நேரு காலத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்தது. சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் தராமல் இந்தியா அதில் இணைவது என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று நேரு அடம்பிடித்ததாக ஒரு கருத்து பரவலாகப் பரப்பப்படுகிறது.
மெய்ப்பொருள்:
சீனாவின் ஐநா நுழைவு வரலாறு இடியாப்ப சிக்கலானது. சீனாவில் உள்நாட்டுப் போர் ஒன்று நடைபெற்றது. சியாங் ஷேக் தலைமையிலான சீனக்குடியரசு அமெரிக்க ஆதரவோடு உலகப்போருக்கு பின்னர் ஆண்டுக் கொண்டிருந்தது. அதனை எதிர்த்து மாவோ தலைமையிலான கம்யூனிச கட்சியினர் போராடி வென்றார்கள். அவர்கள் தைவான் தவிர்த்த ஒட்டுமொத்த சீனாவையும் தங்கள் வசப்படுத்தினார்கள். இவர்களுக்குச் சோவியத் ரஷ்யாவின் ஆதரவு இருந்தது. ஆனால், தைவானில் தஞ்சம் புகுந்த சீனக்குடியரசு தான் ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவாக இருந்தது. மேலும், பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாகவும் இருந்தது. அதன் இடத்திற்கு மாவோ தலைமையிலான சீன மக்கள் குடியரசை கொண்டுவர வேண்டும் என்கிற சோவியத் ரஷ்யாவின் முயற்சிகள் அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டது.

வீட்டோ எனப்படும் ஒரு எதிர் வாக்கு ஒட்டுமொத்த தீர்மானத்தையும் தோற்கடிக்கும் என்கிற வினோதமான வாக்கு முறையைப் பாதுகாப்புக் கவுன்சில் பின்பற்றியது இதற்கு முக்கியக் காரணம். கடும்கோபத்தோடு 1950 ல் ஐநாவை விட்டு சோவியத் ரஷ்யா சிறிது காலத்திற்கு விலகியது. ஒரு வழியாக, ரிச்சர்ட் நிக்சனின் காலத்தில் அமெரிக்கா சீன மக்கள் குடியரசோடு நல்லுறவு பாராட்டியது. இதனையடுத்து ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவின் இடத்தை 1971-ல் சீன மக்கள் குடியரசு பெற்றுக்கொண்டது.
இப்போது நேரு பாதுகாப்புக் கவுன்சிலில் சீனாவிற்கு இடமில்லாமல் நிரந்தர இடத்தைப் பெற மறுத்தார் என்கிற கூற்றை எடுத்துக்கொள்வோம். இந்தக் கருத்தை பாஜகவினர் மட்டும் எடுத்துரைக்கவில்லை. சசி தரூர் தன்னுடைய ‘Nehru-The invention of India’ நூலில் இதே கருத்தை முன்வைக்கிறார். இந்திய அயலுறவு அதிகாரிகள் ஆகஸ்ட் 1950-ல் இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடத்தைச் சீனாவிற்குப் பதிலாக எடுத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாக அமெரிக்கா அழைத்தது. அதனை நேரு ஏற்க மறுத்தார், இது பெரும்பிழை என்று கோப்புகளைப் பார்த்த அயலுறவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சசி தரூர் எழுதுகிறார்.
அடுத்து இன்னொரு முறை, 1955-ல் சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் செய்த போது (கவனிக்க அமெரிக்கா இல்லை) இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் ஆறாவது நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று யோசனை இருப்பதாகத் தெரிவித்தது. இதனையும் இந்தியா ஏற்கவில்லை. ஏன் என்று விரிவாகப் பார்ப்போம்.
முதலில் அமெரிக்கா சீனாவின் இடத்தைப் பாதுகாப்புக் கவுன்சிலில் எடுத்துக் கொள்ள வழங்கிய வாய்ப்பு. இது பரிந்துரைக்கப்பட்டது 1950-ல். அதாவது காஷ்மீர் பிரச்சினை ஐநாவில் இந்தியாவின் உள்நாட்டு சிக்கலாக அணுகப்படாமல், இந்திய-பாகிஸ்தான் பிரச்சினையாகப் பிரிட்டன், அமெரிக்காவால் மாற்றப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வு. ஆகஸ்ட் 24 1950-ல் சீனாவின் இடத்தை இந்தியா எடுத்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் சிலர் பரிந்துரைப்பதை அமெரிக்காவின் தூதுவராக இருந்த விஜயலட்சுமி பண்டிட் நேருவிற்குத் தெரியப்படுத்துகிறார்.
