
நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி
#நவீன வரலாற்றில் மதம் சாராத நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அறத்தைக் கட்டியெழுப்ப முயன்ற மகத்தான முயற்சியை மேற்கொண்டவராக பண்டித ஜவஹர்லால் நேரு திகழ்கிறார். நாம் உலக வரலாற்றை ஒரு பருந்துப் பார்வை பார்ப்போம். பால்கன் தீபகற்பத்தில் பல்வேறு நாடுகள் அவை இருந்த சுவடே தெரியாமல் சிதைந்து போயின. அரேபிய தேசம் வீழ்ந்து கொண்டிருப்பதை அதன் இடிபாடுகளின் இடையே நின்றபடி காண்கிறோம். அதேசமயம் மலையுச்சியின் விளிம்பில் நின்றபடி அதல பாதாளத்துக்குள் விழுந்து விடாமல் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடும் நபரைப்போல இந்தோனேசியா போன்ற நாடுகள் தங்களுடைய தேச ஒற்றுமையைக் காப்பாற்ற முயன்று கொண்டிருக்கின்றன. #
இப்படிப்பட்ட சவாலான காலத்தில்தான் நேரு, மதம் அல்லாத நம்பிக்கையின்மீது ஒரு தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் எனக் கண்ட கனவின் வலிமையை நாம் உணர்வது மிகவும் அவசியமாகிறது. மதம் உறுதியாகத் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கிற காலத்தில், அது நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இந்தப் புதிய நூற்றாண்டில் நாம் ஏன் நேருவின் நம்பிக்கையைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டும் என்கிற நியாயமான கேள்வி எழலாம். இப்படிப்பட்ட காலத்தில்தான் நம்பிக்கை சார்ந்த நேருவின் கருத்துகளின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதை, நிராகரிப்பதை நாம் செய்யக் கூடாது. மதத்தின் மீது பல்வேறு தேசியங்கள் உறுதி பெற்று இருக்கும் காலத்தில், நேருவின் நம்பிக்கை சார்ந்த கருத்துகளின் இன்றைய தேவையை, முக்கியத்துவத்தை உணர்வது இன்னமும் அவசியமாகிறது. மதம் சாராத நம்பிக்கையே ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு ஏற்றது என்கிற நேருவின் பார்வை முழுக்க முழுக்கச் சரியானதாகும்.
“மதம் எனக்கு நன்றாகத் தெரிந்த களம் அல்ல. எனக்கு வயதாக, வயதாக நான் மதத்தை விட்டு வெகுவாக விலகி வந்துவிட்டேன் என உறுதியாகச் சொல்ல முடியும். எனக்கு மதம் வலிமையை, நம்பிக்கையைத் தரவில்லை. அதற்குப் பதிலாக அறிவு, பகுத்தறிவை விடச் சற்றே மேலான ஒன்றே என்னைச் செலுத்தியது. அந்த வரையறுக்க முடியாத, முடிவற்ற ஒரு வேட்கையில், மதத்தின் சாயல் சற்றே தென்படலாம். எனினும், அது மதத்திலிருந்து முழுவதும் வேறுபட்ட ஒன்று. நான் முழுக்க, முழுக்க அறிவின் செயல்பாடுகள் சார்ந்து இயங்குகிறேன். அவை எப்போதும் என்னைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வலிமை மிகுந்தவை அல்ல எனத் தெரியும். எனினும், நான் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறேன். இவற்றைவிட மேலான ஒன்றை என்னால் கண்டு அடைய முடியவில்லை” என்று நேரு 1933-ம் ஆண்டில் காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடார். நேருவின் நெடிய அரசியல் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள், சாதனைகள், ஏமாற்றங்கள் அநேகம். இருபதாம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றின் மகத்தான எழுச்சிகளும், வீழ்ச்சிகளும் அவர் காலத்திலேயே அரங்கேறின. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்த நேருவுக்கு எது நம்பிக்கையையும், வலிமையையும் தந்தது? அறிவின் செயல்பாடுகள் சார்ந்து இயங்கியதாகவும், அதன் மீதே நம்பிக்கை கொண்டதாகவும் நேரு சொல்கிறார் இல்லையா? அவை என்ன? நாம் தேடுவோம், வாருங்கள் !
