அவர்கள் நேற்று மதியம் என்ன செய்தார்கள்?


என்னுடைய அத்தையின் வீட்டை தீயிட்டு கொளுத்தினார்கள். இரண்டாக மடிக்கப்பட்ட ஐந்து பவுண்ட் தாளைப் போல மண்டியிட்டு தொலைக்காட்சிகளில் வரும் பெண்களைப்போல நான் தேம்பி அழுதேன். என்னைக் காதலித்தவனை அழைத்தேன் அவன் என் ‘குரலை’ ஆற்றுப்படுத்த முயன்றான்.
நான் ஹலோ என்றேன்
அவன் வார்ஷன், ஏன் இப்படியிருக்கிறாய், என்னாயிற்று எனக் கேட்டான். நான் பிரார்த்தித்து கொண்டிருந்தேன்
என் பிரார்த்தனைகள் இப்படி இருந்தன;
அன்புள்ள ஆண்டவரே
நான் இரு தேசங்களில் இருந்து வருகிறேன்.
ஒன்று தாகமாய் இருக்கிறது
இன்னொன்று தீப்பற்றி எரிகிறது
இரண்டிற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. அன்றிரவு
என் மடியில் உலக வரைபடத்தை ஏந்திக்கொண்டேன்
மொத்த உலகத்தின் மீதும் என் விரல்களால் நீவிவிட்டு
சன்னமாக
எங்கேனும் வலிக்கிறதா என வினவினேன்அது இவ்வாறு பதிலளித்தது
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும். – Warsan Shire.தமிழில்: பூ.கொ.சரவணன்

அண்ணல் அம்பேத்கரை மே தினத்தில் நினைவுகூர்தல்


அண்ணல் அம்பேத்கரை மே தினத்தில் நினைவுகூர்தல் -முனைவர் சுமீத் மஹஸ்கர்
கடந்த சில ஆண்டுகளில் டாக்டர் அம்பேத்கரை ‘மையநீரோட்டப்படுத்தும்’ முயற்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. வலதுசாரிகள், இடதுசாரிகள் என்று பல தரப்பிலும் உள்ள அரசியல் கட்சிகள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்த அரும்பாடுபடுகிறார்கள். ஆய்வுலகிலும் அண்ணல் அம்பேத்கர் குறித்து எழுதுவது வாடிக்கையாகி விட்டது . முன்முடிவோடு கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணலின் எழுத்துகளை மறைப்பதோடு, அவரின் சமூக, அரசியல் தலையீடுகளையும் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நிகழ்ந்தது. இதனை மேற்சொன்ன முயற்சிகள் கேள்விகேட்கவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ தவறின.
தொழிலாளர் பிரச்சனையை அம்பேத்கர் எப்படி அணுகினார் என்பது இதற்குச் சான்று பகர்கிறது. பல அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் அம்பேத்கர் “சாதி பிரச்சனையை” மட்டுமே கருத்தில் கொண்டு அதனை எதிர்கொண்டார். அவர் “பெரும்” முக்கியத்துவம் மிக்க “வர்க்க பிரச்சனையை” கண்டுகொள்ளவில்லை என்று வாதிடுவதைக் கண்டிருக்கலாம். இத்தகைய பார்வை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் பம்பாய் நகரத்தில் எழுந்த கம்யூனிச அரசியலையும், அம்பேத்கரின் தலைமையில் சாதி ஒழிப்புக்காக அணிதிரண்ட புரட்சிகரமான தலித் அரசியலையும் கணக்கில் கொள்ளத் தவறுகின்றன. இவ்விரு அரசியல் இயக்கங்களும் களத்தில் “தொழிலாளர் பிரச்சனைகளில்” தீவிரமாக மோதிக்கொண்டன. அவை அரிதாக ஒன்றிணைந்தும் இயங்கின. இவ்விரு இயக்கங்களிடையே நிகழ்ந்த பலதரப்பட்ட ஊடாட்டங்கள் “உழைக்கும் வர்க்க ஒற்றுமையின்” போதாமைகளையும், இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்களையும் ஒருங்கே முன்னிலைப்படுத்தின.

