

ஆனால், கள நிலவரம் வேறானது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அடிப்படைத்தேவைகளுக்கே அல்லாடுகிறார்கள். கடனில் சிக்கி இறுதிவரை வெளிவர முடியாமலே இறந்து போகிற பெண்கள் பலர். ஆனால், அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர்கள், உறவுக்காரர்கள் பெரும்பணம் ஈட்டுகிறார்கள். 9-13 வயதுக்குள் பெண்கள் இதற்குள் தள்ளப்படுகிறார்கள். கண்ணில் ரத்தம் வரவைக்கும் முறைகளைக்கொண்டு அவர்களைப் பருவம் எய்த வைக்கிறார்கள். அடித்தும், பட்டினி போட்டும், போதை மருந்துகள் கொடுத்தும் அவர்கள் காலத்துக்கும் பாலியல் தொழிலேயெ உழல வைக்கப்படுகிறார்கள்.
தூக்கமின்மை, உடற்பிணி அவர்களைப் பிடுங்கி தின்கிறது. சமீபத்திய ஆய்வுகள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையால் ஏற்படும் உடல், மனரீதியான பாதிப்புகள் போர்க்களத்தில் வீரர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை விட மோசமானவை என நிறுவுகின்றன. இவர்களின் உலகை வெவ்வேறு சிறுகதைகளின் மூலம் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளும் முயற்சியே இத்தொகுப்பு என்கிறார் ருச்சிரா குப்தா.
கமலா தாஸின் கதையில் பலதரப்பட்ட பெண்களும், ஆண்களும்,குழந்தைகளும் நடமாடுகிறார்கள். பாலியல் வேட்கை மிகுந்த ஆணுக்குள் எட்டிப்பார்க்கும் தந்தையின் பிரியம் சில வரிகளில் கடத்தப்படுகிறது. மோகத்தின் வெம்மையில் போலி வாக்குறுதி தந்து பெண்ணின் மனதை உருக்குலைக்கும் இளைஞன் ஒருவன் கடந்து வந்த பல முகங்களை நினைவுபடுத்துகிறான்.
பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் தாய்மார்களின் பதைபதைக்க வைக்கும் வாழ்க்கையை இரு கதைகள் கண்முன் நிறுத்துகின்றன. அதிலும் நாயனா அட்டர்கரின் கொங்கனி கதையில் குழந்தை காலடியில் அழுது கொண்டிருக்க, ஆடவன் ஒருவன் அக்குழந்தையின் அன்னையோடு புணர்ந்தபடி இருக்கிறான். அவனின் மோகத்திற்கும், குழந்தையின் கதறலுக்கும் இடையே தவிக்கும் அந்தத் தாயை போல எத்தனை அன்னைகள்?
ஆண் வெறுப்பு மட்டுமே கதைகளின் மையமில்லை. அப்பெண்களின் உலகின் அன்பும், கனிவும், தயக்கங்களும், துயர்களும் அழகியலோடு கடத்தப்படும் கதைகள் அநேகம். பிபூதிபுஷன் பண்டோபாத்தியாயா கதையில் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் சூழல் எந்தப் பரப்புரையும் இல்லாமல் புரிய வைக்கப்படுகிறது. ஒரு பிராமணச் சிறுவனுக்கு அன்போடு தீண்டாமைக்கும், சாதி கட்டுப்பாடுகளுக்கும் பயந்து கொண்டே தின்பண்டங்கள் கொடுத்து அன்பை பொழியும் பெண்கள் நெகிழ வைக்கிறார்கள். முப்பது வருடங்கள் கழித்து அவர்களைச் சந்திக்கும் கணத்தை இப்படிக் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர்:
‘எனக்கு ஞாபகம் இருக்கு. அந்தப் பைத்தியக்கார வாண்டு பிராமணப் பையன் தானே நீ. எப்படி வளந்துட்டே? அம்மா அப்பாலாம் உயிரோட இருக்காங்களா?’
‘யாரும் உயிரோட இல்லை’
‘எத்தனை பசங்க’
‘அஞ்சு பேரு’
‘உட்காரு ஐயா. இங்கே உக்காரு. இந்தா வந்துடறேன்.’
அந்தப் பெண் திரும்புகையில் என்ன தந்தாள், அவனின் முகம் மறந்து போயிருந்தாலும் பேரன்பை எப்படிப் பத்திரப்படுத்தித் தந்தாள் என்பவை எல்லாம் அற்புத கணங்கள்.
மான்டோவின் கதையில் வரும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்ணின் கெஞ்சலும், அவள் தலைக்கு மேலே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் நூறு மெழுகுவர்த்தி வெளிச்சமும் பரிதாபத்தைக் கோரவில்லை. தூக்கம் தொலைத்து தரகர்களுக்குப் பணம் ஈட்டித்தரும் அடிமையாக மாற்றப்பட்டாலும் தன்னைப் பார்த்து யாரும் இரக்கப்படுவதற்கு அவள் அனுமதிக்கவில்லை. தூக்கத்திற்காக, நிம்மதிக்காக அலையும் அவள் கதையின் இறுதியில் செய்யும் செயலும், கொள்ளும் பேருறக்கமும் அதிர வைக்கும்.