இது இந்தியாவிற்கும்-சீனாவிற்கும் இடையே மோதலை மூட்டிவிடும், மேலும், ஐநா சபையை விட்டு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வெளியேறுவதும், ஐநா சபையே கலைவதற்கும் இது வழிகோலும் என்றும் நேரு அஞ்சினார். இந்தியாவிற்கு ஐநாவில் நிரந்தர இடம் வேண்டும், ஆனால், இப்படி அமெரிக்காவின் காய் நகர்த்தல் ஐநா சபைக்கும், உலக அமைதிக்கும் கேடாக முடியும் என்கிற அச்சம் நேருவிற்கு இருந்தது.
பேராசிரியர் நபரூன் ராய் வேறு சிலவற்றைக் கவனப்படுத்துகிறார். எகிப்திய தலைவர் நாசருடன் நேரு பேசுகிற போது, ‘சீனா பல லட்சம் மக்களை இழப்பதை குறித்து எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்னோடு உரையாடிக்கொண்டிருந்த மாவோ வெகு சாவகசமாகச் சில கோடி மக்களை இழப்பதற்கு நாங்கள் தயார்’ என நினைவுகூர்வதைக் கவனப்படுத்துகிறார். பல ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும், உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதும் சீனாவின் ஆக்ரோஷத்திற்குக் காரணம் என்று நேரு கருதினார்.
சீனா இந்தியாவின் அயலுறவு கொள்கையின் பிரிக்க முடியாத பகுதியாகும், அதனோடு உரையாடல், நல்லுறவு, அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதன் மூலமே ஐநா இயங்க முடியும் என்று நேரு கருதினார் என்கிறார் 1949-1962 காலத்தைய இந்திய சீன உறவுகள் குறித்து ஆய்வு செய்த ஆண்டன் ஹார்டர்.
மேலும், ஒருவேளை இந்தியா அமெரிக்கா வழங்குவதாகச் சொன்ன பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை ஏற்றிருந்தாலும் இதனைச் சோவியத் ரஷ்யா வீட்டோ செய்திருக்கக் கூடும். (ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்குள் வந்து விட்டது)
ஜவகர்லால் நேரு லண்டனில் 1960-ல் நிகழ்த்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீன மக்கள் குடியரசு ஐநாவின் பகுதியானால் உலகின் பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் எளிதாகிவிடும்’ என்றார். தன்னுடைய முதலமைச்சர்களுக்கு நேரு 1950-ல் எழுதிய கடிதத்தில், ‘….உலகின் அதிகாரச்சமநிலை புதிய சீனாவின் வருகைக்குப் பிறகு கிழக்கில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் மாறியிருக்கிறது. இதனை மேற்கத்திய நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. இந்த உண்மையை உணர்வது துரிதமாக நடப்பது பேரிழப்புகளைத் தவிர்க்கும்’ என்று அக்கறையோடு எழுதினார்.

ஜனவரி 1950-ல் சீன மக்கள் குடியரசை ஐநாவில் சேர்க்காத போக்கை கண்டித்துச் சோவியத் ரஷ்யா ஐநாவை விட்டு வெளியேறி இருந்தது. இதே காலகட்டத்தில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா பங்குகொண்ட கொரியப்போரில் ஆரம்பத்தில் இந்தியா அமெரிக்காவிற்குச் சாதகமாக இயங்கியது. போக, போக நிலைமைக்கு ஏற்ப தன்னுடைய அமெரிக்க ஆதரவை இந்தியா குறைத்துக்கொண்டது. கொரியப்போர் குறித்த ஐநாவின் மூன்றாவது தீர்மானம் முழுக்க, முழுக்க அமெரிக்காவிற்குச் சாதகமாக இருந்த போது அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்கு வந்து சேர்ந்திருந்தது. இத்தகைய நிலையில் இந்தியா அமெரிக்காவின் அழைப்பை ஏற்றிருந்தால் அது முழுக்க அமெரிக்காவின் கையாளாக மாறியிருக்க வேண்டியிருக்கும். மேலும், சோவியத் ரஷ்யா, சீனாவின் பகையை ஒருங்கே பெற்றுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். சர்வதேச அமைதியை குலைக்கிற செயலில் இந்தியா ஈடுபடாது என்று நேரு உறுதியாக இருந்தார்.
இதே காலகட்டத்தில் தான் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்க்க அமெரிக்கா அழைத்தது. காஷ்மீர் பிரச்சினை ஐநாவிற்குச் சென்ற போது, விஜயலட்சுமி பண்டிட் ‘இந்தியா ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்றால் காஷ்மீரை கைகழுவ வேண்டியிருக்கும் போல’ என்று 2 செப்டம்பர் , 1949-ல் எழுதியிருந்தார். (விஜயலட்சுமி பண்டிட் தாள்கள் கோப்பு எண். 59, 47, NMML). ராணுவ ரீதியாகத் தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருப்பது புதிதாக உதித்த ஒரு நாட்டிற்கு உகந்தது அல்ல என்பது நேருவின் அக்கறையாக இருந்தது என்பது ராணுவ, அயலுறவு வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை.