வரலாற்றுரீதியாக மட்டுமே நான் நேருவின் நம்பிக்கையை அணுகப்போவது இல்லை. அவருடைய நம்பிக்கையின் மையப்பொருளான நம்பிக்கை / பற்று, அசைக்க முடியாத பக்தி / மன உறுதி முதலியவற்றை மீட்டெடுக்க முயல்வேன். இந்தப் பற்று, பக்தி முதலிய சொற்கள் மதம் சார்ந்த பொருளில் இங்கே பயன்படுத்தப்படவில்லை. அப்படிப் பொருள் கொண்டால், நம்முடைய நம்பிக்கை சார்ந்த கருத்துக்கள் ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைபட்டு விடும் அபாயம் உள்ளது. மதத்தைத் தொடர்ந்து நம்பிக்கையை தனித்துவமான மூலமாகத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அப்போது எல்லாம், மத நம்பிக்கை இல்லாமலும் நம்மால் பொது வாழ்விலும், அகவாழ்விலும் அறம், ஒழுக்கம் ஆகியவற்றை வேறு வகையான நம்பிக்கைகளின் வலுவான அடித்தளத்தின் மீதும் கட்டியெழுப்ப முடியும் என நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். எப்படி மதச்சார்பின்மைக்கு வெவ்வேறு வகையான அர்த்தங்கள் இருக்கலாமோ, அதுபோல, எது நம்பிக்கை என்பதற்கும் வெவ்வேறு வகையான விளக்கங்கள் இருக்கலாம். நவீன வரலாற்றில் மதம் சாராத நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அறத்தை கட்டியெழுப்ப முயன்ற மகத்தான முயற்சியை மேற்கொண்டவராக நேரு திகழ்கிறார்.
பொதுவாக அரசியல்வாதிகள் ஆழமான அற நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருப்பதில்லை. அக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அரசியல் வாழ்க்கைக்கும் அறம் அவசியமான ஒன்று என உறுதியாக நம்பினார். எனினும், நேரு எப்போதும் மதம் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவருடைய சுயசரிதையில் நேரு, “நிறுவனமயமான மதம் பயத்தால் நிரம்பியிருக்கிறது…. அது எப்போதும் கண்மூடித்தனமான நம்பிக்கை, எதிர்வினை, விடாப்பிடியான கொள்கைகள், சகிப்பின்மை, மூடநம்பிக்கை, சுரண்டல் ஆகியவற்றுக்காக இயங்கும் ஒன்றாகவே எனக்குப்படுகிறது” என எழுதினார். (பக்கம்: 374). நிறுவனமயமான மதத்தை விமர்சனப் பார்வையோடு அணுகிய நேரு, மதத்தின் அற, ஆன்மீக பரிமாணங்களை ஒப்பு உணர்வோடு அணுகினார். அகமதுநகர் சிறைச்சாலையில் இருந்தபடி நேரு இப்படி எழுதினார், “வாழ்க்கையை அறத்தின் வழியில் அணுகுவது என்னை வலுவாகக் கவர்கிறது”. (கண்டடைந்த இந்தியா, பக்கம் 12). அவர் அறிவை கட்டுக்கோப்பாகப் பயன்படுத்தியதன் மூலம் இந்த அற வழியை, அதன் ஆதார மூலங்களைக் கண்டடைந்தார். பகுத்தறிவு நம்முடைய இலக்குகளை அடைவதற்கான கருவி மட்டும் அல்ல. பகுத்தறிவின் மூலம் அறத்தோடு எப்படி இலக்கு நோக்கி பயணிப்பது, எப்படி இலக்கை அடைவது ஆகியனவும் தீர்மானிக்கப்படுகின்றன. பகுத்தறிவோடு இயங்கும் ஒருவர் தன்னுடைய பொறுப்புகள், அற நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு முழுக்க, முழுக்கத் தானே பொறுப்புடையவர் ஆகிறார். நேருவின் நம்பிக்கையின் சாரம் எது? பகுத்தறிவு, பகுத்தறிவு நோக்கிய பயணங்கள் ஆகியவற்றின் மூலம் அறம் சார்ந்த கனவுகளை உருவாக்கி, அவற்றைப் பேணுவதே ஆகும். நம்முடைய அசரவைக்கும் ஜனநாயக பரிசோதனையில் நேருவின் தேவை தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது. எப்படி?