கமலேஸ்வரின் இந்தி கதையில் வருகிற நாயகி தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய மருத்துவச் செலவுகளுக்காக வாங்கிய கடனை எப்படியாவது அடைத்து விடுவது என உறுதியோடு இருக்கிறாள். உயிரை எடுக்கும் வலியிலும் தன்னை நாடிவரும் தோழனுக்கு இன்பம் தர முயலும் அவளின் கரிசனம் கலங்க வைக்கிறது. அக்கதையின் இவ்வரிகள் எத்தனை ஆழமானவை?:
ஆயிரம் ஆண்கள் அவளுடைய வாழ்க்கைக்குள் வந்திருக்கிறார்கள். ஆனால், தன்னுடைய மிச்ச வாழ்க்கை முழுக்க அடைக்கலம் தரும் நிழலுடையவர்களாக அவர்கள் யாரும் இருக்கவில்லை.
அவளுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் கடன் வாங்கினாள், ஆனால், அங்கேயும் நம்பிக்கை இல்லை. என்றோ ஒருநாள் காணாமல் போகப்போகும் அவர்களை எப்படி அவளால் நம்ப முடியும்? முதுமை அவளைத் தீண்டியதும் ஆண்கள் அப்படியே கைவிட்டுவிடுவார்கள். அவர்களின் குழந்தைகள் வளர்ந்ததும் அவளிடம் வருவதை நிறுத்திக்கொள்வார்கள்….அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கடன் கொடுத்தவர்கள் அவளைக் காண வருவது தான்.
பிரேம் சந்தின் கதையின் கவித்துவமும், அதில் நிரம்பி வழியும் பேரன்பும், வன்மமும் சொற்களில் அடங்காதவை. ஆண் தன்னுடைய தாபங்களுக்கு ஏற்ப பெண்களை நாடுவது போல, அவனுடைய காதலியும் நாடினால் என்னாகும் எனத் துரிதமாக விவரிக்கும் இக்கதையில் நின்று தரிசிப்பதற்குள் காட்சிகள் கடந்து விடுகின்றன.
குர்அதுல்ஐன் ஹைதரின் கதை முழுக்கப் பழம்பெருமை மிக்க ஒரு பெண்ணே நிறைந்திருக்கிறாள். கதையின் இறுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் இறை நம்பிக்கையுள்ள பெண்ணின் குரல் அத்தனை வலிமிக்கதாக ஒலிக்கிறது:
நம்முடைய செயல்கள் எல்லாம் நியாயத் தீர்ப்பு நாளில் நம்மைப் படைத்தவனால் தீர்ப்பளிக்கப்படும். இந்த மும்பையில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள், எல்லா வகையான விஷயங்கள் இங்கேயும் நடக்கின்றன. …குரானை ஓதி நியாயத்தீர்ப்பு நாளில் எங்களுக்குக் கருணை காட்ட பிரார்த்தனை செய்.
சித்திக் ஆலமின் கதை மாய யதார்த்தவாத பாணியில் பயணித்துக் கிளர்ச்சியாக வாசிப்பு அனுபவத்தைப் பரிசளிக்கிறது. இஸ்மத் சுக்தாயின் கதையில் வரும் நாயகி லஜ்ஜோ கொண்டாட்டத்தின் திரு உரு. அவள் விதிகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டள்ளவள். அவளின் கசடுகளை விட அவளின் விடுதலையும், இன்ப நாட்டமும், குறும்புமே நம்மை நிறைக்கிறது. திருமணத் தளை அவளைக் கட்டிப்போட முயல்கையில் அவள் புரிபவை சுவையானவை. வெறும் ஒப்பாரித்தன்மையோடு தான் அவர்களின் வாழ்க்கை அணுகப்படும் என்கிற பொதுப்பார்வையை உடைத்துப்போடும் மகத்தான உருது சிறுகதை அது.
நபேந்து கோஷின் கதையின் இறுதி வரிகள் பெண்களின் நம்பிக்கையைத் தங்களின் வேட்கைகளுக்காகப் பலியிடும் ஆண்களின் உலகையும், பெண்ணின் வாழ்க்கையையும் சில வரிகளில் நம்முன் நிறுத்தி நகர்கிறது:
அவனைச் சைய்யா சுலபமாக மறக்க மாட்டாள். தீன்காரி தாஸ் என்கிற பல்ராம் சௌத்ரி அவளை அர்ஜுனனாக மயங்கினான். அந்த மயக்கம் அவள் வயிற்றினில் நாளும் வளர்கிறது. அது அவள் கருப்பையை விட்டு வெளிவந்த பின்பும் நாளும் வளரும். அது வளர்ந்து கொண்டே இருக்கும், அவளுடைய இறுதி மூச்சுவரை அவளின் ஆன்மாவை கடித்துக் குதறிக்கொண்டே இருக்கும். பல்ராம் சைய்யாவை மறந்தாலும், அவளால் அவனை மறக்கவே முடியாது.
மனிஷா குல்ஷரேஷ்தாவின் கதை மகன், தாய் ஆகிய இருவரின் குரல்களில் ஒலிக்கிறது. அவனைப் பெற்று, தனியாளாகத் துரோகத்தின் நிழலில் வளர்த்த அன்னையைப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவள் என்பதால் அம்மா என்று அழைக்க மறுத்து மகன் தான் கண்டதை விவரிக்கிறான். அன்னையின் குரல் அவனுக்கு உண்மையைச் சொல்ல மறுக்கிறது. அவனுடைய கேள்விகளுக்கும், முன்முடிவான போலி அறத்துக்கும் அவளின் ஆன்மா அடிபணிய மறுக்கிறது. இக்கதையின் ரகசியத்தை விடவும் அதன் நெருக்கமும், நேர்மையும் மொழிபெயர்ப்பிலும் அப்படியே கடத்தப்பட்டு இருக்கிறது.
