பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும், கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் 3)வது பகுதி இது:
அம்பேத்கர் நமக்கு இன்னமும் ஆழமான சங்கடத்தைத் தந்துகொண்டிருக்கிறார். அதற்கான காரணம் தற்காலத்தில் இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்ன் மையமாகத் திகழும் அம்பேத்கரின் சில கருத்துக்கள் ஆகும். ஒன்று இந்து சமூகம் என்பதன் கட்டமைப்பின் மையமாக வன்முறையே உள்ளது என்பது ஆகும். வன்முறை என்பது வழக்கத்துக்கு மாறாக நிகழ்கிற ஒன்றல்ல. இந்து சமூகத்தின் மேற்புறத்தில் மிதக்கும் குப்பைக் கூளமல்ல வன்முறை. அந்தக் குப்பையைச் சுத்தப்படுத்தினால் இந்து சமூகத்தின் தெளிவான, சுத்தமான நீர்நிலை தென்படும் என்பது புரட்டு. வன்முறையே இந்து சமூகத்தின் அடையாளம், அதன் இயங்குசக்தி. அம்பேத்கரை பொறுத்தவரை நீதியை அடைய இந்து மதத்தின் மீது கிட்டத்தட்ட ஒரு போரை அறிவிப்பதே வழி என்று அவர் கருதியதைப் பூசிமெழுக முடியாது. காந்திக்கு எழுதிய பதிலில் அம்பேத்கர் இப்படி எழுதினார்: ‘ நான் மகாத்மாவிடம் உறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்பு, அவமதிப்பு மிகுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது அவர்களின் தோல்வியால் மட்டும் அல்ல. இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்புக் கொள்ளக் காரணம் அவர்கள் தவறான லட்சியங்களைக் கொண்டவர்களாக, மோசமான சமூக வாழ்வை மேற்கொள்வதாக உளமார உணர்ந்துகொண்டேன். இந்து மதம், இந்துக்களுடனான எனது பிரச்சினை என்பதுஅவர்களின் சமூக நடத்தையில் உள்ள குறைபாடுகள் பற்றியதல்ல. அது மேலும் அடிப்படையானது. அது இந்துக்கள், இந்து மதத்தின் ஆதர்சங்களைப் பற்றியது.’
இப்படிப்பட்ட திட்டவட்டமான அறிவிப்பு அம்பேத்கரைத் தற்காலப் போராட்டங்கள் பலவற்றுக்கும் மிகவும் மையமாக ஆக்குகிறது. நீதியை வென்று எடுப்பதற்கான இயக்கம் என்பது ஒரு பாரம்பரியத்தைச் சீர்திருத்துவதும் அதன் ஆதர்சங்களுக்கு நேர்மையாக அதனை நடந்துகொள்ள வைப்பதும் அல்ல. நீதியை அடைவதற்கு ஒரு பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்க வேண்டியிருக்கிறது. இந்திய கல்விக்கூடங்களில் ஒரு புதிய தலித் விழிப்புணர்வு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இது சமகால இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சாரப் பிளவாக இருக்கப் போகிறது என்று கருதுகிறேன். அம்பேத்கர்-பெரியார் செயல்பாட்டாளர்களுக்கும்,ABVP -க்கும் இடையே உருவாகியிருக்கும் மோதலானது அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினையின் சிறு அறிகுறி மட்டுமே. அடையாள அரசியல் சார்ந்து ஏன் கல்விக்கூடங்களில் மாணவர் அரசியல் தீவிரமடைகிறது என்பதை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் தன்னுடைய விமர்சனத்தில் தாக்க முனைந்தது உலகத்திலேயே மிகவும் ஆச்சரியப்படுத்துவதும், சிறைப்படுத்துவதுமான தத்துவ அமைப்பான பிராமணியமே ஆகும். பிராமணியம் அல்லாத இந்து கருத்தியல் முறைகளையும் அது பெரும் தீமையாய்ப் பற்றிக்கொண்டதால் பிராமணியத்தை அக்குவேறு ஆணிவேராகக் கழற்றி எறியாமல் நீதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இந்து மதம் இருக்கிறது.