இந்தியா என்கிற தேசத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும் பணியைவிட வேறொரு வகையில் நேரு இந்தியாவிற்கு இன்றும் அவசியம் தேவைப்படுகிறார். வெற்றியும், தோல்வியும் கலந்த போராட்டங்களால் ஆன தனது பொது வாழ்க்கையை நேரு பகுத்தறிவோடு கூடிய அறத்தால் கட்டமைக்க முயன்றார். அந்த அறிவார்ந்த, அரசியல்ரீதியிலான புரிதலே நமக்கு இன்று தேவை. அந்தப் பகுத்தறிவோடு கூடிய அறமே இந்தியாவுக்கு அவசரத் தேவை. பகுத்தறிவைத் தாக்குவது இப்போது பலருக்குப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. பல்வேறு அறிவுஜீவிகள் மத்தியில், பகுத்தறிவு என்பது மேற்கின் அறிவொளி (Enlightenment) காலத்தின் மோசமான விளைவாகப் பார்க்கப்படுகிறது. மேற்கின் கோட்பாடுகள், முன்முடிவுகள் ஆகியவற்றின் அளவற்ற ஆதிக்க சக்தியாகவே பகுத்தறிவு திகழ்வதாக அவர்கள் கருதுகிறார்கள். பகுத்தறிவு, கலாசார வேற்றுமைகள், பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் ஆதிக்கம் மிகுந்த ஆட்சி செலுத்துவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. பின் நவீனத்துவத்தின் எழுச்சியும், தற்கால மதத்தின் பெருகிக்கொண்டு இருக்கும் வீச்சும் ஒன்றுக்கு ஒன்று நேரடியாகத் தொடர்பு கொண்டவை அல்ல. அதே சமயம், அவை இரண்டும் முற்றிலும் தொடர்பற்றவை என்றும் சொல்ல முடியாது. நம்முடைய பல்கலைக்கழங்கள் ஜோதிடத்தில் பட்டப்படிப்புகளை நடத்தச் சொல்லி ஊக்குவிக்கப்படும் காலத்தில், பகுத்தறிவுக்காக வாதாடுவது தேவையற்ற ஒன்றாகத் தோன்றலாம். இந்தியாவில் அரசியல் களம் பகுத்தறிவை புறக்கணிப்பவர்களால் நிரம்பியிருப்பதாகத் தெரிகிறது. மதம், நாடு, இனம், கலாசாரம் ஆகியவற்றில் தங்களுடைய அடையாளத்தை முன்னிறுத்திக் கொள்வதைக் காண்கிறோம். இவர்கள் எல்லாரும் தங்களுடைய இச்சைகளை வென்றடைய வன்முறையைப் பயன்படுத்தவும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட காலத்தில் பகுத்தறிவு கேட்பாரற்றுக் கிடப்பதாகத் தோன்றுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு நாம் பகுத்தறிவின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வழிகளைக் கண்டறிய வேண்டும். இதைச் சாதிக்க வேண்டும் என்றால் நாம் பகுத்தறிவை சிக்கல் மிகுந்த வெளிச்சத்தோடு அணுக வேண்டும். அதனைப் புன்னகையோடு அறிவுரை சொல்லும் பகுத்தறிவாகவோ, மானுட கச்சிதத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டஒன்றாகவோ காணக்கூடாது. “கச்சிதம் என்பது நமக்கு அப்பாற்பட்ட ஒன்று. கச்சிதத்தை அடைந்து விட்டோம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். நாம் எப்போதும் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். எப்போதும் பின்வாங்கிக்கொண்டே இருக்கும் ஒன்றை அடைய நாம் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் பல்வேறு குறைபாடுகள், முரண்பாடுகள் கொண்ட வெவ்வேறு மனிதர்கள் நம்மை ஆளுக்கொரு திசை நோக்கி அலைக்கழிக்கிறார்கள்” என்று நேரு எழுதினார். (கண்டடைந்த இந்தியா, பக்கம் 496). இப்படிப்பட்ட மனிதர்களின் முரண்பாட்டுத்தன்மையினால் தான் இருளில் இருந்து வெளிவர தனி மனிதருக்கும், சமூகத்திற்கும் பகுத்தறிவு போன்ற ஒரு திறன் தேவைப்படுகிறது. மனித மனம் எளிமையானது என்கிற எண்ணத்தினால் பகுத்தறிவின் மீது நம்பிக்கை வரவில்லை. அதற்கு மாறாக, மனித மனதை தூண்டிக்கொண்டே இருக்கும் வேட்கைகள், அவற்றின் புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் மீதான மரியாதையினாலேயே பகுத்தறிவு தேவைப்படுகிறது.
பகுத்தறிவு குறித்த நேருவின் புரிதல் சிக்கலும், நுட்பமும் மிக்கது. இதை அவரின் ஆதரவாளர்கள், விமர்சகர்கள் இருவருமே அங்கீகரிப்பதில்லை. நம் சமகாலத்தை ஒட்டியிருந்த காலத்தில் நேருவின் பகுத்தறிவு உருப்பெற்றது. 1930, 40-களில் பகுத்தறிவு பின்வாங்கிக் கொண்டிருந்தது, பாசிசம் ஐரோப்பியாவை சூறையாடிக்கொண்டு இருந்தது, இந்தியாவை மதவெறி கூறுபோட்டுக் கொண்டிருந்தது. தங்களைத் தாங்களே நேருவியர்களாக அறிவித்துக் கொண்டவர்கள், அவரின் அணுகுமுறையை ‘அறிவியல் உணர்வு’ என்பதற்குள் சுருக்கப் பார்க்கிறார்கள். நேருவை கூர்மையாகச் சாடுபவர்கள் அவரின் அணுகுமுறையை எளிமைப்படுத்தி, ‘ஒற்றைப்படையான பகுத்தறிவு’ என்கிறார்கள். இரு தரப்புமே நேருவின் தனித்துவமான சிந்தனைப் போக்கை உணரவில்லை. பகுத்தறிவின் மீது நம்பிக்கை கொண்ட நேரு, வரலாறு, பகுத்தறிவின் பக்கமே இருக்கிறது என்று அப்பாவியாக நம்பவில்லை. பெரும்பாலான பகுத்தறிவாளர்கள் நம்புவதைப் போல ‘வரலாற்றில் பகுத்தறிவு வெல்வது உறுதி’ என நேரு கண்மூடித்தனமாக நம்பவில்லை. நேரு பகுத்தறிவை பலவீனமான, அறிவார்ந்த செயல்பாடாகக் கருதினார், அவரைப்போலவே நாமும் அதனை அணுகவேண்டும். அவர் நாம் எப்படி வாழவேண்டும் என்பது குறித்த பல்வேறு கருத்துகளை மனித மனதின் எல்லைகளுக்குள் புரிந்து கொள்ள முயன்றார்.