மாதுரிமா சின்ஹாவின் கதை நெஞ்சில் அறம் இன்றி, போலித்தன்மை மிக்க மனிதர்கள் பிரியத்தின் சிறு நிழலையாவது கண்டு விட மாட்டோமா எனக் கொடிய வாழ்க்கைக்கு இடையே பரிதவிக்கும் பாலியல் தொழிலில் சிக்குண்டு நிற்கும் பெண்களை ‘மோசமானவர்கள்’ என்கிற அபத்தத்தை எளிய கதையமைப்பில் சாடி செல்கிறார்.
கடிதங்களால் ஆன இரு கதைகள் தொகுப்பை அலங்கரிக்கின்றன. புரியாத மொழியில் இருவரும் எழுதிக்கொள்ளும் கடிதங்களை வாசித்து, பேரன்பை சுவாசித்து, மீண்டும் அவற்றை எழுதியவர்களே எடுத்துச் செல்லும் வலி கண்களைக் கசிய வைக்கிறது. தந்தையின் காதலியை தேடிச்செல்லும் மகளுக்குக் கிடைக்கும் அன்னையின் வாசனை நம் நாசியையும் நிறைக்கிறது.
கிஷன் சந்தரின் கதை பிரிவினை காலத்தில் ஒரு பாலியல் தொழிலாளி ஜின்னா, நேரு இருவருக்கும் எழுதும் கடிதமாக நீள்கிறது. மத வெறி எப்படி இளம் சிறுமிகளின், பெண்களின், குடும்பங்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போடுகிறது என்பதை விட அந்தப் பாலியல் தொழிலாளியின் கடிதத்தின் இரு பத்திகள் சூடுபவை. அவற்றோடு நம்மை உலுக்கும், இன்னமும் கரிசனத்தோடு, கவலையோடு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்களை அணுகும் இந்தச் சிறுகதை தொகுப்பின் அறிமுகத்தை முடிக்கலாம்:
“கொடுமைக்கார முஸ்லீம்கள் பேலாவின் அம்மாவுடைய மார்பகங்களை அறுத்து எறிந்தார்கள். ஒரு அன்னையின் மார்பகங்கள் தன்னுடைய பிள்ளை இந்துவா,முஸ்லீமா, சீக்கியனா, யூதனா எனப்பார்க்காமல் பசி தீர்க்க பாலூட்டுகிறது. உலகத்தின் அகன்ற பரப்பினில் படைப்பின் புதிய அத்தியாயத்தை அது கொண்டு வருகிறது. இந்தப் பால் கசியும் மார்பகங்களை அல்லா உ அக்பர் என உச்சரிக்கும் மக்களே வெட்டினார்கள். அறியாமை அவர்களின் ஆன்மாவை கருத்த நஞ்சால் நிறைத்து விட்டது. நான் புனித குரானை வாசித்து இருக்கிறேன். பேலாவின் பெற்றோருக்கு ராவல்பிண்டியில் நிகழ்த்தப்பட்டவற்றை இஸ்லாம் ஒன்றும் கற்பிக்கவில்லை என எனக்குத் தெரியும். அது மனிதமும் இல்லை, பகைமையும் இல்லை, பழிவாங்கலும் இல்லை. அது மிருகத்தனமான, கோழைத்தனமான, கொடூரமிகுந்த, சாத்தானை ஒத்த செயல். அது இருளின் நெஞ்சத்தில் இருந்து வெளிப்பட்டுக் கடைசிக் கீற்று நம்பிக்கையையும் கறைப்படுத்தி விட்டது.’
———————————————————————————————————-
ரெஹனா, மர்ஜானா, சூசன் பேகம் அவர்களின் தந்தையின் பிணத்தின் முன்னால் ஒவ்வொருவராக வன்புணர்வு செய்யப்பட்டார்கள். தங்களுக்குத் தாலாட்டு பாடிய, கண்ணியம், பக்தி, வெட்கத்தோடு தங்கள் முன் தலைகுனிந்து நடந்த அம்மாக்களை, சகோதரிகளை வன்புணர்வு செய்தார்கள் அந்த ஆண்கள்.
இந்து மதத்தின் புனிதம் பறிபோனது. அதன் அறங்கள், நம்பிக்கைகள் அழிக்கப்பட்டன. இப்போது அமைதி மட்டுமே நிலவுகிறது. க்ராந்த் சாஹிபின் ஒவ்வொரு வரியும் அவமானப்பட்டு இருக்கிறது. கீதையின் ஒவ்வொரு வரியும் காயப்பட்டு இருக்கிறது. அஜந்தாவின் கலையழகு குறித்து என்னிடம் யார் பேச முடியும்? அசோகரின் எழுத்துக்கள் குறித்து யார் என்னிடம் சொல்ல முடியும்? எல்லோராவின் சிற்பி குறித்து யார் கீதமிசைக்க முடியும். அந்த ஆதரவற்ற பட்டுல் சிறுமியின் கடித்துக் குதறப்பட்ட உதடுகளில், மிருகங்கள்,அரக்கர்களின் பல்தடங்கள் இருக்கும் அவளின் கரங்களில் உங்கள் அஜந்தாவின் மரணம் தெரிகிறது, உங்கள் எல்லோராவின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, உங்கள் நாகரீக சமூகம் பிண ஆடை போர்த்திக்கொண்டு நகர்கிறது…
அவர்களை என் தொழிலுக்குள் நான் தள்ளமுடியும். ஆனால், ராவல்பிண்டியும், ஜலந்தரும் அவர்களுக்குப் புரிந்ததை நான் செய்ய மாட்டேன்.
