டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி – மகத்தான ஆளுமை


ஜூலை 30 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாள். மறக்க முடியாத மருத்துவர்கள் உரைக்குத் தயாராகிற போது தான் அவரின் ஆளுமையின் ஆழமும், வீச்சும் கூடுதலாகப் புலப்பட்டது. புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தேவதாசி குலத்தில் பிறந்த அவரின் வாழ்க்கை முழுதும் சமூக, உடல் நோய்களோடு போராட வேண்டியதாக இருந்தது. ரத்த சோகை அவரைப் பள்ளிக்காலத்தில் வாட்டி எடுத்தது. படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார்.

கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அவர் விண்ணப்பித்தார். பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர் அதிர்ந்தார்கள். ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் எப்படி ஒரு பெண்ணை அனுமதிப்பது என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. புதுக்கோட்டை மன்னரான பைரவத் தொண்டைமானை செய்தி எட்டியது. அவரின் உத்தரவால் முதல் பெண் மாணவியாக நுழைந்தார் முத்துலட்சுமி. அங்கேயும் அசத்தினார்.

dr 11.jpg

Madras Medical College-ல் இடம் கிடைத்தது. அங்கே பெண்களுக்கு என்று தனி விடுதி இல்லை. தெரிந்தவரின் வீட்டில் தங்கிப் படிக்க வேண்டிய சூழல். ஆண் மருத்துவ மாணவர்கள் சீண்டல்களில் ஈடுபட்டார்கள். வகுப்பிற்கு வீட்டில் இருந்து வருகையில் திரை போட்ட வாகனத்திலேயே வருவார். ‘போயும், போயும் பெண்ணெல்லாம் படிக்கப் போகிறாள்’ என்றெல்லாம் வசைபாடுவது மக்களின் வழக்கமாக இருந்தது. ஆஸ்துமா வாட்டி எடுக்க, கொடிய வலியை, தூக்கமில்லாத இரவுகளை மருத்துவக் கனவுக்காக அவர் தாங்கிக் கொண்டு போராடினார்.

‘என் வகுப்பிற்குள் ஒரு பெண் நுழையக்கூடாது’ எனக் கர்னல் ஜிப்போர்ட் கர்ஜித்தார். முத்துலட்சுமி வகுப்பிற்குள் நுழையவில்லை. தேர்வு முடிவுகள் வந்தன. முத்துலட்சுமி கண்டிப்பிற்கும், கச்சிதத்திற்கும் பெயர் பெற்ற ஜிப்போர்ட்டின் அறுவை சிகிச்சை தாளில் முதல் மதிப்பெண்ணைப் பெற்று இருந்தார். அதற்குப் பிறகே முத்துலட்சுமியை தன்னுடைய வகுப்பில் அவர் அனுமதித்தார். முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்ற தருணத்தை , ‘இந்தக் கல்லூரி வரலாற்றின் பொன்னாள்’ என்று சிலிர்த்து ஜிப்போர்ட் எழுதினார்.

1927-1930 காலத்தில் சட்டசபையில் நுழைந்தார். அப்படி நுழைந்த காலத்தில் துணைத் தலைவராகவும் இயங்கினார். பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், பால்ய விவாகத் தடை சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் முதலிய பல்வேறு சட்டங்கள் அவரின் முயற்சியால் இயற்றப்பட்டன. குறிப்பாகத் தேவதாசி முறை ஒழிப்புக்காகத் தீவிரமாக இயங்கினார். அதற்குக் காந்தி, பெரியார் எனப் பல்வேறு தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகியது. 1930-ல் துவங்கிய அந்தப் போராட்டத்தில் சனாதானிகளின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

சத்தியமூர்த்தி கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைக் காக்க, கலைகளைப் பேண தேவதாசி முறை தேவை என்று பேசினார். “தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதக்கலை அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்” என்றார்.

முத்துலட்சுமி “உங்களுக்கு அக்கா தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் எந்தப் பெண்ணையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா?’ என்று கேட்டதோடு சத்தியமூர்த்திப் பேயறைந்து அமர்ந்துவிட்டார்.

பாரீஸ் வரை சென்று பெண்களின் உரிமை சார்ந்த குரலை முத்துலட்சுமி எழுப்பினார். திருமணமே வேண்டாம் என்று இருந்தவர் சுந்தர ரெட்டியை மணந்து கொள்ளச் சம்மதித்தார். ‘திருமண உறவில் இருவரும் சமமானவர்கள். என்னுடைய விருப்பங்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது.’ முதலிய விதிகளைச் சுந்தர ரெட்டி ஏற்ற பின்னே திருமணம் செய்து கொண்டார். சடங்குகள் இல்லாத திருமணமாக அது அமைந்தது.

தேவதாசி முறையைச் சட்டம் இயற்றி மட்டுமே ஒழித்துவிட முடியாது என்கிற தெளிவு முத்துலட்சுமி அவர்களுக்கு இருந்தது. ‘ஓயாமல் செயல்பட வேண்டும்’ என்று அவர் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார். தேவதாசி முறை ஒழிப்பால் ஆதரவற்றுப் போன பெண்களுக்கு என்று அடைக்கலம் தர இரண்டு இல்லங்களே சென்னையில் இருந்தன. ஒன்று பிராமணப் பெண்களுக்கு மட்டுமானது. இன்னொன்று பிராமணர் அல்லாதவர்களுக்கு உரியது. நள்ளிரவில் அவரின் வீட்டு கதவை மூன்று இளம்பெண்கள் தட்டி அடைக்கலம் கேட்டார்கள். தான் பொறுப்பில் இருந்த அரசு மருத்துவமனையின் கீழ்வரும் விடுதியின் பொறுப்பாளரை பார்க்க சொல்லி அனுப்பினார்.

அந்தப் பெண்களின் குலத்தின் பெயரை சொல்லியும், அவர்களின் பண்புகளைக் கேவலப்படுத்தும் வகையிலும் வசைபாடல்களை நள்ளிரவில் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. கண்ணீரோடு முத்துலட்சுமி அவர்களின் வீட்டுக்கதவை தட்டினார்கள். அந்தக் கணமே தன்னுடைய வீட்டையே பெண்களுக்கான ஆதரவு இல்லமாக மாற்றினார். சில காலத்துக்குப் பிறகு ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்காக என்று ‘அவ்வை இல்லத்தை’ உருவாக்கினார். அந்த மூன்று பெண்களும் மருத்துவர், ஆசிரியர், செவிலியர் என்று சாதித்துக் காட்டினார்கள். அவ்வை இல்லத்தின் பெண்களின் கல்வியை முத்துலட்சுமி தானே கவனித்துக் கொண்டார்.

dr-muthulakshmi-reddy-medical-student.jpg

தான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போதே புற்றுநோய்க்கு என்று தனியான ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். தன்னுடைய தங்கையைப் புற்றுநோய்க்கு இளம் வயதிலேயே இழந்ததன் வலி அது. சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் புற்றுநோய் சிகிச்சை தர வேண்டும் என்று கனவு கண்டார். இலவசமாகச் சேவை செய்ய வேண்டும் என்று அவர் தன்னுடைய கனவை விளக்கினார். விடுதலைக்குப் பிறகு அப்போதிருந்த மருத்துவ அமைச்சரிடம் உதவி கேட்டார். “ஏன் மக்கள் புற்றுநோயால் மட்டும் தான் இறக்கிறார்களா?” என்று துடுக்காகப் பதில் வந்தது. சுகாதாரச் செயலாளர் , ‘உங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால்…’ என்று பீடிகை போட்டு இந்த மாதிரி திட்டமெல்லாம் தேறாது என்று எழுதியிருந்தார்.

அமெரிக்காவில் போய் மேற்படிப்பு படித்துவிட்டு வந்திருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார். அவரோடு அரசு மருத்துவ வேலையைத் துறந்திருந்த சாந்தாவும் இணைந்து கொண்டார். அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கான அடித்தளம் போடப்பட்டது. பெரிதாகக் கையில் பணம் இல்லை என்றாலும், மக்களின் உயிர் காக்க ஓடி, ஓடி நிதி திரட்டினார். எளிய இடத்தில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை 12 படுக்கைகளோடு எழுந்தது. இன்றைக்கு கிட்டத்தட்ட ஐநூறு படுக்கைகளோடு வருடத்திற்கு இரண்டு லட்சம் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக அவரின் விதை, விழுதுகள் பரப்பி விரிந்துள்ளது.