சமகாலத்தில், காந்தி, படேல், போஸ், தாகூர் ஆகியோரின் வாழ்வு மற்றும் பணிகள் சார்ந்த நுட்பமான விளக்கங்களால் அவர்கள் மேலும் மரியாதைக்கு உரியவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். நேருவை பொறுத்தவரை, அவரை எளிமைப்படுத்தி, அவரை நகைப்புக்கு உரிய ஒருவராக மாற்றுகிறார்கள். அறிவியல் சார்ந்து மட்டுமே பகுத்தறிவை அணுகிய ஒருவராக, வெறுமையான சர்வதேசம் பேசிய ஒருவராக அவரைச் சுருக்கப் பார்க்கிறார்கள். இது உண்மையில் நம்பிக்கை மற்றும் காலத்தின் கண்ணாடியாக உள்ளது. இவை நம்முடைய நம்பிக்கைகள், கவலைகள் ஆகியவற்றைக் காட்டுகின்றன. அவை நேரு என்கிற தலைவரின் காலத்தையோ, அவரின் ஆளுமையையோ வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. நம் நாடு என்னாகுமோ என்கிற ஏமாற்றங்கள், விரக்திகளை எதிர்கொள்ள நேருவின் மீது பழிபோடுவது ஒருவகையில் உதவுகிறது.
நேரு பகுத்தறிவு எப்படி மாற்றங்களைச் சாதிக்கிற ஆற்றல் மிக்கதாக இருக்கிறது என்பதை உறுதியாக உணர்ந்தவராக இருந்தார். பகுத்தறிவு முக்கியமாக இரு வகைப்படும். மனித தேவைகளுக்கு ஏற்ப இயற்கையை வளைக்கும் முயற்சியான அறிவியல் பகுத்தறிவு ஒருவகை. மனிதர்களால் ஆன அமைப்புகளை, எல்லாவற்றுக்கும் மேலாக அரசை பயன்படுத்தி எப்படிச் சமூகத்தை மறு ஆக்கம் செய்வது என்பது சார்ந்த சமூகப் பகுத்தறிவு இன்னொரு வகை. பகுத்தறிவைக் கொண்டு எப்படி இயற்கை, மனிதர்களின் உலகை வளர்ச்சி, அழிவை நோக்கிச் செலுத்த முடியும் என நேரு உணர்ந்திருந்தார். இப்படிப்பட்ட பண்புகள் பகுத்தறிவின் ஆதார மூலங்களைக் காலி செய்துவிடவில்லை. பகுத்தறிவை கொண்டு கட்டற்ற அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும், ஆனால், நேரு பகுத்தறிவைக் கொண்டு அறத்தை, ஒழுக்கம் சார்ந்த மகத்தான சாதனைகளைப் புரிய முயன்றார். பகுத்தறிவு என்பது மேற்கில் இருந்து இறக்குமதியான ஒரு சரக்கில்லை என நேரு கண்டுணர்ந்தார். இந்தியாவிற்குள்ளும் அறம் சார்ந்த வாழ்க்கை, செயல்பாடுகள் குறித்த நெடிய, பக்குவப்பட்ட பகுத்தறிவு மிகுந்த உரையாடல் மரபு உண்டு என நேரு கண்டார். வரலாறு, அனுபவங்கள் சார்ந்த பகுத்தறிவு அறம் சார்ந்த உண்மைகளைக் கண்டடையும் வழிமுறையாக மாறியது. தொடர்ந்து சோதிப்பது, கேள்விகள் கேட்பது ஆகியவற்றின் மூலம் தனிநபர் அடையாளங்கள் உருவம் பெற்றன, அறம் சார்ந்த பொறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், அறக்கடமைகள், நம்பிக்கைகள் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டும், அவற்றை வரலாறு, அனுபவம் முதலியவற்றுக்குள் செலுத்தி அக்னிப்பரீட்சை செய்ய வேண்டும். அறம் சார்ந்த நம்பிக்கைகள், கடமைகள் மத நூல்களில் இருக்கிறது என்பதற்காகவோ, காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதற்காகவோ கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது. அறம் என்பது பகுத்தறிவோடு தொடர்புடையது என்பதால் பல்வேறு நம்பிக்கைகளை ஒன்றுக்கொன்று காது கொடுத்துக் கேட்டு, எதிர்தரப்பின் கருத்துக்களை மதித்துச் செயல்பட வேண்டும். உரையாடலில் பங்கு கொள்பவர்கள் ஏன் அப்படி நம்புகிறார்கள் என்பதற்கான காரணங்களைப் பகுத்தறிவோடு முன்வைத்து எதிர்த்தரப்பையும் தன்னுடைய கருத்துக்களை ஏறக்ச் செய்ய வேண்டும்.