River Of Flesh
தொகுப்பாசிரியர்: ருச்சிரா குப்தா
Speaking Tiger
பக்கங்கள் 256
விலை ரூபாய் 350
(இத்தொகுப்பின் ஒரு முக்கியமான குறை பல்வேறு மொழிகளின் சொற்களுக்கு பொருள் இறுதியில் கூட தரப்படவில்லை. இது வாசிப்பை சமயங்களில் தடைப்படுத்துகிறது. இந்நூல் தமிழில் மெய்ப்பொய்கை என்கிற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. நான் ஆங்கிலத்திலேயே நூலை வாசித்தேன். )
ஹென்றியின் பப்பாவும், அவனும் உரையாடிக்கொள்ளும் கணங்களில் வழியும் பிரியமும், வன்மங்கள் அற்ற நெருக்கமும், அவ்வப்போது இயல்பாகக் கசிந்து பெருக்கெடுக்கும் கண்ணீரும் நம் கரங்களிலும் ஒட்டிக்கொள்கிறது. ‘என் மதம் எவ்வளவு உசத்தினாலும் அதை என் பிள்ளை மேலே திணிக்கக் கூடாது’ என்கிற பப்பா ‘பிரார்த்தனை என்பது வேண்டுவது அல்ல, விரும்புவது’ என்று நெகிழவைக்கிறார். பப்பா என்கிற சபாபதி, ‘யாரும் யாரையும் அடிக்கக் கூடாது. சண்டையே வேண்டாம்.’ என்று வன்முறையற்ற ஒரு புத்துலகை விரும்புகிறார். கடுமையான அடக்குமுறையால், பூவரச மரத்தின் குச்சியால் மட்டுமே பேசும் கொடுமைக்கார தந்தைக்குள் இருக்கும் மெல்லிய மனிதத்தை நாவல் புலப்படுத்துகிற போது பால்யகால அடிகளின் நினைவுகள் எட்டிப்பார்த்தன.
இந்தக் கதையில் வரும் மனிதர்கள் சொத்துக்களை விடத் தர்மத்தை பெரிதென்று நம்புகிறார்கள். தியாகத்தைச் செய்வதில் தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள். அவர்கள் அறத்தின் உச்சங்களை மானுட கசடுகளிடையே வெகு இயல்பாக அடைகிறார்கள். தனக்குப் பிரியமான வேறொருவரோடு வெளியேறுகிற மனைவியைக் கொல்ல சொல்லும் கவுரவங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுக்கிறார்கள். சமயங்களில் உறவுகளின் உன்னதம் காக்க தீங்கில்லாத பொய்களைச் சொல்கிறார்கள். காயப்பட்டு நிற்கும் முன்பின் தெரியாத மனிதர்களுக்கு மனம் கரைய கண்ணீர் வடிக்கிறார்கள். சொந்த காயங்களைத் தாண்டி துரோகம் இழைத்தவர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகக் கவலைப்படுகிறார்கள், அவற்றைக் கடந்து நேசிக்கக் கற்றுத்தருகிறார்கள்.
கதையின் நாயகன் ஹென்றி கிழங்கு வைக்கிற பெண் துவங்கி, சிறுவர்கள் வரை அனைவரையும் சமமாக மதித்துக் கைகூப்பி வணக்கம் செலுத்துகிறான். அழுதும், பயந்தும் படிக்கிற கல்வி என் மகனுக்கு வேண்டாம் என்கிற பப்பாவின் பேரன்பின் நிழலில் மனிதர்களை அவர்களின் குறைகளோடு ஏற்று அன்பு செலுத்துபவனாக வளர்கிறான். தந்தையின் வேர்கள் தேடி செல்கையிலும், சக மனிதர்களின் துயர்களுக்குச் செவிமடுக்கிறான். கொள்கைகள் என்று தனக்கொன்றும் இல்லை என்று மனிதர்களின் மனதிற்கு முக்கியத்துவம் தருகிறான். அவன் கண்களுக்கு மரத்தில் குதித்தோடும் மந்திகளும், மலையின் பேரழகும், குளிக்கிற பெண்ணும் ஒரே அழகியலோடு ரசிப்பதற்கு உரியவர்கள் ஆகிறார்கள். அந்தப் பார்வையில் மனச்சாய்வுகள் இல்லை. சந்தேகங்கள் சுவடின்றி மனிதர்களை நம்புகிறான். மனதை மட்டும் ரம்மியமாகச் செலுத்தியபடி, வாழ்க்கை இழுக்கும் போக்கினால் புகார்கள் இன்றிப் பயணிக்கிறான். புதிய அனுபவங்களைக் கண்டடைகிறான்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலில் தனிமனிதர்களின் விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள், போலித்தனங்கள், அடக்குமுறைகளில் இருந்து விலகி தங்களுக்கான வாழ்க்கையை வாழ முயல்பவர்கள் இயல்பாகக் கண்முன் நடமாடுகிறார்கள். ‘நான் திருமணங்களுக்கோ, ஆண் பெண் உறவுகளுக்கோ எதிரியில்ல…எதற்குமே எதிரியாக இருப்பது சரியல்ல… ஆனால்..ஆனால் எனக்குத் திருமணம் அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். எனக்குக் கூழ் மட்டும் போதும். எல்லாரும் கூழே குடிக்க வேண்டும் என்றா சொல்லுகிறேன்? நீங்கள் சொல்கிற மாதிரி இந்தக் கிராமங்களும், இங்கே வாழ்கிற மக்களும் நகர்வாழ்க்கையோடு பேதமற கலந்து போகிற நாள் வரலாம். வரட்டுமே. அதற்கு நானும் ஏன் ஆசைப்பட வேண்டும்?’ என்கிற ஹென்றியின் குரல் எல்லாக் காலத்திலும் விடுதலை நாடும் மனங்களில் ஒலிக்க வேண்டியது. மந்தைத்தனங்கள் தாண்டி மானுடம் நாடுபவர்களை வழிநடத்தக்கூடிய, மனதின் வன்மங்களை, கசடுகளைக் கரைக்கிற அற்புதத்தைப் புரியும் ஆரவாரமற்ற முக்கியமான நாவல் இது.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஜெயகாந்தன்
பக்கங்கள் 316
விலை : 325
காலச்சுவடு பதிப்பகம்
பிரியமுள்ள ரஃபேலுக்கு,
நான் உன் மீது அளவில்லாத அக்கறை காட்டுகிறேன். நீயோ பாராமுகமாக இருக்கிறாய். அதனால் நான் உன்னை விட்டு விலக நேர்கிறது. இது என் குற்றமா? கண்மண் தெரியாமல் அன்பை பொழிவது தான் நான் செய்கிற தவறா? இல்லை, நான் தான் அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறேனோ?