அரசியல் களத்தில் அயராது இயங்கிய முத்துலட்சுமி தன்னுடைய மருத்துவர் பணியை விட்டுவிடவில்லை. மருத்துவத்தைப் பொருளீட்டும் முதலீடாகப் பார்க்காமல் எளியவர்கள் குறித்த கரிசனத்தோடு இயங்கினார். பொது வாழ்க்கையில் மூழ்கி குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கவில்லை. அவருடைய தங்கை நல்லமுத்துவை தன்னுடைய செலவிலேயே படிக்க வைத்தார். அவர் ராணி மேரி கல்லூரியின் முதல் இந்திய முதல்வராகப் பொறுப்பேற்று சாதித்தார். புதுக்கோட்டையில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிப் புத்துலகை சமைத்த முத்துலட்சுமி ரெட்டிக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

கமலாதேவி சட்டோபாத்தியாயா – அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்த அன்னை


கமலாதேவி சட்டோபாத்தியாயா கடந்த நூற்றாண்டில் இந்தியா கண்ட மகத்தான பெண்களில் ஒருவர். மங்களூரில் ஆங்கிலேய அரசில் ஆட்சியராக இருந்த அவரின் அப்பா இவர் சிறுமியாக இருக்கும் பொழுதே இறந்து போனார். சொத்தை எப்படி பிரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடாமல் போனதால் சிக்கல் எழுந்து அன்றைய நடைமுறைப்படி அவரின் வளர்ப்பு மகனுக்கு சொத்துக்கள் எல்லாம் போகவே வறுமையோடு போராடி இவரின் அன்னை இவருக்கு கல்வி புகட்ட ஏற்பாடு செய்தார். சென்னை ராணி மேரிக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர் சிறுமியாக இருக்கும் பொழுதே விதவையானவர். அன்றைய பழமைவாதிகளை எதிர்த்து கல்லூரித்தோழியின் அண்ணனான ஹரிந்திரநாத்தை திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்து போய் சமூகவியலில் மேற்படிப்பு முடித்து இந்தியா திரும்பினார்.

அவரின் இருபத்தி மூன்று வயதில் சென்னை சட்டசபை கவுன்சிலுக்கான தேர்தலில் நின்று தோற்றார். பின்னர் காங்கிரஸ் கமிட்டியின் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே காந்தியின் போராட்ட முறைகளால் ஈர்க்கப்பட்டிருந்த அவர் காந்தி உப்பு சத்தியாகிரகத்தில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும்,ஆங்கிலேயர்களின் வன்முறைக்கு அவர்கள் ஆளாக கூடாது என்ற பொழுது அதை எதிர்த்து பெண்களும் பங்குபெறும் உரிமையை பெற்றார். பம்பாயில் உப்பு சத்தியாகிரகத்தை முன்னெடுத்து நடத்தியவர் ஆங்கிலேய நீதிபதியிடமே இலவச உப்பை விற்றார்.

kamaladevi-chattopadhyay-05.jpg

பின்னர் காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே ஜெயபிரகாஷ் நாராயணன், மினு மசானி, லோஹியா ஆகியோரோடு இணைந்து காங்கிரஸ் சோசியலிச கட்சியை துவங்கினார். அக்கட்சி சோசியலிசம் பேசிய அதே சமயம் சோவியத் ரஷ்யாவின் ஒரு கட்சி ஆட்சிமுறை மற்றும் அடக்குமுறைகளை நிராகரித்தது. பெண்களின் உரிமைகள்,ஆண்களுக்கு இணையாக சம்பளம் ஆகியவற்றுக்காக தீவிரமாக பாடுபட்ட அவர் பிரசவகால விடுமுறை வேடும் என்றும் போராடினார்.

விடுதலைக்கு பின்னர் எம்.பி.ஆகவும்,அமைச்சர் ஆகவும் எண்ணற்ற வாய்ப்புகள் இருந்த பொழுது இந்திய கூட்டுறவு கூட்டமைப்பை உருவாக்கி பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்ற களமிறங்கினார். காந்தியின் கட்டளைப்படி அரசிடம் இருந்து எந்த பணத்தையும் எதிர்பாராமல் இயங்கினார். பல பெண்களை மீட்டார். பல்வேறு அகதிகளுக்கு வீடுகள் மற்றும் மறுவாழ்வுக்கு வழிகோலினார். பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளையும் அவரின் அமைப்பு நடத்தியது. இப்படி ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகளின் வாழ்க்கையை அவர் மாற்றினார்.

