‘நீங்கள் வீட்டிற்குள் படம் பார்த்துக் கொண்டிருந்தால், உலகத்தைக் கொரோனாவிடம் இருந்து காப்பாற்ற முடியும்’


சிகாகோ பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்கள் துறையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரியும் மருத்துவர் எமிலி லாங்டன் ‘ஏன் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், ஊரடங்கு உத்தரவை ஏன் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்பதைப் பற்றி எழுச்சிமிகு உரையொன்றை ஆற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம்:

அனைவருக்கும் வணக்கம்.

நம் ஊரிலும், உலகம் முழுக்கவும் பெரும்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும், ஆதரவையும் உரித்தாக்குகிறேன். இத்தகைய கொள்ளை நோய் வைரஸின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க முயன்றிருக்கிறோம். எனினும், நம்மை புத்தம் புதிய வைரஸ் ஒன்று முற்றுகையிட்டு இருக்கிறது. இதனைப்பற்றி நமக்குப் பெரிதாக எதுவுமே தெரியாது. இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள நம்மிடம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. ஒவ்வொரு நாளும் தடுப்பு நடவடிக்கை பற்றிய வழிகாட்டுதல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு வாய்ப்பு என்பதே இங்கே இல்லவே இல்லை.
…..
இந்த வைரஸ் ஈவிரக்கமற்றது. அது உங்களைத் தாக்கியிருக்கிறது என்று தெரிவதற்குள் வேகமாகப் பரவ ஆரம்பிக்கிறது. சாதாரணச் சளி, காய்ச்சல் தான் என்று உங்களை அது ஏமாற்றுகிறது. நம்மில் பலருக்கு கூட ஒரு சாதாரணச் சளி, காய்ச்சலுக்கு எதற்கு இத்தனை கூப்பாடு என்று தோன்றலாம். இதற்குப் போய் ஏன் பள்ளிகளை மூடுகிறார்கள். உணவகங்களுக்குப் பூட்டு போடுகிறார்கள் என்று குழப்பமாக இருக்கலாம்.

இது போதாது என்று மிச்சம் மீதி இருக்கும் உங்களுடைய விலைமதிப்பற்ற சுதந்திரத்தையும் இந்த வைரஸ் காவு கேட்கிறது. ஆனால், உண்மையான சிக்கல் இந்த நோய்த்தாக்குதலில் இருந்து தப்பப்போகும் 80% மக்களைப்பற்றியது அல்ல. மீதமுள்ள 20% நோயாளிகள், குறிப்பாக வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியற்றவர்கள், பிற உடல்நலக்குறைவுகளால் அவதிப்படுபவர்கள் பற்றி நாம் பெருமளவில் கவலைப்பட வேண்டும். அவர்களுக்குக் கூடுதலாக ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர், உயிர்காக்கும் சிகிச்சை தேவைப்படும்.

நம் நாட்டிலும், உலகம் முழுக்கவும் மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் பல நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், எல்லாரையும் ஒரே வேளையில் கவனித்துக் கொள்ள முடியாது. நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாவிட்டால், நம் நோயாளிகளுக்குத் தேவைப்படும் கவனிப்பை நம்மால் தர முடியாது.

நம் சுகாதாரத்துறை மூச்சுவிட முடியாதளவுக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நோயாளிகளை வரவேற்க காலியான வார்ட்களோ, வேலைப்பளுவின்றி இருக்கும் செவிலியர்களோ இல்லை. நம்முடைய சுகாதாரப்பணியாளர்களுகளின் பாதுகாப்பிற்குக் கூடப் போதுமான மாஸ்க்குகள் இல்லை. கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால், இப்படிப் பேராபத்து மிக்க நோய்த்தொற்றும், உபகரணங்கள் தட்டுப்பாடும் 1918-ன் உலகத்தொற்றின் போது ஏற்பட்டது.

அந்த நோய் நம் நாட்டை முற்றுகையிட்ட போது, ஆரம்பத்தில் நிலைமை அத்தனை மோசமாக இருக்கவில்லை. வெகு சிலரே நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அடுத்து என்ன செய்யலாம் என்கிற போது இரு வேறு நகரங்கள் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டன. செயின்ட் லூயிஸ் ஒட்டுமொத்த நகரையும் இழுத்து மூடியதோடு, மக்களைப் பத்திரமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டது. உலகப்போருக்கு கிளம்பிக் கொண்டிருந்த நம் நாடு வீரர்களுக்குப் பிரியாவிடை கொடுக்கும் பொருட்டு, பிலடெல்பியா நகரம் விழாக்கோலம் பூண்டது. பெரும் பேரணி ஒன்றை உற்சாகத்தோடு அந்நகரம் நடத்தியது.