அளவுக்கு மீறி ஆசைப்படுகிறேன் என்பது உண்மை என்றால், உன்னைக் காலத்திற்கும் காதலிக்க என்ன வழி? கட்டற்று காதலித்து, கையளவு அன்பை எதிர்பார்ப்பதே சிறந்த வழியா? இப்படிப்பட்ட கலவையான உணர்வுகளைக் காலத்துக்கும் தாங்கிக்கொண்டு பிரியத்தோடு இருக்க முடியுமா? அப்படிப்பட்ட ஆற்றல் அம்மாக்களுக்கும், துறவிகளுக்கும் மட்டுமே சாத்தியம். நான் அன்னையுமில்லை, அனைத்தும் துறந்த துறவியும் இல்லை. என்னால் எதிர்ப்பார்ப்பையும், பேரன்பையும் பிரித்துப் பார்க்க முடியாது.
எதிர்பார்ப்பையும், அக்கறை ததும்பும் அன்பையும் பிரித்து விட முடியுமா என்ன? இப்படிப்பட்ட அரிய நிலை குறித்து உளவியல் வல்லுனர்களும், ஞானிகளும் பேசி கேட்டிருக்கிறேன். இந்த எதிர்பார்ப்பற்ற நிலைக்கு உன்னதமான விழிப்புணர்வோ, அளவில்லாத துன்பமோ அழைத்துச் செல்லும். இன்னும் அந்த இடத்தை நான் சென்றடையவில்லை. சில நேரங்களில், எப்போதுமே அங்கே போக மாட்டேன் என்று தோன்றுகிறது.
என்னுடைய ஆன்மாவின் ஒரு பகுதி, அங்கே போகக்கூட விரும்பவில்லை. நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதற்கும், எதையாவது எதிர்பார்ப்பதற்கும் இடையே நூலிழை வேறுபாடே உள்ளது. அது சுய-மோசடிக்கும், சுய-மரியாதைக்கும் இடையே உள்ள வேறுபாடு. நாம் எல்லோரும், இரு பக்கமிருந்தும் பேரன்பும், புரிதலும் பாயும் உறவினில் திளைக்கும் பேறு பெறவேண்டியவர்கள்.
எதையாவது எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று. அதில் சுயமரியாதை கலந்துள்ளது. நாம் எல்லோரும், இரு பக்கமிருந்தும் பேரன்பும், புரிதலும் பாயும் உறவினில் திளைக்கும் பேறு பெறவேண்டியவர்கள்.
எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது மேன்மைமிக்க நிலையாக இருக்க வேண்டியதில்லை. அது காயப்படாமல் காதல் புரிய முயலும் முயற்சியாகவும் இருக்கலாம். அன்பின் நிழல் கூடப் படராத காலங்களின் கடுமை தாளாமல், அதிலிருந்து தப்ப முயல்கிறோம். அப்போது எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதே காதல் காலத்துக்கும் தொடர வழி என்கிற தத்துவம் மூளைச்சலவை செய்கிறது. அந்தச் சுயமோசடியில் மூழ்கி விடுகிறோம்.
அது சரியாக இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை, அளவு கடந்த அன்பை பொழியும் அந்த நபர் தவறானவரோடு காதல் கொண்டிருக்கலாம். தனக்கானதை கேட்டு பெறவோ, வேறொருவரை காதலிக்கவோ தைரியமில்லாமல் அங்கேயே துவண்டு நிற்கலாம். ஒரு வேளை, தன்னுடைய காதலோடு கலந்து பாயும் எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொள்ளும், உணர்வுகளை மதிக்கும் உன்னதமான உறவை தேடி கண்டடைவதே அவருடைய முதல் வேலையாக இருக்க வேண்டும்.