நேரு இருபதாம் நூற்றாண்டின் மிகவும் இருண்ட காலங்களில் வாழ்ந்தார். இக்காலத்தை மனித வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒன்று என்று கூடச் சொல்லலாம். இரு உலகப்போர்கள், ஹிட்லர் நிகழ்த்திய இனப்படுகொலைகள், அணு குண்டு வீச்சு, இந்தியப் பிரிவினை ஆகியன நேரு காலத்தில் நடந்தேறியவை. கடந்த கால வரலாறு குறித்துக் கூர்மையான புரிதல் கொண்ட நேரு எதுவெல்லாம் எதிர்காலத்தில் மனிதனால் முடியும் என நம்பினாரோ அந்தப் பார்வைகளுக்குச் சவால் விடும் வகையில் துயரம் மிகுந்த உலகச்சூழல் நிழலாகக் கவிந்தது. தாகூர், காந்தி ஆகியோர் தங்களின் இறுதிக்காலங்களில் முறையே மனிதகுலத்தின் வருங்காலம் குறித்த அவநம்பிக்கை, எல்லாம் நடக்கிறபடியே நடக்கும் எனக் கருதுபவர்களாக மாறினார்கள். தாகூர் தன்னுடைய அவநம்பிக்கையை ‘The Crisis in Civilisation’ என்கிற கட்டுரையில் நேர்த்தியாகக் கொட்டித் தீர்த்தார். காந்தி ‘எல்லாம் நடக்கிற படி நடக்கும்’ என்கிற போக்கு நோக்கி நகர்ந்ததைத் தன்னுடைய இறுதிக்காலத்தில் அரசியல் வாழ்க்கையை விட்டுப் படிப்படியாக விலகியது புலப்படுத்துகிறது. இறைவன் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையைச் சோதிக்கவும், வலுப்படுத்தவும் காந்தி தனிப்பட்ட வாழ்க்கையில் அறம் சார்ந்த சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார்.
நேருவுக்கு விதிக்கப்பட்டது வேறொன்றாக இருந்தது. அவர் அரசியல் எனும் கொந்தளிப்பு கூடாரத்துக்குள் தள்ளப்பட்டார். இந்திய அரசின் தலைவராக ஆக்கப்பட்டார். பிரிவினையின் போதும், பிரிவினைக்குப் பிறகும் வன்முறை, வெறுப்பு ஆகியவை உடைந்துபோன அணை போலப் பிரவாகம் எடுத்து பாய்ந்து கொண்டிருந்த காலம் அது. பகுத்தறிவுக் களத்தை விட்டுக் காத தூரம் தெறித்து ஓடியிருந்தது. நேரு செயல்பட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இப்படிப்பட்ட இருண்ட காலங்களில் நேருவை எது செலுத்தியது? இந்தக் கவலை மிகுந்த காலங்களிலும் அறிவார்ந்த தேடல்களை, நேருவின் வார்த்தைகளில் சொல்வது என்றால், ‘அறிவின் செயல்பாடுகளை’ விட்டுவிட முடியாது. இருண்டகாலங்களில் இனிய துணையாகப் பகுத்தறிவை இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும். இந்த இருண்ட காலங்களில் உண்மையான நம்பிக்கையின் தோல்வி, நிஜமான அற வீழ்ச்சி எது தெரியுமா? பகுத்தறிவின் மீதான நம்பிக்கையைக் காற்றில் பறக்க விடுவதுதான்.
