் பொதுவெளியில் பாடக்கூடாது என்கிற அன்றைய கட்டுப்பாடுகளை எம்.எஸ். உடைத்து தள்ளினார். அவர் கும்பகோணத்தில் பாடிய பொழுது மகாமக கூட்டம் இன்னொரு நாள் மீண்டும் அவருக்குக் கச்சேரி தந்தது. பக்கவாத்தியம் வாசிக்க ஆண்கள் மறுத்த காலம் போய், சங்கீத அகாடமியின் கதவுகள் எம்.எஸ். மூலம் பெண்களுக்குத் திறந்தது. எம்.எஸ். பெண் என்பதற்காகப் போற்றப்படாமல் அவரின் அசாத்தியமான இசைத்திறனால் கட்டிப்போட்டார், கலங்க வைத்தார்.

 

Image result for M S SUBBULAKSHMI DEFINITIVE BIOGRAPHY

அவரின் கண் முன்னே எப்படிப் பிற பெண்களின் வாழ்க்கை காமுகர்களால் சீரழிக்கப்படுகிறது என்று கண்டார். தேவதாசி பெண்களைச் செல்வவளம் மிகுந்த குடும்பங்களில் இரண்டாம் தாரமாகவோ, சின்ன வீடாகவோ ஆக்குவது அன்றைய வழக்கம். அம்மா அவருக்குப் பதினாறு வயது ஆவதற்குள் திருமணம் முடித்துவிட முயன்றார். எம்.எஸ். ரயிலேறி வீட்டை விட்டு வெளியேறினார்.

Image result for gnb ms subbu

எம்.எஸ். அவர்களுக்கு ஆனந்த விகடனில் விளம்பரம், விற்பனை முதலியவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த சதாசிவம் முன்னரே அறிமுகமாகி இருந்தார். அவர் எம்.எஸ். உடன் நெருக்கம் பாராட்டினார். அவரின் வீட்டுக்கு தான் மதுரையில் இருந்து தப்பி வந்து சேர்ந்தார். சதாசிவத்தின் மனைவி அபிதகுசலாம்பாள் இரண்டாவது பிரசவத்துக்கு வீட்டுக்குப் போயிருந்தார். அப்படிப்பட்ட சூழலில் தான் அங்கு வந்து சேர்ந்திருந்தார் எம்.எஸ். அம்மா சண்முகவடிவு பெண்ணை மீண்டும் தன்னிடம் வந்து சேர போலீஸ் வரை போய் முயன்று பார்த்தார். எம்.எஸ். அசந்து கொடுக்கவில்லை. அது தன்னுடைய வாழ்க்கையில்லை என்று தெளிவாக இருந்தார்.

சேவாசதனம் திரைப்படத்தில் நாயகி ஆக அறிமுகமானார் எம்.எஸ். எல்லாம் சதாசிவத்தின் மேற்பார்வையில் நிகழ்ந்தது. அடுத்து சகுந்தலை திரைப்படம். நாயகன் ஜி.என்.பி எனப்படும் ஜி.என்.பாலசுப்ரமணியம். இசைத்துறையில் துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தார். அவரின் அறிவு, ஆங்கிலப் புலமை, இசை பாணி, பல்துறை ஞானம் பலரை அவருக்கு ரசிகர் ஆக்கியிருந்தது.

எம்.எஸ். அவரின் இசையால் ஈர்க்கப்பட்டுக் காதல் கொண்டார்.
மெய் உருக காதல் கடிதங்கள் எழுதினார். ‘அன்பே’, ‘கண்ணா’ என்று விளித்து அந்தக் கடிதங்கள் அமைந்தன. ‘என் உயிர், உடல், ஆன்மாவை எடுத்துக்கொண்டவரே’, ‘என் அன்பே, என் ஆருயிரே, உங்களின் கையெழுத்தையும், இசையையும் முத்தமிடுகிறேன்.’ ‘ உங்களின் புகைப்படத்தைக் கட்டியணைத்துக் கொண்டு நான் கண்ணீர் உகுக்கிறேன். உங்களுடைய வண்ணப்படம் என்னிடம் வாய்திறந்து பேசுமா? கண்ணா?’ என்று உருகி, மருகி எம்.எஸ். கடிதங்கள் எழுதினார். ஜி.என்.பி. கண்டுகொள்ளாமல், சரியாகப் பேசாமல், காணாமல் இருப்பது குறித்துக் குறைபட்டுக் கொண்டார்.
இந்தக் கடிதங்களைச் சதாசிவம் கண்டாரா என்று தெரியாது.

 

Image result for gnb ms subbu

சாகுந்தலை திரைப்படம் வெளிவந்த பொழுது சதாசிவம் நாயகன் ஜி.என்.பி யின் பெயரை இருட்டடிப்பு செய்வதைச் சத்தமில்லாமல் செய்தார். ஒரு இதழின் அட்டைப்படத்தில் எம்.எஸ்.-ஜி.என்.பி நெருங்கி இருக்கும் படம் இடம்பெற்றதற்கு அந்த இதழ் ஆசிரியரை கூப்பிட்டு கடிந்து கொண்டார். ‘உங்கள் விளம்பரப்பிரிவு தான் அந்தப் படத்தைத் தந்தது.’ எனப் பதில் சொல்லப்பட்டது. படத்தின் ஒலிப்பேழைகளில் ஜி.என்.பி பெயர் இடம்பெறாமல் போயிருந்தது.

Image result for M S SUBBULAKSHMI DEFINITIVE BIOGRAPHY

சதாசிவத்தின் மனைவி இறந்திருந்தார். மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே இருந்த எம்.எஸ். அவர்களின் திருமணம் செய்துகொண்டார் சதாசிவம். மூன்று காரணங்கள் ராஜாஜி வெறுமனே இணைந்து மட்டும் வாழ்வதை ஏற்கவில்லை. சதாசிவத்தின் குழந்தைகள் எம்.எஸ்.ஸிடம் நன்றாக ஒட்டிக்கொண்டன . மூன்றாவது, ஜி.என்.பி யுடன் எம்.எஸ் க்குக் கிசுகிசுக்கப்பட்ட காதலை கிள்ளி எறியலாம். வாஸந்திக்கு பல வருடங்கள் கழித்துத் தந்த நேர்முகத்தில், ‘எதற்குத் திருமணம் செய்து கொண்டீர்கள். மகிழ்ச்சி தரும் என்பதாலா?’ என்கிற கேள்விக்கு, ‘பாதுகாப்பு தரும் என்பதால் தான்.’ என்று எம்.எஸ். பதில் தந்தார்.

 

Image result for ms sadasivam

எம்.எஸ். தன்னுடைய இசைத்திறமையால் ஆரம்பகாலத்தில் ஒளிர்ந்தார் என்றாலும் சதாசிவத்தின் வருகை அவரின் வாழ்க்கையை அடுத்தடுத்த உயரங்களுக்குக் கொண்டு சென்றது. திருமணத்துக்குப் பிறகு சதாசிவம் சொல்வதே தன்னுடைய வாழ்க்கையின் வழி என்று எம்.எஸ். முடிவு செய்து கொண்டார். மீரா படத்தில் நடித்ததன் மூலம் அதன் கர்நாடக, இந்துஸ்தானி பாடல்களின் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்ட இசைத்தாரகையாக அவர் மாறியிருந்தார். வடக்கில் சரோஜினி நாயுடு தரும் ‘அவர் இசைக்குயில்’ எனும் அறிமுகத்தோடு படம் வெளிவந்து பெரும்பெயர் பெற்றது. ‘கஸ்தூரிபா நினைவு நிதி’ க்குப் பணம் திரட்ட கச்சேரிகள் நடத்தி எம்.எஸ். காந்தி, நேரு ஆகியோருக்கு நெருக்கமானார். ‘நான் வெறும் இந்தியப்பிரதமர். அவரோ இசை அரசி’ என்று நேரு சிலாகிக்கிற அளவுக்கு எம்.எஸ். இசையால் நெக்குருக வைத்தார். ராஜாஜியின் வளர்ப்பு மகன் போலத் திகழ்ந்த சதாசிவம் எல்லாவற்றையும் கச்சிதமாக ஒருங்கிணைத்தார்.

நாட்டியம்,கர்நாடக இசை முதலியவை தேவதாசிகளால் வளர்க்கப்பட்டன. காலப்போக்கில் அவர்களைப் பாலியல் ரீதியில் பெருமளவில் சுரண்டுவது நிகழ்ந்தது. தேவதாசி ஒழிப்புச் சட்டங்கள் தேவதாசி முறையை ஒழித்தது. இன்னொருபுறம் மன்னர்கள், புரவலர்கள் அருகிய நிலையில் அவர்களுக்கான சமூக இருப்பும் அருகியது. இந்த நிலையில், பரதம், கர்நாடக இசை முதலியவற்றில் பிராமணர்கள் தனிக்கவனம் செலுத்தினார்கள். புரவலர்கள் வீட்டில் மட்டும் ஒலித்த இசை, நடுத்தரக் குடும்பங்களில் ஒலிக்கும் சாதனை இவர்களால் நிகழ்ந்தது. ஆனால், வேறொரு மாற்றத்தை புகுத்தினர்.

பரதத்தின் சிருங்கார ரசம் முழுக்கக் காணடிக்கப்பட்டது. அதன் ஆபாச வெளிப்பாடுகளை நீக்கிய ஒரு நாட்டிய முறையைக் கட்டமைப்பதாக பிராமணரான  ருக்மிணிதேவி அருண்டேல்  மேற்கொண்டார். கர்நாடக சங்கீதத்தின் சிருங்கார ரசமும் நீக்கப்பட்டுப் பக்தி ரசம் சொட்ட சொட்ட பாடல்கள் பாடப்பட்டன. ‘பக்தியை வெளிப்படுத்தும் பொழுது சிருங்காரமும் அற்புதமான கலையாகிறது.’ என்று முழங்கிய பால சரஸ்வதி பரதத்தை முந்தைய பாணியிலேயே முன்னெடுத்தார். தன்னுடைய தேவதாசி அடையாளத்தை அவர் பெருமையாகத் தூக்கிப்பிடித்தார்.

எம்.எஸ். அவர்களோ தன்னை ஒரு முழுமையான பிராமணப் பெண்ணாக மாற்றிக்கொண்டார். பக்தி பாடல்கள் மக்களைக் கட்டிப்போட்டார். அவரின் கச்சேரிகளில் நிரவல், ஜ்வலி ஆகியவை நீக்கப்பட்டுப் பஜனைகளால் நிறைவதை சதாசிவம் /பார்த்துக்கொண்டார். சதாசிவம் இல்லாமல் பேட்டிகள் கூட அவர் கொடுக்க மாட்டார். பெரும்பாலான கேள்விகளுக்கு அவரே பதில் சொல்வார். ‘அம்மா பதில் சொல்ல மாட்டார்களா?’ எனக்கேட்கப்பட்ட பொழுது, ‘ஒரு ரோஜா அழகாக மலரும். ஆனால், அதனிடம் எப்படி இப்படி மலர்ந்தாய் எனக்கேட்டால் சொல்லத்தெரியாது. இவரும் அப்படித்தான். நன்றாகப் பாடுவார். எப்படிப் பாடினீர்கள் என்று கேட்டால் சொல்லமாட்டார்.” என்றார் சதாசிவம்.

தன்னுடைய கச்சேரிகளின் மூலம் பல்வேறு அறக்காரியங்களுக்கு வாழ்நாள் முழுக்க நிதி திரட்டினார் எம்.எஸ். சேவையின் மொத்த உருவாக, இசை வாணியாக அவர் ஒளிர்ந்தார். மகசேசே முதல் பாரத ரத்னா வரை அவர் புகழின் எல்லைகள் விரிந்தன. எம்.எஸ். என்கிற இசையரசி சதாசிவம் போன பின்பு கச்சேரிகள் செய்வதை நிறுத்தியிருந்தார். பாரத ரத்னா தரப்பட்டதாக சொன்ன பொழுது கூட சதாசிவத்தின் பிரிவின் துயர் பெருக கண்ணீரோடு அதை எதிர்கொண்டார்.

அவருக்கு என்று தனிப்பாணி இருக்கவில்லை, எம்.எல்.வசந்தகுமாரி போல ஒரு சிஷ்ய பரம்பரையை உருவாக்கவில்லை. எனினும், எம்.எஸ். மனதோடு மனம் இணையும் வித்தையைத் தன்னுடைய இசையின் மூலம் நிகழ்த்தினார். கண்கள் பனிக்க, நெஞ்சம் நிறையக் கச்சிதமான இசையின் மூலம் அவர் கட்டிப்போட்டார்.

Image result for bharat ratna ms

அவரைக் குழப்பங்கள் அற்ற, அடக்கத்தின் உருவாக மட்டுமே கட்டமைக்கும் புகழ் மாலைகளுக்கு நடுவே உணர்வுகளும், காதலும், குழப்பங்களும், பயங்களும் மிகுந்த பெண்ணாக அதே சமயம், அவற்றைத் தாண்டி இசை அரசியாக ஒளிர்ந்த ஒரு வாழ்க்கையை ஜார்ஜ் கடத்தியிருக்கிறார்.

