உடைந்து அழுகிற மக்களின் கேவல் கேட்பதற்கு எத்தனை காதுகள் வேண்டும்?
சரிந்து விழுகிற மக்களின் மரணங்களை உணர எத்தனை பிணங்கள் இங்கே விழ வேண்டும்?’ – பாப் டைலான்
நம்மைச்சுற்றி இருக்கும் குரலற்ற, முகமற்ற மக்களின் வலிகள், போராட்டங்கள், கண்ணீர் ஆகியவற்றைக் கவனித்து இருக்கிறோமா? ஒருவரின் பிறப்பே அவரின் வாழ்க்கையின் சாபமாக மாறுவதை என்ன என்பது? தங்களால் தேர்வு செய்ய முடியாத அடையாளங்களுக்காகக் கொல்லப்படுபவர்களின் மரணங்கள் நம்மை உறுத்துகிறதா? அடித்து நொறுக்கும் வாழ்க்கையில் ஒரு சிறு நம்பிக்கை கீற்று கூட இல்லாமல் உறைந்து போயிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்?
இந்திய ஆட்சிப்பணியில் இருந்து பின்னர்ப் பதவி விலகி சமூகச் செயல்பாட்டாளராக இருக்கும் ஹரீஷ் மந்திரின் ‘FATAL ACCIDENTS OF DEATH’ நூல் இவற்றுக்குப் பதில் தர முயல்கிறது. பல்வேறு சமூக அநீதிகளில் குலைந்து போன பதினேழு மனிதர்களின் வாழ்க்கையின் வழியாகச் சமூகத்தின் கசடுகள், உண்மைகள், அவலங்கள் ஆகியவற்றை முகத்தில் அறைந்தது போல எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் நூல் கடத்துகிறது.

குஜராத் கலவரங்களில் குடும்பத்தின் இருபத்தி ஆறு உறவுகளையும்
மதவெறிக்கு பலிகொடுத்து விட்டு நசீப் எனும் இஸ்லாமிய பெண் நீதிக்காக [போராடுகிறார். அன்பு, அமைதி, நீதி, ஒற்றுமை நமக்கு வேண்டும் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் பர்தா அணியாமல் வெளியே சுற்றக்கூடாது என்று இஸ்லாமிய குருமார்கள் சொல்வதை மீறித் தீவிரமாக இயங்கி மாற்றங்களை விதைக்கிறார். மதங்கள் மகளிரை அடக்கவே முயல்கின்றன என்று தோன்றுகிறது.
நிமோடா எனும் ராஜஸ்தானின் கிராமத்தில் பல வருட வருமானத்தைக் கொட்டி அனுமானுக்குச் சிலை எழுப்பிய பன்வாரிலால் எனும் தலித் அந்தக் கோயிலை திறக்க ஆதிக்க ஜாதியினர் விட மறுக்கிறார்கள். புரோகிதர் கிடைக்காமல் திணறுகிறார். அல்லலுற்று, அவமானப்பட்டுக் கோயிலை துவங்கினாலும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். நீதி கேட்டுப் போராடியும் சமரசம் செய்து கொண்டே ஊருக்குள் குடும்பம் அனுமதிக்கப்படுகிறது. தன்னுடைய இறைவனின் சந்நிதிக்குள் யாருமே நுழையாமல் தன்னைப் போல அவரும் தீண்டப்படாதவராக இருக்கிற வெம்மையோடு இறந்தும் போகிறார் அவர்.
சென்னையில் பிச்சைக்காரர்களைக் கைது செய்து தங்கவைக்கும் இல்லம் எப்படியிருக்கிறது என்பதை மாரியப்பன் என்பவரின் வாழ்க்கையின் மூலம் காட்டுகிறார் ஹரீஷ். சுற்றி காம்பவுண்ட் இல்லாததால் அடைத்துவைக்கப்பட்டுப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். மல வாசனை மூக்கை எப்பொழுதும் துளைக்கிறது, தண்ணீர் பச்சை நிறத்தில் வந்து வயிற்றைக் குமட்டுகிறது. கைத்தொழில் சொல்லித்தர எந்த ஆசிரியரும் இல்லை. ஒழுங்கான உணவு என்பது வெறுங்கனவு மட்டுமே. மருத்துவ வசதிகள்கை இருப்பதே இல்லை. கையேந்தி பிழைப்பது அவமானம் என்று கைது செய்யப்பட்ட இடத்திலும் சற்றும் கருணையில்லாமல் கழியும் கொடிய வாழ்க்கை கண்முன் வந்து கனக்கிறது.
தன்னுடைய உடல்நலம் முற்றிலும் குன்றிப்போன கணவனைக் காப்பாற்ற வாங்கிய கடனுக்குத் தன்னுடைய மகளைத் தத்தாகக் கொடுக்கிறார் லலிதா எனும் ஓடியாவை சேர்ந்த பெண்மணி. நல்ல சோறு சாப்பிட்டு, நல்ல வாழ்க்கையை மகள் வாழட்டும் என்கிற எண்ணம். ஆனால், அதிகாரிகளுக்கு விஷயம் தெரிந்து கடன் கொடுத்தவர் கைது செய்யப்படுகிறார். மகள் திரும்பவும் ஒப்படைக்கப்படுகிறார். அவரும் நோய்வாய்ப்பட்டு மருந்து வாங்க காசில்லாமல் இறந்து போகிறார். காசுக்கு விற்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பொழுது ஓடிவந்த யாரும் மகள் இறந்து போன பொழுது வரவே இல்லையே என்று அரற்றுகிறார் லலிதா.

