சொல் அல்ல செயல் நூல் முழுக்க எளிய அன்பும், ஆழமான கோபமும், அப்பழுக்கற்ற சமூக அக்கறையும் நிரம்பிக் கிடக்கிறது. துளி கூட வன்மம் இல்லாமல் நம் வெறுப்பின் வேர்களை, இயலாமைக்கான காரணங்களை அதிஷா அண்ணனால் அடுக்க முடிகிறது.
பாசாங்கற்ற உரையாடல்கள், பயணங்களின் இடையே வந்து அமரும் பிரயாணிகள் ஆகியோரின் மூலம் தீர்க்கமான சமூக அக்கறையை அண்ணன் முன் வைக்கிறார். இன்னமும் சரியாகச் சொல்வதென்றால் விரல் பிடித்து, தோள் சாய்ந்து நட்பாக நிகழும் உரையாடல்களே இவை.
பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்கையில் அங்கே அனுதினமும் பணியாற்றும், உழலும் மனிதர்கள் குறித்து அக்கறை கொண்டிருக்கிறோமா? அநீதிகளின் கொடுங்கரத்தை விடுக்காமல் நம்மைத் தடுக்கும் அச்சத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ள ஏன் இத்தனை தயக்கம்? பிள்ளைகளுக்குப் பணத்தையும், கேட்டதையும் வாரியறைப்பவர்கள் ஏன் தங்கள் நேரத்தையும், அன்பையும், இருப்பையும் தர தவறுகிறார்கள்?
யாரோ ஒருவரால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் சுவடுகளைக் கொண்டு பெண்கள், திருநங்கைகள், ஏழைகள், சிறுபான்மையினரின் மீதான வெறுப்பை உமிழும் நம் மனப்போக்கை எழுத்தால் படம் பிடிக்கிறார். அவற்றைக் கடக்கும் சொற்களின் சுவை நூலில் அப்பிக்கிடக்கிறது.
தற்கொலைகள் நாடும் அன்பர்களின் மனதின் ஆழ, அகலங்களை, நடுக்கத்தை நூலில் வாசித்து உணர்ந்தே ஆகவேண்டும். ஒரு அக்கறை மிகுந்த குரலும், துயரம் சாய்க்கும் புன்னகையையும், நடுக்கங்கள் போக்கும் அணைப்பையும் பரிசளிக்கும் பாதையைச் செலுத்தும் எழுத்தாகக் கட்டுரைகள் மிளிர்கின்றன.
வேகமாக ஓடும் வாழ்க்கையில் நம்மைக் குறித்தும், இயந்திரமயமான ஓட்டம் குறித்தும், வினாக்கள் தொடுக்க மறுக்கிற பதுங்கல் மனதையும் சலனமில்லாமல் பேசிச்செல்கிறது நூல். இந்த நூலின் மனிதர்கள் துயரம் நிறைந்தவர்கள், அவமானம் சுமந்தவர்கள், இரக்கம் மறுக்கப்பட்டவர்கள். ஆனால், அவர்கள் மானுட மேன்மையில் நம்பிக்கை மிக்கவர்கள். அமிழ்த்தும் வாழ்வினில் மூச்சு திணறி, மேலெழும்பி அசலாய் வாழ்பவர்கள். தங்களின் திசைகளை அறிந்து கொண்டவர்கள். தொலையவும், மன்னிக்கவும், மீண்டெழவும் கற்றுத்தருபவர்கள். சொற்களால் செயல்பட, அரசியல்மயமாக, அறம் பயில கற்றுத்தருகிறார் அண்ணன் அதிஷா. ‘விடு பாத்துக்கலாம்’ என அகத்துயர்களுக்கும், ‘விடாம பாத்துக்கணும்’ எனச் சமூக இழிவுகளுக்கும் வழிகாட்டும் நூல் இது.
அவசியம் படியுங்கள்.
சொல் அல்ல செயல்
அதிஷா
விகடன் பிரசுரம்
264 பக்கங்கள்
₹ 215
……………..
Very well. Thank you
Sent from my iPhone
>