இந்தியாவின் நெய்தல், பானை செய்தல், ஓவியங்கள், உலோக வேலைப்பாடு, பொம்மை உருவாக்கம் ஆகியன பக்கம் அவரின் கவனம் சென்றது. அவற்றை நவீன தொழில்மயத்தொடு இணைத்து அந்த கலைஞர்களின் வாழ்க்கையை மீட்க விரும்பினார். அழிந்து போன,அழிவின் விளிம்பில் இருந்த கலைகளை மீட்டெடுத்தார். சங்கீத நாடக அகாதமியை உருவாக்கி இசை,நடனம் ,நாடகம் ஆகியவற்றையும் வளர்த்தார். தேசிய நாடகப்பள்ளியும் அவரால் எழுந்ததே! அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்த அன்னையை நினைவு கூர்வோம்.

ஜே.சி.குமரப்பா – எளிய மக்களை எஜமானாகக் கருதியவர்


ஜே.சி.குமரப்பா இந்தியாவின் காந்திய சிந்தனையாளர்களுள் மிக முக்கியமானவர். பொருளாதாரம் என்பது எளியவர்கள் பற்றி சிந்திப்பதாக இருக்க வேண்டும் என்கிற பார்வைக்கு அறிவுப்பூர்வமான உருவாக்கம் கொடுத்துவர் அவர். ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா என்கிற முழுப்பெயர் கொண்ட அவர் சார்டர்ட் அக்கவுண்டன்ட் படிப்பை முடித்து,பொருளாதரம் மற்றும் நிதி மேலாண்மையில் அமெரிக்காவின் சிருகேஸ் மற்றும் கொலம்பிய பல்கலைகளில் பட்டம் பெற்றார்.

kumarappa_j_large.jpg

அமெரிக்காவில் படிக்கும் காலத்தில் அவருக்கு எல்லாரைப் போலவும் ஆரம்பத்தில் முதலாளித்துவத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. ஒரு முறை இந்திய பொருளாதாரம் பற்றி ஒரு உரையை அவர் வழங்க அதைக்கேட்ட அவரின் பேராசிரியர் செலிக்மான் இந்திய வறுமைக்கான காரணங்கள் என்கிற தலைப்பில் அவருடைய ஆய்வுக்கட்டுரை அமையட்டும் என்று சொன்னார். எப்படி ஆங்கிலேயர் இந்தியாவை வறுமை மிகுந்த பூமியாக கிராமங்களின் ஒழிப்பு மற்றும் சுரண்டல் ஆகியவற்றில் மூலம் மாற்றினார்கள் என்பதை அந்த ஆய்வின் மூலம் அறிந்தார்.

மேலும் டேவன்போர்ட் என்கிற இன்னொரு பேராசிரியர் மனிதனின் சுயத்தேவைகள் மட்டுமே பொருளாதரத்தில் முக்கியம் என்று அழுத்தமாக தன்னுடைய கருத்தை வைத்தார். அவரின் மாணவராக இருந்தாலும் அந்த கருத்தோடு தான் எப்படி முரண்படுவதாக குமரப்பா எடுத்து பல்வேறு எடுதுக்காட்டுக்களோடு குமரப்பா உரைத்தார். அவரின் வாதத்திறனில் மெய்மறந்து போன டேவன்போர்ட் அவருக்கு ஏ ஒன் க்ரேடை வழங்கினார்.

காந்தியை சந்திக்க இந்தியா வந்தார் குமரப்பா. அவரின் ஆடிட்டிங் பணியை எல்லாம் விட்டு கிராமங்கள் நோக்கி நகர்கிற அற்புதம் காந்தியை கண்ட பின் நிகழ்ந்தது. குஜராத்தின் கிராமங்களில் ஏழை மக்களின் . வாழ்நிலையை பற்றி ஆய்வு செய்ய அவரை காந்தி அனுப்பி வைத்தார். அதற்கு பின்னர் பீகாரில் நிலநடுக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட பொழுது அங்கே நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் குழுவின் தலைவராக செயலாற்றினார். காந்தியடிகள் காசியில் இருந்து அவரை சந்திக்க வந்த பொழுது சில அணாக்கள் கணக்கில் இடித்ததால் அவரை நிவாரணக்குழு கூட்டம் முடிந்த பின்னரே அவர் சந்நித்தார்.

இந்தியாவிற்கு என்றொரு திட்ட அமைப்பு வேண்டும் என்று காங்கிரஸ் விடுதலைக்கு முன்னரே முடிவு செய்து போஸ், நேரு ஆகியோர் அது சார்ந்து இயங்கிய பொழுது ஜே.சி.குமரப்பா அந்த திட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர் முதலாளித்துவத்தின் மீது கொண்டிருந்த விமர்சனப்பார்வையை போலவே கம்யூனிசம் கொண்டிருந்த வர்க்கப்போர், அதன் வன்முறைப்போக்கு ஆகியவற்றையும் அவர் நிராகரித்தார்.

