ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை? நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்.


அன்வர் அலிகான்

நேரு

ந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி திம்மய்யாவைக் காண நேரு வந்திருந்தார். அவருடைய வீட்டில் மேஜைக்குப் பின்னால், ஓர் இரும்பு பீரோ இருப்பதை நேரு கண்டார். “அதில், என்ன இருக்கிறது” என்று ஆவலாகக் கேட்டார்.

”மேல் அறையில் தேசத்தின் பாதுகாப்புத் திட்டங்கள்” இருப்பதாகச் சொன்னார் திம்மய்யா. இரண்டாவது அறையில், “நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள தளபதிகள் குறித்த ரகசிய கோப்புகள்” இருப்பதாக விளக்கினார் திம்மய்யா.

”மூன்றாவது அறையில் என்ன இருக்கிறது” என்று நேரு ஆவலோடு கேட்டார்.

நேருவை நோக்கி எந்தச் சலனமும் இல்லாமல், தலைமைத் தளபதி, “அதில் உங்களுக்கு எதிராக ராணுவப் புரட்சியை நடத்துவதற்கான ரகசிய திட்டங்கள் இருக்கின்றன” என்றார்.

நேரு புன்னகைத்தார். ஆனால், அந்தப் புன்னகையில் அனேகமாக ஒரு பதற்றம் கலந்து வெளிப்பட்டிருக்கும்.

காலனிய ஆட்சியில் இருந்து விடுதலைபெற்ற பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ராணுவ சர்வாதிகார ஆட்சிகள் ஏற்பட்டன. இந்த ஆட்சிகள் ஏற்பட்ட ஐம்பது, அறுபதுகளில் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்தன. 1967-ல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலைக் களத்தில் இருந்து கவனித்த ‘தி டைம்ஸ்’ இதழ் நிருபர் நெவில் மாக்ஸ்வெல், “அதுவே இந்தியாவின் கடைசித் தேர்தலாக இருக்கக் கூடும்” என்று ஆரூடம் சொன்னார். அவரைப்போலப் பல பேர் இந்தியா வெகு சீக்கிரம் ராணுவ ஆளுகைக்குள் வரும் என்று நம்பினார்கள்.

ஆனால், அந்த நம்பிக்கை நமநமத்துப் போனது.

ஏன் அப்படி?

இந்திய ராணுவம் ஏன் எப்போதும் ஆட்சியைக் கைப்பற்ற முயலவில்லை என்பதற்கு ஒரு காரணத்தைப் பலரும் கைகாட்டுவார்கள். ஆங்கிலேயரின் 250 வருட பாரம்பர்யத்தைக் கட்டிக்காக்கும் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டோடு, மிகச்சிறந்த ஒழுங்கைக் கொண்ட ராணுவமாகத் திகழ்கிறது என்பார்கள். ஆனால், இந்த விளக்கம் வேடிக்கையான ஒன்று. அதே பாரம்பர்யத்தில் இருந்துவந்த பாகிஸ்தானிய ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றச் சற்றும் தயங்கவில்லை.

இதையே வேறொரு கோணத்தில் பார்க்கலாம்… மிகச்சிறந்த ஒழுங்கைக் கொண்டிருந்த பாகிஸ்தானிய ராணுவம், நாடு குழப்பத்தின் பிடியில் சிக்கிச் சிதறிக்கொண்டிருந்தபோது வேடிக்கை பார்க்காமல் நாட்டைக் காப்பது தன்னுடைய கடமை எனக் களத்தில் குதித்தது எனவும் கருதலாம்.

ஆகவே, இந்தக் குழப்பம் தரும் கேள்விக்கான விடையை அலசி ஆராய வேண்டியிருக்கிறது. அரசியல் அறிவியல் அறிஞர் ஸ்டீவ் வில்கின்சன் இதற்கான விடையைத் தன்னுடைய பிரமிக்கவைக்கும் Army and Nation நூலில் நமக்குத் தருகிறார்.

இந்தியாவில் ஏன் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள, ஏன் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது என அறிவது அவசியம். பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதற்கு ஒரு விறுவிறுப்பான முன்கதை இருக்கிறது. விடுதலைக்கு முந்தைய பிரிக்கப்படாத இந்தியாவில் ராணுவத்தில், மிக அதிகபட்ச ஆட்கள் பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்தே பணிக்கு எடுக்கப்பட்டார்கள். ஆகவே, விடுதலைக்குப் பின்னால், பாகிஸ்தான் பெற்றுக்கொண்ட பல்வேறு அமைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெரும்பான்மை பஞ்சாபியர்களைக் கொண்டிருந்த ராணுவம் பெற்றது.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்த, நெடுங்காலம் தாக்குப்பிடிக்கக் கூடிய அமைப்பாகத் திகழ்ந்தது. பாகிஸ்தானைப் பெற்றுத் தந்த ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சியோ, “ஜின்னா, அவரின் அந்தரங்கச் செயலாளர்” என்கிற அளவுக்கே இருந்தது. இது, ஜின்னா 1948-ல் மரணமடைந்த பின்பு பாகிஸ்தானில் ஆபத்தான அதிகார பதற்ற நிலையை உண்டு செய்தது. பாகிஸ்தானின் வலிமைமிகுந்த, கேள்வி கேட்பார் இல்லாத அமைப்பாக ராணுவம் உருவெடுத்தது.