அம்பேத்கரின் பெரும்பாலான படைப்புகளை மீண்டும் வாசிக்கையில் மிக முக்கியமான தேடல் ஒன்று புலப்படுகிறது: அது சாதி என்கிற கொடூரமான ஒடுக்குமுறை அமைப்பை எது உற்பத்தி செய்தது என்பதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி. அம்பேத்கரின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் அவற்றின் சமூகவியல் ஆழம், வரலாற்று கூர்மையால் அசரடிக்கின்றன. ஆரியர் படையெடுப்பால் அடிமைப்படுத்துதல் ஏற்பட்டது எனும் கோட்பாட்டை அவர் நிராகரித்தார். சாதி அமைப்பு குறித்து இனத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்ட எல்லா வகையான விளக்கங்களையும் அவர் நிராகரித்தார். சாதி என்பது தொழில்கள் சார்ந்து எழுந்தது என்பது போன்ற விளக்கங்களை அவர் கடுமையாகச் சாடினார். சாதி என்பது தொழில்கள் அடிப்படையிலான அமைப்புமுறை அல்ல, அது தொழிலாளர்களை அடுக்குமுறையில் வைத்து அடிமைப்படுத்தும் முறையாக இயங்கியது என்பதே இந்தக் கடுமைக்குக் காரணம். அம்பேத்கர் எனும் வரலாற்றாளர், இந்தியவியல் அறிஞரின் பலங்களுக்குள் போவது இந்தக் கட்டுரையின் இலக்கு அல்ல. அர்விந்த் ஷர்மாவின் ‘BR Ambedkar, on the Aryan invasion and the Emergence of the Caste System in India’ எனும் கட்டுரையின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
அம்பேத்கரின் ஆய்வுகளின் மூலம் இரு முக்கியமான கூறுகள் தெரிய வருகிறது. சாதி அமைப்பின் வினோதமான தன்மையைப் பொருளியல், தொழில்முறை சார்ந்த விளக்கங்களால் விளக்க முடியாது. சாதியமைப்பின் அடிப்படை பிராமணர்களால் அதிகாரத்தின் செயல்பாடாகத் திணிக்கப்பட்ட கொடூரமான தொடர் பிரதிநிதித்துவப்படுத்தல்களால் ஆனது. தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத்துக்கான வழிகளான அதிகாரம், பொருளாதார வளம், கல்வி ஆகிய மூன்றும் அவர்களுக்கு மறுக்கப்பட்டதன் மூலம் சாதியமைப்பு தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. சாதி அடுக்குமுறையில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தனக்குக் கீழுள்ள இன்னொரு பிரிவினரை ஒடுக்குவதன் மூலம் இன்பம் காணும் கொடூரமான அமைப்பு முறையாக அது திகழ்கிறது. சாதியமைப்பு நிரந்தரமான பாகுபாட்டில் களிப்புக் கொள்கிறது. இதனால் தான் பிராமணியம் மீதான அறச்சீற்றம் அம்பேத்கரிடமிருந்து வெளிப்படுகிறது. எந்த வகையிலும் பிராமணியம் உருவாக்கிய அடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்க முடியாது. அதிகாரத்தைத் தெளிவாக, எளிமையாகத் திணிக்கும் முறை அது. இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது, இந்த ஒட்டுமொத்த கருத்தாக்கத்தை அடித்து நொறுக்கினால் மட்டுமே விடுதலை சாத்தியம்.