ஆனால், என்ன செய்வது? உயிர் கரையும் உறவினில் எது சரியான எதிர்பார்ப்பு என எப்படித் தெரிந்து கொள்வது? எல்லாருக்கும் பொருந்த கூடிய ‘ஒரு உறவில் எது சரியான எதிர்பார்ப்பு’ என வழிகாட்டும் கையேடு எதுவும் எழுதப்படவில்லையே?
நமக்கு நாமே எது எதிர்பார்ப்பின் எல்லை என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். நாம் எப்படி அன்பு செய்யப்பட வேண்டும் என நாமே அறிந்து கொள்ளவேண்டும்.
ஆனால், நமக்கானவர்கள் பிரியத்தை எப்படிப் பொழிய வேண்டும் என்று தெரிகிறதா? அப்படியே தெரிந்தாலும், அதை எப்படி நம் காதலருக்கு கடத்துவது? அப்படிப்பட்ட மொழியைக் கண்டறியாத சபிக்கப்பட்ட சமூகம் அல்லவா இது?
ரஃபேல்! எப்படி உன்னிடம் அதைச் சொல்வது? என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவது? நான் “தேவை”, “ஆசை”, “வேதனை”, “தனிமை” “அச்சம்” முதலிய வார்த்தைகளை உதிர்க்கலாமா? .
உனக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியே ஆக
வேண்டுமா?
இதற்குப் பதிலாக, நீ என்னை எப்படிக் காதலிக்க வேண்டும் என்று ஏங்கி தவிக்கிறேனோ, அதைப் போல உன்னைக் காதலிப்பதன் மூலம் என் கண்ணீரின் துளிகள் உன்னை நனைக்குமா? நீ எனக்கானவன் என்றால், பழத்தோட்டத்தின் மரங்கள் ஒன்றுக்கு ஒன்று இடிக்காமல் கிளைகளைப் பரப்புவதைப் போல, என் பிரியத்தின் பேரொளியை நீ பருகிக்கொள்வாய் இல்லையா? உன் கிளைகள் எனக்கு வழிவிடாமல் போகும் என்றால், நாம் காவிய காதலர்கள் இல்லை. சத்தமில்லாமல் நான் அகல்வதே சரியாக இருக்கும்.
எந்தச் சுவடும் இல்லாமல் அகல்வது ஒன்றும் எனக்குப் புதிதில்லையே? கண்டுகொள்ளாத உனக்காகத் தருவதற்கு என்று என்னிடம் இருக்கும் ஒரே கண்ணியமிகுந்த செயல்பாடு அது தானே? என் இதயத்தை இருகூராகப் பிளக்கும் இக்கணங்களில் அறிவை பயன்படுத்த முயல்கிறேன். அப்போதெல்லாம், தலையெழுத்தை மாற்றவா முடியும் என்று தோன்றுகிறது. இதைக்கூட நீ காதல் மிகைத்து பொங்கி வழியும் பிதற்றல் என்று சொல்வாய். எனக்கு இது ‘எதோ ஒன்று குறைகிறது’ என்று என் இதயம் குமுறும் வழியாகவே தோன்றுகிறது.
அன்னா ❤
Labyrinths பக்கத்தில் காணப்பட்ட பிலிப் ஜானின் எழுத்தின் தமிழாக்கம் இது.
இப்படித்தான் உன் இனியவளை இழப்பாய்:
அன்றொரு காலத்தில் அவளிடம் அணு அணுவாய் ரசித்தவை யாவும்
இன்றோ இம்சையாய் தெரியும்
அவளின் அப்பாவித்தனம் எளிதாய் ஏமாறும் வெகுளித்தனமாக வெறுக்க வைக்கும்
அவளின் கரிசனம், மனநோயாய் புரியும்
அவளின் அறிவின் வெளிப்பாடு பாதுகாப்பின்மையின் பாய்ச்சலாகக் காட்சியளிக்கும்
அவளின் அசரவைக்கும் அழகும் அலுத்து போகும்
சில வகை வெளிச்சங்களில் அவளின் அழகு அகோரமாகத் தோன்றக்கூடும்
அவளின் ஆசை உணவு அமுதமாக இருந்தது போய்
உப்புசப்பற்றதாக உயிரை எடுக்கும்
ஆனந்தமாக அவள் சிரிக்கையில் எல்லாம்
நம்பமுடியாத அளவுக்கு முட்டாளாகத் தெரிவாள்
அவளின் இயல்பான பிரியத்தை, சவால்களில் இருந்து தப்பிக்கும் சாதுரியம் எனக் கருதுவாய்
உணர்ச்சிவசப்படுகையில் சிறுபிள்ளையாகச் சிறுத்துப் போவாள்
அவளின் அரசியல் பத்தாம்பசலித்தனமாகத் தோன்றக்கூடும்
அவள் ஆடை அணியும் அழகு ஆயிரம் மின்னலாக
ஆசையைக் கூட்டிய காலங்கள் கழிந்து
வெகு வாடிக்கையான ஒன்றாக, கேலிக்குரியதாகப் புலப்படும்
நீ ஆச்சரியப்படுவாய்:
‘இன்று எரிச்சலூட்டும் இவளா என்னவள்?
இதுவா என் இனியவள்?
இல்லை அவளை அளவோடு அன்பு செய்பவன் நான் தானோ?’