தனம் என்கிற தண்டபாணி திருநங்கையாக வாழும் தங்களின் வலி மிகுந்த வாழ்க்கையை இயல்பாகச் சொல்கிறார். ஒன்று புணர்ந்து விலகும் மாமிசப் பிண்டமாக ஆண்கள் காண்கிறார்கள், இல்லை அருவருப்புக்கும், அவமானத்துக்கும் உரியவர்களாக விலகி செல்கிறார்கள். நாங்கள் உணர்வும், அன்பும், கனவுகளும் மிகுந்த மனிதர்கள் என்று யாரும் எண்ணவே மாட்டார்களா என்று அவர் கேட்டுவிட்டு மவுனம் கொள்கிறார். . தனம் தன்னுடைய அப்பாவின் மரணத்தின் பொழுது கூட அருகில் செல்ல முடியாமல் பரிதவிக்கிறார். தனியே குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு திரும்பி விடுகிறார். ‘பானையைச் செய்ஞ்சு வெய்யில வைக்கிறப்ப சிலது உடைஞ்சு போயிரும். யாரை அதுக்குக் குறை சொல்ல. உடைஞ்சது உடைஞ்சது தான்.’ என்கிறார் தனம் ஹரீஷ் எழுதுகிறார் “அங்கே எதுவும் உடைந்திருக்கவில்லை.”என்றே நான் உணர்ந்தேன்.
நிர்பயா வன்புணர்வில் ஈடுபட்ட மைனர் சிறுவன் மறுவாழ்வு மையத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது அவனைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டங்கள் திருத்தப்பட்டன. மருத்துவ நிபுணர்களின் எதிர்ப்பை மீறி பதினாறு வயது சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கும் பெரியவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளை ஆய்வுக்குப் பிறகு தரலாம் என்று திருத்தும் கொண்டுவரப்பட்டது. அந்தச் சிறுவனின் கதை பேசப்படவே இல்லை.

பதிமூன்று வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவனுடைய அம்மா வறுமை, அடி, உதை ஆகியவற்றோடு நோய்வாய்ப்பட்ட கணவனிடம் சிக்கி வெந்து நொந்து மகனை பதினோரு வயதில் நகரத்துக்கு வேலை தேடி அனுப்புகிறார். சமூகத்தில் எந்தக் கணத்திலும் வாய்ப்புகளோ, கனிவோ, வழிகாட்டுதலோ கிடைக்காமல் போன அவன் இந்தக் கொடுங்குற்றத்தை செய்கிறான். அவனைத் தூக்கில் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தாண்டி நீதிபதி சட்டப்படி மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கிறார். அவன் பக்திமானாக மாறுகிறான். நன்றாகச் சமையல் செய்யக் கற்றுக்கொள்கிறான். அழகான ஓவியங்கள் வரைகிறான். அவனைக் கொன்று விடலாம். அவனை உருவாக்கும் சமூகத்தின் கொடுமைகளை?

ரோஹித் வெமுலாவின் வாழ்க்கையின் மூலம் ஆசிரியர் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஆழமானவை. வாழ்வதற்கும், கார்ல் சேகனை போலப் பிரபஞ்சத்தைத் தொட கனவு கண்ட ஒரு பேரறிஞனை உதவிப்பணத்துக்குக் கையேந்து விட்டு கொல்லும் அவலம் நெஞ்சை சுடுகிறது. சாவிலும் கடனை திருப்பிக் கொடுங்கள் என்று அவர் எழுதும் கடிதம் என்னவோ செய்கிறது.
ஹரீஷ் மந்தர்
பக்கங்கள்: 203
விலை: 399
SPEAKING TIGER வெளியீடு