நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே


சாவித்திரிபாய் புலே (1831-97) அவருடைய புரட்சிகரமான கணவருக்கு இணையாக போராடினார், அல்லல்பட்டார். சாதி, பாலின பாகுபாடு மிக்க புறக்கணிப்பால் அவரின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஜோதிபாயின் மனைவி என்பதை தாண்டி அவர் குறித்து அறிவுலகம் பெரிதாக பேசுவதில்லை. நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அனைவருக்கும் கல்வி, பெண்களுக்கு கல்வி என்கிற புரட்சிகர சிந்தனையை மொழிந்தவர். பெண் விடுதலையின் நாயகி. கட்டிப்போடும் கவிதையின் முன்னோடி. சாதி, ஆணாதிக்க சக்திகளை நேருக்கு நேராக எதிர்கொண்ட தீரமிக்க மக்கள் தலைவர். அவருக்கு என்று உரிய தனித்துவமான அடையாளங்களும், சாதனைகளும் பல. நவீன இந்தியாவின் வரலாற்றில் சாவித்திரிபாய் புலே என்கிற பேராளுமையின் பெயரை உச்சரிக்க மறுக்கிற மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் அறிவு உற்பத்தி எவ்வளவு ஈவிரக்கமற்றது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சாவித்திரிபாய் அவர்களின் வாழ்க்கை,போராட்டம் மராத்தியர் அல்லாத மக்களையும் சென்றடைய வேண்டும்.’ – வரலாற்று ஆய்வாளர் பிரஜ் ரஞ்சன் மணி

சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .. மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் .ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்குக் கல்வி பயிற்றுவித்தார் .

Image result for savitribai phule

இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்குத் தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய் அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகச் சாவித்திரி ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர் அதைச்சொல்லி புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !”என்றார் அவ்வாறே செய்தார் இவர் .

தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்

1852ல் இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்)  மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.

Image result for savitribai phule

‘தி பூனா அப்சர்வர்’ இதழ் மே 29, 1852 அன்று இப்படி எழுதியது: “அரசுப்பள்ளியில் படிக்கும் ஆண் பிள்ளைகளை போல பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் ஜோதிராவ் பள்ளியில் பயில்கிறார்கள். இதற்கு காரணம், அரசுப்பள்ளியை விட இங்கே கல்வி மிக உயர்ந்த தரத்தோடு இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தாள் இப்பள்ளியில் மாணவிகள் அரசுப்பள்ளி ஆண்களை விட தாங்கள் அறிவு மிக்கவர்கள் என புரிய வைப்பார்கள். வருகிற தேர்வில் அவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெறக்கூடும். அரசு ஏதேனும் செய்யாவிட்டால் இந்த பெண்கள் ஆண்களை விட கல்வியில் சிறந்து ஒளிர்வதை கண்டு நாம் வெட்கத்தில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்”.

தீண்டப்படாத குழந்தைகள் பள்ளிகளில் சேருவதால் ஆதிக்க சாதி குழந்தைகள் பள்ளியை விட்டு நிற்கும் சூழல் நிலவி வந்த காலம் அது. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு என்று பள்ளிகளை நடத்திய புலே இணையருக்கு பணத்தட்டுப்பாடு இன்னமும் பெரிதாக இருந்தது. அவர்கள் பள்ளியை சேர்ந்த அறங்காவலர் ஒருவர் எழுதிய கடிதம் நிலையையும், சாவித்திரிபாயின் ஆளுமையையும் ஒருங்கே புலப்படுத்துகிறது
“ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிற அளவுக்கு நிலைமை நன்றாக இல்லை. கூடுதல் சம்பளம் தரும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் போகிறார்கள்…பெண்களின் கல்விக்காக இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாவித்திரிபாய் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டார். எந்த சம்பளமும் பெற்றுக்கொள்ளாமல் அவர் பணியாற்றுகிறார். தகவல்களும், அறிவும் பரப்பப்படும் போது பெண் கல்வியின் நன்மைகளை மக்கள் முழுமையாக விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். ”

Image result for savitribai phule

1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக
உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும்
முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட
என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.

