கோவிந்தப்பா வெங்கடசாமி எனும் கண்ணொளி காத்த செம்மல்!


கோவிந்தப்பா வெங்கடசாமி அவர்களுக்கு இது நூற்றாண்டு..இளம் வயதில் அவருடைய மூன்று ஒன்று விட்ட சகோதரிகள் பிரசவத்தின் போது இறந்து போயிருந்தார்கள். மகப்பேறு மருத்துவராக ஆகிவிட வேண்டும் என்கிற கனவு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற பிறகு, ராணுவத்தில் சேர்ந்து மகப்பேறு துறையில் மேற்படிப்பை படித்துக்கொண்டிருந்தார். கடுமையான மூட்டுவலி (rheumatoid arthritis) அவரைத் தாக்கியது. இரண்டாண்டுகள் எழவே முடியாத நிலைமை. அப்படி மீண்டு வந்த போது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாண்டுகள் படுத்த படுக்கையாக இருக்க வைத்த மூட்டுவலியால் இனிமேல் கத்தி பிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்கிற நிலைமை.

துவண்டு போக வேண்டிய நிலைமை. டாக்டர் வெங்கடசாமி மனந்தளர்கிற ஆளில்லை. நீண்ட நேரம் கருவிகளைப் பிடிக்க வேண்டிய தேவையில்லாத கண் மருத்துவராக முடிவு செய்தார். கண் மருத்துவம் பயின்று முடித்த பிறகு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார். அது விடுதலைக்குப் பிந்தைய ஆரம்பக் காலம். ஒருவருக்குக் கண் பார்வை மங்கினாலோ, கண்புரை ஏற்பட்டாலோ கிட்டத்தட்ட அது நடைப்பிண நிலைமை தான். அழைத்துச்செல்லும் அளவுக்கு ஏழைகளுக்கு ஏற்ற மருத்துவமனைகள் கிடையாது. வீட்டில் கண்பார்வை தெரியாமல் ஒரு ஓரமாக முடங்கிட வேண்டும். சாப்பாட்டை எடுத்துப்போட்ட தர ஆளிருக்க மாட்டார்கள். இப்படிப் பலர் கண்பார்வை போனதற்குப் பிறகு சீக்கிரமே உடல் நலிந்து, இறந்து போவதை வெங்கடசுவாமி கண்ணுற்றார்.

(இனிமேல் டாக்டர் வெங்கடசாமியை, ‘டாக்டர் வி’ என்றே அழைப்போம். ) நம்மைத்தேடி வர முடியாத ஏழைகளைத் தேடிப்போவோம் என்று முடிவு கட்டிக்கொண்டார் டாக்டர் வி. அப்படித் துவங்கியது தான் இலவச கண் சிகிச்சை முகாம்கள். ஊர் ஊராகப் போய்ப் பல பேரின் பார்வையை மீட்டுத்தந்தார்கள். அப்படி ஓயாமல் உழைத்தும் கையளவு பேரையே காப்பாற்ற முடிந்தது என்று டாக்டர் வி கண்டுகொண்டார். விலை குறைவான அனைவருக்குமான கண் மருத்துவமனையைத் துவங்கினால் என்ன என்கிற எண்ணம் ஓய்வு பெற்ற ஐம்பத்தி எட்டு வயதில் உருவெடுத்தது.

ஹார்வார்டில் இருந்த தங்கை நாச்சியார், அவருடைய கணவரை தோள் கொடுக்க அழைத்தார். வங்கிகள், நண்பர்களிடம் கடன் கேட்டார்கள். ‘சேவை செய்வதற்கு இந்த வயதான காலத்தில் கடனா?’ என்று ஏளனம் செய்தார்கள். கைவிரித்தார்கள். வீட்டில் இருந்த நகைகளை, வீட்டை எல்லாம் அடமானம் வைத்து சில கருவிகளோடு சகோதரர் ஸ்ரீனிவாசன் வீட்டையே மருத்துவமனை ஆக்கி பதினொரு படுக்கைகளோடு பயணத்தைத் துவங்கினார்கள். கட்டணம் தரக்கூடிய நோயாளிகளிடம் பணம் பெற்று ஏழைகளுக்கு மிகக்குறைவான செலவில் மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்கள். சீக்கிரமே நாச்சியாரின் கணவரும், சகோதரியும் குழுவில் இணைந்து கொண்டார்கள். அரவிந்த் கண் மருத்துவமனை கிளை பரப்ப ஆரம்பித்தது.

அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் போயிருந்த போது மெக்டொனால்ட் உணவகங்களை டாக்டர் வி கண்டார். அவருக்குள் அமெரிக்கப் பெருநிறுவனங்களின் பாய்ச்சல் ஒரு கேள்வியை எழுப்பியது. “மெக்டொனால்ட் பல கோடி பர்கர்களை விற்றுத் தீர்க்கிறது. கோககோலா பல கோடி குளிர்பானங்களை விற்பனை செய்கிறது. இவர்களால் முடியும் என்றால் என்னால் சில லட்சம் கண் பார்வை அறுவை சிகிச்சைகளைச் சாதிக்க முடியாதா?”. மெக்டொனால்ட்டின் ‘assembly line’ முறையை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினார்.

ஒரே அறையில் வரிசையாகப் பல்வேறு மருத்துவர்கள் கண் நோயாளிக்குச் சிகிச்சை தந்தார்கள். கண் என்பது உள்ளே இருக்கும் உறுப்பு என்பதால் நோய் தொற்றுக்கான வாய்ப்புக் குறைவு என்பதைப் பயன்படுத்திக் கொண்டு சுகாதாரமான நடைமுறைகளோடு அதி விரைவாக அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்தார்கள். ஆண்டுக்கு நானூறு அறுவை சிகிச்சைகள் வரை செய்து கொண்டிருந்த மருத்துவர் இதனால் இரண்டாயிரம் அறுவை சிகிச்சைகள் வரை செய்வது சாத்தியமானது.

Image result for venkataswamy

இன்னொரு முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டது. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் மட்டுமே செவிலியர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்கிற நடைமுறையை மாற்றினார்கள். பத்தாவது முடித்திருந்தால் போதும். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நேர்முகம் நடத்தி பயிற்சிக்கு சேர்த்துக்கொள்வார்கள். இரண்டாண்டுகள் தீவிர பயிற்சிக்கு பிறகு ‘நடைமுறை அறிவு’ மிக்கச் செவிலியர்கள் தயார். இவர்களுக்குக் கை நிறையச் சம்பளம் தர முடியாது என்றாலும் கிடைக்கிற நிறைவு சொற்களில் அடங்காதது. ‘கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியை விட வேலை நிறைய, சம்பளம் கம்மி தான். ஆனா பஸ்ல போறப்ப எல்லாரும் அடையாளம் கண்டுப்பாங்க. அவ்ளோ மரியாதை கிடைக்கும். அன்பை பொழிவாங்க. எழுந்து நின்னு உக்காருமானு சொல்வாங்க. வேறென்ன வேணும்’ என்று பேராசிரியர் சி.கே.பிரகலாத்திடம் ஒரு செவிலியர் தெரிவித்தார்.

அடிப்படையான சோதனைகள், கவனிப்புகள் ஆகியவற்றைச் செவிலியர் வேகமாக முடித்து விடுவார்கள். பின்னர்த் துரிதமாக மருத்துவர்கள் இயங்கி அறுவை சிகிச்சையை முடிப்பார்கள். தற்சார்புள்ள நிறுவனமாக அரவிந்த் கண் மருத்துவமனை திகழ்கிறது. கையுறை, கருவிகள், மருந்துகள் என்று கிட்டத்தட்ட அனைத்துமே தானே தயாரித்துக் கொள்கிறது. 30% பணமுள்ள நோயாளிகளிடம் இருந்து பெறும் பணத்தைக் கொண்டு மிச்சமுள்ள சிகிச்சைகளை இலவசமாகவோ, மிகவும் மலிவாகவோ செய்ய முடிகிறது.

