ஆபாசம், அவமதிப்பு, அரசியலமைப்பு:இந்தியாவில் காலனிய காலம் துவங்கி இன்று வரை கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறித்த அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் அறிமுகத்தின் கடைசிப் பாகம் இது.எது ஆபாசம்?:
ஆபாசத்துக்கு உரிய ஒன்று கருத்துரிமையின் கீழ் வராது. எது ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் காலனிய காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தின. இந்தச் சோதனை ஒழுக்கமற்ற மனதானது எப்படி ஒரு படைப்பை காணும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆபாசம் எது என்பதை வரையறுத்தது. இதனால், ஒரு படைப்பில் ஏதேனும் ஒரு வரியோ, இல்லை பத்தியோ உடலுறவு, பாலியல் வர்ணனை சார்ந்து இருந்தால் நூலே ஆபாசம் என்று முடிவு கட்டப்பட்டது. காலனிய நீதிமன்றங்களில் ஆசன் என்கிற வார்த்தை இடம்பெற்றது, உடலுறவு கொள்ளச் சத்தான உணவு உண்ணுவது, கண்ணன் ராதையின் மார்பை அழுத்தியது, உடலுறவுக்கு அழைத்தது, வீதி நாடகம் எனும் தெலுங்கு படைப்பில் பெண்ணின் பாலுறுப்புகள் துன்புறுத்தப்பட்டது குறித்த விவரணை எனப் பலவற்றை ஆபாசம் என அறிவிக்கச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. நபகோவின் லோலிதா நாவல் பதினொன்று அல்லது பதிமூன்று வயது பெண்ணோடு உடலுறுவு கொள்ளும் ஆண் குறித்த நாவல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கராக்கா என்பவர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார். நேரு தலையிட்டு நூலை வெளியிட வைத்தார்.

Lady Chatterley’s Lover என்கிற டி.ஹெச்.லாரன்ஸ் நாவல் ஆபாசமாக இருக்கிறது எனச் சொல்லி அதைப் பம்பாயில் விற்ற ரஞ்சித் உதேஷி கைது செய்யப்பட்டார். அந்தக் கைது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹிதயத்துல்லா கலை, இலக்கியத்தில் இருக்கும் காமம், நிர்வாணம் என்பது ஒட்டுமொத்தமாக மோசம் கிடையாது. காமம் என்பதே மோசமானதோ, மனிதரை பாழ்படுத்துவதோ இல்லை. அதே சமயம் அந்தப் படைப்பு பொது நன்மைக்குப் பயன்படுகிறதா என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பொது நன்மையை உறுதி செய்யும் படைப்பா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பில் எழுதினார். ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தி அந்நாவல் ஆபாசமானது ஆகவே அதை விற்றது குற்றம், காம விருப்புடைய மனங்களைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எது ஆபாசம் என்பதைத் தீர்மானித்தாலும், காமத்தை பேசும் எல்லாப் படைப்புகளும் ஆபாசம் இல்லை என்று அறிவித்தது.


ராஜாஜி இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போது 1930-ல் நடந்த சிட்டாகாங் ஆயுத புரட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். அந்தத் திரைப்படம் ‘அரை வேக்காட்டுக் கல்வி கொண்ட மக்களைக் குற்றம் செய்வதற்குத் தூண்டி விடும்’ என்று அவர் பயந்தார். அதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ் கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய பின்னரும் ஒரு திரைப்படம் ஆபாசமாக இருக்கிறது என வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு எழுதியது. அதைத் தொடர்ந்து எண்பத்தி மூன்றில் திரைப்படச் சட்டம் திருத்தப்பட்டுத் தணிக்கை வாரியம் சான்றிதழ் தந்த பிறகு ஒரு திரைப்படம் ஆபாசம் என வழக்கு தொடர முடியாது என்று ஆக்கப்பட்டது.