காந்தி உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது கைது செய்யப்பட்ட பொழுது அவரின் யங் இந்தியா இதழுக்கு இவர் என்னுடைய ஆசிரியர் ஆனார். அவரின் அனல் தெறிக்கும் கட்டுரைகளை ஆங்கிலேய அரசை அவரையில் சிறையில் அடைக்குமாறு செய்தது. காந்தி நினைவு நிதிக்கான பொறுப்பு அவர் வசம் விடுதலைக்கு பிறகு அவர் பொறுப்பேற்று கொண்டார். எவ்வளவு நிதி வேண்டும் என்று அவரிடம் கேட்கப்பட்ட பொழுது ,”எனக்கு நிதி தேவையில்லை. நேர்மை மற்றும் அகிம்சை கொண்ட நேரு,படேல்,ராஜகுமாரி அம்ரீத் கவுர் ஆகியோர் தங்களின் பதவியை துறந்துவிட்டு லட்சம் பேரை திரட்ட வரவேண்டும் !” என்று கோரிக்கை விடுத்தார். அது நிராகரிக்கப்பட்டது.

திட்டக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதும் அவர் மாட்டு வண்டியில் கூட்டம் நடந்த நாடாளுமன்ற அறைக்கு சென்றார். அவரின் வண்டி நிறுத்தப்பட்ட பொழுது,”அடித்தட்டு மக்களின் வாகனம் கூட இங்கே வர முடியாமல் போகிற பொழுது எப்படி அவர்களின் குரல் இங்கே எடுபடும்?” என்று வருத்தப்பட்டார். அரசாங்கம் செயல்படுத்திய சமூகத்முன்னேற்ற திட்டங்கள் பற்றி அவரிடம் அறிக்கை தருமாறு அன்றைக்கு வளர்ச்சி அமைச்சராக இருந்த டே கேட்டார். இவர் அதில் வளர்ச்சி திட்டங்கள் கிராமப்புற மேம்பாட்டுக்கு செலவிடப்படாமல் அங்கே சாலைகள் போடவும் அரசியல்வாதிகள்,ஊரின் தலைவர்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கு பயன்படுவதை சுட்டிக்காட்டினார்.
பெரிய வளர்ச்சித்திட்டங்கள் குறிப்பாக பெரிய அணைகளை கட்டுவதை விட சிறிய அணைகளை கட்டலாம் என்றும்,செயற்கை உரங்கள் மண்ணை பாழாக்கிவிடும் ஆகவே இயற்கை உரங்களை கைகொள்ள வேண்டும் என்றும் சொன்ன அவரை முதல் நவீன இந்திய சூழலியலாளர் என்கிறார்கள். அணைகளை மக்களின் கூட்டு முயற்சியால் தூர்வார வேண்டும் என்றும் அவர் அறிவுரை தந்தார்.

வினோபபாவேவிடம் பூதான இயக்கத்தில் பெறப்பட்ட நிலத்தை அப்படியே இலக்குகள் வைத்துகொண்டு அதிகப்படுத்துவதை விட பெறப்பட்ட நிலத்தை வளமாக்கி அதை மக்களுக்கு நிலையான வளர்ச்சி தரும் மூலமாக மாற்ற வேண்டும் என்றார். அவர் எச்சரித்தபடியே பூதான இயக்கம் நீர்த்துப்போனது.

காந்திய கொள்கைகள் எப்படி பொருளாதார ரீதியாக சாத்தியம் என்பதை அவரின் புத்தகங்கள், ஆய்வுகள் மூலம் விளக்கினார். அப்படி அவர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதினார். அவரின் இறுதிக்காலத்தில் மதுரைப்பகுதியில் காந்தி நிகேதன் அமைத்து தங்கி சேவைகள் செய்வதில் கழித்தார். அவரை வினோபாபாவே அங்கே பார்க்க வந்த பொழுது சுவரில் மாட்டியிருந்த காந்தியின் படத்தை காண்பித்து “இவர் எனக்கு எஜமான்!” என்றுவிட்டு அடுத்திருந்த எளிய விவசாயி ஒருவரின் படத்தை காண்பித்து ,”இவர் என் எஜமானுக்கும் எஜமான்!” என்றார். எளிய மக்களை எஜமானாக கருதிய அந்த பொருளாதார மேதையை நினைவு கூர்வோம்.