எடுத்துக்காட்டாகக் கண் அறுவை சிகிச்சைக்குப் பின்னர்ப் பொருத்தப்படும் Intraocular lens. இதன் விலை சில ஆயிரங்களில் இருந்தது. சில தொண்டு நிறுவனங்கள் கை கொடுத்தன. தானே தயாரித்து இருநூறு ரூபாயில் நோயாளிகளுக்குச் சிறந்த தரத்தோடு அரவிந்த் கண் மருத்துவமனை தர ஆரம்பித்தது.இன்றைக்கு மிகக்குறைந்த விலையில் இந்த லென்ஸ்கள் உலகின் 160 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் டாக்டர் வியின் வழியாக இருந்தது. வருகையாளர் அறை, மருத்துவர் அறைகள், வரவேற்பு அறை ஆகிய அனைத்தும் மிக எளிமையாக இருக்கும். ஆடம்பர அலங்காரங்கள் அறவே கிடையாது. ஆனால், மருத்துவச் சேவையில் துளியும் சமரசம் இல்லை. நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த தேவையான லாபத்தையும் தொடர்ந்து ஈட்டிக்கொண்டே இருக்கிறது.

‘கண்ணொளியின் மூலம் மக்களைப் பசி, பயம், வறுமையில் இருந்து விடுவிக்க இயலும். உடம்பை உறுதி செய்து, சிந்தனை, ஆத்மாவை முழுமையடைய வைக்க இயலும். கண் பார்வை மக்களின் சிந்தனை, செயல்பாட்டை உயர்த்த வல்லது’ என்றொரு பேட்டியில் நம்பிக்கை நிறையப் பேசினார் டாக்டர் வி. அவரின் விழி வேள்விக்காக இறுதி வரை அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்தியாவில் கண் சிகிச்சை தேவைப்படுபவர்களில் 10% பேரே மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். மீதமுள்ளவர்களைக் கொண்டுவரும் கனவுப்பயணத்தைத் தொடர்ந்திட இன்னும் ஆயிரமாயிரம் அரவிந்த் கண் மருத்துவமனைகளும், சில நூறு டாக்டர் விக்களும் தேவை.

‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்


‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்.

‘நீ வேதங்களுக்கு முன்பே இங்கிருந்தாய்’

 

நீ வேதம் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய்

இறைவன் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய்

அச்சுறுத்தும் பொருள்சார் உலகினை

பெருவலியோடும், பதற்றத்தோடும் பார்த்துக்கொண்டே இருந்தாய்

உன் கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்தாய்

அந்தத் துதிகள் வேத வரிகள் ஆகின

நீயே எல்லாத் தெய்வங்களின் பிறப்பையும் கொண்டாடி, அவர்களுக்குப் பெயரிட்டாய் …. ‘

-பாபுராவ் பாகுல்

‘தலித் இலக்கியம் என்பது பழிவாங்கல் இலக்கியம் அல்ல. அது வெறுப்பைப் பரப்பவில்லை. அது மானுட மேன்மையை, மனிதகுல விடுதலையை வளர்த்தெடுக்கிறது. ஆகவே. தலித் இலக்கியம் வரலாற்றுத் தேவை’ – 1973ல் பாபுராவ் பாகுல்.

பாபுராவ் பாகுல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு போர் மகாராஷ்டிராவில் உச்சம் பெறத்துவங்கிய காலத்தில் பிறந்தார். அவர் வாழ்ந்த மாதுங்கா காலனியில் சாக்கடை நீர் தேங்கி நிற்கும். ஒதுங்க கூட இல்லாமல் மக்கள் நெருக்கிக்கொண்டு வாழவேண்டிய அளவுக்கு இடப்பற்றாக்குறை. அடிப்படை வசதிகள் எட்டிப்பார்க்காத கொடிய அவநம்பிக்கை தரும் வாழ்க்கை. இருளும், நிச்சயமின்மையும் மட்டுமே அம்பேத்கரின் இயக்க அலுவலகமும், இடதுசாரிகளின் தொடர்பும் பாபுராவ் பாகுலை இலக்கியப் பெருநெருப்பாக உருமாற்றின.

தலித் மக்கள், குரலற்றவர்கள், பெண்கள், வேசிகள், குற்றவாளிகள் எனப் பலரின் அக உலகையும், சாதியும், வன்மமும் தரும் பதைபதைப்பும் அவரின் எழுத்துக்களில் இலக்கியமாகின. அவருடைய ‘When I Hid My Caste’ என்கிற மராத்தி சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை படித்து முடித்தேன். அவரின் ஆரம்பக் காலக் கதைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. நுண்மையான விவரிப்புகள், உரையாடல்கள் வழியாக மாந்தர்களைக் கண்முன் நிறுத்துவது, அவ்வப்போது எழுத்தில் இழையும் அமைதி பலவற்றைக் கடத்துவது என்று ஒரு தனித்த அனுபவமாக இந்தக் கதைகளோடு வாழ முடிந்தது.

