பூனா ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இன்று.
தனித்தொகுதி முறையை அம்பேத்கர் வென்றெடுத்த நிலையில், உண்ணாவிரதம் இருந்து காந்தி அதனைத் தட்டிப் பறித்தார். இதைக்குறித்து ஓரிரு கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள எண்ணம். முதலாவதாக ரோஹித் வெமுலாவின் மரணத்தை அடுத்து சோயப் தானியல் எழுதிய கட்டுரையில் இருந்து தனித்தொகுதி முறை, தற்போதைய தேர்தல் முறை குறித்த பத்திகள் மட்டும் வாசிப்புக்காக:
தேர்தல் முறை குறித்த அம்பேத்கரின் விமர்சனம்: … அம்பேத்கர் காலம் தொடங்கித் தலித் இயக்கமானது தேர்தலில் தலித்துகளுக்கு இடங்களை ஒதுக்கும் முறையானது பயனளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்த வண்ணம் உள்ளது.
1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பு சட்ட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அம்பேத்கர் தலித்துகளுக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட வேண்டுமென வாதிட்டார். இந்த முறையில் தங்களுக்கான தலித் பிரதிநிதிகளைத் தலித் வாக்காளர்களே தேர்வு செய்வார்கள். காங்கிரசின் தலைவரான காந்தி இதனை எதிர்த்தார். இதற்கு மாறாக, சாதி அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் அமையக்கூடாது என்று எதிர்த்தார் (தற்போதைய முறையின் முன்னோடி). இதைக்குறித்து, 1955-ல் அம்பேத்கர் பேசிய போது, அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையானது “இந்துக்களுக்கு அடிமையாக இருக்கும், சுதந்திரத்திறமற்ற ஆட்களையே” தலித் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும் என்று நேரடியாகச் சாடினார்.
காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால், அம்பேத்கர் வேறு வழியின்றி ஒப்புக்குள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அவர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி, தலித் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக, அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அம்பேத்கருக்கு ஒரே ஒரு சிறிய சலுகையாக, முதல்கட்டத் தேர்தலில் ஒவ்வொரு தலித் தொகுதியிலும் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முதல் கட்டத் தேர்தலில் வெற்றி பெறும் நான்கு வேட்பாளர்களுக்கு இறுதியாக அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பார்கள்.
அம்பேத்கர் சரியாகக் கணித்ததைப் போலவே, இத்தகைய கூட்டு வாக்களிப்பு முறை அவருடைய கட்சிக்கு பேரிடராகவும், காங்கிரசிற்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சின் தலைமைப் பொறுப்பில் முழுக்க முழுக்க மேல்சாதியினரே ஆதிக்கம் செலுத்தினாலும் இத்தகைய கூட்டுத் தொகுதி முறை அதற்கே பயனளித்தது. பூனா ஒப்பந்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற 1937-ம் ஆண்டுத் தேர்தலில் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிப் பெற்றது. அம்பேத்கர் தோற்றுவித்து இருந்த விடுதலை தொழிலாளர் கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அடுத்து நடந்த 1946 தேர்தலில் காங்கிரசின் வெற்றியும், அம்பேத்கரின் தோல்வியும் இன்னமும் அதிகரிக்கவே செய்தது. காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட 151 தொகுதிகளில் 123 இடங்களில் வெற்றிப் பெற்றது. அம்பேத்கரின் கட்சி இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது,
”மோசடியான பிரதிநிதித்துவ முறை’:
இந்தத் தேர்தல் முடிவுகள் அம்பேத்கரை கடுமையாகக் கோபப்படுத்தியது. கூட்டு வாக்களிப்பு முறையே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அம்பேத்கர் குற்றஞ்சாட்டினார். 1946 -ம் ஆண்டுத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களித்த நிலையில், தன்னுடைய கட்சி 26% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 29% வாக்குகளையும் பெற்றதை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். ஆனால், அனைத்து சாதிகளும் வாக்களித்த இறுதித் தேர்தல் முடிவுகளில் அறுபது மடங்கு இடங்களைக் காங்கிரஸ் கட்சி வென்றது. ஆகவே, இந்தத் தேர்தலில் இறுதியாக வென்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உண்மையான தலித் பிரதிநிதிகள் இல்லையென்று அம்பேத்கர் வாதிட்டார். 1946-ம் ஆண்டின் இறுதியில் அம்பேத்கர் இப்படிப் பேசினார்:
‘பட்டியல் சாதியினரின் உரிமைகளுக்கு எப்போதும் சட்டமன்றத்தில் போராடக்கூடிய நம்பகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பட்டியல் சாதியினரே தேர்ந்தெடுப்பதைத் தனித்தொகுதி முறை மட்டுமே உறுதி செய்யும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீண்டப்படாத மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ஒழித்துக் கட்ட முயன்றால் அவற்றை எதிர்க்கவும் தனித்தொகுதிகள் தேவைப்படுகின்றன. வெவ்வேறு மாகாணங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறவைத்துள்ளது. ஆனால், இந்த வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எவரும் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை, பட்டியல் சாதியினரின் வலிகளை வலிமையாகக் கொட்டித் தீர்ப்பதற்காக ஒரே ஒரு வெட்டுத் தீர்மானத்தைக் கூடக் கொண்டுவரவில்லை […] இப்படிப்பட்ட பட்டியல் சாதி உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்புகிற மோசடிக்கு பதிலாகப் பட்டியல் சாதியினருக்குச் சட்டமன்றத்தில் இடமே தராமல் இருந்துவிடலாம்’

இத்தகைய கவலை அம்பேத்கரை மட்டுமே அரித்துக் கொண்டிருக்கவில்லை. ஆய்வாளர்கள் ஆலிவர் மென்டெல்சொஹ்ன் & மரிக்கா விக்ஸியன்யாண்ட் ஆகிய இருவரும் எம்.சி.ராஜா அவர்களை ‘விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய தீண்டப்படாதவர்களில் இருந்து எழுந்த அரசியல்வாதி’ என்று வர்ணிக்கிறார்கள். அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “காங்கிரஸ் தலைமையில் கூட்டு வாக்களிப்பு முறையால் சாதி இந்துக்களோடு இணைந்து கொண்டு நுழைகிற தலித்துகள், எங்களுக்கு அரணாக இருப்பதைவிட, சாதி இந்துக்களின் தலைமையில் எங்களுடைய சுதந்திரத்தை அழிக்கவும், எங்கள் கழுத்துகளை வெட்டி சாய்க்கவும் காங்கிரசிற்குத் துணை போகிறார்கள் என்று எண்ணுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்’ என்று கசப்போடு எழுதினார்.