ஆணின் பாலியல் வன்புணர்வுக்கும், வன்முறைக்கும் ஆளாகி கர்ப்பவதி ஆன ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளச் சென்றாள். அவளை ஜோதிபாய் புலே மீட்டு வந்தார். அந்தப் பெண்ணைத் தன்னுடைய வீட்டில் அனுமதிக்கச் சாவித்திரிபாய் எந்த எதிர்ப்பும் சொல்லாததோடு அவளுக்குப் பிறந்த குழந்தையைத் தன் மகன் போலவே வளர்த்து மருத்துவர் ஆக்கினார். இப்படிக் கைவிடப்பட்ட பெண்களைக் காப்பதற்கும், அவர்களின் பிரசவத்தைக் கவனிக்கவும் ‘பால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹா’ எனும் இல்லத்தைத் துவக்கினார்..

1855-ல் அவரின் பதினொரு வயது மாணவி முக்தாபாய் ‘தியானோதயா’வில் எழுதிய ‘மங்குகள், மகர்களின் துக்கம்’ என்கிற கட்டுரையே சாவித்திரிபாய் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதைத் தெளிவாக்கும்

‘ஓ! இறைவனே எது எங்களின் மதம் என்று சொல்! ஓ இறைவனே! எங்களின் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வழிகாட்டும் மதத்தைக் கற்பி. ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை விட்டு கெட்டு ஒழியட்டும். எங்களின் மனதிற்குள் இப்படிப்பட்ட இழிந்த மதம் எப்பொழுதும் நுழையாமல் இருக்கட்டும்..மங்குகள், மகர்கள், ஏன் பிராமணர்கள் என்று அனைவரையும் படைத்தவன் ஒருவனே! அவனே என்னை அறிவால் நிறைத்து எழுத வைக்கின்றான்… ஓ! மகர்களே! மங்குகளே! நீங்கள் ஏழ்மையிலும், நோயிலும் வாடுகிறீர்கள். அறிவெனும் மருந்து மட்டுமே உங்களைக் குணப்படுத்தவும், ஆற்றவும் முடியும்’

24 செப்டம்பர் 1873-ல் துவங்கப்பட்ட சத்தியசோதக் சமாஜத்தில் சாவித்திரிபாய் முக்கிய பங்காற்றினார். இந்த அமைப்பு புரோகிதர், வரதட்சணை இல்லாமல் திருமணங்களை முன்னின்று நடத்தியது. சமாஜத்தின் முதல் அறிக்கையில் சாவித்திரிபாய் தான் இத்தகைய மதச்சடங்குகள் ஒழித்த புரட்சிகரமான திருமணத்திற்கு காரணம் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்கக் கடுமையான ப்ளேக் சட்டங்களைப் போட்டுப் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து
ராணுவத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை
ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.

தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். அப்படி ஊருக்கு வெளிப்புறம் மகர் குடியிருப்பில் வசித்து வந்த பாண்டுரங் பாபாஜி கெய்க்வாட்டின் பத்து வயது சிறுவன் காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்தச் சிறுவன் பிழைத்துக்கொண்டான். வாழ்க்கையையே சேவையால் நிறைத்த அவரை ‘இந்தியக்கல்வியின் தாய்’ என்று போற்றுகிறோம். .

சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை,சமூகம்,வரலாறு,கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன அவரின் கவிதை கீழே :

போ கல்வி கல்
சொந்தக்காலில் நில்,சோராமல் உழை-ஞானத்தை,செல்வத்தைச் சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய்க் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று,ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக
பிராமண நூல்களை வேகமாகத் தூக்கி எறிக !

சபரிமலை தீர்ப்பை புரிந்து கொள்வது எப்படி


சபரிமலை தீர்ப்பை புரிந்து கொள்வது எப்படி – மணிவண்ணன் ஐ.ஏ.எஸ்
 
————————————————–
 
“அத்தை, சபரிமலை கோயிலில் என்ன தான் நடக்குது? பொண்ணுங்களை அங்க விட மாட்டாங்கன்னு இதுக்கு முன்னவரை எனக்குத் தெரியவே தெரியாது. ஏன் இப்படிப் பண்றாங்க?”
 