என்னவனே,
உன்னை இன்னமும் காதலிக்கும் இந்தக் கணத்தில் எழுதுகிறேன்
காலமும், பிற கள்வர்களும்
உன்னைப்பற்றிய என் உன்னத நினைவுகளை உருக்குலைப்பதற்கு முன்பே
இதை இப்போதே எழுதுகிறேன்
இன்னும் சில வருடங்களில்
அன்பற்று உன்னை அந்நியனாகப் பார்க்காமல் இருப்பேனாக
நான் பிரார்த்திக்கிறேன்
இப்படியே இறுதிவரை பிரியம் செய்ய வேண்டும்.
வருங்காலத்தில் வழிதவற போகும் பேரன்பிற்கான இரங்கற்பா இது
என்ன ஆனாலும் நான் தயாராக இருக்க வேண்டும்
காதல் கண்டடைய முடியாத புதிரான பாதைகளில் பயணிக்கிறது
ஏன் அன்பு அகலாமல் அப்படியே இருந்துவிடக்கூடாது? – Labyrinths பக்கத்தில் பிலிப் ஜான் எழுதியிருக்கும் மடலின் தமிழாக்கம் இது.
தமிழில்: பூ.கொ.சரவணன்
புகைப்பட நன்றி: Jacob Ufkes on Unsplash
முன்குறிப்பு:இப்பதிவு நீயா, நானா நிகழ்வு தடை செய்யப்படுவதற்கு முன்பு எழுதப்பட்டது. இறுதிப்பத்தியில் அது குறித்த பார்வையைச் சேர்த்திருக்கிறேன்)
யார் அழகு -தமிழ்நாட்டு பெண்களா? கேரளத்து பெண்களா என்கிற தலைப்பில் ஒரு விவாதத்தை நீயா, நானா ஒளிபரப்புவதாக முன்னோட்டம் வெளியிட்டது. இது சார்ந்து எதிர்ப்புகள் எழுந்தன. பெண்ணுடைய அழகென்பதை வெறும் உடல்ரீதியாக அணுகுவதை எதிர்ப்பது பிற்போக்குவாதம் எனவும், துய்ப்பைத் தடுக்கிற ஒன்று எனவும் நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். இது என்ன விஜய் தொலைக்காட்சி மட்டுமா செய்கிறது என்றொரு கேள்வி வேறு. ஆதி முதல் அப்படித்தானே என நீட்டுகிறார்கள். எந்த வகையிலும் பாலியல் குறித்து வெளியே பேசக்கூடாது என்றும் அழகை கொண்டாட கூடாது என்றும் பேசினால் பிற்போக்கானது எனலாம். பெண்ணை வர்ணிக்கையில் மீண்டும் மீண்டும் கலவிக்கான, புற அழகால் மட்டுமே எடைபோடப்பட வேண்டிய ஒருவராகப் பண்டைய இலக்கியங்கள் துவங்கி தற்காலப் பாடல்கள் வரை பலவும் பேசுகின்றன. பெண் என்றால் தெரியாத இடை, பாய்ந்தோடும் கண்கள், பெருத்த மார்பகம் எனக் கவிஞர்களின் கற்பனை மிக அதீதமாகக் குடி கொண்ட இடம் என்று பெண்ணின் உடலைச் சொல்லலாம். பெண்ணுடல் மீதான கவர்ச்சி ஒரு தரப்பு என்றால் பெண்ணுடல் வெறுப்பு பல்வேறு மதங்கள், பக்தி இயக்கங்களில் கலந்திருந்தன.
பெண்ணின் உணர்வுகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றால் அணுகுவது அரிதாகவே இருக்கிறது. பெண் மீதான வன்முறையின் மையம் ஆண் என்பவன் பெண்ணை ஆளப்பிறந்தவன் என்கிற எண்ணத்திலும், பொண்ணுன்னா போடணும் மச்சி என்கிற உசுப்பேற்றல்களிலும் ஒளிந்திருக்கிறது. ஒரு பெண்ணை அவளுடைய புற அழகைத் தாண்டி தரிசிக்க முடியாத ஆணின் தட்டையான பார்வை பெரிதாக மாறிவிடவில்லை. ஏற்கனவே சமூகம் அப்படித்தான் இருக்கிறது, அதை வைத்து நாங்களும் கேளிக்கையை வளர்த்து எடுக்கிறோம் என்பார்கள். தாராளமாகச் செய்யுங்கள். கலை, கருத்துச் சுதந்திரம் கட்டற்ற வடிவமாக இருப்பதால் அது பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என நுகர்பவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படியெல்லாம் நிகழ்ச்சி நடத்த விடாமல் தடை செய்வோம் என்றால் அது பிற்போக்குவாதம். இது சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கிறது, பெண்ணை உடைமைப்பொருளாக மாற்றுகிறது, அழகென்பது உடல் சார்ந்ததாக முன்வைத்து சமூகத்தின் நெடுங்கால முன்முடிவுகளை, அபத்தமான பார்வையை மீண்டும் வேரூன்ற வைக்கிறது என்பது கருத்தியல் தளத்திலான எதிர்ப்பு.
பக்கத்து மாநிலத்தோடு போட்டி போட அநேகம் உண்டு. அன்றாடச் செய்தித்தாள் வாசிப்பில் அவர்களைவிட நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப்பரவல் அசர வைப்பது. ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நிலம் சார்ந்த அதிகாரம் மட்டுமே இருக்கும் அதிசய மாநிலம் கேரளா. இன்னமும் பொதுநலத்தில் கேரளாவை விடப் பின்தங்கியே இருக்கிறோம். மாணவர்கள் அரசியல்மயமாவதிலும் தான்.