சமீபத்தில் வந்த தி இந்து செய்தித்தாளின் பழைய கட்டுரையொன்றை மாலன் மேற்கோள் காட்டி நேரு பொய் சொல்லியிருக்கிறார் என்று எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நேருவிடம் உறுப்பினர் பரேக் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதற்கு ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா? என்கிற கேள்விக்கு ‘அப்படி எந்த அழைப்பும் வரவில்லை’ என்று நேரு செப்டம்பர் 1955-ல் உறுதிபட மறுத்திருக்கிறார். இதனைத்தான் ஏ.ஜி.நூரனி விஜயலட்சுமி பண்டிட் தாள்களை வாசித்து எழுதிய கட்டுரையைக் கொண்டு பொய்யர் நேரு என்கிற ரீதியில் மாலன் எழுதிச் செல்கிறார். (The Nehruvian approach)
என்ன நிகழ்ந்தது 1955-ல்?
சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் போயிருந்த போது அந்நாட்டின் பிரீமியர் புல்கானின் இந்தியாவை ஐநாவின் ஆறாவது பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினராகச் சேர்க்க எண்ணம் என்கிறார். நேரு அதனை ஏற்க மறுக்கிறார். இதற்குப் பிந்தைய நாடாளுமன்ற விவாதத்தின் போது இதை அப்படியே நேரு மறைத்துவிட்டார் என்பது மாலன் முன்வைக்கிற பார்வை.
அந்த உரையாடலின் சில பகுதிகளை மட்டும் மாலன் பதிவு செய்கிறார். ஆனால், சோவியத் ரஷ்யா எப்படிச் சாதுரியமாக இந்தியாவைக் குழப்ப பார்த்தது என்பதையும், அதில் இருந்து நேரு எப்படிச் சாமர்த்தியமாகத் தப்பினார் என்பதையும் விளக்கும் உரையாடலின் பகுதியை மாலன் அறியாமல் விட்டுவிட்டார். சர்வபள்ளி கோபால் எழுதியிருக்கும் Jawaharlal Nehru; எனும் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றின் Volume II; பக்கம் 248-ல் வரும் “He (Jawaharlal Nehru) rejected the Soviet offer to propose India as the sixth permanent member of the Security Council and insisted that priority be given to China’s admission to the United Nations” என்கிற வரியை பிடித்துக் கொள்கிறார். சீனாவிற்காக இந்தியா ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்தது என்கிற பார்வையை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார் மாலன்.

இப்போது புல்கானின், நேரு இடையே நடந்த உரையாடலை பார்ப்போம்:
புல்கானின்: “நான்கு சக்திகள் மாநாடு குறித்த உங்களுடைய பரிந்துரையைக் கணக்கில் கொண்டு தேவையான நடவடிக்கையை எடுப்போம்.உலகளவில் நிலவி வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், பதற்றத்தை தணிக்கும் பொருட்டும், பிற்காலத்தில் இந்தியாவைப் பாதுகாப்பு கவுன்சிலின் ஆறாவது உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று எண்ணுகிறோம்…
நேரு: அமெரிக்காவில் சிலர் ஏற்கனவே சீனாவிற்குப் பதிலாக இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைத்ததைப் புல்கானின் அறிந்திருக்கலாம். அது எங்களுக்கும், சீனாவுக்கும் இடையே பகையைத் தோற்றுவிக்கும் நோக்கம் கொண்டது. அதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். அதேபோல, சில இடங்களைப் பிடிப்பதற்க வேகமாக முந்திக்கொண்டு செல்லவும் விரும்பவில்லை. அது பிரச்சினைகளை உண்டு செய்வதோடு, இந்தியாவையே சர்ச்சைக்கான பேசுபொருளாக மாற்றக்கூடும். இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் இணைக்க வேண்டுமென்றால், ஐநாவின் சாசனத்தைத் திருத்தி எழுத வேண்டும். அதற்கு முன்பு சீனாவை அனுமதிப்பது குறித்த சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். முதலில் சீனாவை சேர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். சாசனத்தைத் திருத்துவது குறித்துப் புல்கானின் அவர்களின் கருது என்ன? அதனைத் திருத்த இது சரியான நேரம் இதுவல்ல என்று நாங்கள் எண்ணுகிறோம்.