“ராஜூ, சபரிமலையின் மூலவரான ஐயப்பன் ‘நைஸ்திக பிரம்மச்சாரி’. அதாவது அவரு வாழ்நாள் முழுக்கப் பிரம்மச்சரிய விரதம் இருக்கிற கடவுள். இந்த மாதிரி விரதம் கடைபிடிக்கிற ஆம்பிளைங்க பொண்ணுங்க கிட்டே இருந்து தள்ளியே இருப்பாங்க. அதனாலதான் சபரிமலை கோயிலுக்குள்ள பொண்ணுங்கள விடறதில்ல.
இன்னொரு காரணமும் இருக்குனு சிலர் சொல்றாங்க. பதினெட்டுப் படிகள் வழியா கோயிலுக்குள்ள நுழையுறதுக்கு முன்ன தீவிரமா 41 நாள் விரதம் இருக்கணும். இவ்ளோ கஷ்டமான விரதத்தைப் பெண்கள் இருக்க முடியாது. அதனால அவங்க கோயிலுக்குப் போக முடியாது”
 
“அதென்ன 41 நாள் விரதக்கணக்கு அத்தை?”
 
“ராஜூ, உனக்கு மாதவிடாய் பத்தி தெரியுமில்ல. நம்மாளுங்க சில பேர் அந்த நாளில எல்லாம் பொண்ணுங்க அசுத்தமாகிடறாங்கன்னு நம்புறாங்க. சுத்த பத்தமா இல்லாதப்ப எப்படி விரதம் இருக்க முடியும்? அதனால பொண்ணுங்க தொடர்ச்சியா 41 நாள் விரதம் இருக்க முடியாது. விரதமே இருக்க முடியாது அப்படிங்கறப்ப எப்படிக் கோயிலுக்குள்ள நுழைய முடியும்.”
 
“ஓ! இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, மாதவிடாயை அசுத்தம்னு ஏன் நினைக்கிறாங்க? எனக்கு அபத்தமா தெரியுது. அந்த நாலஞ்சு நாள் அவங்களோட உடம்பு நோய்வாய்ப்படாம பாத்துக்கிட்டா போதுமில்லையா? இன்னைக்கு அதெல்லாம் பெரிய விஷயமா என்ன? அப்புறம் என்ன தான் பிரச்சினை.”
 
“ராஜூ, நீ சொல்றது சரிதான். தன்னுடைய உடம்பை அவங்கவங்க சுகாதாரமா பாத்துக்கிட்டாலே போதும். இயற்கையான ஒரு உடலியல் நிகழ்வை அசுத்தம்னு சிலர் நினைக்கிறது வருத்தமா இருக்கு. பொண்ணுங்க முன்னலாம் சபரிமலை கோயிலுக்குப் போனாங்கங்கறதுக்கு ஆதாரம்லாம் இருக்கு. அதெல்லாம் 1991-யோட நின்னு போச்சு”
 
“இதெல்லாம் புரிஞ்சுடுச்சு அத்தை. ஏன் உச்சநீதிமன்றம் மேலே கோபத்தைக் கொட்டறாங்க? கோயிலோடு தொடர்புடைய விஷயங்களில் எல்லாம் உச்சநீதிமன்றம் தலையிடைவே கூடாதுன்னு நினைக்கிறாங்களா? இல்லை, உச்சநீதிமன்றம் தலையிடலாம், ஆனா, இந்த முறை தப்பான தீர்ப்பை தந்திருக்குனு கருதுறாங்களா?”
 