வெள்ளை நிறத்தில் அழகு பொதிந்திருக்கிறது என்று சொல்கிற விளம்பரங்கள் தங்கள் விற்பனைக்காக அந்த நிறவெறியை முன்வைக்கின்றன. விளம்பரமும், வருமானமும் பெருக வேண்டும் என்பதற்காக இன்னமும் நாசூக்காக அழகு என்பது உடலியல் ரீதியாகக் கட்டமைக்கிற இழிவான நிகழ்வு இது. இதில் தங்களைச் சுரண்டும், மீண்டும் உடல் சார்ந்து மட்டுமே அணுகும் ஆணின் ஜொள்ளிற்குப் பலியாகிறோம் என்பதே பெண்களுக்குப் புரியப்போவதில்லை. பெண்களின் அழகை ஒப்பிடுவதாகச் சொல்லிக்கொண்டு ஒரு நிகழ்வு,அதில் தங்களுடைய சுயமரியாதைக்குச் சற்றும் இடமில்லை என்பதோ, (objectification’ நடக்கிறது எனப்புரியாமலே இந்த அழகைக் கொண்டாடும் அரசியலின் வர்த்தகத்தைக் கொண்டாடுகிறார்கள். ‘எங்களை இப்படி எடை போடறதுக்கு நீங்க யாருடா’ எனக்கேள்வி கேட்டால் அது ‘போலிப்பெண்ணியமா’? ‘ஜாலியா இருக்கோம். இதுக்கு இவ்வளவு அக்கப்போரா’ என்கிறவர்கள் சமூகப் பொறுப்பற்ற செயலை தாராளவாத முகமூடியால் மறைத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். தாராளவாதம் ஆதிகாலப் பெண்ணுடல் சார்ந்த பார்வைகள் இப்போதும் முன்வைப்பது அல்ல. பெண் விடுதலை பாலியல் சார்ந்தது மட்டுமல்ல அது சிந்தனை, பொருளாதாரம், செயல்பாடு சார்ந்து
சாதியமைப்பு, ஆணாதிக்க, மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இயங்குவதிலும் இருக்கிறது. பெண்களின் விடுதலையைப் பாலியல் ரீதியாகக் கட்டுப்படுத்துபவர்களை எதிர்கொள்ளும் தளம் அவர்களின் ஆயுதத்தையே ஏந்திக்கொள்வதல்ல. அதைத்தாண்டி சமூகத்தை முன்செலுத்த முயல்வது.
பெண்கள் புற அழகில் கவனம் செலுத்தக்கூடாது, கிராப் வெட்டினால் காசு தருகிறேன், உண்மையான விடுதலையை ஆண் அழகென வகுத்தவைகளைக் கொண்டு அடைய முடியாது எனப் பேசிய பெரியார் இதையெல்லாம் பார்த்திருந்தால் ‘ஒன்றுக்கும் உதவாத வெங்காயம்’ என்று தட்டியிருப்பார். சமூகத்தில் பாலியல் வறட்சி நிலவுகிறது என்றால் அதைக்குறித்துக் காத்திரமாகப் பேச வேண்டும், உரையாட வேண்டும், முறையான வழிகாட்டுதல்களை முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து அதே உடலியல் சார்ந்த மிகையுணர்ச்சிகளில் சமூகத்தைத் தோய்ப்பது ஆபத்தானது.
கருத்து எத்தனை அபத்தமானதாக, ஆதிக்கப்பார்வை மிக்கதாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் உரிமையை மறுப்பது தவறானது. உரையாடலுக்கான வெளி அங்கு மறுதலிக்கப்படுகிறது. பிற்போக்குத்தனத்தைக் கருத்துரிமையின் கழுத்தை பிடிப்பதால் நிறுத்திவிட முடியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகு முற்போக்குவாதிகளின் கருத்துக்களை விட ‘objectify’ செய்யப்பட்ட பார்வைகளே பெருத்த கவனத்தைப் பெற்றிருக்கும். ஆளுமை சார்ந்தும் நிகழ்ச்சியில் உரையாடல் அமைந்ததாக ‘நீயா நானா குழு’ சொல்கிறது. பார்க்காமலே தீர்ப்பெழுதுவதற்கு இரு நிமிட முன்னோட்டமும் ஒரு காரணம்.
அதே சமயம், இதற்கு மட்டும் போராட வந்துவிட்டீர்கள், மற்றதற்கு எல்லாம் எங்கே இருந்தீர்கள் என்று கேட்பதும் ஆபத்தானது. பல்வேறு பெண்ணிய அமைப்புகள் பல்வேறு அடித்தட்டு, விளிம்புநிலை பெண்கள் சார்ந்த போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆண்களும் இணைந்து பெண்ணியம் பேசுவது அவசியமாகிறது. ஏனெனில், பெண்ணியம் என்பது ஒரு தரப்பின் ஆதிக்கத்தை நாடுவது அல்ல. அது சமத்துவத்தை நோக்கிய நெடும் பயணம். நம்மிடையே இருக்கும் ஆதிக்க உணர்வை கேள்வி கேட்பதை ஒரு தரப்பு மட்டும் செய்ய முடியாது, கூடாது. ‘நீ எங்கே போயிருந்தே’ என்பதற்குப் பதிலாக நாம் எதாவது செய்யலாமே என்பதாக உரையாடல், சிந்தனை நகர்வதே சமூகத்தை முன்னோக்கி எடுத்து செல்லும்.
#NeeyaaNaanaa #KeralaVsTamilnadu #StopObjectifying #VijayTv #FreedomofExpression