ஹென்றியின் பப்பாவும், அவனும் உரையாடிக்கொள்ளும் கணங்களில் வழியும் பிரியமும், வன்மங்கள் அற்ற நெருக்கமும், அவ்வப்போது இயல்பாகக் கசிந்து பெருக்கெடுக்கும் கண்ணீரும் நம் கரங்களிலும் ஒட்டிக்கொள்கிறது. ‘என் மதம் எவ்வளவு உசத்தினாலும் அதை என் பிள்ளை மேலே திணிக்கக் கூடாது’ என்கிற பப்பா ‘பிரார்த்தனை என்பது வேண்டுவது அல்ல, விரும்புவது’ என்று நெகிழவைக்கிறார். பப்பா என்கிற சபாபதி, ‘யாரும் யாரையும் அடிக்கக் கூடாது. சண்டையே வேண்டாம்.’ என்று வன்முறையற்ற ஒரு புத்துலகை விரும்புகிறார். கடுமையான அடக்குமுறையால், பூவரச மரத்தின் குச்சியால் மட்டுமே பேசும் கொடுமைக்கார தந்தைக்குள் இருக்கும் மெல்லிய மனிதத்தை நாவல் புலப்படுத்துகிற போது பால்யகால அடிகளின் நினைவுகள் எட்டிப்பார்த்தன.
இந்தக் கதையில் வரும் மனிதர்கள் சொத்துக்களை விடத் தர்மத்தை பெரிதென்று நம்புகிறார்கள். தியாகத்தைச் செய்வதில் தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள். அவர்கள் அறத்தின் உச்சங்களை மானுட கசடுகளிடையே வெகு இயல்பாக அடைகிறார்கள். தனக்குப் பிரியமான வேறொருவரோடு வெளியேறுகிற மனைவியைக் கொல்ல சொல்லும் கவுரவங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுக்கிறார்கள். சமயங்களில் உறவுகளின் உன்னதம் காக்க தீங்கில்லாத பொய்களைச் சொல்கிறார்கள். காயப்பட்டு நிற்கும் முன்பின் தெரியாத மனிதர்களுக்கு மனம் கரைய கண்ணீர் வடிக்கிறார்கள். சொந்த காயங்களைத் தாண்டி துரோகம் இழைத்தவர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகக் கவலைப்படுகிறார்கள், அவற்றைக் கடந்து நேசிக்கக் கற்றுத்தருகிறார்கள்.

கதையின் நாயகன் ஹென்றி கிழங்கு வைக்கிற பெண் துவங்கி, சிறுவர்கள் வரை அனைவரையும் சமமாக மதித்துக் கைகூப்பி வணக்கம் செலுத்துகிறான். அழுதும், பயந்தும் படிக்கிற கல்வி என் மகனுக்கு வேண்டாம் என்கிற பப்பாவின் பேரன்பின் நிழலில் மனிதர்களை அவர்களின் குறைகளோடு ஏற்று அன்பு செலுத்துபவனாக வளர்கிறான். தந்தையின் வேர்கள் தேடி செல்கையிலும், சக மனிதர்களின் துயர்களுக்குச் செவிமடுக்கிறான். கொள்கைகள் என்று தனக்கொன்றும் இல்லை என்று மனிதர்களின் மனதிற்கு முக்கியத்துவம் தருகிறான். அவன் கண்களுக்கு மரத்தில் குதித்தோடும் மந்திகளும், மலையின் பேரழகும், குளிக்கிற பெண்ணும் ஒரே அழகியலோடு ரசிப்பதற்கு உரியவர்கள் ஆகிறார்கள். அந்தப் பார்வையில் மனச்சாய்வுகள் இல்லை. சந்தேகங்கள் சுவடின்றி மனிதர்களை நம்புகிறான். மனதை மட்டும் ரம்மியமாகச் செலுத்தியபடி, வாழ்க்கை இழுக்கும் போக்கினால் புகார்கள் இன்றிப் பயணிக்கிறான். புதிய அனுபவங்களைக் கண்டடைகிறான்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலில் தனிமனிதர்களின் விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள், போலித்தனங்கள், அடக்குமுறைகளில் இருந்து விலகி தங்களுக்கான வாழ்க்கையை வாழ முயல்பவர்கள் இயல்பாகக் கண்முன் நடமாடுகிறார்கள். ‘நான் திருமணங்களுக்கோ, ஆண் பெண் உறவுகளுக்கோ எதிரியில்ல…எதற்குமே எதிரியாக இருப்பது சரியல்ல… ஆனால்..ஆனால் எனக்குத் திருமணம் அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். எனக்குக் கூழ் மட்டும் போதும். எல்லாரும் கூழே குடிக்க வேண்டும் என்றா சொல்லுகிறேன்? நீங்கள் சொல்கிற மாதிரி இந்தக் கிராமங்களும், இங்கே வாழ்கிற மக்களும் நகர்வாழ்க்கையோடு பேதமற கலந்து போகிற நாள் வரலாம். வரட்டுமே. அதற்கு நானும் ஏன் ஆசைப்பட வேண்டும்?’ என்கிற ஹென்றியின் குரல் எல்லாக் காலத்திலும் விடுதலை நாடும் மனங்களில் ஒலிக்க வேண்டியது. மந்தைத்தனங்கள் தாண்டி மானுடம் நாடுபவர்களை வழிநடத்தக்கூடிய, மனதின் வன்மங்களை, கசடுகளைக் கரைக்கிற அற்புதத்தைப் புரியும் ஆரவாரமற்ற முக்கியமான நாவல் இது.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஜெயகாந்தன்
பக்கங்கள் 316
விலை : 325
காலச்சுவடு பதிப்பகம்