நாம் அரசியல் தலைவர்களை இப்படிப்பட்ட பார்வையிலிருந்து அணுகுவதில்லை. அரசியல்வாதிகளை ஏதோ ஒரு தொழிலை தொடர்ந்து நடத்தும் தொழில்முறை ஆட்களைப் போலக் கருதி அவர்களின் கோட்பாடுகள், நம்பிக்கைகள் குறித்து ஓரளவுக்கே கவலைப்படுகிறோம். அவர்களின் அறம் சார்ந்த பண்புகள் நம் கவனத்தை அரிதிலும் அரிதாகவே ஈர்க்கின்றன. அரசியல்வாதிகள், அதிகாரத்தை மட்டும் ஒரே குறிக்கோளாகக் கொண்டு துரத்த வேண்டும், மற்றவர்களை விமர்சிப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறோம். ஒரு அரசியல் தலைவர் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்பவராக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. தன்னுடைய பொறுப்புகள், தேர்வுகள் குறித்து விருப்பு, வெறுப்பற்ற சுய விமர்சனம் செய்து கொள்கிற அறம் சார்ந்த, அறிவார்ந்த பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. அரசியல் வாழ்க்கையில் அறத்திற்கு இடம் உண்டு என்கிற எண்ணமே பைத்தியக்காரத்தனமானதாக அரசியல் தொழிலாகி விட்ட இக்காலத்தில் தோன்றலாம். எனினும், இந்தப் பார்வை இல்லாமல் போனால் நேருவின் அரசியல் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. எப்படி அற வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் பிணைத்தபடி பயணிப்பது என்கிற தொடர் தேடலில் அவர் ஈடுபட்டார். அதனால்தான் ஒரு அரசியல்வாதியாக நேரு நமக்கு ஆர்வமூட்டுகிற ஒருவராகத் திகழ்கிறார். அவர் ஆழமான எண்ணங்கள் கொண்ட ஆளுமையாக இருந்தார். இந்தியா கண்ட அரசியல் தலைவர்களில் சிக்கலான, தனித்துவமான அரசியல்வாதியாக நேரு திகழ்ந்தார் எனலாம்.

பொதுவாக அரசியல்வாதிகளிடம் இல்லாத ஆழமான அற பொறுப்புணர்ச்சி மிக்க நேரு, காந்தியை போல அல்லாமல் மிகச் சாதாரணமான ஒருவராக எப்படித் திகழ்ந்தார் என்பதையும் சொல்ல வேண்டியது அவசியம். காந்தி தனித்துவமானவர். நம்பமுடியாத பண்புகளைக் கொண்டவராகத் திகழ்ந்த காந்தி, நம்ப முடியாத அளவு தீவிரத்தன்மையோடு சுயநலம் என்பதே அற்றவராகத் திகழ்ந்தார். நேரு அப்படிப்பட்டவர் அல்ல. அவர் நம்மைப்போன்றவர். மானுட இச்சைகள் நிரம்பியவர், வாழ்வின் தேர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டவர், சுய சந்தேகம் மிக்கவராக, முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறுபவராக, முன்கோபம் கொண்டவராக, சமயங்களில் மனம் தளர்ந்து போகிறவராகத் திகழ்ந்தார். காந்தியை போல மனித சக்திக்கு அப்பாற்பட்ட அறச் சாதனைகளைச் சாதிக்க அவர் முயலவில்லை. எனினும், காந்தியை போல அவரும் தன் நம்பிக்கையின் மீது மெச்சக்கூடிய வகையில் திடமானவராக இருந்தார். நம் எல்லாருக்கும் உள்ள பகுத்தறியும் திறனை பயன்படுத்தியே நேரு செயல்பட்டார்.
பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவர் தீன்மூர்த்தி பவனில் 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.