ஜவுளி ஆலைப் போராட்டங்கள்

அம்பேத்கரின் ஆரம்ப கால தொழிலாளர் இயக்க செயல்பாடுகள் பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் யூனியனில் இணைந்து இயங்குவதாக இருந்து. இந்த தொழிலாளர் அமைப்பை N.M. ஜோஷி,R.R.பக்ஹலே ஆகியோர் துவங்கினார்கள். இந்த ஆலைகளில் நெசவு நிகழும் துறைகளில் அதிகபட்ச கூலி வழங்கப்பட்டு வந்தது. இந்த வேலைகளில் தலித்துகள் ஈடுபட்டால் “தீட்டாகி”விடும் என்று சொல்லி புறக்கணிக்கப்பட்டார்கள். ஆடை இழையை நெய்வதற்கு உதவும் பாபினை மாற்ற வேண்டும் என்றால், நூலை தங்கள் எச்சிலால் தொழிலாளர்கள் ஈரப்படுத்தி முடிச்சிட வேண்டும். மராத்தா சாதியை சேர்ந்த தொழிலாளர்கள் இப்பணியில் தலித்துகள் ஈடுபட்டால் அது தங்களுக்கு தீட்டாகி விடும் என்று வாதிட்டார்கள். இதைக்காரணம் காட்டி தலித்துகளை நெசவுப் பணிகளில் ஈடுபடுத்த மறுத்தார்கள்.
அண்ணல் அம்பேத்கர் இப்பிரச்சனையை புகழ்பெற்ற 1928 பம்பாய் ஜவுளி தொழிலாளர் போராட்டத்தின் போது கவனப்படுத்தினார். அவர் முன்வைத்த உரிமைகளுக்கான கோரிக்கைகளில் ஆலையின் எல்லா தொழில்களிலும் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என்பதும் இருந்தது. அதனை கம்யூனிச தலைவர்கள் ஏற்க மறுத்தால் தலித் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கு பெற வேண்டாமென தான் தடுக்கப்போவதாகவும் அம்பேத்கர் அச்சுறுத்தினார். பெரும் தயக்கத்தோடு அம்பேத்கரின் உரிமைக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அம்பேத்கர் மேற்சொன்ன போராட்டத்தை ஆதரித்தார் என்றாலும், 1929-ல் நடந்த ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை எதிர்த்தார். இப்போராட்டத்தின் போது தலித் தொழிலாளர்கள் ஆலைகளுக்குள் பணியாற்ற போவதற்கான வசதிகளை அவரே முன்னின்று ஏற்படுத்திக் கொடுத்தார்.

A BR Ambedkar statue

இடதுசாரி விமர்சகர்கள் மேற்சொன்ன போராட்டத்தில் அம்பேத்கர் “தொழிலாளர் ஒற்றுமையை” ‘சாதியைக்’ கொண்டு தகர்த்தெறிந்ததோடு நில்லாமல், தொழிலாளர் போராட்டத்தை பிசுபிசுக்க வைக்கும் வண்ணம் ஆலைகளுக்குள் கருங்காலிகளை அனுப்பி வைத்தார் என்று சாடுகிறார்கள். 1928-ல் நடந்த போராட்டம் தலித் தொழிலாளர்களை கடன் சுமைக்கு ஆட்படுத்தியதோடு, அவர்கள் பெரும் அவமானங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. தலித் அல்லாத தொழிலாளர்களை போல நெடுங்காலம் போராட்டங்கள் தொடர்ந்தால் தங்களை ஜீவித்துக் கொள்வதற்கு என்று விவசாய நிலங்கள் எதுவும் தலித்துகளிடம் இல்லை. ஆகவே, இன்னொரு நீண்ட போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் தலித்துகள் இல்லை என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்தது.

இதே காரணங்களுக்காக 1934-ல் கம்யூனிஸ்ட்கள் நடத்திய பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் போராட்டத்தையும் அம்பேத்கர் எதிர்த்தார். அதே வேளையில், நீதிமன்றங்களில் இப்போராட்டத்தின் தலைவர்களுக்காக அம்பேத்கர் வாதாடவும் செய்தார். இப்போராட்டங்களில் ஈடுபட்டதற்காக வழக்குகள் பாய்ச்சப்பட்ட நிலையில், ஒரு தொழிற்சங்க தலைவருக்காக அம்பேத்கர் திறம்பட வாதிட்டதால் அவர் விடுதலையானதோடு பிற கம்யூனிச தலைவர்களின் விடுதலைக்கும் அதுவே வழிவகுத்தது.