M.S.SUBBULAKSHMI A DEFINITIVE BIOGRAPHY
T J S GEORGE
Aleph Publication
Pages: 262
Price: Rs. 399

எப்பொழுது விழிக்கும் நம் மனசாட்சி?-கடைக்கோடி குடிமக்களின் கதைகள்


எதுவும் நடக்காததைப் போலத் தலையைத் திருப்பிக் கொள்ளலாம். எத்தனை முறை?
உடைந்து அழுகிற மக்களின் கேவல் கேட்பதற்கு எத்தனை காதுகள் வேண்டும்?
சரிந்து விழுகிற மக்களின் மரணங்களை உணர எத்தனை பிணங்கள் இங்கே விழ வேண்டும்?’ – பாப் டைலான்

நம்மைச்சுற்றி இருக்கும் குரலற்ற, முகமற்ற மக்களின் வலிகள், போராட்டங்கள், கண்ணீர் ஆகியவற்றைக் கவனித்து இருக்கிறோமா? ஒருவரின் பிறப்பே அவரின் வாழ்க்கையின் சாபமாக மாறுவதை என்ன என்பது? தங்களால் தேர்வு செய்ய முடியாத அடையாளங்களுக்காகக் கொல்லப்படுபவர்களின் மரணங்கள் நம்மை உறுத்துகிறதா? அடித்து நொறுக்கும் வாழ்க்கையில் ஒரு சிறு நம்பிக்கை கீற்று கூட இல்லாமல் உறைந்து போயிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்?

இந்திய ஆட்சிப்பணியில் இருந்து பின்னர்ப் பதவி விலகி சமூகச் செயல்பாட்டாளராக இருக்கும் ஹரீஷ் மந்திரின் ‘FATAL ACCIDENTS OF DEATH’ நூல் இவற்றுக்குப் பதில் தர முயல்கிறது. பல்வேறு சமூக அநீதிகளில் குலைந்து போன பதினேழு மனிதர்களின் வாழ்க்கையின் வழியாகச் சமூகத்தின் கசடுகள், உண்மைகள், அவலங்கள் ஆகியவற்றை முகத்தில் அறைந்தது போல எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் நூல் கடத்துகிறது.


Image result for fatal accidents of birth
குஜராத் கலவரங்களில் குடும்பத்தின் இருபத்தி ஆறு உறவுகளையும்
மதவெறிக்கு பலிகொடுத்து விட்டு நசீப் எனும் இஸ்லாமிய பெண் நீதிக்காக [போராடுகிறார். அன்பு, அமைதி, நீதி, ஒற்றுமை நமக்கு வேண்டும் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் பர்தா அணியாமல் வெளியே சுற்றக்கூடாது என்று இஸ்லாமிய குருமார்கள் சொல்வதை மீறித் தீவிரமாக இயங்கி மாற்றங்களை விதைக்கிறார். மதங்கள் மகளிரை அடக்கவே முயல்கின்றன என்று தோன்றுகிறது.

நிமோடா எனும் ராஜஸ்தானின் கிராமத்தில் பல வருட வருமானத்தைக் கொட்டி அனுமானுக்குச் சிலை எழுப்பிய பன்வாரிலால் எனும் தலித் அந்தக் கோயிலை திறக்க ஆதிக்க ஜாதியினர் விட மறுக்கிறார்கள். புரோகிதர் கிடைக்காமல் திணறுகிறார். அல்லலுற்று, அவமானப்பட்டுக் கோயிலை துவங்கினாலும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். நீதி கேட்டுப் போராடியும் சமரசம் செய்து கொண்டே ஊருக்குள் குடும்பம் அனுமதிக்கப்படுகிறது. தன்னுடைய இறைவனின் சந்நிதிக்குள் யாருமே நுழையாமல் தன்னைப் போல அவரும் தீண்டப்படாதவராக இருக்கிற வெம்மையோடு இறந்தும் போகிறார் அவர்.

சென்னையில் பிச்சைக்காரர்களைக் கைது செய்து தங்கவைக்கும் இல்லம் எப்படியிருக்கிறது என்பதை மாரியப்பன் என்பவரின் வாழ்க்கையின் மூலம் காட்டுகிறார் ஹரீஷ். சுற்றி காம்பவுண்ட் இல்லாததால் அடைத்துவைக்கப்பட்டுப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். மல வாசனை மூக்கை எப்பொழுதும் துளைக்கிறது, தண்ணீர் பச்சை நிறத்தில் வந்து வயிற்றைக் குமட்டுகிறது. கைத்தொழில் சொல்லித்தர எந்த ஆசிரியரும் இல்லை. ஒழுங்கான உணவு என்பது வெறுங்கனவு மட்டுமே. மருத்துவ வசதிகள்கை இருப்பதே இல்லை. கையேந்தி பிழைப்பது அவமானம் என்று கைது செய்யப்பட்ட இடத்திலும் சற்றும் கருணையில்லாமல் கழியும் கொடிய வாழ்க்கை கண்முன் வந்து கனக்கிறது.

தன்னுடைய உடல்நலம் முற்றிலும் குன்றிப்போன கணவனைக் காப்பாற்ற வாங்கிய கடனுக்குத் தன்னுடைய மகளைத் தத்தாகக் கொடுக்கிறார் லலிதா எனும் ஓடியாவை சேர்ந்த பெண்மணி. நல்ல சோறு சாப்பிட்டு, நல்ல வாழ்க்கையை மகள் வாழட்டும் என்கிற எண்ணம். ஆனால், அதிகாரிகளுக்கு விஷயம் தெரிந்து கடன் கொடுத்தவர் கைது செய்யப்படுகிறார். மகள் திரும்பவும் ஒப்படைக்கப்படுகிறார். அவரும் நோய்வாய்ப்பட்டு மருந்து வாங்க காசில்லாமல் இறந்து போகிறார். காசுக்கு விற்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பொழுது ஓடிவந்த யாரும் மகள் இறந்து போன பொழுது வரவே இல்லையே என்று அரற்றுகிறார் லலிதா.

Image result for fatal accidents of birth

தனம் என்கிற தண்டபாணி திருநங்கையாக வாழும் தங்களின் வலி மிகுந்த வாழ்க்கையை இயல்பாகச் சொல்கிறார். ஒன்று புணர்ந்து விலகும் மாமிசப் பிண்டமாக ஆண்கள் காண்கிறார்கள், இல்லை அருவருப்புக்கும், அவமானத்துக்கும் உரியவர்களாக விலகி செல்கிறார்கள். நாங்கள் உணர்வும், அன்பும், கனவுகளும் மிகுந்த மனிதர்கள் என்று யாரும் எண்ணவே மாட்டார்களா என்று அவர் கேட்டுவிட்டு மவுனம் கொள்கிறார். . தனம் தன்னுடைய அப்பாவின் மரணத்தின் பொழுது கூட அருகில் செல்ல முடியாமல் பரிதவிக்கிறார். தனியே குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு திரும்பி விடுகிறார். ‘பானையைச் செய்ஞ்சு வெய்யில வைக்கிறப்ப சிலது உடைஞ்சு போயிரும். யாரை அதுக்குக் குறை சொல்ல. உடைஞ்சது உடைஞ்சது தான்.’ என்கிறார் தனம் ஹரீஷ் எழுதுகிறார் “அங்கே எதுவும் உடைந்திருக்கவில்லை.”என்றே நான் உணர்ந்தேன்.

நிர்பயா வன்புணர்வில் ஈடுபட்ட மைனர் சிறுவன் மறுவாழ்வு மையத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது அவனைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டங்கள் திருத்தப்பட்டன. மருத்துவ நிபுணர்களின் எதிர்ப்பை மீறி பதினாறு வயது சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கும் பெரியவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளை ஆய்வுக்குப் பிறகு தரலாம் என்று திருத்தும் கொண்டுவரப்பட்டது. அந்தச் சிறுவனின் கதை பேசப்படவே இல்லை.

Image result for fatal accidents of birth

பதிமூன்று வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவனுடைய அம்மா வறுமை, அடி, உதை ஆகியவற்றோடு நோய்வாய்ப்பட்ட கணவனிடம் சிக்கி வெந்து நொந்து மகனை பதினோரு வயதில் நகரத்துக்கு வேலை தேடி அனுப்புகிறார். சமூகத்தில் எந்தக் கணத்திலும் வாய்ப்புகளோ, கனிவோ, வழிகாட்டுதலோ கிடைக்காமல் போன அவன் இந்தக் கொடுங்குற்றத்தை செய்கிறான். அவனைத் தூக்கில் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தாண்டி நீதிபதி சட்டப்படி மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கிறார். அவன் பக்திமானாக மாறுகிறான். நன்றாகச் சமையல் செய்யக் கற்றுக்கொள்கிறான். அழகான ஓவியங்கள் வரைகிறான். அவனைக் கொன்று விடலாம். அவனை உருவாக்கும் சமூகத்தின் கொடுமைகளை?

Image result for fatal accidents of birth

ரோஹித் வெமுலாவின் வாழ்க்கையின் மூலம் ஆசிரியர் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஆழமானவை. வாழ்வதற்கும், கார்ல் சேகனை போலப் பிரபஞ்சத்தைத் தொட கனவு கண்ட ஒரு பேரறிஞனை உதவிப்பணத்துக்குக் கையேந்து விட்டு கொல்லும் அவலம் நெஞ்சை சுடுகிறது. சாவிலும் கடனை திருப்பிக் கொடுங்கள் என்று அவர் எழுதும் கடிதம் என்னவோ செய்கிறது.

ஹரீஷ் மந்தர்
பக்கங்கள்: 203
விலை: 399
SPEAKING TIGER வெளியீடு

 

தெய்வம் என்பதோர்-தொ.பரமசிவன்


தொ.பரமசிவன் அவர்களின் ‘தெய்வம் என்பதோர்’ நூலை படித்து முடித்தேன். பெரும்பாலான கட்டுரைகள் சிறு தெய்வங்கள் குறித்ததாகவும், பிற பக்தி இயக்கம், பாரதி, பெரியார் என்றும் நீள்கின்றன.

Image result for தெய்வம் என்பதோர்பழந்தமிழர்களின் தாய்த்தெய்வ வழிபாடு அரசுகள் உருவான பொழுது கொற்றவை என்று மாறியது. கொல் என்பதே கொற்றவைக்கு வேர்ச்சொல்லாகும். இந்தக் கோயில்களின் பூசாரிகளாகப் பிராமணர் அல்லாதாரான பண்டாரம், வேளார், உவச்சர் ஆகியோர் திகழ்ந்தார்கள்.தாய் தெய்வங்களை வைதீகம் தனதாக்கி அம்மன், தாயார் என்று அமரவைக்க முயன்றாலும் தன்னுடைய தொன்மையின் எச்சங்களை அப்படியே தாய்த்தெய்வங்கள் காக்கவே செய்கின்றன. பொங்கல், முளைப்பாரி, சாமியாட்டம், ரத்தப்பலி ஆகியன நடைபெறும் பெருந்தெய்வங்கள் தாய்த்தெய்வங்களே ஆகும்.

தந்தை தெய்வம் இல்லாமல் தனித்த தாய் தெய்வமாகக் குமரி தெய்வத்தைத் தமிழர்கள் கொண்டாடி இருப்பது கல்வெட்டுக்களின் மூலம் தெரிகிறது. கடல்கெழு செல்வியாக, பிற்காலத்தில் மணிமேகலை தெய்வமாக இவளே நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் தொ.ப.

மதுரை மீனாட்சி அம்மன் பாண்டியரின் குலதெய்வம் என்பதை உணர்த்தும் வண்ணம் வேப்பம்பூமாலையைச் சூடுவது வேறு எங்கும் தமிழகத்தில் அறியாத சடங்காகத் திகழ்கிறது. பெண்ணுக்கு மட்டுமே அரசாட்சி உரிமை என்பதை இக்கோயிலின் சடங்குகள் சுட்டுகின்றன.

திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில் பூசாரி புடவை சுற்றிக்கொண்டு பூசை செய்வது நிகழ்கிறது. தலையை அறுத்து பலிகொடுக்கும் நவகண்டம் பூசைகள் இருந்ததைச் சிற்பங்கள் காட்டுகின்றன. இது நரபலி கொடுக்கும் உக்கிரமான தாய்த்தெய்வ கோயிலாக இருந்திருக்க வேண்டும்.

பங்காரு காமாட்சி என்பது தெலுங்கு பேசும் பொற்கொல்லர்களின் தெய்வமாகும். வைதீகத்தின் கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு முன்பு காஞ்சி காமாட்சி கோயில் விஸ்வகருமாக்கள் வசமே இருந்திருக்கிறது என வாய்மொழிக் கதைகள் உண்டு. காமகோட்டம் எனும் தாய்த்தெய்வ இடத்தையே காமகோடி என மாற்றிக் கொண்டது வைதீகம்.