ஜெயபிரகாஷ் நாராயணன் – இந்திய அரசியலில் இணையற்ற தலைவர்


ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திய அரசியலில் இணையற்ற தலைவர். பீகாரில் கடந்த நூற்றாண்டில் பிறந்த இவர் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகம் சென்று சமூகவியல் படித்தார். அங்கே பழத்தோட்டங்களில் முதுகு ஓடிய வேலை பார்த்தும், உணவுத் தட்டுக்களை கழுவியும் தன்னுடைய கல்வியை முடித்தார். பாரதம் திரும்பியதும் காந்தி பின் அணிவகுத்து ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்களில் தனி முத்திரை பதித்தார்.

ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கங்களில் தீரமாகப் போராடிய இவர், விடுதலைக்குப் பின் கிராமங்களை முன்னேற்றும் சர்வோதயா திட்டத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டு பதவிகளில் இருந்து விலகியிருந்தார். மனைவி பிரபாவதி காந்தியின் அழைப்பால் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க முடிவு செய்தபடியால் தானும் அதை அப்படியே பின்பற்றினார்.

Jayaprakash_Narayan.jpg
இந்தியாவின் ஜனாதிபதி கதவை தட்டிய பொழுது அதை மறுத்து, பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு அரசியலில் இருந்து துறவறம் பூண்டார். ஜெ.பி கிராம சுயாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று விடுதலைப் பெற்ற காலத்திலேயே நேருவுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினார். வெறுமனே, பிரிட்டனின் நாடாளுமன்ற, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான ஜனநாயகமே முழு ஜனநாயகம் என்பது குறைபாடுள்ள பார்வை எனச் சரியாக அவர் சுட்டிக்காட்டினார். சர்வோதய இயக்கத்தில் இணைந்து கிராமங்களில் மகத்தான  சேவைகள் செய்தார்.

சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள் மற்றும் அரசுக்கு இடையேயான பேச்சு வார்த்தைக்கு அவர் வழிவகுத்தார். காஷ்மீரில் இந்திய அரசின் போக்கை கண்டித்த அவர் ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்வதை சாதித்தார். அரசுக்கும், அவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் தூதுவராகவும்  பணியாற்றினார். நாகாக்கள் நடத்திய ஆயுத வழிப்போராட்டத்திற்கு அமைதி வழியில் தீர்வு தேடியும் அவர்  இயங்கினார். போராடிக்கொண்டிருக்கும் மக்களிடையே  உரையாடல், சமரசம் ஆகியவற்றின் மூலம் அற்புதங்கள் நிகழ்த்தலாம் என  நம்பியவர் அவர்.

ஆனால்,அலகாபாத் நீதிமன்றம் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அரசு அதிகாரியை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தியது, மேடை அதிக உயரமாக அமைத்தது ஆகியவற்றுக்காக இந்திராவை தேர்தல்களில் இருந்து போட்டியிட ஆறு வருடம் தடை விதிக்க, நாட்டில் எமெர்ஜென்சி என்கிற சர்வாதிகாரம் புகுந்தது.

விலைவாசி ஏற்றம், வேலை வாய்ப்பின்மை, கள்ளச்சந்தை, பொருளாதார தேக்கம், அதிகார குவிப்பு, ஊழல் ஆகியவற்றால் நாடு நொந்து கொண்டிருந்த சூழலில் இந்த வழக்கின் தீர்ப்பு தகிப்பை அதிகப்படுத்தியது. நடக்கவே முடியாது, சர்க்கரை நோய் வேறு, மூச்சு விடவே சிரமம், ஆனால் எழுந்து வந்தார் ஜே.பி. மக்களை ஒருங்கிணைத்து போராடினார். தான் தூக்கி கொஞ்சிய இந்திராவிற்கு எதிராக ஜனநாயகம் காக்க மக்களைத் திரட்டி போராடினார். பீகாரில் ஊழல் அரசுக்கு எதிராக எளியவர்களைத் திரட்டி போராட்டங்கள் தொடுத்தார்.

பல்வேறு கட்சிகளை இணைத்து ஜனதா கட்சியை உருவாக்கினார்; தேர்தலை இணைந்து சந்திக்க வைத்துக் காங்கிரஸ் மற்றும் இந்திராவை வீட்டுக்கு அனுப்பினார்.இரண்டாவது காந்தி எனப் புகழப்படும் அவர் அப்பொழுதும் எந்தப் பதவியையும் ஏற்கவில்லை. லோக்நாயக் என அறியப்பட்ட நிஜ மக்கள் நாயகன் அவர்.