“ஒன்னொன்னா சொல்றேன் ராஜூ. நீதிமன்றங்கள் மத விஷயங்களில் தலையிடக்கூடாதுன்னு எதிர்க்கிறாங்க. ஆனா, நம்ம அரசியலமைப்புச் சட்டம் ரொம்பத் தெளிவா இருக்கு. அது மதத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வெளியேலாம் ஒன்னும் வைக்கலை.
டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ரொம்ப அழகா, ” இந்த நாட்டில் மதக் கருத்தாக்கங்கள் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நீக்கமற கலந்திருக்கிறது என்கிற அளவுக்குப் பரந்து விரிந்துள்ளன. இங்கே மதம் கலக்காதது என ஒன்றுமில்லை. தனிநபர் சட்டங்களை நாம் காப்பாற்ற முயல்வோம் என்றால், சமூகம் சார்ந்த விஷயங்களில் நாம் தேங்கி நின்றுவிடுவோம் என்று என்னால் உறுதிபடச் சொல்ல இயலும்’ன்னு சொல்லியிருக்கார்.
Image result for sabarimala
 
சிரூர் மடத்தின் லக்ஷ்மிந்திர தீர்த்த சுவாமியார் வழக்கு (1954)-ல் துவங்க இப்ப நடந்த தலாக் வழக்கு வரை மதப் பிரச்சினைகளில் நீதிமன்றம் தீர்ப்புத் தந்திருக்கு. இதனால், நீதிமன்றம் எங்க மதத்தில் தலையிடக்கூடாது அப்படிங்கற எதிர்ப்புல அர்த்தமே இல்லை. சரி அடுத்ததுக்கு வருவோம். நீதிமன்றம் தவறான தீர்ப்பை கொடுத்துருச்சா?”
 
“அத்தை, அவங்க எல்லாம், “பத்துல இருந்து அம்பது வயசு வரை இருக்கப் பொண்ணுங்கள விடாம இருக்கிறது மரபுன்னு சொல்றாங்களே. அவங்களோட பாரம்பரிய வழக்கத்தை நிறுத்தி நீதிமன்றம் தப்பு பண்ணிடுச்சு. சில மரபுலாம் ரொம்பக் காலமா இருக்கு. அதனோட விளைவை எல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு நாம பெரிய ஆளெல்லாம் இல்லையே. இப்ப, செத்துப் போனவங்களைப் புதைக்கிறதையே எடுத்துக்குங்க. புதைச்சா pollution ஆகுதுன்னு நாம அதை நிறுத்த முடியாது இல்லையா?”
 
“அடடா. செம ராஜூ. உன்னோட லாஜிக் எனக்குப் புடிச்சிருக்கு. நீதிமன்றம் என்ன சொல்லுதுன்னு பாப்போமா? நீதிமன்றம் மத மரபில் தலையிடக்கூடாதுன்னு சொல்றதை ஏத்துக்குது. எப்பலாம் அந்த மரபுக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் மோதல் வருதோ அப்ப மட்டும் நீதிமன்றம் தலையிடுறதை தவிர வேற வழியில்லை.”
 
“ம்ம்ம். இது நியாயம் தானே அத்தை. அப்புறம் யாரு வேணாம் என்ன வேணாம் மரபுன்னு சொல்லிட்டுப் பண்ணலாம். இந்த நரபலியையே எடுத்துப்போமே. அது எதோ ஒரு இந்து மதப் பிரிவோட மரபு தான். அதுக்காக அதை ஏத்துக்க முடியுமா. முடியாது இல்லை. எல்லா மரபும் அப்படியே தொடரக்கூடாதுன்னு சொல்றதுல இருக்கிற நியாயம் எனக்குப் புரியுது”
 
“அதேதான் ராஜூ. நீதிமன்றம் நீ சொல்றதை தான் சொல்லுது. ஒரு மரபு தொடரனுமா வேணாம்னு முடிவெடுக்க இரண்டே இரண்டு நிபந்தனைகளைத் தான் கணக்கில எடுத்துக்குது.
 
1. இந்த மரபு இடைவெளி இல்லாம நெடுங்காலமா அப்படியே தொடருதா?
2. அந்த மரபு அம்மதத்திற்கு இன்றியமையாத ஒன்றா? அந்த மரபை நிறுத்திட்டா மதத்தோட பண்பு மாறிவிடுமா?
 