Related image

பத்திரகாளி என்கிற பெயரில் பெரும்பாலும் வழிபடுவது நாடார்கள். உலகம்மை, உலகம்மாள் எனும் தெய்வங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட்டதாக இருக்க வேண்டும். கத்தோலிக்கம் இங்கு வேரூன்றிய பொழுது வீரமாமுனிவர் இயேசுவின் அன்னையை உலகநாயகி எனப் பெயர் சூட்டி கோயில்களை உருவாக்கினார். இயேசுவே ஆலயத்தின் மையம் என்றாலும், தாய்த்தெய்வ வழிபாட்டில் மூழ்கிப்போன கிறிஸ்துவர்கள் அல்லாத தமிழர்கள் ‘மாதா கோயில்’ என்றே அழைப்பதை கவனிக்க வேண்டும். அம்பிகா யட்சி எனும் சமண தெய்வமே இசக்கியம்மன், பகவதியம்மன் என வழிபடப்படுகிறது. பொன்னியம்மன் என்பதும் ஜ்வாலா மாலினி எனும் சமணச் சமய பெண் தெய்வமே ஆகும்.

நீலி என்கிற பெண்ணை வணிகக் குலத்தைச் சேர்ந்த கணவன் கொலை செய்கிறான். வேறொரு திருமணம் செய்துகொண்ட பின்னர்ப் பேயான அவள் மனைவி போலத் தோன்றுகிறாள். கையில் கரிக்கட்டையைக் குழந்தையாக்கி கொண்டு மாயம் செய்கிறாள். அப்பா என்கிறது குழந்தை. அவனோ உடன் செல்ல மாட்டேன் என்கிறான். நீலி கண்ணீர் மல்க நிற்கிறாள். பழையனூர் வேளாளர்கள் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்கிறார்கள். ஒருவேளை அவன் அவன் பேய் என்று சந்தேகிக்கும் பெண்ணால் கொல்லப்பட்டால் தாங்கள் தீக்குளிப்போம் என்கிறார்கள். அவனை நீலி கொள்ள அவர்கள் தீப்பாய்கிறார்கள். இங்கிருந்து தான் நீலிக்கண்ணீர் எனும் பதம் வருகிறது.

நீலி தன்னைக் கொன்ற கணவனைப் பழி வாங்கினாலும் அது வசைக்குரிய ஒன்றாக மாறியிருப்பதைக் காண வேண்டியிருக்கிறது. அதேசமயம் வாணிகர்-வெள்ளாளர் முரண்பாடும் வெளிப்படுகிறது. காப்பியங்கள் வணிகர்களைப் போற்றியதையும், பக்திக்காலத்தில் பெரும்பாலும் நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதையும் இணைத்துக் கவனிக்க வேண்டும்.

முருகு வழிபாடு, வள்ளி வழிபாடு தனித்தனியே தமிழகத்தில் வழங்கி வ்வந்திருக்கின்றன. நாவுக்கரசர் முருகனின் இணையாக வள்ளியை குறிப்பிடுகிறார். மற்ற பக்தி இயக்க முன்னோடிகள் முருகனுக்கு இணையாக யாரையும் சொல்லவில்லை. அதேசமயம், தெய்வானையைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் வைதீகத்தில் முருகன் கார்த்திகேயனோடு இணைந்து வள்ளி-தெய்வானை என இருவருக்குக் கணவனாக மாறுகிறார். இந்த நெடிய பண்பாட்டு வரலாற்றைக் கணக்கில் கொள்ளாமல் கமில் சுவலபில் முதலிய தேர்ந்த அறிஞர்களே முருகனின் முதல் மனைவி தெய்வானை என்கிறார்கள்.

காயஸ்தர்கள் முதலிய வடநாட்டு கணக்கு எழுதும் சாதியினரின் கடவுளாக இருந்த சித்திர குப்தன் தமிழகத்தில் தெய்வமாக மாறிய பொழுது பிறப்பு-இறப்பு சார்ந்து நியாயக் கணக்கு பார்க்கும் பொறுப்புக்கு உரியவராக மாற்றப்பட்டு இருப்பது சுவையானது.

திருநெல்வேலியின் சிங்கிகுளத்தில் ஒரு சமணக் கோயில் உள்ளது. சமணம் திருநெல்வேலியை விட்டு வெளியேறி எழுநூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. நேமிநாதர் எனும் 23வது தீர்த்தங்கரர், அவரின் இணையான அம்பிகா யட்சி ஆகியோர் முனீஸ்வரர், இசக்கியம்மன் என்று இங்கே மாறியுள்ளார்கள். பலி முதலியவை இந்தக் கோயிலில் இல்லை. நேமிநாதர் பின்னுக்குத் தள்ளப்பட்டு அம்மன் வழிபாடு முன்னணி பெற்றிருக்கிறது. வைதீகம் பிற மதங்களின் இடங்களை நொறுக்குவதைச் செய்திருக்கையில், நாட்டார் மரபு அந்தத் தெய்வங்களைத் தனதாகக் காண்பதை, ‘மதச்சகிப்பின்மை என்று ஒன்று இல்லை.’ எனும் பணிக்கரின் வரிகளோடு ஒப்பிட்டு தொ.ப புரிய வைக்கிறார்.

வள்ளலார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயங்கினார். சிதம்பரத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் வடலூர் சபையை உருவாக்கி உருவம் அற்ற வழிபாட்டை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் சிதம்பத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் இருந்தது. சைவ மடங்களும் சாதி மரபைப் பேணுபவையாக இருந்தன. இந்தக் காலத்தில் வள்ளலார் சாதி வேறுபாடுகள் அற்ற வடலூர் சத்திய ஞானச் சபையை நிறுவினார். பிராமணர்களுக்கு மட்டுமே அன்னதானங்கள் பெருமளவில் தமிழகத்தில் வழங்குவது பொதுவழக்காக இருந்தது. கடுமையான பஞ்சங்கள் தமிழகத்தைச் சூழ்ந்த நிலையில், ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்று எழுதியதோடு நில்லாமல் எல்லா மக்களின் பசியைப் போக்கும் பெரும்பணியைச் செய்தார் என்பது நோக்கத்தக்கது.

 

Related image

ஆழ்வார் பாசுரங்களில் கண்ணன் பற்றிய குறிப்புகளே அநேகம் வருகின்றன. கீதை பற்றிய குறிப்பே இல்லாததைக் கவனிக்க வேண்டும், கண்ணன் என்பவனைப் பெருந்தெய்வமாக அவர்கள் பாடினாலும், சௌலப்பியம் மிக்க எளியவனாக அவனின் லீலைகளைப் பாடுகிறார்கள். ராதை எனும் அத்தை வடக்கில் அவனின் துணையாக இருக்க, தமிழகத்தில் முறைப்பெண்ணான நப்பின்னை அவனின் துணை என்று கதைகள் அமைகிறது. இந்த முறைப்பெண் உறவு திராவிடப் பகுதிக்கே உரியது என்பார் ஹட்டன்.

பாரதி சைவ மரபில் ஊறி வளர்ந்தவர். அவரின் மாமா கூடச் சிவ பூசை செய்பவராகப் பாரதி குறிப்பிடுகிறார். கண்ணன் பாட்டில் கூட மூன்று இடங்களில் சிவ யோகம் எனும் வரி வருகிறது. பின்னர் ஏன் வைணவ கண்ணன் குறித்துப் பாரதி பாடினான்? மதக்கொலைகள், கோத்த பொய் வேதங்கள் என்று பலவற்றைப் பாரதி சாடுகிறான்.
கண்ணன் என் காதலி என்று புரட்சி செய்கிறான். இறைவனை ஆண்டானாக, வேலையாளாக மாற்றி விளிம்பு நிலை மனிதனின் குரலை பதிகிறான். பாரதிக்கு மையத்தைக் கலைத்துப்போடும் பெரும் கனவு இருந்திருக்கிறது. அதிகார பீடங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் பிரதியாக ஜனநாயக தன்மையைக் கண்ணனைக் கொண்டு அவர் முயற்சிக்கிறார். ‘வேண்டுமடி எப்பொழுதும் விடுதலை’ எனப்பாடிய பாரதி அதிகார மையம் அழித்தல் என்பதையே கண்ணன் பாட்டின் மூலம் நிகழ்த்துகிறார் என்கிறார் தொ.ப.

Image result for kannan paattu

ஆண்டாள் பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இடையர் குலத்தைத் தன்னுடைய பாடல்களில் வடமதுரை, இடைச்சேரி, விருந்தாவனம் என்று பல்வேறு பிற்புலங்களைக் குறிப்பிடுகிறாள். எளிய மக்களின் மொழியில் இன்றும் வழங்கிவரும் சுள்ளி, மேலாப்பு, கட்டி அரிசி, பரக்கழி முதலிய சொற்கள் ஆண்டாளின் பாடல்களில் விரவி வருகின்றன. நாத்தனார் மாலை சூட்டுதல், தலையில் பொரி அள்ளிப்போடுதல் எனப் பார்ப்பனர்கள் பின்பற்றாத மணச்சடங்குகளைத் தன்னுடைய பாடல்களில் பதிகிறாள் ஆண்டாள். புராணங்களில் பெரும் தேர்ச்சி உள்ளவள் ஆண்டாள் என்பது, ‘வினதை சிறுவன்’ எனக் கருடனை குறிப்பதில் இருந்தே புலப்படுகிறது என்கிறார் தொ.ப.

தமிழகத்தில் பார்ப்பனர்கள் பல்வேறு ஜாதியினரியின் சடங்கியல் நடைமுறைகளைத் தங்களுடைய தலைமைக்குக் கீழ் கொண்டுவந்ததே ஆகும். மருத்துவர், பறையர், வள்ளுவர், வண்ணார் எனத் தங்களின் இடத்தைப் பறிகொடுத்தவர்கள் ஏராளம். திருமணத்தின் பொழுது காப்புக் கயிறை அறுக்கும் செயலை வண்ணார்,மருத்துவர் முதலியோர் தட்சணை பெற்றுக்கொண்டு செய்கிறார்கள். ஒருகாலத்தில் திருமணத்தை அவர்களே நடத்தினார்கள் என்கிறார் தொ.ப. சில சமூகங்களில் பார்ப்பன குருக்களுக்குத் திருமணச் சடங்குகளில் உதவி செய்பவர் மருத்துவர் என்பதையும் கவனிக்க வேண்டும்,,

நாட்டார் தெய்வங்களின் அருள் வரம்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அதன் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். திருவிழா களங்களைச் சுத்தம் செய்வது, ஊர் சாட்டுதல், தேர்க்கால்களுக்குக் கட்டை இடுதல் என இவை நீளும். 1830 ல் கிறிஸ்துவர்களாக மாறிய தலித்துகள் கோயில் எடுபிடி வேலைகளைச் செய்ய மறுத்ததை எதிர்த்து லட்சுமி நரசு என்பவர் பிரிட்டிஷ் அரசுக்கு மனு கொடுத்ததைக் கவனிக்க வேண்டும். எல்லா வேலையும் செய்யும் தாங்கள், தேர் வடத்தை இழுக்க உரிமை வேண்டும் என 1989-ல் கண்டதேவியில் தலித்துகள் போராடினார்கள்.

கோவில்பட்டில் தேருக்குக் கட்டை போடும் தலித்துகள் திருவிழாவில் தாங்களும் பங்குகொள்ள உரிமை கேட்க கலவரமானது. முளைப்பாரி எடுக்க ஆதிக்க ஜாதிகளுக்கே உரிமை என்றாலும், அவை சென்ற தெருவை தலித்துகள் சுத்தப்படுத்த வேண்டும், துத்திகுளத்தில் தாங்களும் முளைப்பாரி எடுப்போம் எனத் தலித்துகள் கேட்க விழாவே நடக்காமல் போனது. உஞ்சனையில் கோயில் நுழைவு செய்ய முயன்று ஐந்து தலித்துகள் கொல்லப்பட்டார்கள். குதிரை எடுக்க முயன்று நாடார்களின் தடையை மீறியதால் சித்தனூர் பூச்சி எனும் தலித் கொல்லப்பட்டார். இவ்வாறு நாட்டார் கோயில்களிலும் பழமைக்கும், சமத்துவத்துக்கு இடையேயான போராட்டம் தொடர்கிறது.

பெரியாரியம் பேசுபவர்கள் நாட்டார் தெய்வத்தை ஆதரிப்பது எப்படி என்கிற கேள்விக்குத் தொ.ப. விரிவாகப் பதில் சொல்கிறார். புனித நூல்கள், விதிகள், புனித இருப்பிடங்கள் ஆகியவற்றைக் கொண்டு அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்பும் மதபீடங்கள் செயல்படுகின்றன. நாட்டார் தெய்வங்கள் நிறுவனமயமானவை அல்ல. அவை ஒருவழிபாட்டு முறைமை கொண்டவை அல்ல. ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் தெய்வங்களைப் பிறரும் வழிபடுவது தமிழகத்தில் உண்டு. ஒரு ஜாதியினர் மட்டுமே வழிபடும் தெய்வங்கள் உண்டு என்றாலும் பிறர் வழிபட்டாலும் பெரும்பாலும் தடுப்பது இல்லை. சாமியாடி, பூசாரி ஆகியோருக்குத் தரப்படும் புனிதம் திருவிழா அன்று மட்டுமே இங்கே நிலவும், பிறகு அனைவரும் சமமே. ஊர்த்தெய்வங்களைக் கொண்டு தங்களின் சாதி இருப்பை ஆதிக்க ஜாதியினர் நிறுவ பார்ப்பது உண்மை என்றாலும், நாட்டார் தெய்வங்களின் பிடிமண்ணை எடுத்து வந்து தனி ஆலயங்கள் நிர்ணயிப்பது உண்டு. மக்களின் உற்பத்தி உறவோடு தொடர்புடையவை அவை. கள்ளும், கறியும் இயல்பான தெய்வங்கள் இவை. 90% சிறுதெய்வங்கள் பெண் தெய்வங்கள் தான் ஆகும். சடங்கியல் போர்வையில் இதை வைதீகத்துக்குள் இழுக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. பெண்களைத் தீட்டில்லாதவர்களாக நாட்டார் மரபு காண்கிறது. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என நிராகரிக்காமல் நாட்டார் வழக்கின் தேவையை அதன் குறைகளோடு இணைத்தே காண்பது அவசியம் என்கிறார் தொ.ப.