‘கட்டாய ஊழியத்தை ’ எதிர்ப்பது

உழைக்கும் வர்க்கத்தின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காக பாடுபடுவதற்காக அம்பேத்கர் 1936-ல் சுதந்திர தொழிலாளர் கட்சியை தோற்றுவித்தார். இக்கட்சி எந்த ஒரு ஒற்றை மதம், சாதியையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அறிவித்தது. மேலும் தீண்டப்படுபவர்-தீண்டப்படாதோர், பிராமணர்-பிராமணரல்லாதோர், இந்து-முஸ்லிம் இடையே எந்த பாகுபாடும் இல்லை என்று முழங்கியது. அடுத்தாண்டு நிகழ்ந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தொழிற்சாலை சச்சரவுகள் சட்டம்,1938 ஐ எதிர்ப்பதில் அக்கட்சி முதன்மையான பங்காற்றியது. இச்சட்டமானது, சமரசத்தை கட்டாயமாக்கியதோடு சட்டத்துக்கு புறம்பான போராட்டங்களில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கியது.
இந்த மசோதாவை எதிர்த்து பம்பாய் சட்டமன்றத்தில் உரையாற்றிய அண்ணல் அம்பேத்கர், போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தொழிலாளர்களை தண்டிப்பது என்பது “தொழிலாளரை அடிமையாக்குவது அன்றி வேறொன்றுமில்லை” என்று வாதிட்டார்.

மேலும், அடிமைமுறை என்பது “கட்டாய ஊழியமே ஆகும்.” என்றும் முழங்கினார். மேலும், சட்டமன்றத்துக்கு வெளியே இந்த மசோதாவிற்கு எதிராக ஒரு நாள் போராட்டத்தை நவம்பர் 7, 1938-ல் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். இம்மசோதா நிறைவேறாமல் தடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட்கள், சோசியலிஸ்ட்கள் வழங்கிய ஆதரவையும் அம்பேத்கர் வரவேற்றார்.

கிராமப்புறத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மாற்றுவது:

கம்யூனிஸ்ட்கள் முன்னின்று நடத்திய தொழிலாளர் அரசியல் எல்லாம் நகர்ப்புற தொழிற்சாலைகள் சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தன. அம்பேத்கரோ கிராமப்புறத்தில் வழக்கத்தில் இருந்த மகர் வட்டன் முறையை எதிர்த்து போரிட்டார். இதன்மூலம் சாதி அடிப்படையில் தொழில்களை வகுத்து பாகுபடுத்தும் படிநிலையை கிடுகிடுக்க வைத்தார். மகர் வட்டன் என்பது கிராமத்தின் சமூக-பொருளாதார அமைப்பினில் மகர்களுக்கு வழங்கப்படும் நிலமாகும். இந்த நிலத்திற்கு பதிலாக மகர்கள் பலதரப்பட்ட கடுமையான வேலைகளை செய்ய வேண்டும் என்பதோடு, கடும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

இவ்வாறு கிராமப்புறத்தின் பொருளாதார அமைப்புகளின் உழைப்பை சுரண்டும் முறைகள் சாதி அமைப்போடு ஆழமாக பின்னிப்பிணைந்து இருந்தன. அம்பேத்கர் இவற்றை அறவே அழித்தொழிக்க பாடுபட்டார். அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிரான போரானது இத்தகைய அடிமைப்படுத்தும் அமைப்புகளை எதிர்த்து போர் தொடுக்காமல் முழுமையடையாது என்று அறிவித்தார். அம்பேத்கர் 1928-ல் பம்பாய் சட்ட மேலவையில் மகர் வட்டன் முறையை ஒழிப்பதற்கான மசோதாவை , தாக்கல் செய்தார். மேலும், அரசானது மகர் வட்டன்தாரர்களை அரசாங்க ஊழியர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கான உழைப்புக்கான ஊதியத்தை கிராமத்தினர் வழங்க அடிகோல வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆரம்பத்தில் பிராமணர் அல்லாதோர் இம்மசோதாவை ஆதரித்தாலும், பின்னர் படிப்படியாக இதனை எதிர்த்தனர். மகர்கள் செய்து கொண்டிருந்த இழிவாக கருதப்பட்ட, வெறுத்தொதுக்கப்பட்ட தொழில்களை இனிமேல் யார் செய்வார் என்கிற கவலை அவர்களை ஆட்கொண்டுவிட்டது.
அம்பேத்கரின் நெருங்கிய சகாவான A.V. சித்ரே ஷெட்காரி சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பு கொங்கன் பகுதியில் நிலவி வந்த கோட்டி எனும் நில வரி வருவாய் முறையை ஒழிக்க பாடுபட்டது. இம்முறையானது சிறு, குறு விவசாயிகளை சுரண்டியதோடு, அவர்களை கொத்தடிமைத்தனத்தில் உழல வைத்தது. ஆங்கிலேயே அரசு வசூலித்த வரியை போல நான்கு மடங்கு கூடுதல் வரியை இம்முறையில் செலுத்த வேண்டியிருந்தது. இம்முறையில் நிலச்சுவான்தார்களாக சித்பவன பிராமணர்கள், சில உயர்சாதி இந்து மராத்தாக்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள். இம்முறையால் சுரண்டப்பட்ட பயிரிடுபவர்களாக மராத்தாக்கள், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரான குன்பிக்கள், பண்டாரிக்கள், அக்ரிக்கள், தலித்துகளில் சில மகர்கள் இருந்தனர்.
பழமைவாத தேசியவாதியான பால கங்காதர திலகர் காலனிய அரசு கோட்டி முறையை ஒழிக்க முயன்ற போது கடுமையாக அதனை எதிர்த்தார். இம்முறைக்கு எதிராக கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் அம்பேத்கர் போராட்டங்கள், மாநாடுகளை நடத்தினார். அவர் பம்பாய் சட்டமன்றத்தில் கோட்டி ஒழிப்பு மசோதாவை 17 செப்டம்பர் 1937-ல் அறிமுகப்படுத்தினார். மாகாண அவைகளில், முதன்முறையாக விவசாயிகளை அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்கான சட்ட மசோதாவை முன்னெடுத்த சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்கரே ஆவார். இரண்டாம் உலகப்போர் காலத்தில் வைஸ்ராயின் செயற்குழுவில் தொழிலாளர் உறுப்பினராக அம்பேத்கர் பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவை விடுதலைக்கு பிந்தைய இந்தியாவில் தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியது.