இந்த வழக்கில, தொடர்ந்து மரபு பின்பற்றப்படலை அப்படிங்கறதுக்கு எடுத்துக்காட்டுகள் இருக்கு. மேலும், பெண்கள் வேறுபடுத்திப் பாக்குறது இந்து மதத்தோட ‘பிரிக்க முடியாத மரபு’ன்னு நீதிமன்றம் கருதலை. அதனால, ரெண்டு நிபந்தனையையும் இந்த மரபு திருப்திப்படுத்தலை. அதனால தான், பெண்களை வேறுபடுத்திப் பாக்குற இந்த மரபு அரசிலயமைப்பு சட்டத்துக்கு எதிரானதுன்னு உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கு.”
 
“அதெல்லாம் சரியாத்தான் படுது அத்தை. ஆனால், கொஞ்ச பேரு, ஐயப்ப பக்தர்கள் எல்லாம் இந்து மதத்தின் ஒரு பிரிவு, அதனால அவங்க பிரிவோட மரபை அரசியலமைப்பு சட்டப்படி தொடரலாம்னு வாதம் பண்றாங்களே”
“உனக்கு எவ்ளோ தெரிஞ்சிருக்கு. ஆனா, நீதிமன்றம் வைணவர்கள், ஆனந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களைப் போல ஐயப்ப பக்தர்கள் ஒன்றும் தனிப்பிரிவு இல்லைன்னு சொல்லிடுச்சு. அவங்களுக்குள்ள பொதுவா இருக்க ஒரே கூறு இந்த நாப்பத்தி ஒரு நாள் விரதம் தான். கிறஸ்துவ, முஸ்லீம் பக்தர்கள் கூட விரதம் இருந்து ஐயப்பனை பாக்க போக முடியும். அதனால ஐயப்ப பக்தர்களை இந்து மதத்திற்குள் இருக்கும் ஒரு பிரிவுன்னு சொல்ல முடியாது.”
 
“புரியுது. ஆனா, அத்தை ஒவ்வொருவாட்டியும் எது ஒரு மதத்தில இன்றியமையாத மரபு, தேவையற்ற மரபுன்னு நீதிமன்றம் முடிவு பண்ண முடியுமா? இந்து மததில எவ்ளோ பிரிவு, வழக்கங்கள் எல்லாம் இருக்கு. ஒருத்தருக்கு தேவையானதா இருக்கிறது இன்னொருத்தருக்கு தேவையில்லாததா இருக்கலாமே?”
 
“நல்ல கேள்வி. இது ரொம்ப முக்கியமான வாதமும் கூட. ஆனா, ஒவ்வொரு வாட்டியும் எது தேவையான மரபுன்னு நீதிமன்றம் தான் முடிவு பண்ணனும். இதுக்கு மாற்று ஒன்னும் எனக்கு இப்போதைக்குத் தெரியலை. வேணா ஒரு வழியிருக்கு. மொத்தமா மதத்தை விட்டே தள்ளி இருக்கலாம். ஆனா, எது தேவையான மரபுன்னு முடிவு பண்ணுறதை விட அது மோசமான ஒன்னா தான் இருக்கும்.”
 
“சரி அத்தை. நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு புரியுது. ஆனா, நீதிமன்றத்துக்கு இந்தத் தீர்ப்பால மக்கள்லாம் கொதிச்சு போவாங்கனு தெரியுமா? இந்த மரபை பின்பற்றான என்ன கேடு வந்துட போகுது. இது யாரையாச்சும் பாதிக்குதா என்ன?
 
சமூகச் சீர்திருத்தவாதிகள் படிப்படியா மக்களைப் பேசி, சீர்திருத்தத்தை ஏத்துக்க வெச்சு மாற்றத்தை கொண்டு வரலாமே?”
“அட்டகாசமான கேள்வி ராஜூ. மனுஷங்க சமூக மிருகங்கள் அப்படின்னு வரலாறு சொல்லித்தருது. ஒரு காலத்தில குழுக்களா வாழ்ந்தோம். நாம ஒரு தனிக்குழுவா, சமூகமாக வாழ்ந்தப்ப தனி மனிதர்களை விடச் சமூகம், சமூக வழக்கங்கள் பெருசா இருந்தது. தனிநபர் உரிமைகள் சமூகத்திற்கு அடங்கின ஒன்னா இருந்தது. ஆனா, படிப்படியா, அதுவும் குறிப்பா மறுமலர்ச்சி காலத்தில இருந்து தனி மனிதர்களின் உரிமைகள் முக்கியம் அப்படிங்கற நிலைமை வந்தது.
 