Image result for periyar

பக்கங்கள்: 112
விலை: 100
தெய்வம் என்பதோர்
காலச்சுவடு
தொ.பரமசிவன்

வங்கதேசம் உருவான சர்வதேச வரலாறு


 

1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH நூல் அறிமுகம். பாகம் 1:

போர்கள் இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். ஆனால், போர்கள் நடந்து முடிந்த பின்னால் மாபெரும் வெற்றி என்றோ, பெருந்தோல்வி என்றோ கதைகள் எழுதப்படுகின்றன. சிலரை நாயகனாக, சிலரை வில்லனாக ஆக்கும் கருப்பு, வெள்ளை கதைகள் தான் போர்கள் சார்ந்து பெரும்பாலும் உலவி வருகிறது. வரலாறு ஆனால் அத்தனை எளியது இல்லை. ‘போர்களைப் புரிந்து கொள்வோம்.’ என்கிறார் ராணுவ வரலாற்று ஆசிரியர் ஸ்ரீநாத் ராகவன்.

 

Image result for 1971 war a global history

 

இந்தியாவின் முன்னணி ராணுவ வரலாற்று ஆசிரியரான அவர் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் பங்களிப்பு, 1971 போர் குறித்த சர்வதேச வரலாறு, நேரு காலத்தில் போரும், அமைதியும் என்று வெவ்வேறு தலைப்புகளில் மிக முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார். அவரின் 1971 இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்த நூலை வாசித்து முடித்தேன்.

நூல் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தில் துவங்குகிறது. இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லை பிரச்சனையைப் போரில் கொண்டு போய்ப் பாகிஸ்தான் நிறுத்தியது. அந்தப் போரை சோவியத் ரஷ்யா சமாதானம் செய்து வைத்து முடித்த ஆறே வருடத்தில் ஏன் இன்னொரு போர் ஏற்பட்டது? மேற்கு, கிழக்கு என்று பாகிஸ்தான் இரு பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது. இந்தியா நடுவில் இருக்க, மனதளவிலும், நாடு என்கிற உணர்விலும் வேறுபடும் பல்வேறு தருணங்கள் இரு பகுதிகளுக்கு இடையே நடந்தன.

ஜின்னா 1948 ஆம் வருடம் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ மொழியாக உருது மட்டுமே இருக்கும் என்றார். 1956-ல் பாகிஸ்தானின் பிரதமரும், வங்காளி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட குவாஜா நஜிமுதீன் உருது மொழி மட்டுமே அதிகாரப் பூர்வ மொழி என்று அறிவிக்க வங்கதேச மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். ரத்த வெள்ளம் ஓடியதற்குப் பின்பு வங்கமொழியும் தேசிய மொழியானது. கிழக்கு பாகிஸ்தானின் சணல் ஏற்றுமதியில் கிடைத்த வருமானம் மேற்கு பாகிஸ்தானை வளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. 1954-1960 காலத்தில் மேற்கின் வளர்ச்சி 3.2% லிருந்து 7.2% ஆக உயர்ந்தது. கிழக்கு பகுதியின் வளர்ச்சி 1.7% லிருந்து 5.2% என்கிற அளவுக்கே உயர்ந்தது. பல்வேறு சலுகைகள் மேற்கு பகுதிக்கே வாரி இறைக்கப்பட்டன. அதிகாரம் பெரும்பாலும் மேற்கு பாகிஸ்தான் வசமே இருந்தது.

வங்கதேசம் என்கிற நாடு உருவாக இந்த மாற்றாந்தாய் மனோபாவமே காரணம் என்று சொல்லப்பட்டாலும் வங்கதேச உருவாக்க வரலாறு என்பது ஸ்ரீநாத் ராகவனின் பார்வையில், ‘சந்தர்ப்பம், தற்செயல், தேர்வு, வாய்ப்பு’ ஆகியவை ஒருங்கே கைகூடி வந்ததால் உண்டான ஒன்று. பாகிஸ்தானை அறுபதுகளில் அயூப் கான் ஆண்டுக் கொண்டிருந்தார். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். மாணவர்களுக்குப் பல்கலையில் கல்வி புதிய விழிப்புணர்வை தந்தது. ஒரு முறை தேர்வில் தவறினால் ஒரே முறை மட்டுமே மீண்டும் தேர்வு எழுத அனுமதி முதலிய விதிகள் கடும் அதிருப்தியை உண்டு செய்தன. 86.5 லட்சமாக இருந்த வறியவர்கள் எண்ணிக்கை 93.3 லட்சமாக உயர்ந்து நின்றது. தலைமை பொருளாதார அறிஞரின் வார்த்தைகளில், நாட்டின் 66% தொழில்வளம், 87% வங்கி, காப்பீட்டு வளங்கள் 22 குடும்பங்களிடம் குவிந்து கிடந்தன.

ஒரு சிறு பொறி தான். பல்வேறு இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். நாடே ரணகளம் ஆனது. எதிர்ப்பின் வெம்மை தாங்காமல் அயூப் கான் விலகி யாஹ்யா கான் எனும் ராணுவத் தளபதிக்கு வழிவிட்டார். ஜனநாயகம், புது அரசமைப்புச் சட்டம் வரும்வரை மட்டுமே தான் பதவியில் இருப்பேன் என்று யாஹ்யா கான் வாக்குத் தந்தார். தேர்தல் வந்தது.

Image result for yahya bhutto

கிழக்குப் பாகிஸ்தானில் அவாமி முஸ்லீம் லீகின் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆறு அம்சத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று போர்க்குரல் கொடுத்தார். உண்மையான கூட்டாட்சி வேண்டும், ராணுவம், வெளியுறவு ஆகியவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும், இரு தனித்தனி நாணயங்கள், தனி நிதிக் கொள்கைகள், தனி அயல்நாட்டுப் பரிவர்த்தனைகள் நிகழ அனுமதி வேண்டும். கிழக்கு பாகிஸ்தானுக்குத் தனிப்படையை வைத்துக்கொள்ள அங்கீகாரம் வேண்டும் என 1966-ல் கொடுத்த கோஷங்களை மீண்டும் எழுப்பினார். கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் அவர் பின்னால் அணிவகுத்தார்கள். மேற்கு பாகிஸ்தானில் பூட்டோ களத்தில் இருந்தார்.

தேர்தல் முடிவுகள் வந்தன. யாரும் எதிர்பாராத வகையில் முஜிபுர் ரஹ்மானின் கட்சி கிழக்குப் பாகிஸ்தானில் 160/162 என்று வென்று இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் 81/138 என்கிற அளவிலேயே பூட்டோ கட்சி வென்றது. ஆட்சி அமைக்க முஜிபுர் உரிமை கோரினார். பூட்டோவுடன் இணைந்து ஆட்சி அமையுங்கள் என்று யாஹ்யா கான் அடம்பிடித்தார். சிந்தும், பஞ்சாபும் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்துவிடும், ஆகவே, முஜிபுரின் கட்சி தனித்து ஆட்சி அமைக்கக் கூடாது என்று பூட்டோ கிளம்பினார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க தேசிய கவுன்சிலின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று முஜிபுர் கோரினார். இவர்களுக்கு அதிகாரத்தைத் தரவேண்டுமா எனக் கடுப்பாக யாஹ்யா கான் பார்த்தார். ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார்.

ஆறு அம்ச திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முஜிபுர் உறுதியாக இருந்தார். தேசிய கவுன்சிலை காலவரையறை இல்லாமல் ஒத்தி வைத்தார் யாஹ்யா. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்துவது போலப் பாவனைச் செய்துகொண்டே, படைகளை ஆசீர்வதித்துக் கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்கள். அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பிணங்கள் விழுந்தன. மொத்தமாக அப்பகுதியின் அமைதி குலைந்து போனது. அப்பகுதி மாணவர்கள் அமர் சோனா பங்களா (என் இனிய பொன் வங்கமே) எனும் தாகூரின் பாடலை தேசிய கீதம் என அறிவித்தார்கள். தனி நாடு என முழங்கினார்கள்.

முஜிபுர் தனி நாடு என்று எங்கேயும் உச்சரிக்கவில்லை. ராணுவச்சட்டத்தை நீக்கிவிட்டு, படைகளைத் திரும்பப் பெறுங்கள். ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடுகள் மீது விசாரணை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரத்தைக் கைமாற்றுவது ஆகிய கோரிக்கைகளை மட்டுமே அவர் வைத்தார். அது நிச்சயம் முடியாது என்று யாஹ்யா-பூட்டோ செயல்களால் சொன்னார்கள். ராணுவத்துக்கு இறங்கி ஆடுங்கள் என்று உத்தரவு தந்தார் யாஹ்யா. முஜிபுர் கைது செய்யப்பட்டார். படுகொலைகள், பாலியல் வன்முறைகள் அரங்கேற ஆரம்பித்தன.

பரவலாக இந்தியாவில் சொல்லப்படும் கதை, இந்திரா வங்கதேசத்தைக் கச்சிதமாகத் திட்டமிட்டு சாதித்தார் என்பதே ஆகும். ஆனால், வரலாறு வேறு வகையாக இருக்கிறது. இந்திரா பாகிஸ்தானில் பிரச்சனை ஆரம்பித்த பொழுது, தன்னுடைய கட்சியில் ஏற்பட்ட பிளவை சமாளிக்கப் போரடிக் கொண்டு இருந்தார். ‘வறுமையே வெளியேறு’ என்கிற கோஷத்தோடு அவர் மீண்டும் மிருக பலத்தோடு ஆட்சிக்கு வந்திருந்தார்.

வங்கதேசம் என்கிற நாடு உருவாக வேண்டாம் என்பதே முதலில் இந்தியாவின் கருத்தாக இருந்தது. தனியாக உருவாகும் வங்கதேசம் அப்படியே மேற்கு வங்காளத்தையும் சேர்த்துக்கொண்டால் என்னாவது என்பது முதல் கவலை. அடுத்து அசாம் வேறு கிளம்பலாம் என்பது அடுத்தக் கவலை. காஷ்மீர் உள்நாட்டு சிக்கல் என்று தொடர்ந்து அழுத்திச் சொல்லிவிட்டு, இப்பொழுது பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது எப்படி என்பது அடுத்தத் தலைவலி. நைஜீரியாவின் BIAFRA எனும் பிரிவினை இயக்கம் நடைபெற்ற பொழுது அரங்கேறிய இனப்படுகொலைகளை ஐநா கண்டுகொள்ளவில்லை.ஆகவே, தனி நாட்டை எல்லாம் எதற்கு உருவாக்கி தலைவலியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே இந்தியா நினைத்தது.

மேலும், இந்திய ராணுவத் தளபதி மானெக்ஷாவின் கூற்றுப்படி, ‘ஏதேனும் செய்யுங்கள் தளபதி. உடனே போர் தொடுங்கள். போர் ஆரம்பித்தாலும் கவலையில்லை.’ என்று இந்திரா கெஞ்சிக்கேட்டும் அவர் போகவில்லை. ஆனால், இது உண்மையில்லை என்று ஆவணங்கள் நிரூபிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் நவீனமயமாகி இருந்தது. 90-120 நாட்கள் இந்தியாவுடன் போர் செய்யும் அளவுக்கு அதனிடம் வலிமை இருப்பதாக இந்திராவிடம் அறிக்கை தரப்பட்டு இருந்தது. ‘ஆயுதங்களைக் குவித்துக்கொண்டு போரில் பருவமழைக்குப் பின்னர் இறங்கலாம். அப்பொழுது பனிக்காலம் என்பதால் இமயமலையைக் கடந்து சீனா வர முடியாது.’ முதலிய வாதங்களை மானெக்ஷா வைத்தததால் இந்திரா பின்வாங்கினார் என்று ராணுவத் தளபதி சொன்னாலும், இந்திராவோ, அரசின் அதிகார மையங்களோ போரில் குதிப்பதை பற்றி அப்பொழுது யோசிக்கவே இல்லை என்பதே உண்மை.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் அகதிகள் என்கிற எண்ணிக்கையில் பல லட்சம் மக்கள் இந்தியாவிற்கு இனப்படுகொலையால் தஞ்சம் புகுந்தார்கள். அதிலும் இந்துக்களைக் குறிவைத்து தாக்குவது தொடர்ந்தது. வந்த அகதிகளில் 80% இந்துக்கள் என்பது இதனைத் தெளிவுபடுத்தும். ஆனால், இதை இப்பொழுது வெளிப்படுத்தினால் இதை ‘இந்து-முஸ்லீம்’ பிரச்சனையாகப் பாகிஸ்தான் மாற்றும் என்று இந்திரா உணர்ந்திருந்தார். வாஜ்பேயியை அழைத்து, இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். IDSA அமைப்பின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் உடனே இறங்கி அடித்தால், வெற்றி பெற்றுவிடலாம். ஒரு தனி நாட்டை உருவாக்கிவிடலாம் என்று அறிவுரை சொன்னார். யாரும் கேட்பதாக இல்லை.