தசரா கொண்டாட்டத்தின் போது எருமை வேட்டை ஒன்று நிகழ்கிறது. அதில் அத்தனை போராட்டம், வேதனை, உயிரிழப்பும் தலித்துகளுக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், வெற்றியும், மாலையும் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவருக்குப் போய்ச் சேருகிறது. Sacrifice என்று தலைப்பிடப்பட்ட இக்கதையைத் தமிழில் பலி என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகளில் மனுவை நோக்கி எதிர்க்குரல்கள் எழுப்பப்படுகின்றன. அவையே தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளாக அமைவது விபத்தில்லை. ‘என் சாதியை மறைத்துக் கொண்ட போது’ கதையின் நாயகன் கவிஞன். ‘தீண்டப்படாதவன் என்கிறீர்கள். சூரியன் தீண்டப்படாதவன். அக்னியும் தீண்டப்படாதவன்’ என்று அவன் பெருக்கெடுத்துப் பேசுகிறான். தன்னுடைய சாதியை மறைத்துக்கொண்டு வாழ்கிறார். அவரின் சாதி தெரியவருகிற போது, அடித்துத் துவைக்கிறார்கள். துளிக்கண்ணீர் சொட்டவில்லை. அவருடைய நிலையைப் பார்த்து, இழைக்கப்படும் அநீதியால் உறைந்து போய் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பெண்ணின் கண்ணீர் துளிகள் அவர் பாதங்களைத் தொடுகின்றன. மனுதானே என்னை அடிக்கிறான் என்று நாயகன் எண்ணிக்கொண்டு அழாமல் நிற்கிறான். சொல்லாமல் பலவற்றைச் சொல்கிற தருணம் அது.

போஹடா என்கிற பண்டிகையின் போது தானே நரசிம்ம வேடம் பூண்டு தாண்டவம் புரிவேன் என்று மகர் ஒருவர் கேட்கிறார். பல நூறு ரூபாய் தொகை தேவைப்படும் என்கிறார்கள். ஏலம் நடக்கிறது. அந்த இளைஞரே ஏலத்தில் வெற்றி பெறுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்தாண்டு முதல் இந்த விழாவே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள் என்பதாகக் கதை முடிகிறது. அடையாளங்களுக்குள் சமத்துவத்துக்கான தேடல் எப்படி முடிகிறது என்பதை முகத்தில் அறையாமல் அறைந்து சொல்கிறது.

பாலியல் தொழில் புரிய நேரிடும் மராட்டா சாதியை சேர்ந்த பெண் மீது அளவற்ற அன்பை ஒரு இளைஞன் பொழிகிறான். வினாக்கள் இல்லாமல் அவளோடு உடன் நிற்கிறான். திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவன் கேட்கிற போது, ‘நீ என்ன சாதி’ என்று நாயகி கேட்கிறாள். ‘நான் அன்பை தானே அளவில்லாமல் தந்தேன். கேட்ட போதெல்லாம் எந்த வினாக்களும் இன்றிப் பணம் தந்தேன். என்னுடைய செயல்களைக் கொண்டு என்னை அறிய முனையாமல் என் சாதியை ஏன் தேடுகிறாய்?’ என்று வேதனையோடு கேட்டு அந்நாயகன் மறைகிறான். சாதியின் கொடுவாள் தீண்டலில் மரிக்கும் அன்பு தான் எத்தனை எத்தனை?

தேவதாசியாகச் சமூகத்தால் மாற்றப்படும் தலித் பெண்கள் குறித்து ஆதிக்கச் சாதிப் பெண்கள் கூட அக்கறை செலுத்த மறுப்பதை ‘இருளின் கைதிகள்’ கதை இயல்பாகச் சொல்லிச்செல்கிறது. பாலினத்தை விடச் சாதி அரசியலே வெல்கிறது என்பதன் சாட்சியம் அக்கதை. ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் உருவத்தின் குறைகளுக்காகக் கொடுமைப்படுத்தப்படும் பெண்ணின் வலியை, கண்ணீரை, துயரை ‘pesuk’ என்கிற கதையில் மயக்கும் கதை சொல்லல் முறையில் கடத்தப்படுகிறது.