ஒரு வாரம் கழித்துப் பார்த்தால், பிலடெல்பியா மருத்துவமனைகள் திக்குமுக்காடிப் போயின. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்தார்கள். செயின்ட் லூயிஸ் நகரத்தில் வெகு குறைவான மக்களே இறந்தார்கள். இந்த வரலாறு நமக்கான எச்சரிக்கை மணியாகும். நம்முடைய மருத்துவமனைகளில் நிலைமை கட்டுக்குள் இல்லை. தடுப்பு மருந்து தட்டுப்பாடு மட்டுமல்லாமல் இந்த வைரஸின் வேகத்தை மட்டுப்படுத்தும் மருந்துகளும் கைவசம் இல்லை.

கொரோனா பரவுகின்ற வேகத்தைக் குறைக்க நம் செய்ய வேண்டியதெல்லாம் முடிந்தவரை பிறரிடம் இருந்தும், சமூகத்திடம் இருந்தும் தள்ளி இருப்பது தான். நோய்த்தொற்றுள்ள ஒருவரை அப்படியே விட்டால் அவர் இன்னும் மூன்று பேருக்கு நோயை பரப்பி விடுவார். அவர்கள் ஒவ்வொருவரும் இன்னும் இரண்டு அல்லது மூன்று பேருக்கு நோயை கடத்தி விடுவார்கள். இப்படியே போனால், என் அம்மா மூச்சுவிடத் திணறும் போதும், உங்களுடைய அன்னை கடுமையாக இருமும் போதும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள மருத்துவமனையில் இடம் இருக்காது.

இதனால் எங்களுடைய வீட்டில் பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறோம். யாரும் வெளியே போகக் கூடாது என்று உள்ளேயே இருக்கிறோம். நான் ஒருத்தி மட்டும்தான் அவசரகாலத்திற்குத் தேவையானவற்றைப் பெறுவதற்காக வெளியே வந்திருக்கிறேன். என் மகன் தனக்கு விருப்பமான விளையாட்டு, அறிவியல் மாநாடு எல்லாவற்றையும் துறந்துவிட்டு வீட்டில் வீடியோ அரட்டை, ஆன்லைன் புதிர்களோடு விளையாடுவது என்று காலந்தள்ளிக் கொண்டிருக்கிறான்.

இப்படியொரு வாழ்க்கையையா வாழ வேண்டும் என்று சலிப்பாக இருக்கலாம். ஆனால், நம்மை விடப் பெரும் தியாகங்களைப் பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எராளமான ஏமாற்றங்கள் காத்திருக்கின்றன. இதே நிலைமை எப்போதைக்கும் நீடித்திருக்காது. என்றாலும், இது கூடிய சீக்கிரம் முடியப்போவதும் இல்லை.

ஆனால், இது முடிந்த பின்பு, திரும்பிப்பார்த்தால், நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஒரு சிறிய காலகட்டமாகவே இது தோன்றும். இதனை நினைவில் நிறுத்த வேண்டும். ஒரு கால்பந்து போட்டியை காணப்போவது, நமக்குப் பிடித்த விழாவில் கலந்து கொள்வது ஆபத்தை விலைகொடுத்து வாங்குவது ஆகும். சில நூறு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோய்க்கு ஏன் இவ்வளவு தூரம் மெனக்கெட வேண்டும் என்று கடுப்பாக இருக்கலாம். ஆனால், இதுவே உயிர்களைக் காப்பதற்கான நமக்கு இருக்கும் ஒரே வழியாகும். இதுவே அதற்கான உகந்த தருணமும் கூட.

நீங்கள் செய்தி அறிக்கைகளில் கேட்கும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்துக்கு முன்பு நோயுற்றவர்களின் எண்ணிக்கையே ஆகும். இன்று கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பலருக்குத் தாங்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருக்கிறோம் என்றே தெரியாது. ஒரு வாரம் கழித்துத் தான், நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். நாம் அக்கறையின்றி அலைந்து கொண்டிருந்தால், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்து திக்குமுக்காடி விடும்.