இதற்குச் சற்று முன்பு தான் ரஷ்யா-சீனா உறவு உருக்குலைந்து இருந்தது. செக்கோஸ்லோவாக்கியாவில் ராணுவத்தைக் கொண்டு அரசை அடித்துத் துவம்சம் செய்த கையோடு சோவியத் ரஷ்யா ‘பிரெஷ்னேவ் சாசனம்’ என்று ஒன்றை அறிவித்தது. உலகில் எங்கெல்லாம் சோசியலிசம் சரியாக அமல்படுத்தப்படவில்லையோ அங்கெல்லாம் வந்து சரி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. சீனாவுக்கு வியர்த்தது. உசுரி நதிக்கரையில் இருபடைகளும் மோதிக்கொண்டன. பலத்த சேதத்தை இரு தரப்பும் சந்தித்தன. மீண்டும் சில மோதல்கள். உறவு முறிந்து போனது.

அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் கிஸ்ஸிங்கர் அகமகிழ்ந்து போனார். யாஹ்யா கானை அழைத்துச் சீனாவுடன் உறவு ஏற்படுத்த உதவுமாறு கேட்டார். தூதுவராக யாஹ்யா சென்று /வந்தார். சீனா பொறுமையாகவே அடியெடுத்து வைத்தது. இன்னொருபுறம் அமெரிக்க அதிபர் நிக்ஸன் இந்தியாவிற்குப் பயணம் வந்து போனார். ‘செவ்வாய் கிரகத்துக்குச் சேர்ந்து போவோம்.’என்றெல்லாம் உற்சாகம் பொங்க பேசினார். ஆனால், 1965 போருக்குப் பின்னால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு ஆயுத விநியோகம் கிடையாது என்கிற விதியை தற்காலிகமாகப் பாகிஸ்தானுக்கு மட்டும் தளர்த்தினார். சீனா லட்சியம்.

கிழக்குப் பாகிஸ்தானில் நிலைமை மோசமாகி இருந்தது. சட்டத்தைத் தூக்கிப்பிடித்து, மாகாண சுயாட்சியைத் தரவேண்டும் என்று முஜிபுர் தரப்புக் கேட்டாலும், மூன்றே கட்சிகள் தான் இனி இருக்கும். அவாமி லீக் தடைசெய்யப்பட்டது. முஜிபுர் பொதுவாழ்வில் ஈடுபட வாழ்நாள் தடை என்று அறிவித்தார் யாஹ்யா. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க என்று தானே ஒரு குழுவை வேறு நியமித்தார். கண் துடைப்பு என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்களுக்குத் தெரியும். ராணுவ டாங்கிகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டு இருந்தன.

ரஷ்யா-இந்தியா போட்டுக்கொண்ட இருபது ஆண்டுகால நட்புணர்வு, ஒத்துழைப்பு ஒப்பந்தம் தான் அமெரிக்கா-சீனாவை இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபடாமல் தடுத்தது என்பது பரவலாகச் சொல்லப்படுவது. உண்மையில் நடந்தது இன்னும் சிக்கலானது. சோவியத் ரஷ்யா ஒரு தனி நாடு உருவாவதை விரும்பவில்லை. சீனாவின் ஆதிக்கத்தை அது அதிகப்படுத்தும் என்பது ஒரு கவலை. இரண்டாவது நீர்த்துப்போன பூர்ஷ்வாக்கள் என்றே வங்கதேசம் நாடி போராடியவர்களை அவர்கள் நம்பினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக அமெரிக்கா-ரஷ்யா இருவரும் இந்தச் சிக்கலை அணுகியதில் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. அமெரிக்கா இதைப் பனிப்போரின் நீட்சியாகக் கண்டது. ரஷ்யாவோ அகதிகள் சிக்கல் தனி, பாகிஸ்தானின் அரசியல் சிக்கல் தனி என்று பிரித்துப் பார்த்தது.

இந்தியாவுடன் அந்த ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ளலாம் என்று வெகுகாலமாக ரஷ்யா கேட்டது. எனினும், உள்நாட்டில் நிலைமை தனக்குச் சாதகமாக இல்லாத சூழலில் அதனை அப்பொழுதைக்குச் செய்ய இந்திரா மறுத்தார். கிஸ்ஸிங்கர், ‘இந்தியா பாகிஸ்தான் மீது பாய்ந்தால் சீனா அதன் உதவிக்கு வரும்.’ என்று இந்திய தூதுவர் L.K.ஜாவை எச்சரித்தார். அவ்வளவு தான். வெகுகாலமாக இழுத்தடித்து ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போட்டது.

 

Image result for indira mujib bhutto

பாகிஸ்தானில் பத்திரிக்கையாளராக இருந்த அந்தோணி மாஸிகரென்ஸ் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்று பார்த்த பொழுது பத்து நாட்களில் எப்படிப்பட்ட இனப்படுகொலை நடக்கிறது என உணர்ந்து /கொண்டார். தன்னுடைய நாட்டை விட்டு குடும்பத்தோடு வெளியேறினார். லண்டனின் ‘சண்டே டைம்ஸ்’ இதழில் இனப்படுகொலை என்கிற தலைப்பில் 5000 வார்த்தைகளில் அவர் எழுதிய கட்டுரை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் அம்மக்களுக்கு அனுதாபம் பெருகியது.

Image result for 1971 war
மோசமான பொருளாதாரச் சிக்கலில் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. தரவேண்டிய கடன்கள் கழுத்தை நெரித்தன. பொன்முட்டை கிழக்குப் பாகிஸ்தான் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. உலகம் முழுக்க இருந்த வங்காளிகளைப் பணம் அனுப்ப வேண்டாம் என்று போராளிகள் கேட்டுக்கொண்டது வேறு பெரிய சேதத்தை உண்டு செய்தது. அமெரிக்கா நான் இருக்கிறேன் என்று நிதியுதவி செய்தது. சீனா மசிந்து கொடுத்து விடாதா என்று ஓரமாக வேறு கவனித்துக் கொண்டிருந்தது. சீனா என்ன தான் நினைத்துக் கொண்டிருந்தது?

சீனப்போருக்கு பின்னரும் இந்திய-சீன உறவினில் சிக்கல்கள் தொடர்ந்தன. எல்லையில் சமயங்களில் மோதிக்கொண்டன. சீனா உறவை சீர் செய்யலாம் என முயன்ற பொழுது இந்திரா அதற்கு ஒப்பவில்லை. இன்னமும் சீன வெறுப்பு உச்சத்தில் உள்ளது என உணர்ந்திருந்தார். எனினும் தொடர்ந்து சீனாவுடன் இந்தியா தொடர்பில் இருந்தது. சீனா பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீரின் கில்கிட் பகுதியில் சாலையை அமைத்த பொழுதும் இந்தியா பெரிதாக எதிர்க்கவில்லை.

சீனா பற்றியெரிந்த கிழக்குப் பாகிஸ்தான் சிக்கலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. காரணங்கள் பல. ரஷ்யாவை போலவே சீனாவும் வங்கப்போராளிகளைப் பூர்ஷ்வாக்கள் என எண்ணியது. சீன பாகிஸ்தான் உறவின் முதல் விதையைப் போட்டது சுஹ்ரவர்த்தி எனும் கிழக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரதமர். அப்பகுதியில் பலர் சீன அனுதாபிகளாக இருந்தார்கள். மேலும் 2 சீன ஆதரவு கட்சிகள் கிழக்குப் பாகிஸ்தானில் செயல்பட்டன. உள்நாட்டுப்போர் தன் ஆதரவாளர்களை அழித்து ஒழிப்பதையும் சீனா கண்டது. சீனா நேரடியாகக் களத்தில் இறங்கவோ, பெரிதாகவோ மிரட்டவில்லை. காரணம் மாவோ!

கலாச்சாரப் புரட்சியின் என்கிற பெயரில் பல லட்சம் சீனர்கள் இறக்க காரணமானார் மாவோ. கட்சி, அரசு ஆகியவற்றுக்கு எதிராக ராணுவத்தைக் களமிறக்கியதன் மூலம் ராணுவம் நாட்டில் முதன்மையானது என்கிற நிலையை உண்டாக்கினார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வரவிருப்பது லின் பியாவோ எனும் ராணுவ தளபதி எனக் கருதப்பட்டது. மாவோவிற்கு அரிப்பெடுத்தது. தன் நாற்காலி ஆட்டம் காண்பதாக உணர்ந்தார். லின் பியாவோவை எப்படியேனும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று காய்கள் நகர்த்தினார். அவரோ அசராமல் அரசுக்கு நேர்மையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார். அவரின் மகன் அவசரப்பட்டு ஒரு கிளர்ச்சியை நடத்த முயன்றார். மாவோ அனைவரையும் ஒழித்துக்கட்ட கிளம்பினார். லின் பியாவோ தப்பித்து ஓட வேண்டியதாயிற்று. ராணுவத்தின் பெருந்தலைகள ஒழித்துக் கட்டிவிட்டு பெருமூச்சு விட்டார் மாவோ. அதே காலத்தில் தான் பாகிஸ்தான் உள்நாட்டுப்போரில் தள்ளாடிக்கொண்டு இருந்தது.

 

Image result for srinath raghavan bangladesh

இந்தியா கொரில்லா போர் முறையைப் போராளிகளுக்கு அளித்துக் கொண்டிருந்தது. முக்தி பாஹினி, முஜிப் வாஹினி என இடதுசாரிகளைக் கொண்ட படை எனப் பிரிந்து கிடந்த பல்வேறு குழுக்களுக்குப் பயிற்சி அளித்தது. எனினும் அது போதுமானதாக இல்லை. ஒரு கோடிக்கும் மேல் அகதிகள் இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்திருந்தார்கள். எவ்வளவு தான் தாங்குவது? என இந்தியா உலக நாடுகளிடம் கேட்டது. ஐநா சில எச்சரிக்கை, கொஞ்சம் களப்பணி என்பதோடு நின்று கொண்டது. இரு வல்லரசுகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன.

இந்தியா தன்னுடைய வீரர்களைச் சத்தமே இல்லாமல் போராளிகள் இடையே கலந்து மறைமுகப் போரை நடத்திக்கொண்டு இருந்தது. பாகிஸ்தான் மேற்கு பக்கமிருந்து இந்தியாவைத் தாக்கியது. ஒரு பெண் ஆளும் தேசம் தானே எனக் கொக்கரித்தார்கள். ‘CRUSH INDIA’எனக் கார்களில் அணிந்து கொண்டு திரிந்தார்கள். ஒரு முஸ்லீம் பத்து இந்தியர்களுக்குச் சமம் என நம்பினார்கள்.

போர் துவங்கியது என இந்தியா அறிவித்தது. மேற்கு எல்லையைக் காத்துக்கொண்டு கிழக்கில் படைகள் முன்னேறின.சிட்டகாங், குல்னா முதலிய துறைமுகங்களைக் கைப்பற்றுவது; முக்கிய நதி வழித்தடங்கள், விமானத் தளங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவது; நெல்லிக்காய் மூட்டையைக் கலைப்பது போலப் பாகிஸ்தான் வீரர்களைப் பிரித்து நசுக்குவது எனத் திட்டம் வகுக்கப்பட்டது. எனினும் டாக்காவை கைப்பற்றும் திட்டமில்லை. பத்மா, ஜமுனா, மேக்னா என ஏதேனும் ஒரு நதியை கடந்தாக வேண்டிய பெரும் சவால் இருந்தது. முடிந்தவரை பகுதிகளைக் கைப்பற்றி அங்கே தற்காலிக அரசை கொண்டுவருவது என்பதே இந்தியாவின் திட்டமாக இருந்தது. எனினும் ஒரு வித்தியாசமான வெற்றிக் காத்திருந்தது.

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்த வேண்டும்; தங்களின் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டும்; அரசியல் தீர்வு நோக்கி நகர வேண்டும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சாரம் இந்தியாவிற்கு இதிலென்ன வேலை. ரஷ்யா வீட்டோ மூலம் தடுத்தது. பொதுச் சபையில் 104-11 எனத் தீர்மானம் நிறைவேறி இந்தியா அழுத்தத்துக்கு ஆளானது.

அமெரிக்கா கொதித்தது. சீனா களமிறங்க வேண்டும் எனத் தூண்டி விட்டார்கள். வாயை மட்டும் மென்றது சீனா. ஆயுதங்களை அமெரிக்கா நேரடியாகக் கொடுக்கத் தடையிருந்தபடியால் ஈரான் ஜோர்டான் மூலம் முயன்றது. ரஷ்யாவுக்குப் பயந்து கொண்டு ஈரான் நேரடியாக ஆயுதங்கள் அனுப்ப மறுத்தது.