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கண்மூடித் திறக்கும் கணப்பொழுதில் ஏற்பட்டுவிடவில்லை. ஐம்பதுகளில் லாகூரில் பெரிய கலவரம் ஏற்பட்டது. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘ராணுவமே தங்களுக்கு வந்தனம், வந்து இவர்களை அடக்குங்கள்’ என அழைத்தார்கள். ராணுவம் வந்தது, துரிதமாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

அந்தப் படையின் தலைமை அதிகாரி ஒரு வித்தியாசமான வேண்டுகோளைவைத்தார். ”நாங்கள் எங்கள் படைகளோடு இருப்பிடம் திரும்புவதற்கு இரண்டு நாள்கள் அவகாசம் கொடுங்கள்.” ”சரி” எனத் தலையசைத்தார்கள். ராணுவம் நகரைச் சுத்தம் செய்து, கட்டடங்களுக்கு வர்ணம் பூசியது; சாலைகளைச் செப்பனிட்டு, ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்துத் தள்ளி, மரத்தை நட்டது; பல நாட்களாக அரசாங்கம் கண்டுகொள்ளாத வேலைகளை விறுவிறுவென முடித்துவிட்டு, ராணுவம் அமைதியாக நடையைக் கட்டியது. போவதற்கு முன்னால் ஒரு சுத்தமான, நன்கு பராமரிக்கப்படும் ராணுவ வளாகம்போல லாகூரை மாற்றிவிட்டுப் போனார்கள்.

நேருபொது மக்களிடையே ராணுவம் நள்ளிரவுக்குள் நாயகனாக மாறியது; ‘என்னடா, அரசாங்கம் பல வருடங்களாகச் செய்ய முடியாததை இவர்கள் மூச்சுவிட்டு முடிப்பதற்குள் சரி செய்துவிட்டார்களே’ என மரியாதை பெருகியது. 1958-ல் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தைச் சீர்செய்யும்படி ராணுவத்துக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டது. பாகிஸ்தானியர்களில் ஒருசாரார் அதை ஆனந்த கூத்தாடி வரவேற்றார்கள். அப்போது பாகிஸ்தானில் ஒரு சொலவடைகூட ஏற்பட்டது, ‘எல்லாம் வல்ல அல்லாவின் கருணையினால், பாகிஸ்தானில் அனைத்தும் இப்போது நலமே’ என ராணுவம் கொண்டாடித் தீர்க்கப்பட்டது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் தளபதி அயூப் கான், ஜனாதிபதியாகப் பாகிஸ்தானில் இயங்கிய காலத்தில் தேசம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டது. ஆனால், அவருக்குப் பின்னால் கேட்பாரற்ற அதிகாரம்கொண்ட ராணுவ ஆட்சி ஊழல்மயமாகிப் போனது.

இந்திய ராணுவமும், பாகிஸ்தான் ராணுவத்தைப் போன்ற மரபில் இருந்தே பிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசியலில் ராணுவம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. கொள்கை முடிவுகளில்கூட ராணுவம் பங்கு வகித்தது. பாதுகாப்புத் துறை அமைச்சராக எப்போதும் ராணுவத் தலைமைத் தளபதியே திகழ்ந்தார். அதற்கும் மேலாக இந்தியாவில் வைஸ்ராய்க்கு அடுத்தபடியாக மிகவும் அதிகாரம் மிக்கவராக அவரே திகழ்ந்தார். ஆனால், விடுதலைக்குப் பிறகு காட்சிகள் மாறின.