தனி மனித உரிமைகள் ஒரு சமூகத்தை முன்னேற்ற நிச்சயமா தேவை. அவங்களோட பாலினம், மதம், மொழியால யாரும் பாகுபடுத்தப்படக் கூடாதுன்னு உறுதியா இருக்கணும். அதைத்தானே நம்முடைய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14 சொல்லுது.
 
ஒரு பொண்ணைக் கோயிலை விட்டு தள்ளி வைக்கிறது, பாகுபடுத்தாம வேறென்ன? அவ பொண்ணா பொறந்ததைத் தவிர வேறென்ன பாவம் பண்ணினா? அது சாபக்கேடா என்ன?
 
சமூகச் சீர்திருத்தவாதிங்க வந்து, மக்களோட மனசை மாத்தினா அதைவிட நல்லது ஒன்னு இருக்க முடியாது. ஆனா, மிக முக்கியமான முடிவுகளை வருங்காலம் பாத்துக்கும்னு விடக்கூடாது. இந்த மாதிரி பிரச்சினைங்க ரொம்பக் காலத்திற்குத் தாக்கம் செலுத்தும்.
 
நீதிமன்றங்கள் அமைதியாக இருந்தா, மக்களுக்கு அரசாங்கம் மேலே இருக்க நம்பிக்கை போயிடும். அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறதை விட மதத்தை மதிக்கிறது மேலேன்னு நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க. இது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கிடும். மத அடிப்படையில நாடு துண்டு துண்டு சிதறிக்கூடப் போகலாம்.
 
அதனாலதான், நீதிமன்றம் முத்தலாக் வழக்கில தலையிட்டுச்சு. அது இஸ்லாமிற்கு இன்றியமையாத மரபில்லைன்னு அறிவிச்சதோட, அது அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானதுன்னு தீர்ப்பு எழுதிச்சு
நீதிமன்றம் இந்த விஷயத்தில தலையிட்டது நாட்டிற்கு ரொம்ப நல்லது. நமக்கும் நல்லது. புரிஞ்சுதுல்ல ராஜூ”
 
“நிச்சயமா அத்தை. நீங்க சொல்றதை முழுசா ஏத்துக்கிறேன். பெண்களைப் பாகுபடுத்துற மரபை நீதிமன்றம் இந்து மதத்தின் இன்றியமையாத மரபு இல்லைன்னு சொன்னதில எனக்கு மகிழ்ச்சி தான். இந்துக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி தீர்க்கணும்’
Image result for sabarimala
 
“கண்டிப்பா ராஜூ. நிறையப் பேருக்கு இந்தத் தீர்ப்பால மகிழ்ச்சி தான். இந்து மதம் பெண்களை மதிக்குதுங்கறதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துது. மூவாயிரம் ஆண்டுகளா இருக்க இந்து மதம் தன்னைச் சீர்த்திருத்திக்கிட்டு நம்ம காலத்திற்கு ஏத்த மதமா மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!”
 