கேபிள் தொலைக்காட்சி விதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நல்ல ரசனை இல்லாதவற்றைக் காட்டக்கூடாது. எந்த இனக்குழு, மொழிக்குழுவையும் மோசமாகக் காட்டக்கூடாது. மூடநம்பிக்கைகளை வளர்க்க கூடாது. பொதுப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் (இதனால் தான் தொலைக்காட்சிகள் தாங்களே பல படங்களைத் தணிக்கை செய்து ஒளிபரப்புகின்றன) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும், செய்தித்தாள்கள் போல அல்லாமல் தொலைக்காட்சிகளுக்கு உரிமம் தேவைப்படுவதால் அவை இவற்றுக்குக் கட்டுப்படுகின்றன. வானொலி நிலையங்கள் அனைத்திந்திய வானொலி எந்த விளம்பர, செய்தி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் மோசமாக, அரசு ஒப்புதல் பெற்ற அரசியல் செய்திகளையே அவை அலைபரப்ப முடியும்.
நீதிமன்ற அவமதிப்பு:
நீதிமன்ற அவமதிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இங்கிலாந்தில் இருந்தாலும் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. . நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேர்க்கப்படாமல் கட்டுப்படுத்தப்படச் சில காரணங்களை அபினவ் முன்வைக்கிறார். நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வாதிடவோ, பதில் சொல்லவோ இயலாது. அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் அது வெகுநாட்களுக்கு இழுத்துக் கொண்டே இருக்கும். மேலும், நீதிபதிகள் நீதிமன்றத்தை நடத்த விடாமல் தொல்லை கொடுப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், நீதிமன்றத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிக்கவும் நீதிமன்ற அவமதிப்புத் தேவைப்படுகிறது. எனினும், இது கருத்துரிமையை நெரிப்பதாக, கட்டற்றதாக இருக்க வேண்டியதில்லை என்பது ஆசிரியரின் பார்வை.
நேரு செய்த நீதிமன்ற அவமதிப்பு:
எல்.ஐ.சி. முந்த்ரா என்பவரிடம் சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்குப் பங்குகளை வாங்கியது. இது சார்ந்து எல்.ஐ.சி. நிர்வாகிகள், நிதித்துறை செயலர், நிதி அமைச்சர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். விவியன் போஸ் என்கிற வங்கத்தைச் சேர்ந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அவர் நிதித்துறை செயலாளர், எல்.ஐ.சி. தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இது குறித்து நேருவிடம் கேட்ட போது, ‘அருமையான அனுமானம்… விவியன் போஸ் அறிவற்றவர்’ என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மான நஷ்ட வழக்கு:இந்தியாவில் மானநஷ்ட சட்டப்பிரிவை இன்னமும் கடுமையாக மெக்காலே வரையறுத்தார். இங்கிலாந்தில் எழுத்தில் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே மான நஷ்ட குற்றத்துக்கு உரியது. இந்தியாவில் பேச்சளவில் வெளிப்படும் கருத்துக்களும் மான நஷ்ட வழக்குக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் மட்டுமே இச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை .
நக்கீரன் ராஜகோபால் நடத்திய நக்கீரன் இதழில் ஆட்டோ சங்கர் எழுதிய தொடர் இடம்பெற்றது. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டார் ஆட்டோ சங்கர். இது அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற ஒன்று என்று மான நஷ்ட வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களுக்காக மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. அதே சமயம், அந்தக் கருத்துக்கள் முழுக்க உண்மைக்குப் புறம்பானதாக, மோசமான உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் தண்டனைக்கு உரியது என்று அமெரிக்காவின் சுல்லிவன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. இதில் நீதிபதிகள் அடங்க மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கருத்துரிமையில் சேராது. இது சார்ந்த கடுமையான சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டன. இந்தியா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட நாட்டில் அமைதியை நிலைநாட்ட வெறுப்பு மிக்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அரசு கருதியது. லேக் ராம் என்கிற ஆரிய சமாஜ உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து வெறுப்பைக் கக்கினார். அதனால் அவர் ஆறு வருடங்களுக்குள் இறந்து விடுவார் என்று அகமதியா பிரிவை சேர்ந்த மிர்ஸா குலாம் முகமது தெரிவித்தார். லேக் ராம் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகே பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தை உண்டு செய்யும் பேச்சுகள் தடை செய்யப்படும் வகையில் 153A குற்ற சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இப்படிப்பட்ட சட்டங்கள் மதங்களைச் சீர்திருத்தும் நோக்கில் விமர்சிக்கும் கருத்துகளையும் வெளிப்பட விடாமல் தடுக்கும். உருவ வழிபாடு ஒழிப்பு இயக்கம், பிரம்ம சமாஜ இயக்கம், பிரார்த்தன சமாஜ இயக்கம் ஆகியவையும் இயங்காமல் போகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

ரிசலா-இ-வர்தமான் என்கிற உருது இதழ் ‘நரகப் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட படைப்பில் நபிகள் நாயகம் நரகத்தில் துயரப்படுவதாக எழுதியது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குற்றவியல் சட்ட அமர்வு தண்டனைக்குரிய குற்றமாக அக்கட்டுரையை அறிவித்து, அக்கட்டுரையின் ஆசிரியர் தேவி சரண் சர்மாவுக்கு ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் நீதிபதி பிராட்வே இன்னும் சில கருத்துக்களைப் பதிவு செய்தார்: ‘ மதம், மதத்தை நிறுவியவர் மீதான அறிவார்ந்த, கூர்மையான, வலிமையான விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டியதில்லை. இழிவுபடுத்தும், அவதூறான கருத்துக்களே தண்டனைக்கு உரியவை’ என்று தீர்ப்பு எழுதினார்.
இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு புதிதாகச் சட்டப்பிரிவு 295A ஐ சேர்த்தது. இது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் குற்றத்துக்கு உரிய தண்டனையாக அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். மேலும், ஜின்னா இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றால் ஜாமீன் பெற முடியாது எனச் சட்ட திருத்தத்தைச் சாதித்தார். குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
விடுதலைக்குப் பின்னால் 153A சட்டப்பிரிவு இன்னமும் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றது. இதன்படி, மதம், இனம், பிறந்த ஊர், வசிக்கும் இடம், மொழி, சாதி, சமூகம் சார்ந்து ஊறு, பகை, வெறுப்பு, மோசமான சிந்தனைகளை விதைத்தால் அவையும் தண்டனைக்கு உரியவை என்று திருத்தப்பட்டது. இன்னமும் மோசமாக, இந்திரா காந்தி காலத்தில் இந்த இரு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவரை கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
கருத்துரிமை பெரும்பான்மையினரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதா?:
பல்வந்த் சிங் என்கிற அரசு அதிகாரி இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தது. பொது அமைதிக்கு எந்தத் தீங்கையும் அவரின் செயல் விளைவிக்கவில்லை. வன்முறையையும் அது தூண்டவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஜாவலி எதிர் கர்நாடகா அரசு வழக்கில், ‘கன்னட மொழிக்கே முன்னுரிமை, இந்தி அதற்கு அடுத்த இடத்தையே கர்நாடகாவில் பெறவேண்டும்’ என்று கருத்து தெரிவித்த அரசு அதிகாரியின் கருத்து வெறுப்பைத் தூண்டும் பேச்சல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வளவு பிரபலமற்ற கருத்தாக இருந்தாலும் அதை விவாதிப்பதோ, ஆதரிப்பதோ தண்டனைக்கு உரியது அல்ல என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
பெரியாரின் ராமாயணம் குறித்த நூல் இந்தியில் லலாய் சிங் யாதவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர் இப்படித் தீர்ப்பு எழுதினார்:
‘எது ஆதிவாசிகளைக் காயப்படுத்துகிறதோ அது நவீன சமூகங்களுக்குச் சிரிப்பை வரவைக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு மதம், பிரிவு, நாடு, காலம் ஆகியவற்றுக்கு எதிரானதாக, நிந்தனையாகத் தோன்றும் ஒன்று இன்னொரு தரப்புக்கு கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாக இருக்கலாம்…கலிலியோ, டார்வின் துவங்கி தோரோ, ரஸ்கின், காரல் மார்க்ஸ், ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னார்ட் ஷா, ரஸ்ஸல் முதலிய பல்வேறு தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகள், பார்வைகள் மக்களால் எதிர்க்கப்பட்டுள்ளன. ஏன் மனு முதல் நேரு வரை தலைசிறந்த இந்தியர்களின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலர் இந்தக் கருத்துக்களால் காயப்படுவார்கள். அதற்காக இந்த மகத்தான எழுத்துக்களைத் தங்களுடைய மூர்க்கமான பார்வையால் சில வெறியர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக எந்த அரசும் பழங்கால அரசுகளைப் போல அந்த நூலை கைப்பற்றாது’ என்று தடையை நீக்கினார்.