‘சீக்கிரம் முடித்துத் தொலையுங்கள்’ என இந்தியாவிடம் சோவியத் ரஷ்யா சொன்னது. அமெரிக்கா தன்னுடைய மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை இந்தியப்பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியது. இந்தியப்படைகளுக்கு உத்வேகம் தரும் வகையில் ஒன்று நடந்தது.

 

Image result for 1971 war

கிழக்குப் பாகிஸ்தானில் போராடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் படைகளின் மேஜர் ஜெனரல் ராவ் ஃபர்மான் அலி கான் ஒரு கோரிக்கை கடிதம் எழுதினார். உடனே போர் நிறுத்தம், 72 மணிநேர பரஸ்பர அமைதி, ராணுவ வீரர்கள், மக்கள் ஆகியோரை அவரவரின் பகுதிகளுக்கு அனுப்ப அனுமதிப்பது, பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக எந்தத் தண்டனையும் அளிக்கப்படக்கூடாது என நீண்ட அதன் செய்தி- ‘தோல்வியின் விளிம்பில் பாகிஸ்தான்!’. யாஹ்யா கான் அதைக் கிழித்துப் போட்டாலும் வீடு கலகலத்து விட்டது.

டாக்கா நோக்கி இந்தியப்படைகள் விரைந்தன. போலந்து போரை நிறுத்தவும் எனத் தீர்மானம் கொண்டு வந்தது. சோவியத் ரஷ்யாவின் நட்பு நாடு அது. செய்தி இந்தியா முடித்துக் கொள்ளவும் என்பதே அது. பிரிட்டன் பிரான்ஸ் என இந்திய ஆதரவுப்போக்கு நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்தன. போலந்து தீர்மானத்தில் முஜிபுர் ரஹ்மான் உடன் தான் பேச்சுவார்த்தை எனும் அறிவுறுத்தல் வரைவில் இருந்தாலும் இறுதி வடிவில் இல்லாமல் போயிருந்தது. இந்தியாவிற்கு வேலையில்லை, வங்கதேசம் கனவு என்பது செய்தி.

 

Image result for indira mujib bhutto

போலந்து தீர்மானத்தை ஏற்கவும் என யாஹ்யா ஐநாவில் இருந்த பூட்டோவுக்குத் தொலைபேசியில் உத்தரவிட்டார். ‘ஹலோ என்ன கேக்கலையே’ என மழுப்பினார் பூட்டோ. ‘தெளிவாகக் கேட்கிறது’ என்ற ஆபரேட்டரை வாயை மூடும்படி பூட்டோ சொன்னார். போலந்து தீர்மானத்தைக் கிழித்துப் போட்டார். 93000 பாகிஸ்தான் படைவீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். பூட்டோவுக்கு ராணுவம் வலுவிழந்து தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான காய் நகர்த்தலை முடித்த திருப்தி. வங்கதேசம் உருவானது.

அமெரிக்கா இந்தியாவிடம் சீனா உதவிக்கு வரும் எனப் பொய் சொல்லாமல் போயிருந்தால் இந்தியா ரஷ்யாவோடு ஒப்பந்தம் செய்திருக்காது. சீனாவின் உள்நாட்டுக் குழப்பம் தடுத்திருக்காவிட்டால், அமெரிக்கா பாகிஸ்தானை திவாலாகாமல் காத்திருக்காவிட்டால், போலந்து தீர்மானத்தைப் பூட்டோ கிழிக்காமல் இருந்திருந்தால் வங்கதேசம் உருவாகியிருக்காது.

ஊழல், செயல்திறமின்மை முஜிபுர் ரஹ்மான் ஆட்சியில் மிகுந்து போராட்டங்கள் வெடித்தன. அவசரநிலையைக் கொண்டு வந்தார். குடும்பத்தோடு ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியா சுப்ரமணியம் சொன்னதைப்போல முதலிலேயே போரில் அடித்து ஆடியிருந்தால் பல லட்சம் மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். ராணுவம், அரசியல்வாதிகள், இடதுசாரிகள், கட்சிகள் இடையே அவநம்பிக்கை மிகுந்திருக்காது. நாடு விடுதலைக்குப் பின்பு அப்படி அவலங்களைச் சந்திருக்காது. வங்கதேச உருவாக்கம் இந்திராவின் மகத்தான ராணுவ வெற்றி, மிக மோசமான ராஜதந்திர தோல்வி.

 

Image result for srinath raghavan

 


1971 A GLOBAL HISTORY OF CREATION OF BANGLADESH
ஶ்ரீநாத் ராகவன்
பக்கங்கள் 358
விலை 599
PERMANENT BLACK

பிரமிக்க வைக்கும் போபி சினேட்சிங்கரின் வாழ்க்கை


போபி சினேட்சிங்கர் கையில் மருத்துவரின் அறிக்கை இருந்தது. மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் எனப்படும் தோல் புற்றுநோய் அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. ‘ இன்னும் அதிகபட்சம் ஒரு வருடம் வாழ்ந்தால் உண்டு. என்னலாம் ஆசை இருக்கோ பண்ணி முடிச்சிடுங்க மேடம்.’ என்று சுரத்தே இல்லாமல் மருத்துவர் முணுமுணுத்தார். ஐம்பது வயசெல்லாம் சாகிற வயசா என்று போபிக்கு ஆயாசமாக இருந்தது.

லியோ பர்னெட் எனும் விளம்பர பட வித்தகரின் மகளாகப் பிறந்தார் போபி. ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைகள் விரிந்தன. கல்லூரி முடிப்பதற்குள் திருமணம் நடந்து முடிந்திருந்தது. நான்கு பிள்ளைகள், அப்பாவின் எக்கச்சக்க சொத்து என்று வாழ்க்கை தன்போக்கில் அவரை இழுத்துக் கொண்டு போனது. இந்த வாழ்க்கையை விட்டு ஓடிவிடலாமா என்று தன்னுடைய மனகொதிப்பை கவிதைகளாக வார்த்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவுதான் என்று மருத்துவர்கள் உதட்டை பிதுக்கிய நிலையில் போபி கண்ணீர் வடிக்கவில்லை. தன்னுடைய தோழியின் உந்துதலால் ‘பறவை நோக்கல்’ எனும் ஆர்வம் கொஞ்சமாகத் தொற்றிக்கொண்டு இருந்தது. முதன்முதலில் blackburnian warble  எனும் கருங்குருவியை ஓயாத தேடலுக்குப் பிறகு கண்ட பொழுது அவரின் கண்கள் விரிந்தன. பறவைகள் உலகினில் பாடித் திரிய வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு வாழ்க்கை விதித்த ‘மரணத் தண்டனை’யின் மூலம் அதிகமானது.

ஒரு பைனாகுலர், தொலைநோக்கி, புகைப்படக்கருவி ஆகியவற்றோடு பயணம் போய்ப் பல்வேறு பறவைகளைக் கண்டறிவது அவருக்குப் பொழுதுபோக்காக இருந்தது. வாழ்க்கையின் கடைசி நொடிகள் என்று தெரிந்ததும் அதைச் சாகசமாக மாற்றிக்கொண்டார். மனதில் இதுதான் வாழ்க்கையின் இறுதிக்கணம் என்கிற வேகம் இருக்கிறது. செலவுக்கு அப்பாவின் பணம் இருக்கிறது. போதாதா?

No automatic alt text available.

உற்சாகமாகச் சுற்றிச்சுழன்றார் போபி. கவலைகள் இல்லாமல்
சுற்றிக்கொண்டு இருந்த பறவைகளைக் கவனிப்பது, திடீரென்று அரிய பறவையைக் காண்பது ஆகியவை வீட்டுக்குள்ளே முடங்கிப் போயிருந்த அவரின் வாழ்க்கையில் புது உற்சாகத்தைத் தந்தன. ஆறு மாதங்கள் அலாஸ்காவில் சுற்றி
பறவைகளை நோக்கிவிட்டு மருத்துவரிடம் போனால் புற்றுநோய் மட்டுப்பட்டு இருக்கிறது என்று புருவம் உயர்த்தினார்கள்.

ஐம்பது வயதில் துவங்கிய அந்தச் சாகசம் அடுத்தப் பதினெட்டு ஆண்டுகள் நீண்டது. எதுவும் அவரை அசைத்துப்போடவில்லை. பல சமயங்களில் உடல் முழுக்க அடிபடும். பல்வேறு கண்டங்களில், ஆபத்தான நிலப்பகுதிகளில் தைரியமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். பல்வேறு உள்ளூர் நோய்கள் வேறு தாக்கின. மலேரியா சுரம் கண்டு படுத்த காலங்கள் உண்டு. கைகளை உடைத்துக்கொண்டும் அசராமல் பயணத்தைத் தொடர்ந்த கதைகள் உண்டு. மொத்தமாக ஒரு கை முடமாகிப் போன பொழுது கூட அவரின் தேடல் நின்றதே இல்லை.

பப்புவா நியூ கினியா நாட்டில் உப்பங்கழியில் நின்று கொண்டு பறவைகளை நோக்கிக்கொண்டு இருந்தவரை கடுமையாகத் தாக்கி ஐந்து பேர் வன்புணர்வு செய்தார்கள். தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிய போபி மீண்டும் அதே இடத்துக்கு வந்து தான் விட்டுப்போன பணியை முடித்தார். உலகம் முழுக்கச் சுற்றி பல்லாயிரக்கணக்கான பறவை இனங்களை நோக்கி பதிவு செய்தார்.

Birding on Borrowed Time

சோதனைகள் தொடரவே செய்தன. எத்தியோப்பியாவில் அவரைக் கடத்திக் கொண்டு போன சம்பவம் ஒன்று நடந்தது. ‘கடமை அறியோம், தொழில் அறியோம்’ என்று பறவையைப் போலச் சுற்றி திரிந்ததில் அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ‘கூண்டில் அடைய விரும்பாத பறவை’ எனத் தன்னுடைய மகளை மெச்சிய அவரின் அம்மா புரிந்து கொண்டிருந்திருப்பார். ஆசைமகளின் திருமணத்திலும் இருக்க முடியாத அளவுக்குத் தேடல் தொடர்ந்தது. ‘புதுசா இன்னொரு பறவையைப் பார்த்தாச்சு’ என்று அழகாக விரல் தூக்கி அப்பொழுதும் சிரிப்பார் போபி.
Image result for Phoebe Snetsinger with birds
.

மடகஸ்காரில் ஒரு வேனில் பறவைகளைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தார். வேன் விபத்துக்கு ஆளாகி, நொறுங்கி சம்பவ இடத்திலேயே போபி இறந்து போனார்.சாவதற்கு முன்னால் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டு இருந்த Red shouldered Vanga எனும் அரிய பறவையைக் கண்டிருந்தார். மரணத்தின் வாசலில் இருந்து எது சாகசத்தின் கதவுகளைத் திறந்ததோ அதே பறவை நோக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே அவரின் வாழ்க்கை முடிந்தது எத்தனை மகத்தான முடிவு?

 

Dupattas and respect for Girls. Few questions!


I had seen a Meme in a particular page which claims seeing girls with Dupatta is rare now and henceforth, they salute those who wear it. Lets get this straight. No one should dictate what other person can wear, eat. They come under article 21 which is right to life and liberty.
 
Its very natural for men to get attracted by seeing women. The misogynistic attitude that men are superior, and the thinking that is cultivated continuously through various modes by the society that ‘Women is made of flesh that is to be feasted upon’ creates obnoxious infringement into personal rights of women. These kind of salute to those who wear so and so is nothing different from medieval and present day practices of asking women to wear burqah to protect her from other men. There are people who keep on mocking women wearing leggings and attribute it to rape. The problems lie deeper in our family system where women are seen like an asset to be protected. Doesn’t she has her own emotions, thoughts, independence?
 
Khap panchayats used to dictate what to wear and what not to wear. This is due to power concentration in hands of men who dictate what women should wear. Have women dictated that Men should wear vetti, or shorts should be banned for men as it actually instigates them. Dear fellow men, more than 90% of rapes are marital in India and more than 2/3rd of the rapes of women are the shameful act of people well known to them.
 
Get educated through watching pornography. Learn how to objectify women through cinema songs. Master great art of Eve teasing through tamil cinema heroes. Dont have the guts to talk to girls as its an unholy act. Call the victim of violence as perpetuator of the crime. See wife as someone who should submit herself in bed. Deprive choices of women through casteism and endogamy. The so called worshipping women for wearing sarees, dupatta all exposes the unstable, immature, shallow grounds on which our thinking of women and perspectives had been built upon.