பிராமணியம் எனும் இன்னொரு பெரும் பகை:

முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தின் எதிரி என்கிற பார்வையில் கம்யூனிஸ்ட்களோடு உடன்பட்ட அம்பேத்கர், அதற்கு இணையான எதிரி பிராமணியம் என்று வாதிட்டார். மேலும், கம்யூனிஸ்ட்களைப் போல முதலாளித்துவ அமைப்பினை அழித்தொழித்து விட்டால் தானாகவே சாதி முறையினால் உண்டாகும் இன்னல்கள் காணாமல் போய்விடும் என்று அவர் கருதவில்லை. அண்ணல் அம்பேத்கரை பொருத்தவரை, சமூகப் பாகுபாட்டைக் களைவது என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் இன்றியமையாத ஒன்றாகும். அம்பேத்கர், உழைப்பாளர் சந்தையில் தலித்துகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முதலாளித்துவத்துக்கு எதிரான போர் சாத்தியப்படும் என்று வாதிட்டார். இதனைச் சாதிக்க, சாதி அடிப்படையில் பணிக்கு ஆட்களை எடுக்கும் பிராமணிய தாக்கத்தை விடுத்து, அதனைப் புறந்தள்ளும் சந்தைப் பொருளாதார அடிப்படைகளின்படி இயங்கலாம். இது தொழிலாளர்கள் இடையே உள்ள சாதி, மத வெறுப்பைப் போக்குவதோடு, உழைப்பாளர் ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்தெறியும்.

அம்பேத்கர் “வர்க்கம்” என்பதைப் பொருள் ரீதியான உறவுகள், பொருளாதாரச் சுரண்டல் சார்ந்து மட்டும் குறுகலாக அணுகுவதை ஏற்க மறுத்தார். மூலதனம்-தொழிலாளர் இடையே உள்ள உறவை நிர்மாணிப்பதில் பொருளாதாரக் காரணிகளோடு, பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், சுரண்டல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் வாதிட்டார். மேலும், இத்தகைய பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், மக்கள் சுயமரியாதை மிக்க வாழ்க்கை வாழவும், பரஸ்பர மதிப்பை பெற்று வாழ்வும், பொதுச் செயல்பாடுகளில் பங்குபெறவும் விடாமல் தடுக்கின்றன. இந்தியாவில் தனிமனிதர்களின் வாழ்க்கை தேர்வுகளில் சாதி, பாலினம், மதம் பெரும் தாக்கம் செலுத்தி வரும் சூழலில் தொழிலாளர் பிரச்சனையில் அம்பேத்கரின் செயல்பாடுகள், தலையீடுகள் கருத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன.

Sumeet Mhaskar (@sumeetmhaskar) | Twitter
முனைவர் சுமீத் மஹஸ்கர் O.P.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர்.
தமிழில்: பூ.கொ.சரவணன்
கட்டுரை மூலம்: https://theprint.in/opinion/ambedkars-fight-wasnt-just-against-caste-scholars-have-overlooked-his-labour-activism/401133/