”விடுதலைக்குப் பிந்தைய புதிய இந்தியாவில் ராணுவத்தின் பணி என்ன என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்று பிரதமர் நேரு உறுதியாக நம்பினார். ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்படுகிற ஒன்றாக மாற்றும் கொள்கையை அவர் தொடங்கிவைத்தார். விடுதலைக்குப் பின் நடந்த ஒரு சம்பவம் இதைத் தெளிவாகப் படம்பிடித்தது. ராணுவத் தலைமைத் தளபதி தங்கும் பிரம்மாண்டமான இல்லமாகத் திகழ்ந்த தீன்மூர்த்தி இல்லம், பிரதமருக்கு ஒதுக்கப்பட்டது. இது, சிறிய நடவடிக்கை என்றாலும், காற்று எந்தத் திசையில் அடிக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு வாரி இறைக்கப்பட்ட சம்பளம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியான பீல்டு மார்ஷல் கரியப்பா, அரசின் செயல்பாடுகளைப் பொதுவெளியில் விமர்சித்தார். அவரை அழைத்து ‘உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்” என அரசு கடுமையாக எச்சரித்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் ராணுவத்துக்கு வேலிபோடும் வேலைகள் தொடர்ந்து நடந்தன. இந்தியச் சமூகத்தில் அவர்களின் தாக்கத்தைக் குறைக்கும் செயல்பாடுகள் பாகிஸ்தானில் 1958-ல் நடந்த ராணுவப் புரட்சிக்குப் பின்னால் வேகம்பெற்றன. அதிலும், இதற்குச் சில காலத்துக்கு முன்னர் ஓய்வுபெற்றிருந்த ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் கரியப்பா அந்த ராணுவப் புரட்சியை வரவேற்றுப் பேசியிருந்தார். ராணுவத்தைக் கையாள பலம்வாய்ந்த, கடுமையான, இடதுசாரி அறிவுஜீவியான கிருஷ்ண மேனன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக ஆக்கப்பட்டார். இதைத் ‘திருப்புமுனை’ எனவும் சொல்லலாம்; ‘நேருவைத் திருப்பியடித்த முனை’ எனவும் வர்ணிக்கலாம். ‘இதுதான் உன் இடம்’ என ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே கிருஷ்ண மேனன் கொண்டுவரப்பட்டார். இது மோசமான பின்விளைவுகளை உண்டுசெய்தது. அது, துரதிர்ஷ்டவசமாகச் சீனப்போரில் இந்தியா அவமானப்படும் அளவுக்குத் தோல்வியடையக் காரணமாக மாறியது. எனினும், அது தனிக்கதை.

எழுபதுகள் வாக்கில் இந்திய ராணுவப் படைகள் புரட்சி செய்வதற்கு வழியில்லாத வகையில் பல்வேறு தடுப்புகள், பாதுகாப்புகள் அமைப்புரீதியாக ஏற்படுத்தப்பட்டன. நேரு காலத்தின் மகத்தான சாதனையாக இந்திய ஜனநாயகத்தை நீடித்து நிற்கவைத்ததை நிச்சயம் சொல்லலாம். இந்தச் சாதனை போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள மற்ற தெற்காசிய நாடுகள் அனைத்திலும் ராணுவப் புரட்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன; அவற்றில் சில வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட எந்த முயற்சியும் நடக்கக்கூடவில்லை.

வில்கின்சன், ‘இந்திய ராணுவம் புரட்சி செய்யும் போக்கற்றதாக வெவ்வேறு செயல்களால்’ மாற்றப்பட்டதாக விளக்குகிறர். இந்திய ராணுவத்தில் பலதரப்பு மக்களும் சேர்க்கப்பட்டார்கள். வெவ்வேறு கட்டளைகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு அதிகார அடுக்கில் முக்கியத்துவம் தரப்பட்டு, ராணுவத் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வுகள் கூர்மையாகக் கவனிக்கப்பட்டன; ராணுவ அதிகாரிகள் பொதுவெளியில் கருத்துகள் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டது; ராணுவத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் துணை ராணுவப்படை உருவாக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக ஓய்வுபெற்ற ராணுவத் தளபதிகளைத் தூர தேசங்களுக்குத் தூதுவர்களாக மரியாதையோடு அரசு வழியனுப்பிவைத்தது.

வி.கே.சிங் ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் 2012-ல் ராணுவப் படைப்பிரிவுகள் டெல்லி நோக்கி ரகசியமாக நகர்ந்தன. இதை மோப்பம் பிடித்த செய்தித்தாள்கள், ‘மூச்சுவிடாமல் ராணுவப் புரட்சிக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது’ எனக் கூவியபோது, நீங்களும் நானும், ‘என்ன கட்டுக்கதை இது’ என்று நகைத்துவிட்டு விளையாட்டுச் செய்திகளுக்குத் தாவினோம்.

இப்படிப்பட்ட மகத்தான சாதனையை, வரத்தை நாம் இயல்பாகக் கடக்கிறோம்.

அன்வர் அலிகான் சமூக வரலாற்றாளர். ராணுவ வியூகத்துறை ஆர்வலர். @AnvarAlikhan

தமிழில்: பூ.கொ.சரவணன்

Advertisements

One thought on “ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை? நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்.

  1. karthickjanardanan ஜூன் 27, 2017 / 6:48 முப

    அருமையான பதிவு. இப்படிப்பட்ட பதிவுகளை எல்லாம் படிக்கும் போது நம்முடைய முதல் பிரதமர் நேரு மீது அளவற்ற மரியாதை ஏற்படுகிறது. நேரு இந்தியாவிற்க்கு கிடைத்த மிகப்பெரிய ஆளுமைகளுள் ஒன்றாவார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s