பிரபஞ்சனின் கதை மழை


பிரபஞ்சனின் கதை மழை நூலை வாசித்து முடித்தேன். ஜூனியர் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளும், மேலும் சில படைப்புகளும் இணைந்த கட்டுரைத் தொகுப்பு இது. வெவ்வேறு கதைகளின் வழியாகப் பிரபஞ்சன் பல்வேறு உலகங்களுக்கும், உணர்வுகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறார்.
கதை 1
அதிகார வர்க்கத்தில் தனக்கு மேலே இருக்கும் அதிகாரிகளுக்கு அஞ்சி, அஞ்சி வாழ்ந்து முதுகு ஒடிந்து போகும் பலர் இருக்கிறார்கள். செகாவின் ‘ஒரு குமாஸ்தாவின் மரணம்’ கதை இதை அங்கதமும், வலியும் கலந்து தொட்டுச் செல்கிறது. திரையரங்கில் குமாஸ்தா தும்முகிறார். முன்னால் மேலதிகாரி இருந்து அவர் மீது தும்மல் தெறித்து விட்டதாக உணர்கிறார். திரைப்பட அரங்கு, வண்டியேறும் இடம். அதிகாரியின் வீடு என்று நாள் முழுக்க மீண்டும், மீண்டும் பார்த்துத் தெரியாமல் தும்மியதற்கு மன்னிப்புக் கோருகிறார். இறுதியில் பயத்தில் வெளிறிப் போய் இறந்து போகிறார். பலர் அனுதினமும் செத்து செத்து பிழைக்கிறார்கள். அவ்வளவு தான் வேறுபாடு.

கதை 2

‘மணியன் பிள்ளை’ எனும் திருடனின் சுயசரிதை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சாமர்த்தியமான திருடனான மணியன் பிள்ளை தானே தன்னுடைய வழக்குகளை நடத்துவது வழக்கம். ஒரு சிறுமியின் வாட்சை திருடி விட்ட வழக்கில் தன்னுடைய சாமர்த்தியத்தால் தான் திருடவில்லை என நிறுவுகிறார். அந்தச் சிறுமி உடைந்து அழுகிறாள். மணியன் பிள்ளைக்கு மனம் பதைபதைக்கிறது. ஒரு கடிதத்தை அந்தச் சிறுமிக்கு எழுதுகிறார்:’மகளே உன்னை இனிமேல் நீதிமன்றத்துக்கு இழுக்கமாட்டேன். நீ அழக்கூடாது மகளே. உன்னுடைய வாட்ச் உன்னை வந்து சேரும்’ என்று மனிதத்தோடு அதை மீண்டும் ஒப்புவிக்கிறார்.Image result for மணியன் பிள்ளை

மூன்று திருடர்கள்:
சங்குத்தேவன் தர்மம் எனும் புதுமைப்பித்தன் கதையில் வரும் திருடனும் பணக்காரர்களிடம் கொள்ளையடிப்பவனாகப் பதற வைப்பவனாகத் தோன்றும் சங்குத்தேவை ஏழைப்பெண் ஒருத்தியின் திருமணத்துக்கு மரத்தில் இருந்து பணத்தைத் தூக்கிப் போடுகிறான். சங்குத்தேவன் போன்ற தர்மவான்கள் கதைகளின் மூலம் சாகாவரம் பெறுகிறார்கள். ரோல்தாலின் சிறுகதை ஒன்றில் வரும் ‘விரல் வித்தகன்’ இமைக்குக் கணத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமலேயே அவரின் வாட்ச். பெல்ட். ஷூ லேஸ் என்று அனைத்தையும் பறிக்கிறான். அவனும் ஏழைகளிடம் திருடுவதில்லை. குதிரைப்பந்தயத்தில் யார் வெல்கிறார்களோ அவர்களிடமே கைவரிசை. அவனைக் கைது செய்யக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட போலீஸ்காரரிடம் இருந்து எப்படித் தப்பினான் என்பதைச் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் தெரிந்து கொள்ளுங்கள். மூன்று வெவ்வேறு நாட்டின் கதைகளிலும் திருடர்கள் தங்களுக்கு உரிய தர்மத்தோடு இருப்பது புலப்படுகிறது.

Image may contain: sky and outdoor

வாழ்க்கை வேடிக்கையானது:

சோபி எனும் இளைஞன் கடும் பசியில் இருக்கிறான். அவனுக்கு வேலையுமில்லை. மொத்தமாகச் சிறைச்சாலை போய்விட்டால் வேளாவேளைக்குச் சாப்பாடு கிடைக்கும் எனத் திட்டம். ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் இருந்தால் சிறைக்கு அனுப்புவார்கள் என்று உள்ளே நுழைகிறான். அவனின் கிழிந்த ஆடைகளைப் பார்த்து உள்ளேயே விடவில்லை. இன்னொரு உணவகத்தில் அதையே முயல்கிறான். அவனை அடித்துத் துவைக்கிறார்கள். ஒரு கடையின் கண்ணாடியை உடைக்கிறான். வந்த காவல்துறை அதிகாரியிடம், ‘நான்தான் உடைத்தேன்’ என்கிறான். கிண்டல் என்று நேசத்தோடு சிரித்துவிட்டு நகர்கிறார். ஒருவனிடம் குடையைக் களவாடுகிறான். அவனிடம், ‘குடையைத் திருடிவிட்டேன். என்னைக் காவல்நிலையம் அழைத்துப் போ’ என்கிறான். அவனோ, ‘நான் தான் குடையைத் திருடினேன். நீங்கள் தான் அந்தக் குடைக்குச் சொந்தக்காரர் போல. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.’ எனப் பெரிய கும்பிடு போட்டுவிட்டு நகர்கிறான்.

குடிகாரன் போல நடித்து வம்பு செய்கிறான். ‘இவர்களைக் கண்டுகொள்ளக் கூடாது. அப்படியே போய்விடுவார்கள்.’ என்று காவலர் கடக்கிறார். சர்ச் வருகிறது. குயிலோசை கேட்கிறது. கீதங்கள் இசைக்கின்றன.நிலவொளி பாய்கிறது. நாள் முழுக்க நடந்த நிகழ்வுகளும், மனிதமும், நம்பிக்கை காட்டியவர்கள் முகங்களும் அலையடிக்கின்றன. இனிமேல் உழைத்து வாழலாம் என நினைக்கிறேன். ‘ஒழுங்கா ஜெயிலுக்கு நட. இங்கே என்ன திருட வந்திருக்கியா?’ என ஒரு முரட்டுக்கரம் அவனைத் தள்ளிக்கொண்டு நடக்கிறது.

ஆண்களின் அநீதிகளுக்குப் பெண்களே முள் கிரீடங்கள் சுமக்கிறார்கள்:

மாதவியை விட்டு நீங்கிய கோவலன் பொருள் ஈட்ட மதுரை நோக்கி செல்கிறான். மாதவியின் கடிதம் வருகிறது: ‘என் பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்.’ என்று மன்னிப்பு கோருகிறாள். உயர்ந்த குலத்தவள் கண்ணகி என்று போற்றுகிறாள். உள்ளே நான் உனக்கு நேர்மையாக இருந்தும் பிறப்பால் தாழ்ந்த குலத்தவள் தானே என்கிற குரல் கேட்கிறது. நீ பொய்கள் நீங்கிய ஒழுக்கவாதி என்கிறாள். கைகூப்பி வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு கைவாளோடு நிற்கிறாள். ‘நீயாக நாடாமல் வந்தாய். எதையோ அனுமானித்துக் கொண்டு நீங்கினாய். ஒழுக்கவாதி ‘ என்கிற எள்ளல் தொனிக்கிறது என்கிறார் பிரபஞ்சன்.

‘நடிகை’ எனும் செகாவின் கதை நெகிழ்த்துகிறது. ஒரு ஆடவன் ஒரு நடிகையிடம் உறவு கொள்ளப் போகிறான். கதவு தட்டப்படுகிறது. அவனுடைய மனைவி நிற்கிறாள். தன்னுடைய பிள்ளைகளைப் பசியால் வாடவிட்டு இருவரும் சிக்கன் சாப்பிடுவதாகச் சத்தம் போடுகிறாள். தன்னுடைய நகைகளைப் பிடுங்கி கொண்டு வந்துவிட்டதாகக் கூப்பாடு போடுகிறாள். நடிகை அணிந்திருக்கும் நகைகள் தன்னுடையது இல்லை என்றாலும் எடுத்துக் கொள்கிறாள். கண்டமேனிக்கு ஏசிவிட்டு அவள் நீங்குகிறாள். நடிகை நிற்கிறாள். மெதுவாக ஆடவனிடம் கேட்கிறாள், ‘நீ என்றைக்காவது எனக்கு எதாவது பணமோ, நகைகளோ கொடுத்திருப்பாயா?’. இவன் தலைகுனிந்து, ‘இல்லை’ என்கிறான். அவன் அப்பொழுது ஒன்று சொல்கிறான். “என் மனைவி உத்தமி. அவள் இப்படித் தெருவில் வந்து நின்று போயும், போயும் உன்னிடம் யாசகம் பெறவேண்டி வந்ததே. பாவி.’ என்றுவிட்டு நகர்கிறான்.

Image result for செகாவ்

பரிபாடலில் ஒரு காட்சி. தலைவியின் வளையலும், மாலையும் பரத்தையிடம் இருக்கிறது. தோழிகள் அவள் திருடிவந்தால் என்று எண்ணிக்கொண்டு பலவாறு ஏசுகிறார்கள். ‘வஞ்சனையும், பொய்யும் மிகுந்து இழிவாழ்வு வாழ்பவளே. பன்றிகள் வாய் வைத்து உண்ணும் தொடியே. பலர் படிந்து குளிக்கும் படித்துறையே….’ என்று பலவாறு வசைகள் நீள்கிறது. தலைவன் வருகிறான். தான் தான் அவற்றைக் கொடுத்ததாகச் சொல்கிறான். ‘நீ அணிந்திருக்கும் சிலம்பும் என்னுடையதாகும்.’ என்று பரத்தை சொல்கிறாள். தலைவன் அவன் தந்தது என்று சொன்னதும் தலைவியைத் தலைவனோடு அனுசரித்துப் போகத் தோழிகள் அறிவுறுத்துகிறார்கள். வசை நின்று போகிறது. ஆண்கள் குற்ற உணர்ச்சியைப் பெண்களுக்கே கடத்திவிடுகிறார்கள் என்று காட்டும் மூன்று இலக்கியக் காட்சிகள். இன்றும் பல இடங்களில் இவற்றை நினைவுபடுத்தும் காட்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

இசையும், இலக்கியமும்:

சிதம்பர சுப்ரமணியமின் இதயநாதம் கடையில் வரும் இசையாசிரியரான கிருஷ்ணனிடம் ஒரு பெண் இசை கற்க வருகிறாள். இசை கற்கையில் தன் இதயத்தை இழக்கிறாள். இசை என்கிற தெய்வீக அனுபவத்தைப் பெறாமல் என் மீது இச்சை கொண்டாளே எனத் துணுக்குற்று இசையே கற்பிக்காமல் நாயகன் மவுனியாகிறான். தி.ஜாவின் ஒரு கதையில் வரும் இசைப்பற்றிய ஞானாம்பாளின் வரிகள் எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும்:
‘என் காதை ரொப்புறது தான் பாட்டு. பாட்டு என் மனசை, காதை ரொப்பணும். என் பிராணனைப் போய்க் கவ்வணும். இந்தத் தேகம், உயிர் எல்லாம் மறந்து போகணும்.”

பஷீரின் பேருலகு :

பஷீரின் தேன் மாம்பழம் கதையில் யூசுப் சித்திக் எனும் பக்கீர் வருகிறார். உயிர் போகிற அளவுக்குத் தண்ணீர் தாகம். தண்ணீர் கேட்கிறார். ஒரு இளைஞன் தண்ணீரை ஓடிப்போய்ப் பெற்று வருகிறான். அதில் பாதியை அங்கே துளிர்த்து இருந்து மாங்கன்றுக்கு ஊற்றுகிறார். மீதிப்பாதியை குடிக்கிறார். உயிர்விடுகிறார். சாவிலும் ஒப்புரவு பேணுபவர்கள் எத்தகையவர்கள்?

 

Image result for பிரபஞ்சன்

பிரபஞ்சன் ஒரு கட்டுரையில் எழுதுவது ஏன் கதைகளை வாசிக்க வேண்டும் என்பதை அழகாகக் கடத்துகிறது. அதுவே இந்த நூல் அறிமுகத்தை முடிவாகவும் இருக்கும்: ‘மயிலிறகு குட்டிப்போடாது என்று தெரிகையில் ஒரு குழந்தை தன்னுடைய குழந்தைமையை இழக்கிறது… அது குழந்தைக்கு நிச்சயம் இழப்பு தான்…. அந்த இழப்பின் இடத்தில கலைகளின் இனிமையை வைக்க வேண்டும். பாடலின் சுவையை உணர்த்த வேண்டும். கதைகளின் இன்பத்தை ஊட்ட வேண்டும். இயற்கையோடு உறவாட அவர்களுக்கு நேரத்தையும், சூழ்நிலையையும் உருவாக்கித் தரவேண்டும். ..ஆனால் , நாம் என்ன செய்கிறோம்? வீட்டுப்பாடம், டியூஷன், கல்விச்சுமை என்று குழந்தைகளின் மாலைக்காலத்தைக் களவாடுகிறோம். அமெரிக்காவை நோக்கிய ஒட்டப்பந்தயத்துக்குக் குழந்தைகளைத் தயார்படுத்துகிறோம்.’