துளி கூட இரக்கம், அன்பு மறுக்கப்பட்டு பாலியல் தொழிலாளியாக வாழத்ததலைப்பட்ட  பெண். அவளின் மகன், பிணந்தின்னியாக சுற்றும் ஆண்கள், ஊற்றெடுக்கும் தாய்மை, பின்னி எடுக்கும் உடற்பிணி, இறுதி வரை சமூகம் கேட்க மறுக்கும் அவளின் அழுகுரல் உலுக்கி எடுக்கிறது.

மலமள்ளும் தொழில் செய்ய மறுத்து கல்வியைப் பற்றிக்கொள்ள முயலும் நாயகனின் கதையான ‘revolt’ இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை. நாயகன் கல்லூரி போய்ப் படிக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறான். குடும்பத்தைக் காப்பாற்ற மலம் அள்ளப்போ என்று அப்பாவும், அம்மாவும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

“நான் ஏன் மலம் அள்ள வேண்டும்? என் படிப்பை விட்டுவிட்டு இந்த ஊரின் அழுக்கை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டுமா? இவர்களின் கழிசடைகளை என் தலையில் தூக்கி சும்மக்க வேண்டுமா/ இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றால் என்னை ஏன் படிக்க வைத்தீர்கள்? என் இதயத்தில் விடுதலை, அறிவு, மானுடச்சுடர்களை ஏன் பற்றி எரிய வைத்தீர்கள்” என்று கதறுகிறான்.

“எங்கே ஒரு மலம் அள்ளுபவனின் மகனே மலம் அள்ள வேண்டும் என்று எங்கே விதித்து இருக்கிறது?” எனக்கேட்கிறான்.

“நம்முடைய வறுமையில் விதித்து இருக்கிறது. நம்முடைய தர்மத்தில் விதித்து இருக்கிறது. நம் நாட்டில் விதித்து இருக்கிறது” என்கிறார் அம்மா.

“எது தர்மம்? ஒரு மனிதனை நொறுக்கிப்போட்டு, அவனை மிருகமாக மாற்றுவதுதான் தர்மமா? மனிதனை மறந்து வெறும் சிலைகளைக் கொண்டாடித் தீர்க்கும் நாட்டின் தர்மம் தானே இது? இந்தத் தர்மத்திற்கு நான் கட்டுப்பட மாட்டேன். வறுமை, கொடுமை ஆகியவற்றை மட்டுமே தரும் இந்தத் தர்மத்தை நிராகரிக்கிறேன்…”என்கிறான்

“என் விரல்களை உடையுங்கள். என் கரங்களை முறித்துப் போடுங்கள். என் உடலை கிழித்துப் போடுங்கள். நான் இந்த வேலையைச் செய்ய மாட்டேன் ” என்கிற கதறல் கண்டுகொள்ளப்படாமல் அவன் மலம் அள்ள அனுப்பப்படுகிறான்.

அங்கே இவனுக்கும், இன்னொரு தலித்துக்கும் சண்டை முற்றுகிறது. அடித்துப் புரள்கிறார்கள். ஊரின் மலத்தையே அள்ளும் இவர்களின் துயரம் தட்டிப்போன உடம்பை தொடக்கூட விரும்பாமல் ஊரே தள்ளி நிற்கிறது. மனு சிரித்தபடி நிற்கிறான்.

சாதியை மறைத்துக் கொண்ட போது நமக்குள் இறுகிப்போயிருக்கும் சாதிய வன்மத்தை, கேடுகளை உலுக்குகிறது. கதைகளின் மூலம் கசடுகளைக் கடக்கத் தூண்டுகிறது.

When I Hid My Caste, Baburao Bagul

ஆங்கிலத்தில்: ஜெர்ரி பின்ட்டோ

Speaking Tiger Books.

சொல் அல்ல செயல் – நூல் அறிமுகம்


சொல் அல்ல செயல் நூல் முழுக்க எளிய அன்பும், ஆழமான கோபமும், அப்பழுக்கற்ற சமூக அக்கறையும் நிரம்பிக் கிடக்கிறது. துளி கூட வன்மம் இல்லாமல் நம் வெறுப்பின் வேர்களை, இயலாமைக்கான காரணங்களை அதிஷா அண்ணனால் அடுக்க முடிகிறது.