புல்கானின்: நாங்கள் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்ப்பது குறித்து உங்களின் கருத்துக்களை அறியவே இப்படிப்பட்ட பரிந்துரையை முன்வைத்தோம். இது அதற்கான நேரமில்லை, காலம் கனிந்து வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொன்றாகக் காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
மேற்சொன்ன உரையாடலில் சீனாவை நேரு அதிகமாக முன்னிறுத்துவது நமக்கு உறுத்தலை தரலாம். ஆனால், சாசனத்தைத் திருத்துவது கவனத்துக்கு உரியது. சாசனத்தைத் திருத்த ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து உறுப்பினர்களோடு பொதுக்குழுவின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இது சாத்தியமில்லை என்பது நேருவுக்கு நன்றாகவே தெரியும். சோவியத் ரஷ்யா இந்தியா அமெரிக்கா பக்கம் சாய உள்ளதா? அது பாதுகாப்புக் கவுன்சிலில் தான் மட்டும் இடம்பெற கணக்கு போடுகிறதா என்று ஆழம் பார்த்தது. நேரு கச்சிதமாகச் சிக்காமல் தப்பினார். நேரு அயலுறவு சார்ந்த விஷயங்களை உள்நாட்டு பிரச்சினையாக்கி வாக்குச் சேகரிப்பதில் ஈடுபடாத மகத்தான தலைவர் என்று அதே கட்டுரையில் நூரனி புகழாரம் சூட்டுகிறார். இதை மாலன் வசதியாக மறந்துவிடுகிறார்.
உரையாடலின் போது வருகிற ஒரு பரிந்துரை ஏற்கப்படாத போது, அது நம் நாட்டை ஆழம் பார்க்கிற ஒன்றாக இருக்கிற போது அதனைப் பொதுச்சபையில் வைப்பது தேசத்தின் நலனிற்கும், அயலுறவு கொள்கைக்கும் மாறானதாக முடியக்கூடும் என்பது இந்திய அயலுறவு கொள்கையின் தந்தையான நேருவுக்கு நன்றாகத் தெரியும். நேருவுக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பு அமெரிக்காவின் நலனிற்கு உகந்ததாக இருந்திருக்கும். அதனால் சீனா, ரஷ்யாவின் பகைமையோடு வீட்டோவால் பாதுகாப்புக் கவுன்சில் இடமும் இந்தியாவிற்குக் கிடைக்காமல் போயிருக்கும். இன்னொரு முறை ரஷ்யா வாய்ப்பை வழங்கிய போது, அது கண்துடைப்பாகவே இருந்தது என்பதையும், அதை நிறைவேற்றுவது அப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா நன்றாகவே உணர்ந்திருந்தது.
இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்கிற அக்கறை நேருவிற்கு இருந்தது. அதே வேளையில், ஐநாவை கூறுபோட்டு, தன்னுடைய சீன, ரஷ்ய உறவுகளைக் கெடுத்துக்கொண்டு இன்னொரு போருக்கான சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்கிற தீர்க்கமும் நேருவிற்கு இருந்தது. இந்தச் சிக்கலான வரலாற்றை ‘நேரு பொய்யர்’, ‘சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை நேரு தாரைவார்த்து விட்டார்’ முதலிய அரைகுறை வரிகளால் விளங்கிக்கொள்ள முடியாது. ஐநாவில் சீனா அதன் தோற்றத்தில் இருந்தே இடம்பெற்று இருந்தது. எந்தச் சீனா என்பது தான் சிக்கலாக இருந்தது. சீனாவை தூக்கி எறிய வேண்டும் என்கிற அமெரிக்காவின் கணக்கிற்கு இந்தியா பலியாகாமல் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டது. சோவியத் ரஷ்யா சொன்னதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை இந்தியா தெளிவாக உணர்ந்திருந்தது. சாசனத்தைத் திருத்த தான் தயார் என்று புல்கானின் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், பிற்காலத்தில் இந்தியாவை ஆறாவது உறுப்பினராக ஆக்குகிறோம் என்கிற வரியின் ராஜதந்திர சதுரங்கத்தில் நேரு வெட்டுப்படாமல் தப்பினார். நேரு காஷ்மீர், சீனாவில் பிழைகள் புரிந்தார், அவர் அவற்றில் சரியாகவும் காய்களை நகர்த்திய தருணங்கள் உண்டு. வரலாறு சிக்கலானது மட்டுமல்ல, வெறுப்பினால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றல்ல.
காண்க:
Not at the Cost of China: India and the United Nations Security Council, 1950
In the Shadow of Great Power Politics: Why Nehru Supported PRC’s Admission to the Security Council
The Nehruvian approach
UN seat: Nehru clarifies