கதை மழை
பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்: 96
விலை: 80

நீட் தேர்வு சவால்களும், பயிற்றுமொழி சிக்கல்களும்


நீட் தேர்வு சவால்களும், பயிற்றுமொழி சிக்கல்களும் குறித்த அகரம் அறக்கட்டளை வெளியீட்டை படித்து முடித்தேன். பேராசிரியர். பிரபா கல்விமணி பல்வேறு ஆளுமைகள் எழுதிய நீட் குறித்த கட்டுரைகளையும், பயிற்றுமொழி சார்ந்த விவாதங்களையும் தொகுத்து இருக்கிறார்.

நீட் சார்ந்து நம் முன்வைக்கப்படும் விவாதங்களுக்குள் போவதற்கு முன்னால் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டின் வரலாற்றை நீதியரசர் சந்துரு தொட்டுக் காண்பிக்கிறார். இந்தியா குடியரசு ஆனதற்குப் பிந்தைய முதல் அரசமைப்பு சட்ட சிக்கலே மருத்துவக் கல்வியின் அடிப்படையில் தான் எழுந்தது. மருத்துக்கல்விக்கே விண்ணப்பிக்காத சம்பகம் துரைராஜன் எனும் பெண்மணி தமிழகத்தில் உள்ள COMMUNAL G.O எனப்படும் இட வகுப்புவாரி இட ஒதுக்கீட்டால் தனக்குரிய நியாயமான இடம் மறுக்கப்படுவதாக நீதிமன்ற படியேறினார். அந்த வழக்கை நடத்தியவர் அரசமைப்பு சட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். உச்சநீதிமன்றம் தமிழகத்தின் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு தந்ததற்குப் பின்னால் எழுந்த போராட்டங்களால் முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.

 

Image result for நீட்

தமிழகத்தில் படிப்படியாக இட ஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டுத் தற்போது 69% என்கிற அளவில் உள்ளது. இந்திரா சகானி வழக்குக்குப் பின்னால் 50% தான் இடஒதுக்கீடு தரமுடியும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதால் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு முறை உச்சநீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளானது. 1993-ல் தனிச்சட்டம் இயற்றி அதை ஒன்பதாவது அட்டவணையில் வைத்தாலும் தமிழகத்தின் இட ஒதுக்கீடு செல்லுமா எனும் வழக்கு 22 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டப்படி மருத்துவக் கல்லூரியில் இடங்களை மத்திய அரசே பிரிவு 10A ன் படி அதிகரிக்க முடியும். உச்சநீதிமன்றம் 69% இட ஒதுக்கீட்டில் பாதிக்கப்படும் மாணவர்களுக்குத் தன்னிச்சையாகக் கூடுதல் இடங்களை இடைக்கால உத்தரவின் மூலம் வழங்கி கொண்டு இருக்கிறது.

கோத்தாரி கமிஷன் முதலிய பல்வேறு கல்வி சார்ந்த குழுக்கள் மத்திய அரசு மாநிலப்பட்டியலில் இருக்கும் கல்வியில் தலையிடக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தன. இவற்றுக்கு மாறாக இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த பொழுது கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

தமிழகத்தில் எழுபதுகளுக்கு முன்புவரை மண்டலம், மாவட்டம் என்று பலவகையில் பிரித்து நேர்முகங்கள் முறையின்றி நடத்தப்பட்டுக் கண்டபடி இடங்கள் வழங்கப்பட்டன. இவற்றை எதிர்த்து ராஜேந்திரன், பெரியகருப்பன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளால் அம்முறை நீக்கப்பட்டது.

எண்பத்தி நான்கில் இருந்து தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகளின் மூலம் மட்டும் மருத்துவக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார். 1996-ல் கிராமப்புற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இவை பயன் தந்திருக்க வேண்டும், எனினும், நாமக்கல் முதலிய பல்வேறு மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் பள்ளிகளைத் துவங்கி கோழிப்பண்ணை பள்ளிகள் மருத்துவ இடங்களை அள்ளின. அதிமுக அரசு இந்த இட ஒதுக்கீட்டை 25% அளவுக்குக் கொண்டு சென்றது. உச்சநீதிமன்றம் இது செல்லாது என்றுவிட்டது.

நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களை மருத்துவ, பொறியியல் படிப்பில் சேரவிடாமல் தடுக்கிறது என்று சொல்லி தமிழக அரசு அதனை நீக்கியது. (2005) ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் நடந்த சட்டப்போராட்டத்துக்குப் பின்னால் தமிழக அரசின் முடிவை உச்சநீதிமன்றம் செல்லும் என்றது.

 

Image result for பிரபா கல்விமணி

இப்பொழுது உண்மையில் தமிழ்வழிக்கல்வியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் இதனால் பயன்பெறுகிறார்களா என்கிற கேள்வியை எடுத்துக் கொள்வோம். கடந்த எட்டு ஆண்டுகளின் தரவு இது. கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது 0.9%. ஆக, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களே பெரும்பாலான இடங்களை அள்ளுகிறார்கள் என்பது தெளிவு.

பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்கள் பெரும்பாலான ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. பல்வேறு அரசியல்வாதிகளே இப்படிப்பட்ட பள்ளிகளை நடத்துபவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில் 42% பிள்ளைகள் ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கிறார்கள். மருத்துவக் கல்வியை மாநில அரசுகளிடம் விட்டிருந்த பொழுது எண்ணற்ற முதலாளிகளுக்கு இடங்களை வாரியிறைக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு மருத்துவக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆள் மாறினார், காட்சி மாறவில்லை என்று சுயநிதி கல்லூரிகளின் அட்டூழியம் தொடரவே செய்தது. பல லட்சம் ரூபாய்களைக் கட்டணமாக அவை வசூலித்தன. இவற்றை எதிர்த்து உச்சநீதிமன்ற படியேறியவர்களுக்கு ஆறுதல் தருவது போல நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான அமர்வு 50% இடங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம், மதிப்பெண் அடிப்படையிலான இடம், மீதத்துக்குத் தங்களுடைய விருப்பப்படி இடங்களைத் தருவது என்று தீர்ப்புத் தந்தது.

டி.எம்.ஏ.பை வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உன்னிகிருஷ்ணன் வழக்கு வழங்கிய தீர்ப்பை ஒன்றுமில்லாமல் செய்தது. தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்தியும், விரும்பியபடியும் ஆட்களைச் சேர்க்கலாம் என்று தீர்ப்பு வந்தது. இதனால் பணம் அதிகம் தருபவர்களுக்கு இடங்கள் வாரியிறைக்கப்பட்டன.

இவற்றைச் சரி செய்யும் முயற்சி என்று சொல்லி NEET எனும் தேர்வு கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச மதிப்பெண்களை இத்தேர்வில் மாணவர்கள் பெறவேண்டும். OC-50%, OBC-40% என்று நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பெண்களைக் கடக்கும் மாணவர்களுக்குத் தரப்பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டின்படி 85% இடங்களை நிரப்பிக் கொள்ளலாம். தாய்மொழியில் படித்த மாணவர்கள் தேர்வினை ஆங்கிலம், இந்தியில் எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட பின்பு தமிழ் முதலிய எட்டு மொழிகளிலும் வினாத்தாள் தரப்படும் என்று உறுதி தரப்பட்டது. நீட் தேர்வில் இருந்து ஒரு வருட விலக்கை மாநிலங்கள் நடத்தும் அரசுக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அவசர சட்டத்தின் மூலம் வழங்கியது.

வரும் ஆண்டு முதல் எல்லாக் கல்லூரிகளும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்க வேண்டும். தனியார் கல்லூரிகளும் மாணவர்களை நீட் தேர்வின் மூலமே சேர்க்க வேண்டும் எனப்படுகிறது. ஆனால், இங்கேதான் ஒரு மிக முக்கியமான சவால் இருக்கிறது. பை வழக்கின் தீர்ப்பில் தரப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கான உரிமைகள் பெரும்பாலும் திரும்பப்பெறப் படவில்லை. நீட் தேர்வு மதிப்பெண்களின் தேறிய மாணவர்களைச் சேர்க்கிறார்கள் என்பது உறுதி என்றாலும், அதை மட்டுமே கொண்டு அவர்கள் சேர்ப்பார்களா என்பது கேள்விக்குறி. நீட் மதிப்பெண்கள் பெட்ரா மாணவர்களில் யார் அதிகப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களை 50% இடங்களில் சேர்த்துக்கொள்ள முடியும். இதைத் தடை செய்தால் உச்சநீதிமன்றம் எப்படி எதிர்வினை ஆற்றும் என்று தெரியாது.

இந்த நூலில் ஆங்கிலவழிக் கல்வி என்கிற பெயரில் தமிழகம் கண்டுள்ள பெரும் வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்திய அளவில் நடக்கும் பெரும்பான்மை நுழைவுத்தேர்வில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். AIIMS தேர்வில் வெறும் ஆறு தமிழக மாணவர்களே தேர்ச்சி பெற்றார்கள் என்று பதிவு செய்கிறார்கள். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இடங்கள் ஒப்பீட்டு அளவில் நிறைய என்பதாலும், AIIMS தேர்வு பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததாலும் பல மாணவர்கள் அத்தேர்வுகளை எடுக்காமல் போயிருக்கும் வாய்ப்பை கட்டுரை கருத்தில் கொள்ள மறுக்கிறது. அதேசமயம், சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்படுவது மாநில பாடத் திட்ட மாணவர்களுக்குக் கேடு என்பவர்கள் மாநில அரசின் பாடத்திட்டம் 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதை மறைக்கிறார்கள்.

பல்வேறு அரசுப்பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்களே இல்லை, நீட் தேர்வில் கோரப்படும் +1, +2 பாட அறிவுக்கு நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் தயாராவது சவாலான ஒன்று என்பதை நூல் சுட்டுகிறது. ஆந்திராவை பாருங்கள், கேரளாவை பாருங்கள் அவர்கள் எத்தனை இடங்களை அள்ளுகிறார்கள் அந்தக் கல்வித்தரம் மேம்பட்டது என்று நூலில் கொதிப்புத் தென்படுகிறது. ஒரு மிக முக்கியமான சிக்கலை இந்த நூல் தவற விடுகிறது. ஆந்திராவில் பொருளாதார அறிஞர் ஹரீஷ் தாமோதரன் சுட்டிக்காட்டுவதைப் போலப் பல்லாயிரம் கோடி நுழைவுத்தேர்வு பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது. கேரளாவும் மருத்துவ நுழைவுத் தேர்வில் அதனையே செய்கிறது. இப்படி நுழைவுத் தேர்வு தொழிற்சாலைகள் தமிழகத்தில் கல்லா கட்டும் வாய்ப்பு நீட் தேர்வால் ஏற்பட்டு இருக்கிறது. சுயநிதி பூதத்தில் இருந்து தப்பிப்பதாகக் காட்டிக்கொண்டு நுழைவுத்தேர்வு கொள்ளைக்காரர்கள் கடைபரப்புவது பேசப்படவே இல்லை.

தமிழகம் முழுக்கத் தனியார்மயமாக்கப்பட்ட கல்வியின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது. அரசுப்பள்ளிகளும் மிக மோசமான கல்வியை வழங்குகின்றன. தற்போது நீட் தேர்வுகளில் ஆங்கில வழிக்கல்வி மாணவர்கள் பெற்ற இடங்களை CBSE பாடப்பிரிவில் பயின்ற மாணவர்கள் பெறுவார்கள். இல்லையேல் நுழைவுத்தேர்வுக்குக் காசு கட்டிப் படிக்கும் திராணி உள்ளவர்கள் தேறுவார்கள்.

Image result for நீட் தேர்வு

நீட் இப்பொழுதைய யதார்த்தம். நீட் தேர்வில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றாகச் செயல்படத் தனிப்பயிற்சிகளைத் தமிழக அரசு வழங்கலாம். மேலும், தமிழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது, தகுதியான ஆசிரியர், ஒழுங்கான கட்டமைப்பு, கற்றல் முறைகளில் கொண்டுவரப்பட்டு இருக்கும் CCE முதலிய மாற்றங்களைப் பெருமளவில் முன்னெடுப்பது என்று சவால்கள் ஏராளம். பயிற்றுமொழியாகத் தமிழை மேற்படிப்பில் கொண்டுவருவதை நோக்கி முழுமையான முன்னெடுப்புகள் தேவை என்று நூல் வாதிடுகிறது. பொறியியல் கல்வியைத் தமிழ்வழிப்படுத்தி என்ன பாடுபடுத்தினார்கள் என்பதை உணர்ந்தவன் என்கிற முறையில் நான் கவலையோடு தான் இதைப் பார்க்கிறேன். நீட் தேர்வால் மீண்டும் ஆங்கிலவழிக் கல்வி கற்கும் மாணவர்களே பெரும்பாலும் பயன்பெறுவார்கள். இட ஒதுக்கீடு சார்ந்தும் ஆழமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பணமுள்ளவர்களே இந்திய கல்வி முறையில் பெரும்பாலும் முந்தமுடியும் என்கிற அறையும் நிஜம் இந்த நூலின் மூலம் கடத்தப்படுகிறது.

நீட் தேர்வும் பயிற்றுமொழி சிக்கல்களும்
அகரம் அறக்கட்டளை வெளியீடு
விலை: 50
பக்கங்கள்: 104