இதை நேருக்கு நேராக எதிர்கொள்வது இங்கே நிகழ்வதில்லை. இந்து மதத்தின் சாதி சார்ந்த எல்லா உரையாடல்களிலும் ஒரு வகையான மன்னிப்பு கோரும் தொனியோடு, ‘சாதி ஒரு காலத்தில் தொழில் சார்ந்து இருந்தது’ என்பார்கள். சாதி என்னவோ நியாயமான லட்சியத்தைக் கொண்டிருந்ததைப் போல, ‘சாதியின் இலட்சியங்களோடு அதன் சமூக யதார்த்தம் ஒத்துப்போகவில்லை’ என்று சப்பைக்கட்டு காட்டுவார்கள். சாதி என்பது நியாயப்படுத்த கூடிய கருத்தாக்கம் என்கிற ரீதியில் அவர்களின் உரையாடல் அமையும்.சாதி அமைப்பின் அருவருப்பு ஊட்டுகிற செயல்பாட்டை, ‘சாதி அமைப்பில் பொதுவாக நெகிழ்வுத்தன்மையும், இயக்கமும் இருந்தது’ என்று சொல்லி சீர்கட்ட முயல்வார்கள். ‘சாதி பண்புகளின் அடிப்படையிலானது, பிறப்பின் அடிப்படையிலானது இல்லை.’என்பர். இறுதியாக, சாதியை ஓரளவுக்கு நியாயப்படுத்துவது கூட மிக மோசமான ஒரு சமூக அமைப்பின் கொடூரத்தை உணரவிடாமல் தடுக்க முயலும் கபடநாடகமே ஆகும்.
இன்னமும் மோசமாகச் சாதியமைப்பை நியாயப்படுத்துபவர்கள் இந்து மதம் சமத்துவத்தை உறுதி செய்கிறது என்பர். மெய்யியல் கருத்தாக்கமான இந்தச் சமத்துவம் எப்பொழுதும் தன்னை ஒடுக்குமுறை நிறைந்த சமூக அமைப்போடு சாமர்த்தியமாக இணைத்துக் கொள்ளும். அம்பேத்கரை பொறுத்தவரை வர்ணாசிரமத்துக்கான அடிப்படையை வழங்கும் புருஷ சுக்தா பிற்காலத்தில் வேதத்தில் சேர்க்கப்பட்டது. எனினும், இப்படிப்பட்ட மெய்யியல் பகுப்புகளில் சமூகப் படிநிலை பின்னிப்பிணைந்தே இருக்கும். எவ்வளவு தான் வேதங்கள், கீதை முதலியவற்றை உருவகக் கதைகளாக மாற்றிப் பேசினாலும், இவை சமூகத்தின் சாதி அடுக்குக்குச் சேவகம் செய்வதையே பண்பாகக் கொண்டிருந்தன. இவை இரண்டையும் பிரித்துப் பார்க்க முயல்வது தவறான நம்பிக்கையின் அடிப்படையிலானது. இந்து மதத்துடன் அம்பேத்கர் மேற்கொண்ட உரையாடல் ஒரு சமூக அமைப்பு குறித்த விமர்சனம் மட்டுமல்ல, சாதி அமைப்பு எந்த அறிவுத்தளத்தின் மீது எழுப்பப்பட்டு உள்ளதோ அதை முழுவதும் நிர்மூலமாக்க முயலும் விமர்சனம் ஆகும்.
இந்தியாவின் ஞான மரபின் இருப்புக்கான பேராபத்து மேற்கின் அங்கீகார மறுப்பில் இல்லை. அதற்கு மாறாகச் சமூகத்தில் நிலவும் பாகுபாடு சார்ந்த கொந்தளிப்புகளில் உள்ளது. ஒரு ஞான மரபின் மையம் அடக்குமுறை, அடுக்குநிலை, பிளவுபட்ட சமூக அமைப்பால் கட்டமைக்கப்பட்டு இருக்கும் பொழுது எந்த முகத்தோடு, எந்த நன்னம்பிக்கையோடு அதனை நியாயப்படுத்துவீர்கள்? ஒரு மரபின் அறிவார்ந்த புரட்சிக்கருத்துக்கள் கூட இறுதியில் பழமைவாதத்தையே வெவ்வேறு வடிவங்களில் காக்கும் பொழுது அதை எப்படி ஒருவர் புரிந்து கொள்வது?