சுருக்கமாக, நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு பொறுப்பாக இல்லாமல் போகும் ஆரோக்கியமிக்கவர்கள், அசாத்திய நம்பிக்கை கொண்டவர்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளவர்களின் உயிரோடு விளையாடுகிறோம். சிறு பொறியாக இருக்கும் போதே கட்டுப்படுத்துவது எளிது. காட்டுத்தீயாக வளர்ந்த பின்பு கைக்கு மீறிப்போய்விடும். இந்த அதீத கட்டுப்பாடுகளைக் கடைபிடித்தால் எதிர்பாராத நன்மைகள் விளையும். நீங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு netflixல் படம் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், உலகை காப்பாற்றுகிறீர்கள் என்பதை நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் அது தான் நிஜம்.

நாம் இவற்றை முறையாகக் கடைபிடித்தால், எதுவும் நடக்காது. ஆமாம். உங்கள் வீட்டிற்குள் கமுக்கமாக இருந்தால், எதுவுமில்லாத ஒன்றுக்காக இப்படி அடைபட்டிருக்கிறோம் என்று கூடத் தோன்றும். ஒன்றுமில்லாத ஒன்று என நீங்கள் நினைப்பது சரிதான். உங்கள் குடும்பத்தில் யாருக்கும் ஒன்றும் ஆகாது. அதற்காகத் தான் இப்படிப் பாடுபடுகிறோம்.

இப்போது தொடங்கினால் கூட, தாறுமாறாகப் பரவிக்கொண்டு இருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த இயலும். குறைந்தபட்சம் அடுத்த இரண்டு வாரங்களுக்காவது கட்டுக்குள் வைக்க முடியும். வீட்டிற்குள் ஒழுங்காக இருப்போம் என்று நீங்கள் கங்கணம் கட்டிகொண்டால், நோயுற்றவர்களைக் காப்பாற்ற தேவையான நம்முடைய உழைப்பாளர்கள் எந்தவித ஆபத்துமின்றிப் பயணம் புரிந்து சேவையாற்ற இயலும்.
நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அடிப்படை உபகரணங்களை நம்முடைய தொழிற்சாலைகள் தயாரிக்க நேரம் தர முடியும். கூடுதல் மாஸ்க்குகள் கிடைக்க உதவ இயலும். நீங்கள் உள்ளே இருப்பதால் மிச்சமாகும் நேரத்தில், இன்னும் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும். உங்களின் கொஞ்ச நேரத்தை தியாகம் செய்வது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

கொஞ்சகாலம் கழித்துப் பார்த்தால், நோயுற்றவர்களின் எண்ணிக்கை விழுவதைக் காண இயலும். உடனே உற்சாகமடைந்து பழையபடி திரிய வேண்டாம். நோய்த்தொற்றின் வேகம் மட்டுப்படக் காலம் எடுக்கும். அதன் வீரியம் குறைந்து, நோயின் அளவு குறைய நேரமாகும். ஆகவே, தயவுசெய்து, மனந்தளர்ந்து விடவேண்டாம்.

எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும். நாம் எல்லாரும் ஒன்றிணைந்து இந்த இக்கட்டான காலத்தைக் கடப்போம். நாம் வாழ்ந்து கொண்டிருந்த நிம்மதியான வாழ்க்கையை மீட்டெடுக்கும் வழியைக் கண்டடைவோம். நம் பொதுச் சுகாதாரத்துறையும், அரசு மருத்துவமனைகளும் இரவு, பகல் பாராமல் நெடுங்காலமாக உழைத்துக் கொண்டிருக்கின்றன. இதோ நீங்கள் பங்களிக்க வேண்டிய தருணம். இது பெரும் தியாகமாகத் தோன்றலாம். எனினும், இந்தத் தியாகங்கள் ஆயிரமாயிரம் மாற்றங்களைச் சாதிக்கும். உயிர்களைக் காக்கும். பிறரின் உயிர்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும். நன்றி!

ஆங்கில உரை: https://www.uchicagomedicine.org/forefront/coronavirus-disease-covid-19/emily-landon-speaks-about-covid-19-at-illinois-governors-press-conference
தமிழில்: பூ.கொ.சரவணன்

#CoronaVirus #COVID19 #Netflix #Pandemic #BreaktheChain

One thought on “‘நீங்கள் வீட்டிற்குள் படம் பார்த்துக் கொண்டிருந்தால், உலகத்தைக் கொரோனாவிடம் இருந்து காப்பாற்ற முடியும்’

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s