விடுதலைக்குப் பிறகு:
விடுதலைக்குப் பிறகு தலித்துகளுக்குத் தனித்தொகுதி என்கிற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. முதலாவதாக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி முறைய பிரிவினைக்கு அடிகோலிய முதன்மையான காரணம் என்று பரவலாகக் கருதப்பட்டது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. பிரிவினை ஏற்படாமல் போயிருந்தாலும் தன்னுடைய இருபதாண்டு கால நிலைப்பாட்டைக் காங்கிரஸ் மாற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம். உண்மையில், இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளுக்குப் பூனா ஒப்பந்தத்தில் தரப்பட்டிருந்த உரிமைகளை இன்னமும் குறைத்தது. முந்தைய முறையில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்றிருந்ததை அடியோடு கைகழுவியது. செய்வதறியாமல் திகைத்து நின்ற அம்பேத்கர், கடைசி முயற்சியாகத் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் குறைந்தபட்சம் 35% தலித் ஓட்டுக்களையாவது பெற வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவந்தார்.
இதன்மூலம், தலித் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சமுகத்தின் உண்மையான பிரதிநிதிகளாகத் திகழ்வதை உறுதி செய்ய முடியும் என்று கருதினார். வல்லபாய் படேல் அதனை முழுமையாக நிராகரித்தார். “இதனை நான் எதிர்ப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? பெரும்பான்மையான இந்துக்கள் உங்களுடைய (தலித்துகளின்) நலத்தையே நாடுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே செல்ல முடியும்? அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதை மறந்து விடுங்கள்…இத்தகைய தாழ்வு மனப்பான்மையைத் தாங்கிக் கொண்டு இருந்தால், அவர்களால் சமூகத்திற்குச் சேவையாற்ற முடியாது.”
விடுதலை இந்தியாவில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் அம்பேத்கரின் கட்சி இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையானது பேரிடராக மாறியது என்கிற முடிவுக்கு அம்பேத்கர் வந்தடைந்தார். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலித் நலன்களை முன்னிறுத்தவில்லை என்பது ஒரு புறம். மறுபுறம், இத்தகைய தொகுதி ஒதுக்கீட்டு முறையால், பிற சமூகக் குழுக்களோடு தலித்துகளால் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்ள இயலாமல் போனது. 1955-ல் அம்பேத்கரின் கட்சியானது தலித்துகளுக்கு என்று தொகுதிகளைத் தேர்தல்களில் ஒதுக்குவதைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.
அம்பேத்கரின் கருத்து 1932-ல் புறக்கணிக்கப்பட்டதைப் போன்று, 1955-லும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்டது. இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அப்படியே தொடர்கிறது. தலித்துகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து கிளர்ந்து எழும் “உயர் சாதி” குழுக்கள் நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்குத் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சட்டை செய்வதே இல்லை. இந்த முறை அதிகார அமைப்பினில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது தெளிவாக்குகிறது. இதனால், இம்முறை “மோசடியான பிரதிநிதித்துவம்” என்று தெளிவாகிறது. கிறிஸ்தோப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுவதைப் போல, விடுதலையடைந்த காலத்தில், “தலித் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தலித் அல்லாதோர் வாக்குகளைக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதில் தேர்ச்சி மிக்கதாக மாறியிருந்தது”. இம்முறையைப் பாரதி ஜனதா கட்சி தற்போது கைக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச தலித் எம்பிக்களைக் கொண்டுள்ள கட்சியாக அது திகழ்ந்தாலும், ரோஹித் வெமுலாவின் தற்கொலையைப் போன்ற பெரும் தலித் துயரத்தை எதிர்கொள்வது எப்படி என்று புரியாமல் அக்கட்சி திகைத்து நிற்கிறது.
தமிழில்: பூ.கொ.சரவணன்