ஒரே ஒரு கிராமத்திலே என்கிற இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ரங்கராஜன் எதிர் ஜெகஜீவன் ராம் வழக்கில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்கள்,. வன்முறை நிகழும் என்றெல்லாம் அஞ்சி தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப்படத்தை வெளியிடாமல் விட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு படைப்பின் எதோ ஒரு கருத்துக் காயப்படுத்துகிறது என்பதற்காக அதனைத் தடை செய்ய முடியாது, அப்படைப்பின் மைய நோக்கத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.
சிவாஜி குறித்த லெய்ன் நூலில் சிவாஜியின் தந்தை வேறொருவர் என்றும், அவரின் அப்சல் கான் மீதான தாக்குதல் இருக்கிற பிராமணிய அடுக்கை காப்பாற்றும் முயற்சியே ஆகும் என்றெல்லாம் கருத்துகள் நிலவியதால் அந்நூல் மகாராஷ்டிராவில் வன்முறைக்குக் களமானது. அந்நூலில் குறிப்பிடப்பட்ட நூலகம் தீக்கிரையானது. நூல் தடைக்கு ஆளானது. உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது.
பத்திரிகைகளின் கழுத்தை நெரித்தல்:
இந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கொண்டு வந்த Press Act ஆங்கிலேயர் காலத்துப் பத்திரிகை அவசரநிலை சட்டத்தை விடக் கடுமையானதாக இருந்தது என்கிற அபினவ். மத்திய அரசு செய்தித்தாள்களின் பக்கங்கள், விளம்பரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்றது. சிறிய இதழ்களுக்கு வாய்ப்பு தரவும், ஒரு பத்திரிகை ஆதிக்கம் செலுத்தாமல் தடுக்கவும் இம்முயற்சி என்று காரணம் சொல்லப்பட்டது. நீதிமன்றம் நேரடியாக இது கருத்துரிமையைப் பாதிக்கா விட்டாலும் இது செய்தி நிறுவனத்துக்கு வருமான இழப்பை உண்டாக்கி, கருத்துகள் சென்று சேராமல் தடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியது. பத்திரிக்கையாளர்கள் சம்பளத்தைத் தீர்மானிக்க அரசு முயன்ற போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றது. எத்தனை தாள்களை ஒரு செய்திதாளுக்கு ஒதுக்கலாம் என்பதை அரசு கட்டுப்படுத்த முயன்ற போது, நீதிமன்றம் மீண்டும் அதைக் கருத்துரிமையை நெரிக்கும் முயற்சி என்று ரத்து செய்தது. எனினும், அதில் பெரும்பான்மையோடு உடன்படாத நீதிபதி மாத்யூவின் தீர்ப்பு கவனத்துக்கு உரியது. ‘வெகு சிலரின் ஆதிக்கம் சந்தையை ஆளக்கூடாது. அது கருத்துரிமைக்குக் கேடானது’ என்றது இன்று ரிலையன்ஸ் முதலிய பெருநிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தும் காலத்தில் பொருந்துவது என்கிறார் அபினவ். அதே சமயம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அதை மட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார் ஆசிரியர். சிறைத்தண்டனை கைதிகள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி அவர்களைப்பற்றிச் செய்தியாளர்கள் கருத்துரிமை என்று சொல்லி பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.லஹிரி அடிப்படை உரிமைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற போது, ‘இச்சட்டங்கள் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பார்வையில் எழுதப்பட்டவை போல இருக்கின்றன’ என்றார். அபினவ் சந்திரசூடின் நூலை படிக்கிற போதும் அதுவே தோன்றியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் கருத்துரிமைகள் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் காற்றில் பறக்க விடப்பட்டது நூலில் தெளிவாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில், ஏன் இந்தச் சட்டங்களுக்குத் தேவை இருக்கிறது, அவை ஏன் எழுந்தன என்பதைப் புரிந்து கொள்ள நூல் உதவுகிறது. நூலின் மிக முக்கியமான விடுபடல் அவசரநிலை காலம், அது எப்படிக் கருத்துரிமை சார்ந்த சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை ஆசிரியரின் தாத்தா சந்திரசூட் கருத்துரிமையைக் காக்க தவறிய ஜபல்பூர் வழக்கை விமர்சிக்க நேரிடுமோ என்று தவிர்த்திருக்கிறாரோ ஆசிரியர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனினும், மிக முக்கியமான நூல்.
Right article at the right time!!!well written !!