———————————————————————————-
அடிக்குறிப்புகள்:
இந்த உரையாடலை நான் எழுதக்காரணம் என்ன? உச்சநீதிமன்றத்தையும், இந்த வழக்கில் அது வழங்கிய தீர்ப்பை மதிக்கிறேன் என்பது ஒரு காரணம். அதோடு, நான் இந்து மதத்தின் பல்வேறு பண்புகளை மதிக்கிறேன் என்பதும் முக்கியக் காரணம். இந்திய வரலாற்றின் மாணவனாக வேதங்கள், உபநிடதங்கள், சில சாஸ்திரங்கள் குறித்து எனக்குப் பரிச்சயம் உண்டு. இந்து மதத்தை உயர்ந்த தத்துவச்செறிவு மிக்க மதமாக நான் காண்கிறேன். அது மனிதனை கடவுளுக்கு ஒப்பான ஒருவராகக் காண்கிறது. அஹம் பிரம்மஸ்வாமி . அது தனிமனிதர்களுக்கு மிகப்பெரிய மரியாதையைத் தருகிறது, எனக்குத்தெரிந்தவரை வேறெந்த மதமும் இந்த விஷயத்தில் அதன் அருகில் கூட வர முடியாது. அதனால் தான் மூவாயிரம் ஆண்டுகளாக இந்து மதம் நீடித்து நிற்கிறது. அது இன்னும் முப்பாதாயிரம் ஆண்டுகள் உயிர்ப்போடு இருக்கும். அது நடக்க, சில பிற்போக்கான, தங்களைத் தாங்களே இந்து மதத்தின் காவலர்களாகக் கருதிக்கொள்ளும் நபர்கள் இந்து மதத்தைக் கட்டுப்படுத்த முயல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நான் திருவரங்கத்தில் வளர்த்தேன். அங்கே இந்துக்கள் எப்படி முற்போக்கு மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் கண்ணார கண்டு வளர்ந்தவன் நான். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
சரணம் ஐயப்பா!
 
———————————————————————————
[அரசு அதிகாரிகள் உரையாடிக்கொள்ளும் telegram group (டீ கடை ), Raghunandan Tr சார், ட்வீட்டர் நண்பர்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி]
###############################################################

மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து எழுதியிருப்பவை இவை:

சபரிமலை ஆலயத்திற்குள் பெண்கள் நுழையக்கூடாது என சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டது 1972-ல் தான்.

குடியரசுத்தலைவர் வருகைக்காக சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு பெண்கள் கோயிலில் வழிபட்டு வந்தார்கள்.
ஆண் பக்தர்கள் இதனால் காயப்பட்டதாலே சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச்சட்டம் நடைமுறையில் அமலாக்கப்படவில்லை.

1986-ல் நடிகைகள் பதினெட்டு படிக்கட்டுகளில் நாட்டியமாட தமிழ்ப்படமொன்று காட்சிப்படுத்தப்பட்டது.
தேவசம் ஆணையம் 7500 கட்டணம் பெற்றுக்கொண்டது.

1990 ல் தொடரப்பட்ட பொதுநல வழக்கை அடுத்தே கேரளா உயர்நீதிமன்றம் 10-50 வயது பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது எனத்தடை விதித்தது.

ஆண்டாண்டு காலமாக பாடப்பட்டு வருவதாக சொல்லப்படும் ஹரிவராசனம் பாடல் மெட்டமைக்கப்பட்டு பாடப்படுவது 1955 ல் இருந்து தான்.

எப்படி ஒரு பிராமண குடும்பத்திற்கு சபரிமலை ஆலயத்தில் உரிமையுள்ளதோ அது போல ஒரு ஈழவக்குடும்பத்திற்கும் வெடி வழிபாட்டு உரிமை இருந்தது.
ஐயப்பன் அவர்களிடம் போர்க்கலைகள் கற்றதாக நம்பிக்கை. இங்கே எல்லாம் காலங்காலமாக நிலவும் நம்பிக்கை என்பதெல்லாம் கணக்கில் இல்லை என்பது போல தேவசம் ஆணையம் அந்த வெடி வழிபாட்டு உரிமையை ரத்து செய்து அதனை பொது ஏலத்திற்கு விடுகிறது.
பாலினப்பாகுபாடு மட்டுமல்ல, சாதிக்கும் இங்கே பங்கிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

1993 ல் வந்த கேரள உயர்நீதிமன்றத்தீர்ப்பு பெண்கள் கோயிலுக்கு வருவதற்கு பழங்காலம் முதல் தடையில்லை என்று சுட்டிக்காட்டுவதோடு, சமீபகாலம் வரை குழந்தைக்கு சோறுண்ணு சடங்கிற்காக 10-50 வயது பெண்கள் சபரிமலை கோயிலிற்கு வருவார்கள்.
அதைத்தடுக்கும் வகையில் சந்நிதியின் முன் கொடிமரம் ஏற்படுத்தியிருக்கிறார்கள என்கிறது.

1939 ல் திருவிதாங்கூர் ராணி ஆலயத்திற்கு வருகை புரிந்தததும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.