ஆன்மீகத்துக்கும், சமூகத்துக்கு இடையே உள்ள உறவு சார்ந்த அறிவுப்பூர்வமான விவாதத்தைச் செய்ய இது இடமில்லை. சமூகத்தை ஒட்டி மட்டும் தத்துவத்தைக் காணும் அம்பேத்கரின் வாசிப்பை நிச்சயம் விமர்சிக்கலாம். பண்டைய ஞானக் கட்டமைப்பின் அதிகாரம், அடுக்குமுறை ஆகியவை குறித்து யாரேனும் வெளிச்சத்தைப் பாய்ச்சினால் அவரைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது பொதுப்போக்கு. இதில் இருந்தே எவ்வளவு உணர்ச்சிவயப்படுபவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்துத்வா இந்தியவியல் அறிஞர் ஷெல்டன் பொல்லாக்கை கடுமையாகச் சாடியது. அதற்குக் காரணம் அவர் மேற்கை சேர்ந்தவர் என்பதல்ல. ஷெல்டன் பொல்லாக் பண்டைய மரபுக்கும் , அதிகாரத்தின் அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அவர் இணைத்து வாசிக்கிறார் என்பதில் இருந்தே இந்தக் கடுமையான என்பதில் இருந்தே எழுந்தது. அதிகாரத்தை மரபைத் தீர்மானிக்கும் அளவுகோலாக மாற்றியது அம்பேத்கரின் மகத்தான சாதனை. அம்பேத்கர் எங்களுக்கு உரியவர் என்கிற போட்டியானது இந்து மதத்தை அவர் ஆட்படுத்திய அதிகாரத்தின் அறக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒரு முயற்சியே ஆகும். இந்த வகையில், இந்திய பண்பாட்டின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் அம்பேத்கரின் விமர்சனமே மிகப் புரட்சிகரமானது.
அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைக்க வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப் போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லீம் கலவரம் வரும் பொழுது தான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.
இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் என்று அந்தச் சமூகம் அடிமைமுறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததைக் காரணம் காட்டுகிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல் காட்டுகிறது. பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்பு படுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கு இருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள் தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்து கொள்ளத் தவறுவர்.
சுருக்கமாக, அம்பேத்கரின் செயல்பாடு எந்த ஒரு பண்பாட்டையும் பெரிய அளவில், மிகவும் தீரத்தோடு அறிவார்ந்த முறையில் தோலுரித்த முன்மாதிரி இல்லாத செயல்பாடு ஆகும். விழுமியங்களை மறுவாசிப்புச் செய்து அவற்றின் உண்மையான நோக்கங்களை அவர் புலப்படுத்தினார். அறம் என்றதற்குப் பின்னிருந்த அடக்குமுறைகளை அவர் கண்டெடுத்தார். அகிம்சையைக் கொண்டாடியதற்குப் பின்னால் பெரும் இம்சை இருந்ததாக அவர் சொன்னார். சடங்குகளுக்குப் பின்னால் பல்வேறு தடைகள் அடங்கியிருந்தன. அவற்றின் மூலம் யாரும் அதுவரை கண்டிராத மனித ஆளுமையின் மீதான மிக மோசமான சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது. பிரபஞ்ச அமைப்பு என்பது ஒன்று போன்ற நீண்ட பிரசாங்கங்களுக்குப் பின்னால் சமூகத்தின் ஆழமான