பாசாங்கற்ற உரையாடல்கள், பயணங்களின் இடையே வந்து அமரும் பிரயாணிகள் ஆகியோரின் மூலம் தீர்க்கமான சமூக அக்கறையை அண்ணன் முன் வைக்கிறார். இன்னமும் சரியாகச் சொல்வதென்றால் விரல் பிடித்து, தோள் சாய்ந்து நட்பாக நிகழும் உரையாடல்களே இவை.

பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்கையில் அங்கே அனுதினமும் பணியாற்றும், உழலும் மனிதர்கள் குறித்து அக்கறை கொண்டிருக்கிறோமா? அநீதிகளின் கொடுங்கரத்தை விடுக்காமல் நம்மைத் தடுக்கும் அச்சத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ள ஏன் இத்தனை தயக்கம்? பிள்ளைகளுக்குப் பணத்தையும், கேட்டதையும் வாரியறைப்பவர்கள் ஏன் தங்கள் நேரத்தையும், அன்பையும், இருப்பையும் தர தவறுகிறார்கள்?

Image result for சொல் அல்ல செயல்

யாரோ ஒருவரால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் சுவடுகளைக் கொண்டு பெண்கள், திருநங்கைகள், ஏழைகள், சிறுபான்மையினரின் மீதான வெறுப்பை உமிழும் நம் மனப்போக்கை எழுத்தால் படம் பிடிக்கிறார். அவற்றைக் கடக்கும் சொற்களின் சுவை நூலில் அப்பிக்கிடக்கிறது.

தற்கொலைகள் நாடும் அன்பர்களின் மனதின் ஆழ, அகலங்களை, நடுக்கத்தை நூலில் வாசித்து உணர்ந்தே ஆகவேண்டும். ஒரு அக்கறை மிகுந்த குரலும், துயரம் சாய்க்கும் புன்னகையையும், நடுக்கங்கள் போக்கும் அணைப்பையும் பரிசளிக்கும் பாதையைச் செலுத்தும் எழுத்தாகக் கட்டுரைகள் மிளிர்கின்றன.

வேகமாக ஓடும் வாழ்க்கையில் நம்மைக் குறித்தும், இயந்திரமயமான ஓட்டம் குறித்தும், வினாக்கள் தொடுக்க மறுக்கிற பதுங்கல் மனதையும் சலனமில்லாமல் பேசிச்செல்கிறது நூல். இந்த நூலின் மனிதர்கள் துயரம் நிறைந்தவர்கள், அவமானம் சுமந்தவர்கள், இரக்கம் மறுக்கப்பட்டவர்கள். ஆனால், அவர்கள் மானுட மேன்மையில் நம்பிக்கை மிக்கவர்கள். அமிழ்த்தும் வாழ்வினில் மூச்சு திணறி, மேலெழும்பி அசலாய் வாழ்பவர்கள். தங்களின் திசைகளை அறிந்து கொண்டவர்கள். தொலையவும், மன்னிக்கவும், மீண்டெழவும் கற்றுத்தருபவர்கள். சொற்களால் செயல்பட, அரசியல்மயமாக, அறம் பயில கற்றுத்தருகிறார் அண்ணன் அதிஷா. ‘விடு பாத்துக்கலாம்’ என அகத்துயர்களுக்கும், ‘விடாம பாத்துக்கணும்’ எனச் சமூக இழிவுகளுக்கும் வழிகாட்டும் நூல் இது.

அவசியம் படியுங்கள்.

சொல் அல்ல செயல்
அதிஷா
விகடன் பிரசுரம்
264 பக்கங்கள்
₹ 215

 

……………..

பரியேறும் பெருமாள் – இரு தேநீர்க்குவளைகள், சில சொற்கள், சாதியொழிப்பு!


பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இன்று இரு இளம் மருத்துவ மாணவர்களோடு பார்த்தேன். நிறைந்திருந்த அரங்கத்தில் பெரும்பாலோரின் மனச்சான்று எதோ ஒரு வகையில் உலுக்கப்பட்டிருக்கும் என்பது உறுதி.

