நீதி என்பது எளியவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. படியேறவே முடியாதவர்கள், போராடி களைத்தவர்கள், தோள் சாயக்கூட ஆளில்லாதவர்கள் எப்படி போராடுகிறார்கள்? வெறுப்பு மட்டும் தான் காயப்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட மனிதர்களை செலுத்துகிறதா? Three billboards in Ebbings திரைப்படம் இந்த கேள்விகளை தாங்கி மறக்க முடியாத திரை அனுபவத்தை தருகிறது.
மில்ட்ரெட் எனும் பெண்ணுடைய மகள் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்படுகிறாள். பல மாதங்கள் ஆகியும் வழக்கில் துளி கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கிறது. மூன்றே பில் போர்ட்களில் விளம்பர வாசகங்களை எழுதுவதாக காட்டிக்கொண்டு காவல்துறையை எள்ளி நகையாடுகிறார் மில்ட்ரெட். குறிப்பாக கணைய புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் தலைமை காவல் அதிகாரியை குறிவைத்து தாக்குகிறது ஒரு பில்போர்ட்.

இனவெறி கொண்ட, வன்முறையை தோன்றுகிற போதெல்லாம் ஏவும் காவலன் ராக்வெல் கொதிக்கிறான். மில்ட்ரெட்டுடன் வேலை பார்க்கிற பெண், விளம்பர நிறுவன இளைஞன் என பலரையும் தொல்லை செய்கிறான். முகத்தில் சற்று கூட இரக்கத்தின் சாயல் படியாத மில்ட்ரெட் வீடு தேடி வந்த ஒரு மானிடம் மனம் விட்டு பேசுகிற கணம் அற்புதமானது. இறை நம்பிக்கையில்லாமல், மகள் முற்றாக இறந்து போனாள் என உணர்ந்தாலும் மகளின் மரணத்திற்கு நியாயம் தேடி ஓய மறுக்கிற மில்ட்ரெடின் அன்பு ததும்ப அக்கணத்தில் வெளிப்படுகிறது.
தலைமை காவல் அதிகாரி தற்கொலை செய்து கொள்கிறார். அவர் மில்ட்ரெட், ராக்வெல், தன்னுடைய மனைவி என பலருக்கும் கடிதங்கள் வரைகிறார். மில்ட்ரெட் மகளை கொன்றவனை கண்டுபிடிக்காமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறார். விளம்பர பலகை வைத்து தன்னை கூனிக்குறுக வைத்த
மில்ட்ரெட்டை நுண்மையாக பழிவாங்கியதை தெரியப்படுத்துகிறார். ராக்வெல் பில்போர்ட்டை வரைந்த நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞனான வெல்பியை அடித்து துவைத்து பணியிழக்கிறான். அவன் காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியின் கடிதத்தை படிக்கிறான். ‘வெறுப்பது எதையும் சாதிக்க உதவாது. அன்பு செய்யப்பழகு. அது உன்னை மகத்தான துப்பறிவாளனாய் ஆக்கும்’ என்கிறது. மில்ட்ரெட்டால் பற்றியெரியும் காவல் நிலையத்தில் இருந்து தப்பிக்கும் ராக்வெல் அவளுடைய மகளின் வழக்கு கோப்பை காப்பாற்றுகிறான்.
/cdn.vox-cdn.com/uploads/chorus_image/image/58380967/billboards1.0.jpg)
முகம் முழுக்க மூடப்பட்டு தீக்காயங்களோடு மருத்துவமனை போகிறான் ராக்வெல். அங்கே இவனால் அடிபட்ட வெல்பி, ராக்வெல் எனத்தெரியாமல் கனிவோடு நம்பிக்கை ஊட்டுகிறான். கரிசனம் ததும்ப ஆரஞ்சு சாறு அருந்த உதவ முனைகிறான். கண்ணீர் வழிய ‘மன்னித்துவிடு வெல்பி’ என்கிறான் ராக்வெல். அவனென தெரிந்த பின்பும், ‘அழாதே. உப்புநீர் காயத்தை இன்னும் கூட்டிவிடும்’ என கவலை கொள்கிறான் வெல்பி. இன்னமும் அக்கறையோடு உதவுகிறான்.
ராக்வெல் மில்ட்ரெட்டின் மகளின் கொலையாளியை தேடி பயணிக்கிறான். சில தடயங்கள் கிடைக்கின்றன. மில்ட்ரெட்டின் வாழ்க்கையில் நம்பிக்கை பூக்கிறது. அடுத்து என்ன ஆனது என்பதை திரையில் பாருங்கள்.
நீதி நாடுபவர்களை அடக்கும் அதிகார வர்க்கம், நீதிக்கான சிறுமுயற்சியும் சமூகத்தால் நிர்மூலமாக்கப்படுவதை சொல்லாமல் சொல்லும் பற்றியெரியும் பில்போர்ட்கள், வெறுப்புகள், கசடுகள் தாண்டி மனித மேன்மை நாடுபவர்கள், மன்னித்தலுக்கும், பழிவாங்கலுக்கும் இடையே அல்லாடுபவர்கள், புன்னகைக்க மறைந்த இழப்புகளின் வடுக்கள் தாங்கியவர்களின் உலகம் என அத்தனை நெருக்கமான திரைப்படம்.