பாகுபாடுகள் இருந்தன. பசுவின் மீது இருக்கும் அக்கறைக்குப் பின்னால் மாட்டு இறைச்சி உண்பவர்கள் மீதான ஆழமான வெறுப்பு ஒளிந்திருக்கிறது. பசுவிடம் காட்டப்படும் மிக மென்மையான போக்கு என்பது மற்றவர்களின் மீதான சித்திரவதையின் சுத்திகரிக்கப்பட்ட வடிவமே ஆகும். மனித உயிர்கள் பற்றி இரக்கமற்றவர்களாகப் பசுப் பாதுக்காப்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று எப்பொழுதேனும் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள் என்றால் அம்பேத்கரை வாசியுங்கள். அவரின் விமர்சனம் உங்களைக் கொட்டும். நம்முடைய கொள்கையில் இருந்து திசைமாறிவிட்டோம் என்று அவர் வாதிடவில்லை. இந்தக் கொள்கைகளுக்குப் பின்னால் வன்முறையும், சித்திரவதை செய்யும் பண்பும் நிறைந்து இருப்பதாக அதிரவைக்கிறார். இந்தியாவில் பிராமணியத்தின் ஆதிக்கத்தால் வால்டேர் போன்ற ஒரு சுதந்திரமான சிந்தனையாளரும் எழவில்லை என்று அவர் சாடினார். இருக்கிற சமூக அமைப்புக்குள் வேலை பார்க்கும் அரைகுறை சீர்திருத்தவாதிகளே நமக்கு வாய்த்தனர். யாருமே சாதியமைப்பின் அடிப்படையையே தீரத்தோடு கேள்விக்கு ஆட்படுத்தவில்லை.
அம்பேத்கரை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்வது அவரின் விமர்சனத்தைத் தீவிரமாகக் கவனத்தில் கொள்வதாகும். அம்பேத்கரை நோக்கிய எதிர்வினைகள் எதிர்ப்பாக இருந்தன: அரசமைப்பு சட்ட வரைவில் அவரை இணைத்துக்கொண்டதை தவிர்த்து அவரைத் திட்டமிட்டு ஓரம்கட்டவே முயன்றார்கள். அதற்கு அடுத்தக் கட்டம் தற்காப்புத் தொனியில் பேசுவது. நாம் தலித் உடல்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எவ்வளவு கீழ்மையாக வேண்டுமானாலும் நடந்து கொண்டு மறுதலிப்போம். அவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை மறுப்போம். தற்காப்பு அரசியல் இனிமேலும் ஈடுபடுவது இல்லை என்கிற பொழுது அவரைக் கையகப்படுத்த முயல்வது. இந்து மதம் பற்றிய அவருடைய விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்கிறார்கள் என்பதைக் கற்பனைக்குக் கூட நம்பும்படியாக இல்லை. அவரின் இந்து மதத்தின் புதிர்கள் நூல் தடை செய்யப்பட்டது. நம் அனைவர்க்கும் அம்பேத்கர் உரியவர் என்று நாடகம் நிகழ்த்துவதன் மூலம் நம்மைப்பற்றி அம்பேத்கர் சொல்லும் கடுமையான உண்மைகளை வசப்படுத்தவோ, மூடி மறைக்கவோ முயல்கிறோம். இந்து மதத்தை ஆதரிப்பவர்கள் அம்பேத்கரின் விமர்சனங்களில் உள்ள உண்மையை ஒப்புக்கொண்டு விடலாம். அது உண்மையில் நன்னம்பிக்கை அடிப்படையிலான செயலாக இருக்கும். தேசிய இயக்கம் தான் மரபை வெறுக்காமல் மரபைக் கடக்க முயன்ற போராட்டங்கள் மிகுந்த அறிவார்ந்த கடைசிச் செயல்திட்டமாகும். மரபை சீர்திருத்தி அதைப் பாதுகாக்க முடியும் என்று எண்ணினார்கள். அம்பேத்கர் இந்தச் செயல்திட்டத்திற்குள் வலிமைமிகுந்த தாக்குதலை மேற்கொண்டார்: ‘மதத்தை ஒழிப்பது அடிமை முறையை ஒழிப்பதற்கு அவசியமாகும்.மதத்தை மரபைப் பாதுகாப்பதன் மூலம் சீர்திருத்த முயலாதீர்கள்; அதனை அழிப்பதன் மூலம் விடுதலையைப் பெறலாம்.
(தொடரும்)