திரையில் சாதிக்கொடூரம் நாயகனின் தந்தையைத் துரத்துகையில் திரையில் விரியும் அவர் முகமும், அவரின் இறைஞ்சும் குரலும் கண்களில் நீர் பெருக்கச்செய்தன. அன்றாடம் செய்தியாகவே பெரும்பாலும் கடக்கிற சாதி வன்முறைகள் ஒவ்வொன்றும் நம் மனச்சாட்சியை உலுக்காதா என்று கூட இருந்தது.

அடி வாங்குபவனிடம், பாரம் சுமப்பவனிடம், அடக்குமுறையை அனுபவிப்பவனிடம் மட்டுமே பேசப்படும் தர்மம் அநீதி என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் என்னென்னவோ செய்கிறது. ஒளிரும் நீல நிறம் ஒளிவு, மறைவில்லாமல் சாதியத்தளையில் இருந்து விடுதலை நாடி பெருக்கெடுத்து ஒளிர்கிறது. தன்னையும் மிருகமாக ஆக்க முயலும் சாதி அரக்கர்களிடம் கூட உரையாட சில சொற்களும், இரு தேநீர்க்குவளைகளும் கொண்டிருக்கிறான் பரியேறும் பெருமாள்.

கல்வி எனும் ஊன்றுகோலை பற்றிக்கொள்ள விடாமல் பெரும்பான்மை மாணவர்களைச் சுழற்றியடிக்கும் வகுப்பறைகளின் வசைபாடல்கள் உண்மையின் சரியான வார்ப்புகள். அதிகாரத்தில் இருக்கும் ஆதிக்கச் சாதியினர் முன் உரிமைக்கான எளிய குரலெழுப்பல் கூட எத்தகைய அடக்குமுறையோடு் எதிர்கொள்ளப்படுகிறது என்பதை ஏன் இத்தனை காலம் அழுத்திச்சொல்லாமல் போனோம்? சாதியம் நீக்கமற நிறைந்திருக்கும் நம்முடைய வாழ்வினை துளி கூடப் போலித்தனமின்றிப் படம்பிடிக்கிறான் பரியேறும் பெருமாள்.

திரைக்கதையும், வலுவான பாத்திர உருவாக்கமும், பிணைந்து பிராவகமெடுக்கும் இசையும் ஒரு பேசாப்பொருளை பேசும் படத்தை மனதைவிட்டு  அகலாத அற்புதமாகப் புடம்போட்டுள்ளன. பொன் விளையும்  பூமியாக, வெள்ளந்தியான மக்களால் நிறைந்ததாக திரையில் மட்டுமே   ஒளிரும் ஒற்றைப்படை கிராமங்கள் வழக்கொழியட்டும். ஊர்ப்பெயரில், உறவில், மொழியில் அடையாளம் காணும் சாதிப்பாச கோர முகங்கள் கல்லூரி, விழாக்கள், பொதுவிடங்கள், படுக்கை எனப்பரவியிருப்பதைப் பரியேறும் பெருமாளை போல அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கும்  ஆயிரம் படைப்புகள் வரவேண்டும். அலுத்துவிடும் எனத்தோன்றுகிறது? காதலிப்பதையே காலங்காலமாகக் காட்டியும் அயர்ந்து போய் விட்டோமா, இல்லை பார்க்காமல் போய்விட்டோமா? இதையும் சாத்தியப்படுத்த இயலும்.

படத்தின் இடைவேளையில் நீர் அருந்த போன போது ஒரு நடுவயது அக்கா தன்னுடைய சாதி அடையாளத்தால் தன்னை எப்படி ஊரில் ஒதுக்கி வைத்தார்கள் எனச் சலனமில்லாமல் பேசிக்கொண்டிருந்தார். ‘இனிமேலும் இதப்பத்திலாம் பேசாம இருக்க மாட்டேன்’ என்றவர் சொன்ன போதும் குரலில் மாற்றம் எதுவும் தென்படவில்லை. உறைந்து கிடக்கும் பல கால மௌனத்தை உடைப்பதை விட ஒரு படைப்பின் மகத்தான சாதனை வேறென்ன? பரியேறும் பெருமாள் –சாதி கடக்க முயலும் நாயிற்கடையர்களாக நம்மால் நடத்தப்படுகிறவர்களின் ஒப்பனைகள் இல்லாத வலியும், வலிமையும் மிகுந்த வாழ்க்கை.